Wednesday, January 29, 2020

தமிழக அரசைப் பாராட்டுகிறோம் - தி.வ. மெய்கண்டார்


தமிழக அரசைப் பாராட்டுகிறோம்
-தி.. மெய்கண்டார், செயலாளர், நாமக்கல் கவிஞர் நினைவுக் குழு.

நாமக்கல் கவிஞரைப் பற்றி சென்னையிலுள்ள கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகளுக்கு, பேச்சு, கட்டுரை, போட்டிகள் நடத்தி, கவிஞரின் இளைய மகன் ராஜாவின் உதவியால் அமெரிக்கத் தமிழ் நாடு அறக்கட்டளை அளித்து வந்த ரூபாய் ஆயிரத்தினை பரிசாக வழங்கி வந்தோம்.

இக்குழுவின் தலைவராக மாண்புமிகு ஐயா சிலம்புச் செல்வர் அவர்களும், செயலாளராக நானும் செயல்பட்டுவந்தோம்.

திரு. நா. மகாலிங்கம், .பி.மெய்யப்பச் செட்டியார், நெ.து. சுந்தரவடிவேலு, எஸ்.எம்.பழனியப்பச் செட்டியார், சி.என். கிருஷ்ணசாமி பாரதி, தியாகி எஸ்..ரகீம், பெ. தூரன், கி.வா. ஜகந்நாதன், அகிலன், எஸ்.டி.சுந்தரம், கவிஞர் வானம்பாடி, திருமதி சௌந்தரா கைலாசம், கவிஞர் அழ.வள்ளியப்பா, கவிஞர் கா. வேழ வேந்தன். மயிலை நாதன்,  மணியன், சாவி சின்ன அண்ணாமலை, சோம. சுவாமிநாதன், ஜி. உமாபதி, கே.குழந்தைவேலு, இலங்கை தியாகி இராஜகோபால் ஆகிய பெருமக்கள் இக்குழுவின் உறுப் பினர்களாக இருந்து வந்தனர்.
இவர்களில் சிலர் இப்போது இல்லை.

இக்குழு 28.12.1987 அன்று நடத்திய விழாவில் மாண்புமிகு சிலம்புச் செல்வர் காந்தி வரலாறு பாடிய திருநெல்வேலி டிகே. இராமானுசக் கவிராயர், காந்தி காவியம் பாடிய அரங்க சீனி வாசன், தமிழ்க்கவி உலகம் நன்கறிந்த கவிஞர் மின்னூர் சீனிவாசன் ஆகிய கவிஞர் பெருமக்களுக்கு நாமக்கல் கவிஞர் விருதினை வழங்கி, பொன்னாடை போர்த்தி, கவித்தென்றல் என்னும் பட்டத் தினையும் அளித்துப் பாராட்டினார் மாண்புமிகு கே..கே. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.

அதன்பிறகு சில வசதி குறைவுகளால் தொடர்ந்து விழாக்களை நடத்த முடியவில்லை. இப்போது தமிழக அரசே கவிஞரின் நூற் றாண்டு விழாவினைப் பொறுப்பேற்று நடத்துவது, பெரு மகிழ்ச்சியை அளிக்கிறது.

நாமக்கல் கவிஞருக்குத் தமிழக அரசு எவ்வளவோ பெருமை யினை செய்திருக்கிறது.
நாமக்கல் கவிஞருக்கு என்னென்ன செய்ய வேண்டுமென்று 1973 முதலே, நினைவுக்குழு வலியுறுத்தி வந்துள்ளது.

1. காந்தியக் கவிஞருக்கு மத்திய அரசு நினைவு அஞ்சல் தலையை வெளியிட வேண்டும்.
2. அவருடைய இலக்கியப் படைப்புகளை தேசியமயமாக்க வேண்டும்.

3. சாகித்திய அக்கடாமி மற்றும் அரசுக்குட்பட்ட நிறுவனங்கள் மூலமாக. இந்திய மொழிகள் அனைத்திலும் கவிஞரின் காந்தியப் பாடலை வெளியிட வேண்டும்.

4. கவிஞரின் நாமக்கல் இல்லத்தை நினைவுச் சின்னமாக்க வேண்டும்.

5. காந்தியக் கவிஞருக்குப் பொருத்தமான இடத்தில் சிலை அமைத்துச் சிறப்பிக்க வேண்டும்.

6. நாமக்கல்லில் இயங்கி வரும் அரசினர் கல்லூரிக்கு கவிஞரின் பெயரைச் சூட்ட வேண்டும்.

7. வானொலியில் ஆண்டுதோறும் பிறந்த நாளில் கவிஞர் பற்றிய நிகழ்ச்சிகள் ஒலி பரப்பப்படுவதை கூடுதலாக்க வேண்டும். அது போன்றே, தொலைக் காட்சியும் செய்லபட வேண்டும்.

தமிழக அரசு 1) நாமக்கல்லில் அரசினர் பெண்கள் கல்லூரிக்கு அவருடைய பெயரைச் சூட்டி இருக்கிறது.

2) அவர் வாழ்ந்த தெருவுக்கு அவருடைய பெயரை வைத் துள்ளது.

3) இப்போது அவருடைய நூற்றாண்டு விழாவினைக்  கொண் டாட பொறுப்பேற்றுள்ளது

நாமக்கல்லில் அவர் வாழ்ந்த இல்லத்தினை அரசு  நினைவுச் சின்னமாக எவ்வளவோ முயற்சிகளை எடுத்துக்  கொண்டது.

இதன் தொடர்பாக தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர்கள் பேராசியரியர் கொண்டல் சு. மகாதேவன், டாக்டர் மா. நன்னன் சிலம்பொலி சு. செல்லப்பன் ஆகியோர் தொடர்ந்து குழுவின் செயலாளர் என்ற முறையில் என்னுடன் கடிதத் தொடர்பு கொண்டிருந்தனர்.

இல்லத்தை நாட்டுடமையாக்க வழக்கறிஞரைக் கொண்டு பத்திரம் தயாரித்து கவிஞரின் குடும்பத்தாரிடம் கொடுத்து கவிஞரின் பிள்ளைகள், பெண்கள் ஒப்புதலைக் கேட்டோம்

கவிஞரின் இளையமகன் ராஜா மிகுந்த ஆர்வத்துடன்  செயல் பட்டார். ஆயினும் அனைவரும் ஒரு முடிவுக்கு வர முடியாததால் அத்திட்டம் அப்படியே நின்று விட்டது. கவிஞரின் குடும்பத்தார் உடனடியாக ஒரு முடிவுக்கு வந்தால், அரசு கவிஞரின் இல்லத்தை நினைவுச் சின்னமாக்கும் பணியை நூற்றாண்டு விழா நடைபெறும் இந்த ஆண்டிலேனும் வெற்றிகரமாக செய்து முடிக்கும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் இருக்கிறது.

மாண்புமிகு இராம.வீரப்பன் அவர்கள் செய்தித்துறை அமைச்சராக இருந்த போதுதான் முதல்வரின் ஒப்புதலுடன் மேலே குறித்த சிறப்புகள் கவிஞருக்கு நடைபெற்றன. இப்போதைய செய்தித்துறை அமைச்சர் மாண்புமிகு வி.வி.சுவாமிநாதன் கவிஞரின் அஞ்சல் தலையை வெளியிடுவதற்கான முயற்சியினை மேற்கொண்டுள்ளார்.

காந்தியம் என்பது இந்தியாவிலுள்ள 70 கோடி மக்களும் உணர்ந்த தத்துவமாகும். இந்தியாவுக்கு வெளியே உள்ளவர்களும் உணர்ந்து போற்றும் கொள்கையாகும்

இத்தத்துவத்திற்காகவே தம்மை அர்ப்பணித்துக் கொண்டு காந்தியத்தை- கதர் வளர்ச்சியை- தீண்டாமை - மதுவிலக்கை மிகத் துல்லியமாகப் பாடிய கவி இந்தியாவிலேயே, நம்முடைய தமிழ்க்கவி, நாமக்கல் கவிஞர் ஒருவர் தான். அவருக்கு நிகராக இன்னொரு கவிஞரை இந்தியா வில் இதுவரையில் யாரும் எடுத்துக் காட்டவில்லை. இந்த வகை யில் தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய பெருமையை நாம் சேர்க்க வேண்டும், தமிழ்நாட்டின் தேசியக் கவியைப் பாராட்டுவதில் மத்திய அரசும் ஆர்வம் காட்ட வேண்டும் அவருடைய விழா வினை இந்தியாவின் தலைநகரிலேயும் நடத்த வேண்டும். அவரு டைய கவிதைகள்  இந்த நூற்றாண்டு விழா நடைபெறும் சமயத்தில் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு பரவ வேண்டும்.அரசோ அரசினுடைய தூண்டுதலால் சாகித்ய அக்காடமியோ அப்பணியைச் செய்ய வேண்டும்.

மாண்புமிகு முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் கவிஞரின் புதின மான மலைக்கள்ளன் திரைப்படத்தில் நடித்துப் பெருமை பெற்றது டன் கவிஞருக்கும் பெரும் புகழைச் சேர்த்துக் கொடுத்தார். நாமக்கல் கவிஞருக்கும் அவருக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு.
மலைக்கள்ளன் படத்தோடு தொடர்புடைய டாக்டர் எம்.ஜி.ஆர். டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி, கலைஞர் என்.டி. ராமாராவ் ஆகிய மூவரும் முதலமைச்சர்கள் பதவிப் பொறுப் பேற்கும் வாய்ப்பினைப் பெற்றவர்கள் என்பதும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.

கவிஞரை முற்றிலும் உணர்ந்திருக்கிற அவரோடு நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டு பணியாற்றியுள்ள மாண்புமிகு சிலம்புச் செல்வர் இக்குழுவின் தலைவராக இருந்து குழுவின் குறிக்கோள்கள் வெற்றிக்கரமாக நிறைவேற வழிகாட்டி வந்துள்ளார்.
இவ்விரு பெருமக்களும் கவிஞரை பற்றிய கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றிக் தருவார்கள் என்பதில் அனைவருக்கும் நம்பிக்கையுண்டு.

No comments: