Wednesday, January 29, 2020

நான் காணாத பாரதியார் - ப.ராமஸ்வாமி


நான் காணாத பாரதியார் - .ராமஸ்வாமி

(மகாகவி பாரதியாரைப் பற்றிய சில நல்ல குறிப்புகளை 15.9.45- இல் வெளியான இதழொன்றில் எழுதி இருக்கிறார் .ராமஸ்வாமி. ‘எழுதுக!’ என அழகாகத் தமிழில் எழுதிய சிறுவனுக்கு பாரதியார் உள்ளம் பூரித்த நிலையில் காலணா பரிசு அளித்த செய்தி சுவை யானதாகும்- ஆசிரியர்)

பாரதியாரை நான் நேரில் பார்த்ததில்லை. ஆனால் என் தாயா ருக்கு அவரையும் அவர் குடும்பத்தாரையும் நன்றாகத் தெரியும். சிறு வயதில் என் அன்னையின் விவாகத்திற்காக எட்டையபுரத்தில் நிச்சய தாம்பூலம் நடந்தபொழுது பாரதியாரின் தகப்பனார் ஸ்ரீ சின்னசாமி அய்யர் மடியிலேயே தாம் வீற்றிருந்ததாக இன்னும் பெருமையோடு அவர் சொல்லுவது வழக்கம். என் தாயாரின் அம்மானான தமிழ்ப்பண்டிதர் ஸ்ரீ ஸ்ரீநிவாச அய்யங்கார் பாரதி யாரின் நெருங்கிய தோழர்களில் முதன்மையானவர். என் நண்பர் களில் சிலர் பாரதியாரோடு நெருங்கிப் பழகியிருக்கிறார்கள். பாரதியாரோடு பழகியதாகச் சொல்வது கூட இப்பொழுது ஒரு பெருமையாகவே இருக்கிறது. இப்படி நான் அடுக்கிக் கொண்டே போனால் நான் அவரைப் பார்த்ததில்லை என்பதே மேலும் மேலும் உறுதியாகும்.

சிறு வயதில் எட்டையபுரத்தில் நான் இரண்டு வருஷங்கள் தங்கி யிருந்தேன். அப்பொழுது பாரதியார் அங்கில்லை. மேலே குறித்த தமிழ்ப்பண்டிதர் ஸ்ரீ நிவாசய்யங்கார் இருந்தார்

அவருக்கு என்னிடம் பிரியம் அதிகம். அவர் எனக்குப் பாடல்கள் பாடிக் காட்டுவார். தேச விஷயங்கள், அரசியல் விஷயங்கள் பற்றி அவர் நண்பர்களோடு பேசும் பொழுது நானும் கூட இருந்து கேட்பேன். அவர் பேச்சுகளில் பாரதியாரைப் பற்றியும் ஜப்பானைப் பற்றியும் அடிக்கடி பிரஸ்தாபம் வரும். அடிமைச் சேற்றில் அழுந்திவிட்ட நம்நாடு விடுதலை பெறுவதற்குரிய வழியைப் பாரதியாரே அறிவார் என்றும், இயந்திரத் தொழில்களையே அறியாமலிருந்த ஜப்பான் வெகு சீக்கிரத்திலேயே அறியாமலிருந்த ஜப்பான் வெகு சீக்கிரத்திலே சகல தொழில்களையும் கற்றுக்கொண்டு நவ நாகரி கத்தில் மேல்நாடுகளையே தூக்கியடிக்கும் நிலைமைக்கு வந்து விட்டது என்றும் அவர் அடிக்கடி கூறுவார். அவருக்கும் அவர் கூட்டத்தாருக்கும் நாற்பது வருஷங்களுக்கு முன்னால் ஜப்பான் ரஷ்யாவைத் தோற்கடித்ததிலிருந்து ஆசிய நாடுகளும் வல்லமை பெற்று வளர்ந்தோங்க முடியும் என்பதில் அபார நம்பிக்கை பிறந்திருந்தது. பாரதியாரின் தேசாபிமானம், தமிழ்ப் பாண்டி யத்தியம், வீரம் முதலியவை பற்றி முதலில் நான் என் பந்துவான இந்தப் பண்டிதரிடமே கேட்டறிந்தேன்.

ஸ்ரீநிவாசய்யங்கார் சந்நியாசி. அழகான தாடியும் மீசையும் வளர்த்திருந்தார். காஷாய உடையில் அவர் பார்வைக்குக் கம்பீரமா யிருப்பார். பாரதியார் காலமானபிறகு, ‘அவர் அவன் இல்லையே!அவன் போன வழிதான் சரியான வழி. நீங்கள் எல்லோரும் கடைசியில் அவன் வழிக்குத்தான் வந்து சேருவீர்கள்என்று சொல்லுவது வழக்கம். பாரதியாரை அவர்அவன் இவன்என்றுதான் குறிப்பிடுவார். அந்தப் பெரியவர் தம் பாலியத் தோழ ரான பாரதியாரை எண்ணித் தேம்புவது மிகவும் உருக்கமான காட்சியாக இருக்கும்.

அவருடைய குமாரர்கள் இருவர் இருக்கின்றனர். இருவரும் தமிழ்ப் பண்டிதர்கள். இவர்களில் மூத்தவரான ஸ்ரீரங்க அய்யங்கார் சிறுபையனாக இருந்தபோது பாரதியார் அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி செல்வதுண்டு. ஒருநாள் ரங்கன் தன் அம்மானுக்கு எழுதிய கார்டு ஒன்றை எடுத்துக் கொண்டு தபாலில் சேர்ப்பதற்காக வீட்டுக்கு வெளியே ஓடி வந்தான். எதிரே பாரதியார் அவனை வழிமறித்துக் கடிதத்தை வாங்கிப் படித்துப் பார்த்தார். அதன் முடிவில்விரைவில் பதில் எழுதுகஎன்று எழுதியிருந்தது. பாரதி உள்ளம் பூரித்து, கார்டைப் பையனிடம் கொடுத்துவிட்டு, சட்டைப் பையிலிருந்து ஒரு காலணாவை எடுத்து அவனுக்குப் பரிசாக அளித்தார். பையன் எதற்காக வெகுமதி கிடைத்தது என்பதை உணர முடியாமல் திகைத்து விழித்தான். உடனே பாரதியார், ‘ரங்கா! இவ்வளவு சிறு வயதில்எழுதுகஎன்று அழகான முறையில் எழுதியிருக்றாயல்லவா! ‘எழுதுகஎன்பதிலுள்ள -வுக்கு இந்தக் காலணா வெகுமதி. இதற்கு இன்னொரு கார்டு வாங்கிக் கொள்!’ என்று கூறினாராம்.

முதன்முதலாகப் பாரதியார் நூல்களில் நான் படித்ததுபாஞ்சாலி சபதம்’, இருபந்தைந்து வருஷங்களுக்கு முன்னால் தமிழ் அறிஞர் பி.ஸ்ரீ. அவர்களுடன் அந்தக் காவியத்தைப் படிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அப்பொழுது அது முழுதும் அச்சாகவில்லை. கைப்பிரதியாகவே இருந்தது. பி.ஸ்ரீ காவியம் முழுவதையும் பாடல் களுக்கேற்ற சந்தத்தில் பாடிக் காட்டினார்.

ஒமென்றுரைத்தனர் தேவர் ஓம்
ஓமேன்று சொல்லி உறுமிற்று வானம்

என்று கடைசிப் பாட்டு முடியும் வரை ஒரே பிரேமையுடன் நான் காவியத்தைக் கேட்டேன்.

பின்னரும் பலமுறை படித்தேன். பழைய கதையை எவ்வளவு உற்சாகத்துடனும் வெறியுடனும் கவிஞர் நவீன மாக்கி அளித்திருக்கிறார் என்று அளவற்ற ஆச்சரியமடைந்தேன். பாரதியார் பாடியிருப்பது பாஞ்சாலியைப் பற்றியா பாரத தேவியைப் பற்றியா என்று பிரித்துசொல்ல முடியாதபடி காவியம் அமைந்திருக்கிறது. இதைப் பார்க்கும்பொழுது அடிமைப்பட்டு அண்மையிழந்து பரிதவிக்கும் ஒரு சமூகத்தார முதலில் தம் மிடையே ஒரு கவிஞன் பிறக்க வேண்டும் என்று தவம் செய்தாலே போதும் என்று தோன்றுகிறது. கவிஞன் வந்தால்¢ சுதந்திரமும் மற்றச் சிறப்புகளும் தாமாகவே தொடர்ந்து வந்துவிடும் என்று நம்பிக்கை கொள்ளலாம்.

பாரதியாரோடு பழகியவர்களில் ஸ்ரீ..ராமகாகவி பாரதியார்என்ற அற்புதமான ஒரு நூலின் மூலம் அவரை நமக்கும் நம் சந்ததி யாருக்கும் அறிமுகப்படுத்தியிருக்கிறார். பாரதியாரைப் பற்றிய நூல்களில் இதுவே தலைசிறந்து விளங்குகின்றது. கவிஞருடைய மனைவியாரும் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அதில் நம் மகா கவியின் வாழ்க்கை விசித்திரங்கள் பல குறிக்கப்பட்டிருக்கின்றன. வேறு ஆசிரியர்கள் மூலம் தெரிந்து கொள்ள முடியாத பல விஷயங் கள் அதில் நிறைந்திருக்கின்றன. மற்றும் பல அறிஞர்கள் தாம் பாரதியாரைப் பற்றி அறிந்த விஷயங்களையும் அவருடைய கவிதைப் பண்புகளையும் பத்திரிகைகளில் கட்டுரைகளாக எழுதி வருகிறார்கள். இக்கட்டுரைகளில் சிறந்தவற்றைப் பொறுக்கி நூல்களாக அச்சிட்டு வெளியிடுதல் பாரதியாருக்குச் செய்யும் சிறந்த தொண்டாகும்.

பஞ்ச வியாசங்கள்என்ற பெயருடன் பாரதியார் மொழி பெயர்த்த நூலொன்றை நான் இளமையில் படித்திருக்கிறேன். நூலின் மூல ஆசிரியர் மகாகவி ரவீந்தரநாத தாகூர். இந்தியக் கல்வி முறையிலுள்ள தீமைகளை எடுத்துக்காட்டி, உண்மையான தேசீயக் கல்வி எப்படியிருக்க வேண்டும் என்பதை இந்நூல் விவரிக்கிறது. பாரதியார் நூல்களை வெளியிட்டுவரும் பாரதி பிரசுராலயத்தார் இந்நூலையும் பதிப்பித்து வெளியிடுதல் நலம்.
பாரதியாரின் நூல்கள் நம் செல்வக் களஞ்சியங்கள். வேண்டும் பொழுதெல்லாம் நாம் அவைகளிலிருந்து அள்ளி அள்ளி எடுத்துக் கொள்ளலாம். இந்தியா அடிமைப்பட்டிருப்பதாலும் அடிமைத் தனத்தில் நல்லது எதுவும் வளராமல் முளையிலேயே கருகிவிடும் என்பதாலுமே பாரதியார் முதலாவது விடுதலை வேண்டும் என்று சங்கநாதம் செய்தார். ஆனால் அவருடைய கவிதைகளில் பெரும் பாலானவை உலகத்திற்கும் பொதுவானவை. பெரிய கவிஞர் களுடைய பாடல்களில் தலைசிறந்தவை தேசிய எல்லைக்கு மேற் ட்டு உலகப் பொதுவாகவே இருக்கும் என்று அமெரிக்க கவிஞர் லாங் பெல்லோ கூறியதை நாம் இங்க நினைவில் வைத்துக் கொள்வது நலம்.

பாரதியார் பாரத தேவியைப் பற்றிப் பாடியிருக்கிறார். கண்ணன், கணபதி, முருகன், பராசக்தி முதலிய தெய்வங்களைப் பற்றிப் பாடியிருக்கிறார். தேசத்தின்  மாபெரும் தலைவர்களைப் பற்றிப் பாடியிருக்கிறார். கவிதையின் மூலம் இவர்களை நித்தியமானவர்களாக ஆக்கிவிட வேண்டும் என்று பற்பல கீதங்களைக் கொட்டியிருக்கிறார். இப்படிக் கவிதை மழை பொழிந்து தாமே சாகாவரம் பெற்ற கவிஞராக ஆகி விட்டார்.

இத்தகைய சிரஞ்சீவிக் கவிஞரையும் இவரால்இலகு பெரும் குணம் யாவைக்கும் எல்லையா¢திலக முனிஎன்று பாடப்பெற்று லோகமான்ய திலகைரயும் நேரில் தரிசிக்காதது என்றும் என் மனக் குறையாகவே இருந்து வருகிறது. (இளந்தமிழன் சனவரி 1990)

No comments: