Wednesday, March 30, 2022

குலக் கல்வித் திட்டம்

 இன்று !


குலக்கல்வி திட்ட எதிர்ப்புப் படை சென்னையை அடையும் முன்பே ராஜாஜி முதல்வர் பதவியிலிருந்து விலகிய நாள் இன்று 30.03.1954.

குலக்கல்வி திட்டதிற்கெதிராக தந்தை பெரியார் தனல் புயலாய், வெகுண்டெழுந்து, திராவிடர் கழகம் தீப்பிழம்பாய்க் கொந்தளித்துக் கிளர்ந்தெழுந்த காலகட்டம்.

முன்னதாக அதற்கு முந்தைய நாள் 29.03.1954 அன்று குலக்கல்வி எதிர்ப்பு படை தஞ்சாவூரிலிருந்து சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தது.

ராஜாஜி குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்த நேரம். அரை நேரம் படித்தால் போதும், மீதி அரைநேரம் அப்பன் தொழிலை பிள்ளை செய்ய வேண்டும் என்ற சதித் திட்டம்!

அதற்கு இரு நாள்கள் முன்னர்தான் ஈரோட்டிலே புத்தர் கொள்கைப் பிரச்சார மாநாடும் (ஜனவரி 23), குலக்கல்வித் திட்ட எதிர்ப்பு மாநாடும் (ஜனவரி 24) நடைபெற்றன. 

இலங்கையிலிருந்து டாக்டர் ஜி.மல்லலசேகரா,அண்ணல் அம்பேத்கர் அவர்களின் அருமருந்தன்ன தளபதி ராஜ்போஜ் எம்.பி. முதலியோர் வந்து பங்கேற்றனர்.

ஆரியனை வெளியேற்றும் இந்தக் கிளர்ச்சிக்குப் பெரியார் நாள் குறிப்பிடுவார். பார்ப்பன விசுவாசிகள் எப்படியோ போகட்டும், பார்ப்பனத் துவேஷிகள் தயாராக இருங்கள் என்றது விடுதலை.

அப்படிப்பட்ட ஆவேசமான கால கட்டத்தில்தான் நாகை மாநாடு, 

30 ஆயிரம் பேர் அந்தக் கால கட்டத்தில் கூடினர் என்றால் சாதாரணமா? புலிக்குட்டிகள், சிங்கக் குட்டிகள் ஆயிற்றே!

மாநாட்டின் சிறப்பு என்ன தெரியுமா?

நாகையிலிருந்து சென்னையை நோக்கி ஒரு படை. ஆச்சாரியார் புதிய கல்வித் திட்ட எதிர்ப்புப் படை என்று பெயர் சூட்டினார் பெரியார்.

மாநாடு ஜனவரி 27, 28 ஆகிய தேதிகளில் நடந்தது என்றால் ஒரே ஒரு நாள் இடைவெளியில் ஜனவரி 30 ஆம் தேதியிலிருந்து புறப்பட்டது தான் பெரியாரின் கருஞ்சட்டைப்படை.

நாகையில் புறப்பட்ட இந்த இலட்சிய வீரர்களைக் கொண்ட படைக்கு வழி நெடுக வரவேற்பு - பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள்.

மார்ச் 30இல் கீழ்வேளூரில் புறப்பட்ட இந்தச் சீறிடும் சிங்கப்படையின் சுற்றுப்பயண விவரத்தை விடுதலை நாள்தோறும் வெளியிட்டு வந்தது. ஒவ்வொரு ஊரிலும் கழகத் தோழர்களும், பொதுமக்களும் போட்டி போட்டுக் கொண்டு வரவேற்று உபசரிப்பு மழையால் நனைத்தனர்.

வருணாசிரமக் கல்வியை ஒழிப்பதற்காக வரலாறு ஒரு படையை அனுப்பிக் கொண்டிருந்தது என்று பொருள் அல்லவா!

சென்னைக்கு அருகே படை வந்தபோது தந்தை பெரியார் அவர்களும், அன்னை மணியம்மையார் அவர்களும் படையை எதிர்கொண்டு அழைத்துப் பாராட்டினர்.

மார்ச் 30 இல் புறப்பட்ட இந்தப் பிரச்சாரப் புலிப்படை 500 மைல்கள் நடந்து ஏப்ரல் 14 ஆம் தேதி சென்னையில் தனது வரலாற்றுப் பொன்னடியைப் பதித்தது.

என்ன ஆச்சரியம்! இந்தப் படை சென்னைக்கு வந்து சேர்ந்ததும், ஆச்சாரியார் குலக்கல்வித் திட்டம் ஒழிந்ததும் பொருத்தமாகவே அமைந்துவிட்டது.

15 ஆயிரம் பேர் திரண்ட சென்னைக் கடற்கரைப் பொதுக் கூட்டத்தில் படை வீரர்களை தந்தை பெரியார் அறிமுகப்படுத்தினார். அதைவிட அந்தப் படை வீரர்களுக்கு வேறு என்ன புகழ் மாலையும், கிரீடமும் வேண்டும்?

அவ் வரவேற்புப் பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் பேசினார்:

''இந்தத் தோழர்கள் சென்னை வந்து போராடி சிறை செல்லலாம் என்று எண்ணினார்கள். பாவம், ஏமாந்தார்கள். காமராசர் இவர்களை ஏமாற்றி ஆச்சாரியார் திட்டத்தை ஒழித்துவிட்டார்'' என்று பேசினார்.

இருள் கவ்விற்றோ தமிழரின் வாழ்வை? மீண்டும் வருணாசிரம நச்சுப் பாம்பு தன் விஷப் பையைத் திறந்து தமிழரின் வாழ்வைப் பலி கொண்டுவிட்டதோ என்ற அச்சம் தமிழர்களை உலுக்கிக் கொண்டிருந்த அந்தக் கால கட்டத்தில் நாகை மாநாடும், பிரச்சாரப் படையும், தமிழரின் வாழ்வில் ஒளியேற்றிய ஒப்பற்ற நிகழ்ச்சிகளாகும்!

நாகை ஆர்.வி. கோபால், நாகை மணி, நாகை கணேசன், நாகை எஸ்.ஆர். ஆறுமுகம் என்று எண்ணற்ற போர் வீரர்களை ஈன்று புறந்தந்த கொள்கைப் பாடி வீடு நாகை!

நன்றி : #விடுதலை_நாளிதழ்.

No comments: