Wednesday, January 29, 2020

சிலம்புச் செல்வரின் யாழ் பற்றிய ஆராய்ச்சி


சிலம்புச் செல்வரின் யாழ் பற்றிய ஆராய்ச்சி

தமிழகத்தின் இன்னிசைக் கருவிகளிலே யாழும் குரலும் சிறந்தவையாகும். வள்ளுவரும்யாழினிது குழுலினிதுஎன்கிறார்.

யாழ்என்பது நரம்புக் கருவி. ‘குழல்என்பது துளைக்கருவி.

யாழ்க் கருவி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களிலேயே எடுத்தாளப்பட்டுள்ளது. பண் வேறுபாடு களையும் தாள வேறுபாடுகளையும் நன்கு எடுத்துக் காட்ட வல்லது யாழ்.

தொல்காப்பியம்எனப்படும் தமிழ் இலக்கணத்திலேயும் இக்கருவி எடுத்தாளப்பட்டுள்ளது.
தமிழின் தலைக்காப்பியமான சிலப்பதிகாரத்துள் யாழ் பல வகை யானது என்பது விளக்கப்படுகிறது. அரும்பதவுரைகளாரும் அடி யார்க்கு நல்லாரும் யாழ் கருவியின் வகைகளையும் பயன்களையும் விரிவாக கூறினர்.

யாழிசை மேல் வைத்து தன் ஊழ்வினை வந்து உறுத்ததால் கோவலன் மாதவிபால் ஊடல்கொண்டு அவளை விட்டுப் பிரிந்தான் என்கிறார் இளங்கோவடிகள். இதனால், யாழ் சிலப்பதி காரத்துள் ஒன்றாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது.

இன்னும் மணிமேகலை. சீவக சிந்தாமணி, பெருங்கதை ஆகிய வற்றுள்ளும் யாழ்க்கருவி பயன்படுத்தப்பட்டுள்ளது.

திருத்தொண்டர் புராணத்துள் திரு நீலகண்ட யாழ்ப்பாணர் என்பார், பிள்ளைப் பெருமாளான திருஞான சம்பந்தர் பாடிச் செல்ல அவருக்கு யாழிசைத்து உதவினார் என்கிறார் சேக்கிழார் பெருமான்.

யாழ் வாசிப்பதையே தொழிலாகக் கொண்ட சாதியார் பாணர்-யாழ்ப்பாணர் என்று அழைக்கப் பெற்றனர். இவர்கள் வசித்த வீதி ஒன்றும் புகார் நகரில் இருந்ததாக சிலப்பதிகாரத்தால் அறிகிறோம்.

தமிழ்நாட்டு கோயில்கள் பலவற்றுள்ளும் யாழ் கருவியை சிற்ப வடிவில் பார்க்க முடிகிறது.
யாழிசைத்த பாணர்கள் கிராமப்புறங்களிலும் வாழ்ந்தனர். இதனை கோவலனும் கண்ணகியும் மதுரை நோக்கிப் பயணஞ் செய்தபோது வழியில் (மதுரைக் காண்டத்துள்) அம்பணர் என்பவர்களுடன் சேர்ந்து கோவலன் யாழிசைத்து மகிழ்ந்தான் என இளங்கோ குறிப்பிடுவதால் அறிகிறோம்.

கி.பி.ஏழாம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் தோன்றிய இலக்கியங்களில் பலவகை யாழ்க்கருவிகளும் அவற்றை இசைக்கும் பாணர்களும் வாழ்ந்திருக்கின்றனர் என்பதில் அய்யமில்லை. பிந்திய நூற்றாண்டில் பிறந்து வாழ்ந்தவராகக் கருதப்படும் மணிவாசகரின் திருவாசகத்துள்ளும் திருப்பள்ளியெழுச்சியுள் யாழ்க்கருவி குறிப் பிடப்படுகிறது.

இவ்வளவு நீண்ட காலம் பலவகை யாழ்க்கருவிகளிலிருந்தும், அவற்றை இசைப்போர் புகார் போன்ற  தலை நகரங்களில் மட்டு மன்றி கிராமங்களிலும் தனிச்சாதியினராக வாழ்ந்திருந்தும் அந்த யாழ் வகைகள் மறைந்து போய்விட்டனவென்று ஒரு கருத்து நிலவுகிறது.

பிற்காலத் தமிழகத்தில் பழைய யாழ்க்கருவியே வீணை என மாற்றுப் பெயர் பெற்று வழங்கி வருகிறதென்று சொல்வாருமுண்டு.

யாழ் வேறு; வீணை வேறு எனக் கொண்டு, இரண்டின் வடிவங் களின் வேறுபாடுகளைக் காட்டவோருமுண்டு.

யாழ்ப்பாண வாசியான பெரும் புலவர் விபுலானந்த அடிகள் பழைய இலக்கியங்களில் வரும் யாழ்க் கருவிகளுக்கு தம்முடைய நுண்ணறிவால் வடிவங்கள் படைத்து யாழ் நூல் என்னும் பெயரில் ஒரு தனி பெரும் நூலைப் படைத்துள்ளார்.

இந்த யாழ்க்கருவி பற்றி யான் பல ஆண்டு காலம் ஆய்ந்த தெளிந்து ஒரு முடிவுக்கு வந்துள்ளேன். பழைய யாழ்க்கருவி மறையவில்லையென்றே கருதுகிறேன். யாழ் வேறு; வீணை வேறு என்பதை ஒருவகையில் ஏற்றும், இன்னொரு வகையில் மறுத்தும் சான்றுகளைத் திரட்டியுள்ளேன்.

என் கருத்துக்களை வெளியிடு முன் நாட்டிலுள்ள புலவர்கள்-குறிப்பாக நரம்புக் கருவிகளில் திறன் பெற்றுள்ளவர்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்.

ஆகவே இக் கட்டுரையை அவர்கள் பார்வைக்கு அனுப்பி அவர்களுடைய கருத்துக்களைத் திரட்ட முயன்று வருகிறேன். பின்னர் என் ஆய்வில் கண்ட கருத்துக்களைச்சற்று விரிவாகவே வெளியிடுவேன்.

சிலம்புச் செல்வர் டாக்டர் .பொ.சிவஞானம் அவர்கள் யாழ் பற்றி பல்லாண்டு காலமாக ஆய்வுகள் நிகழ்த்தி பல குறிப்புகளைச் சேகரித்து வைத்துள்ளார்கள். அக்குறிப்புகளின் அடிப்படையில் இப்பொழுது யாழ் பற்றிய தம் ஆய்வுத் தொடரை தம்முடைய செங்கோல் இதழில் எழுத இருக்கிறார்கள்.

யாழ் பற்றிய தம் கருத்துக்களை புலவர்களுக்கு-குறிப்பாக நரம்புக்கருவிகளின் திறன்பெற்ற பெருமக்களுக்கு-அனுப்பி அவர்கள் கருத்துக்களை அறிய விரும்புகிறார்கள்.
இந்த ஆய்வில் பங்கு பெறும் அன்பர்களுக்குஆய்வு முடியும் வரை செங்கோல் இதழ்களை அனுப்பி வைப்பதாகவும் அறிவித்துள்ளார்கள்.

இசைத்துறையில் ஆர்வமுடைய புலவர்கள் சிலம்புச் செவ்வரோடு தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

முகவரி:
மாண்புமிகு டாக்டர் சிலம்புச்செல்வர்
1 சர்.சி.பி.இராமசாமி அய்யர் சந்து
ஆழ்வார்பேட்டை, சென்னை - 18
                                                                                -ஆசிரியர்

No comments: