மாவோவின் நெடும் பயணம்....(1)
1994 இல் நடைபயணம் தொடங்கிய தலைவர் வைகோ அவர்கள், அப்போது வெளியிட்ட அறிக்கையில் மாவோவின் நெடும்பயணம் பற்றி குறிப்பிட்டார். பின்னர் 1996 இல் மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் உடன் கூட்டணி வைத்த போதும் மாவோவின் நெடும் பயணம் பற்றி குறிப்பிட்டார்.
அப்போது இருந்து நெடும் பயணம் குறித்த நூல்களைத் தேடினேன். சிறு, சிறு குறிப்புகள் நூல்களாக கிடைத்தன.
இந்நிலையில், சென்னை புத்தகச் சாலையில் டிக் வில்சன் எழுதிய 'மாவோவின் நெடும் பயணம்' நூல் கிடைத்தது. தமிழில் நிழல் வண்ணன் அவர்கள் மொழிப்பெயர்ப்பு செய்திருக்கிறார். அலைகள் வெளியீட்டகம் வெளியீடு செய்திருக்கிறது.
சீனாவில் ஆட்சிபுரிந்த சியாங்கே ஷேக்கின் கொடூரமான ராணுவத்தை எதிர்த்து லட்சக்கணக்கான மக்கள் நடத்திய நெடிய பயணம்.
மாவோ தலைமையில் 1934 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜியாங்ஷி யிலிருந்து தொடங்கிய இந்த பயணம் 370 நாட்கள் 9 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு நடைபெற்றது.
1935 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் நாள் ஷான்ஸி மாகாணத்தில் செஞ்சேனையின் மூன்று பிரிவுகளும் ஷான்ஸி நகரில் சங்கமித்தபோது, உயரமான மலைகளையும் ஆறுகளை யும் அவை கடந்து வந்திருந்தன. ஆயிரக்கணக்கான வீரர்கள் இந்தப் பயணத்தில் தங்கள் உயிர்களை இழந்திருக்கிறார்கள்.
அந்த நூலின் முன்னுரையில்,
"1934ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள், ஆண்களும் பெண்களுமாக ஏறத்தாழ ஒரு லட்சம் சீனப் பொது வுடைமை வாதிகள் மனித குல வரலாற்றின் வியத்தகு அணி வகுப்பைத் தொடங்கினார்கள்.
கியாங்சியின் தென் மத்திய மாகாணத்தில் உள்ள தமது சோவியத் தளத்தைத் (பெல்ஜியம் அளவிற்குப் பெரியது) துறந்து அவர்கள் தமது எதிரி சியாங் கே ஷேக்கின் தேசிய வாத அல்லது கோமின்டாங் படை களின் மரணப்பிடியைப் பிளந்து கொண்டு கால் நடையாய் ஒரு பயணத்தைத் தொடங்கினார்கள். அப்பயணம் ஒரு முழு ஆண்டுக்குத் தொடர்ந்தது. அது அவர்களைச் சுற்றி வளைத்து 6000 மைல் தொலைவுக்கு சீனாவின் மறுகோடிக்கு அழைத்துச் சென்றது.
கூறுபட்ட, கட்டுக்கோப்பற்ற ஒரு நெடும்பயணத்தைத் தலைவர்கள் தொடங்கினார்கள். கியாங்சி தளத்தைக் கைவிட்டுக் கிளம்பியதை ஒரு தோல்வியாகத்தான் காண வேண்டும்;
சீனப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்கள் மற்றும் அவர்களின் ரசிய மற்றும் ஐரோப்பிய மார்க்சிய ஆலோசகர்களின் தவறுகளும் மோசமான கணிப்புகளுமே இதற்குப் பெரும்பகுதி காரணமாக இருந்தன.
நெடும் பயணத்தின் உடனடித் தேவை கள் இத்தகைய கருத்து வேறுபாடு களைத் தீர்த்து வைத்தன; இந்தக் காலக் கட்டத்தின் போக்கில் மாவோ சே-துங் சக்திமிக்க தலைவராய் எழுந்தார். இந்தத் தலைமைப்பதவி எப்போதுமே சொந்த வழியில் செல்ல அவரை அனுமதிக்கா விடினும் அதன் பின்னர் ஒருபோதும் முழுவதுமாக அவர் அதை இழக்கவே யில்லை.
ஆர்ப்பரிக்கும் ஆறுகள், பனி படர்ந்த மலைத் தொடர்கள், சேறும் சகதி யுமான சதுப்புநிலம் மற்றும் மரங் களடர்ந்த காடுகள் வழியாகப் பதினொரு மாகாணங்களினூடே நெடும்பயணம் பொதுவுடைமையாளர்களை நடத்திச் சென்றது.
அவர்கள் தேசியவாதப் படை களோடும், மாகாண யுத்தப் பிரபுக்களின் துருப்புகளோடும். உள்ளூர் கொள்ளையர்களோடும், பகை கொண்ட பழங்குடி மக்களோடும் போரிட வேண்டியிருந்தது. ஒரு கட்டத்தில் தண்ணீரே அற்றுப்போன ஒரு பகுதியில் அவர்கள் தமது சொந்த சிறுநீரைப் பருகி உயிர்வாழ வேண்டியிருந்தது.
தமது நெடும்பயணத்தைத் தொடங்கிய மிக விரைவிலேயே, சிதறிக்கிடந்த பல்வேறு பொது வுடைமைத் தளங்களின் சரிவின் காரணமாக சீனாவில் பொது வுடைமையை உயிர்பிழைக்க வைக்கும் தமை நெடும் பயணத்தி லிருந்த மாவோ மற்றும் அவரது தோல்களில் விழுந்தது. ஊடுருவ இயலாத மேற்குச் சீனாவின் உட்பகுதிகளில் மாவோவின் ஆட்கள் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து போனதால், பல பார்வையாளர்கள் சியாக் கே ஷேக் தனது உள்நாட்டுப் போரில் வெற்றிபெற்று விட்டதாகவும் தீர்மானகரமாகத் தோற்கடிக்கப்பட்டு விட்டார்கள் என்றும் கருதினார்கள்.
ஆனால் கந்தலான உடைகளுடன் மாவோவின் எஞ்சிய வீரர்கள் வடக்குச் சீனாவில் பெருஞ்சுவரின் நிழலில் இருக்கும் ஏனானை நெருங்கிய போது, அலையின் எழுச்சி எதிர்பாராது திரும்பியது.
நெடும்பயணமெனும் உலையில் வார்த்தெடுக்கப்பட்ட அர்ப்பணிப் போடும் கட்டுப்பாட்டோடும் செயல்பட்ட மாவோவின் தலைமை பொது வுடைமை இயக்கத்தை ஒரு இயங்கு சக்தியாக மாற்றியமைத்து, பதினாறு ஆண்டுகளுக்குப் பின்பு தேசிய வாதிகளை தூக்கியெறிந்து முழு தேசத்தையும் தனது ஆளுகைக்குக் கொண்டுவரச் செய்தது. இவ்விதமாக நெடும்பயணம் நம்பிக்கையிழந்த பின்வாங்கலை வெற்றிக்கான முன்னுரையாக மாற்றியது.
இந்த வியத்தகு காவியம் இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் வெற்றிக் கதைகளில் ஒன்றாகிவிட்டது. நீண்ட பயணத்தின் நிறைவுக்குப் பின்னர் மாவோவின் தலைமையகத்தை முதலில் அடைந்தவர்களில் ஒருவரான அமெரிக்க இதழியலாளர் எட்கர் ஸ்நோ, 'சீனாவின் மீது ஒரு சிவப்பு நட்சத்திரம்' என்ற தனது நூலில், வியந்துநின்ற உலகிற்கு 'நெடும் பயண'த்தின் சில பகுதிகளை வெளிச்சமிட்டுக் காட்டுகிறார்.
'சாகசம், ஆராய்ச்சிப் பயணம், கண்டுபிடிப்பு, மனிதத் துணிச்சல் மற்றும் கோழைத் தனம், களிப்பு மற்றும் வெற்றி துன்பம், தியாகம் மற்றும் விசுவாசம் இவையெல்லாம் கடந்து மனிதனிடமோ, இயற்கைவிடமோ, கடவுனிடமோ, மரணத்திடமோ தமது தோல்வியை அனுமதிக்காத ஆயிரக்கணக்கான இளைஞர்களின் சவாலைப் போன்ற மங்கா மனவெழுச்சி. இறவா நம்பிக்கை மற்றும் வியத்தகு புரட்சிகர தன்னம்பிக்கை இவையெல்லாமும் இன்னும் கூட பலவும், நவீன காலங்களில் இணையற்றதானதொரு இந்த நெடும்பயணத்தின் வரலாற்றில் புதைந்து கிடப்பதாகத் தெரிகிறது".
இக்கதையைக் கேட்ட முதலாவது வெளியுலக நபரின் கருத்தாக இது இருந்தது. ஆனால், இத்தகைய அருஞ்செயல்கள் கடந்த காலத்திற்குச் சொந்தமானவை என்று நினைத்திருந்த ஒரு உலகத்தின் அச்சத்தையும் போற்றுதலையும் பதிவு செய்த முதலாவது நபராகவே இருந்தார் ஸ்நோ . ஃபீல்டு மார்ஷல் மாண்ட்கோமரி நெடும்பயணத்தை தாக்குப் பிடிக்கும் பொறுமையில், 'ஒரு வியத்தகு அருஞ்சாதனை' என்று அழைத்தார்.' சீமோன் டி பொவார் 'நெடும் பயணம்' என்ற தலைப்பில் நவ சீனத்தின் வரலாற்றை எழுதினார் என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment