Thursday, March 24, 2022

பெரியார் மணியம்மை திருமணம்

பெரியார் மணியம்மை திருமணம் . ஒரு வரலாற்று உண்மை விளக்கம் - கி. வீரமணி - திராவிடர் கழக (இயக்க) வெளியீடு - பக்கங்கள் 280 - நன்கொடை ரூ 200/

●  தமிழக வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக இருந்தது தான் பெரியார் - மணியம்மை திருமணம் ! அந்த திருமணம் (1949) அப்போது பெரும் அதிர்வலையை  ஏற்படுத்தியது. எதிர்ப்பும் ஆதரவும் மாறி மாறி பத்திரிக்கைகளை நிறைத்தன ! பெரியாரின் விடுதலை இதழில் அறிக்கைகளும் ஆதரவுகளும் என்றால், அண்ணாவின் திராவிட நாடு இதழில் மடல்களும் எதிர்ப்புகளும் பரபரப்பாக வெளியாயின !

●   அண்ணா அப்போது பெரியாரின் நம்பிக்கையான தளபதியாக திராவிடர் கழகத்தில் இருந்தார் ! பெரியாரின் தன்னிலை விளக்கங்கள், தலைவர்களின் ஆதரவுகள், தொண்டர்களின் ஆதரவு மடல்கள், எதிரான அறிக்கைகள்,  இப்படி நிறைய தகவல்களை கொண்டு - இனி வரும் தலைமுறைக்கு சரியான வரலாற்றை சொல்வதற்கான முயற்சிதான் - இந்த நூல் !

●  நூலாசிரியர் கி. வீரமணி தனது முன்னுரையில், " இயக்கப் பாதுகாப்பு கருதி 1949ல் பெரியார் - மணியம்மை திருமணம் என்ற ஏற்பாடு நடைபெற்றது. திருமணம் என்பது சட்டப்படிக்கான பெயரே ஒழிய, காரியப்படி எனக்கு வாரிசு தான் என்றார் பெரியார். பெரியாரின் தொலைநோக்கு சிந்தனையை இன்று உலகமே வியந்து பாராட்டி கொண்டிருக்கிறது ! " என்று குறிப்பிட்டுள்ளார்.

●  மேலும், ' ஆய்வாளர்களுக்கு இந்நூல் ஓர் அரிய புதையல் ' என்றும், ' ஆய்வாளர்கள் தவறான முடிவுக்கு வராமல் இருக்க, எல்லா தகவல்களையும் தந்துள்ளதாக ' பதிவிட்டுள்ளார் ! ஆகவே இந்த நூலின் முக்கியத்துவம் இன்னும் அதிகமாகிறது !

●  நூலில் தரப்பட்டுள்ள பல அறிக்கைகள், தகவல்களிலிருந்து மிக முக்கியமான ஐந்து ஆவணங்களை நன்கு ஊன்றி படித்தாலே, உண்மைகள் விளங்க ஆரம்பிக்கும். அந்த ஐந்து ஆவணங்களின் அடிப்படையிலேயே இந்த நூலின் அறிமுகத்தை ஒரு ஆய்வு அறிக்கையாக தர விரும்புகிறேன் ! 

அந்த ஐந்து ஆவணங்கள் :

1)  மணியம்மையார் - வேலூர் அ. மணி என்ற பெயரில் குடிஅரசு இதழில் வெளியிடப்பட்ட சிறு அறிக்கை (23.10.1943).

2)  பெரியார் - விளக்கம் என்று தலைப்பிட்டு விடுதலையில் வெளியிட்ட அறிக்கை (19.06.1949).

3)  அண்ணா - வெட்கப்படுகிறோம். வேதனைப்படுகிறோம் இல்லை விரட்டப்படுகிறோம் என்ற தலைப்பில் திராவிட நாடு இதழில் வெளியிட்ட அறிக்கை (05.07.1949).

4)  பெரியார் - விளக்கம் கேட்ட தோழர்களுக்கு என்று தலைப்பிட்டு விடுதலையில் வெளியிடப்பட்ட அறிக்கை (07.07.1949).

★ பெரியார் - மணியம்மை திருமணம் நடந்தேறியது (09.07.1949) ★

5)  பெரியார் - திருமணம் எண்ணம் தோன்றுவதற்கும் அவசரத்திற்கும் முக்கிய காரணம் என்ற தலைப்பில் விடுதலையில் வெளியிட்ட அறிக்கை (13.07.1949).

●  தந்தை பெரியாருக்கு உதவியாகவும் அவரது நலனை பாதுகாக்க ஒரு தாதியாகவும் வந்து சேருகிறார் மணியம்மையார். பெரியாரின் உடல் நலன் பற்றியும் அவரை பேணிகாக்க தன்னலமற்ற ஆட்கள் வேண்டுமென்றும் குடிஅரசு இதழில் (1943) சிறு அறிக்கையை வெளியிடுகிறார். அந்த அறிக்கையில் அவர் தந்துள்ள காரணங்களையும் வேண்டுகோளையும் அறியும் எவரும், மணியம்மையாரை பாராட்டாமல் இருக்க இயலாது !

●  "  பெரியாரை பாதுகாக்க வரும் பெண்கள் - மானம், ஈனம், ஊரார் பழிப்பு யாவற்றையும் துறந்த நல்ல, கல்லுப் போன்ற உறுதியான மனதுடைய நாணயவாதியாகவும், வேறு தொல்லை இல்லாததர்களாகவும் இருக்க வேண்டும் ! பெரியாரை போற்றுதலும் பெரியார் செல்லுமிடங்களுக்கெல்லாம் சென்று இயக்க வேலைகளை செய்ய வேண்டும். பெண் மக்களே யோசியுங்கள் ! " என்று குறிப்பிட்டிருந்தார் .

●  சமுதாய பணி செய்ய வேறு யாரும் வராத காரணத்தால் அதற்கு, தான் யோக்கியதை உடையவராக எண்ணி,  பெரியார் அந்த வேலையை செய்ய வந்ததாக கூறியது போல - பெரியாரை பேணவும், அவருக்கு உதவவும், இயக்க பணிகளுக்கு துணையாக இருக்கவும், அவருக்கு உதவ வேறு யாரும் தன்னை அர்ப்பணிக்க முன் வராததால் -  மணியம்மையாரே பெரியாரின் வாரிசாக வருவதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார் !


●  தந்தை பெரியார் -  திராவிடர் கழகத்தை காப்பாற்றுவதற்கும், தான் சேர்த்து வைத்த சொத்துக்களை பாதுகாக்கவும், அதற்கு டிரஸ்ட் ஏற்பாடு செய்யவும், அந்த ஏற்பாட்டிற்காக மணியம்மையாரை வாரிசாக்கவும், அந்த வாரிசு அந்தஸ்து பெற வேண்டுமென்றால் - மணியம்மையாரை திருமணம் செய்ய வேண்டிய சட்ட ஏற்பாடாகவே அவரது திருமணத்தை நடத்த முடிவு செய்தார்

●  பெரியார் வெளியிட்ட அந்த விவரமான நீண்ட அறிக்கைகளிலிருந்து தெளிவுபடுத்திய தகவல்கள்:

"  எனக்கும் எனது பொருளுக்கும் சட்டப்படியான ஒரு வாரிசை ஏற்படுத்தி கொள்வது அவசியம் ! "

" மற்றபடி பிரஸ்தாப திருமணம் என்பது சட்டப்படிக்கான பெயரே ஒழிய, காரியப்படி எனக்கு வாரிசுதான் ! "

" மணியம்மைக்கு இஷ்டமில்லாத, துன்பங்களை சகித்துக் கொண்டிருக்க வேண்டிய திருமணம் அல்ல ! " .

●  இவ்வாறு பெரியார் - இயக்கத்தை காக்க, சொத்துக்களை பாதுகாக்க, தன் உடல்நலனைப் பேண, அதிகாரபூர்வ வாரிசு அமைப்பதற்காக தனது 70வயதில் 30வயது மணியம்மையாரை - ஒரு தொலை நோக்கு பார்வையோடு, தீர்க்கமான முடிவோடு , சுகவாழ்வுக்காக அல்லாமல், பொது வாழ்வில் மேலும் சாதிக்க - திருமணம் செய்தார் !

●  அண்ணா இந்த திருமணத்தை 

 வெட்கப்படுகிறோம் ! வேதனைபடுகிறோம் இல்லை விரட்டப்படுகிறோம் என்ற அறிக்கையில் தனது வேதனையை தெரிவிக்கிறார்.

' தலைவருடைய நம்பிக்கைக்கே பாத்திரமாக முடியாத நாம், அவருடைய தலைமையின் கீழ் பணியாற்றி என்ன பயன் ' என்ற எண்ணத்தையும் வெளிப்படுத்துகிறார் !

●  அண்ணா - பெரியாரின் கடுமையான கட்டுப்பாடான, பகுத்தறிவு பிரச்சாரம் மட்டுமே செய்ய வேண்டிய அமைப்பாக கழகம் இல்லாமல், சுதந்திரமான அரசியல் கட்சியாக அதை மாற்றி அமைக்க விரும்பினார் ( பிற்காலத்தில், திமுக தலைவர்களே இதை பகிரங்கமாக ஒத்துக் கொண்டிருக்கின்றார்கள் ). அதற்கு சரியான வாய்ப்பாக இந்த திருமணம் அமைந்தது. அதன் காரணமாக பெரியாரை விட்டு விலகி, திராவிடர் கழகத்தை விட்டு விலகி - 17.09.1949ல் புதிய அரசியல் கட்சியாக திமுகவை தோற்றுவித்தார் !

●   வேதனையோடு வெளியேறிய அண்ணா - 18 ஆண்டுகள் தனது அரசியல் இயக்கமான  திமுகவை கட்டிக் காப்பாற்றி, காங்கிரஸ் பேரியக்கத்தை தோற்கடித்து, 1967ல், தமிழகத்தில் ஆட்சியை வென்று, அந்த ஆட்சியை பெரியாருக்கு சமர்ப்பித்து - தன் மீது விழுந்த பழியை துடைத்தார் ! 

அறிஞர் அண்ணாவானார் ! !

●   வேதனையோடு மணமுடித்த மணியம்மையார் - 24 ஆண்டுகள் பெரியாரை கண்ணும் கருத்துமாக கவனித்து, அவரது இறுதி மூச்சு வரை, பெரியாரின் 94 வயது வரை சேவை செய்து, கழகத்தையும் பெரியாரையும் காப்பாற்றி - தன் மீது விழுந்த பழியை துடைத்தார் ! 

அன்னை மணியம்மையானார் ! !

●  இந்த நூலை படித்த பின்பு நமக்கு தெளிவாக விளங்கும் உண்மை என்னவென்றால் - 

பெரியார் - மணியம்மை திருமணம் என்பது :

★ தாம்பத்தியத்தில் வாழ்ந்து, சேர்த்து, சுகத்தை காண்பதற்கல்ல !

★ தாம் - பத்தியமாய் வாழ்ந்து, சேர்த்த சொத்தை காப்பாற்றுவதற்காகவே ! !

பொ. நாகராஜன். 

பெரியாரிய ஆய்வாளர். சென்னை. 24.03.2022.

********************************************

No comments: