Wednesday, January 29, 2020

சிலம்புச் செல்வருக்கு பாரதிதாசன் வாழ்த்து (1963)


சிலம்புச் செல்வருக்கு பாரதிதாசன் வாழ்த்து (1963)

சிலம்புச் செல்வர் .பொ.சி.¤ 57 வது பிறந்த நாள் விழா 26.8.63 இல் சென்னை கோகலே மண்டபத்தில் நடந்தபோது புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நிகழ்த்திய தலைமையுரை வருமாறு:
அடிகளார் அவர்களே! தாய்மார்களே! பெரியோர்களே! முதன் முதலில் என்னுடைய மனமார்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கே நாம் கூடி இருப்பது நம் சிவஞானம் அவர்களை வாழ்த்துவதற்காக. சிவஞானம் என்று சொல்லும்போது எல்லோருக்கும் சிவ உணர்வு வருவதில்லை. தமிழ் உணர்வுதான் வரும். சிவஞானம் என்று சொன்னவுடன், `சிலம்புச் செல்வர்  நினைவுதான் வருகிறது.
எனக்குத் தெரிந்து இருபது ஆண்டு காலமாக நம்முடைய சிவஞானம் தமிழுக்கே உழைத்து வருகிறார். அவருடைய பெயரை அடிக்கடி கேட்கும் வாய்ப்பு இருக்கும் வகையில் தமிழ்த் தொண்டே செய்து வருகிறார். தமிழுக்காக, தமிழகத்துக்காக தமிழருக்காக நம் சிவஞானம் செய்யும் தொண்டு மறக்கக்கூடியது அல்ல.

சிவஞானம் என்ற பெயரில் இந்த நாட்டில் பலர் இருந்திருக் கிறார்கள். ஆனால் நம் சிலம்புச்செல்வர் சிவஞானம் அவர்கள் தமிழர்களின் நெஞ்சைவிட்டு அகலாதவர். அந்த அளவுக்கு தமிழுக்காக தமிழகத்துக்காக, தமிழருக்காக தொண்டு செய்து வருகிறார்.
இப்போது தமிழுக்கு, தமிழகத்துக்கு, தமிழருக்குத் தொண்டு தேவைப்படுகிறது. மற்றவைகளைப்பற்றி எண்ணிப்பார்க்க அவசியம் இல்லாமல் இருக்கிறது.

தமிழ் அடைந்துவரும் இன்னல் சிறிதன்று. இந்த நாட்டை ஆளும் பொறுப்பில் உள்ளவர்கள் கூட தமிழுக்காகப் பரிந்து கேட்க முன் வரவில்லை.

நம் நாட்டில் பல கட்சிகள் இருக்கின்றன, ஆனால் தமிழை முன் வைத்துத் தொண்டு செய்ய அவர்கள் முயலவில்லை. நம் சிவஞானம் அன்று முதல் இன்று வரை தமிழுக்காக, தமிழகத்துக் காக, தமிழருக்காகத் தொண்டு செய்கிறார். அன்று அவர் கிழித்த கோட்டிலிருந்து தவறவில்லை.

இங்கே நாம் இரண்டு காரியங்களுக்காகக் கூடி இருக்கிறோம். ஒன்று நம் சிவஞானம் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று வாழ்த்த. இரண்டாவதாக, நம் சிவஞானம் ஏற்றுக் கொண்டிருக்கும் கருத்துக்கு நாம் ஆதரவு தெரிவிக்கவும் கூடி இருக்கிறோம்.

சிவஞானம் அவர்களை வாழ்க என்று நாம் வாழ்த்துவதற்கு நமக்கு வள்ளுவர் வழி காட்டி இருக்கிறார். எப்படி என்றால் அவர் ஒழுக்கம் உள்ளவர், `ஒழுக்க நெறி நின்றார் நீடு வாழ்வாரஎன்ற திருவள்ளுவர் பாடி இருக்கிறார், சிவஞானம் அவர்களிடம் சிகரெட், பொடி, மது போன்ற ஒழுக்கக்கேடு இருந்து நான் பார்த்தது இல்லை. இரண்டாவது இல்லற ஒழுக்கம். இவைகளை நம் சிவஞானம் கடைபிடித்து வருகிறார்.

பல கட்சிகளை நாம் பார்த்திருக்கிறேம். கட்சி செல்வாக்கை வைத்துக் கொண்டு கெட்டவழியில் செல்வார்கள். ஆனால் நம் சிவஞானம் எப்போது கோடு கிழித்துக் கொண்டாரோ திட்டம் வகுத்துக் கொண்டாரோ அதில் இம்மி பிறழாமல் இருக்கிறார். அவரை நாம் வாழ்த்துவதைவிட குறிப்பாக திருவள்ளுவரே வாழ்த்திவிட்டார் `நீடு வாழ்வார்என்று.
மனிதன் ஒழுக்கத்துடன் தவத்தைச் செய்து வந்தால் நீண்ட நாள் வாழலாம், இது தமிழர் கொள்கை.

சிவஞானம் எதற்காக உழைக்கிறாரோ, அந்தக் கொள்கை நெறிக்கும் நாம் ஆதரவு கொடுக்க வேண்டும். அதில்தான் நமது கவனத்தைச் செலுத்த வேண்டும். தமிழ் மொழிக்குப் பெரிய நெருக் கடி ஏற்பட்டிருக்கிறது. ஆயிரம் ஆண்டுகாலமாக தமிழ் நெருக்கடி யில்தான் இருந்து வருகின்றது. இன்னும் அந்த நெருக்கடி அற்றுப் போகவில்லை. ஆங்கிலேயர்கள் ஆட்சி நடத்தியதால் தமிழுக்கு ஏற்பட்ட நெருக்கடி மிகப்பெரியது.

மாதர்கள் கூடநூற்றுக்கு இருபத்தைந்து சதவிகிதம்தான் தமிழ் வார்த்தைகளை உபயோகப்படுத்துகிறார்கள். இதனால் பெரிய கலகமே ஏற்படுகிறது.

சென்னை நகர மக்கள் நாட்டுப்புறத்திற்குப் போனால் அங்குள்ள மக்களைக் கேவலமாக மதிக்கிறார்கள். காரணம் நாட்டுப்புற மக்களுக்கு இடை இடையே ஆங்கிலத்தைக் கலந்து பேசத் தெரியாது. ஆங்கிலம் தெரியாததால் அவர்களைக் கேவலமாக மதிக்கிறார்கள். இதைக் கூர்ந்து கவனித்த சிவஞானம் ஆங்கிலத்தை `வர விடாதேஎன்று சொல்கிறார். ஆங்கிலத்தை நாம் எதிர்க்க வேண்டும்.

சிலர் `இந்தி, ஆங்கிலம் இரண்டும் வேண்டாம், தமிழ் போதும்என்கிறார்கள். சிலர் `இந்தி வர வேண்டாம்என்று சொல்கிறார்கள். சிலர் `தமிழ் ஆங்கிலம்என்று சொல்கிறார்கள்.
மூவர் சொல்வதும் விசயம் ஒன்றுதான். இப்படி மூன்று கட்சிகள் இருக்கின்றன.

தமிழ் ஆட்சி மொழியாக, பாட மொழியாக, ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள் ஏதோ பேதப்பட்டு இருக்கிறார்கள். அதை நீங்கள் உணர்ந்து சிவஞானத்தை ஆதரிக்க வேண்டும். நாட்டுக்கு ஏற்பட்டுள்ள தீமை நீங்க வேண்டும். தமிழுக்கு, தமிழகத்திற்கு, தமிழருக்குத் தொண்டு செய்ய சிவஞானம் அவர்கள் நீண்டநாள் வாழ வேண்டும். நாம் அவருடைய கருத்துக்கு ஆதரவு தர வேண்டும்.

நம்முடைய சிவஞானம் அவர்கள் தமிழ் அரசுக்கழகம் என்ற பொது நிலையைக் கண்டிருக்கிறார். கழகம் என்றால் சூதாடும் இடம் என்று ஒரு நாளேடு தெரிவித்தது. கழகம் என்றால், சூதாடும் இடம் என்றால், சைவ சித்தாந்தக் கழமும் அப்படித்தான். சூதாட பல நிறுவனங்களா வேண்டும்?

இலக்கியத்தைப் பயிலாததால் அப்படி எழுதுகிறார்கள். கழகம் என்றால் `பயிலும் இடம்’ - `கழுகுஎன்ற சொல்லில் இருந்து பிறந்தது. பயிற்று செய்யப்படும் இடம் கழகம். இப்படி கழகம் என்றால் சூதாடும் இடம் என்று எழுதிய பத்திரிகை அலுவலகத் திற்குச் சென்று இப்படி எழுதியிருப்பது பிழை என்று சொன்னேன். திருவிளையாடல் புராணத்தில் சிவபெருமான் கழகம் ஏற்படுத்தி தமிழை ஆராய்ந்தார் என்று இருக்கிறது. அந்தக் கழகம் சூதாடும் இடமா? என்று கேட்டேன்.

ஒரு பெரிய கட்சித் தலைவர்ஆங்கிலமே தாய் மொழியாக இருக்கலாம்என்று சொல்கிறார். நீண்ட நாளாக தமிழ் உணர்ச்சி இல்லாததால் அத்தகைய சோம்பேறித்தனம் வந்து விட்டது.
இன்னொருவர், ஆட்சியைக் கையில் வைத்துக் கொண்டிருப் பவர்தமிழில் என்ன இருக்கிறது?’ என்று கேட்கிறார். இப்படி கேட்கும் துணிவு எங்கிருந்து வந்தது? சென்னையில் நாம் பார்க்கிற இடம் எல்லாம் தமிழில் இல்லை. பெயர்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கிறது. சரி. கோவிலுக்குப் போனால் சிவபெரு மான் இருக்கிறார். அவர் நம்ப அய்யா! எவனோ நம்மிடம் காசை வாங்கி ரெக்கமென்டேசன் செய்வதை சமஸ்கிருதத்தில் செய்கிறான்.

உன் தாய் மொழி எங்கே போயிற்று? தமிழ் நாட்டில் தமிழ் இல்லையா? தேவாரத்தில் இன்னின்ன மெட்டு என்றே இருக்கிறதே!

300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழன் கோயில் கட்டினான். கண்ணகி இருந்த இடத்தில் ஐவருக்கும் தேவி அழியாத பத்தினியின் சிலையை வைத்தான். கண்ணகி இருந்த இடத்தில் துரோபதையை வைத்து நேர் விரோதமாகச் செய்தான்.

தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் அனைத்தும்தருமத்தின் பெயரால் நாங்கள் ஒன்றுபட்டுவிட்டோம்என்று அரை அணா கார்டு எழுதினால் போதும். நான் வரவில்லை என்று வடநாட்டான் சொல்லி விடுவான். நம்மிடம் அத்தகைய உணர்வு இல்லை.

இப்படிப்பட்ட புண்ணியவான்களுக்குப் பின்னால் நம் ஒற்றுமையை ஏன் காட்டக்கூடாது? சிவஞானம் அவர்களின் கொள்கையைக் கொண்ட இரண்டு கட்சிகள் இருக்கின்றன. அவர்களை இங்கே காணோம். மற்ற ஒரு கட்சி வராது. அதை நினைத்து வருத்தப்படத் தேவை இல்லை.

கட்சிகள் நாட்டு ஒற்றுமையை முன் வைத்து பணியாற்ற வேண்டும். இதற்கு இன்னார் தலைவரா? நாம் இரண்டாம் பட்சமா? என்று நினைத்தால் எங்கே உருப்படுவது? அவர்களுக்கு உங்கள் மூலம் சொல்லிக் கொள்கிறேன்.... ‘நீண்ட நாள் செல்லாது உங்கள் வாலாட்டம்’.
தமிழ்ப் பற்று என்று சொல்லி ஏமாற்றிக் கட்சி நடத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நாம் எல்லோரும் ஒன்று பட்டு விட்டோம் என்று தமிழ்ப்பகைவர்களுக்குக் காட்டினால் போதும். 14மணி நேரத்தில் சரியாகிவிடும்.

நமது .பொ.சி நீண்ட நாள் வாழ வேண்டும் என்று வாழ்த்தியும் அவரது கருத்துக்கு நாம் பேராதரவு தர வேண்டும் என்று சொல்லி என் உரையை முடித்துக் கொள்கிறேன்.

 (7.7.63, செங்கோல், இளந்தமிழன் சூன், சூலை 1990)

No comments: