திராவிட இயக்கப் பார்வையில் பாரதியார் - வாலாசா வல்லவன் - நிகர் மொழி பதிப்பகம் - பக்கங்கள் 128 - விலை ரூ 100/
● பெரியார் பெருந் தொண்டர் அய்யா வே. ஆனைமுத்துவால் அடையாளம் காணப்பட்டு, பெரியார் கொள்கையாளராகவும் ' மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் ' தலைவர்களில் ஒருவராகவும் இருப்பவர் - வாலாசா வல்லவன். அவர் ' சிந்தனையாளன் ' ஏட்டில் 1996 - 97 களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த சிறிய நூல் !
● வாலாசா வல்லவன் தனது முன்னுரையில், " பெரும்பான்மையான நூலாசிரியர்கள் பாரதியின் தொடக்க கால கவிதைகளை மட்டுமே படித்து விட்டு, பாரதியை பெரிய புரட்சியாளராக படம் பிடித்து காட்டுகிறார்கள். பாரதியின் முழுப் படைப்புகளாகிய கவிதை, கட்டுரை, கதை முதலியவற்றை ஒரு சேரப் படித்து, அவரை படம் பிடித்து காட்ட வேண்டும். அதுவே உண்மையான ஆய்வு ! பாரதியாரைப் பற்றி ஏறக்குறைய 500 க்கும் மேற்பட்ட நூல்களைப் படித்து, குறிப்பெடுத்து, பாரதியின் உண்மையான கொள்கைகள் என்ன என்பதை இந்நூலில் ஆய்ந்து கூறியுள்ளேன் ! " ...என விளக்கம் தந்துள்ளார் !
● திராவிட இயக்கப் பார்வையென்பது - சாதியை சாடுவது; சாதி ஒழிப்பை பேசுவது; வருணாசிரமத்தை எதிர்ப்பது; பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவது; தேவபாஷை என கூறிக்கொண்டு தமிழ் மொழியை ஆதிக்கம் செலுத்த முயலும் சமஸ்கிருதத்திற்கு சாவு மணி அடிப்பது; ஆதிக்க சாதி மனப்பான்மையோடு மக்களை அறிவாலும், உடலாலும், உணர்வாலும் அடக்கி வைத்த பார்ப்பனீயத்துக்கு எதிராக இறுதி வரை போராடுவது !.
இந்த அளவுகோல்தான் நூலாசிரியரின் ஆய்வுக்கு துணையாக இருந்திருக்கின்றது !
● நூலின் பொருளடக்கம் காண்க:
பாரதியின் உயிர் மூச்சு தமிழா ? ஆரியமா ? | பாரதியின் ஏகாதிபத்திய எதிர்ப்பின் தன்மை என்ன ? | பாரதியின் பார்ப்பன இன உணர்வு | பாரதியின் பார்வையில் திராவிட இயக்கம் | பாரதி விரும்பிய பெண் விடுதலை எத்தகையது ? | பொதுவுடைமை பற்றி பாரதி | மதங்கள் பற்றி பாரதியின் பார்வை | ஆர்எஸ்எஸ் தோற்றத்துக்கு அடித்தளம் அமைத்த பாரதி | ஆய்வாளர்கள் காட்டும் பாரதி |
● பாரதி - ஆரிய பெருமையும்; ஆரிய விருப்பமும்; ஆரிய உயர்வும்; ஆரிய உணர்வும் கொண்ட படைப்பாளர் என்பதற்கு தரப்பட்ட பல சான்றுகளில் சிலவற்றை படித்தறியலாம் :
● வாழிய நல்ஆரிய தேவியின் மந்திரம் | வந்தே மாதரம் |
● வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம் | ஆரியர் புலையர்க் கடிமைகள் ஆயினர் |
● ஆரிய பூமியில் | நாரியரும் நர | சூரியரும் சொலும் | வீரிய வாசகம் வந்தே மாதரம் |
● வேதம் நிறைந்த தமிழ் நாடு | உயர் வீரம் செறிந்த தமிழ் நாடு |
● ஆன்ற மொழிகளுக்குள்ளே உயர் | ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன் |
● ஸம்ஸ்கிருத பாஷை மிகவும் அற்புதமானது. அதைத் தெய்வ பாஷையென்று சொல்வது விளையாட்டன்று !
● இவ்வாறாக ஆரியத்தையும் சமஸ்கிருதத்தையும் வீரியம் கொண்டு விளம்பரம் செய்தவர் பாரதி ! அவ்வப்போது தமிழையை பெருமைப்படுத்தி பாராட்டி பாடியதெல்லாம் - ஹோட்டல்களில் வழங்கப்படும் பாயாசத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மிதக்கும் முந்திரியைப் போல என உவமையாக எடுத்து சொல்கிறார், வாலாசா வல்லவன்.
அறிஞர் அண்ணாவின் மொழியில் இதற்கு பெயர் - ஆரியமாயை !
● பாரதியை பெரிய ஏகாதிபத்திய த்தை எதிர்த்த வீரராக சித்தரிப்பவர்கள் - பாரதி அதே ஏகாதிபத்தியத்திடம் மண்டியிட்டு ' மன்னிப்பு கடிதம் ' கொடுத்து சிறையிலிருந்து வெளியே வந்த கதையை, இதுவரை வெளியே சொன்னதுண்டா ? இந்து மகாசபை இயக்கத்தின் ' சவார்க்கர் ' இது போன்று எழுதி தந்ததற்கு முன்பாகவே, பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து, மன்றாடி கேட்டு வெளியே வந்த வீரர்தான் - முறுக்கு மீசை பாரதி ! அது பற்றிய ஆதாரபூர்வமான தகவல்களை தந்துள்ளார் நூலாசிரியர் !
● சுதந்திர போர் வீரர் விபின் சந்திர பாலின் விடுதலையை கொண்டாட தூத்துகுடியில் ஏற்பாடு செய்திருந்தார் வ.உ.சி. இதை மாவட்ட ஆட்சியர் தடை செய்தார். தடையை மீறுவார் வ.உ.சியென அறிந்து அவரை 11.03.1908 அன்று கைது செய்தனர். அதை தொடர்ந்து நெல்லையில் கலவரம். அதை காரணமாக கொண்டு வழக்கை ஜோடித்து, வ.உ.சிக்கு 40 ஆண்டுகள் தண்டனை. பின்பு அது 10 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.
● வ.உ.சிக்கு இறுதியில் மேல்முறையீட்டின் காரணமாக, 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை தந்தார்கள். கை, கால்களில் விலங்கிடப்பட்டு, கல் உடைக்க வைத்து, செக்கிழுக்க வைத்து கொடுமை படுத்தினார்கள். இறுதி வரை பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்பு கோராமல், சுயமரியாதை வீரராக விடுதலையானவர் தான் - செக்கிழுத்த செம்மல் வ.உ.சி !
● இதே காலகட்டத்தில், இந்தியா வார இதழின் ஆசிரியராக இருந்தார் பாரதி. அப்போதெல்லாம் வீராவேசமாக எழுதி கொண்டிருந்தார். விபின் சந்திர பால் விடுதலையொட்டி சென்னையில் 09.03.1908ல் நடந்த பொதுக்கூட்டத்தில், " சட்டங்கள் நம் இயற்கை உரிமையில் குறுக்கிடுமேயானால் சட்டங்களை மீறுவோமாக ! " என கூட்டத்தினரை தூண்டி விட்டு பேசுகிறார்.
● இதன் காரணமாக பாரதியை பிடிக்க வாரண்ட் பிறப்பிக்கப்படுகிறது. நம்ம எட்டயபுரம் சிங்கமா சிக்கும் ? வ.உ.சியை போல் தன்னையும் கைது செய்து சிறையிலடைத்து விடுவார்கள் என பயந்து, யாருக்கும் தெரியாமல், அன்று பிரெஞ்சு வசமிருந்த புதுச்சேரிக்குள் தப்பித்து தஞ்சமடைந்தார். 1908 முதல் 1918 வரை 10 ஆண்டுகள் தங்கிவிட்டு மீண்டும் தமிழக எல்லைக்குள் வந்த உடன் 20.11.1918ல் முதல் முறையாக கைது செய்யப்படுகிறார் !
● பாரதி கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்த படியே சென்னை மாநில ஆளுநருக்கு ' மன்னிப்பு கடிதம் ' ஒன்றை எழுதி அனுப்புகிறார் ( கடிதத்தின் மூலப்பிரதியை நூலில் பதிப்பித்துள்ளார்கள் ).
● 28.11.1918 தேதியிட்ட அந்த கடிதத்தின் இறுதியில், " ஆங்கில அரசுக்கு என்றென்றும் விசுவாசமாக இருப்பேன். எனவே என்னை உடனடியாக விடுதலை செய்யுமாறு மேன்மை பொருந்திய உங்களை கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன். கடவுள் உங்களுக்கு நீண்ட மகிழ்வான வாழ்வை அருள்வாராக !
பிரபுவிற்கு உண்மையான கீழ்ப்படியும் பணியாளனாக இருக்க இறைஞ்சும் - சி. சுப்பிரமணிய பாரதி " ....
● மன்னிப்பு கடிதம் எழுதி தந்திருந்தால், செக்கிழுக்காமல் தண்டனையிலிருந்து தப்பி வெளியே வந்திருக்கலாம் - தியாகி வ.உ.சி !
● மன்னிப்பு கடிதம் எழுதி தந்திருந்தால், தூக்கு தண்டனையிலிருந்து தப்பி, உயிரோடு வந்திருக்கலாம் - தியாகி பகத்சிங் !
● ஆனால் முண்டாசு கவிஞர் பாரதியோ ?
" உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் - அச்சமில்லை ! அச்சமில்லை ! " என ஏட்டில் எழுதியவர், வெட்கமில்லை ! வெட்கமில்லை ! என செயலில் காட்டியிருந்தார். பாரதியின் போலித்தனத்தை இந்த நூல் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது ! நூலாசிரியர் வாலாசா வல்லவன் பாராட்டிற்குரியவர் !
● பாரதியின் பார்ப்பன இன உணர்வை சிறப்பாக படம் பிடித்து காட்டியுள்ளார் நூலாசிரியர்.
" வேதம் அறிந்தவன் பார்ப்பான் பல | வித்தை தெரிந்தவன் பார்ப்பான் | "...என்று துவங்கும் பாடலில் இறுதியாக, " நாலு வகுப்புமிங்கு ஒன்றே இந்த | நான்கினில் ஒன்று குறைந்தால் | வேலை தவறிச் சிதைந்தே செத்து | வீழ்ந்திடும் மானிடச் சாதி | "...என பாரதி, சாதியை வருணத்தை பாதுகாக்க வேண்டுமென பாடியுள்ளார்.
● " வேள்விகள் கோடி செய்தால் சதுர் | வேதங்கள் ஆயிரம் முறைப்படித்தால் | மூளும் நற்புண்ணியந்தான் | " ...என எழுதுகிறார். வேதத்தை யார் படித்தது ? யாருக்கு சொல்லி தரப்பட்டது ? இதை அறியாதவரா பாரதி ? அக்கிரகாரத்து மீது அக்கறையும் பூணூல் பற்றும் பாரதியால் ஒளித்து வைக்க முடியவில்லை ! இன்றைய ஆர்எஸ்எஸ்க்கு பாரதியே முன்னோடி என்பதற்கு நிறைய சான்றுகள் தரப்பட்டுள்ளன !
● ஒரு பிற்போக்கு சிந்தனையாளரை; சாதி, மத, வருண பாகுபாட்டை ஆதரித்த கவிஞரை; அவரது ஒரு சில பயனுள்ள படைப்புகளுக்காக - ஆதிக்கத்திற்கு எதிரானவர் போலவும், விண்ணுக்கும் அதிக உயரத்திற்கு தகுதியானவர் போலவும் சித்தரிக்கப் பட்டுள்ள போலியான பிம்பத்திற்கு பதிலடியாக,
இந்த நூல் நம் கண்களை திறக்க செய்யும் - ஒரு திறவுகோல் !
திறனாய்வுக்கு- ஒரு அளவுகோல் !
பொ. நாகராஜன்.
பெரியாரிய ஆய்வாளர், சென்னை. 29.03.2022.
********************************************
No comments:
Post a Comment