Wednesday, January 24, 2024

வைகோவின் சிறையில் விரிந்த மடல்கள் -1

 தலைவர் வைகோ அவர்கள் எழுதிய 'சிறையில் விரிந்த மடல்கள்'....

தலைவர் வைகோ அவர்கள் நூலின் முன்னுரையில், 'நுழைவாயில்' என்னும் தலைப்பில்,

"இனிமை விளையும்; ஏற்படும் இன்னலால்!'

(Sweet are the uses of adversity)

என்றார் ஷேக்ஸ்பியர்,

இந்தச் சிந்தனையுடன்தான் வாழ்க்கையில் எண்ணற்ற போராட்டங்களைச் சந்திக்கிறேன்.

19 மாத கால வேலூர் மத்திய சிறைச்சாலை வாசம் எனக்கு வாய்த்த அற்புதமான அனுபவம், மனத்தாலும், உடலாலும் நான் தவம் இருந்த அந்நாள்களில் நெஞ்சில்

அலைமோதிய நிளைவுகளை, ஊற்றாகப் பெருகிய உணர்வுகளை, எனது ஊனிலும் உதிரத்திலும் இரண்டறக் கலந்து இயக்கிடும் கண்மணிகளுக்குக் கடிதங்களாக

எழுதினேன். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வார ஏடான

"சங்கொலியில்" அம்மடல்கள் வெளிவந்தன.

உன்னதமான தியாகத்தாலும், உழைப்பாலும் கட்டி எழுப்பப்படும் எங்கள் இயக்கம், அதன் கொள்கை கோட்பாடு குறித்து, சிறைப்பட்ட காலத்து அரசியல் சூழலை மனதில் கருதி எழுதி உள்ளேன்.

துன்பங்களையும், துயரங்களையும், தாங்கிக் கொண்டு, மாறாத உறுதியுடன் சிறைவாழ்வை ஏற்று இயக்கத்துக்குப் புகழ் குவித்த தியாக வேங்கைகளான எனது ஆரூயிர்ச் சகோதரர்கள் அ. கணேசமூர்த்தி, புலவர் சே. செவந்தியப்பன், வீர. இளவரசன், புதூர் மு. பூமிநாதன், பி.எஸ். மணியம், க. அழகுசந்தரம், நாகராசன், கணேசன் இக்கடிதங்களை எழுதிட என்னை ஊக்குவித்தனர்.

தமிழ்க்குலத்தின் சகாப்த நாயகனாம் போறிஞர் அண்ணா அவர்கள் எழுதி அச்சேறிய அனைத்தையும், நூல்வடிவம் கண்ட அவரது உரைகள்மு ழுவதையும் இரண்டு திங்கள் ஓய்வு இன்றிப் படித்ததில் என் இதயத்தை ஈர்த்த பகுதிகளை "ஒளி மலர். இருள் அகல..." என்ற தலைப்பில் எழுதி கடிதங்கள் ஆக்கினேன்.


இந்தியத் துணைக்கண்டத்தின் ஈடில்லாம் பகுத்தறிவாளராம் அறிவாசான் தந்தை பெரியார் அவர்களைக் குறித்து அறிஞர் அண்ணா அவர்கள் கூறியவற்றையே ஆங்காங்கு தந்து உள்ளேன்.

இலட்சியங்களுக்காகப் போராடி, தியாகம் எனும் பலிபீடத்தில் தங்கள்

உயிர்களைத் தாரை வார்த்த மாவீரர்களின் வரலாறு எனக்குச் செயல் ஊக்கம் தரும் உந்து சக்தி ஆகும்.

ஸ்பார்டாவின் 'தெர்மாப்பிளே போர்க்களம்;

ஒருவரை ஒருவர் அறிந்திடா நிலையில் வாள்முனையில் தந்தையும், தனயனும் மோதிய பெர்சிய வீரகாவியம் ஆன 'சொகரப்பும், ருஸ்தமும்";

தூக்கு மேடையில் நிறுத்தப்பட்ட உமர் முக்தார்;

மரண பயங்கரம் சூழ்ந்தபோதும் மடியும் நிமிடம் வரை

போராடிய 'சே குவேரா;'

நினைக்கும்போதே உள்ளத்தில் கிளர்ச்சி ஊட்டும் இவையெல்லாம் மடல்கள் ஆயின!

பண்டித ஜவகர்லால் நேரு அவர்களின் "உலக சரித்திரக் கடிதங்கள்" ஏற்படுத்திய வேட்கைதான் "களங்களின் மாவீரன் கரிபால்டி' ஆயிற்று.

அடிமை விலங்கை ஓடிக்க நடைபெற்ற இந்திய விடுதலைப்போரில் வங்கத்துச் சிங்கம் நேதாஜியின் போராட்டமும், துணிச்சலும், தியாகமும்

மெய்சிலிர்க்கச் செய்யும் சரித்திரம் ஆகும் என்பதால்தான் 'நெஞ்சில் நிறைந்த நேதாஜி" யை வரைந்தேன்.

அறைகூவல்கள் அனைத்தையும் சந்தித்து, அவனியைத் திகைக்கச் செய்து சாதனை புரிந்த லிங்கனின் சரிதம் பொதுவாழ்வில் உள்ளோர் பயில வேண்டிய பாடம் என்பதால், "அரசியலுக்கோர் ஆபிரகாம் லிங்கன்” என விவரித்தேன்.

முத்தமிழ் அறிஞர் ஆருயிர் அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்களுடன் நான் கொண்ட பாசப்பிணைப்பினைப் பிரதிபலிக்கும் சம்பவங்களைப் பதிவு செய்து இருக்கிறேன்.

வழிப்போக்கர்களுக்கு வழிகாட்டும் வேலை!

ஒரு நூலக ஊழியனின் பணி!

இவைதாம் எனது கடிதங்கள்! என்று தலைவர் வைகோ எழுதியிருக்கிறார்.

இந்நூலில்,

1. 60 கடிதங்கள்

2. சிக்காகோவில் இருந்து வேலூர் வரை -2 கடிதங்கள்(2,3)

3.சேகுவேரா பற்றிய கடிதம் (7)

4. உமர்முக்தார் பற்றிய மடல் (13)

5. நேதாஜி பற்றிய 3 மடல்கள் (23-25)

6. ஒளி மலர ! இருள் அகல!! அண்ணாவைப் பற்றிய மடல்கள் 7 (29-35)

7. அரசியலுக்கோர் ஆபிரகாம் லிங்கன் பற்றிய மடல்கள் 5 (40 - 44)

8. களங்களின் கரிபால்டி பற்றி 4 மடல்கள் ( 53-56)

9. திரும்பிப் பார்க்கிறேன் ( தன் வரலாறு) மடல் (22)

10. நல்லதோர் கடமை செய்தேன் மடல் ( குட்டிமணி கைது)

ஆகியன குறித்து சுருக்கமாக எழுத விரும்புகிறேன். இந்த திருவள்ளுவர் ஆண்டு 2055 இல் தொடங்குகிறேன்.

No comments: