சென்ற மாதம் சென்னையில் நடந்த தமிழ் இசை மாநாட்டை எடுத்துக்கொள்ளுங்கள். 10 நாட்கள் ஒரு பெரிய திருநாள் போல் நடந்தது. பல பதினாயிரம் %பாய் செலவு செய்யப்பட்டுப் பல ஆயிரக் கணக்கான மக்கள் தினம் 4,5 மணி நேரம் செலவழித்து வந்து அமர்ந்து இருந்துவிட்டுப் போனார்கள். வள்ளல் அண்ணாமலையார் உணர்ச்சி யும் ஊக்கமும், ஆழ்ந்த சிந்தனையும் அவர்களது பந்தமித்திரக்குழாங் களும், ஆர்.கே. சண்முகம் அவர்களது அறிவுரைகளும், ஆற்றல்களும் எல்லையின்றி பயன்படுத்தப்பட்டன. எதிரிகளுக்கு ஆணித்தரமான விடை அளித்து அவர்களது வாய்க்கு ஆவி கூட வெளிப்பட முடியாத வாறு ஆப்புகள் சம்மட்டியால் அறையப்பட்டன. வெற்றிக்கொடி ஆகாயத்தை அளாவிப்பறந்தது. சென்னை நகர் முழுவதுக்கும் ஒரு புத்துணர்ச்சி கிளம்பியது. சரி இவை பாராட்டத்தக்கன.
ஆனால் விளைந்த பயன் என்ன? ஏற்பட்ட படிப்பினை என்ன? இம் மாநாடு பண்டிதர்களை தமிழில் பஜனைப் பாட்டுகளைத் தொடுக்க வைத்தது. இசைவாணர்களை (பாட்டுத் தொழில்காரர்களை) வீட்டில் தனிமையில் உட்கார்ந்து, இப்பஜனைப் பாட்டுக்களைப் பாடிப்பாடி பழக்கம் செய்து கொள்ளச் செய்தது. இந்தப்படியான தமிழ் பஜனைப் பாட்டுப்பாடத் தெரிந்தவனையே இசை விருந்துக்கு அழைக்க வேண்டும் என்கின்ற உணர்ச்சியை நமது செல்வான்கள் பலருக்கு ஊட்டியது. இசை நுகரச் செல்லும் மக்கள் பலருக்கும் (இந்த இசைவாணர்) தமிழில் இசை இசைக்கிறாரா அல்லது வேறு மொழியில் இசைக்கிறாரா, வேறு மொழி யில் இசைத்தால் கலவரம் செய்யலாமா என்கின்ற சிந்தனையை சிலருக்கு ஊட்டியது, ஆகிய இவை ஏற்பட்டன. சரி என்று வைத்துக் கொள்ளலாம்.
இவற்றால் சகல உயர்வும் தகுதியும் இருந்து ஒரு சிறு கீழ் மக்கள் குழுவால் இழி மக்களாய்க் கருதப்பட்டு, சுரண்டப்பட்டு, மானமற்று நடைப்பிணங்களாய்க் கிடக்கும் தமிழ் மக்களுக்கு இந்த நிலைமாற, ஏதாவது ஒரு ஊசி முனை அளவு இவற்றால் பயன் ஏற்பட்டதா என்று வணக்கத்தோடு கேட்கிறேன். நலம் பெறுவதற்கு வழி சிறிதும் இல்லா விட்டாலும் கேட்டிற்காவது சரிவு வழி ஏற்படாமல் போயிற்றா என்று கேட்கிறேன். என் மீது ஒரு சிலர் முறிவு கொள்ளலாம். ஆத்திரப்பட்டு வஞ்சினம் கூடக் கூறலாம். அதை நடத்துவிக்கவும் முனையலாம். இவற்றால் பொது நலம் என்ன ஏற்படக் கூடும்? தனிதான் என்ன ஏற்படக் கூடும்? இப்பெரியார்களிடத்தில் இந்த விண்ணப்பம் கொடுக்க எனக்கு உரிமை இல்லையா? சர் சண்முகம் அவர்கள் ஒரு பெரிய பொருளாதார நிபுணர். இவ்விஷயத்தில் அரசர்களும் மதிக்கத்தகுந்தவர். எதிரிகளும் கண்டஞ்சத் தகுந்தவர். வண்ணல் அண்ணாமலையார் பொருளாதார நிபுணத்துவத்தையே உருவாய்க் கொண்டவர். இவ்விருவரின் பொருளா தார நிபுணத்துவம் இந்தத் தமிழ் இசை மாநாட்டில் தமிழ் இசைக் கிளர்ச்சியில் எப்படிப் பயன்படுகிறது என்று பாருங்கள்.
தமிழிசைக் கிளர்ச்சிக்காக இவர்கள் செலவழித்த பொருளும் மற்ற தமிழ் மக்கள் செலவழித்த பொருளும் தமிழ்நாட்டுப் பொருளல்லவா, தமிழர்களுடைய பொருளல்லவா? நிலை குலைந்து தரித்திரர்களாய், வயிற்றுப் பசிக்கு எச்சக்கலையைத் தேடித்திரியும் இனமக்களாய்க் கருதப் படும் தமிழ் உயிர்களுடைய செல்வமல்லவா? இதற்குச் செவழித்த உணர்ச்சியும், ஊக்கமும் ஆற்றலும் காலமும் கூட இவர்களுடையது அல்லவா என்று கேட்பதற்கு மன்னிக்க வேண்டுகிறேன். இவ்வளவு பொருளும் ஆற்றலும் மதியும் மற்றதும் செலவழித்தற்கு நாம் கண்ட பயன் என்ன? நண்பர்களே சிந்தித்துப் பாருங்கள்.
நாட்டிலுள்ள நல்ல, உயர்தர இசைவாணர்களுக்குப் பொருள் தந்து வரவழைத்து ஒரு காலை தூக்கி ஆடிக்கொண்டிருக்கும் நடராஜ உருவத்தின் முன் தீபதூப நைவேத்தியத்துடன் உட்கார வைத்து பல ஆயிரக்கணக்கான மக்களை வர வழைத்துப் பஜனைப் பாட்டுக்கள் பாடச் செய்வதும் அதன் மூலம் மக்களுக்கு பக்தி புகட்டுவதும்தானா? இந்தப் பக்திக்கு ஆக ஏற்கனவே நம் நாட்டில் இருந்து வரும் சாதனங் களும் முயற்சிகளும் செவுகளும் மற்றவையும் போறாதா? இது யார் செய்ய வேண்டிய காரியம்? எதற்காக இவர்களும் இந்தக் காரியம் செய்ய வேண்டும்? இதனால் ஏற்படும் பலன் யாருக்கு நலனைத் தரும்? நிலைகுலைந்து இழிவடைந்து தரித்திரர்களாய், மடையர்களாய், கீழ்மக்களாய் சுரண்டப்பட்டவர்களாய் வாடும் மக்களுக்கு இவை என்ன பலனைத்தரும்? அவர்கள் குறையைப் போக்கிக் கொள்ள ஏதாவது உணர்ச்சி ஏற்படுமா? அல்லது முயற்சியைத் தடுக்குமா? மறுமுறையும் சிந்தித்துப் பாருங்கள். இதில் பொருளாதார அறிவு இருக்கிறதா? சீர்திருத்த அறிவு இருக்கிறதா என்று.
பஜனைப் பாட்டுகள் தமிழில் இருந்தால் என்ன, தெலுங்கில் இருந்தால் என்ன, இந்தியில் இருந்தால் என்ன அல்லது ஜப்பான் ஜெர்மனி மொழியில் இருந்தால் தான் என்ன? கடவுளுக்கு எந்த மொழி தெரியாது? ஆகவே நாட்டினுடைய செல்வம், அறிவு ஊக்கம் உணர்ச்சி இந்தப் பஜனைக்காகவா இப்படி செலவழிக்கப்பட வேண்டும்? இதைக்காணும் அயலான் எவனாவது இந்த நாட்டு மக்களுக்குத் தன்மான உணர்ச்சியோ, இழிவையும் கீழ்மையையும் கண்டு உடல் துடிக்கும் சொரணையோ இருக்கிறது என்று கருத முடியுமா? நாட்டு மக்களுக்கு இதில் பிரவேசித்து இந்தத் தன்மானத்துக்குக் கேடு செய்யும் தன்மை யைப் பற்றி சிந்திக்கவோ விளக்கவோ தடுக்கவோ உரிமை இல்லையா என்று கேட்கிறேன். தமிழிசைக்கிளர்ச்சிக்குச் செலவாகும் பணத்தையும் நேரத்தையும் ஊக்கத்தையும் பார்த்தால் அதன் பயன் இந்த பஜனையில் முடிவதானால் மானமும் அறிவும் உள்ள எவனுக்குத்தான் வயிறு எரியாது என்று கேட்கிறேன்.
(ஏடு/14)
No comments:
Post a Comment