Wednesday, January 29, 2020

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழிசை மாநாடு (1941)


அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்
 தமிழிசை மாநாடு (1941)

டிசம்பர் மாதத்தில் வைர விழாக் கொண்டாட இருக்கும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழகத்தில் கல்வித்துறையில் பல சாதனைகளைச் செய்துள்ளது.

ஆட்சித் துறையிலே ஆங்கிலம்; ஆலயத்திலே சமஸ்கிருதம் இசையிலே தெலுங்கு என பேராதிக்கம் குடிகொண்டிருந்த காலம் அது!

தமிழிலே இசை பாடினால் மேடை தீட்டாய் விடும் என்று அஞ்சிய சங்கீத வித்வான்களும் அக்காலத்தில் இருந்தனர்.

இச்சூழ்நிலையில் அண்ணாமலை அரசர் தமிழை வளர்ப் பதற்குக் கங்கணம் கட்டிக் கொண்டு தமிழில் இயல் துறைக்கென ஒரு துறையை உருவாக்கியது போன்று இசைத்துறைக்கென ஒரு துறையை உருவாக்கித் துணிவுடன் செயல்பட்டார்.

தமிழிசைக்கென ஒரு இயக்கம் தொடங்கினால்தான் நிலைமை சீரடமையும் என்று ஏற்பட்ட போது அண்ணாமலைப் பல்கலைக் கழகமேதமிழிசை இயக்கத்தைத் தொடங்கி நடத்தியது வரலாறு காணாத சாதனையாகும். இச்சாதனையை அண்ணாமலை அரசரே தலைமையேற்று வெற்றிகரமாகச் செய்தார்.

அண்ணாமலை அரசரின் தமிழிசை இயக்கத்தை ஆர்.கே. சண் முகம் செட்டியார், ராஜாஜி,டி.கே.சி, கல்கி, நாமக்கல் கவிஞர், பாரதிதாசன், அண்ணா ஆகியோர் தீவிரமாக ஆதரித்தனர்.

1941 இல் தமிழிசை மாநாடு சிதம்பரத்தில் நடைபெற்ற போது அமரர் கல்கி தாமே மேற்படி மாநாட்டில் பங்குபெற்று மக்களோடு மக்களாக இருந்து சுவைத்து அப்பொழுதுதான் தொடங்கி இருந்த கல்கி, மூன்றாவது இதழில்கர்நாடகம்என்னும் தம் புகழ் வாய்ந்த புனைபெயரில் இம்மாநாட்டை ஆணித்தரமாக ஆதரித்து விரிவான கட்டுரை எழுதி இருந்தார்.

இக்கட்டுரையில் கல்கி, தமிழுக்கும் இசைக்கும், பல்கலைக் கழகத்துக்கும் பெருமைத் தேடித் தந்த அண்ணாமலை வள்ளலை மனமாரப் பாராட்டுகிறார். இக்கட்டுரை மாநாட்டின் பெருமை களைக் கூறி நடப்புகளை விவரிப்பதுடன் மாநாட்டில் நடைபெற்று இசை நிகழ்ச்சிகளையும் இசைக் கலைஞர்களையும் சுவையாக விமர்சிக்கிறது.

அரியக்குடி இராமாநுஜ அய்யங்கார் செம்பை வைத்திநாத பாகவதர், திருமதி அலமேலு அய்யராமய்யர், நாகர்கோவில் ஸ்தாணு பாகவதர், திரு. இலட்சுமணப்பிள்ளை திருச்சி சகோதரர்கள், திருப்புகழமணி டி.எம்.கிருஷ்ணசாமி அய்யர், பூதலூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள், ஸ்ரீகோடீசுவர அய்யர், திரு தண்டபாணி தேசிகர், தியாகராஜ பாகவதர் டைகர் வரதராச் சாரியார் மற்றும் பலரைப் பற்றி இக்கட்டுரையில் குறிப் பிட்டுள்ளார்.

இம்மாநாட்டில் விளைந்த பயன்கள் ஏராளம். 1941 இல் நடை பெற்ற முதல் தமிழிசை மாநாட்டைக் காணாதவர்கள் இக்கட்டுரை மூலம் கண்டு பயன்பெறலாம்.

 - தி..மெய்கண்டார்.

ஆடல் பாடல்
கல்கி (கர்நாடகம்)

சிதம்பரத்தில் புதிதாக ஒரு சர்வகலா சாலை ஏற்படுத்தும் பேச்சு முதன்முதலாக எழுந்தபோது தமிழ் அன்பர்கள் கொண்ட ஆனந்தத் துக்கு அளவில்லை. அது உண்மையில் தமிழ் சர்வகலாசாலையா யிருக்குமென்றும் தமிழ் மொழியும் தமிழ்க்கலையும் அங்கே தழைத் தோங்குமென்றும் எதிர்பார்த்தோம். போகப்போக இந்த ஆசை யெல்லாம் நிராசையாகுமோ என்ற பயம் உண்டாயிற்று. சில காலம் பல்வேறு காரணங்களினால் சர்வகலாசாலைசர்வ கலாட்டா சாலையாகவே ஆகியிருந்தது.

தமிழ்என்றால்இனிமைஎன்று பொருள் சொல்வது போகதமிழ்என்றால்ரகளைஎன்று அர்த்தம் கொள்ளும் படியான நிலைமை ஒருசமயம் அங்கே ஏற்பட்டிருந்தது. மூவாயிரம் வருஷத்துக்கு முன்னால் தமிழர்கள் கல்யாணம் செய்து கொண்ட முறையைப் பற்றிக் கடுமையான வாதப்பிரதிவாதங்களும் வசைப் போர்களும் நடந்தன. அந்த காலத்திலெல்லாம் நான் எவ்வளவோ துக்கப்பட்டிருக்கிறேன். ஒவ்வொரு சமயம், ‘நமக்கே இவ்வளவு வருத்தமாயிருக்கிறதே! இந்த சர்வகலாசாலைக்காக லட்சம் லட்சமாக பணத்தைக் கொடுத்து இன்னும் எவ்வளவோ முயற்சிகள் செய்த ராஜா ஸர் அண்ணாமலைச் செட்டியாருடைய உள்ளம் எவ்வளவு தூரம் புண்ணாகியிருக்குமோ!’ என்று நினைத்ததும் உண்டு.

இந்த மனப் புண்களையெல்லாம் ஆற்றும்படியான காரியம்- சிதம்பரம் சர்வகலாசாலையைப் பற்றித் தமிழர்கள் எல்வோரும் பெருமை கொள்ளும்படியான காரியம்- சென்ற மாதத்தில் நடந்தேறியிருக்கிறது. தமிழுக்கும் தமிழ்க்கலைக்கும் ஒரு பெரிய தொண்டைச் சிதம்பரம் சர்வகலாசாலை செய்துவிட்டது. சர்வ கலாசாலை இந்தத் தொண்டை மேற்கொள்வதற்குத் தூண்டு கோலாக இருந்தவர் ராஜா ஸர் அண்ணாமலைச் செட்டியார்தான் என்று சொல்ல வேண்டியதில்லை. அவரைத் தவிர வேறு யாருக்கும் இந்த பிரம்மப்பிரயத்தனமான வேலையைத் தொடங்க தைரியம் வந்திராது. அவருடைய சொந்த முயற்சியும் ஆர்வமும் இருந்தி ராவிடில் இத்தனை சங்கீத வித்வான்கள் தமிழ் சங்கீத மாநாட்டுக்கு வந்திருப்பார்கள் என்று ஒரு நாளும் எதிர்பார்க்க முடியாது. மகாநாடு இவ்வளவு சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடந்திராது.

ராஜா ஸர் அவர்களின் சொந்த ஆர்வமே காரணமாகயிருந்த போதிலும் காரியத்தைத் தமிழ் சர்வகலா சாலையின் மூலம் நடத்தி வைத்ததுதான் ரொம்பவும் பொருத்தமானது என்று சொல்ல வேண்டும்.சர்வகலாசாலைக்கும் கௌரவம், தமிழுக்கும் கௌரவம், சங்கீதத்துக்கும் கௌரவந்தான்.

மகாநாட்டில் மூன்றாவது நாள் மத்தியானம் செட்டி நாட்டு ராஜாவின் சார்பாக சர்வகலாசாலைக்காரர்கள் அளித்த விருந்தை அருந்திவிட்டு தாம்பூல தாரணத்திற்காக ஒரு வட்ட மேஜையைச் சுற்றி நாலைந்து பேர் உட்கார்ந்தோம்.

அப்போது ஸ்ரீ பொன்னையா பிள்ளை (பிரசித்தமான பரம்பரை சங்கீத குடும்பத்தைச் சேர்ந்த வித்வான் பொன்னையா பிள்ளை தான்) சொன்னார்,‘நீங்கள் இருவரும் வெகு காலமாகப் பிரயாசைப்பட்டுக் கொண்டிருந்த காரியம் இப்போது கை கூடுகிறது பார்த்தீர்களா?.

இது, டி.கே.ஸி அவர்களையும் என்னையும் பார்த்து சொன்ன வார்த்தை.

ஆமாம். இப்படியெல்லாம் நடந்துவிடுமென்று நான் நினைக்கவேயில்லை, நினைக்க நினைக்க ஆச்சரியமாகத்தானி யிருக்கிறதுஎன்றேன்.

எனக்கும் ஆச்சரியமாகத்தானிருக்கிறது!’ என்றார் திருப்புகழ் மணி ஸ்ரீ டி.எம். கிருஷ்ணசாமி அய்யர். இப்படி சொல்லும் போது அவருடைய குரலில் கேள்விக்குறி தொனிக்கவே, எல்லோரும் அவரைப் பார்த்தோம்.

ஆமாம். இதற்காக நீங்கள் ஆச்சரியப்படுவதைக் கண்டு எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது!’ என்றார்.

அதாவதுதமிழ் நாட்டில் தமிழ் பாட்டுப் பாட வேண்டும்என்று ஒரு கிளர்ச்சி. இதற்கு ஒரு மகாநாடு. இப்படி ஒரு மகாநாடு கூடிவிட்டதே என்று பிரமாதமாக சந்தோஷப்படுவது, இவை யெல்லாந்தான் திருப்புகழ் மணிக்குப் பெரிய ஆச்சரியமாகத் தோன்றின.

தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்என்ற வாக்கின்படி சதாவர்வதா காலமும் இசையும் தமிழும் தாமுயிருப்பவர் திருப் புகழ் மணி ஸ்ரீ டி.எம்.கிருஷ்ணசாமி அய்யர். சங்கீதக் கச்சேரி களுக்கு அதிகம் போவது கிடையாது. அப்படிப்பட்டவருக்குதமிழிலே பாட வேண்டுமென்று ஒரு இயக்கமா? இதற்கு ஒரு மகாநாடா?’ என்று தோன்றியது இயற்கையே. சமுத்திரத்தில் வாழும் மீன்களுக்குஉயிர் வாழ ஜலம் அவசியம்என்று தீர்மானிப்பதற்காக ஒரு மகாநாடு கூட்டினால் ஆச்சரியமாயிராதா?

ஆனால் டி.கே.ஸி. யையும் என்னையும் போன்றவர்களுடைய நிலைமை வேறு. நல்ல சங்கீதம் கேட்க வேண்டுமென்ற ஆசை யுடன் பிரபல வித்வான்களின் கச்சேரிகளுக்குப் போகிறதும் அங்கே சங்கீதமெல்லாம் பிற பாஷை மயமாகவே இருப்பதைக் கண்டு வருத்தப்படுவதுவமாகிருந்தவர்கள். நமது சங்கீதத்துக்கு இந்த அன்னிய பாஷை விலங்கிலிருந்து விடுதலையே கிடையாதோ என்று ஏங்கியதும் உண்டு. இதைப்பற்றிப் பிரஸ்தாபித்தாலே சிலர் பரிகாசம் செய்யத் தொடங்கினார்கள், ‘உங்களுக்குத் தெலுங்கின் மேல் என்ன துவேஷம்?’ என்று சிலர் கேட்டார்கள். இப்படிக் கேட்ட ஒரு நண்பரைப்பார்த்து டி.கே.ஸி திருப்பி ஒரு கேள்வி கேட்டார். ‘உங்களுக்கு கிரீக் பாஷை தெரியுமா?’ என்றார்

தெரியாதுஎன்றார் நண்பர். ‘கிரீக் பாஷையின் மீது உங்களுக்கு என்ன அய்யா துவேஷம்?’ என்று கேட்டார் டி.கே.ஸி.

இப்படியெல்லாம் பல வித எதிர்ப்புக்களுக்கும் ஏமாற்றங் களுக்கும் உள்ளானவர்களுக்குச் சிதம்பரம் மகாநாடுஒரு பிரமாதமான காரியமாகத் தோன்றியது. இயற்கையேயல்லவா? ஆகவே நாலுநாளும் இருந்து மகாநாட்டை நடத்தி வைக்கும் நோக்கத்துடன் டி.கே.ஸி முன்னதாகவே பிரயாணமாகிப் போய் விட்டார். அங்கிருந்து எனக்கு ஒரு கடிதமும் எழுதினார்.

அரியக் குடி ராமாநுஜ அய்யங்கார் தமிழ்க் கச்சேரி செய்துவிட்டார். செம்பை வைத்திநாத பாகவதர் தமிழிலேயே பாடப் போகிறார். இந்த ஆச்சரியங்களை யெல்லாம் பார்க்கக் கொடுத்து வைக்காமல் சென்னையில் உட்கார்ந்திருக்கிறீர்களே? என்று படித்ததும் உடனே மூட்டை கட்டத் தொடங்கினேன். அன்று இரவு திருவனந்தபுரம் பாஸஞ்சர் வண்டி கூடத் தமிழிலேயே மூச்சு விட்டுக் கொண்டும்  தமிழலேயே தாளம் போட்டுக் கொண்டு பிரயாணம் செய்தது. ஏனெனில் திருபுகழ்மணி, ஸ்ரீதண்டபாணி தேசிகர், ஸ்ரீமதி அலமேலு அய்யராமய்யர் ஆகியவர்களெல்லாம்¢ அதே வண்டியில் தான் மறுநாள் தமிழோடு இசை பாடுவதற்குப் பிரயாணம் செய்தார்கள்.

காலை நாலு மணிக்கு இரயில் சிதம்பரம் ஸ்டேசன் போய்ச் சேருகிறது. அந்த நேரத்தில் ரயிலில் வருகிறவர்களை அழைத்துப் போவதற்கென்று சர்வகலாசாலை மனிதர்கள் வந்து காத்தி ருந்தார்கள். அவரவர்களையும் இருட்டில் தேடிப்பிடித்து வண்டியிலேற்றி அழைத்துப் போனார்கள். தமிழுக்கு வந்த யோகத்தை எண்ணி மகிழ்ந்து கொண்டே போனோம்.

சர்வ கலாசாலையில் அதிக் கிரஹததில் கொண்டு போய் இறக்கினார்கள். சிறிது நேரத்துக்கெல்லாம் பொழுது பல பல வென்று விடிந்தது. ஒரு அறையில் தனியாக ஒரு தம்புராவின் நாதம் கிளம்பிற்று. இன்னொரு அறையில் மிருதங்கத்தைத் தட்டிப் பார்க்கும் சப்தம் வந்தது. இன்னொரு மூலையிலிருந்து யாரோ பூபாள ராகத்தை வாய்க்குள்ளே முணுமுணுத்தார்கள். சமாசாரம்  என்னவென்று  விசாரித்ததில் காலை எட்டு மணிக்கே கச்சேரிகள் ஆரம்பமாகிவிடுமென்றும் அதற்காக அவரவர்களும் தாயர் செய்து கொள்கிறார்களென்றும் தெரியவந்தன. இரண்டு நாளாக இப்படித் தான் காலை எட்டு மணிக்குத் தமிழ்க் கச்சேரிகள் ஆரம்பமாகி இராத்திரி 9 மணிக்கு முடிகின்றன என்ற சொன்னார்கள்.

எல்லாரும் தமிழ் உருப்படிகள்தானே பாடுகிறார்கள்என்று கேட்டேன். ‘அதற்குக் கூடச் சந்தேகமா? சில பாடகர்கள் பாடும் போது என்ன பாஷை என்று தெரிகிறதில்லைதான். ஆனாலும் அவர்கள் தமிழ்தான் பாடியிருக்க வேண்டும். இதிலெல்லாம் கொஞ்சம் பரஸ்பரம் நாம்பிக்கை வேண்டாமா? நீங்களே சொல்லுங்கள்என்று பரிதாபமாகப் பதில் வந்தது.
இரண்டுநாளும் இடைவிடாமல் தமிழ்ப்பாட்டுகளைப் பாடு கிறார்களே? ஏராளமான உருப்படிகள் பாடியிருக்க வேண்டுமே? சிதம்பரம் மனங் கனித்திட ஏழு தடவை கேட்டதாக ஞாபகம், இன்னும் பல உருப்படிகளும் பாடித்தான் இருக்க வேண்டும்

கச்சேரிகள் எங்கே நடக்கின்றன? சபை எப்படி?’ என்று கேட்டேன்.

கச்சேரிகள் பட்டமளிப்பு மண்டபத்தில் நடக்கின்றன. கூட்டம் ஏராளம். மாணாக்கர்களே 700, 800 பேர். ஆகவே உற்சாகம் ரொம்ப அதிகம். வித்வான்கள் பாடு கொஞசம் திண்டாட்டந்தான். நடுவில் பாடகர்களுக்குச் சபையோர் உத்தரவு போட ஆரம்பித்து விடுகிறார்கள். நேற்றைக்கு செம்பை வைத்திநாத பாகவதர் ரொம்ப ரொம்ப ஜோராகச் சமாளித்தார். சபையோர் கையைத் தட்டிய போது அவரும் சேர்ந்து கையைத் தட்ட ஆரம்பித்து விட்டார்.

இரண்டு நாளாய்த் தமிழ்க் கச்சேரியாகவே நடப்பதில் யாருக் காவது அதிருப்தி உண்டோ? ‘தெலுங்குப் பாட்டுப் பாடுஎன்று யாராவது கேட்டார்களோ? என்று பயத்துடன் வினவினேன். ‘அது மட்டும் இல்லைஎன்று பதில் கிடைத்ததும் தைரியம் வந்தது.

எட்டு மணிக்கு பட்டமளிப்பு மண்டபத்துக்குப் போனோம். விஸ்தாரமான மண்டபம். இரண்டாயிரம் பேர் தாராளமாய்க் கொள்ளும் அழகே சொல்லி முடியாது. நடுவில் தூண் முதலிய தடைகள் இல்லாமல் நவீன வசதிகளுடன் அமைந்திருந்தது. மண்ட பத்துக்கேற்ற அரங்கமேடை. பாடகர்கள் உட்காருமிடத்துக்கு மேலே தாழ்வாக ஒரு விதானம் மட்டும் கட்டியிருந்தால் கச்சேரிகள் இன்னும் நன்றாக சோபித்திருக்கும்.

எத்தனையோ பணச்செலவில் கட்டிய இந்த சர்வகலா மண்ட பம் இப்போது உண்மையாகவே தமிழ்க்லையை வளர்ப்பதற்குப் பயன்படுகிறதே என்று குதூகலமடைந்தேன்.

நாகர்கோவில் ஸ்தாணுபாகவதர் கச்சேரி அப்போது நடந்து கொண்டிருந்தது. பழைய காலத்து மனுஷர்; பழைய காலத்துப் பாட்டு. இந்த தள்ளாத வயதிலும் பாட்டில் ஜீவ களை ததும்பிற்று. ஒவ்வொரு சமயம் பாட்டில் புதிய அடியை ஆரம்பிக்கும்போது ஆலால மரத்தடியில் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி விஸ்வரூபமாக விளங்கினார். எதிரில் உட்கார்ந்திருந்த ஸ்ரீலட்சமணப்பிள்ளை முகத்தில் உற்சாகம் ததும்பத் தலையை ஆட்டி அனுபவித்ததைப் பார்த்ததும் அவருடைய கீர்த்தனைகளைத்தான் ஸ்ரீஸ்தாணு பாகவதர் பாடுகிறார் என்பது தெரிந்து போயிற்று.

அடுத்தாற்போல் திருச்சி சகோதரர்களின் கக்சேரி. விறுவிறுப் பான பாட்டு. அபூர்வ சஞ்சாரங்கள். மூத்தவர் முகத்தை அசைப்ப தேயில்லை. இளைய சகோதரர் தோள்களை ஒரு குலுக்குக் குலுக்க வேண்டியதுதான். அடுத்த விநாடியில் சங்கதிகள் கலகலவென்று கொட்டிவிடும்! யாராவது பேஷ்! என்று சொல்லிவிட்டால், அவ ருடைய முகத்தில் வெட்கமும் புன்னகையும் கலந்து போராடும்.

பிறகு திருபுகழ் மணி டி.எம்.கிருஷ்ணசாமி அய்யர் அவர்கள் அரைமணி நேரம் உணர்ச்சி ததும்பும் தமிழ்ப் பாடல்களைப் பொழிந்தார்கள்.

அப்புறம் பூதலூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் கோட் வாத்தியத்தைத் தூக்கிக் கொண்டு மேடைக்கு வந்தபோது எல்லாருக்கும் ஒரே ஆச்சரியமாய்ப் போயிற்று. சாதாரணமாய்த் தமிழ்ப்பாட்டு இயக்கத்தைப் பரிகசிப்பவர்கள் ஓகோ! புல்லாங் குழல் கச்சேரிக் கூடத் தமிழ்ப்பாட்டு பாடிற்றோ? மிருதங்கமும் தமிழில்தான் அடித்தார்களோ? என்று கேட்பதுண்டு. அதற்குத் தகுந்தாற்போல் இந்தப் பிராமணர் கோட் வாத்தியத்தைத் தமிழிலே வாசிக்க வந்துவிட்டாரே என்று நான் கவலைப்பட்டுக் கொண்டி ருக்கையில் சாஸ்திரிகள் கணீரென்று கமாசு ராகத்தில் ஒரு தமிழ்க் கீர்த்தனத்தை எடுத்தார். வாய்ப் பாட்டாகத்தான். சாரீரமாவது சாரீரம்! ரவையாவது ரவை! எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ என்று பூதலூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளைப் பார்த்துத்தான் சொன்னார்களோ, என்னமோ? இரண்டு மூன்று உயர்தரத் தமிழ் உருப்படிகள் (தமிழ் என்று நன்றாய்த் தெரியும்படி) பாடினார்

பாடிக்கொண்டே வாத்தியமும் வாசித்தார். பிறகு ஒரு தமிழ் விருத்தத்தை ராகமாலிகையில் பாடி உலுக்கித் தள்ளி விட்டார். உயர்ந்த தஞ்சாவூர் பாணி சங்கீதத்தைப் பொக்கீஷமாக வைத்துக் காப்பாற்றி வருகிறவர்களில் பூதலூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளும் ஒருவர் என்று தெரிந்தது. இத்துடன் காலைக் கச்சேரிகள் முடிந்தன.

பிற்பகல் மூன்று மணிக்குப் பட்டமளிப்பு மண்டபத்தில் மறுபடி யும் தமிழ்க்கச்சேரிகள் ஆரம்பமாயின. காலஞ்சென்ற ஸ்ரீகோடீ சுவர அய்யரின் அபூர்வ கீர்த்தனங்களை அவருடைய குமாரரும் சீடர் ஒருவரும் பாடினார்கள்.

இவர்களுக்குப் பிறகு இரண்டு பெரிய பீரங்கிகளின் கச்சேரி. முதலில் ஸ்ரீதண்டபாணி தேசிகர். பிறகு ஸ்ரீதியாகராஜ பாகவதர்.

தேசிகரின் தமிழ் இசையில் எனக்கு எப்போதும் மதிப்பு உண்டு. அந்த மதிப்பு நேரில் கேட்டதில் பன்மடங்கு பெருகிற்று. கம்பீர மான சாரீரம். ஒலிக்கருவி இல்லாமலே மண்டபம் முழுவதும் சென்று எதிரொலி செய்யும்படியான பெரிய குரல். அவ்வளவு பெரிய குரலில் சுகபாவமும் ததும்பிற்று.

ஸாஹித்யத்தின் சிறப்பைப் பூரணமாய் உணர்ந்து, இதய பாவத்துடன் பாடுவதில் தேசிகருக்கு நிகர் தேசிகர்தான் என்று சொல்ல வேண்டும். அவர் ஸ்வரம் பாடுவதில்லை. ராக விஸ்தாரங் களில் புகுந்து ஜால வித்தைகள் செய்வதில்லை. நேரே நெடுகப் பாடிக்கொண்டு போகிறார். இன்பம் ததும்பும் செந்தமிழ்ப் பாடல்களையே பொறுக்கி எடுத்துப் பாடுகிறார். தமிழ்ப் பதங்களை சுத்தமாக வாய் நிறைய நிலையை உச்சரித்துப் பாடுகிறார். ஒரு வார்த்தையாவது நம் காதில் விழாமல் தப்பிச் செல்வது கிடையாது.

ஒரு கீர்த்தனம் ஒரு விருத்தம்- இப்படியே மாற்றி மாற்றி இரண்டு மணி நேரம் அற்புதமாய்ப் பாடி வந்தார் தேசிகர். அவர் பாடிய அச்சுத தாஸர் கீர்த்தனங்கள் ஸாஹித்தியத்திலும் இசையிலும் வெகு உயர்தரமாயிருந்தன. கரகரப்பிரியாவில் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி என்ற தேவாரத்தைப் பாடிய போது எல்லாருடைய  உள்ளமுங் கனிந்து கண்ணீர் பெருகியே விட்டது. கச்சேரியை முடித்த போதுஏன் முடிக்கிறார்?’ என்று தோன்றியது.

இவருக்கு அடுத்தபடி ஓர் இளம் சங்கீத வித்வான் வந்து பாடப் போவதாகடைகர்வரதாச்சாரியார் மேடையில் வந்து தெரிவித்தார். அந்த இளம் வித்வானுடைய பாட்டை நான் ஏற்கனவே கேட்டிருக்கிறேன். ரொம்ப உயர்ந்த பாட்டு. ஆனாலும் இரண்டு டாக்கி நட்சத்திரங்களுக்கு மத்தியில் ஒரு சாதாரண பாடகரைக் கொண்டு விடலாமா? இப்படிப்பட்ட பிசகைடைகர்செய்கிறாரே என்று நினைத்தேன். கிழப்புலிக்குப் பெரிய பீரங்கி களைக் கண்டு பயமில்லாமலிருக்கலாம். இளம் ஆட்டு குட்டியும் அப்படியிருக்க முடியுமா? ஆனால் அந்த இளம் வித்வான் நல்ல பாடகர் என்பதோடு நல்ல புத்திசாலி என்றும் தெரியவந்தது

கூட்டத்தின் நோக்கத்தை அறிந்து கொண்டார். வெறும் பாட்டு மாத்திரம் கேட்க அவர்கள் இப்போது தயாராயில்லை. வில்வமங்கன் திரு நீலக்கண்டர், அம்பிகாபதி, அசோக்குமார் எல்லாரையும் ஒரே தடவையாகப் பார்க்கவும், கேட்கவும் விரும்பு கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு மேடைக்கு வர மரியாதை யாக மறுத்துவிட்டார். வந்த தம்பூராவும் திரும்பி போய்விட்டது!

அப்புறம் ஸ்ரீதியாகராஜ பாகவதர் வந்தார். அதாவது, பாகவதருடைய ரூபத்தில் மேற்கூறிய கதாநாயகர்கள் எல்லாரும் வந்தார்கள்.

தேசிகருடைய கம்பீரமான சாரீரத்துக்குப் பிறகு பாகவதருடைய இனிய குரல் எடுபடுவதற்குக் கூடக் கொஞ்சம் சிரமப்பட்டது. பத்து நிமிஷம் கழித்துதான் பாகவதரின் குரல் இனிமை வெற்றி யடைந்தது. இனிமை என்றால் எப்படி? அவர் பாட வேண்டாம். குரல், தம்புராவின் சுருதியுடன் கலந்து  கோர்வை கொடுத்துக் கொண்டிருந்தாலே போதும். கேட்டுக் கொண்டே இருக்கலாம். ஆனால் பாகவதர் அத்துடன் திருப்தியடைய தாயராயில்லை. கச்சேரி பாணியில் ராக ஆலாபணம், கீர்த்தனம், நிரவல், ஸ்வரம்-இப்படிப் பாடிக் கொண்டே வந்தார். எல்லாம் அரை மணி நேரம் தான். அவ்வளவு நேரம் பொறுமையாயிருந்த சபையோர்கள், ‘போதும் அய்யா! கச்சேரிக் கடையைக் கட்டும். டாக்கி பாட்டை எடுத்துவிடும்என்று உத்தரவு போடத் தொடங்கினார்கள். பாகவதர் வேறு வழியின்றி சபையில் கொஞ்சம் சங்கீத ரஸிகர் களாயிருந்தவர்களை ஒரு தடவை பரிதாபமாகப் பார்த்து விட்டு, டாக்கி பாட்டுகளை எடுத்துவிட்டார்.  ஒரு பாட்டு முடிந்ததும், ‘பிளேட்டைத் திருப்புஎன்று உத்திரவு போட்டார்கள். அப்படியே திருப்பினார். சபையோர் ஆராவாரித்து மகிழ்ந்தார்கள்.

பாகவதரின் இனிமை ததும்பும் குரலைக் கேட்ட பிறகு வேறு யாருடைய பாட்டையும் கேட்க நான் உண்மையிலேயே விரும்ப வில்லை. யார் பாடப் போகிறார்கள் என்று விசாரிப்பதற்குக் கூட இஷ்டப்படாமல் கிளம்பிவிட்டேன்.

தமிழ் சங்கீத மகாநாடு வெற்றியுடன் நடந்தேறிவிட்டது. அதனால் மிகச்சிறந்த பலன்கள் விளைந்துதானிருக்கின்றன. இயக்கத்துக்கே ஒரு முக்கியம் ஏற்பட்டுவிட்டது, முதலாவது சிறந்த பலன். சங்கீத வித்வான்களையெல்லாம் ஒன்ற சேர்த்து அவர் களுடைய ஒத்துழைப்பை இந்த இயக்கத்துக்குப் பெற்றது. இரண்டாவது பலன். தமிழ்ப் பாட்டுக்களையே முழுதும் பாடினாலும் தமிழர்கள் நிச்சயமாக ரசிப்பார்கள் என்று ஏற்பட்டது மூன்றாவது பலன். ஆதி முதல் இன்று வரையில்  தமிழ் சாஹித்ய கர்த்தாக்களின் விரிவான ஜாபிதா ஒன்று டாக்டர் .வே.சாமி நாதய்யர் அவர்கள் மூலம் கிடைத்தது நாலாவது பலன்.
இவ்வளவுடன் காரியமே நிறைவேறிப் போய்விட்டது என்று யாரும் சொல்ல மாட்டார்கள்

மகாநாடு காரியத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறது. அவ்வளவுதான். இனிமேல் காரியம் சித்தியாக வேண்டும். ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் நிறைவேற்றிய தீருவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆகவே, தமிழுக்கும் சங்கீதத்துக்கும் யோகம் இருப்பதாலேயே அவர் இந்தக் காரியத்தை மேற்கொண்டார் என்று கருத இட மிருக்கிறது. அவருடன் இந்த உயர்ந்த காரியத்தில் ஒத்துழைப்பது சங்கீத வித்வான்கள், தமிழ் அன்பர்கள் எல்லாருக்கும் ஏற்பட்டி ருக்கும் தலை சிறந்த கடமை என்றே சொல்ல வேண்டும்.(கல்கி,16, ஆவணி 1941), (நவம்பர் 1989, டிசம்பர் 1989 இளந்தமிழன்)