Thursday, November 28, 2019

அனைத்துச்சாதியினர் அர்ச்சகர் ஆணையும் ஆகமப் பூச்சாண்டியும்


அனைத்துச்சாதியினர் அர்ச்சகர் ஆணையும் ஆகமப் பூச்சாண்டியும்

பெ.மணியரசன்  எழுதிய கட்டுரை

1970 ஆம் ஆண்டின் சட்டத் திருத்தம் செல்லும் என்று 1972 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அச்சட்டத் திருத்தத்தை எதிர்த்தவர்களின் மனுக்களைத் தள்ளுபடி செய்தது ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு மன்றம்.

1970 ஆம் ஆண்டின் திருத்தத்தை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது போலவும் செயல் படுத்த முடியாமல் முடக்கிவிட்டது போலவும் அப்போது தி.மு.., தி.. தலைவர்கள் பேசினார்கள். இதோ அப்போது கலைஞர் பேசியதிலிருந்து....

அரசியல் பேசுவதாகக் கருதிக் கொள்ளக் கூடாது. இன்றைக்கு நாம் அர்ச்சகர்களாக யார் யார் வரவேண்டும் என்பதில் ஏதோ ஒரு சாதியார்தான் வரவேண்டும் என்றில்லாமல் அர்ச்சகர் பயிற்சியைப் பெற்றிருந்தால், ஆதிதிராவிட மக்களும் அர்ச்சனை செய்ய  அனுமதிக்கப்பட வேண்டும் என்ற சட்டத் தைச் செய்த நேரத்தில் அது சுப்ரீம் கோர்ட் வரை சென்று விட்டது. நாம் இயற்றிய சட்டத்திற்கு ஆதரவாகத் தலைமை நீதிமன்றத்தின் தீர்ப்பைப் பெற்றிருக்கிறோம். அதாவது தலைப்பில் அப்படிப் போட்டுக் கொள்ளலாமே தவிர உள்நுழைந்து பார்த்தால் ஆகமங்கள்விதிகள் ஆகிய வற்றிற்கு ஏற்பத்தான் இந்தச் சட்டத்தை நிறைவேற்றலாம் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கின்ற சூழ்நிலையைக் காணும் நேரத்தில் அரசமானிய ஒழிப்பு வந்த நேரத்தில் எப்படி ஓர் அரசியல் சட்டத் திருத்தம் தேவைப்பட்டதோ அதைவிட ஆயிரம் மடங்கு அதிகமாகக் காரணம் இருக்கிறது. இன்று இந்தச் சட்டம் அரசியல் ரீதியில் டெல்லியில் நிறைவேற்றப்பட வேண்டுமென்பதில்.

அரசியல் சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலொழிய அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக முடியாது என்று அன்று கலைஞர் கூறினார்.

ஆனால் இப்போது வெறும் அரசாணை மட்டும் தமிழக அரசால் போடப்பட்டுள்ளது. இது எப்படி?

எந்த இரைச்சலும் இல்லாமல் கேரளாவில் 1969 ஆம் ஆண்டிலிருந்து அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் விதிமுறை செயலுக்கு வந்துள்ளது. அந்த விதிமுறை செல்லும் என்று 2002 அக்டோபர் 3 ஆம் நாள் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்தத் தீர்ப்பையும் 1972 ஆம் ஆண்டில் தமிழகச் சட்டத் திருத்தம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் மேற்கோள்காட்டித் தான் இப்போது 2006 மே 23 நாளிட்டு தமிழக அரசு பிறப்பித்துள்ள ஆணை வந்துள்ளது. (அரசாணை (நிலை) எண் 118. இனியாவது இந்த ஆணையை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும். அர்ச்சகர் பயிற்சிப் பள்ளித் தொடங்கி, சான்றிதழ் வழங்கி இடஒதுக்கீட்டின் அடிப்படையில் எல்லாச் சாதியினரையும் அர்ச்சகர்களாக்க வேண்டும்.

தமிழக அரசு இப்போது பிறப்பித்துள்ள ஆணையைஎதிர்த்து ஆகம விதி முறையா? அரசு ஆணையா? என்ற தலைப்பில்  துக்ளக் இதழில் சோ இருவாரங்கள் (31.5.2006, 7.6.2006) ஆசிரியவுரை எழுதினார்.

சட்டத் திருத்தம் இல்லாமல் அரசு ஆணை மூலமாகவே இதை அமல்படுத்த முனைந்தால் -அது இந்து அறநிலையச் சட்டத்திற்குப் புறம்பானது என்று நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படக் கூடும். சட்ட திருத்தம் வந்தால்திருத்ததின் தன்மையைப் பொறுத்து அது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று நீதிமன்றம் கருதக் கூடிய வாய்ப்பும் உண்டு. (துக்ளக் 31.5.2006).

1972, 2002ஆண்டுகளில் வந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் , அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை உறுதி செய்துள்ளன. ஆகமம், சடங்கு, சம்பிரதாயம், அர்ச்சனை, மந்திரம் போன்றவற்றில் பயிற்சி பெற்றதற்கான  சான்றிதழ் இருந்தால் போதும் என்றுதான் அத்தீர்ப்புகள் கூறுகின்றனவே அன்றி, குறிப்பிட்ட சாதியில் பிறந்திருக்க வேண்டும் என்று கூறவில்லை.

தமிழகத்தைப் பொறுத்த வரை தமிழ்நாடு சமய மற்றும் அறநிலையச் சட்டம் -1959 என்பதுதான் கோயில் நிர்வாகம் மற்றும் அர்ச்சகர் நியமனம் பற்றி உள்ள அடிப்படைச் சட்டம். இச் சட்டத்திற்குத் திருத்தம் கொண்டு வந்துதான் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கு 1970 இல் கலைஞர் வழி அமைத்தார்.

இந்த அடிப்படைச் சட்டத்தின் 55 ஆவது பிரிவு  இவ்வாறு இருந்தது,
55. சமய நிறுவனங்களில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை நியமிப்பது.
1. ஒருசமய நிறுவனத்தில்  அலுவலர்களுக்கோ அல்லது பணியாளர்களுக்கோ பணியிடங்கள்  காலியாக இருந்தால் அந்த நிறுவனத்தில் அலுவலர் பணியோ, பணியாளர் பணியோ பரம்பரை அடிப்படையில் நியமிக்கும் பழக்கம் இல்லை யயன்றால் அக்காலி இடங்கள் அறங்காவலரால் நிரப்பப்படும்.

இது 1970 இல் கீழ் வருமாறு திருத்தப்பட்டது.

பிரிவு 55 சமய நிறுவனங்களில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை நியமிப்பது;

1. நிரந்தரமாகவோ, தற்காலிகமாகவோ சமய நிறுவனங்களில் அலுவலர்களும் அலுவலர்களுக்கும் பணியாளர்களுக்கும் காலி இடங்கள் ஏற்பட்டால் அவை எல்லா இடங்களும் அறங்காவலரால் நிரப்பப்படும்.
விளக்கம் : அலுவலர்கள் அல்லது பணியாளர்கள் என்பது அர்ச்சகர்களையும் பூசாரிகளையும் உள்ளடக்கியதாகும்.

1959 ஆம் ஆண்டின் சட்டம் பிரிவு 55 (2) பரம்பரை வாரிசுரிமைப்படி அடுத்த வாரிசு அலுவலராக அல்லது பணியாளராக நியமிக்கப்படும் பழக்கம் உள்ள நிறுவனங்களில் பரம்பரை அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்று கூறுகிறது.

1970 ஆம் ஆண்டு செய்த திருத்தம்  மேற்படி பிரிவை கீழ்வருமாறு மாற்றியது...
2) உட்பிரிவு (1) இல் கூறியுள்ள  பணிகளில் ஏற்படும் காலி இடங்களை கடைசியாகப் பணியிலிருந்தவரின் அடுத்த வாரிசு என்ற முறையில்  யாரையும் நியமிக்கக் கூடாது.

1970 ஆம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தங்களில் இவைதாம் அடிப்படையானவை. மற்ற திருத்தங்கள் இவற்றை ஒட்டியவை.

இத்திருத்தங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்ததுஇவ்வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு என்ன? இதோ...

23 செல்லாதவை என அறிவிக்கக் கோரி வழக்குத் தொகுக்கப்பட்டுள்ள பல்வேறு திருத்தங்களை இப்பொழுது எடுத்துக்கொள்வோம். திருத்தச்சட்டத்தின் 2 வது பிரிவு, முதன்மைச் சட்டத்தின் 55 வது பிரிவில் செய்யப்பட்ட திருத்தமாகும். அர்ச்சகர் நியமனத்தில் வாரிசுரிமையை நீக்கிய முக்கியமான மாற்றமாகும் இத்திருத்தம். இதன் மீதுதான் மனுதாரர்கள் சந்தேகம் எழுப்பி வழக்குத் தொடுத்துள்ளார்கள். இத்திருத்தம் செல்லாதது அல்ல . அதற்கான காரணங்களை ஏற்கனவே காட்டியுள்ளோம். முதன்மைச் சட்டத்தின் மற்ற பிரிவுகளில் செய்யப்பட்டுள்ள  இதர மாற்றங்கள் மேற்படி திருத்தத்தின் வெறும் விளைவுகளாக எங்களுக்குத் தோன்றுகின்றனமுதன்மைச் சட்டத்தின்

56 ஆம் பிரிவில் காணப்பட்ட அலுவல் அல்லது சேவை பரம்பரை வழியிலோ அல்லது வேறு வழியிலோ என்பது திருத்தச் சட்டம் 3 வது பிரிவின் படி நீக்கப்பட்டு விட்டது. இதன் மூலம் பரம்பரைக் கோட்பாடு கைவிடப்பட்டுவிட்டது.

இவை அனைத்தும் திருத்தச் சட்டத்தில் உள்ள பிரிவுகள். எங்கள் கருத்தில் ஒட்டுமொத்தத் திருத்தச் சட்டமும் செல்லத்தக்கது என்று பதிவு செய்யப்பட வேண்டும். (உச்ச நீதிமன்றத் தீர்ப்பு (1972) 2 எஸ்.சி.எஸ்.
மேற்படித் தீர்ப்பின் 24 வது பத்தி, அர்ச்சகர்களுக்கு அரசு கொடுக்கவுள்ள பயிற்சி பற்றிக் கூறுகிறது. தமிழக அரசின் திருத்தச் சட்டத்தை எதிர்த்தோர், ஆகமங்கள் மற்றும் சடங்கு, சம்பிரதாயங்கள், மந்திரம் சொல்லுதல் போன்றவற்றில் உள்ள பழைய முறை மற்றும் பயிற்சித் திட்டத்தைப் பின்பற்றாமல் ஏதாவதொரு எளிய முறைப் பயிற்சியைப் புகுத்தினால் அது தவறாகிவிடும் என்று வாதிட்டனர். குறிப்பாக சைவக் கோயிலில் வைணவ மந்திரம் சொல்பவரை நியமிப்பது வைணவக் கோயிலில் சைவ மந்திரம் சொல்பவரை நியமித்தல் போன்ற தாறுமாறான செயல்களைத் தமிழக அரசு செய்யலாம் என்று வாதிட்டனர். அவ்வாறு அரசு செய்யும் என்பதற்கு ஆதாரமில்லை. அவ்வாறு செய்தால் அதை எதிர்த்து நீதி கோரலாம் என்று உச்ச நீதி மன்றம் கூறியது.

தீர்ப்பின் இறுதிப்  பத்தியான 25 இல் நீதிமன்றம் இவ்வாறு கூறியது... முடிவாக (அரசு சட்டத் திருத்தத்தை எதிர்க்கும் ) இந்த மனுக்கள் தோல்வியுறுகின்றன. இந்த வழக்கின் சூழ்நிலை கருதி செலவுத் தொகை விதிக்கப்படவில்லை.
மேற்படி 1972 ஆம் ஆண்டுத் தீர்ப்பில் 24 ஆவது பத்திதான் , ஆகமம் , அர்ச்சனை மந்திரப் பயிற்சி முதலியவை பற்றிப் பேசுகிறது.

கேரளாவில் 1969 லிருந்து அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி செயல்படுகிறது. அப்பள்ளியில் பயிற்சி பெற்ற பல சாதியினர் அர்ச்சகராகி உள்ளனர். 28.4.1993 அன்று கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் ஆலங்காடு கிராமத்தில் உள்ள கொங்கோர் பள்ளி நீரிகோடு சிவன் கோயிலுக்கு பார்பனரல்லாத ஒருவர் சாந்திக்காரனாக (அர்ச்சகராக) நியமிக்கப் பட்டார். இதை எதிர்த்து மலையாளப் பார்ப்பனர் ஒருவரைத் தான்  சாந்திக்காரனாக நியமிக்க வேண்டும்  என்று ஒருசாரர் உச்ச நீதிமன்றம் போயினர். இவ்வழக்கை நீதிபதிகள் இராஜேந்திர பாபு, துரைசாமி ராஜூ இருவரும் விசாரித்து 3.10.2002 அன்று தீர்ப்பளித்தனர்.

இத்தீர்ப்புரையின் 15 ஆவது பத்தியில் 1984 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் கைலாஷ் சோனகர் எதிர் மாயாதேவி வழக்கில் சுட்டிக்காட்டியதை எடுத்துரைத்துப் பின் வருமாறு உச்சநீதிமன்றம் கூறுகிறது...

கீதையில் கூறப்பட்டிருப்பதும் தேசத்தந்தை மகாத்மா காந்தி கனவு கண்டதும் பிறப்பு அடிப்படையிலான வேறுபாடுகள் அனைத்தும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான். மனிதர்களை அவர்களின் செயல்கள் மூலம்தான் அங்கீகரிக்க வேண்டும்.

இந்திய அரசமைப்புச் சட்ட விதிகள் 17 முதல் 21 வரை உள்ள உரிமைகள் இந்த அடிப்படையில் ஆக்கப்பட்டவை. இவ்விதிகள் தாம் 1955 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடிமை உரிமைப்பாதுகாப்புச் சட்டத்திற்கு வழி அமைத்தவை.
மேலும் அத்தீர்ப்புரையின் 17 ஆம் பத்தியில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு கூறுகிறது....

பழக்க வழக்கப்படியும் மரபுப்படியும் இதுவரை பார்ப்பனர் மட்டுமே அர்ச்சனை  செய்யும் சாந்திக்காரனாக நியமிக்கப்பட்டார் என்றால் அதற்கு காரணம் என்ன? பார்ப்பனரல்லாதார் பூசாரி ஆகக் கூடாது என்று தடுக்கப்பட்டதால் அல்ல. பார்ப்பனரல்லாதார் வேதங்களைப் படிக்கக் கூடாது என்றும் பூணூல் அணியக் கூடாது என்றும் மந்திரங்களைச் சொல்லக் கூடாது என்றும் தடுக்கப்பட்டதால் தான் அவர்கள் அர்ச்சகர்கள் ஆகமுடியவில்லை.

இந்த வழக்கில் பார்ப்பனர் அல்லது மலையாளப் பார்ப்பனர் மட்டுமே சாந்திக்காரன் ஆகலாம் என்பதற்கு அரசமைப்புச் சட்ட விதி 25‡இன் கீழ் எந்த ஞாயமும் இல்லை. விதி 26 இன் கீழும் அதுபோல் எந்த உரிமையும் இந்த கோயிலுக்கு கோரமுடியாது. இதற்கும் அப்பால், பூசை புனஸ்காரங்களை நல்ல முறையில் செய்வதற்கு சிறப்பான அறிவும் பயிற்சியும் பெற்று ஒரு குறிப்பிட்ட கடவுள் படிமத்திற்கு அர்ச்சனை செய்யும்  தகுதிச்சான்று பெற்றுள்ள யாரும் சாதி அடிப்படை இல்லாமல் சாந்திக்காரனாகலாம். இதை எதிர்த்து எந்த நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுக்க தகுந்த சட்டக் காரணங்கள் இல்லை.

பத்தி 19.... இந்த மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்படுகிறது. நீதிமன்றக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

1972 மற்றும் 2002 தீர்ப்புகளில் உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவாகவே  அர்ச்சகர் பதவி பிறப்பு அடிப்படையில் வருவதல்ல. வரையறுக்கப்பட்ட தகுதி அடிப்படையில் வருவது என்று தீர்ப்புரைத்துள்ளது. துக்ளக் சோ, தமிழக அரசு இப்பொழுது போட்டுள்ள ஆணை நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்படும் என்று ஒரு கருத்தை உருவாக்குகிறார். கல்வி இடஒதுக்கீடு என்று வரும்போது, பிறப்பு அல்ல, தகுதிதான் அடிப்படை என்று கூச்சல் போடும் இக்கும்பல் அர்ச்சகர் நியமனம் என்று வரும்போது தகுதி அல்ல பிறப்பே அடிப்படை என்று குதர்க்கம் பேசுகிறது.

இப்பொழுதுள்ள கோயில் குருக்கள்கள் பெற்றுள்ள தகுதி பற்றி சோ கூறுகிறார்...

சிவாச்சாரியார் குலத்தில் பிறந்திருந்தால் மட்டும் போதாது. சமஸ்க்ருத அறிவு, வேதங்களைப் பயின்றிருத்தல், ஆகமங்களை முழுமையாக அறிந்திருத்தல், தர்மசாத்திரம் மற்றும் கிரியா சாத்திரம் ஆகியவற்றில் நிபுணத்துவம், சைவ சித்தாந்த தத்துவ ஞானம், ஆசாரங்களைக் கடைப்பிடித்தல், தீட்சை பெற்றிருத்தல், சைவ மந்திரம், முத்திரைகள், கிரியை முதலியன பற்றிய அறிவு ... என்று பல தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் (துக்ளக் 31.5.2006). இத் தகுதிகளில் இருபத்தைந்து விழுக்காடு தகுதி கூட இப்போது சிவன் கோயில்களில் அர்ச்சகர்களாக இருப்பவர்களில் 98 விழுக்காட்டினருக்குக் கிடையாது. அவர்களுக்கு சமஸ்கிருதம் எழுதப்படிக்கவே தெரியாது. தமிழிலும் பள்ளி இறுதி வகுப்பை முடித்தவர்கள் மிகக் குறைவானவர்களே. சமஸ்கிருத  மந்திரங்கள் சிலவற்றைத் தமிழில் எழுதி மனப்பாடம் செய்து ஒப்புவிப்பவர்களே அவர்கள். பரம்பரைத் தகுதி ஒன்றை மட்டுமே வைத்து கும்பகோணம் சங்கரமடம் போன்ற நிறுவனங்களில் போலிச் சான்றிதழ் பெற்று அர்ச்சகர் ஆனவர்கள் அவர்கள்.

இந்த ஆணையைப் பற்றி சோ கூறும் அவதூறுகள் நல்ல மனிதர்களின் சராசரி மனிதர்களின் கற்பனைக்குக் கூட எட்டாதவை.

இன்று ஒரு அரசு அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்று உத்திரவிடுகிறது. நாளை ஒரு அரசு அனைத்து மதத்தினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று ஏன் உத்திரவிட முடியாது? நாளையே ஒரு அரசு கோவில் அர்ச்சகர்கள் திறந்த மார்புடன் கச்சம் வைத்த வேட்டியைக் கட்டிக் கொண்டு அர்ச்சனை செய்வது அநாகரிகமாக இருக்கிறது... அதனால் இனி அர்ச்சகர்கள் பாண்ட், ­ர்ட் அணிந்துதான் அர்ச்சனை செய்வார்கள் என்று உத்திரவிட முடியாதா? வேறொன்று கூட  செய்யலாம். கோவிலில் சைவ உணவையே நைவேத்யமாகப் படைப்பது அசைவ உணவு சாப்பிடுபவர்களை இழிவுபடுத்துவதாக இருக்கிறது. அதனால் இனி எல்லாக் கோயில்களிலும் அசைவ உணவு நைவேத்யம் செய்யலாம். சிக்கன், மட்டன், கருவாடு போன்றவற்றை நைவேத்யம் செய்யலாம் என்று ஒரு உத்திரவு பிறப்பிக்கலாம். (துக்ளக் 7.2.2006).

ஆரியப் பார்ப்பனர்கள் தர்க்கத்தில் கூட ஓர் ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதில்லை என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு.அவர்கள் ஆன்மீகத்திலும் ஒழுக்கக்கேடர்களாக இருக்கிறார்கள். தர்க்கத்திலும் ஒழுக்கக் கேடர்களாக இருக்கிறார்கள்.

தந்தை பெரியார் அவர்களைப் பற்ற கூறியது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது...

பார்ப்பனரல்லாதாரை அர்ச்சகர்களாக நியமித்தால் பார்ப்பனர்கள், அந்தக் கோயில்களில் கடவுள் இல்லை என்று கூறி கோயிலுக்குப் போவதையே நிறுத்தினாலும் நிறுத்திவிடுவார்கள் என்றார்.

வேதாகமங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர்
வேதாகமத்தின் விளைவறியீர் - சூதாகச்
சொன்னவலால் உண்மை வெளிதோன்ற உரைக்கவிலை
என்ன பயனோ இவை -வள்ளலார் (தமிழர் கண்ணோட்டம், சூலை 2006)