Friday, February 25, 2022

காந்தியியம் - பொதியவெர்பன் -3

வைக்கம்போராட்டக் கட்டுக்கதைகளைக் கட்டவிழ்த்தே:

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

3.பாமரர் பங்களிப்புக்கா இட்டுச்செல்லும் காந்தியாரின் தர்மகர்த்தா சோசலிசமும்; நிலக்கிழமை வர்ணதர்மமும்?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

1.காங்கிரசைப் பாமரர் பங்களிப்புக்கு இட்டுச்சென்ற வகையில் காந்தியாரின் முக்கியத்துவம்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

"காந்தி மீது அவர் பயணித்த மூன்றாம் வகுப்பு குறித்தும் விமர்சித்தவர் காங்கிரசில் புகழ்பெற்ற பெண்மணி சரோஜினி நாயுடு அவர்கள். Gandhi's simplicity being an expensive affair என்று சொன்னவர். ஆனால்  அதே அந்த சரோஜினிதேவி அவர்கள் உபி கவர்னராக இருக்கும்போது சிம்லா பயணத்தில் palace of wheels  - வைஸ்ராய் பயணித்த ஆடம்பரமான ரயிலில் பயணிக்கிறார். காங்கிரசில் இருந்த பண்ணையார்கள் இளவரசர்கள் ஜமீந்தார்கள் இரண்டாம் உலகப்போரின் போது பணம் சம்பாதித்த தொழிலதிபர்களின் கூடாரமாக இருந்த காங்கிரசை பாமரர்களின் பங்களிப்புக்கு இட்டுச்சென்ற வகையில் இந்திய சமூகவெளியில் காந்தி முக்கியத்துவம் பெறுகிறார். இது காந்தியின் இன்னொரு பக்கமாகவும் நாம் சேர்த்தே வாசிக்க வேண்டி இருக்கிறது."

- புதியமாதவி

""Puthiyamaadhavi Sankaran!  எப்போதுமே பதிவை முழுமையாக வாசிக்கப் பொறுமை கிடையாதா? சரோஜினி தேவி ஆடம்பர ரயிலில் பயணித்ததும் காந்தியார் இருந்த கம்பார்ட்மெண்ட் முழுக்க அவர் அன்பர்களுக்குமாக எடுக்கப்பட்டு அதை மூன்றாம் வகுப்புப்பயண எளிமை எனக் காந்தியர் பேசிநிற்பதும் ஒன்றாமா? ஆடம்பரப்பயணமன்று பேசுபொருள், எளிமையைப் பராமரிக்கக் கொடுத்தவிலையே பேசுபொருள்!2. காந்தியின் இன்னொரு பக்கமாகப் புதியமாதவி கோருவது தர்மகர்த்தா சோசலிசத்தையும்,

அவர் வர்ணதர்மத்துக்கு வக்காலாத்து வாங்கக் காரணமான நிலக்கிழமைச் சார்பையும் தாமே?இவை இரண்டுந்தாமே காந்தியத்தின் பலவீனம்? எவ்வாறதனை  நியாயப்படுத்த எத்தனிக்கிறார் புதிய மாதவி?"

"Pothi dear Pothi sir, ur writing style is differ. I am reading ur non fictions from Sugan magazine time onwards. u take many many reference to your main subject . Iam not saying anything about that. Here in this article ur first point is , மகாத்மாவின் எளிமைக்கான விலை. My view on that is my comment. U may differ.no problem sir. 🙏🙏" - Puthiyamaadhavi Sankaran 

" அன்பினிய புதிய மாதவி! மன்னிக்கவும் தமிழிலேயே உரையாடலாந்தானே?  இங்கு எதற்கு ஆங்கிலம்? 

மிக்க நன்றி புதியமாதவி! நல்லவேளை உரிய தருணத்தில்'சுகன்' இதழை நினைவூட்டியமைக்காக.

1.மூன்றாம் முறையாக மீளவும் சுட்டிக்காட்டுகிறேன்,  ஒரு சிறு உள்விபரத்துடன் சத்தியசந்தர் 'காந்தியாரின்

எளிமை என்ற காந்தியர் பொய்மைக்கு விலை' (ஒட்டுக்க ஒரு பெட்டியையே  கட்டணங்கட்டி  எடுத்ததை மறைத்து, எளிமை எனப்புளுகும் காந்தியர் பொய்ம்மைக்கு விலை) ஆடம்பரமாகப் பயணிப்பதல்ல, எளிமை என்ற பொய்மையின் பேரில் ஆடம்பரமாகப் பயணித்ததே இங்கான பேசுபொருள்!


2//காங்கிரசில் இருந்த பண்ணையார்கள், இளவரசர்கள், ஜமீன்தார்கள், இரண்டாம் உலகப்போரின் மீது பணம் சம்பாதித்த தொழிலதிபர்களின் கூடாரமாக இருந்த காங்கிரசை பாமரர்களின் பங்களிப்புக்கு இட்டுச்சென்ற வகையில் இந்திய சமூகவெளியில் காந்தி முக்கியத்துவம் பெறுகிறார்// 

உள்ளபடியே நான் மதிக்கும் புதியமாதவி இடமிருந்து இப்படி ஒரு பார்வையை அறவே நான்எதிர்பார்க்கவே இல்லை. மாற்றுத்தரப்புகளைக் காண்போம்:

காந்தியத்தின் இரு கருத்தாக்கங்கள் சமூகஇருப்பைத் தக்கவைக்கும் ஷேப்டி வால்வ் சிஸ்ட்டமாகச் செயல்பட்டன. அவரது வர்ணதர்ம வியாக்கியானம் நிலக்கிழமைக்கு

அரணாகவும்; தர்மகர்த்தா சோசலிசம் முதலாளியத்துக்கு அரணாகவும் பாதுகாவலாயின. அவற்றினின்றும்

விடுபட்டது ஜோசப் கொர்னீலியஸ் குமரப்பாவின் விடுதலை இறையியல். காந்தியப் பொருளாதாரத்தை

வளர்ந்தெடுத்துக் கோட்பாட்டாக்கமாக வடிவமைத்தவரும் குமரப்பாவே.

காந்தியாரிடமே கறாராகக் கணக்குக் கேட்டவர். அவர் மீது காந்தியாரிடமேபுகார் அளிக்கப்பட்டபோது ,

' அவர் மதராஸிதானே!  மதராஸிகள் எப்போதும் காரசாரமானவர்களே" எனப் புன்னகையோடு பதிலளித்தார்.

குமரப்பா கீழைவானின் நம்பிக்கை நட்சத்திரமே. மாவோவை நேரில் சந்தித்து உரையாடியவர். அவரையும்

ஆந்திரபூமியின் கோராவையும் நான் பின்னைகாந்தியர் என வரையறை செய்கிறேன்.

2.காந்தியாரின் தர்மகர்த்தா சோசலிசம்:

ஒரு குறுக்குவெட்டுக் கோணம்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அ.அண்ணல் அம்பேத்கர் நோக்கில்....

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

"அரசியல் இயந்திரத்தை இயக்குவதற்குப்  பணம் தேவை.பனியாக்களிடம் இருந்துதான் பணம் வரவேண்டும். காங்கிரசுக்குப் பனியா பணம் கொடுக்கக் காரணம் காந்தி பணியாவாக இருப்பதுதான்.

அரசியலில் பணத்தை முதலீடு செய்வது பெரும் இலாப ஈவுகளைப் பெற்றுத்தரும்"- பி.ஆர்.அம்பேத்கர்

('காந்தியும் காங்கிரசும்  தீண்டப்படாதார்க்குச் செய்ததென்ன?')

"அதனால்தான் பிர்லா சங்கரமடம் கட்ட ஐந்தரைக்கோடி ரூபாய் செலவழிக்கிறார்" -  எஸ்.வி.இராஜதுரை :வ.கீதா

('திராவிட தினமணியின் பார்ப்பனியம்')

அண்ணல் அம்பேத்கர் முன்மொழிந்த அதனை பம்பாய் உயர்நீதிமன்றம் வழிமொழிந்தது :

" டாடா இரும்பு எஃகுத் தொழிற்சாலைக் கம்பெனியார் தாங்கள் விரும்பும் அரசியல் கட்சிகளுக்குத் தங்கள் கம்பெனிப் பணத்திலிருந்து நன்கொடை அள்ளிக் கொடுக்கலாம். இப்போதைய ஆளும்கட்சி தனிஉடைமைக்கு ஆக்கம் தருவதாகும். ஆதலால் தனிஉடைமை முதலாளிகளாக டாடா கம்பெனியார் வழங்கும் பணம் அவர்களது தொழில் செழிக்க வகைசெய்யும். இது அரசியல் வாழ்க்கையைக் கைக்கூலிப் பித்தர்கள் உலவும் இடமாக்காது." -

பம்பாய் உயர்நீதிமன்றத் தீர்ப்பு

('குறள் முரசு'. 18-1- 1957)

காந்தியாரும் காங்கிரசாரும் கையாண்ட தர்மகர்த்தா சோசலிசத்தின் ஒரு குறுக்குவெட்டுக் கோணமே இவையாவும். 

பிர்லா வழங்கிய நிதிஆதாரம் மகாத்மா கேட்டு வாங்கிய காரணங்களுக்குச் செலவிடப்படவில்லை மாறாக மடை மாற்றி விடப்பட்ட விவரங்களை எல்லாம் அண்ணல் இந்நூலில் எடுத்துரைத்துள்ளார்.

காந்தியாரிடம் பெரியவர் வஉசி வசம் சேர்ப்பிக்குமாறு ஒப்படைக்கப்பட்ட நிதி அவரால் கட்சிப்பணிகளுக்கு மடைமாற்றி விடப்பட்ட கதையும் நாமறிவோம். 

மதக்கோட்பாடுகளுக்கு எதிரான முறையில் இருப்பதாகக் குறிப்பிட்டு அதைத் தீர்க்குமுகமாக ஏதாவது செய்தாக வேண்டும் என்றே காந்தியார் நிதிஆதாரங்களை வேண்டினார்.இத்தொடர்பில் இதற்கு ஆதாரமாக அவருடைய ஒரு கடிதம்:

"அன்புமிக்க. கன்ஷியாம் தாஸ்! ஒத்துழையாமை இயக்கம்தான் நமக்கு மேலும் மேலும் வலுவூட்டும் என்று நம்புகின்றோம். இவ்வியக்கத்தின் ஆற்றல் வேண்டப்படுவது இதனைச் செயற்படுத்தும் ஆற்றலேயாகும். இந்து - முஸ்லீம் சிக்கலின் பெருந்தடையாகக் குறுக்கே கொண்டுவந்துவிட்டது."

"எனக்கு ஏற்பட்டுள்ள பணிஆசை தணிக்க முடியாதது.

கதர், தீண்டாமை, கல்வி இத்துறைகட்காகக் குறைந்தது 2,00,000 இப்போது எனக்கு வேண்டும் பால்பண்ணைக்காக மேலும் 50,000 ரூபாய், இவற்றுடன் 'ஆஸ்ரம' வேலைகள் வேறு இருக்கின்றன. எந்த ஒருபணியும் பணமுடையால் குறைவுபட்டு நிற்கவில்லை. ஆனால் கடுஞ்சோதனைகள் பலவற்றுக்கு உள்ளாக்கிய பின்னரே கடவுள் இவற்றை எனக்குத் தருகின்றார்.

இது என்னைத் திருப்திப்படுத்துகிறது. தாங்கள் எந்தெந்தப் பணிகளுக்கு நம்பிக்கை கொண்டிருக்கிறீர்களோ, அவற்றுக்காக எவ்வளவு பணம் கொடுக்க விரும்பினிலும் என்னிடம் கொடுங்கள்.

இந்து - முஸ்லீம் சிக்கல் பற்றி மதிப்பிற்குரிய மாளவியா அவர்கட்கு நான் ஒரு கடிதம் எழுதியுள்ளேன். இந்த வகையில் ஏற்றதொரு முறையில் ஏதாவது செய்தாக வேண்டும். இப்போது நடைபெற்றுக் கொண்டிருப்பவை மதக்கோட்பாடுகளுக்குப் புறம்பானவை களாக எனக்குத் தோன்றுகின்றன"-

தங்கள் அன்புள்ள

மோகன் தாஸ் 

1-10- 192 ( இருபதுகளில்)

(' குறள் முரசு'. 18-1- 1957)

*

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஆ. மார்க்சிய நோக்கில்  ஜனநாயக சோசலிசம்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

"விஞ்ஞான கம்யூனிசத்துக்கு எதிராக முன்வைக்கப்படும் ஜனநாயக சோசலிசம் என்பதுதான் தற்காலச் சீர்திருத்த வாதத்தின் அதிகாரபூர்வமான தத்துவமாகும். வர்க்கப் போராட்டம், சோசசலிசப்புரட்சி, அரசியல் ஆட்சி அதிகாரத்தை உழைப்பாளி மக்கள் கைப்பற்றுவது ஆகியவற்றுக்கு எந்த அவசியமும் இல்லை என்று ஜனநாயக சோசசலிசத் தத்துவம் மறுக்கிறது." -

போரிஸ் புத்தின் ('அரசியல் சொற்களஞ்சியம்')

*

~~~~~~~~~~~~~~~~~~

இ. அண்ணா நோக்கில்

~~~~~~~~~~~~~~~~~~

"இன்று பிர்லாக்களை கொழுக்க வைத்துக்கொண்டே காங்கிரஸ் ஜனநாயக சோசலிசம் பேசிவருகிறது." - 

('தொகுதி:7')

"தம்பி சோசலிச உற்பத்தியின் அடிப்படை தொழில் உற்பத்தியைப் பெருக்க வேண்டும். அந்த உற்பத்தி மக்களின் வசதிகளை அதிகப்படுத்த பயன்படவேண்டுமே அன்றி முதலாளிகளின்  இலாபத்தைப் பெருக்கப் பயன்படக் கூடாது."- ('தொகுதி:5')

"தர்மகர்த்தாமுறை பரீட்சீக்கப்பட்டு அது போதுமானதாக இல்லை என்று மெய்ப்பிக்கப்பட்ட காரணமாகவே புதியமுறை வகுக்கப்பட்டது. அந்தப் புதிய முறையே சமதர்மம் -சோசலிசம்" -(' தொகுதி:7')

"மகாத்மா காந்தியார் தமது ஆயுட்காலம் முழுவதும் இந்த போதனையைத் தான் செய்துவந்தார். ரஷியநாட்டுத் தத்துவமேதை டால்ஸ்டாய் - வேதாந்தவித்தகர் - இந்த

போதனை நடத்தியவர் - அறிவோமே!" -

சி.என். அண்ணாதுரை (' தம்பிக்கு அண்ணாவின்

கடிதங்கள்' -'தொகுதி:7')

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

3.காந்தியாரின் வர்ணதர்ம அரணான நிலக்கிழமை மனோபாவம்!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அ.பெரியார் நோக்கில் காந்தியாரின்  வருணாசிரமம்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

'இந்திய ஆன்மா கிராமங்களில்தான் வாழ்கின்றது" என்றார் காந்தியார். 'கிராமங்கள் ஒழிக' என்றார் பெரியார். 'நீதிக்கட்சி' நடத்திய 'நகர தூத'னுக்கு எதிராகவே காந்தியச் சார்பினர் 'கிராம ஊழிய'னை வெளிக்கொணரலாயினர்.

" கிராமம் × நகரம் என்று பிரித்துக் காட்டுவதே வருணாசிரம முறைப்படியேதான்.சமதர்மம் பேசுகின்றவர்களே கிராமம் × நகரம் என்ற பிரிவின இருக்க வேண்டுமென்று பிரச்சாரம் செய்கிறார்கள். தோழர் காந்தியார் சிலவருடங்களுக்கு முன் ஒரு

சமஸ்தான கிராமவாசிகள் இடையில் கீழ்க்காணுமாறு பேசியுள்ளார்:

'கிராமமக்களாகிய உங்கள் கையில் வெள்ளிக்காசுகள் இருக்கக்கூடாது. நகரத்தில் உள்ளவர்களுக்கு ஊழியம் செய்யவே உங்களைக் கடவுள் படைத்திருக்கிறார்.

ஆதலால் நகரதத்தில் உள்ள மக்கள் சௌகரியமாய் வாழும்படி அவர்களுக்குப் பால்,நெய்,காய்கறி, செருப்பு ஆகியவற்றைத் தயார்செய்யும் ஊழியம் செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.'

 - இதிலிருந்து காங்கிரஸ்காரர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைச் சிந்தியுங்கள்" -

ஈ.வெ.ராமசாமி ('குடி அரசு' - 22/9/1949)

நகர்மயமாதலுக்கும் தொழில்துறைமயம் ஆதலுக்குமான காந்தியாரின் எதிர்ப்பு பாரம்பரிய நோக்கு அவராலதனை அதனை நியாயப்படுத்துமுகமாகவே முன்னெடுக்கப்பட்டது:

"பெரிய நகரங்கள் மாயக்கவர்ச்சிப் பொருள், பயனற்ற தொல்லை. இங்கே திருடர்களும் கொள்ளைக்காரர்களும் தோன்றுவார்கள், வேசித்தொழிலும், கெட்டநடத்தைகளும் பெருகும்.பணக்காரரர்கள் ஏழைகளைச் சுரண்டுவார்கள்.

ஆதலால் இவற்றில் மக்கள் மகிழ்ச்சி கரமானவர்களாக இருக்கமாட்டார்கள் என்றனர் அவர்கள். எனவே சிறு கிராமங்களே நமது மூதாதையரைத் திருப்திப்படுத்தின."

எம்.கே.காந்தி ('Hindswaraj')

மூதாதையரின் குக்கிராமம் × பெருநகரம் எனும் இத்தகு இருமை முரணெதிர்வாக முன்வைக்கப்படும் பார்வை மிகவிசித்திர மானதே யாகும். திருட்டும் விபச்சாரமும், சுரண்டலும் என்னவோ பெருநகரங்களுக்கே உரித்தானவை தாமா? குக்கிராமங்களிலவை இல்லையா? நிலக்கிழமையின் ஆதிக்கமிக்க குக்கிராமங்களின் சாதிய இறுக்கம் குறித்த ஓர்மை அவருக்கு வாய்த்திருக்கவே இல்லையா?

"இந்தியக் கிராமங்களை இலட்சிய உருவகமாக முன்வைத்தது  குறித்து காந்தி விமர்சிக்கப்பட்டாலும், சாதிய இறுக்க அம்சங்கள் குறித்த புரிதலற்றவராகவே அவர் இருந்தார்." -

 மதுரை சந்தானம் சாந்தி (' Religion, State & Civil Society)

ஆ. சோவியத் இந்தியவியல் ஆய்வாளர் வரைக்கும்..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இத்தகு புரிதல்கள் இங்குள்ள தலைவர்கள் மத்தியில் மட்டுமல்லாமம் சோவியத் இந்தியவியல் ஆய்வாளர்கள் வரையிலுங்கூட வாய்த்தே இருந்தது:

"காந்தியின் நிர்மாணத்திட்டங்களில் பல கற்பனாவாத அம்சங்கள் இருந்ததை இவருடைய விமர்சகர்கள் மட்டுமன்றிச் சீடர்களும் பன்முறை குறிப்பிட்டனர்.

காந்தியின் 'கருணை'த்தத்துவம், சுரண்டும் வர்க்கங்கங்களுக்கு 'மறுகல்வி' (அல்லது சுயமறுகல்வி) புகட்டும் கருத்து முற்றிலும் யதார்த்த்தத்துக்கு அப்பாற்பட்டதாய் இருந்தது. உதாரணமாகக் காந்தி ஜமீந்தார்களின் நிலப்பிரபுத்துவ முறையை அகற்றுவதற்கு எதிராக இருந்தார்."

"ஒருவருக்கு மூளை உழைப்பையும் மற்றவர்களுக்கு உடல் உழைப்பையும் வழங்கிய 'இயற்கையான' ஜாதிப் பாரம்பரியங்களை அங்கீகரித்தார்."- விளதிமிர் ஹோரொஸ் ('வளர்முக நாடுகளில் பாப்புலிசம்') மேலதிகப் புரிதல்களுக்குக் காண்க: ' ஏவலாளியையேகாவுவாங்கிய ஏவல்தேவதை: ஒரு கருப்புமந்திரக்கதை' - Soundara Sugan '

('சௌந்தர சுகன் : 316 - செப்.2013)

 (அ.மார்க்ஸ் குறித்த தொகுப்புக்காக தொகுப்பாளர் மீனா கேட்டவண்ணம் நான் அனுப்பிய கட்டுரை கந்தறு கோலமாகக் கத்தரிக்கப்பட்டுத் தொகுப்பாசிரியரால் எனக்கு மட்டும் தனியாக அதில் மறுப்புடன் வெளியிடப்பட்டது. அதனை நான் விரிவாக்கம் செய்து தொடர் கட்டுரைகளாக அவை

'புதுப்புன''லில் வெளியாகின.மருதா பதிப்பக

வெளியீடாக அவை 'மார்க்சியத்துக்கும் அஃதே துணை' என நூலுருப்பெற உள்ளன.)


தொடரும்

No comments: