Wednesday, January 29, 2020

பெரியார் நட்புக்கு உரியார் - கவியோகி சுத்தானந்த பாரதியார்


பெரியார் நட்புக்கு உரியார்
- கவியோகி சுத்தானந்த பாரதியார்

காந்தி சத்தியமே உயர்வு என்றார். நாயக்கர் தன்மானமே உயர்வு என்கிறார். அச்சிலும், மேடையலும் அவர் போடும் வெங்காய வெடிகளை வேண்டுமட்டும் கண்டு கேட்டிருக்கிறேன். நாயக்கருக்கு என் மேல் நல்ல மதிப்புண்டு. எனது சமரசப்பான்மை அவருக்குத் தெரியும்.  அவர் நடத்தும் ராமாயணக் காலட்சேபத் தைக் கேட்டிருக்கிறேன். நாயக்கர் மூளை அலாதி.... 

எழுத்தும் சொல்லும் அவருக்கே உரியன. நாயக்கர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். பெற்றோர் வேங்கடப்ப நாயக்கரும் சின்னத்தாயாரம் மாளும் கதவில்லாத குடிலில் கஷ்ட ஜீவனம் செய்தனர். கூலி வேலை, கல் உடைத்தல், தட்டுக்கூடை, செங்கல் வண்டி, துவரை உடைத்தல், ஆமணக்கு எண்ணெய் வடித்தல், அரிசி தீட்டல் முதலிய வேலைகளைச் செய்து, மண்டிக்கடை வைத்து படிப்படி யாகப் பணக்காரரானார் பெற்றோர். மூன்று குழந்தைகள் இறந்தன. பிறகு தவயாத்திரை, தான தர்மம் செய்து, அடியார்க்கு அமுதிட்டு, அந்த புண்ணிய பலனால் இரண்டு புதல்வர் பிறந்தனர். ஒருவர் .வே.கிருஷ்ணசாமி மற்றவர் நமது .வே.ராமசாமி. .வே.கி. நல்ல பக்தர்.

.வே.ரா. முதலில் ஒரு விதவைக்குத் தத்துப்போய் பிறகு தாயிடம் வந்து மிகவும் செல்லமாக வளர்ந்தார். ஊர் சுற்றுவது, சண்டை போடுவது, பள்ளிக் கூடத்தில் அடிதடி, தண்டக் காப்பி எழுதுவது. படிப்பிலே படிப்பில்லை. அஞ்சா நெஞ்சுரம். ஒருதரம் காசிக்கு போய் சாமியாராகக் கூட முயன்றார். அப்பா அவரைப் பிடித்துக் கடையில் போட்டார்.

முகம்மதலி, சௌகத்தலி, ராஜாஜியுடன் காந்தி, அந்தப்பக்கம் வந்து சத்தியாகிரகச் சங்கு முழுங்கினார். நாயக்கருக்குப் புதுவிழிப்பு வந்தது. காந்தீயத்தைப் பரப்பிய தலைவருள் நாயக்கர் ஒருவர். அவர் குரல் பொதுமக்கள் உள்ளத்தில் பாய்ந்தது. கதர் அணிந்து, கதர் போர்த்து நாயக்கர் காந்தீயம் பேசினார்.

காஞ்சி மகாநாட்டிற்கு பிறகு அவர் தனியாக சுயமரியாதைக் கட்சியைக் கிளப்பி, மக்கள் மன்றத்தில் தன்மான உணர்ச்சியைத்  து£ண்டினார். சமூக அடிமைத்தனத்தை வேரோடு சாய்த்தார். சோவியத் ரஷ்யாவுக்குச் சென்று வந்த பிறகு சாதிமத ஒழிப்பில் தீவிரப்பட்டார். பிள்ளையாரை உடைத்தார். நாட்டில் கணபதி வழிபாடும் சதுர்த்தித் தேங்காய்களும் வலுத்தன. இராமயணத்தை எரித்தார். இராமாயண முழக்கம் தெருவெல்லாம் எழுந்தது. அழிவுத்திறன், ஆக்கத் திறனைத் தூண்டியது.

ஒரு தரம் நான் சேலத்தில் பேசிவிட்டு ஈரோடு சேர்ந்தேன். முன்னே புகைவண்டி நிலையத்தருகே அவர் வசித்தார். அந்த வீட்டுக்கு வந்தேன். அங்கே கிருஷ்ணசாமி நாயக்கர் பட்டை நாமம் போட்டுக்கொண்டு கம்பராமாயணம் பார்த்துக்கொண்டிருந்தார். என்னை வரவேற்று அமர்த்தி கம்பனில் பத்துப்பட்டுப் படிக்கச் சொல்லிப் பால் அருந்தச் செய்தார். நான்இராமநாமி நாயக்கரைக் காண வேண்டும்என்றேன். ‘சை! அவன் பாமரன். நாத்திகன். இராமாயண விரோதி, பிராமண விரோதிஎன்று அஷ்டோத்திரம் நடத்தினார். அவர் பிறந்து வளர்ந்த கதையெல்லாம் உள்ளம் குமுற உலுப்பித் தீர்த்தார். பிறகு ஒரு மாட்டு வண்டியில் என்னை நமது நாயக்கர் வீட்டுக்கு அனுப்பினார்.

நாயக்கர் என்னை அன்புடன் வரவேற்று மனைவிக்கு அறிமுகப் படுத்தினார். நான் நன்றாகக் குளித்து அநுஷ்டானம் முடித்து சூரிய நமஸ்காரம் செய்தேன். நாயக்கர் கண் கொட்டாமல் பார்த்தார். அதற்குள் அம்மாள் கூடத்தில் கோலம் போட்டு, ஊதுவத்தி கொளுத்தி விளக்கேற்றி வைத்துத் தட்டில் கனிகள் வைத்து விட்டாள். நாயக்கர்சேயண்டி பூஜைஎன்றார். நான் ஜபமும், தியானமும் செய்து கற்பூரம் ஏற்றி அந்தச் சுடரையே பார்த்து தியானம் செய்தேன். ‘நமது மனமே சூடம். அதில் ஆத்மக் கனல் பற்றினால் அந்தக் கனலில் மனம் கரைந்து போகும். மனதில் உள்ள மாசெல்லாம் புகைந்து போகும்என்றேன். `பாகு காகு சரியண்டி’ (நல்லது சரி சரி) என்றார். பிறகு சூடம் ஏற்றி, வேத மந்திரம் சொல்லி, அம்மாளிடம் காட்டினேன். அவள் கண்ணில் ஒற்றிக் கொண்டாள். நாயக்கர் கையை அழுத்தி வைத்துக் சூடத்தை அணைத்து விட்டார். அம்மாள் மறுபடியும் அதை ஏற்றி நாயக்கரை ஏற்கச் சொன்னார்.

நான்... `நாயக்கரே தங்கள் மனம் தங்கம். அதோ சூரியன் தினம் உதிக்கிறதே, அதனால் தான் உலகம் வாழுகிறதே... நம்புகிறீரா-’ என்று கேட்டேன். `அது இயற்கை நம்புகிறேன்என்றார் அவர். வானத்திலிருந்து மழை பொழிகிறது, பயிர் விளைகிறது. உயிர் பிழைக்கிறது... இதெல்லாம் வழங்கும் ஒரு சுத்த சக்தி உள்ளது. அந்த சக்தியாலேதான் நாம் உயிர்க்கிறோம். நடக்கிறோம். நினைக் கிறோம். அதுவே மனிதனுள் மனிதன் என்றேன். அம்மாள் `இன்னும் சொல்லுங்கள் நன்றாக. சுவாமி ஹேளுதாரே கொத்துதியாஎன்றாள். நாயக்கர் மறுக்காமல் `மீரு போஞ்சேயண்டிநீர் சாப்பிடும் என்றார். நான் கமலாப்பழச் சிறு சிறு துண்டுகளாக்கிப் போட்டு நிலக்கடலை சேர்த்து சிறிது தேன் விட்டு, அதில் இரண்டு அவுன்ஸ் பால் சேர்த்து ஸ்பூன் ஸ்பூனாக உண்டேன். ஏப்பம் வந்ததும் நிறுத்தி வெந்நீர் குடித்து சிறிது துளசியை வாயில் போட்டுக் கொண்டேன்.

நாயக்கர் காந்தியிடம் அன்பு வைத்தார். சாதி இறுமாப்பையும் கடவுள் பெயரால் நடக்கும் போலி நாடகங்களையும் கண்டித்தார். அரசியல் நாடகத்தில் புகுந்த கூனி வேலைகளையும் கோமாளிக் கூத்துக்களையும் கண்டித்தார். மணி நான்கு, நாயக்கர் ஒற்றை மாட்டு வண்டியில் என்னை ஏற்றித் தாமும் கூட வந்தார்.

`இன்பமே சூழ்க! எல்லோரும் வாழ்க!’ என்றதும் எஞ்சினும் ஓலமிட்டுக் குபுகுபுத்து முன் சென்றது. நாயக்கரும் `சால சந்தோச மண்டி’ (ரொம்ப சந்தோசம்) என்று விடை பெற்றார்.

இரண்டாண்டுகளுக்கு முன் பெரியார் திடலில் ஒரு கூட்டத்துக்குச் சென்றேன். அப்படியேவிடுதலைஅலுவலகத்தில் புகுந்தேன். அன்பர் வரவேற்றனர், ‘விடுதலைமலர் அச்சுப் பொறி யினின்று பொழிந்து கொண்டிருந்தது. என்னிடம் ஒன்று தந்தனர். அதில் தன்மானத் தலையங்கம் படித்தேன். முன்னே பார்த்தேன். ‘கடவுள் இல்லைஎன்று சிவப்பு நிற விளம்பரம் கண்டேன்.

உங்கள் கருத்தென்னஎன்று ஒருவர் கேட்டார். இது வேதாந்தம். நாயக்கர் சரியான வேதாந்தி. வேதாந்தத்தில் த்ரிபுடி சூன்யம் முப்பாழும் பாழாய் முடிவில் சூன்யம் என்பதுண்டு. நான் ! என்பதே உள்ளது, இதய குகையில் அது அஹம் அஹம் என்று ஆடுகிறது. கட- உள்.. உள்ளே இரு. மனத்தைக் கடந்து உள்ளே புகுஇல்-வீடு, இதுவே கடவுள் வீடு. அங்கேவடிவாகக் கடவுள் இருக்கிறார். ‘கட-உள்-இல்-என்று விளக்கினேன். ஒருவர் திகைத்தார். மற்றவர் சிரித்தார். நாயக்கர் மனிதத் தன்மை உள்ளவர். சொல்லும் மனமும் ஒன்றானவர். அவர் மறைமுக ஆஸ்திகரே. (சோதனையும் சாதனையும் நூலிருந்து).

(இளந்தமிழன் சூன்,சூலை 1990 இதழ் 11,12)

No comments: