தம்பி நான் ஏது செய்வேனடா – பரலி சு. நெல்லையப்பர்
(நினைவு தினம் இன்று 28-03-1971)
பாரதிக்காக வாழ்ந்த மூவரில் தலைமகனாக கருதப்படுபவர் பரலி சு. நெல்லையப்பர்.
பாரதி பாடல்களின் நுட்பத்தை அறிந்த காரணத்தால் இந்திய மக்களிடையே பல்வேறு பத்திரிகைகள் மூலம் சுதந்திர உணர்ச்சிகளை பரப்பியவர் நெல்லையப்பர்.
வீரக்கனல் சுப்பிரமணிய சிவாவையும் சுதேசி பிழம்பு வ.உ.சிதம்பரனாரையும் இணைத்து வைத்த பெருமைக்குரியவர் .நெல்லையப்பரின் தமையனார் சண்முக சுந்தரம் பிள்ளை.
1907 ம் ஆண்டு நெல்லையப்பர் வ.உ.சி. வீட்டு திண்ணையில் அமர்ந்து எழுதிக் கொண்டிருக்க , பாரதியார் உரிமையுடன் நெல்லையப்பரின் கையை பற்றி உரிமையோடு “என்ன ஓய்! எழுதுகிறீர்? எழுதியது போதும்”என்று உரிமையோடு அழைத்தார்.
முன் பின் பார்த்தறியாத நெல்லையப்பர் தம் கையை பற்றி இழுக்கிறாரே என்று அவருடன் உலவ சென்று விட்டார். பிற்காலத்தில் நெல்லையப்பர்தான் பாரதிக்கு உற்ற நண்பராக, கவிதைகளை வெளியிடும் பதிப்பாளராக திகழும் நெல்லையப்பர்தான் இவர் என பாரதிக்கும் தெரியாது.
வ.உ.சி.க்கு வெள்ளையர் அரசாங்கம் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பிறகு வ.உ.சி.யின் மனைவி மீனாட்சி அம்மையாரும் , பரலி சு. நெல்லையப்பரும் தண்டனை குறைப்பு மேலீட்டிற்காக சென்னை வந்து பல வக்கீல்களை சந்தித்து பேசிய போது அனைவரும் அப்பீல் செய்ய இடமில்லை என்று கையை விரித்து விட்டனர்.
இச் செய்தியை சிறையிலிருந்த வ.உ.சி.க்கு நெல்லையப்பர் தெரிவித்த போது “ வக்கீலாய் நின்று வழிப்பறியே செய்கின்ற திக்கிலார்” என்று சோகம் ததும்பும் வெண்பா பாடல்களை நெல்லையப்பருக்கு வ.உ.சி. எழுதி அனுப்பினார்.
வ.உ.சி.க்கு சிறையில் இழைக்கப்பட்ட செக்கிழுத்தல், கல்லுடைத்தல் போன்ற துன்பங்களை கண்டு பாரதியின் இந்தியா பத்திரிக்கையில் 28.01.1908 ல் “துன்பம் சகியான்’ என்ற புனை பெயரில் எழுதி வெளி உலகுக்கு கொண்டு வந்தவர் பரலி. சு. நெல்லையப்பர். இந்தியாவில் வந்த இவருடைய முதல் கட்டுரையும் இதுவே.
“தேசபக்தரான ஸ்ரீமான் சிதம்பரம் பிள்ளை ராஜத்துரோக ஜாதித்துவேஷக் குற்றங்கள் சாட்டப்பட்டு, ஆறு வருடம் தீவாந்திர சீஷை விதிக்கப்பட்டிருக்கிறார். தற்சமயம் சிறைப்படுத்தியிருக்கும் கோயம்புத்தூர் ஜெயில் அதிகாரி அவரைக் கைகால் விலங்கிட்டுக் கேவலம் மிருகம் போல் எண்ணெய் ஆட்டும் செக்கு இழுக்கும்படி செய்திருக்கிறாராம்.
அந்தோ! இக்கொடிய துன்பத்தை நினைக்கும் போது நெஞ்சு உருகுகின்றதே. இங்கு எழுதும் போதே நடுங்குகின்றதே! அக் கொடும் துன்பத்தைச் சகிக்கும் தேசபக்தர் பாடு எங்கனமோ? கடவுளே அறிவார்”
கைதிகட்கு எத்தனையோ விதமான வேலை இருக்க, இத்தேச பக்தருக்கு நாற்கால் மிருகங்களும் துன்புறக்கூடிய எண்ணெய் இயந்திரம் சுழற்றும் வேலையையா கொடுக்க வேண்டும்? அவர் கைகால்கட்கு விலங்கிடுவேனோ? என்று நெஞ்சுருக எழுதிக் கொண்டு செல்கிறார்.
கோவைச் சிறையில் வ.உ.சி. இருந்த போது கலெக்டர் ஆஷ் சுடப்படுகிறார்
அச் சமயம் நெல்லையப்பரையும் சந்தேகத்தின் பேரில் பிரிட்டீசார் தேடிவருகின்றனர்.
நெல்லையப்பரோ மாறுவேடத்தில் கோவை சென்று பாரதியார் தந்த கவிதைகளை வ.உ.சி.யிடம் இரகசியமாக சேர்க்கும் பணிகளை செய்கிறார்.
கோவை வழக்கறிஞர் , பெரியபுராண உரையாசிரியர் சி.கே.சுப்பிரமணிய முதலியார் உதவியுடன் கோவை பேரூர் அருகே ஆசிரமம் ஒன்றை அமைத்துக் கொண்டு சாமியார் போல் செயல்பட்டு சிறையிலிருந்த வ.உ.சி.க்கு பல உதவிகளைச் செய்தவர்.
நெல்லையப்பர் வேண்டுகோளுக்கிணங்க வ.உ.சி. தனது சுயசரிதையை அகவற்பாவில் எழுதினார். இதனை வ.உ.சி. குறிப்பிடுகையில்,
”பூவுலகமதனைப் பொருத்தி நின்று
தேவுலகதனிற் சிறந்த உலகின்
நினைவோடு நிற்கும் நெல்லையப்பர்”
என்று எழுதியுள்ளார்.
வெ. சாமிநாத சர்மா நெல்லையப்பரின் கோவை வாசத்தைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
“கப்பலோட்டிய தமிழன் வெஞ்சிறையில் வாடிக் கொண்டிருந்த இடம் கோயமுத்தூர் சிறை. சிறைக்கு வெளியே சிதம்பரனாருக்கு உற்ற துணை நெல்லையப்பர். ஆனால் அவருக்கோ தலைமறைவு வாசம். எப்படிச் சிறைச்சாலைச் சுவர்களைக் கடந்து உள்ளே போய் வெளியே வருவாரோ? சிதம்பரனாரைப் பேட்டி காண்பார். சிறு சிறு காகிதத் துண்டுகளில் அவர் குறித்துக் கொடுக்கும் செய்திகளைப் பெற்றுக் கொள்வார். அவற்றின்படி வெளியே வந்து செயலாற்றி வ.உ.சி.யின் திட்டங்களை நிறைவேற்றுவார்.இப்படி ஒரு வருட காலம் நடந்தது.
1910 ம் ஆண்டு கர்மயோகி இதழில் “ஸ்ரீமான் தூத்துக்குடி சிதம்பரம் பிள்ளையின் சந்திப்பு என்ற கட்டுரை வ.உ.சி. சிறையிலிருந்த போது கட்டுரை எழுதினார்.
வெள்ளைக்கார கப்பல் கம்பெனி சுதேசி கப்பல் கம்பெனியை சீரழிக்கத் தொடங்கிய போது நெல்லையப்பர் வ.உ.சி. குடும்பத்தாருடன் உறுதுணையாக நின்று சுதேசி கப்பல் கம்பெனி சொத்துக்களை பரிபாலிக்க உதவி செய்தவர்.
வ.உ.சி. நெல்லையப்பர் குறித்து எழுதிய பாடல்கள் இருபதுக்கும் மேலாகும். ஒரு பாடலை மட்டும் இங்கு குறிப்பிடலாம்.
”அப்பனும் நீ ஐயனும் நீ ஆதியும் நீ யாவையும் நீ
செப்பமுடன் செப்பியதைச் செய்வாயேல் – தப்பில்
மனையாள் தன் மாதாவை மன்னிநிற்க மாயேன்
மனையெய்தும் மாதம் வரை.
இந்த பாடல் மூலம் நெல்லையப்பர் வ.உ.சி. குடும்பத்துடன் எந்த அளவுக்கு உறுதுணையாக இருந்துள்ளார் என்று புரிய வருகிறது.
நெல்லையப்பர் தனக்காக வாழாமல் வ.உ.சிக்கும், பாரதிக்காகவும் வாழ்ந்தவர் என்பார் சாமிநாத சர்மா.
வ.உ.சி.யினுடைய சரித்திரத்தை நெல்லையப்பர் எழுத வேண்டி பலரும் விரும்ப அதற்கிசைந்து 1944 ஆம் ஆண்டு திரு.வி. க. முன்னுரையுடன் வ.உ.சி. சரித்திரத்தை வெளியிட்டார்.
வ.உ.சி.யைக் கலகக்காரராகவும், சுப்பிரமணிய சிவாவை பைத்தியக்காரனாகவும், பாரதியாரை பிழைக்கத் தெரியாதராகவும் தமிழக மக்கள் கருதி வந்த காலத்தில் பாரதியாருடைய வந்தேமாதரப் பாடல்களை ஓசைபடாமல் ஆயிரக்கணக்கில் அச்சிட்டு தமிழகத்தில் சுதந்திரதாகத்தைப் பரப்ப வழி செய்தவர் நெல்லையப்பர்.
வெள்ளையர்களின் கண்களின் மண்ணைத் தூவி பாரதியின் பாடல்களை வந்தேமாதரம் பாடல்கள் என்று தலைப்பிட்டு வெளியிட்டால் பிரிட்டீசாரின் சென்சாருக்கு உட்படும் என்று நினைத்து நாட்டுப் பாடல் என்ற தலைப்பில் வெளியிட்டார்.
1917 ம் ஆண்டு பாரதியின் பாடல்களை தொகுத்து கண்ணன் பாட்டு, நாட்டுப் பாட்டு, பாப்பா பாட்டு, முரசு பாட்டு நெல்லையப்பரின் தன்னடக்கமான முன்னுரையுடன் வெளியிட்டார்.
19-07-1917 ம் ஆண்டு நெல்லையப்பருக்கு பாரதியார் புகழ்மிக்க கடிதம் ஒன்றை எழுதினார்.
”எனதருமைத் தம்பியாகிய ஸ்ரீ நெல்லையப்ப பிள்ளையைப் பராசக்தி நன்கு காத்திடுக! என்று ஆரம்பித்து தம்பி- நான் ஏது செய்வேனடா! தமிழை விட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் போது எனக்கு வருத்தமுண்டாகிறது. தமிழனை விட மற்றொரு ஜாதியான் அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு சம்மதமில்லை.தமிழச்சியை காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாயிருப்பதை கண்டால் என் மனம் புண்படுகிறது! என்ற பாரதியார் எழுதிய மாபெரும் மடலுக்கு உரியவராக இருந்தார் என்றால் பரலி சு. நெல்லையப்பருக்கு இதைவிட என்ன பேறு கிட்டும்.
பாரதியார் ஒரு தடவை சோர்ந்த முகத்துடன் வந்து நெல்லையப்பரை தனியாக அழைத்துச் சென்று ‘ஏதாவது பணம் இருக்கிறதா? என்று கேட்க, அப்பொழுது தன்னிடமிருந்த ஒரு ரூபாயை பாரதியிடம் கொடுத்தார். அந்த அளவுக்கு பாரதி நெல்லையப்பரை தம்பியாகவே மதித்து உரிமையுடன் உதவி கோருவார்.
1921 ம் ஆண்டு பாரதியார் மறைந்த கடைசி நாளில் அவருடைய கடைசி நிமிடத்தில் உடனிருந்து அவரது பொன்னுடலைச் சுமக்கும் பேறு பெற்றவர் நெல்லையப்பர்.
சூரியோதயம், விஜயா,கர்மயோகி, லோகோபகாரி, தேசபக்தன் போன்ற பல்வேறு இதழ்களில் முத்தாய்ப்பான பங்களித்தவர்.
அடிசன் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நாரண துரைக்கண்ணன் பத்திரிகை உலகில் அறிமுகப்படுத்தியவர்.
ஜீவா என்றழைக்கப்படும் நாரண துரைக்கண்ணன், மாஜினி என்றழைக்கப்படும் ர.ரங்கசாமி போன்றோருக்கு பத்திரிக்கை வழிகாட்டி இவரே.
விகடன் பெயருக்குப் பொருத்தமாய் நகைச்சுவையாய் யாரேனும் எழுதமாட்டார்களா என்று எஸ்.எஸ். வாசன் ஏங்கிக் கொண்டிருக்கும் வேளையில் கல்கியை வாசனுக்கு அறிமுகப்படுத்தியவர் நெல்லையப்பர்.
சைதாப்பேட்டை காரணீசுவரர் கோவில் தெருவில் கு. மகாலிங்கம் என்பவரால் சிறப்பாக நடத்தப்பட்டு வரும் காந்தி வாசக சாலை என்னும் நூலக வாசக சாலையை தொடங்கி வைத்தவர் நெல்லையப்பர்.
1954 ம் ஆண்டு பாரதியாரின் மகள் சகுந்தலா பாரதி அன்றைய தமிழக முதல்வர் காமராசரை சந்தித்து எனது தந்தைக்கு ஒப்பான நெல்லையப்பர் குரோம்பேட்டை ராஜாஜி தெருவில் குடிசையில் தங்கி வறுமையில் வாடுகிறார் அவருக்கு உதவி செய்ய வேண்டிக் கேட்க , உடனடியாக குரோம்பேட்டை நெமிலிச்சேரி புறம்போக்கில் 3ஏக்கர் 18 செண்ட் கொண்ட நிலத்தை காமராசர் ஒதுக்கி கொடுத்தார்.
அந்த நிலத்தின் ஒரு பகுதியை அதாவது குரோம்பேட்டை பகுதியில் வசிக்கின்ற ஏழை குழந்தைகள் படித்துப் பயன் பெறும்வகையில் இரண்டு கிரவுண்டு இடத்தை (29.11.1967 ல்) இனாமாக கொடுத்து பரலி சு. நெல்லையப்பர் நினைவாக பள்ளிக்கூடம் அமைக்கப்பட்டு இயங்கி வந்த பள்ளிக்கூடம் கடந்த 20 வருடங்களாக பள்ளிக்கூடம் இயங்காமல் மூடப்பட்டுள்ளது. இந்த பள்ளிக்கூடம் பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட குரோம்பேட்டை பாரதிபுரம் 2வது தெருவில் இயங்கி வந்தது.
பரலி.சு.நெல்லையப்பர் எழுதிய நூல்கள்
1. பாரதியார் சரித்திரம்
2.வ.உ.சிதம்பரம் பிள்ளை சரித்திரம்
3.பாரதி வாழ்த்து
4.நெல்லைத் தென்றல்
5.உய்யும் வழி
6.தமிழ்த் திருமண முறை
7.ராதா ராணி (மொழிபெயர்ப்பு)
8.ஜோடி மோதிரம் (மொழிபெயர்ப்பு)
9.சுவர்ணலதா (மொழிபெயர்ப்பு)
10.மகாத்மா காந்தியின் சுயராஜ்யம் (மொழி பெயர்ப்பு)
11.சிவானநந்தர் உபதேசமாலை
பதிப்பித்த நூல்கள்:
1.பாரதியின் கண்ணன்பாட்டு
2.நாட்டுப்பாட்டு
3.பாப்பா பாட்டு,முரசு பாட்டு, குயில்பாட்டு, ராஜாஜியின் ஆத்மசோதனை, பி.பி.சுப்பையாவின் மாதர் கடமை, திருவாசகம் (மலிவுப்பதிப்பு) போன்றவை.
21.12.1939ல் பெரியவர் வ.உ.சி.க்கு சிலை வைத்த போது பஞ்சகம் பாடினார்.
"ஊக்கமும் வலிவும் குன்றி
ஒளி இழந் துலகில் நீண்ட
தூக்கத்தில் வீழ்ந்த நாட்டைத்
துயிலெழச் செய்தாய் ஐய!
பாக்கியம் பெருகி நாட்டார்
பாரினில் உயரும் வண்ணம்
தூக்கிய வினைகள் செய்தாய்!
துணிவு மிக்குடைய கோவே!
பொற்சிலை வைத்திங் குன்னைப்
போற்றிட விரும்புகின்றோம்!
கற்சிலை நாட்டி இன்று
காண்கிறோம்! கலைவல் லோனே!
நற்செயல் பெரிதும் செய்தாய்
நாட்டினை அகத்திற் கொண்டு உன்
நற்பெயர் நிலவி நிற்கும்
ஞாலமுள்ளளவும் வாழி!
வீரச் சிதம்பரம் விதைத்து பாரதி பாட்டிற் பழுத்த பரலி சு. நெல்லையப்பரின் தியாகத்தை நினைவு கூர்வோம்.
இப் பதிவை எழுத உதவிய நூல்கள்:
அ.மகாதேவன் எழுதிய தியாக ஒளி அமர் பரவி சு.நெல்லையப்பர்.
பெ.சு.மணி எழுதிய கட்டுரைகள்
Rengaiah Murugan முகநூல் பதிவு..
No comments:
Post a Comment