அவினாசிலிங்கம் பல்கலைக் கழக நிகழ்ச்சி
தமிழ்ப் பயிற்சி மொழி
மாணவியர் வினாக்களும் ம.பொ.சி.யின் விடைகளும்
(நவம்பர்
6,7 ஆம் தேதியன்று கோவை அவினாசிலிங்கம் மனை யியற் பல்கலைக் கழகத்தில் நேருஜியின் நூற்றாண்டு விழா நடை பெற்றது. அதிலே இரண்டாம் நாள் காலை நிகழ்ச்சியிலே மத்திய அரசின் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.சுப்பிரமணியம் அவர் களும் தமிழக சட்டமன்ற மேலவை முன்னாள் தலைவர் சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ராசம்மாள் தேவதாஸ் தலைமை வகித்தார். மத்திய முன்னாள் இணையமைச்சரும் தற்கால அனைத்திந்திய வரலாற்று ஆராய்ச்சிக் குழுவின் தலைவியுமான திருமதி லட்சுமி மேனன் அவர்களும் பார்வையாளராக இருந்தார். கருத்தரங்கமாதலால் மாணவியர் பேச்சாளர்களிடம் விளக்கம் பெறக்கூடிய வகையில் வினாக்கள் எழுப்ப அனுமதிக்கப்பட்டனர்.
சி.எஸ். அவர்கள் தமது சிறப்புரையைத தமிழில்தான் ஆற்றினா ரென்றாலும் அவரிடம் மட்டும் மாணவியர் ஆங்கிலத்திலே வினாக்கள் விடுத்தனர். அவரும் ஆங்கிலத்திலே தக்கவாறு விடைகள் அளித்தார். இது பதினைந்து நிமிட நேரம்
நடைபெற்ற பின்னர், ம.பொ.சி.யிடம் மாணவியர் தமிழில் வினாக்கள் விடுத்தனர். அவர் பதிலளிக்கத் தொடங்கியதுமே,
‘இதுவரை வினாவிடை நிகழ்ச்சி ஆங்கிலத்திலே நடைபெற்றதால் நான் இங்கிலாந்திலிருப்பது போன்ற உணர்ச்சியில் என்னை மறந்திருந்தேன். ஆனால் மாணவியர் எனக்குத் தமிழில் வினாக்கள் விடத் தொடங்கிய பின்னர் நான் தமிழகத்தில் தான் இருக்கிறேன் என்பதை உணர்ந்தேன்.
தமிழில் வினா எழுப்பிய மாணவியருக்கு நன்றி’ என்று கூறினார்.
மாணவியர் எழுப்பிய வினாக்களும் அவற்றிற்கு சிலம்புச் செல்வர் அளித்த விடைகளும் தரப்படுகிறது- ஆசிரியர்)
வினா: அண்மைக்காலத்தில் தமிழர் சமுதாயத்தில் தமிழருக் கேவுரிய பண்பாடுகள் குறைந்து வருவதாகச் சொல்லப்படுகிறதே அதற்குக் காரணம் என்ன?
விடை: தாங்கள் சொல்வதற்கு மாறாக பண்பாடு வளர்ந்து வருகிறது என்று சொல்வோருமுண்டு. இரண்டிலுமே ஓரளவு உண்மை உண்டு. நாடு அடிமைப்பட்டிருந்த காலத்தில் அன்னிய மொழியான ஆங்கிலமே தமிழர் வாழ்வில் எங்கும் தலை தூக்கி நின்றதால் தமிழர் தங்களுக்கே உரிய பண்பாட்டின் படி வாழ வில்லை. வாழ முடியவில்லை.
நாடு சுதந்திரம் பெற்ற பின்னும் அன்னியரான ஆங்கிலேயர் நம் மீது திணித்த ஆங்கில மொழியும் ஆங்கிலக் கல்வி முறையும் தான் ஆதிக்கம் செலுத்துகிறது. ஏதோ இங்கும் அங்குமாக சில மாறுதல் செய்யப்பட்டனவென்றாலும் வடிவம்
அப்படியேதான் இருக்கிறது. தமிழர் வாழ்விலே அவர்களுக்கேவுரிய பண்பாடு ஒளிவிட வேண்டுமானால் ஆட்சியிலே தமிழ். கல்வியிலே போதனா மொழி தமிழ், நீதிமன்றங்களிலே நிர்வாக மொழி தமிழ் என்று ஆக வேண்டும். அதனாற்தான் தமிழர் வாழ்வில் எங்கும் எதிலும் தமிழ் மொழியே முதன் மை பெற வேண்டும் என்கிறேன்.
கேள்வி: மாணவ-மாணவியர்களே தமிழ் மொழியையோ தமிழ் மொழியின் வழியே பிற பாடங்களையோ படிக்க விரும்ப வில்லையே. அதற்குக் காரணமென்ன?
பதில்: ‘படிப்பு’ என்றாலே உத்தியோகத்திற்குத்தான் என்ற புத்தி நம்மவரிடையில் தடிப்பேறிவிட்டது. ஆட்சியிலே மேற்படிப்பிலே சமுதாய வாழ்க்கையிலே ஆங்கிலமே ஆதிக்கம் செலுத்தி வருவ தால் அந்த மொழியைப் படித்தால்தான் வாழலாம் என்று பெற்றோரும் -
மாணவியரும் கருதுகிறார்கள்.
அந்த எண்ணம் தமிழர் சமுதாயத்திலிருந்து அகல வேண்டு மானால் ஆங்கில ஆதிக்கத்தை அகற்றுவதற்கு ஒரு காலக்கெடு நிர்ணயிக்கவேண்டும். அதற்கப்புறம் பள்ளிகளில் ஒரு மொழிப் பாடமாகவன்றி போதனாமொழியாக நீடிக்காது. அதன்பின் அலுவலகங்களிலே ஆட்சி மொழியாகவோ நீதிமன்றங்களிலே நிர்வாக மொழியாகவோ நீடிக்காது-என்று சட்டஞ்செய்து பிரகடனப்படுத்த மாநில அரசும் மத்திய அரசும் முன் வர வேண்டும்.
கேள்வி: மாணவர்கள் ஆங்கிலத்திற்கு அடுத்த இரண்டாவது மொழியாக தமிழை எடுக்காமல் ஜெர்மன் அல்லது பிரஞ்சு மொழி களை எடுத்து படிக்கிறார்களே அது ஏன்? அதைத் தடுத்து நிறுத்த வழி என்ன?
பதில்: எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 படிப்புகளிலே அதிகமான தேர்வு எண்களை பெற்ற மாணவ- மாணவியர் சிலர் ஆண்டு தோறும் தொலைக்காட்சியில் பேட்டியளிக்கிறார்கள்.
அப்போது, நீ இவ்வளவு அதிகமாக தேர்வு எண்களை பெற்று முதலிலேயே தேறினாயே, அது எப்படி முடிந்தது? என்றுகேட்கும் கேள்விக்கு மாணவ- மாணவியர் தரும் பதில், நான் தமிழைக் கைவிட்டு ஜெர்மன் மொழியை எடுத்துப்படித்தேன் என்பதுதான். ஏனென்றால் பிரஞ்சு-ஜெர்மன் மொழிகளைக் கற்றுத் தரும் ஆசிரியர்கள்
100க்கு 100 தேர்வு எண் தருகிறார்களாம். ஏனென்றால் அந்த அயல் மொழி ஆசிரியர்கள் தங்கள் தொழிலைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பொய் மார்க் போடுகிறார்கள். உண்மையில் தமிழ் மாணவர்கள் ஜெர்மன் மொழியிலோ பிரெஞ்சு மொழியிலோ துளியளவும் அறிவு பெறுவதில்லை. அந்த மொழி வகுப்புகளில் மாணவர்கள் உட்கார்ந்து எழுந்து வந்து விட்டாலே
100க்கு 100 தேர்வு எண் கிடைத்து வருகிறது. தமிழ் போதிக்கும் ஆசிரியர்கள் தேர்வு எண் போடுவதிலே கருமித்தனம் காட்டுகிறார்கள் என்பதும் உண்மைதான்.
கொடுமையென்னவென்றால் தமிழை விட்டு பிரெஞ்சு மொழியை அல்லது ஜெர்மன் மொழியை எடுத்துப் படித்ததற்காக அதிக எண் பெற்று மாகாணத்திலே முதலில் வரும் மாணவருக்கு தமிழக அரசே பரிசு கொடுக்கிறது. தமிழ் நாளேடுகள் கூட பரிசு தருகின்றன. பரிசு தருவது எதற்காக? தமிழை விட்டுவிட்டு ஜெர்மன் மொழியைப் படித்ததற்காகத்தான். இதை ஆட்சேபித்துக்குரல் கொடுக்க அரசியல்கட்சி எதுவும் முன் வருவதில்லை. நான் ஒருவன் தான் எதிர்த்துப் பிரசாரம் செய்து வருகிறேன். அது பத்திரிகைகளில் வருவதில்லை.
கேள்வி: தமிழ் நாட்டில் நகரங்களில் ஆங்கிலக் கான்வென்டு பள்ளிகள் பெருகி வருகின்றனவே. அதைத் தடுப்பது எப்படி?
இடையில் துணைவேந்தர் டாக்டர் ராசம்மாள் தேவதாஸ் குறுக்கிட்டு கிராமங்களில் கூடப் பரவி வருகின்றன என்றார்.
ம.பொ.சி: நீங்கள் கேட்பது உண்மை தெருத்தெருவாகவும் கான்வெண்டுகள் பெருகி வருகின்றன. தமிழக அரசே அதற்கு அங்கீகாரம் தருகிறது.
ஆங்கில கான்வென்டு பள்ளிகளில் ஆங்கிலம் தெரிந்த பெற்றோர் களின் குழந்தைகள்தான் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். அவர்கள் தங்கள் குழந்தைகளிடம் தமிழில் பேசக் கூடாதென்றும் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்றும் பெற்றோருக்கு உத்தரவு போடுகின்றனர், கான்வென்டுப் பள்ளியின் நிர்வாகிகள்.
(இடையில் சி.எஸ். குறுக்கிட்டு ஆரம்பப்பள்ளிகளில் ஆங்கிலத்தை ஒரு பாட மொழியாகக் கூட வைக்கக்கூடாதென்று அரசு ஆணையிட்டு தடை செய்து விட்டால் ஆங்கில மோகம் குறையும். அதுதானே கல்வியின் அடித்தளம்.)
ம.பொ.சி: என் பெருமதிப்புக்குரிய திரு. சுப்பிரமணியம் சொன்னதையே வினா எழுப்பிய மாணவிகள் எனது விடையாகவும் கருதலாம்.
பொதுவாக கருத்தரங்கை முடித்து வைத்து சிலம்புச் செல்வர் பேசியது வருமாறு:
துணைவேந்தரும் மாணவியரும் பேராசிரியைகளும் எங்கும் எதிலும் தமிழ் என்னும் எனது கொள்கைக்கு ஆதரவு காட்டியது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.
மாணவியர்களே! நீங்கள்தான் வருங்காலத்தில் ஆங்கில ஆதிக்கத்தை அகற்றி தமிழ் மொழிக்கு வாழ்வளிக்க வேண்டும். நம்முடைய முன்னோர் தமிழை நமது தாய்மொழி என்றுதான் அழைத்தார்கள். தந்தை மொழி என்று சொல்லவில்லை.
ஆகவே, தாய்க்குலத்தினராகிய நீங்கள் தான்-உங்கள் தலைமுறை யினர்தான் தமிழை தமிழகத்தின் ஆட்சிமொழியாக நீதி மன்றங் களில் நிர்வாக மொழியாகக் கொண்டுவர முயற்சி எடுக்க வேண்டும். நீங்கள் முயன்றால் வெற்றி கிடைக்கும். நாட்டில் ஆங்கிலேயர் ஆண்ட காலத்தை விடவும் அதிக அளவில் ஆங்கில மொழி மீது மக்களுக்கு மோகம் இருக்கிறது. அதை எதிர்த்து என்னால் இயன்ற வரை பிரசாரம் செய்து வருகிறேன். ஆனால் சில நேரங்களில் எனக்கே தோல்வி மனப்பான்மை ஏற்படுகிறது. நம் காலத்திலேயே தமிழ் மொழிக்கு வாழ்வுதேட முடியாதோ? என்று அஞ்சுகிறேன்.
என் பெருமதிப்புக்குரிய நண்பர் திரு.சி.சுப்பிரமணியம் சொன்னது போல் ஆரம்பப்பள்ளிகளிலே 1 முதல் 5 வகுப்பு வரை ஆங்கில மொழி ஒரு பாடமாக இருக்கக் கூடாது. அதற்கு அரசு தடை விதிக்க வேண்டும். கான்வென்டு பள்ளிகளை அரசாங்கமே ஏற்றுக் கொண்டாலும் நான் மகிழ்ச்சியடைவேன். உங்கள் மத்தியில் இன்று இருந்த சிறிது நேரத்தை என் வாழ்க்கையில் சிறந்த நேரமாக நான் கருதுகிறேன்.
(இளந்தமிழன் நவம்பர், டிசம்பர் 89)
No comments:
Post a Comment