Wednesday, February 1, 2023

இந்தித் திணிப்பு - காமராசர் கண்ட தீர்வு - பழ. நெடுமாறன்

இந்தித் திணிப்பு – காமராசர் கண்ட தீர்வு!

பழ. நெடுமாறன்

1963ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட இந்திய ஆட்சிமொழிச் சட்டத்தின் கீழ் 1976ஆம் ஆண்டில் ஆட்சிமொழிக்கான நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட்டது. இககுழுவில் மக்களவை உறுப்பினர்கள் 20 பேரும், மாநிலங்களவை உறுப்பினர்கள் 10 பேரும் நியமிக்கப்பட்டு ஆட்சிமொழி நடவடிக்கைகளில் இந்தியை பயன்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்து, குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்யவேண்டும். ஐந்தாண்டுகளுக்கொரு முறை ஆட்சிமொழிக்கான நாடாளுமன்றக் குழு திருத்தியமைக்கப்படும். அதன்படி 2019ஆம் ஆண்டில் உள்துறை அமைச்சர் அமித்சா தலைமையில் ஆட்சிமொழிக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு குடியரசுத் தலைவரிடம் அளித்த அறிக்கையில் நூற்றுக்கும் மேற்பட்ட பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் முதன்மையான பரிந்துரைகள் கீழ்வருமாறு:


1. நாட்டில் உள்ள இந்தி பேசும் மாநிலங்களில் அமைந்திருக்கும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிலையங்கள் (ஐ.ஐ.டி.), அகில இந்திய மருத்துவக் கல்விக்கான நிலையங்கள் (எய்ம்ஸ்), ஒன்றிய அரசின் தொழில்நுட்பக் கல்விக்கான நிலையங்கள், நவோதய வித்யாலயா கல்வி நிறுவனங்கள், ஒன்றிய அரசின் பல்கலைக்கழகங்கள், கேந்திரியா வித்யாலயா கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பயிற்றுமொழியாக இந்தி இருக்கவேண்டும்.


2.இந்தியாவின் ஆட்சிமொழியாக இந்தி விளங்க வேண்டுமென்றால், பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிலையங்கள், தொழில்நுட்பக் கல்வி மற்றும் மருத்துவ கல்வி நிலையங்களில் இந்தி பயிற்றுமொழியாக ஆக்கப்படவேண்டும். இல்லையேல் இந்தியாவின் பொது மொழியாக இந்தி விளங்க முடியாது.


3.பீகார், சத்தீசுகர், உத்தரகாண்ட், சார்கண்ட், அரியானா, இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், இராசசுத்தான், உத்திரப் பிரதேசம், தில்லி மாநிலம் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகியவற்றில் நூற்றுக்கு நூறு சதவீதம் இந்தி மொழியின் பயன்பாடு இருக்க வேண்டும்.


4. இந்திய அரசின் பணிகளுக்கான தேர்வுகளில் கட்டாய ஆங்கில மொழி வினாத்தாள் இருப்பதைக் கைவிட வேண்டும்.


5.இந்தி பேசும் மாநிலங்களில் பணியாற்றும் ஒன்றிய அரசின் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் இந்தியைப் பயன்படுத்தாவிட்டால், அவர்களுக்கு எச்சரிக்கைவிட வேண்டும். அதற்குப் பிறகும் அவர்கள் இந்தியைப் புறக்கணித்தால் அது குறித்து அவர்களின் ஆண்டு செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கையில் குறிக்கவேண்டும்.


6.ஒன்றிய அரசு அலுவலகங்கள், அமைச்சர்களின் துறைகள் ஆகியவற்றின் கடிதங்கள், மின்னஞ்சல்கள் போன்றவை இந்தியில் இருக்கவேண்டும்.


7.இந்திய அரசின் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ்கள், அங்கு ஆற்றப்படும் உரைகள் இந்திமொழியில் மட்டுமே இருக்கவேண்டும்.


8.உலக நாடுகளில் இருக்கக்கூடிய இந்திய தூதுவர் அலுவலகங்களில் இந்தி மொழியின் பயன்பாடு குறித்து முறையான அறிக்கைகள் அரசுக்கு அனுப்பப்படவேண்டும்.


9.இந்தி பேசும் மாநிலங்களில் உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புகளை அவசியமானால் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தரவேண்டும்.  


10.ஐ.நா. பேரவையின் அலுவல் மொழிகளில் ஒன்றாக இந்தி ஆக்கப்படவேண்டும்.


அமித்சா குழு வெளியிட்டிருக்கும் இந்த அறிக்கை, இந்தி பேசாத மாநிலங்களில் குறிப்பாக, தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது. அதன் விளைவாக இன்னொரு மொழிப் போர் உருவாகும் நிலை ஏற்பட்டிருப்பதைத் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களும் மற்றும் பல தலைவர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.


1950ஆம் ஆண்டில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயல்படுத்தப்பட்டது. அச்சட்டத்தில் குறிப்பிட்டிருந்தபடி 15 ஆண்டுகள் கழித்து 1965ஆம் ஆண்டில் இந்தியாவின் ஆட்சிமொழியாக இந்தியை ஆக்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படவேண்டும் என்பதற்கிணங்க, அப்போதைய இந்திய அரசு வெளியிட்ட ஆணையின் விளைவாக தமிழ்நாட்டில் இந்திக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் வெடித்தது. அதே நிலை இப்போது அமித்சா குழு விடுத்த அறிக்கையின் விளைவாக ஏற்பட்டுள்ளது.


இந்திய அரசியல் சட்டத்தின் 8ஆவது அட்டவணையில் தமிழ் உள்பட 22 மொழிகள் இந்தியாவின் தேசிய மொழிகளாகவும், சம உரிமை கொண்டவைகளாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் 22 மொழிகளில் ஒன்றான இந்தி மொழியை ஆட்சிமொழியாக்க முயல்வது பிறமொழிகளைப் புறக்கணித்து ஒதுக்கும் முயற்சியாகும்.


இந்தியின் ஆதரவாளர்கள் குறிப்பிடுவதைப் போல இந்தி பெரும்பான்மையினர் பேசும் மொழி அல்லவே அல்ல. பீகாரி, மைதிலி, போஜ்புரி, அரியான்வி, இராசசுத்தானி, மார்வாரி போன்ற பல்வேறு வட்டார மொழிகளையும் இந்தியின் கணக்கில் சேர்த்துக்கொண்டு இந்தியாவில் இந்தி பேசுவோரின் எண்ணிக்கை கூட்டிக் காட்டப்படுகிறது.


தமிழ் உள்பட பல மொழிகள் மிகத் தொன்மை வாய்ந்தவை; இலக்கிய வளம் நிறைந்தவை. இம்மொழிகளைப் புறக்கணித்துவிட்டு மிகப் பிற்காலத்தில் தோன்றிய இந்திமொழியை ஆட்சிமொழியாக்க முனைவது இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்குப் பெரும் கேட்டினை விளைவிப்பதாகும்.


இந்தி வெறியர்களின் நோக்கம் இந்தியை ஆதிக்க மொழியாக்குவது அல்ல. சமற்கிருதத்தையே ஆட்சிமொழியாக்குவதற்கான திட்டத்தின் முதல் கட்டம்தான் இந்தித் திணிப்பாகும். இதை மூடி மறைக்க முயலுகிறார்கள்.


1965ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் வரலாறு கண்டறியாத வகையில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெடித்து எழுந்தபோது மாணவர்களின் மன உணர்வுகளை புரிந்துகொண்ட பெருந்தலைவர் காமராசர் அவர்கள், அப்போது அகில இந்திய காங்கிரசுத் தலைவராக வீற்றிருந்தார். தலைமையமைச்சராக இருந்த நேருவின் மறைவிற்குப் பின்னர் முதலில் லால்பகதூரையும், அதற்குப் பின்னர் இந்திராகாந்தியையும் நாட்டின் தலைமையமைச்சராகப் பதவியேற்க வைத்த அவரது திறமையை உலகமே பாராட்டியது. அத்தகைய பெருமைக்குரிய பெருந்தலைவர் காமராசர் அவர்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தினால் ஏற்பட்ட நெருக்கடியான சூழ்நிலையில் அதை கையாள்வதற்கு உரிய வழிமுறைகளையும், இந்திய அரசியல் சட்டம் ஏற்றுக்கொண்ட 22 மொழிகளின் மதிப்பினை நிலைநிறுத்தும் வகையிலும், எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்பதைக் கீழே குறிப்பிடப்பட்டுள்ள வரலாறு இன்றைய இளைஞர்களுக்குத் தெளிவை ஊட்டும் என நம்புகிறேன்.


1965ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் இந்திக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் எரிமலை பொங்கி வெடித்தது போல் அமைந்தது. இதன் எதிரொலி இந்தியா முழுவதும் பரவியது. இந்திய அரசு இதைக் கண்டு அச்சமடைந்தது. ஆளுங் கட்சியான காங்கிரசுக் கட்சியிலும் கடும் கருத்து வேறுபாடுகள் மூண்டெழுந்தன.


அகில இந்தியக் காங்கிரசுத் தலைவர் காமராசர் அவர்களைக் குத்தூசி குருசாமி அவர்களின் தலைமையில் மோகன் குமாரமங்கலம், பேராசிரியர் மு.  வரதராசனார், சோ. இலட்சுமிரதன் பாரதி, செங்கல்வராயன், திருமதி.  அனந்தநாயகி, திருமதி. இலட்சுமி பாரதி ஆகியோர் அடங்கிய தூதுக்குழு சந்தித்துப் பேசியது.


இந்திக்கு எதிரான தமிழக மாணவர்களின் போராட்டத்தின் நியாயத்தையும் அதன் விளைவாக தமிழக மக்களின் கொந்தளிப்பையும் குறித்து இத்தூதுக்குழுவினர் காமராசரிடம் விரிவாக எடுத்துரைத்தனர்.


“காங்கிரசு செயற்குழுவில் இப்பிரச்சினைக் குறித்து முடிவெடுத்து அனைத்து மாநிலங்களின் இசைவைப் பெறும் வரை ஆங்கிலமும் ஆட்சிமொழியாகத் தொடர்ந்து இருப்பதற்குச் சட்டப்பூர்வமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதாகவும், மாநிலத்தில் தமிழ் ஆட்சிமொழியாகவும் இதர துறைகளிலும் உரிய இடத்தைப் பெறுவதற்கு ஆவன செய்வதாகவும்” அத்தூதுக்குழுவினரிடம் காமராசர் உறுதி கூறினார்.


1965ஆம் ஆண்டு சனவரி 31ஆம் நாள் அன்று பெங்களூரில் காங்கிரசுத் தலைவர் காமராசர் தலைமையில் கருநாடக முதலமைச்சர் எஸ். நிஜலிங்கப்பா, வங்காள காங்கிரசுத் தலைவர் அதுல்யா கோஷ், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மூத்த ஒன்றிய அமைச்சர் சஞ்சீவி ரெட்டி ஆகியோர் கூடிப் பேசி வெளியிட்ட அறிக்கையில் “இந்தி பேசாத மக்கள் மீது இந்தியைத் திணிக்க இந்தி ஆதரவாளர்கள் முயற்சி செய்வது நாட்டின் ஒற்றுமைக்கே உலை வைத்துவிடும்” என எச்சரித்தனர். 


உடனடியாக ஒன்றிய மூத்த அமைச்சர்களில் ஒருவரான மொரார்ஜி தேசாய் விடுத்த எதிர் அறிக்கையில் “தமிழ்நாட்டில் உள்ள காங்கிரசுத் தலைவர்கள் இந்தியை எதிர்க்காமல் இருக்கும்படி மக்களை ஒப்புக்கொள்ள வைக்கவேண்டும். 1950ஆம் ஆண்டு இந்திய அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த உடனேயே இந்தி இந்தியாவின் ஆட்சிமொழியாக ஆக்கப்பட்டிருக்க வேண்டும்” என இந்திக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டார். தலைமையமைச்சர் கனவில் இருந்த மொரார்ஜி தேசாய் இந்தி பேசும் மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக இவ்வாறு அறிக்கை வெளியிட்டார்.


 


அத்துடன் அவர் நிற்கவில்லை. இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த 106 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட விண்ணப்பம் ஒன்றினைக் காங்கிரசுத் தலைவர் காமராசரிடம் அளிக்க ஏற்பாடு செய்தார். “ஆட்சிமொழிச் சட்டத்தில் எத்தகைய திருத்தத்தையும் கொண்டு வருவதற்கு முயற்சி செய்ய வேண்டாம்” என அவ்விண்ணப்பத்தில் வலியுறுத்தப்பட்டது.


தலைமையமைச்சர் லால்பகதூர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார். அவர் உள்ளூர மொரார்ஜி தேசாய் போன்ற இந்தி ஆதரவாளர்களின் பக்கமே இருந்தாலும், இந்திக்கு எதிரான எதிர்ப்புக் குரலைப் புறக்கணிக்க அவரால் முடியவில்லை. இந்தச் சூழ்நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர்களான சி. சுப்பிரமணியம், ஓ.வி. அளகேசன் ஆகியோர் பதவி விலகுவதாக அறிவித்தனர். ஆனால் அவ்வாறு அவர்கள் பதவி விலகியிருக்கக் கூடாது என்று காமராசர் கருதினார். பதவி விலகி விட்டு தமிழகத்திற்குத் திரும்பி வந்த அவர்கள் இருவரும் தலைவரைச் சந்தித்தபோது அவர்கள் செய்தது சரியில்லை என்று கூறிக் கடிந்துகொண்டார். அவர்கள் இருவரும் உடனடியாக தங்களின் பதவி விலகல் கடிதங்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்கள்.


இந்தியை எதிர்த்துத் தமிழக மாணவர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டபோது பதைப்புணர்ச்சியுடன் இந்திராகாந்தி தமிழகத்துக்கு ஓடோடி வந்தார். அவரது பொறுப்பிலிருந்த அமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கையே தமிழகத்தில் ஏற்பட்ட கிளர்ச்சிகளுக்கு உடனடிக் காரணமாக அமைந்தது என்று கேள்விப்பட்டபோது அவர் மிகவும் வருத்தப்பட்டார். ஆகவே, தமிழகத்துக்கு வந்து நிலைமையினை விளக்கிச் சொல்லி கிளர்ச்சி செய்யும் மாணவர்களை அமைதிப்படுத்துவது தன்னுடைய கடமை என்று அவர் கருதினார். இந்திய ஒருமைப்பாட்டை வலுப்படுத்த இந்தி பொது மொழியாக இருக்க வேண்டுமே தவிர, பொது மொழியாக அது இருப்பதால் இந்திய ஒருமைப்பாடு சீர்குலையுமென்றால் மொழிப் பிரச்சனையை மறுபரிசீலனை செய்வது அவசியம் என்று அவர் கருத்துத் தெரிவித்தார். கோவை பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய இந்திராகாந்தி, “நாடாளுமன்றத்தில் தமிழ்தான் இணைப்பு மொழியாக இருக்கவேண்டும் என்றால் நான் உள்ளபடியே மிகவும் மகிழ்ச்சியடைவேன்” என்றார். காமராசரும் சரி, இந்திராகாந்தியும் சரி மொழிப் பிரச்சனையில் தலைமையமைச்சராக இருந்த லால்பகதூர் அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்கள் என்பது உண்மை.


தலைமையமைச்சர் லால்பகதூர் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துப் பேசியதில் தமிழ்நாட்டில் நடைபெற்ற துயரகரமான நிகழ்ச்சிகளைக் கண்டு தான் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்திருப்பதாகவும், நேருவின் வாக்குறுதி பற்றிய தவறான கருத்துகளைப் போக்க விரும்புவதாகவும் நேருவின் வாக்குறுதியின்படி மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் ஆட்சிமொழியாகத் தொடர்ந்து இருக்கும் என்று கூறிவிட்டு கீழ்க்காணும்  ஐந்து வாக்குறுதிகளை அளித்தார்.


1. ஓவ்வொரு மாநிலமும் தனது மாநில மொழியிலோ அல்லது ஆங்கிலத்திலோ ஆட்சி நிர்வாகத்தை நடத்திக்கொள்ள முழுமையாக உரிமை உண்டு.


2. ஒரு மாநில அரசு மற்றொரு அரசுடன் தொடர்புகொள்ள ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம். அல்லது வேறு மொழியைப் பயன்படுத்தினால் அதற்குரிய ஆங்கில மொழிபெயர்ப்பையும் இணைத்து அனுப்ப வேண்டும்.


3. இந்தி பேசாத மாநிலங்கள் ஒன்றிய அரசுடன் தொடர்புகொள்ளும்போது ஆங்கிலத்தைப் பயன்படுத்த முழு உரிமை உண்டு. இந்தி பேசாத மாநிலங்களின் ஒப்புதலின்றி இந்த ஏற்பாடு மாற்றப்பட மாட்டாது.


4. ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக ஆங்கிலமும் தொடர்ந்து பயன்படுத்தப்படும்.


5. இந்திய அரசுப் பதவிகளுக்கான தேர்வுகள் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என்பதற்குப் பதில் ஆங்கிலத்திலும் நடத்தப்படும்.


தலைமையமைச்சரின் இந்தப் பேச்சு இந்தி எதிர்ப்பாளர்களுக்கு மகிழ்ச்சியை ஊட்டினாலும் காலங்கடந்து அவர் அளித்த இந்த வாக்குறுதிகள் பயனளிக்கவில்லை தமிழ்நாட்டில் காங்கிரசு கட்சியின் மதிப்பை வெகுவாகக் குறைத்துவிட்டது.


இந்த நிலைமையில் மாணவர்களின் நியாயமான உணர்வுகளைப் புரிந்துகொண்ட தலைவர் காமராசர், அவர்களின் அச்சத்தைப் போக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அகில இந்தியக் காங்கிரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் மொழிப் பிரச்சனை குறித்து மனம் திறந்த விவாதத்திற்கு ஏற்பாடு செய்தார். 1965ஆம் ஆண்டில் சூன் மாதத்தில் புதுதில்லியில் கூடிய காங்கிரசுச் செயற்குழு மொழிப் பிரச்சினை குறித்து இரண்டு நாட்கள் விவாதித்தது. மொழிப் பிரச்சினைக்காகச் சிறப்பாக இச்செயற்குழு கூட்டப்பட்டு விவாதம் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க-தாகும். இக்கூட்டத்தில் காங்கிரசு மாநில முதலமைச்சர்கள் அனைவரும் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர். தீவிரமான வாதப் பிரதிவாதங்களுக்குப் பிறகு தலைவர் காமராசர் கூறிய யோசனையைச் செயற்குழு ஏகமனதாக ஏற்றுக்கொண்டது. மொழிப் பிரச்சினையால் நாடு பிளவுபட்டுப் போகாதபடி சிறந்ததொரு தீர்வினைச் செயற்குழு வகுத்தது.


ஆங்கிலத்திற்கும் இந்திக்கும் இடையே தான் போட்டியுள்ளது. ஆங்கிலத்தின் இடத்திலிருந்து அதை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்தியை அமர வைக்க சிலர் விரும்புகிறார்கள். இதன் விளைவாக மாநில மொழிகள் பின்னோக்கித் தள்ளப்படும் என்ற அச்சத்தின் காரணமாகத்தான் இந்தி எதிர்ப்புப் போராட்டம் மூண்டது என்பதை உணர்ந்த தலைவர் காமராசர் “ஆங்கிலம் அகற்றப்படும் இடங்களில் எல்லாம் மாநில மொழிகள் விரைவில் அமர்த்தப்பட-வேண்டும். மாநிலங்களில் அந்தந்த மொழிகளே ஆட்சிமொழிகள் ஆவதை விரைவுபடுத்த வேண்டும். இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி ஆட்சிமொழியாக ஆக்கப்பட்டு அது வளமாக்கப்பட-வேண்டும். அதற்குப் பிறகே இணைப்பு மொழியாக அதைப் பயன்படுத்துவதைக் குறித்து ஆராயவேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய மொழிகளும் வளம்பெறச் செய்யும் திட்டம் ஒன்றினை ஒன்றிய அரசு வகுத்துச் செயல்படுத்த வேண்டும். ஒன்றிய அரசு தேர்வுகளை அவரவர்கள் தாய்மொழியில் எழுதுவதற்கு ஏற்ப அனைத்துத் தேசிய மொழிகளையும் ஒன்றிய அரசு தேர்வு மொழிகளாக ஆக்கவேண்டும்” என தலைவர் காமராசர் கூறிய யோசனைகளைச் செயற்குழுவினர் ஏற்றுக்கொண்டு இந்த அடிப்படையில் ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றினர். மத்திய அரசுத் தேர்வுகளை இந்தியில் நடத்தினால் இந்தி பேசும் பகுதி மாணவர்களே பெரிதும் பயனடைவார்கள். இந்தி பேசாத பகுதி மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்ற அச்சம் இத்தீர்மானத்தின் மூலம் நீக்கப்பட்டது. இந்திக்குச் சமமான தகுதி பிற மாநில மொழிகளுக்கும் கிடைக்க இத்தீர்மானம் வழி வகுத்தது.


இந்தியின் தீவிர ஆதரவாளர்களான தலைமையமைச்சர் லால்பகதூர், உள்துறை அமைச்சர் நந்தா உள்பட அனைவரும் இத்தீர்மானத்தை ஏற்றுக்கொண்டனர். இந்தி ஆதரவாளர்களும் இந்தி எதிர்ப்பாளர்களும் ஒப்புக்கொள்ளக்கூடிய வகையில் மொழிப் பிரச்சினைக்குக் காமராசர் தீர்வு கண்ட விதத்தை அனைவருமே பாராட்டினார்கள். பதினைந்து தேசிய மொழிகளிலும் தேர்வு எழுதும் திட்டத்திற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த மொரார்ஜி தேசாய், டாக்டர் இராம் சுபாக்சிங் போன்றவர்கள் கூட காமராசரின் விளக்கத்திற்குப் பிறகு இதை ஏற்றுக் கொண்டனர். காங்கிரசுத் தலைவர் காமராசர் கூறிய யோசனைகளை ஏற்று அதற்கிணங்க செயற்குழு நிறைவேற்றிய இந்தத் தீர்மானத்தை அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஏழை எளிய மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றார்கள். ஆனால் ஆங்கிலம் கற்ற வர்க்கத்தினரும் அதிகாரிகளும் இதைக்கண்டு எரிச்சல் அடைந்தார்கள். தலைமுறை தலைமுறையாக ஆங்கிலத்தைப் பயின்று அதன் பயனாக அரசுப் பதவிகளை ஆக்கிரமித்துக் கொண்டுள்ள கூட்டத்தினர் சொல்லொணாத ஆத்திரம் அடைந்தனர். எல்லா மாநில மொழிகளிலும் அரசுத் தேர்வுகள் எழுதுவதற்கு அனுமதிப்பதன் மூலம் ஆங்கிலம் அகற்றப்பட்டு தங்களின் ஏகபோக ஆதிக்கம் தகர்க்கப்படும் என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டது. இதன் காரணமாகத்தான் அவர்கள் காமராசரின் யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.       


இதையொட்டி தமிழகம் முழுவதும் நடைபெற்ற பல்வேறு பொதுக் கூட்டங்களில் பெருந் தலைவர் காமராசர் உரையாற்றும்போது பின்கண்ட கருத்துகளை வலியுறுத்தினார்.


“தலைமுறை தலைமுறையாக ஆங்கிலம் பயின்று வருகிறவர்கள் நிருவாகத் துறையில் தங்களுக்கு இருந்துவரும் ஏகபோகத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும், நிருவாகத்தில் பாமர மக்கள் பங்குபெறுவதைத் தடுப்பதற்காகவும்தான் ஆங்கிலம் நீடிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்.


பரம்பரைப் பரம்பரையாகப் பணக்காரர்களாக இருந்தவர்களும், பதவி அனுபவிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தவர்களும்தான் ஆங்கிலமே நீடிக்க வேண்டும் என்று ஒரு போராட்டமே நடத்தினார்கள். இந்தி எதிர்ப்பு என்ற பெயரால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது சோசலிசத்தை எதிர்க்கிறவர்கள் கண்டுபிடித்த ஒரு வழியாகும்.


ஐ.ஏ.எஸ். தேர்வை இந்தியில் எழுதினால் இந்தித் தாய்மொழிக்காரனுக்குத்தான் சலுகை உண்டாகிவிடும் என்று சொல்லுகிறார்கள். தில்லி செயலகத்தில் செயலாளராக இருப்பவன் இந்தி வந்தால் தனக்குக் கஷ்டமாச்சே என்று நினைக்கிறான். அத்தோடு கல்லூரியில் படிக்கிற அவன் பிள்ளைக்கும், ஆங்கிலவழிப் பள்ளியில் படிக்கிற அவன் பேரனுக்கும் இந்தி வந்தால் வேலை கிடைக்காதே என்று நினைத்துக் கொள்கிறான்.


அதற்காகத்தான் நான் கேட்கிறேன், என் தாய்மொழி தமிழ்; ஐ.ஏ.எஸ் தேர்வை  என் மொழியிலும் நடத்து என்று கேட்கிறேன். அதுமட்டுமல்ல் நமது மாநில அரசு நடத்துகிற தேர்வு எல்லாமே தமிழில் நடத்தனும் என்கிறேன். நான் முதல் மந்திரியாய் இருந்தபோது தமிழை ஆட்சிமொழி ஆக்கினோம். ஆனால் அரசு தலைமைச் செயலகத்தில் இருக்கிறவங்க தமிழை அங்கே நுழைய விடுகிறார்களா? தில்லியிலே இருக்கிற மாதிரியே இங்கேயும் ஆங்கிலம் படித்தவர்கள் தமிழை நுழைய விடமாட்டேன் என்கிறார்கள். நான் என் தாய்மொழியிலே இந்தப் தேர்வையெல்லாம் நடக்கணும் என்கிறேன் இது தப்பா?


இதைச் சொல்லும்போதுதான் பரம்பரையாய் பண ஆதிக்கம் படைத்தவர்களும் உத்தியோக ஆதிக்கம் படைத்தவர்களும், இருந்த ஆதிக்கம் பறி போகுதே என்று எதிர்ப்புக் கூச்சல் போடுகிறார்கள்.’’

தமிழின் தொன்மையும் தமிழர்தம் பெருமையும் - பழ. நெடுமாறன்

தமிழின் தொன்மையும் – தமிழர்தம் பெருமையும்

பழ. நெடுமாறன்

உலகத்தில் மிகத் தொன்மையான மொழிகளாக எகிப்தியம். ஈப்ரு, அரேபியம், சுமேரியம், இலத்தீன், கிரேக்கம், சீனம், சமற்கிருதம் மற்றும் தமிழ் ஆகியவை கருதப்படுகின்றன. இவற்றில் தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை சீரிளமைத் திறன் சிறிதும் குன்றாது வளர்மொழியாகத் திகழ்வது நமது தமிழ்மொழி மட்டுமே. 

கி.மு. 5000ஆண்டுகளுக்கு முன்பு நைல் நதிக்கரையில் தோன்றி வளர்ந்த நாகரிகத்தின் சின்னமாக எகிப்திய மொழி விளங்கியது. எகிப்து முதல் சிரியா வரை இம்மொழி பேசப்பட்டு வாழ்ந்தது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக எழுப்பப்பட்ட பண்டைய வரலாற்றுச் சின்னங்களாகத் திகழும் பிரமிட் கோபுரங்களில் எழுதப்பட்ட பெருமைக்குரியது எகிப்திய மொழியாகும். கி.பி. 16ஆவது நூற்றாண்டுவரை இம்மொழி வாழ்ந்து மறைந்தது. 

கி.மு. 13ஆம் நூற்றாண்டிலிருந்து பேசப்பட்டுப் பல தொல்லிலக்கியங்களைப் படைத்த மொழி ஈப்ரு மொழியாகும். 4000ஆம் ஆண்டு காலமாக வாழ்ந்த இந்த மொழி கி.பி. 2ஆவது நூற்றாண்டில் வழக்கிழந்தது. இதைப் பேசிய யூத மக்கள் ரோமானியப் படையெடுப்பின் விளைவாகத் தாங்கள் வாழ்ந்த மண்ணான பாலத்தீனத்திலிருந்து வெளியேறி உலகெங்கும் சிதறி வாழ்ந்தனர். கி.பி. 20ஆம் நூற்றாண்டின் முன் பகுதி இறுதியில் மூண்டெழுந்த இரண்டாம் உலகப் போரின் போது ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட யூத மக்கள் செர்மானிய நாசி இன வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டனர். அதற்குப் பின் தங்களின் தாயகத்தை மீட்பது ஒன்றே இன மீட்சிக்கான வழி என்பதை உணர்ந்து பெரும் போராட்டத்திற்கு இடையில் இசுரேல் நாட்டை அமைத்தனர். தங்களின் தாய்மொழியான ஈப்ரு மொழியை மீட்டுருவாக்கம் செய்தாலொழிய தங்களுக்கு எதிர்காலம் இல்லை என்பதை அறிந்து இன்று அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர். 

கி.மு. 8ஆம் நூற்றாண்டு முதல் அதாவது, நபிகள் நாயகத்தின் காலத்திற்கு முன்பே வேர் விட்டு வளர்ந்திருந்த மொழி அரேபிய மொழியாகும். இசுலாம் சமயம் பரவிய இடங்களில் எங்கும் இம்மொழி பரவியது. காலத்திற்கு ஏற்ற மாற்றங்களுடன் இன்றும் வாழ்கிறது. 

4000 ஆம் ஆண்டுகளுக்கு முன்பே வியக்கத்தக்க வளர்ச்சியைக் கண்ட சுமேரிய நாகரிக மக்கள் பேசிய மொழி சுமேரியமாகும். மத்திய ஆசியாவில் சிறந்த நாகரிகத்தை நிலை நிறுத்திய மிகப் பழமையான மொழியாகும். சிந்து நாகரிக மக்களுடன் உறவாடிய மொழி இம்மொழி என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனாலும், இந்த மொழி இன்று வழக்கற்றுப் போனது. 

தமிழ்மொழியோடு ஒப்பிடத்தக்க மிகப் பழமையான மொழி கிரேக்கமாகும். கிரேக்க நாகரிகம் மிகத் தொன்மை வாய்ந்ததாகும். பழந்தமிழரோடு மிக நெருக்கமான உறவு கொண்டிருந்தது இம்மொழியாகும். தொல் வரலாற்றுச் சின்னங்களையும் இலக்கியங்களையும் படைத்த இம்மொழி இன்று வழக்கற்றுப் போனது. 

இயேசுபிரான் பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பிறந்து வளர்ந்த மொழி இலத்தீன் மொழியாகும். ரோமப் பேரரசின் காலத்தில் ஐரோப்பாவெங்கும் இம்மொழி பரவி வளர்ந்தது. பண்டைய இம்மொழி பிரெஞ்சு, ஸ்பானிசு, இத்தாலியம், போர்த்துகீசியம் போன்ற பல கிளை மொழிகளைத் தோற்றுவித்தது. கி.மு. 6ஆம் நூற்றாண்டிலேயே கல்வெட்டுகளைத் தோற்றுவித்த இம்மொழி இன்று வழக்கிலில்லை. 

கி.மு. 4000 ஆண்டுகளுக்கு முன்பே வழக்கிலிருந்த சீன மொழி இன்று எழுத்துருவில் மட்டும் வாழ்கிறது. ஆனால் பேச்சு வழக்கில் பல்வேறு கிளைமொழிகளாகத் திரிந்துள்ளது. சிறந்த இலக்கியங்களைப் படைத்த இம்மொழி ஆசிய நாட்டு மொழிகளுக்குள் முதன்மையான மொழியாக விளங்கியது. இன்று இம்மொழி வாழ்ந்தாலும் எழுத்து மொழிக்கும், பேச்சு மொழிக்கும் இடையே அகன்ற இடைவெளி காணப்படுகிறது. ஒரு பகுதியில் வாழும் சீனன் பேசும் மொழியை மற்றொரு பகுதியில் வாழும் சீனன் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு இம்மொழி அறவே திரிந்துவிட்டது. 

சிந்துவெளி நாகரிகம் மறைந்து 1500 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்குள் நாடோடிகளாக நுழைந்த ஆரிய இனத்தின் பேச்சு மொழி சமற்கிருதம் அதற்கு எழுத்துக் கிடையாது. ஆரியர்களின் ரிக் வேதம் எழுதாக் கிளவியாக விளங்கியது. சிந்து நாகரிக மக்களிடமிருந்து தங்கள் மொழிக்கு எழுத்துக்களைக் கற்றுக்கொண்டனர். இந்திய நாட்டில் பேசப்படும் பல மொழிகளுடன் இரண்டறக் கலந்து பல திரிபு மொழிகளை உருவாக்கியது. தற்போது இதை பேச்சுமொழி எனக் கூறுவது மிகக் கடினமாகும். 2011ஆம் ஆண்டு இந்திய அரசு மேற்கொண்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் சமற்கிருதம் பேச, எழுதத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை 25,000பேர்களுக்குட்பட்டதே. வேதங்கள், உபநிடதங்கள், பிராமணங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றைக் கொண்ட இம்மொழி இந்துக் கோயில்களில் வழிபடும் மொழியாகத் திகழ்கிறதே தவிர, மக்களின் பேச்சு மொழியாகத் திகழவில்லை. 

பழமைக்கும் முந்திய பழமை வாய்ந்ததாகவும், புதுமைக்குப் பிந்திய புதுமையாகவும், நாளும் வளர்மொழியாகவும் திகழும் பெருமை தமிழ்மொழிக்கு மட்டுமே உண்டு. கி.மு. 10ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இலக்கிய, இலக்கணங்களைக் கண்ட மொழி.  எகிப்தியம், சுமேரியம், கிரேக்கம் போன்ற மொழிகளின் வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட தொல் வரலாற்றினைக் கொண்டதோடு இன்றுவரை வாழும் மொழி தமிழ்மொழி மட்டுமே. எத்தனையோ நூற்றாண்டு காலத்திற்கு முன்பிருந்து வாழ்ந்துவரும் தமிழ்மொழி இன்றும் அதிகமான மாற்றமின்றிப் பேசவும், எழுதவும் படுகிறது. 

சாக்ரடீஸ் பேசிய கிரேக்கம், ஜீலியஸ் சீசர் பேசிய இலத்தீன், பாணிணி, காளிதாசன் பேசிய சமற்கிருதம், கன்பூசியஸ் பேசிய சீனம் ஆகியவை இன்று திரிந்து மாற்று வடிவங்கள் கொண்டும் வழக்கற்றும் போய்விட்டன. ஆனால், தொல்காப்பியரும், திருவள்ளுவரும் பேசிய, எழுதிய தமிழில்தான் இன்று நாமும் பேசிக்கொண்டிருக்கிறோம். எழுத்து வடிவங்கள் காலத்திற்கேற்ற மாற்றங்கள் கொண்டிருக்கின்றனவே தவிர, நம்முடைய இலக்கியப் படைப்புகள் புதிய புதிய துறைகளில் தொடர்கின்றன. 

தொல்காப்பிய நூற்பாக்களில் 343க்கும் மேற்பட்ட இடங்களில் அதற்கு முந்திய காலத்தில் வாழ்ந்த புலவர்களின் படைப்புகள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. என்ப, என்பனார் போன்ற சொற்கள் அவருக்கு முற்பட்ட பல நூற்றாண்டுகளில் வாழ்ந்த புலவர்கள் படைத்த இலக்கிய, இலக்கணங்களைச் சுட்டிக்காட்டுகின்றன. தமிழ் தோன்றிய காலத்தை எவராலும் திட்டமிட்டு வரையறுத்துக் கூற முடியாத மிகத் தொன்மை வாய்ந்ததாகும். 

சங்க இலக்கியங்கள் என சுட்டப்படும் பழந்தமிழ் இலக்கியங்கள் கி.மு. 6ஆம் நூற்றாண்டை ஒட்டியவை என்பதை அண்மையில் வைகைக் கரையில் நிகழ்த்தப்பட்ட கீழடி தொல்லாய்வு எடுத்துக்காட்டி நிறுவியுள்ளது. 

சிந்து நாகரிகம் – தமிழர் நாகரிகம் ஒர்மை

19ஆம் நூற்றாண்டின் தொடக்கக் கட்டத்தில் சிந்து சமவெளி நாகரிகம் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் கண்டறியப்பட்டது. இந்த நாகரிகத்தின் தொன்மைத் தடயங்கள் குறித்த உலக அறிஞர்களின் ஆய்வுகள் இன்னமும் தொடர்கின்றன. ஆனால், சிந்துவெளி நாகரிகத்திற்கும், இந்தியாவின் தென்பகுதியில் நிலவும் தமிழர் நாகரிகத்திற்கும் இடையே நிலவும் மிக நெருக்கமான ஒப்புவமைகள், உறவுகள் குறித்து இரு பகுதிகளிலும் கிடைத்துள்ள தொல்லியல் தடயங்கள், பானைக் குறியீடுகள், கல்வெட்டுகள், பழந்தமிழ் இலக்கியங்கள் சான்று கூறுகின்றன. 

இந்தியாவின் வடமேற்கில் சிந்து மாநிலம், குசராத் மாநிலம், மராட்டிய மாநிலம் வரை சிந்து நாகரிகத் தொல் தடயங்களும், இந்தியாவின் தென்பகுதியில் ஆதிச்சநல்லூர், கொற்கை, கீழடி போன்ற இடங்களில் கண்டறியப்பட்ட தொல் தடயங்களுக்குமிடையே காணப்படும் ஓர்மை இரு நாகரிகங்களுக்கும் இடையே உள்ள தூரத்தை மிகவும் குறைத்துள்ளன. 

அரப்பா, மொகஞ்சதாரோ, லோத்தல், தோலாவீரா (குசராத்), காளிபங்கன் (இராசசுத்தான்), தைமாபாத் (மராட்டியம்) போன்ற இடங்களில் கிடைத்தத் தொல்லியல் தடயங்களும், தமிழ்நாட்டில் செம்பியன் கண்டியூர், சூலூர், சானூர், யாழ்ப்பாணம் - ஆனைக்கொட்டா ஆகிய இடங்களில் கிடைத்த சிந்துவெளி முத்திரைகளைக் கொண்ட தடயங்களும் ஓர்மையைக் காட்டுகின்றன. 

1.சிந்து நாகரிகப் பகுதிகளிலும் தமிழகத்தின் தொல்லியல் பகுதிகளிலும் குதிரையின் எலும்புகள் கண்டறியப்படவில்லை. ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்த பிறகே குதிரைகள் அறிமுகமாயின. எனவே ஆரியர் வருகைக்கு முற்பட்ட நாகரிகங்களாக இந்த இரு பகுதி நாகரிகங்களும் அமைந்துள்ளன. 

2. ஏறு தழுவுதல் – காளை மாடுகளைப் பிடித்தலைக் குறிக்கும் சிந்துவெளி முத்திரைகள்,  தமிழ்நாட்டில் இன்னமும் தொடரும் இவ்விளையாட்டு (சல்லிக்கட்டு) 

3.சேவல் சண்டையை குறிக்கும் சிந்துவெளி முத்திரை. இன்றைய பாகித்தானில் உள்ள சிந்து மாநில கிராமங்களில் தொடரும் சேவல் சண்டை.

தமிழ்நாட்டின் கிராமங்களில் அன்று முதல் இன்றுவரை தொடரும் சேவல் சண்டை, மாண்ட சேவலுக்கு எழுப்பப்பட்ட நடுகல் (அரசிலாபுரம்)

ஆந்திரா, தெலுங்கானா, குடகு ஆகிய மாநிலங்களில் சேவல் சண்டை தொடர்கிறது. 

4.தாய்த் தெய்வ வழிபாட்டைக் குறிக்கும் சுடுமண் சிலைகள் சிந்து நாகரிகத்திலும், ஆதிச்ச நல்லூர், கீழடி போன்றவற்றிலும் கண்டறியப்பட்டுள்ளன. 

5.பகடைக் காய் ஆட்டத்தைக் குறிக்கும் பகடைக்காய்கள் சிந்துசமவெளியிலும், கீழடியிலும் கிடைத்துள்ளன. 

6.சிந்து நாகரிகப் பகுதிகளிலும் தென்னாட்டிலும் உள்ள இடப்பெயர்களில் ஒற்றுமை காணப்படுகிறது. 

7.இமயம் என்ற சொல் சங்க இலக்கியங்களில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் குறிப்பிடப்படுகிறது. பனி சூழ்ந்த மலை முகடுகளின் கம்பீரத்தை இப்பாடல்கள் வருணிக்கின்றன. இமயமலையின் மிக உயர்ந்த பனி மூடியப் பகுதிகளில் வாழும் அடர்த்தியான மயிர்களைக் கொண்ட கவரிமா. அது உண்ணும் நரந்தை என்னும் புல் பற்றிய குறிப்புகளை சங்கப் புலவர்கள் துல்லியமாக அறிந்து பாடியுள்ளனர். வாழையடி வாழையாக வரும் தமிழ் இனத்தின் மீள் நினைவாக இது அமைந்துள்ளது. 

8.தமிழ்நாட்டில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்கள் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் பாலைவனம் தமிழ்நாட்டில் எங்கும் இல்லை. “முல்லையும், குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலையாகுமே” என சிலம்புப் பாடுகிறது. மழை பொழியாமல் போனால் முல்லை நிலமும், குறிஞ்சி நிலமும் வறண்டு பாலையாகக் காட்சித் தரும். பின்னர் மழை பொழியுமானால் அவை செழித்து குலுங்கும். 

வறண்ட மணலைத் தவிர, வேறு எதுவும் பசுமையாக இல்லாத பாலைவனத்தில் வாழும் விலங்கு ஒட்டகமாகும். பாலையே இல்லாத தமிழ்நாட்டில் ஒட்டகத்தைப் பற்றிய குறிப்புகள் தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியத்திலும் ஏராளமாகக் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் இல்லாத இந்த விலங்கு குறித்து சங்கப் புலவர்கள் பாடியது எப்படி? 

9. இந்தியாவில் குசராத் பகுதியில் மட்டுமே சிங்கம் உள்ளது. நர்மதை ஆற்றைக் கடந்து சிங்கம் ஒருபோதும் தென்னாட்டிற்கு வரவில்லை. தமிழ்நாட்டில் சிங்கம் அறவே இல்லை. ஆனால் சங்க இலக்கியங்களில் சிங்கத்தைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. 

மேற்கண்டவை அனைத்துமே வாழையடி வாழையாக வந்த தமிழரின் மீள் நினைவுகள் என சிந்துவெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் எழுதியுள்ளார். 

வைகைக் கரையிலும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் தொல்லாய்வுத் தொடர்ந்து நடத்தப்படுமானால், இரு நாகரிகங்களும் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமானவை என்பதும், இரண்டுமே நகர்ப்புற நாகரிகங்கள் என்பதும் இவைகளுக்கு இடையே உள்ள கால இடைவெளி மிகமிகக் குறைந்து போகும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

தமிழர் தொன்மை

உலகின் மூத்த மொழியான தமிழ்மொழியை பேசும் மக்கள் இன்று உலகம் முழுவதிலும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வாழ்கிறார்கள். இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு வெளியே தென்மாநிலங்களிலும் மராட்டியம் போன்ற மாநிலத்திலும் அதிக எண்ணிக்கையிலும் பிற மாநிலங்களில் கூடியும் குறைத்தும் பரவி வாழ்கிறார்கள். 

இலங்கை, மியான்மர், மலேசியா, சிங்கப்பூர், மொரீசியசு, ரீயூனியன், கயானா போன்ற நாடுகளில் பெருமளவிலும் மற்றும் உலக நாடுகள் பலவற்றிலும் தமிழர்கள் பரவி வாழ்கிறார்கள். உலகில் ஆங்கிலேயருக்கு அடுத்தபடி பல நாடுகளில் அதிகமாக வாழ்பவர்கள் தமிழர்களே. எனவே இன்று தமிழ் உலகத்தில் முதன்மை வாய்ந்த மொழிகளில் ஒன்றாக ஆகியுள்ளது. 

இந்தியாவில் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பு தமிழர்கள் கையில் உள்ளது. இந்திய ஒன்றியத்தின் குடியரசுத் தலைவர்களாகவும், நடுவண் அமைச்சர்களாகவும் பல்வேறு மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் உயர் அதிகாரிகளாகவும் முப்படைத் தளபதிகளாகவும் தமிழர்கள் விளங்குகிறார்கள். 

இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, மொரீசியசு, ரீயூனியன், கயானா போன்ற நாடுகளில் தமிழர்கள் அமைச்சர்களாகவும், உயர் பொறுப்புகளிலும் அமர்ந்திருக்கிறார்கள். சிங்கப்பூரில் ஒரு தமிழர் குடியரசுத் தலைவராகவும், மொரீசியசு, கயானா போன்ற நாடுகளில் தலைமையமைச்சர்களாகவும் தமிழர்கள் பதவி வகித்துள்ளனர். 

ஆனாலும்கூட வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் சிறிதுசிறிதாக தங்களின் தாய்மொழியையும், பண்பாட்டு அடையாளத்தையும் இழக்க விரும்பாத தவிப்பில் வாழ்கிறார்கள் என்பதை தமிழ்நாட்டுத் தமிழர்கள் உணரவேண்டும். மொழி, பண்பாடு, இலக்கியம், கலை, வரலாறு, சமுதாய மரபு, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றால் உலகத் தமிழர்கள் ஒன்றிணைந்து பிணைக்கப் பட்டிருக்கிறார்கள். ஆனால், தாய்த் தமிழகத்துடனும், தமிழுடனும் உள்ள தொடர்புகளும், உறவுகளும் சிறிதுசிறிதாக அறுந்துகொண்டிருக்கும் நிலையில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்கள் நடுவில் தமிழ்ப் பண்பாட்டு மறுமலர்ச்சியை ஏற்படுத்தவும், அவர்களை மொழி, பண்பாட்டு அடிப்படையில் ஒருங்கிணைக்கவும் செயலாற்றவேண்டிய பெரும் கடமை தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு மட்டுமே உண்டு. 

உலகளாவிய சிந்தனைக்குச் சொந்தக்காரர்கள் நாம் என்பதை மறந்துவிடக் கூடாது. “யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என உலக மாந்தருடன் உறவு கொண்டாடியவன் சங்கப் புலவன் கணியன்பூங்குன்றனாவான். சங்கப் பாடல்களில் 200க்கும் மேற்பட்ட பாடல்களில் உலகு, உலகம் எனும் சொற்கள் நிறைந்துள்ளன. உலகக் கண்ணோட்டத்துடனும், உலக நாடுகளில் வாழும் பிற இன மக்களைத் தனது உறவினர்களாகக் கருதி சொந்தம் கொண்டாடிய பெருமை தமிழினத்திற்கு மட்டுமே உண்டு. 

பண்டைய ரோமானியர்கள் பிற இனத்தவரை அடிமைகளாகவும், கிரேக்கர்கள் பிற இனத்தவரை மிலேச்சர்களாகவும், சீனர்கள் பிற இனத்தவர்களை பிசாசுகளாகவும், ஆரியர்கள் பிற இனத்தவரை அசுரர்களாகவும் கருதி இழிவுபடுத்தினர். 

விரிந்து பரந்த கண்ணோட்டத்துடனும், உறவு நிறைந்த உள்ளத்துடன் வாழ்ந்த தமிழினம் 2009ஆம் ஆண்டில் இலங்கையில் சிங்கள வெறியர்களால் பல்லாயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்ட வேளையில் உலகத் தமிழர்கள் பதறித்துடித்தனர். ஆனால் உலக நாடுகளில் எதுவும் நமது இரத்தத்தின் இரத்தமான ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற முன்வரவில்லை. 

தமிழ்நாட்டுத் தமிழர்கள் மட்டும் சாதி, மத கட்சி வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு நின்றிருந்தோமானால், நமது குரலுக்கு இந்திய அரசு செவி சாய்த்துத் தீரவேண்டிய கட்டாயத்திற்குள்ளாயிருக்கும். ஆனால் நமது ஒற்றுமைக் குறைவிற்காக நமக்குத் தண்டனை விதிக்கப்பட்டால் அது சரியானதாக இருந்திருக்கும். ஆனால் நாம் செய்த தவறுக்காக ஈழத் தமிழர்கள் தண்டிக்கப்பட்டனர். உலக நாடுகளில் பரவி வாழும் தமிழர்கள் தாய்த் தமிழகத்தையே நம்பியிருக்கிறார்கள் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. நம்முடைய ஒற்றுமை நம்மையும் காக்கும்; உலகத் தமிழர்களையும் காக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். 

(19.10.22 அன்று காலை 11 மணிக்கு வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் பழ. நெடுமாறன் ஆற்றிய உரையின் எழுத்து வடிவாக்கம்)