Wednesday, January 29, 2020

ம.பொ.சி. பேசுகிறார்


.பொ.சி. பேசுகிறார்
இந்தியாவில் நடந்தது சுதந்திரப் புரட்சி. ருஷ்யாவில் நடந்தது சோஷலிசப் புரட்சி

(4.11.87- இல் சோவியத் கான்சல் அலுவலகத்தில் நடைபெற்ற இந்திய சுதந்திர நாற்பதாம் ஆண்டு விழாவும் சோவியத் ஆட்சியின் எழுபதாம் ஆண்டு விழாவும் இணைந்து கொண்டாடப்பட்ட போது சிலம்புச் செல்வர் டாக்டர் .பொ.சி அவர்கள் நிகழ்த்திய உரை)

இந்தியா சுதந்திரம் பெற்று இந்த ஆண்டு ஆகஸ்டுப் பதினைந்திலே நாற்பதாண்டு நிறைவு பெற்றிருக்கிறது. ஆம். ஒரு மண்டலம் முடிந்து விட்டது. அதனால் கடந்த ஆகஸ்ட்த் திங்களிலே நாள்பது ஆண்டு விழாவானது நாடெங்கும் கொண்டாடப்பட்டது. மத்திய அரசாலும் மாநில அரசுகளாலும் கொண்டாடப்பட்டது.

1917 ஆம் ஆண்டு நவம்பரிலே ருஷ்யாவில் வர்க்கப் புரட்சி வெற்றிக்கரமாக முடிவுற்று, அங்கு சோவியத் ஆட்சி மலர்ந்தது. அதற்கு இந்த ஆண்டு நவம்பரிலே எழுபது ஆண்டு நிறைவு பெற்றுவிட்டது.

சென்னையிலுள்ள சோவியத் கான்சல் அலுவலகம் இந்திய சுதந்திர நாற்பதாண்டு விழாவையும் சோவியத் ஆட்சியின் எழுபதா மாண்டு விழாவையும் இணைத்துக் கொண்டாடுகிறது. அதிலே கலந்து கொண்டு பேசுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் நடந்து கொண்டிந்த போது, ருஷ்யாவில் ஜார் ஆட்சிக் தெதிராக தோழர் லெனின் தலைமையில் வர்க்கப்புரட்சி நடந்து கொண்டிருந்தது. ருஷ்யாவில் நடந்தது, அந்த நாட்டிற்குள்ளேயே உழவர், தொழிலாளர் மீது ஆதிக்கம்  செலுத்திய நிலப்பிரபுத்துவ- முதலாளித்துவ எதிர்ப்புப் புரட்சியாகும்.

ஜார் ஆட்சியானது ஒரு சுதேசி சாம்ராஜ்யமாகும். அதற்கு மேல் நிலப்பிரபுத்துவ-முதலாளித்துவ ஆட்சியாகும். அதனால் அங்கு அப்போது வர்க்கப்புரட்சி அவசியப்பட்டது.

இந்தியாவிலோ, ஆறாயிரம் மைல்களுக்குப்பாலுள்ள இங்கிலாந்தின் ஆதிக்கம்  நடைபெற்றது. அந்த இங்கிலாந்தில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் விற்பனைச் சந்தையாக இந்தியப் பெருநாடு பயன்படுத்தப்பட்டது. அதனால் இங்கு அன்னிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சுதந்திரம் அடைய வேண்டியது அவசரக் கடமையாக இருந்தது.
சுருங்கச் சொன்னால், சோவியத்தில் நடந்தது. சுதந்திரப் புரட்சியல்ல. சோஷலிசப்புரட்சி. இந்தியாவில் நடந்ததது சோஷலிசப்புரட்சியல்ல. சுதந்திரப்புரட்சி.

இது, இரண்டு நாடுகளில் நடந்த புரட்சிகளில் வெளிப்பட்ட அடிப்படை வேற்றுமையாகும்.

அப்படியிருந்தும், இந்தியாவில் நடந்த சுதந்திரப் புரட்சிக்கு தோழர் லெனின் போன்ற ருஷ்யத் தலைவர்கள் தார்மீக ரீதியில் ஆதரவு காட்டினார்கள். இந்தியத்தலைவர்களாலும் ருஷ்யாவில் நடந்த வர்க்கப்புரட்சிக்கு ஆதரவு காட்டப்பட்டது.

இன்னொரு விதமான அடிப்படை வேற்றுமையும் ருஷ்யாவில் நடந்த சோஷலிசப் புரட்சிக்கும் இந்தியாவில் நடந்த சுதந்திரப் புரட்சிக்கும் உண்டு.

ருஷ்யப் புரட்சியிலே பலாத்காரம் கலந்திருந்தது. பலாத் காரத்தின் மூலம்தான் அதற்கு வெற்றியும் கிடைத்தது.

இந்தியாவிலோ, சுதந்திரப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய காந்தியடிகள் அகிம்சைப் பாதையில் நாட்டை நடத்திச் செல்ல முயன்றார். காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் மக்களும் காந்தியடிகளின் அகிம்சையை கொள்கை அளவிலே ஏற்றுக் கொண்டிருந்தனர். முடிந்தவரை கடைப்பிடிக்கவும் செய்தனர்.

இந்திய சுதந்திரப் போராட்டம் அகிம்சை முறையில் நடந்து கொண்டிருந்த போது, இம்சை வழியிலான பயங்கரச் செயல்களும் அங்குமிங்குமாக நடந்தன. தெற்கே வாஞ்சி நாதனும், வடக்கில் பகத்சிங்கும் வன்முறையில் நம்பிக்கை  கொண்டு செயல்பட்டனர்.

அவர்களுடைய தேச பக்தியையும் தியாக உணர்வையும் அகிம்சையில் நம்பிக்கை கொண்ட காந்தியடிகளும் பிற தலைவர் களும் பாராட்டியது உண்டு. ஆனால், தனிநபர் பயங்கரத்தை ஒரு நாளும் அவர்கள் ஒப்புக் கொண்டதில்லை. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது பயங்கரவாதிகளால் அல்ல. ஆகஸ்டில் நடந்த பலாத்காரத்தின் மூலமும் அல்ல. இதனை நாம் மறந்து விடக்கூடாது.

பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகிய பயங்கரவாதிகள் தூக்குத் தண்டனை பெற்ற போது. அதனை ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு வைசிராய் லார்டு இர்வினுக்கு காந்தியடிகள் வேண்டுகோள் விடுத்தார். அது பலனளிக்காமல் அவர்கள் தூக்கி லிடப்பட்டனர். அது நிகழ்ந்த சில நாட்களில் கராச்சி நகரில் நடந்த காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்திலே. பகத்சிங்கிற்கும் அவருடைய தோழர்கள் இருவருக்கும் வீர வணக்கம் செலுத்தும் தீர்மானத்தின் மீது காந்திஜி பேசினார்.

தமது பேச்சிலே அவர் தூக்கில் மாண்ட தோழர்களிடம் எல்லையற்ற அன்பு காட்டி இதய பூர்வமாக அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கருத்துத் தெரிவித்தார். மகா சபையில் பகத்சிங்கிடம் பற்று கொண்ட சிலர் காந்தியடிகளின் பேச்சை இடைமறித்துக் கூச்சலிட்டனர். அவர் அஞ்சவில்லை. ‘என் தலையை நீங்கள் எல்லாம் சீவி எறியலாம். அதன் பின்னும் எனது வாய் பயங்கரச் செயலை எதிர்த்தே பேசும்என்று உறுதி தோய்ந்த குரலில் கூறினார்.

பொது ஜனப் புரட்சி வேறு. தனி நபர் பயங்கரம் வேறு. ஆங்கிலத்திலே, மாஸ் ரெவல்யூசன் என்றும் இன்டுவிஜுவல் டெர்ரரிசம் என்றும் சொல்லப்படுகின்றன,

ருஷ்யாவில் நடந்தது பொது ஜனப்புரட்சியாகும். ஒரு காலத்திலே, டெர்ரரிசம் எனப்படும் தனி நபர் பயங்கரமும் பொது ஜனப் புரட்சியின் ஓர் அங்கம் போல் சோஷலிஸ்டுகளால் கருதப் பட்டது. நாளடைவில் அந்த மாயை அகன்றது. இப்போதெல்லாம் பொது ஜனப் புரட்சியில் நம்பிக்கையுடையவர்கள் தனி நபர்களின் பயங்கரச் செயல்களை வெறுக்கின்றனர். அதனால், பொதுஜனப் புரட்சி தடைபட்டு விடும் என்ற உண்மையை உணர்ந்தவர்களாகி நமக்கும் உணர்த்துகின்றனர்.

ஆயுத பலங் கொண்டு நடத்தப்படும் பொது ஜனப் புரட்சி நம் நாட்டுக்குத் தேவைதானா என்பது வேறுவிஷயம். ஆனால் தோழர் லெனின் காலத்திலே ருஷ்யாவில் அது தவிர்க்க முடியாததாகி விட்டது.

மகாகவி பாரதி தெய்வ நம்பிக்கையுடையவர். அகிம்சா தர்மத்தைக் கையிலேந்தி காந்தியடிகள் இந்திய அரசியலில் புகுந்த போது அவரை வரவேற்றார். அவரது அகிம்சைக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்று வாழ்த்தும் கூறினார். அதே பாரதி, வன்முறையில் நடந்த பொது ஜனப்புரட்சியிலிருந்து பிறந்த சோவியத் ருஷ்யாவுக்கும் வாழ்த்து கூறினார்.

 ‘சோவியத்என்னும் சொல்லுக்கு மாற்றாகபுதியஎன்னும் சொல்லைப் பயன் படுத்தினார். தோழர் லெனின் தலைமையில் தோன்றிய சோவியத் ஆட்சியை வரவேற்றும் வாழ்த்தியும் புனைந்த பாடல் தொகுப்புக்குபுதிய ருஷ்யாஎன்று தலைப்புத் தந்தார்.

அகிம்சையில் அழுத்தமான பற்று கொண்டவர்களுக்கு வன்முறையிலான பொது ஜனப்புரட்சியும் அதே முறையிலான தனி நபர் பயங்கர இயக்கமும் பிடிக்காதவை. ஆனால், அந்த இரண்டனுள் ஏதேனும் ஒன்றை அவர்கள் வரவேற்க முடியும் என்றால், அது பொதுஜனப் புரட்சியைத்தான். அப்படி கருதிதான் பாரதியார் ருஷ்யாவில் நடந்த வர்க்கப் புரட்சியின் வெற்றிக்கு வாழ்த்துக் கூறினார். மகாத்மா காந்தியும் ருஷ்யப் புரட்சியாளர் களின் பிரமிக்கத்தக்க தியாகத்தைப் புகழ்ந்தார்.

இன்று உலகெங்கும் தனி நபர் பயங்கரச் செயல்கள் நிகழ்ந்து வருகின்றன. ஒரு சிலர் ஒளிந்து மறைந்து நடத்தும் கொலைகளாலும் கொள்ளைகளாலும் ஒரு இனத்திற்கோ ஒருதேசத்திற்கோ புது வாழ்வு தேடிவிட முடியாது. தேடியதாக உலக சரித்திரத்திலே சான்று இல்லை.

பொது ஜனப் புரட்சியால் மலர்ந்த சுதந்திர நாடுகள் பல உண்டு. அது போல், வர்க்கப் புரட்சியில் மலர்ந்த சோஷலிச நாடுகளும் உண்டு. ஆனால், தனிநபர் பயங்கரத்தால் அப்படிப்பட்ட அதிச யங்கள் நிகழ்ந்ததில்லை.

தனிநபர் பயங்கரவாதத்தை எதிர்ப்பது உலக சமாதானத்தை எதிர்ப்பது உலக சமாதானத்தை விரும்வுவோரின் கொள்கையாகி விட்டது.

ஐக்கிய நாடுகள் மன்றமானது டெர்ரரிசத்தை எதிர்க்கும் ஆண்டு ஒன்றைத் தேர்ந்தெடுத்து உலக நாடுகள் எல்லாம் கொண்டாடச் செய்தது.

அண்மையில் கனடாவில் கூடிய காமன் வெல்த் நாடுகள் மாநாட்டிலும் உலகில் பரவி வரும் தனி நபர் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவது என்று ஒரு மனதுடன் தீர்மானிக்கப்பட்டது.
நேபாளத்தின் தலைநகரான காட்மண்டுவில் நடந்த தெற்காசிய நாடுகள் மாநாட்டிலும் தனி நபர் பயங்கரச் செயலை ஒழிப்பது என்ற முடிவு ஒரு மனதுடன் எடுக்கப்பட்டது.

ருஷ்யாவில் சோவியத் ஆட்சி மலர்ந்த எழுபதாம் ஆண்டைக் கொண்டாடுவதிலே நான் பங்கு கொள்கிறேன் என்றால், அகிம்சை யில் நம்பிக்கை இழந்ததால் அல்ல. வன்முறையிலான பொது ஜனப் புரட்சிக்கு இந்த நாட்டில் சந்தர்ப்பம் இருக்கிறது என்ற நம்பிக்கை யாலும் அல்ல.
மக்கள் சர்வாதிகாரம் என்னும் தத்துவத்தில் நம்பிக்கை  கொண்டது சோவியத் ருஷ்யா. இந்தியாவை ஜனநாயக நாடு என்று நாம் சொல்லிக் கொள்கிறோம். இது அப்பட்டமான தத்துவ வேறுபாடுதான். ஆயினும்,  விரோதப்பாடு அல்ல.

நான் மனிதநேயத்தில் நம்பிக்கையுடையவன். உலக சமாதானத்தை விரும்புபவன். தேசங்களைத் துண்டாடுவதை கட்டோடு எதிர்ப்பவன்.

கொள்ளைகளாலும் கொலைகளாலும் ஓர் இனத்திற்கோ, ஒரு தேசத்திற்கோ விடுதலை தேடிவிட முடியும் என்பதை நம்பாதவன். இந்த நற்பண்புகள் காரணமாக எழுபது ஆண்டுகளுக்கு  முன் ருஷ்யாவில் சோவியத் ஆட்சி மலர்ந்ததை வரவேற்று இந்திய சோவியத் நட்புறவுக்கு வாழ்த்துக் கூறுகின்றேன்.

No comments: