வைகோவின் சிறையில் விரிந்த மடல்கள் - 7
தலைவர் வைகோ அவர்களுடன் ஜூன் 29 - திருமங்கலம் பொதுக்கூட்டத்தில் சோழவந்தான் 65 வயது திரு.பி.எஸ்.மணியம் அவர்கள் பங்கேற்றார். அவரும் பொடா சிறைவாசத்தை ஏற்றுக்கொண்டார்.
அவரைப்பற்றி வைகோ அவர்கள், "ஒவ்வொருமுறை பூவிருந்தவல்லி 'பொடா' வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு வரும்போதும் அவரது உடல்நலனைத்தான் கவலையுடன் அவரிடம் விசாரிப்பேன்.
மாறாத புன்முறுவலுடன் "எந்தக் கவலையும் வேண்டாம் உங்களுக்கு. நான் நன்றாக இருக்கிறேன்" என்று என் கைகளைப் பற்றிக் கொண்டு அவர் சொல்லும்போதெல்லாம் நெஞ்சம் நெகிழ்ந்து போவேன்.
நீதிமன்றத்தில் தொடர்ந்து இரண்டு மணி நேரம் நின்றபோது அவரைப் பற்றிய வேதனை வாட்டியது.
அவரது பெயர்த்திக்குச் சிவமணி என்று பெயர் சூட்டி உள்ளனர். தன் பாட்டனின் பெயரைச் சொல்ல வேண்டும் என்ற ஆசையுடன்தானே பெற்றோர் "மணியம்” அவர்களின் பெயரை இணைத்து 'சிவமணி' என்று அழைத்து மகிழ்ந்து இருப்பர்?" என்று நெஞ்சுருக எழுதியிருப்பார்.
அந்த மணியம் அவர்களின் பெயர்த்தி சிவமணி மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்டார். பெயர்த்தியின் இழப்பு மணியம் அவர்களை மிகவும் பாதித்துவிட்டது.
இது குறித்து வைகோ அவர்கள் தன் கடிதத்தில்,
"சிறைத்துறை அலுவலர்களிடம் அண்ணன் பி.எஸ். மணியம் அவர்களைப் பற்றி விசாரித்தேன். மிகவும் மனம் உடைந்தவராக வேதனையில் தவிக்கிறார் என்றனர். தனது பெயர்த்தி செல்வி சிவமணி சிறையில் வந்து நேர்காணலில் சந்திக்கும் நாள்களில் மிக்க உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும் இருப்பாராம். தன் பெயர்த்தியின் மீது அளவுகடந்த பாசமாம். ஆனால் அவர் தலையில் விழுந்த இடிபோலத் தாக்கி விட்ட மரணச் செய்தியால் நொறுங்கிப் போய்விட்டாராம். நான் இருந்த பகுதியின் சிறை மதில் சுவருக்கு அப்பால் கொட்டடியில் அடைக்கப்பட்டு உள்ளார் அண்ணன் மணியம். நேரில் கண்டு துயரில் பங்கேற்கத் துடித்தேன். வாய்ப்பு இல்லாமல் கலங்கினேன்.
டிசம்பர் 30ஆம் நாள் பூவிருந்தவல்லி 'பொடா' வழக்குச் சிறப்பு நீதிமன்றத்தில் அண்ணன் மணியம் அவர்களைக் கண்டேன். அவரது கைகளைப் பற்றிக் கொண்டேன். கண்ணீர்த்துளிகள் உருண்டன. தாக்கிய துக்கத்தால் துவண்டு போயிருந்த அவரது உடல் லேசாக நடுங்கியது. தான் எழுதி வைத்து இருந்த கடிதத்தை என்னிடம் தந்தார்.
எனது உள்ளம் துயரவெள்ளம் ஆகியது அம்மடல் கண்டு, இதோ அந்த அவலம் சுமக்கும் கடிதம்:
"பெருமதிப்புக்கு உரிய பொதுச் செயலாளர் அவர்களின் மேலான கவனத்துக்கு, எனது பேத்தி சிவமணி பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்று கூட்டுறவு பயிற்சியில் D.co-op., பட்டம் பெற்றாள். மதுரையில் ஒரு கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் வேலைக்குச் சேர்த்துவிட்டேன். மாதம் ரூ. 1,500 சம்பளம் கிடைத்தது. 'பொடா' சட்டத்தில் நான் கைது செய்யப்பட்ட போது, மகிழ்ச்சியாகவே என்னை அனுப்பி வைத்தாள். அதன் பிறகு 20 நாள்களுக்கு ஒரு முறை வீட்டில் இருந்து பார்க்க வந்த போதெல்லாம் என்னைப் பார்த்து "ஐயா நீங்கள் வீட்டில் இல்லாமல் என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை" என்று கூறிக்கொண்டே இருப்பாள். நான் தைரியம் சொல்லி அனுப்புவேன்.
சிவமணி அழகான பெண்ணாக இருந்ததால் பலரும் பெண் கேட்டு அனுப்பினார்கள்.
நாங்கள் இது குறித்துக் கேட்டபோது "அஞ்சல் வழிக் கல்வியில் பி.ஏ., தேர்வில் வெற்றிபெற்று B.A., D.co-op., எனப்பட்டம் பெறும்வரை திருமணப் பேச்சைப் பேச வேண்டாம் என வைராக்கியமாகச் சொல்லிவிட்டாள். நான் வீட்டில் இல்லை என்பதுதான் அவளுடைய மனச்சோர்வுக்குக் காரணம். என்னைப் பார்க்காமல் பேசாமல் சிவமணியால் இருக்க இயலவில்லை. கடைசியாக அவள் எனக்குத் திருச்சிக்கு மடலினை இங்கு குறிப்பிடுகிறேன்:
அன்புள்ள ஐயாவுக்கு, எழுதுவது. இந்த வாரம் எனக்குத் தேர்வு வருவதால் 20.12.2002 என்னால் வர முடியாது. அதனால் அப்பத்தாவும், சிவராஜாமணியும், மனோகர் மாமாவும் வருவார்கள். எனக்கு பி.ஏ. அஞ்சல் வழிக் கல்வி இரண்டாம் ஆண்டுத் தேர்வு இருப்பதால்தான் வரமுடியவில்லை. எனக்கு வீட்டுவசதி சங்கத்தில் இந்த மாதம் வேலையை நிரந்தரம் செய்து சம்பளத்தைக் கூட்டுவதாகத் தீர்மானம் செய்து விட்டார்கள். உங்களுக்கு என்ன வாங்கி வரவேண்டும் எனக் கடிதத்தில் எழுதுங்கள். 1ஆம் தேதிக்கு மேல் நான் வாங்கி வருகிறேன். உடம்பை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.
அப்பத்தாவும் மற்றவர்களும் 23ஆம் தேதி திங்கட்கிழமை அங்கு வருவார்கள். எனக்கு 20ஆம் தேதியில் இருந்து இம்மாதம் முழுவதும் தேர்வு வருவதால் 1ஆம் தேதிக்கு மேல் கண்டிப்பாக வருகிறேன்.
மற்றவை நேரில்.
இப்படிக்கு
ஆர்.சிவமணி
(மதுரை 15.12.2002)
இந்நிலையில் சிவமணியும் இன்னொரு பெண்ணும் தேர்வு எழுதும் பள்ளிக்குச் சென்று இருக்கிறார்கள். ஆனால் போன இடத்தில் அவர்களைப் பல்கலைக் கழகத்துக்குச் செல்லுமாறு சொல்லிவிட்டார்கள். அங்கு போய்க் கேட்டபோது இனி அடுத்த ஆண்டுதான் நீங்கள் தேர்வு எழுத முடியும் என்று கூறிவிட்டார்கள்.
அப்பொழுதே மனம் உடைந்துபோன சிவமணி, 'எங்கள் ஐயா இருந்தால் Hall Ticket வாங்கிக் கொடுத்து விடுவாரே, அன்றைக்கு எனது தலைவர் அண்ணா, இன்றைக்கு என் தலைவர் வைகோ என்று பேசியதற் காக ஜெயலலிதா ஜெயிலில் அடைத்துவிட்டாளே - அவள் நாசமாகப் போவாள் என்று பேருந்தில் வரும்போதே முனகிக்கொண்டே வந்து இருக்கிறாள். இருந்தவர்கள் பலர் சமாதானப்படுத்தியும் கேட்கவில்லை. வீட்டுக்கு வந்ததும் எல்லோரிடமும், தெருவில் உள்ள எல்லா வீடுகளுக்கும் சென்று, என் ஐயா வீட்டில் இல்லாததால் என் வாழ்க்கையே இருட்டாகிவிட்டது என்று சிவமணி கூறி இருக்கிறாள். என்னைப் 'பொடா' சட்டத்தில் அடைத்து இருப்பதுதான் சிவமணியின் பரிதாப முடிவுக்குக் காரணம். B.A. தேர்வில் வெற்றி பெற்றுத்தான் திருமணம் என்கிற வைராக்கியம் உடைந்து சிதறிவிட்டது. இந்த மாதம் முதல் சம்பளம் உறுதி என்கிற கனவும் கலைந்துவிட்டது. அறிஞர் அண்ணா அவர்களின் வழி நடக்கும் வணக்கத்துக்கு உரிய பொதுச் செயலாளர் வைகோ அவர்களுக்கு உண்மையைத் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தகவலை அறிவிக்கிறேன்.
குறிப்பு : என் மீது அளவுக்கு அதிகமான பாசமும், பரிவும் பேத்தி சிவமணிக்கு உண்டு. ஆகையால் கடந்த 5 மாதங்களாகச் சிறிது சிறிதாகக் குழம்பிய நிலைக்கு ஆளாகி இறுதியில் அரளிக்கொட்டை தின்று வாழ்வை முடித்துக் கொண்ட பரிதாப நிலைமை உண்டாக்கி விட்டது. ஒவ்வொரு கடிதத்திலும் நீங்கள் வீட்டில் இல்லாததால் நாங்கள் அநாதைகளைப் போல உள்ளோம் என்று எழுதுவாள். ஒவ்வொரு தடவையும் பார்க்க வரும்போதும் 'பொடா' சட்டம் நமக்கு எமனாக வந்து உள்ளது எனக் கூறுவாள். நான் சமாதானப்படுத்தி அனுப்புவேன். நான் வீட்டில் இருக்கும்போதெல்லாம் எனக்குச் சிவமணிதான் உணவு பரிமாறுவாள்.
இப்படிக்கு
பி.எஸ். மணியம்
விம்மலையும் கண்ணீரையும் உள்ளடக்கிய கடிதம்.
இந்தத் துன்பத்துக்கு யார் காரணம்?ஓர் இளந்தளிரின் உயிரைப் பறித்த கொடுமைக்கு யார் காரணம்? பண்பின் பெட்டகமாகத் திகழ்ந்த குலக்கொடி, தன் உயிரை மாய்த்துக்கொள்ள யார் காரணம்? எந்தச் சூழ்நிலை காரணம்?
பி.எஸ். மணியம் வெளியில் இருந்திருந்தால் தேர்வு எழுதும் வாய்ப்பை இழந்து இருக்க மாட்டேன் என்றுதானே அத்தங்கை புலம்பித் துடித்து இருக்கிறாள்!
'பொடா'' சட்டம்தான் எமனாக வந்துவிட்டது என்று குமுறி இருக்கிறது அந்த உள்ளம். அடக்கு முறையைப் 'பொடா' வழி ஏவிவிட்ட நடவடிக்கையால்தான் தனது வாழ்வில் இருள் சூழ்ந்தது என்று சிவமணி கதறிய கூற்றுதான் அந்த இளந்தளிரின் மரண வாக்குமூலம் ஆகும்.
தனது உயிரை மாய்த்துக்கொள்ள எண்ணிய நேரத்தில் தனது பாசமுள்ள பாட்டனைக் கொடுஞ்சிறையில் பூட்டிய அக்கிரமத்தை, அநீதியை எண்ணியே எரிமலையாய்க் கொதித்து இருக்கும் சிவமணியின் இதயம்.
"அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை'
என்றார் திருவள்ளுவர்.
'கொடுங்கோன்மை' எனும் அதிகாரத்தில்! திட்டமிட்டுத் தவறு செய்யாவிடினும் ஆராயாது தீர்ப்பு அளித்த பாண்டிய வேந்தனின் கொற்றம் வீழ்ந்தது. மாடமதுரையைத் தழல் பற்றி எரித்தது கண்ணகியின் துயரால்! அதே மதுரை மாநகரில் வெடித்துச் சிதறிய நெஞ்சுடன் சாக்காட்டைத் தேடிக் கொண்டே சிவமணியின் உள்ளக் குமுறலும் விழிநீரும் 'கெடுமதியால் கொக்கரிக்கும் கொடுங்கோலர்களுக்கு உரிய தண்டனையைத் தந்தே தீரும்.' செல்வி சிவமணியின் சாம்பல் மீது ஆணையிட்டுச் சொல்வேன்! அராஜக வெறி ஆட்டம் ஆடும் கொடுங்கோல் ஆட்சியை அகற்றுவோம். அதற்கு மக்கள் சக்தியைத் திரட்டுவோம். வருங்காலம் வழி அமைத்துக் கொடுக்கும் என்று எழுதியுள்ளார் வைகோ.
No comments:
Post a Comment