Wednesday, August 31, 2022

வ.உ.சி. அரசியல் பெருஞ்சொல் - 2

 வ.உ.சிதம்பரனாரின் அரசியல் பெருஞ்சொல் - 2

சுய அரசாட்சி

நல்லாண்மை யயன்ப தொருவற்குத்          தான்பிறந்த

இல்லாண்மை யாக்கிக் கொளல்

என்று நமது முன்னோர் கூறியுள்ளார். 

அதாவது, ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்பது, தான் பிறந்த தேசத்தின் ஆள்கையைத் தன்னது ஆக்கிக் கொள்ளுதல். சுய அரசாட்சி அடைதலே நமது நோக்கம் என்று நமது காங்கிரஸ் தலைவர்களும் கூறியுள்ளார்கள்.

ஆனால் ‘சுய அரசாட்சி’ என்றால் என்ன? சுய அரசாட்சி எது போலிருக்கும்? என்று அறிவாளிகளும் அடிக்கடி வினவக் கேட்டிருக்கிறேன். அவர் அதனை அறியாமல் வினவுகின்றனரா? அல்லது அறிந்திருந்தும் ஏனையோர் அறிந்திருக்கின்றனரா என்று தெரிந்து கொள்வதற்காக வினவுகின்றனரா? என்பது தெரியவில்லை. 

அது யாதாயினும் ஆகுக. சுய அரசாட்சியைப் பற்றி யான் அறிந்துள்ள வற்றைச் சொல்லுகின்றேன். 

சுய அரசாட்சி நான்கு வகைப்படும்.

1. ஒரு தேசம், தனது மகாஜனங்களால் (தங்கள் குடியுரிமைகளைக் காக்கத் தக்கவர்களென்று) தேர்தெடுக்கப்பெற்ற பிரதிநிதிகளின் ஆலோசனை முடிவுப்படி அம் மகாஜனங்களால் அல்லது, அப்பிரதிநிதிகளால், (தேச அரசாட்சியை நடாத்துவதற்குத் தகுதி வாய்ந்தவன் என்று) தேர்ந்தெடுக்கப் பெற்ற தலைவன் ஒருவனால் ஆளப்படுதல். (‘மகா ஜனங்களால்’ என்பது அவர்களிற் ‘பெரும்பாலார்களால்’ எனவும், ‘பிரதிநிதிகளின்’ என்பது அவர்களிற் ‘பெரும்பாலார்களின்’ எனவும் பொருள்படும். ஆண்பால் பெண்பாலையும் குறிக்கும்). 

இவ்வரசு தன் தேசத்து அகக் காப்பு, புறக்காப்பு, முதலிய காரியங்களிலும் பிற தேசங்களை நட்பு, பகை, நொதுமல் என்னும் மூன்றில் ஒன்றாகக் கொள்ளுதல், முதலிய காரியங்களிலும் பூரண சுதந்திரமும் சவாதீனமுமுடையது. இவ்வரசாட்சி பிரான்ஸ் தேசத்திலும், அமெரிக்கா தேசத்திலும், தற்காலம் நடைபெறுகின்ற அரசாட்சி போன்றது. இதனைக் ‘குடியாட்சி’ (Republic Government) என்று கூறுவர் அறிஞர்.

2. ஒரு தேசம், தனது மகாஜனங்களால் (தங்கள் குடியுரிமைகளைக் காக்கத்தக்கவர்களென்று) தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் ஆலோசனை முடிவுப்படி தன்னை நெடுங்காலம் ஆண்டுவந்த, அல்லது ஆளவந்த அரசன் ஒருவனால் ஆளப்படுதல். 

இவ்வரசும் தன் தேசத்து அகக்காப்பு, புறக்காப்பு, முதலிய காரியங்களிலும், பிற தேசங்களை நட்பு, பகை, நொதுமல் (நொதும்பல் -விருப்பு வெறுப்பின்மை) என்னும் மூன்றில் ஒன்றாகக் கொள்ளுதல் முதலிய காரியங்களிலும் பூரண சுதந்திரமும், சுவாதீன முடையது. இவ்வரசாட்சி இங்கிலாந்து தேசத்திலும், ஜப்பான் தேசத்திலும் தற்காலம் நடைபெறும் அரசாட்சி போன்றது. இதனை ‘கோனாட்சி’ (Monarchical Government)  என்பர் அறிஞர்.

3. ஒரு தேசம், தனது மகாஜனங்களால் (தங்கள் குடியுரிமைகளைக் காக்கத் தக்கவர்களென்று) தேர்ந்தெடுக்கப்பெற்ற பிரதிநிதிகள் ஆலோசனை முடிவுப்படி அம்மகாஜன மக்களால், அல்லது பிரதிநிதிகளால் (தேச அரசாட்சி நடத்துவதற்குத் தகுதி வாய்ந்தவனென்று) தேர்ந்தெடுக்கப்பெற்ற தலைவன் ஒருவனால் ஆளப்படுதல். 

ஆனால் இவ்வரசு தன் தேசத்து அகக்காப்பு, புறக்காப்பு முதலிய காரியங்களில் மாத்திரம் பூரண சுதந்திரமும் சுவாதீனமும் உடையது. 

பிறதேசங்களை நட்பாகவோ, பகையாகவோ, நொதுமலாகவோ கொள்ளுதல், முதலிய காரியங்களில் மேற்கூறிய அரசுகளில் முதலாவது வகை அரசைச் சார்ந்தது. அதன் ஆணைப்படி நடக்கக் கட்டுப்பட்டது. 

இவ்வகையான அரசாட்சி தற்காலம் எந்த தேசத்திலாவது நடைபெறுவதாகத் தெரியவில்லை. 

இதனைச் ‘சார்ந்த குடியாட்சி (Dependent Republican Government) என்பர் அறிஞர்.  

4. ஒரு தேசம், தனது மகாஜனங்களால் (தங்கள் குடியுரிமைகளைக் காக்க தக்கவர்களென்று) தேர்ந்தெடுக்கப்பெற்ற பிரதிநிதிகளின் ஆலோசனை முடிவுப்படி அத்தேசத்தை நெடுங்காலம் ஆண்டு வந்த, ஆள வந்த, அரசன் ஒருவனால் ஆளப்படுதல்.

ஆனால் இவ்வரசு தன் தேசத்து அகக்காப்பு, புறக்காப்பு முதலிய காரியங்களில் மாத்திரம் பூரண சுதந்திரமும், சுவாதீனமுடையது. பிற தேசங்களை நட்பாகவோ, பகையாகவோ, நொது மலாகவோ கொள்ளுதல், முதலிய காரியங்களில் மேற்கூறிய மூவகை அரசு களில் இரண்டாவது வகை அரசைச் சார்ந்து அதன் ஆணைப்படி நடக்கக் கட்டுப்பட்டது. 

இவ்வரசாட்சி ஆஸ்திரேலியா தேசத்திலும், கானடா தேசத்திலும், தென் ஆப்பிரிக்காத் தேசத்திலும் தற்காலம் நடைபெறும் அரசாட்சி போன்றது. 

இதனைச் ‘சார்ந்த கோனாட்சி’(Dependent Monarchical Government) என்பர் அறிஞர். முந்திய அரசு இரண்டும் ‘பேரரசு‘’ எனவும், பிந்திய அரசு இரண்டும் சிற்றரசு எனவும் வழங்கப்படும்.

மகாஜனங்களால் தேர்ந்தெடுக்கப் பெற்ற பிரதிநிதிகளின் ஆலோசனை முடிவுப்படி நடைபெறா ஆட்சிகள் ‘அரசாட்சி’ என்று சொல்லப்படும் தகுதியுடையன அல்ல. ஆதலால் அவற்றின் கூறுபாடுகள் முதலியவற்றைப் பற்றி இங்குப் பேச வேண்டிய அவசியம் இல்லை.

நாம் விரும்பும் சுய அரசாட்சி

மேற்கூறிய நான்கு வகையான சுய அரசாட்சிகளுள் முன்னைய மூன்றில் ஒன்றை நாம் அடைய வேண்டுமென்று நம் தேசத்தாரில் ஒருவன் சொல்வானானால், அதுவே இந்தியன் பினல்கோடு 124பி பிரிவுப்படி குற்றமாகுமோ என்று யான் அஞ்சுகின்றேன். ஆதலால், அவற்றைப் பற்றி யான் ஒன்றும் பேசாது அம்மூவகை சுய அரசாட்சிகளும் நமக்கு ஆகாதவை என்று தள்ளிவிடுகின்றேன். 

ஆகவே நாம் அடைய விரும்பும் சுய அரசாட்சி மேலே நான்காவது வகையாகக் கூறப்பட்ட சுயஅரசாட்சியே. 

அவ்வரசாட்சி தான் நம் தேசத்தின் தற்கால நிலைமைக்கும் பொருத்தமானதென்று கொள்ளத் தக்கது. 

நம் தேச பக்தர்களிற் சிலர் மேற்கூறிய நான்கு வகை சுய அரசாட்சிகளில் முதலாவது வகை சுய அரசாட்சி ஒன்றே நாம் வேண்டுவது எனக் கூறக் கேட்டிருக்கிறேன். 

அக்கூற்றுத் தற்கொல்லியும் பயனிற் சொல்லும் ஆமென்று யான் கருதுகின்றேன். 

ஆகவே, நாம் அடைய விரும்பும் சுய அரசாட்சி நமது தேசத்து அகப்புறக் காப்புகள் முதலிய காரியங்களில் நாம் பூரண சுதந்திரமும் சுவாதீனமும் உடையவராயும் பிற தேசங்களை நட்பு, பகை, நொதுமல் என்ற மூன்றில் ஒன்றாகக் கொள்ளுதல் முதலிய காரியங்களில் பெரிய பிரிட்டன்  (Great Britain) தேசத்து அரசைச் சார்ந்து அதன் ஆணைப்படி ஒழுகும் கடப்பாடு உடையவராயும் இருக்கும் சுய அரசாட்சியே. 

இத்தகைய அரசாட்சியைச் ‘சுய அரசாட்சி’ எனச் சொல்லலாமோ? எனின், சொல்லலாம். என்னை? 

நமது தேசத்து அகப்புறக்காப்பு முதலிய காரியங்களிலெல்லாம் நாம் பூரண சுதந்திரமும் சுவாதீனமும் உடையவராகலான்.

இச்சுய அரசாட்சிக்கே நாம் தகுதியுடையவரல்லர் என்று நம்மை ஆள்வோரும் நம் கிழவர் சிலரும் கூறுகின்றனர்.

அதற்கு அவர்கள் கூறும் காரணங்களிற் சில வருமாறு:

1. இச்சுய அரசாட்சிக்கு நாம் உண்மையில் தகுதியுடையோராயிருப்பின், அவரவர் தகுதிக்குத் தக்க ஸ்தாபனங்களை அவரவர்க்கு அளிக்கும் சர்வ நியாயாதிபதியான எல்லாம் வல்ல இறைவன் நம்மை நமது தற்கால சுதந்திர மற்ற நிலைமையில் வைத்திருப்பாரா?

2. நம்மிற் பெரும்பாலார் (Majority) பிறர் பொருள்களையும் உரிமை களையும் அபகரிக்க விரும்பாத நடுநிலைமையிலுள்ளரா யிருக்கினறரா? எளியோரை வலியோர் வருத்துங்கால், எளியோருக்கு உதவியாய் வலியோரை எதிர்க்க நம்மிற் பெரும்பாலார் சித்தமாயிருக்கின்றனரா? மதங்களை அழிப்பதிலும், அறங்களை வளர்ப்பதிலும், நம்மிற் பெரும்பாலார் விருப்ப முடையோரா யிருக்கின்றனரா? 

பெருந்தொகையினராயுள்ள ஜாதியார்கள் சிறுதொகையினராயுள்ள ஜாதியார்களைத் தாழ்த்தி, அவமதித்து, வருத்தும் சுபாவத்தை நம்மிற் பெரும்பாலார் விட்டுவிட்டனரா?

3. நாம் சுய அரசாட்சியை அடைவோமாயின், நம் தேசத்தில் சிறு தொகையினராயுள்ள ஜாதியார்களுடையவும் நம்மால் அநியாயமாகத் தாழ்த்தப்பட்டிருக்கிற ஜாதியார்களுடையவும் உரிமைகளையும் சுதந்திரங்களையும் நாம் கவர முற்படோம் என்று அந்த ஜாதியார்கள் நம்புவதற்கு நாம் என்ன செய்திருக்கிறோம்? 

அந்த நம்பிக்கை அவர்களுக்குப் பூரணமாக உண்டாலன்றி, அவர்கள் நம்முடன் சேர்ந்து சுய அரசாட்சி அடைவதற்கு ஒத்துழைப்பார்களா? அவ்விரு வகையான ஜாதியார்கள் என்னென்ன உரிமைகளையும் சுதந்திரங்களையும் அடைய விரும்புகின்றவர்கள் என்றாவது நாம் தெரிந்துள்ளோமா?

4. நம் தேசத்திலுள்ள பல மதஸ்தர்களும் தத்தம் மதச் செயல்கள் பிற மதஸ்தர்களைப் பாதிக்காதவாறு தத்தம் மதக் கோட்பாடுகளைத் திருத்திக் கொண்டனரா? 

இம்மதக் கோட்பாடுகள் மேற்சொல்லியபடி திருத்தப்படாத வரையில் நம்மவர்களுள் நெடுங்காலமாக நடந்து வருகின்ற மதச் சச்சரவு களும் சண்டைகளும் கொலைகளும் நீங்குமா? அவை நீங்காத வரையில் நமக்குள் ஒற்றுமை ஏற்படுமா? அவ்வொற்றுமை ஏற்படாத வரையில் நமக்குச் சுய அரசாட்சி வேண்டுமென்று நம்மை ஆள்வோரிடம் இரக்கவாவது நாம் அருகரா?

 இவர்கள் இவ்வாறு சொல்வதையும் நமது தற்கால நிலைமை யையும் கவனிக்குங்கால், நாம் விரும்பத்தக்கது மேற்கூறிய நான்காவது வகைச் சுய அரசாட்சியேயாம்.

Tuesday, August 30, 2022

வ.உ.சி.தலைமையில் 3வது அரசியல் மாநாடு

 வ.உ.சிதம்பரனார் 151 ஆம் பிறந்த நாள் (5.9.1972).....

1927நவம்பர் மாதம் 5,6 தேதிகளில் 

திருவாளர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் தலைமையில் நடைபெற்ற சேலம் 3 வது அரசியல் மாநாடு

சேலம் ஜில்லா 3-வது அரசியல் மாநாட்டின் தலைவர் அவர்களையும் மற்றைய அரசியல் தலைவர்களையும் பிரதிநிதிகளையும் சிறப்புடன் வரவேற்பதற்காக வேண்டிய ஏற்பாடுகள் 2 நாள் முன்னரிருந்தே நடை பெற்றது. நகர் முழுவதும் வளைவுகளாலும் தோரணங்களாலும் அலங்கார மாய் சிங்காரிக்கப்பட்டிருந்தது. மகாநாட்டுத் தலைவர் திரு.வி.ஓ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் காலை 9 மணிக்கு சேலம் டவுன் செவ்வாய்ப் பேட்டை தேர் நிலையிலிருந்து முதல் அக்கிரகாரம் நடை வீதி வழியாய் பாண்டு வாத்தியங் களுடன் ஊர்வலமாய் அழைத்து வரப்பட்டது. 

தலைவர் திரு. சிதம்பரம் பிள்ளை அவர்களும் வரவேற்புக் கமிட்டித் தலைவர் திரு. தம்மண்ண செட்டியார் அவர்களும் முன்னணியிலும் ஈரோடு குடிஅரசு ஆசிரியர் திரு. ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அவர்கள் திரு. ஆர்.கே. ­ண்முகம் செட்டியார் அவர்கள் டாக்டர் வரதராஜலு நாயுடு அவர்கள் பின்னணியிலும் இரண்டு மோட்டார்களில் வரவும், முன்னால் மாணவர்கள் உள்பட பல வாலிப தொண்டர்கள் அணிவகுத்து வழி விலக்கவும், பிரபலஸ்தர் கள் புடைசூழவும், ஊர்வலம் சுமார் 3000 ஜனங்களடங்கிய பெருங் கோஷ்டி யாய் ‘ஜே’ கோ­ங்களுடன் புறப்பட்டு வந்தது. ஊர்வலம் 11 மணி வரையில் நடைபெற்றது. பின்னர் தலைவர்கள் ஜாகைக்கு அழைத்துச் செல்லப் பட்டார்கள்.

எலெக்டிரி தியேட்டரில் மகாநாடு ஆரம்பம்

மகாநாடு பகல் 2 மணிக்கு ஆரம்பம் என்றிருந்தாலும் மகாநாடு ஆரம்பமாக மாலை 3 மணி ஆகிவிட்டது. 

தலைவர் வருவதற்கு முன்னர் கொட்டகையில் பிரதிநிதிகளும் விசிட்டர்களும் நிறைந்து விட்டார்கள்.

 தலைவர் கரகோ­த்துடன் வரவேற்கப்பட்டு ஆசனத்தி லமர்ந்தார். மேடையில் பல இடங்களிலிருந்தும் வந்த வரவேற்புக் கமிட்டி அங்கத்தினர்களும் தலைவர் களும் நிறைந்திருந்தார்கள். அவர்களில் கீழ்க்கண்டவர்கள் முக்கியஸ்தர்கள்: திரு. பிஞ்சல சுப்பிரமணிய செட்டியார், ராவ் சாகிப் எல்லப்ப செட்டியார், எம்.எல்.சி., திரு.ஆர்.கே.­ண்முகம் செட்டியார், எம்.எல்.ஏ., திரு. ஈ.வெ. ராமசாமி நாயக்கர், டாக்டர் வரதராஜூலு நாயுடு, திரு. தெண்டபாணி பிள்ளை, திருவாளர்கள் டி.எஸ். ஜெகராஜ் பி.எ.பி.எல்., எம்.சாமிநாதய்யர் பி.ஏ., பி.எல்., கே. சிவசங்கர முதலியார், டாக்டர் ரங்கய்ய நாயுடு, பி.இராஜமாணிக்கம் பண்டாரம், டி.வி. பங்காரு செட்டியார், எ.கே. சுந்தரய்ய செட்டியார், கே.எஸ். அருணாஜலம் செட்டியார், எஸ். பெரியசாமி முதலியார், என்.கே. சடகோப முதலியார், நாமக்கல் உஸ்மான் சாயுபு, புரொபசர் ராமமூர்த்தி, ஆத்தூர் அமீத் சாயபு, ஏ. வையாபுரி பண்டாராம், பூபதி கந்தசாமி பிள்ளை, எஸ்.பி. பொன்னுசாமி முதலியார், கே. மாரிமுத்து முதலியார், பாப்பாபட்டி சின்னமுத்து முதலியார், ராமசந்திர நாயுடு, பி. ஸ்ரீராமலு செட்டியார், பி.எ.பி.எல்., சித்தி ராஜு, கோவிந்தசாமி நாயுடு. சிவப் பெருமாள் பிள்ளை, ஒபிளி செட்டியார், கதிர் செட்டியார், ஜெகநாத செட்டியார், அங்கமுத்து முதலியார், ஏத்தாபூர் நாராயண செட்டியார், பி. சிவராவ் எம்.எஸ்.சி. முதலிய முக்கியஸ்தர்கள் வந்தார்கள்.

முனிசிபல் சேர்மனும் வரவேற்பு கமிட்டித் தலைவருமான எஸ். தம்மண்ண செட்டியார் பிரதிநிதிகளைவரவேற்று தம் பிரசங்கத்தை வாசித்தார். மகா நாட்டுக்கு வரமுடியாதவர்கள் அனுப்பிய தந்திகளை வாசித்தார்.

பின்னர் டாக்டர் நாயுடு அவர்கள்மகாநாட்டுக்குத் தலைமை வகிக்க திரு. வி.ஓ. சிதம்பரம் பிள்ளை அவர்களை பிரேரேபிக்க ராவ்சாகிப் எல்லப்ப செட்டியார் ஆமோதிக்க திருவாளர்கள் வெங்கடாஜல ரெட்டியார் நாமக்கல் உஸ்மான் சாயுபு, எம். சாமிநாத அய்யர், ஆர்.கே. சண்முக செட்டியார், ஈ.வெ. ராமசாமி நாயக்கர் இவர்கள் ஆதரிக்க தலைவர் அவர்கள் கரகோ­த்தினி டையே பதவியையேற்று தமது அக்கிராசனப் பிரசங்கத்தை வாசித்தார்.

குறிப்பு : மற்றைய நடவடிக்கைகளும் அக்கிராசனப் பிரசங்கமும் அடுத்த வாரம் வெளிவரும்.

நிறைவேறிய தீர்மானங்கள்

1. இந்திய சமூக வளர்ச்சிக்கும் சுயராஜ்யம் விரைவில் பெறுவதற்கும், ஜாதி வித்தியாசம் முதலிய சமூக ஊழல்களை ஒழிப்பதில் காங்கிரஸ் தலையிட வேண்டியது அவசியமாயிருப்பதால், அதற்கு அநுகூலமாக காங்கிரஸ் விதிகளை அமைத்து சமூகச் சீர்த்திருத்தம் செய்ய முயலுவதாக காங்கிரஸ் மெம்பர்கள் வாக்குறுதியளிக்குமாறு செய்ய வேண்டுமென்று இந்த மகாநாடு அபிப்பிராயப்படுகிறது.

2. வரப்போகும் ராயல் கமி­ன் பார்லிமெண்டு மெம்பர்களடங்கிய ஒரு கமி­னாக இருக்குமென்று கேட்டு இந்த மகாநாடு வருந்துவதுடன் போது மானஅளவுக்கு இந்தியப் பிரதிநிதிகள் கமி­னில் இல்லாவிட்டால் தேசத் தாருக்கு கமி­ன் திருப்திகரமாயிருக்காதென்றும் இம்மகாநாடு தீர்மானிக் கிறது.

3. அ) கெளகத்தி காங்கிரஸ் கட்டளைக்கு விரோதமாக சட்டசபை மெம்பர் களுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியார் உத்தரவுகள் அனுப்பியதை இந்த மகாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.

ஆ) சென்னை காங்கிரஸ் கட்சி மெம்பர்களில் சிலர் மந்திரி பதவி ஒப்புக் கொள்வதற்கு அனுகூலமுடையவராகக் காணப்படுவதால், காங்கிரஸ் கட்சியார் உத்தியோகம் ஒப்புக்கொள்வது தேர்தல் வாக்குறுதிக்கு விரோதமான தென்றும், அடுத்த காங்கிரஸ் உத்தியேகம் ஒப்புக்கொள்ளும்படி தீர்மானம் செய்தால் உத்தியோகம் ஒப்புக் கொள்ள விரும்பும் சட்டசபை மெம்பர்களை ராஜிநாமா செய்யச் சொல்லி மீண்டும் தேர்தலுக்கு நிற்குமாறு தூண்ட வேண்டுமென்றும் இம்மகாநாடு தீர்மானிக்கிறது.

4. ‘காமன் வெல்த்து ஆப் இந்தியா’ மசோதாவைப் பரிசீலனை செய்து அது சர்வஜன சம்மதம் பெற ஏதேனும் திருத்தங்களோ மாற்றங்களோ தேவை யிருந்தால் அவைகளைக் குறிப்பிடுமாறு காங்கிரஸ் ஒரு கமிட்டியை நியமிக்கும் படி இம்மகாநாடு தீர்மானம் செய்கிறது. இந்த மசோதா வி­யத்தில் டாக்டர் பெசண்டு எடுத்துக் கொண்ட அரிய முயற்சிகளை இம்மகாநாடு மிகவும் பாராட்டுகிறது.

5.அ) இந்த நாட்டிலுள்ள ஜனங்களை சமூக வி­யங்களில் அடிமையாக வைப்பதற்குக் காரணமாயிருக்கும் வருணாசிரம தர்மத்தைப் பற்றி மகாத்மா தென்னாட்டுப் பிரயாண காலத்தில் பிரசாரம் செய்ததற்காக இம்மகாநாடு வருந்துகிறது.

ஆ) தீண்டாமை யயாழித்தல், பிறப்பினால் உயர்வு தாழ்வுண்டென்னும் உணர்ச்சியை நீக்கல், முதலியவைகளுக்காக எல்லா இந்துக்களும் பிரசாரம் செய்து சுயமரியாதை உணர்ச்சியை விருத்தி செய்ய வேண்டுமென்று இந்த மகாநாடு கேட்டுக் கொள்கிறது. தேவையானால் எங்கும் சத்தியாக்கிரக ஆசிர மங்கள் ஸ்தாபனம் செய்ய வேண்டுமென்றும் இந்த மகாநாடு அபிப்பிராயப் படுகிறது.

6. ஆலயங்களில் பூசை செய்யும் உரிமையை சிலர் கைப்பற்றி எல்லா ஜனங்களுக்கும் அவ்வி­யத்திலுள்ள பிறப்புரிமையைப பிடுங்கிக் கொண்ட தினால் இந்த அக்கிரமத்தை நிறுத்தவும் ஆலயத்தில் பூஜை செய்யவும் அதற்காகக் கோயிலுக்குள் போகவும் ஒவ்வொரு இந்துவும் உரிமை பெறச் செய்யவும் இந்துத் தலைவர்கள் முயற்சி செய்ய வேண்டுமென்று இந்த மகாநாடு தீர்மானிக்கிறது.

7. தமிழ்நடு மாகாண காங்கிரஸ் கமிட்டியார் கங்காணி சபைகள் ஸ்தாபித்து காங்கிரஸ் ஆட்கள் சேர முடியாமல தடை செய்திருப்பதையும் ஒரு கட்சியார் தம் கட்சியாருக்கு மட்டும் ஜில்லா தாலுகா கமிட்டிகளில் ஆதிக்க முண்டாகுமாறு சூழ்ச்சி செய்து வருவதையும் இம்மகாநாடு கண்டிக்கிறது.

8. வகுப்பு வேற்றுமைகளும் ஜாதி வித்தியாசங்களும் இருக்கும்வரை எல்லா சமூகத்தாருக்கும் உத்தியோகமும் மற்றும் பதவிகளும் சமமாகக் கிடைக்கும்படி தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டுமென்று இந்த மகாநாடு தீர்மானிக்கிறது.

9. சேலம் ஜில்லாவில் ஒரு பகுதிக்கு மேட்டூர் தேக்கத்திலிருந்து நீர்ப்பாசனத் துக்காக தண்ணீர் விட்டுக் கொடுக்க வேண்டுமென்று இந்த மகாநாடு தீர்மானிக்கிறது.

10. கிராமங்களில் அதிகப்படியான பாடசாலைகளும் சித்த வைத்திய சாலைகளும் ஸ்தாபிக்க வேண்டியதும் எல்லா ஆரம்பப் பள்ளிக்கூடங்களிலும் ஆதிதிராவிடக் குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி கற்பிக்க வேண்டியதும் மிகவும் அவசியமென்று இந்த மகாநாடு சர்க்காருக்கு வற்புறுத்துகின்றது. (குடிஅரசு, 18.11.1927)

அரசியல் பெருஞ்சொல் - வ.உ.சி.உரை-1

சேலம் அரசியல் மகாநாட்டில் வ.உ.சிதம்பரனார், 'அரசியல் பெருஞ்சொல்' என்ற தலைப்பில் ஆற்றிய தலைமை உரை...

எனது பெருஞ்சொல்

மூன்றாவது அரசியல் மகாநாடு...

கடவுள் வணக்கம்

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்

மடிதெற்றுத் தான்முந் துறும்.

என்றபடி எளிமை யுற்றிருக்கா நின்ற எனது நாட்டினை வலிமைப் படுத்துவேன் என்று ஊக்கும் எனக்கு எல்லாம் வல்ல இறைவன் தனது  உடையை இறுக உடுத்துக்கொண்டு எனது வழிகாட்டியாக என் முன் செல்வானாக.

செய்ந்நன்றியறிதல்

எழுமை ஏழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்

விழுமம் துடைத்தவர் நட்பு

என்றபடி என் நாட்டினை மேம்படுத்தக் கருதி யான் ‘சுதேசிய நீராவிக் கப்பல் சங்க’த்தை நிறுவிய காலத்தில் பல்லாயிரக்கணக்காகப் பொருள் அளித்துத் துணைபுரிந்தும் அவ்வூக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்து வாடிய காலத்தில் வேண்டியவற்றை ஈந்து என் வாட்டத்தைக் களைந்தும், தேசாபிமானமும் என்பால் உளதோ என்று சிலர் ஐயமுறும் இக்காலத்தில் தேசாபிமானத்திற்கே உறைவிடம் என்று சொல்லும்படியான சிறப்பு வாய்ந்த சேலம் ஜில்லாவாசிகள் கூடிய இம்மகாநாட்டின் தலைமைப் பதவியை நல்கி மேன்மையளித்தும், நீங்கள் எனக்குச் செய்த நன்றியை எழுமை எழுபிறப்பும் உள்ளுவேனாக.

என்னைப் பற்றிச் சில சொற்கள்

கல்கத்தா நகரத்தில் நடந்த விசே­ச காங்கிரஸ் மகாநாட்டில் என் தேசீயக் கோட்பாடுகளுக்கு முற்றிலும் மாறான கோட்பாடுகள் அடங்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உடனே யான் சென்னைக்கு வந்து, திலகர் சுயாட்சி சங்கத்தின் விசே­ கூட்டம், ஒன்றைக் கூட்டி மேற்கண்ட விசே­க் காங்கிரஸ் மகாநாட்டின் தீர்மானங்களை எல்லாம் கண்டித்து தீர்மானங்களை நிறைவேற்றிப் பத்திரிகைகளிற் பிரசுரித்துவிட்டு யான் காங்கிரஸினின்று விலகி இதுகாறும் ஒடுங்கியிருந்தேன். 

என் கோட்பாடுகளுக்கு மாறான நீதி ஸ்தல பஹிஸ்காரம், கலாசாலை பஹிஸ்காரம், சட்டசபை பஹிஸ்காரம் முதலிய பஹிஸ்காரங்களெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நீங்கிக் காங்கிரஸ் மகாசபை, தனது கல்கத்தா விசே­ மகாநாட்டிற்கு முன்னிருந்த நிலைமைக்கு வந்துவிட்டபடியால் யான் திரும்பிக் காங்கிரஸில் புகலாம் என்று நினைத்தேன்.  

என்னைப் போல காங்கிரஸை விட்டு விலகி நின்ற எனது பிராமணரல்லாத சகோதரர்களில் உண்மையான தேசாபிமானிகள் சிலர் கோவை நகரில் ஒரு விசே­ மகாநாடு கூட்டிப் பிராமணரல்லாதார்களுடைய தேச சேவைக்குக் காங்கிரஸ் மகாசபையைக் கைப்பற்றி ஒரு கருவியாக உபயோகித்தல் இன்றியமையாததென்று தீர்மானித்தார்கள். 

எனக்கும் என் தேசத்திற்கும் நல்லகாலம் பிறந்துவிட்டதென்று கருதினேன். சென்ற பல ஆண்டுகளாக ஒடுங்கியிருந்த யான் எவ்வாறு வெளிவருவதென்று சிந்தித்துக் கவன்று கொண்டிருந்தேன்.

உடுக்கை யிழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு

என்றபடி எனது நண்பர்களாகிய நீங்கள் உங்களுடைய இம் மகா நாட்டிற்குத் தலைமை வகிக்க வேண்டுமென்று எனக்குக் கட்டளை இட்டீர்கள். அக்கட்டளை எனக்கு ‘காலத்தினாற் செய்த நன்றி’யும் ‘பழம் நழுவிப் பாலில் விழுந்தது’ போலும், ஆயிற்று.

‘தேச அரசாட்சியை மீட்பதற்காக தேச ஜனங்கள் சாத்வீக எதிர்ப்பைக் கைக்கொண்டு போராடும் காலத்தில் தேசாபிமானம் இல்லாது புறங்காட்டி ஓடுகின்றீரே’ என்று என்னிடம் கேட்ட ஒரு பாரிஸ்டர் புன்மொழியும் ‘இராஜாங்கத்தாரிடம் கைக்கூலி பெற்றுத் தேசத் துரோகம் செய்து கொண்டிருக்கிறான் சிதம்பரம்பிள்ளை’ என்று பொருள்படும்படி எழுதிய ஒரு பத்திரிகையாசிரியர் புன்மொழியும் இன்றும் என்னால் மறக்க முடியவில்லை. தேசாபிமான ஒளி நாளுக்கு நாள் வளர்வதேயன்றிக் குறைவதும் அவிவதும் இல்லை.

 ‘விளக்குப் புகவிருள் சென்றாங்கொருவன் தவத்தின் முன் நில்லாதாம் பாவம்’ என்றபடி தேசாபிமான ஒளிமுன் தேசத்துரோகம் இருள் நில்லாது. இவ்வுண்மையினை அவர் அறிவாராக.

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்

தாக்கற்குப் பேருந் தகைத்து

என்று சிலர் என் சென்ற கால ஒடுக்கத்தைப் பற்றிக் கூறும் உயர்மொழியும், ‘பிராமண அபிமானி’ என்று பிராமணரல்லாத சிறுவர் சிலராலும், ‘வஞ்சக சொரூபி’ என்று பிராமணர் ஒருவராலும் அநியாயமாகப் பழிக்கப்பெற்ற ஸ்ரீதிலகருடைய சீடன் வெளிவந்துவிட்டான் என்று பலர் பேசும் உயர் மொழியும் என்னைச் சேரும்படியான நற்காலம் வந்ததற்காக யான் பெரிதும் அக மகிழ்கின்றேன். அந்நற்கால வரவிற்குக் காரணஸ்தர்களாயுள்ள உங்கள் எல்லோரையும் வணங்குகின்றேன்.

அவையடக்கம்

இது போன்ற மகாநாடுகளில் தலைமை வகிக்கும் பெரியார் ஒவ்வொரு வரும் ‘பெருமை பெருமிதமின்மை’, ‘பணியுமாம் என்றும் பெருமை’ என்ற படி தாம் அம்மகாநாட்டின் தலைமை வகித்தற்கு வேண்டிய அறிவும் ஆற்றலும் இல்லாதவரென்று தமது ‘பெருமிதமின்மை’யைக் கூறி யார் யார்க்கும் தாழ்ச்சி சொல்லிப் ‘பெருமையும்’ ‘பெருஞ்சுட்டும்’ பெறுவர். பெரியார்க்கு இலக்கணம் பெருமிதமின்மை கூறலும், யார்யார்க்கும் தாழ்ச்சி சொல்லலும் என்றால், சிறியார்க்கு இலக்கணம் பெருமிதம் கூறலும், யார் யார்க்கும் உயர்ச்சி சொல்லலும் என்பது சொல்லாமலே விளங்கும். 

அது பற்றியன்றோ  ‘சிறுமை பெருமிதம் ஊர்ந்துவிடும்’ எனவும், ‘சிறுமை அணியுமாம் தன்னை வியந்து’ எனவும் கூறியுள்ளார் நம் பெரியார். அவர் வாக்கைப் பின்பற்றிச் சில காரணங்கள் கூறி இம்மகாநாட்டின் தலைமை வகித்ததற்கு யான் தகுதி யுடையோன் என்பதை நிருபிக்கின்றேன்.

 இம்மகாநாடு இந்தியன் நே­னல் காங்கிரசின் ஒரு கிளை. யான் ஒரு இந்தியன். இது சிறந்த தேசாபிமானிகள் கூடியுள்ள மகாநாடு. யானும் தேசாபிமானி என்று சொல்லிப் பெருமை பாராட்டுகின்றவன். 

இம்மகாநாட்டிற் குழுமியள்ளோரிற் பெரும்பாலார் பிராமணரல்லாதார். யானும் ஒரு பிராமணரல்லாதான்.  இந்த ஜில்லா சிறந்த ஒரு தமிழ்நாடு. யானும் சிறந்த ஓர் தமிழன்.

 இம்மகாநாட்டில் முதன்மையாக நிற்போர் வருடக்கணக்கில் சிறைத் தீர்ப்புப் பெற்று வருடக்கணக்கில் சிறையில் வசித்தவர். யானும் ஏககாலத்தில் நடைபெறும் இரண்டு இருபது வருடங்கள் சிறைத் தீர்ப்புப் பெற்று ஒரு நாலரை வருடம் சிறையில் வசித்தவன்.

இம்மகாநாடு உங்கள் எல்லோராலும் மிக நேசிக்கப்பெற்றது. யானும் உங்களால் மிக நேசிக்கப்பெற்றவன். உங்களிற் பலர் உழவும், உபகாரமும் செய்கின்ற உண்மை வேளாளர். யானும் ஜாதி மாத்திரையில் ஒரு வேளாளன். 

உங்களிற் பலர் பலமில்லாத பிற ஜாதியாரைத் தாழ்த்துதலை இயற்கையாக கொண்டுள்ள ஜாதியாரென்று உண்மை தேசாபிமானிகளால் பழிக்கப் படுகின்றவர். யானும் அத்தன்மையான ஜாதியானென்று உண்மைத் தேசாபிமானிகளால் பழிக்கப்படுகின்றவன். 

இப்பல ஒற்றுமைகளால் யான் இம்மகா நாட்டில் தலைமை வகித்ததற்குத் தகுதியுடையோன்.

 ஆயினும், பல வி­யங்களில் என் அபிப்பிராயமும் உங்கள் அபிப்பிராயங்களும் மாறுபடலாம். என் அபிப்பிராயத்தை நீங்கள் கேட்டு, உங்கள் அபிப்பிராயங்களைத் தெரிவித்த பின்னர் யான் எனது அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்ளுதல் கூடும். ஆதலால் யான் சொல்பவற்றைப் பொறுமையோடு கேட்கும்படியாக உங்களை மிக  வணக்கத்தோடு உங்களைப் பிரார்த்திக்கிறேன்...1