Sunday, January 30, 2022

காந்தியாரின் மறைவும் தந்தை பெரியாரும்

 சிறப்புக் கட்டுரை: #காந்தியாரின்_மறைவும்_தந்தைபெரியாரும்!

••••••••••••••••••••••••••••••••••••••••••

சிறப்புக் கட்டுரை:-எஸ்.வி.ராஜதுரை.   

       மகாத்மா காந்தி கொலை செய்யப்பட்டபோது எனக்கு எட்டு வயது நிறைவடைய ஏறத்தாழ மூன்றரை மாதங்கள் இருந்தன. 30.1.1948 அன்று மாலை; வழக்கம்போல மண்ணெண்ணெய் விளக்குகளுக்கான கண்ணாடிகளை சாம்பல் போட்டு நானும் என் அம்மாவும் துடைத்துக் கொண்டிருந்தோம். ஏறத்தாழ 6.30 மணிக்கு வீடுகளுக்குப் பாலூற்றும் சீத்தாலட்சுமி அம்மாள் என்பவர் மூலம் அந்தச் செய்தி எங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தது. மூச்சிரைக்க ஓடி வந்த அவர் “காந்தியை யாரோ சுட்டுவிட்டார்களாம்” என்று என் தந்தையிடம் கூறினார். என் தந்தை காந்தியவாதி; எங்கள் வீட்டில் நூற்ற நூலால் நெய்யப்பட்ட துணியிலிருந்துதான் அவருடைய உள்ளாடைகள் முதல் ஜிப்பாக்கள் வரை தயாரிக்கப்படும்; முருக பக்தர்; கிருத்திகை தவறாமல் பழநி முருகன் கோயிலுக்குச் சென்று கிரிவலம் வருவார். ஆனால், அவருக்கு முன்கோபம் அதிகம். சீத்தாலட்சுமி அம்மாளைத் திட்ட வாயெடுத்தார். ஏனெனில் சீத்தாலட்சுமி அம்மாள், பால் விற்பதுடன் நடமாடும் வம்பு தும்பு ‘பத்திரிகையாளராக’வும் இருந்தார்; ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்கு, எங்கள் தெருவிலிருந்து இன்னொரு தெருவுக்கு ‘செய்திகள்’ எடுத்துச் செல்பவர். அவற்றில் சரிபாதியைக் கழித்துவிடலாம்.

        ஆனால், இந்த முறை அவர் எங்கள் குடும்ப நண்பரும் தேசிய விடுதலைப் போராட்டத்தில் குறைந்தது ஐந்து முறை சிறை சென்றவருமான ஒருவரின் வீட்டிலிருந்து அந்தச் செய்தியைக் கொண்டுவந்திருந்தார். நவீனத் தமிழ் இலக்கிய வரலாற்றில் தனி முத்திரை பதித்த ‘சரஸ்வதி’ ஏட்டை நிறுவியவரும் கம்யூனிஸ்டுமான வ.விஜயபாஸ்கரனின் தந்தை பா.து.வடிவேல் பிள்ளையின் உடைமைகள் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருமுறை ஜப்தி செய்யப்பட்டிருக்கின்றன. என் பெற்றோருக்குத் திருமணமான புதிதில் வடிவேல் பிள்ளை ஒருமுறை சில முக்கிய பாத்திரம் பண்டங்களை எங்கள் வீட்டில் ஒப்படைத்திருக்கிறார் என்று என் அம்மா சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். எங்கள் வீட்டிலிருந்து 10 நிமிடத்தில் நடந்தே சென்றடையக்கூடிய, எங்கள் தெருவிலிருந்து இரண்டு தெருக்கள் தள்ளியிருந்த, வறுமையில் வாடிக்கொண்டிருந்த அவர் வீட்டில் மட்டுமே எங்களுக்குத் தெரிந்தவரை எங்கள் நகரத்தின் அந்தப் பகுதியில் ஒரு வானொலிப் பெட்டி இருந்தது. காந்தி சுடப்பட்டது பற்றிய செய்தியைத் தன் காதாலேயே கேட்டதாக அழுது புலம்பிக்கொண்டே கூறினார் சீத்தாலட்சுமி அம்மாள். வீட்டுக்கு வெளியே வந்த நாங்கள், எங்கள் தெருவைச் சேர்ந்த பலர் வடிவேல் பிள்ளை வீட்டை நோக்கி விரைந்து கொண்டிருந்ததைப் பார்த்தோம். எங்கள் வீட்டிலும் அண்டை வீடுகளிலும் பெரும் அழுகைக் குரல்கள்.

        வடிவேல் பிள்ளை வீட்டுக்குச் செல்லாமல் நகராட்சி மன்றத்தால் பராமரிக்கப்பட்டு வந்த ‘ராஜா பார்க்’ என்னும் பூங்காவுக்கு மின்னல் வேகத்தில் என்னை இழுத்துக்கொண்டு சென்றார் என் தந்தை. அங்கு வானொலிப் பெட்டி இருக்கும். சொந்த வானொலிப் பெட்டி இல்லாதவர்கள் அங்கு கூடி செய்திகளைக் கேட்பதும் என்னைப் போன்ற சிறு பிள்ளைகள் அங்கு ஓடித் திரிந்து விளையாடுவதும் வழக்கம். அன்று அரை மணி நேரத்துக்கு ஒரு முறைதான் அகில இந்திய வானொலி நிலையச் செய்தி. இடையில் சோகமான வீணை இசை. ஒவ்வோர் அரை மணி நேரமும் எங்களுக்கு ஒரு யுகம் போல இருந்தது. காந்தி சுடப்பட்டு இறந்துவிட்டார் என்பதை வானொலி நிலையம் உறுதிப்படுத்தியது. இரவு எட்டரை மணிக்கு மேல் பூங்காக் கதவை மூடிவிடுவார்கள். எனவே வீடு திரும்ப வேண்டியிருந்தது.

        அந்தச் செய்தி பொய்யாக இருக்குமோ, காந்தி உயிர் பிழைத்துவிட மாட்டாரோ என்ற ஏக்கத்தில் அன்றிரவை ஊணும் உறக்கமுமின்றிக் கழித்தோம். மறுநாள் மாலையில்தான் பழஞ்சோற்றை மோரில் கரைத்து எங்கள் அம்மா கொஞ்சம் கொடுத்தார். சென்னையிலிருந்து வரும் நாளேடுகள் ஈரோடு வரை ரயிலில் வந்து பின்னர் பேருந்து மூலமாக எங்கள் ஊருக்கு, காலை சுமார் ஏழரை மணிக்குத்தான் வந்து சேரும். என் தந்தை கடைக்குச் சென்று முண்டியடித்துக்கொண்டு ஏதோவொரு நாளேட்டை வாங்கி வந்தார். குண்டு துளைக்கப்பட்ட காந்தியின் உடலைக் காட்டும் புகைப்படத்தைப் பார்த்த பிறகும்கூட அன்று மாலை வரை காந்தி இறந்துவிட்டார் என்று நாங்கள் மட்டுமல்ல, எங்கள் தெருவில் இருந்த அனைவருமே நம்ப மறுத்துவிட்டோம். அவரது உடல் இராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்ட பிறகும்கூட காந்தியின் இறப்பு செய்தியை நம்புவது கடினமாக இருந்தது.

        1952இல்தான் பெரியாரின் பேச்சை முதன்முதலில் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது என்றாலும், 1980களின் இறுதியிலிருந்துதான் அவரது எழுத்துகளையும் பேச்சுகளையும் ஆழமாகப் படிக்கத் தொடங்கினேன். (இத்தனைக்கும் நான் 16.6.1972இல் உதகையில் பெரியார் உரையாற்றிய அரங்கக் கூட்டமொன்றுக்குத் தலைமை தாங்கும் வாய்ப்பும் பெற்றிருந்தேன்.)

         சாதி ஒழிப்புக் கண்ணோட்டத்திலிருந்தும் காங்கிரஸ் தேசியவாதத்துக்கு எதிரான நோக்குநிலையிலிருந்தும் காந்தியின் கருத்துகளையும் செயல்பாடுகளையும் அண்ணல் அம்பேத்கரையும் பெரியாரையும் போலக் கடுமையாக விமர்சித்தவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. ஆனால் காந்தி கொலையுண்ட செய்தியைக் கேட்டதும் பெரியாரைப் போலப் பதறிப் போனவர்கள், நிம்மதி குலைந்தவர்கள் காங்கிரஸ்காரர்கள் அல்லாத வேறு யாரும் இருந்திருக்க முடியாது. (ஏனெனில் இருவருமே அகிம்சாவாதிகள்; வன்முறை வழி நாடாதவர்கள்; கொலை செய்தல் என்பதைக் கற்பனை செய்துகூடப் பார்க்காதவர்கள்.)

        காந்தி கொலையுண்டதைக் கேட்டு சங்கிகளும் இந்து மகா சபைக்காரர்களும் இனிப்பு வழங்கிக் கொண்டாடியபோது, பெரியாரோ மனம் பதைபதைத்து எழுதினார்:

“காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டார் என்கின்ற சேதியானது எனக்குக் கேட்டதும் சிறிதுகூட நம்ப முடியாததாயிருந்தது. இது உண்மைதான் என்ற நிலை ஏற்பட்டதும், மனம் பதறிவிட்டது. இந்தியாவும் பதறியிருக்கும். மதமும் வைதிகமும்தான் இக்கொலை பாதகத்துக்குத் தூண்டுகோலாய் இருந்திருக்கலாம் என்பது என் கருத்து. இக்கொலைக்குத் திரைமறைவில் பலமான சதிமுயற்சி இருந்தே இருக்க வேண்டும். அது காந்தியார் எந்த மக்களுக்காகப் பாடுபட்டாரோ – உயிர் வாழ்ந்து வந்தாரோ அவர்களாலேயேதான் இச்சதிச் செயல் ஏற்பட்டிருக்க வேண்டும்… இப்பெரியாரின் பரிதாபகரமான முடிவின் காரணமாகவாவது நாட்டில் இனி அரசியல்–மதயியல் கருத்து வேற்றுமையும், கலவரங்களும் இல்லாமல் இருக்கும்படி மக்கள் நடந்துகொள்வதே அவரை நாம் மரியாதை செய்வதாகும்” (விடுதலை, 31.1.1948; வே.ஆனைமுத்து, பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள், சிந்தனையாளர் கழகம், திருச்சி, 1974, ப.1924).

        காந்தியாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் ‘குடி அரசு’ அலுவலகத்தில் 2.2.1948 அன்று நடத்தப்பட்டதுடன், அந்த அலுவலகத்துக்கு விடுமுறையும் விடப்பட்டது (குடி அரசு, 7.2.1948).

        இப்படிப்பட்ட செயல்கள் ஆர்எஸ்எஸ், இந்து மகா சபா அலுவலகங்களில் நடந்தன என்று இன்றைய சங்கிகளாலோ ‘துக்ளக் தர்பார்’ நடத்துபவர்களாலோ சொல்ல முடியுமா?

“இவரது முடிவைக் கேட்டதும் மக்களுக்குத் திடுக்கிடும் தன்மையும், அலறிப் பதறித் துடிதுடித்துத் துக்கப்படும் தன்மையும் இதுவரை நம் நாட்டுக்கு வேறு எவருடைய முடிவும் தந்ததில்லை” என்று ’குடி அரசு’ 7.2.1948ஆம் நாள் இதழில் வெளியிடப்பட்ட ‘காந்தியார் முடிவு’ என்ற தலையங்கத்தில் எழுதிய பெரியார் கூறினார்:

“கம்யூனிஸ்டுகளும், சமதர்மவாதிகளும் காந்தியின் கொள்கையில் எவ்வளவு குறை கண்டாலும், அவரிடத்தில் மதிப்பும் மரியாதையும் வைத்தவர்களாகவே இருந்து வந்தார்கள். வெள்ளையர்கள் மீதில் இந்தியர்களுக்கு எப்படிப்பட்ட குரோத மனப்பான்மை ஏற்பட்ட காலத்திலும், வெள்ளையர் அரசாங்கம் காந்தியாரை மதிப்பதிலோ, அவரைப் பாதுகாப்பதிலோ சிறிதும் தவறியதில்லை. அனுபவத்துக்கு ஏற்றதோ, ஏற்காததோ என்று கவலையற்று காந்தியார் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு இலட்சியவாதியாகவே இருந்த பெரியவராவார். ஆதலால், அவரிடம் சொந்த விருப்புவெறுப்புக் கொண்டு அவரை எவரும் வெறுத்ததில்லை.

        வருணாசிரம தர்மத்தைக் காப்பதில் காந்தி பிடிவாதமாக இருந்தார் என்பதால்தான் திராவிடர் கழகத்தார் அவரிடம் முரண்பாடு கொண்டிருந்தனர் என்றும், அந்த வருணதர்மக் கொள்கையையும் காந்தி கைவிடும் நிலையில் இருந்தார் என்றும் வடநாட்டு பனியாக்களின் நிர்பந்தம் அவர் மீது இல்லாமல் இருந்திருந்தால் அவர் வேறுவிதமாக இருந்திருப்பார் என்றும் அத்தலையங்கம் கூறியது.

        திராவிடர் கழகத்தின் சார்பில் எல்லா ஊர்களிலும் 29.2.1948 அன்று காந்தியாரின் மறைவுக்கு இரங்கல் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று பெரியார் விடுத்த அறிக்கை (குடி அரசு, 21.2.1948), அவற்றுக்கான விதிமுறைகளையும் வகுத்துத் தந்தது. நேரு, ஜெயப்பிரகாஷ் நாராயண், வல்லபபாய் பட்டேல் முதலியவர்களுக்கு எழுதிய கடிதமொன்றில் பெரியார், இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்ததில் காந்தி முதன்மைப் பாத்திரம் வகித்ததால் இந்த நாட்டுக்கு ‘காந்தி தேசம்’ என்று பெயரிட வேண்டும் என்றும் கூறியிருந்தார் (குடி அரசு, 14.2.1948.)

        காந்தியார் இறந்த ஒரு மணி நேரத்திற்குள் கொலையாளியின் அடையாளமும் பின்னணியும் சந்தேகத்துக்கிடமின்றி முழுமையாகக் கண்டுபிடிக்கப்பட்டு உலகத்துக்கு அறிவிக்கப்படும் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது அனைத்திந்திய வானொலி நிலையமோ அன்றிரவு ஏழரை மணிக்கு ஒலிபரப்பிய செய்தியில் காந்தியைச் சுட்டவன் “அநேகமாக ஓர் இந்துவாக இருக்குமென்று நம்பப்படுகிறது” என்று கூறியது. இப்படிப்பட்ட செய்தி அறிவிப்பு, “ஒரு முஸ்லிம்தான் இந்துவாக வேடம் போட்டிருக்க வேண்டும்” என்று பலராலும் புரிந்துகொள்ளப்பட வழிசெய்ததால் ஈரோட்டில் வரலாறு காணாத அளவுக்கு முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு அவர்களின் உடைமைகள் நாசமாக்கப்பட்டன (குடி அரசு, 7.2.1948, ப.6)

         எங்கள் ஊருக்கும் இப்படிப்பட்ட வதந்திகள் பரவியது என் நினைவில் உள்ளது. என் அப்பாவின் கிராமத்தில் இருந்தவர்களில் ஐந்தில் இரு பகுதியினர் தமிழ் பேசும் முஸ்லிம்கள். பெரும்பாலும் பாய் பின்னுபவர்களாகவோ விவசாயம் செய்பவர்களாகவோ இருந்த அவர்கள் எங்களை மாமன், மாப்பிள்ளை உறவு வைத்து அழைப்பார்கள். நான் பிறந்து வளர்ந்த ஊரில் உருது பேசும் முஸ்லிம்கள் கணிசமாக இருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் ஏழைகள். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஷமிகள் சிலர் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பழிக்கும் வகையில் அவ்வப்போது கோஷம் போடுவார்கள். அர்த்தம் புரியாத எங்களைப் போன்ற சிறுவர்கள் அதைக் கேட்டு சிரிப்பர் (கொஞ்சம் வளர்ந்து பெரியவனாகியதும்தான் தெரிந்தது, இந்திய – பாகிஸ்தான் பிரிவினையின் காரணமாக ஏற்பட்ட விருப்புவெறுப்புகளின் வெளிப்பாடாகத் தோன்றியவைதான் அந்த முழக்கங்கள் என்பது.) ஆனால், அப்படிப்பட்ட முழக்கங்கள் நீடித்து நிற்கவில்லை என்பதோடு, முஸ்லிம்கள் மீது எந்த அசம்பாவித சம்பவமும் நடந்ததாக என் நினைவுக்குத் தெரிந்த அளவில் ஏதும் இல்லை. ‘ரேடியோவில் பேசி நாய்க்கர் சமாதானம் செய்தார்’ என்று என் அப்பா கூறினார். எனக்கு ஏதும் விளங்கவில்லை.

        காந்தியைக் கொன்றவன் கோட்ஸே என்ற சித்பவன் பார்ப்பனன் (’சித்பவன்’ என்றால் நெருப்பால் தூய்மையாக்கப் பட்டவன் என்று பொருள்!) என்பது தெரிந்தவுடனேயே, மகாராஷ்டிராவில் பார்ப்பனர்கள் மீது தாக்குதல் தொடங்கியது. தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் மீது இத்தகைய வன்முறைத் தாக்குதல்கள் நடக்காமல் செய்யப்பட்டதற்கு பெரியார் 31.1.1948இல் திருச்சி வானொலி நிலையத்தில் ஆற்றிய உரை முக்கிய காரணம். நாட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று பெரியார் வானொலி உரையில் கூறியதால் தமிழகத்தில் பார்ப்பனர்கள் மீது எந்தத் தாக்குதலும் நடக்கவில்லை. காந்தி கொலை பற்றி பெரியார் எழுதியதையும் பேசியதையும் முழுமையாக அறிந்துகொண்ட பிறகுதான் ‘ரேடியோவில் பேசி நாய்க்கர் சமாதானம் செய்தார்’ என்று 1948இல் என் தந்தை கூறியதன் பொருளைப் புரிந்துகொண்டேன்.

        காந்தியாரைக் கொல்லச் சதித் திட்டம் தீட்டியவர்கள், கொலைக்காரன் கேட்ஸேவுக்கு கைத்துப்பாக்கி கொடுத்தவன் ஆகியோர் அனைவரும் பார்ப்பனர்களே. லாரி காலின்ஸ், டொமினிக் லாபியெ ஆகிய வரலாற்று ஆய்வாளர்கள் எழுதியுள்ள ‘Freedom at Midnight’ என்னும் நூலில் காணப்படும் அவர்களது புகைப்படங்களே கீழே உள்ளவை (இந்த நூல் ‘நள்ளிரவில் சுதந்திரம்’ என்ற தலைப்பில் தமிழாக்கம் செய்யப்பட்டு சென்னையிலுள்ள ‘அலைகள் பதிப்பக’த்தால் வெளியிடப்பட்டுள்ளது.) அந்தப் புகைப்படங்களுக்குக் கீழே நூலாசிரியர்களால் தரப்பட்டுள்ள தலைப்புகளில் கொலைச் சதியில் சம்பந்தப்பட்டவர்கள் என கைது செய்யப்பட்டவர்களின் தனிப்பட்ட ஒழுக்கக்கேடுகள் என்று சொல்லப்பட்டவற்றை மட்டும் இங்கு நாம் தவிர்த்திருக்கிறோம்.

    கல்லூரியொன்றிலுள்ள விவாத சங்கத்தின் உறுப்பினர்கள் ஆண்டு மலருக்கான புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பதுபோல காந்தியைப் படுகொலை செய்தவர்கள் தங்கள் மீதான கொலை வழக்கு விசாரணை வருவதற்கு முன் போஸ் கொடுக்கிறார்கள். உட்கார்ந்திருப்பவர்களில் இடதிலிருந்து வலமாக: நாராயண் ஆப்தே, 34, – தூக்கிலிடப்பட்டான்; ‘வீர’ சாவர்க்கர், 65, அவர் பெயரால்தான் இந்தக் குற்றம் இழைக்கப்பட்டது –விடுதலை செய்யப்பட்டார்; நாதுராம் கோட்ஸே, 39, கொலைசெய்தவன் – தூக்கிலிடப்பட்டான்: விஷ்ணு கார்கரெ, 34, – ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டான்; நிற்பவர்கள்: ஷங்கர் கிஸ்தயா, பாட்கெவின் வேலைக்காரன்; குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுப் பின்னர் மேல்முறையீட்டில் விடுதலை; கோபால் கோட்ஸே, 29, கொலைக்காரனின் சகோதரன் - ஆயுள்தண்டனை; மதன்லால் பாஹ்வா, 26, பஞ்சாபிலிருந்துவந்த அகதி; தன் தந்தையின் உடல் சிதைக்கப்பட்டதற்குப் பழி தீர்க்க சபதம் எடுத்துக்கொண்டவன் – ஆயுள் தண்டனை; திகம்பர் பாட்கெ, 37, துறவி போல வேடம்பூண்டிருந்த ஆயுத வணிகன் – அரசுத் தரப்பு சாட்சியாகி விடுதலையடைந்தவன்.

        மேற்சொன்ன எட்டுப் பேரும் கைது செய்யப்பட்ட பின் போலீஸாரால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

        ஆனால் சில பார்ப்பனப் பத்திரிகைகளோ முஸ்லிம்கள் மீது பழி போட முயன்றன. அது பற்றிப் பெரியார் எழுதினார்:

“தென்னாட்டுப் பார்ப்பனப் பத்திரிகைகள் காந்தியாரைச் சுட்டவன் பார்ப்பனன் என்பதை வேண்டுமென்றே மறைத்து – மக்கள் முஸ்லிம்கள் மீதும், காங்கிரஸுக்கு மாறுபட்ட கருத்துக்கொண்டவர்கள் மீதும் பாயும்படியான அயோக்கியத்தனமாக மறைத்தும் திருத்தியும் பிரசுரித்தார்கள். அது மாத்திரமா என்று பார்த்தால், ‘கருப்புச் சட்டைக்காரர்கள் கலாட்டா’ என்ற தலைப்புக் கொடுத்து மக்களை அவர்கள் மீது கிளப்பியிருக்கிறார்கள். இந்தக் காரியத்தை ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையே முதன்முதலாய் தைரியமாய்க் கையாண்டிருக்கிறது. உண்மையாக இந்த நாட்டில் ‘இந்து’, ‘சுதேசமித்திரன்’ என்ற இரண்டு பேயாட்ட, வெறி கிளப்பும் விஷமப் பத்திரிகைகள் இல்லாமல் இருக்குமானால் – இந்த நாடு எவ்வளவோ முன்னேற்றமடைந்து, இந்த நாட்டு மக்கள் எவ்வளவோ அந்நியோன்ய பாவமடைந்து ஞானமும், செல்வமும் ஆறாகப் பெருகும் நன்னாடாக ஆகி பல்லாண்டுகள் ஆகியிருக்கும். இன்றைய கலவரங்களிலும், கேடுகளிலும், நாசங்களிலும் 1000-ல் 999 பாகமும் இல்லாமல் இருந்திருக்கும்.

      இப்பத்திரிகைகள் தங்கள் சாதியார் செய்யும் அயோக்கியத்தனங்களையெல்லாம் ‘பொது மக்கள் ஆத்திரம்’ என்று போட்டுவிட்டு (கருப்புச் சட்டைக்காரர்கள் செய்தார்களோ இல்லையோ) கருப்புச் சட்டைக்காரர்கள் நடத்தையைக் குறிப்பிடும்போது, ‘கருப்புச் சட்டைக்காரர்கள் கலாட்டா’ என்று போடுவதன் காரணம் வேறு என்னவாய் இருக்க முடியும்? இந்த நாட்டுக்கு எப்படிப்பட்ட ஆட்சி ஏற்பட்டாலும், ‘இந்து’, ‘சுதேசமித்திரன்’ என்னும் இந்த இரண்டு விஷ ஊற்றுகளும் ஒழிக்கப்பட்டால் ஒழிய மக்களுக்குத் துவேஷம், குரோதம், வஞ்சகம் என்ற விஷ நோய்கள் நீங்கப் போவதில்லை என்று உறுதியாய்க் கூறுவோம். இந்தச் சமயத்தில் பார்ப்பனர் செய்யும் அயோக்கியத்தனங்கள் ஏராளமாய் இருக்கும்போது, அவர்களை மறைத்து சுட்டவன் சாதியைக்கூட மறைத்துவிட்டு, ‘கருப்புச் சட்டைக்காரன் கலாட்டா’ என்று எழுதுவதானது சர்க்கார் அடக்குமுறையைப் பார்ப்பனர்கள் பக்கம் திருப்புவதை விட்டு – கருப்புச் சட்டைக்காரர் பக்கம் திருப்புவதற்கல்லாமல் வேறு எதற்காக இருக்க முடியும்? இந்தப்படி செய்ய மற்ற கூட்டத்தினருக்குப் பெயரைக் கொடுத்து அது பிரசுரித்ததா?

        இப்படிப்பட்ட யோக்கியர்கள் உள்ள நாட்டில் – எப்படி சாதி, வகுப்பு ஒற்றுமை இருக்க முடியும்? மேலும், துவேஷம், பிரிவு ஏற்படாமல் எப்படி இருக்க முடியும்? மக்களுக்கு வெறி ஏற்பட்டிருக்கும் சமயத்தில் ‘கருப்புச் சட்டைக்காரர் கலாட்டா’ என்று எழுதினால் அதனுள்ள மர்மம் என்னவாய் இருக்க முடியும்?

        எனவே பார்ப்பனீய விஷம் மதம் அழிக்கப்பட்டால் ஒழியச் சாந்தியும் சமாதானமும் இந்த நாட்டுக்கு ஏற்படுவது அருமையிலும் அருமையாகத்தான் இருக்கும். வருணாசிரம தர்மப் பிரிவு கொண்ட பார்ப்பன மதம் வேண்டவே வேண்டாம் என்றுதான் சொல்கிறோம். அது உள்ளவரை நாட்டில் இன்றுள்ள கேடுகள் எல்லாம் இருந்துதான் தீரும்” (குடி அரசு, தலையங்கம், 7.2.1948)

        அன்று ‘இந்து’ என்று பெரியார் குறிப்பிட்டது ஆங்கில ஏடான ‘தி ஹிந்து’வை. அது இன்று முற்போக்கான, ஜனநாயகக் கருத்துகளை வெளியிடும் ஏடாகி விட்டது. ஆனால் அன்றைய ஆங்கில ‘தி ஹிந்து’வின் இடத்தை இப்போது ‘தி இந்து தமிழ் திசை’ பிடித்துக் கொண்டுவிட்டது. ’சுதேசமித்திரனி’ன் இடத்தில் அமர ஏராளமான பார்ப்பனப் பத்திரிகைகள் போட்டி போடுகின்றன.

        மேற்சொன்ன தலையங்கத்தில் வல்லபபாய் பட்டேல் அன்று எதிர்கொண்ட விமர்சனங்களையும் பெரியார் சுட்டிக் காட்டினார்:

“நேருவின் நண்பரும் சமதர்மக் கட்சித் தலைவருமான ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்கள் வெட்ட வெளிச்சமாகவே, இதை – அதாவது ‘பாதுகாப்பு மந்திரி (சர்தார் பட்டேல் அவர்கள்) அந்தப் பாதுகாப்பு இலாகாவுக்குத் தகுதி அற்றவர்’ என்று சொல்லுகிறார். பொதுமக்களும் இந்தக் கொலைக்கு சர்தார் பட்டேல் மீது பழி போட இடமிருக்கிறது என்று கருதுகிறார்கள். காந்தியார் உயிருடன் இருக்கும்போது, ‘எனக்கும் பட்டேலுக்கும் விரோதம் இருப்பதாகக் கருதாதீர்கள்’ என்று சொல்லி, அவர் மீது மக்களுக்கு உள்ள தப்பபிராயத்தை மாற்ற முயன்றிருக்கிறார். சர்தார் பட்டேல் அவர்களும், ‘காந்தியார் பட்டினியின்போதே (உண்ணாநோன்பின்போதே – எஸ்.வி.ஆர்.) செத்து இருந்தால் நன்மையாக இருந்திருக்கும்’ என்று தனது துக்க செய்தியில் நுழைத்துச் சொல்லியிருக்கிறார்…”

      வரலாற்றாய்வாளர் க்ளாட் மார்கோவிட்ஸ், The UnGandhian Gandhi: The Life and Afterlife of the Mahatma என்னும் நூலில், காந்திக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் இருந்த குறைபாடுகளுக்கு வல்லபபாய் பட்டேல் பொறுப்பேற்க வேண்டியிருந்ததாலேயே காந்தி கொலை வழக்கு துரிதமாக நடைபெற்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

       பெரியார் தொடர்ந்து எழுதுகிறார்:

”ஆகவே பண்டித நேரு அவர்களும், இராஜகோபாலாச்சாரியார் அவர்களும் அவர்கள் விலகுவதற்கு முன்போ, ஓய்வெடுத்துக் கொள்வதற்கு முன்போ, ‘காந்தியார் பலியாக்கப்பட்டதன் காரணமாய் இந்து மக்கள் சமுதாயத்தில் வருணாசிரம தர்ம முறை – அதாவது பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்பதான பிரிவு (பிறவி உரிமை) முறை இனி கிடையாது; வருண முறையைக் குறிக்கும் சட்டம், சாஸ்திரம், சம்பிரதாயங்களும் இந்த சுயராஜ்ஜியத்தில் இனி அனுஷ்டிக்கப்படக் கூடாது; இவை ஒழியும்படியாக, அவசியமான எல்லா ஏற்பாடுகளும் கையாளப்படும்’ என்று சுயராஜ்ய சர்க்காரால் ஏற்பாடு செய்துவிடுவார்களேயானால் – இந்த நாட்டைப் பிடித்த எந்த கேடும், ஒரே அடியாய் தீர்ந்துவிடும். இதைச் செய்த உடனே அப்புறம் ஓர் உத்தரவு போட்டுவிடலாம். அதாவது, ‘பிறவி சாதி முறை எடு(க்கப்)பட்டுவிட்டதால் இனி இந்த நாட்டில் பிராமணர் பாதுகாப்பு சங்கமோ, பிராமணர் சேவா சங்கமோ, வன்னியகுல சத்திரியர் மகாஜன சங்கமோ, நாடார் மகாஜன சங்கமோ, வாணிப வைசிய சங்கமோ, மருத்துவர் சங்கமோ, அருந்ததியர் சங்கமோ மற்றும் இப்படிப்பட்ட பல பல சாதி - வகுப்பு சங்கமோ இனிச் சட்டவிரோதமாகக் கருதப்படும்; அதனதன் தலைவர்களும் பிரமுகர்களும் பந்தோபஸ்தில் வைக்கப்பட்டு அவர்கள் சொத்துகளைப் பறிமுதல் செய்யப்படும்’ என்று உத்தரவு போட்டுவிடலாம். பிறகு நமக்கு என்னதான் வேண்டும்? தானாகவே சமதர்மமும், பொதுவுடைமையும், தனித்தனி நாடு சுதந்திரமும் தாண்டவமாடும்.”

        கருணையும் கனிவும் அன்பும் நிறைந்த பெரியாரின் நெஞ்சம் கொள்கை வேறுபாடுகளையெல்லாம் மறந்துவிட்டு, காந்தி என்ற தனிப்பட்ட மனிதரின் தன்னலமற்ற தன்மையைப் போற்றியது. அனைத்திந்திய அளவில் நேரு, தமிழக அளவில் காமராஜர் போன்ற விதிவிலக்கான மனிதர்களைத் தவிர காங்கிரஸ் கட்சியும் அது அமைத்த அரசாங்கங்களும் பின்னாளில் மேற்கொண்ட நடவடிக்கைகள், உலகில் இருந்த, இருக்கின்ற பாசிசங்களில் எல்லாவற்றிலும் பார்க்க மிக நீண்டகாலமாக இருந்துவரும் இந்துத்துவ பாசிசத்தை இந்த மண்ணிலிருந்து துடைத்தெறிவதற்கான தீவிரமான நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை என்பதோடு அதை ஊக்குவிக்கவும் செய்துள்ளன.

-----------------------------------------------

30.01.2020 மீள்பதிவு.

Wednesday, January 26, 2022

இவர் தமிழர் அல்ல என்றால் எவர் தமிழர் - 2

 

இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்- 2

●  இந்த நூலின் முதல் தொகுதி 816 பக்கங்களை கொண்டது - ஏன் இந்த வேண்டாத வேலை | பெரியார், தமிழர் தலைவர் ஆனது | தமிழ் புலவர்களும் தந்தை பெரியாரும் | தமிழ் | தமிழர் | தமிழ் நாடு | என்ற ஆறு முக்கிய பகுதிகளாகவும், ஆணித்தரமான வாதங்களாகவும், ப. திருமாவேலனால் சிறப்பாக படைக்கப் பட்டுள்ளது !

●  இந்த இரண்டாவது தொகுதியின் பகுதிகள் - மூவரைப் புரிதல்: 1) ம.பொ.சி. இந்துத்துவ தமிழ்த் தேசியம். 2) குணா. கிறிஸ்தவ இறையியல் தமிழ்த் தேசியம். 3) பெ. மணியரசன். நிலப்பிரபுத்துவ பழைமைவாத தமிழ்த் தேசியம் | பெரியார் திராவிடம்: 1) திராவிடம் என்ற சொல். 2) திராவிடம் எனும் கல் | பெரியாரின் தமிழியம் | தமிழ் ஈழமும் தந்தை பெரியாரும் | அடிப்படை ஆவணங்கள், நூல்கள், இதழ்கள், அகராதிகள் | என தனது 20 ஆண்டு கால ஆராய்ச்சியின் ஆதாரங்களை நூலுக்காக  அணி வகுத்துள்ளார் !

நூலுக்கு அணி சேர்த்துள்ளார் ! !

●  தமிழ் தேசிய மூலவராக கருதப்படும் ம.பொ.சி - இந்திய தேசியராய் இருந்து, திராவிட இயக்க எதிர்ப்பாளராக உருவாகி, தமிழ் தேசியராக உருமாறி பின்னர் திராவிட இயக்கத்தோடு ஒட்டி உறவாடி முடிந்து போனவர். குலக்கல்வி திட்டத்தை ஆதரித்தவர். இந்தி மொழிக்கு ஆதரவு தந்தவர். சமஸ்கிருத அடிமை. தமிழன் என்பதை விட இந்து என்பதில் லாபம் என்றவர்.

●  பெரியாரின் கொள்கைக்கு விரோதமாகவும், பெரியாரை தமிழர்களுக்கு எதிரியாகவும் சித்தரித்ததில் முன்னோடி !  " ம.பொ.சி. பத்து பார்ப்பானுக்கு சமம் ! "..என பெரியாரால் அடையாளம் காட்டப்பட்டவர். இவரை தலைவராக கொண்டாடும் தமிழ் தேசியர்கள் தான் - பெரியாரை தமிழர் இல்லை என கட்டமைக்கிறார்கள் !

●  அன்று பண்டிதர்களும், புலவர்களும் தமிழ் பாடல்களை புனைவதிலும், அர்த்தம் சொல்வதிலும் கவனமாக இருந்த போது, ' தமிழர்களுக்கு ஆரியம் கலவாதது எது ? ' என பெரியார் மட்டும் தானே கேட்டார் ?

●  " உனது மொழியில் ஆரியம் புகுந்து விட்டது. உனது இலக்கியத்தில் ஆரியம் புகுந்து விட்டது. பண்பாட்டில் ஆரியம்  புகுந்து விட்டது. உனது வாழ்க்கையில் ஆரியம் புகுந்து விட்டது. உனது கல்வி, உணவு, ,உடை, பழக்க வழக்கங்களில் ஆரியம் புகுந்து விட்டது ! தமிழர்களுக்கு ஆரியம் கலவாதது எது ? "... என எந்த தமிழறிஞனும் கேட்க துணியாத கேள்வியை கேட்ட பெரியார் - அவர் தமிழர் இல்லை என்றால் வேறு எவர் தமிழராம் ?

●  தமிழ் தாத்தா என அழைக்கப்படும் உ. வே. சாமிநாதைய்யரின் ( உ.வே.சா ) சமஸ்கிருத பற்றையும், தமிழ் மீது அவர் கொண்டிருந்த ' மாற்றாந்தாய் மனப்பான்மையையும் ' ஆதாரத்தோடு தோலுரித்திருக்கிறார், திருமாவேலன் !

●   உ.வே.சா, தனது நூல்களில் எல்லாம் தமிழ் பாஷை என்று எழுதுவாரேயன்றி - தமிழ் மொழி என எழுதவே மாட்டார். நூல்களை புஸ்தகமென்றும், பூக்களை புஸ்பங்களென்றும் எழுதுவார். வணக்கம் என்று சொல்பவருக்கு நமஸ்காரம் என்று பதில் சொன்னவர்தான் தமிழ்த் தாத்தா ! எல்லாவற்றிற்கும் மேலாக, சமஸ்கிருதத்தின் துணையின்றி தமிழ் இயங்காது என வலியுறுத்தும் வகையில் இவரது செயல்கள் இருந்தனவாம் ! 

உ.வே.சா தமிழர்,  ஆனால் பெரியார் தமிழர் இல்லையா ?

●  பிராமணர்கள் தமிழர்களா என்ற கேள்விக்கு, பெரியார் தனது குடிஅரசு இதழில் அன்று ( 22.01.1939 ) எழுதியுள்ளது இன்றும் பொருந்துவதாக உள்ளது.

●  " பிராமணர் மெய்யாகவே தமிழர்களானால் -  நடை, உடை, பாவனைகளில் அவர்கள் தமிழராக வேண்டும். முதலில் பூணூலை அறுத்தெறிய வேண்டும். எல்லா துறைகளிலும் தமிழரைப் போல நடக்க வேண்டும். தமிழ் நூல்களையே தனது முதல் நூலாக கொள்ள வேண்டும். தமிழே தனது குலமொழி, கோத்திர மொழியென ஒத்துக் கொள்ள வேண்டும் !

●  சமஸ்கிருதம் தமிழைவிட உயர்ந்தது என்ற தப்பெண்ணத்தை விட வேண்டும். நடை, உடை, பாவனைகளில், பழக்க வழக்கங்களில், மதாச்சாரங்களில் அந்நியர் எனக் காட்டிக் கொள்ளும் பிராமணர் - விவாதத்திற்காக மட்டுமே தமிழர் எனக் கூறிக் கொள்வது, சுத்த அசட்டுத்தனம் ! " ..

இப்படி அதிரவிட்டவர் பெரியார் !

அதனால்தான் அவரையே தமிழர் இல்லை என்று நிறுவப் பார்க்கிறார்கள் !

●  தமிழ் தேசியம் பேசுவோர், பக்தி இலக்கியங்களை சார்ந்தது தான் மெய்யியல் ( தத்துவம் ) என்று நினைக்கிறார்கள். ஆன்மீகம், கோவில் இடம் பெற்றால் தான், அது ' மெய்யியல் ' என உருவகப் படுத்துகிறார்கள்.

●  பெரியாரின் மெய்யியல் என்பது - புத்தர், வள்ளுவர், அவ்வை, சித்தர்கள், வள்ளலார், அயோத்தி தாசர் ஆகியோரின் நீட்சியாகும். சாதி, மத பேதமற்ற, எல்லோர்க்கும் எல்லாம் என்ற, பொதுவுடைமை கூட்டுறவுச் சமூகமாக, நாம் தொடக்க காலத்தில் இருந்தோம். அதை மீண்டும் உருவாக்க நினைப்பதே பெரியாரியம் !

அதுதான் பெரியாரின் மெய்யியல் அல்லது பெரியாரின் தத்துவம் !

●  பெரியாரின் மெய்யியலில் தலையாய கொள்கைகளில் ஒன்று - " கடவுளாகட்டும், மதமாகட்டும், பக்தியாகட்டும், மோட்சமாகட்டும் எதுவானாலும் அது தனிப்பட்ட மனிதனுடைய சொத்து ! உலகத்துக்கு பொதுச் சொத்தல்ல ! 

ஒழுக்கம், நாணயம் ஆகியவைதான் பொதுச் சொத்து. மனித சமுதாயத்திலே இது கேடாக இருந்தால் - சமுதாயத்திற்கு கேடு ! "... எனச் சொன்ன தத்துவ ஞானிதான் தந்தை பெரியார் ! இவரைத்தான் தமிழர்களுக்கு எதிரியாக சித்தரிக்கின்றார்கள் !

●  பெரியாரைப்பற்றி, இரண்டு தொகுதிகளையும் உள்ளடக்கிய, மொத்தம் 1579 பக்கங்களை கொண்ட இந்த பெரிய நூல் - ஊடகவியலாளர் திரு. ப. திருமாவேலனின், அசாத்திய உழைப்பினாலும், அசராத முயற்சியாலும், ஆணித்தரமாக பெரியாரை நம்பியதாலும், உருவான, ப.  திருமாவேலனின் தலைசிறந்த படைப்பு ( Masterpiece ). 

அவருக்கு எனது வாழ்த்துகளும் வணக்கங்களும் !

அவரது வார்த்தைகளிலேயே இந்த அறிமுகவுரையை நிறைவு செய்கிறேன் !

●  " தமிழின எதிரிகள் அனைவரையும் எதிர்த்து நின்ற மாவீரன் யார் ? வாழ்ந்த காலத்தில் மட்டுமல்ல, மறைந்து அரை நூற்றாண்டு ஆனபிறகும், சிம்ம சொப்பனமாக இருப்பவர் யார் ? இன்றும் எதிரிகளையும், துரோகிகளையும் அடையாளம் காணச் சரியான கண்ணாடி அவருடையது தானே ? " 

●  " அவர் நம் தலைவர் தானே ?

அவரையே தமிழர் இல்லை என்போர், தமிழ்த் துரோகிகள் தானே ?

இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர் ? "..


பொ. நாகராஜன். சென்னை.

25.01.2022.

********************************************

Tuesday, January 25, 2022

சுயமரியாதைச் சுடரொளிகள்


சுயமரியாதைச் சுடரொளிகள் ( தொகுதி 1 ) - அ. இறையன் - திராவிடர் கழக வெளியீடு - பக்கங்கள் 320 - நன்கொடை ரூ 300/

●  தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றிய இயக்கம் - திராவிட இயக்கம்! முறையான வரலாறு இல்லாத தமிழினத்தில், பெரியாரின் கருஞ்சட்டைப் படையில், திராவிட இயக்கத்தில் தங்களை இணைத்து வரலாறு படைத்தவர்களோ  ஏராளம் ! தலைவர்களாக, தளபதிகளாக, கொள்கை வீரர்களாக, படை வீரர்களாக, வீராங்கனைகளாக தன்னலமின்றி தன்னை அர்ப்பணித்தோர் ஏராளம், ஏராளம் !

●  திராவிட இயக்கத்தின் அந்த வீர மாந்தர்களை, தியாக செம்மல்களை, சுயமரியாதைச் சுடரொளிகளைப் பற்றியும், அவர்களின் சுருக்கமான வரலாற்று குறிப்புகளையும் பதிவு செய்து, ஒரு காலப் பெட்டகமாக படைக்கப்பட்ட நூல்தான் இது. நூலை பெரியார் பேருரையாளர், பேராசிரியர் அ. இறையன் அவர்கள் மிகவும் அக்கறையோடும், அர்ப்பணிப்போடும் எழுதியிருப்பதை நாம் உணர  முடிகிறது.

●  இந்த முதல் தொகுதியில் - 178 சுயமரியாதை இயக்க வீர, வீராங்கனைகளின் வாழ்க்கை குறிப்புகள் தரப்பட்டுள்ளன. இதன் முதல் பதிப்பு 1981ல் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இயக்கத்தின் முன்னோடிகள், தலைவர்கள், தொண்டர்கள் பற்றிய தகவல்கள் நிறைய உள்ளன. ஒவ்வொன்றும் முத்துக்கள் ! கழகத்தின் சொத்துக்கள் !

●  திராவிட இயக்க முன்னோடி ஆளுமைகள் வரிசையில், இந்த தலைவர்களைப் பற்றியெல்லாம் அறிந்து கொள்ள முடிகிறது - 

●  அன்னை நாகம்மையார் | அன்னை மணியம்மையார் | அஞ்சாநெஞ்சன் அழகிரிசாமி | கைவல்ய சாமியார் | ஏ. டி. பன்னீர் செல்வம் | தோழர் ம. சிங்காரவேலர் | பேரறிஞர் அண்ணா | பாவேந்தர் பாரதிதாசன் | மூதாட்டி இராமாமிர்தம் அம்மையார் | குத்தாசி குருசாமி | சாமி. சிதம்பரனார் | கோவை. அய்யாமுத்து | தோழர் ப. ஜீவானந்தம் | என். வி. நடராசன் | சி. பி. சிற்றரசு | ஏ. வி. பி. ஆசைத்தம்பி | நடிகவேள் எம். ஆர். ராதா | கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் | சா. ரா. கண்ணம்மாள் | புலவர் குழந்தை | ஈ. வி. கி. சம்பத் | இப்படி முன்னோடிகளின் பட்டியல் நீளுகிறது !

●  திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்கு முன்னோடி தலைவர்கள் எந்த அளவு காரணமாக இருந்தார்களோ, அவற்றிற்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் இருந்தது - இயக்க தொண்டர்களின் பங்கு. அவர்களின் அர்ப்பணிப்பும், சேவையும், மன உறுதியும் யாருக்கும் சளைத்ததல்ல. பணம், பதவி, அந்தஸ்து, கௌரவம் போன்றவைகளை நோக்கி செல்லாமல், பெரியார் வழியில், பகுத்தறிவு பாதையில் தங்கள் வாழ்நாளையே அர்ப்பணித்த, சுடரொளிகள் சிலரின் வாழ்க்கை குறிப்புகள்,  தெரிவதற்கும், தெளிவதற்கும் - 

1) சுயமரியாதை இயக்கத்திற்கு தூணாக, போர்வாளாக, சூழ்ச்சிகளை முறியடிக்கும் வீரராக திகழ்ந்தவர், மாயவரச் சிங்கம் என பெயர் பெற்ற, மாயவரம் சி. நடராசன் ( 1902 - 1937 )

2) முதலாம் இந்தி எதிர்ப்பு போராட்டதின் முதல் ' சர்வாதிகாரி ' யாக பொறுப்பேற்று போராட்டத்தை நடத்தி, கைதாகி, 18 மாதங்கள் சிறையில் வதைப்பட்டு, வெளியே வந்த பின்னே வெற்றி வீரராக வாழ்ந்தவர், நெல்லை சி. டி. நாயகம் ( 1878 - 1944 )

3) சிவகங்கையில், ' முதல் ஆதிதிராவிட மாநாட்டை ' ஏற்பாடு செய்து, ஆதிதிராவிட மக்களை தாழ்வுபடுத்தும் பார்ப்பனருக்கும், உயர் ஜாதியினருக்கும் எச்சரிக்கை விடுத்து, நடத்தி காட்டியவர், வழக்கறிஞர் சிவகங்கை எஸ். இராமச்சந்திரன் ( 1884 - 1933 )

4) நீடாமங்கலத்திலுள்ள வைணவக் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட தோழர்களை துணிச்சலாக அழைத்து சென்ற வீரர், மாயவரம் சித்தார்காடு கே. இராமையா ( 1903 - 1974 )

5) திராவிடக் கருத்துக்களை தனது ' நகர தூதன் ' இதழில் நையாண்டியும் கிண்டலுமாக எழுதி பெயர் பெற்றவர், மணப்பாறை ' பேனா நர்த்தனம் ' ரெ. திருமலைசாமி ( 1901 - 1971)

6) மத மூடநம்பிக்கைகளுக்கு எதிராக, மறுமணம் - கலப்பு மணம் - காதல் மணம் - சடங்கொழித்த மணம் - சிக்கன மணம் என்ற அய்வகைத் தன்மை கொண்ட திருமணத்தை, தமிழ் நாட்டிலேயே முதன் முறையாக தனக்கு நடத்தி காட்டிய செயல்வீரர், காரைக்குடி சொ. முருகப்பர் ( 1893 - 1956 ). தந்தை பெரியார் தலைமையில் முருகப்பர் - மரகதவல்லி திருமணம் 29.06.1929ல் நடைபெற்றது !

7) இந்தி எதிர்ப்பு போரில் தன் துணைவியாரையும் ஈடுபடுத்தி, 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றவரும், சீரிய எழுத்தாளருமான முதுகுளத்தூரை சேர்ந்தவரும், புகழ் பெற்ற ' பராசக்தி ' நாடகத்தை படைத்தவர் பாவலர் பாலசுந்தரம் ( 1907 - 1972 )

8) இனமானம் காக்க இந்தி எதிர்ப்பு போரில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்டு, கடுங்காவல் கொடுமையால் தங்கள் உயிரை பலிதந்த, மொழிப்போர் தியாகிகள், மாவீரர்கள், தாளமுத்து ( மறைவு 11.03.1939 ) மற்றும் நடராசன் ( மறைவு 15.01. 1939 )

9) தமிழகத்துக்கு வந்த நேருவுக்கு, இயக்க தோழர்களுடன் கருப்புக் கொடி காட்டிய போது, பார்ப்பன மற்றும் ஆணவக் கைக்கூலிகளால் கொடூரமாக தாக்கப்பட்டும், இறுதிவரை இயக்கத்துக்கு பாடுபட்ட, திருச்சி ஃபிரான்சிஸ் ( 1910 - 1963 ). இவர் மறைந்த பின்பு, இறுதி ஊர்வலத்தில் தந்தை பெரியார் கலந்து கொண்டார்!

10) இந்திய அரசியல் சட்ட எரிப்புக் கிளர்ச்சியில் பங்கு பெற்று, கைதாகி, சிறை சென்று, சிறைக் கொடுமைகளின் விளைவாக, உடல்நலன் சீரழிந்து, மரண மடைந்த கொள்கை வீரர், திருவையாறு மஜீத் ( 1935 - 1958 )

●  திராவிட கொள்கை பற்றாளர்கள், பெரியாரின் பெருந் தொண்டர்களின் தியாகத்தால் உருவானது - திராவிட இயக்கம் !

சுயமரியாதை இயக்கம் முதல் திராவிடர் கழகமாக பரிணாமம் பெற்ற பின்பும், தன்னலமற்ற கருஞ்சட்டை வீரர்களின் வாழ்வும் தியாகமும் இணையற்றது !

அந்த சுயமரியாதைச் சுடரொளிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த இந்த நூலும் இணையற்றது !

பொ. நாகராஜன். சென்னை.

06.01.2022.

********************************************

தமிழர் விரோதி - நாகசாமி

 நடந்தது என்ன?

*********************************

பேராசிரியர்.மு.நாகநாதன்

==========================

நாகசாமி மறைந்து விட்டார்.

ஆழ்ந்த அனுதாபங்கள்.

சிலர் இவரின் தமிழர் விரோதப் போக்கை அறியாமல் சில கருத்துக்களைப் பதிவிட்டுள்ளனர்

1980 ஆம் ஆண்டுகளில் பேராசிரியர்.ந.சஞ்சீவி அவர்களை மாலை நேரத்தில் பல்கலைக்கழகப் பணி முடித்து, சந்திப்பேன்.

அப்போது ஒரு முறை நாகசாமி அவர்களைச் சந்தித்துள்ளேன்.

பேராசிரியர்.ந.சஞ்சீவியிடம் மிகவும் பணிவாக நடந்து கொள்வார்.

நாகசாமி சென்றவுடன் பேராசிரியர்.ந.சஞ்சீவி சொன்னார்.

இவர் திறமையே தமிழுக்கு எதிராகச் செயல்படுவது தான் என்றார்.

சமஸ்கிருதம் உயர்ந்த மொழி என்பார்.

ஆய்வு தரவுகள் புறந்தள்ளிச் சாதி வெறியோடு செயல்படுவார். 

இவர் தற்போது ஊழல் புகாரில் மாட்டிக் கொண்டுள்ளார்.

தன்னை காப்பாற்றிக் கொள்ள இவர் போடும் வேடம் தான் இந்தப் பணிவு.

பேராசிரியர் .ந.சஞ்சீவி அன்றைய அதிமுக பொதுச் செயலாளர் திரு.ப.உ.சண்முகத்திற்கு நெருங்கிய நண்பர்.

இவர் தமிழ்நாட்டின் தொல்லியல் துறையில் இருந்த போது பெரும் ஊழலைச் செய்துவிட்டார் என எம்.ஜி.ஆர் ஆட்சியில் ‌ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணை மேற்கொண்டது.

முன்னாள் சிபிஐ இயக்குநராக இருந்த திரு.நரசிம்மன் இந்த விசாரணையைமேற்கொண்டார். ஆதாரங்கள் இருப்பதாகத் தலைமைச் செயலகத்திற்குக்கோ ப்புகளை அனுப்பிவிட்டார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஊழல் பெருகி வருவதைத் தடுப்பதற்குச் சட்ட வரையறை கொண்டு வரவேண்டும் எனச் சில கருத்துக்களை முன் வைக்க, திரு.நரசிம்மன் அவர்களை நானும், நண்பர் பேராசிரியர்.வி.நாகராஜனும் நேரம் ஒதுக்கித் தருமாறு அக்காலக்கட்டத்தில்  கேட்டுக் கொண்டோம்.

மறுநாளே வரும்படி அழைப்பு வந்தது.

திரு .நரசிம்மன் அக்கரகாரத்தின் அதிசய ‌மனிதர். நேர்மையின் சிகரம்.

நாங்கள் இருவரும் இளைஞர்களாக இருந்து கொண்டு ஊழலுக்கு எதிராகக் களம் காண்பதைப் பாராட்டினார்.

நீண்ட உரையாடல் இடையில் உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா? எனக் கேட்டார்.

நாங்கள் இருவரும் 'இல்லை' எனப் பதில் கூறினோம்.

அப்போது அவர் நான் காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கே எப்போதாவது சென்று பெரிய சங்கரச்சாரியைச் சந்திப்பது வழக்கம்.

இப்போது நான் அதை விட்டுவிட்டேன்.

காரணம், சென்ற‌ முறை மடத்திற்குச் சென்றிருந்தபோது, இரண்டாவது சங்கராச்சாரி நாகசாமி  ஊழல் விசாரணையை அவருக்கு ஆதரவாக அமையும் படி பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்.

அடுத்த சில மாதங்களில் எம் ஜி ஆர் உடல் நலிவுற்றிருந்தபோது காஞ்சிபுரத்திற்கு ஜானகி அம்மையாருடன் முதல்வர் எம் ஜி ஆர். வந்து இருந்தார்.

பெரிய சங்கரச்சாரியைச் சந்தித்து விட்டு முதல்வர் வெளியே வரும் போது  ஊழல் விசாரணையை நீக்கி ஆணை பிறப்பிக்க வேண்டும் என ஒரு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

அப்போது தலைமைச் செயலகத்தில் பணியாற்றிய  திரு.விஜயராகவன்,இ.ஆ.ப அவர்களுக்கு இந்த மனுவை முதல்வர் அலுவலகம் அனுப்பி வைத்தது.

நேர்மையாளரான திரு.விஜயராகவன் இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்து நாகசாமி மீது நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

ஊழலுக்குச் சங்கரமடம் துணை நின்றதால் நான் அங்குச் செல்வதை முழுமையாக நிறுத்திக் கொண்டேன் என்றார் மறைந்த திரு.நரசிம்மன்.

பல இலட்சம் பண ஊழலில் சிக்கி அவாள் செல்வாக்கினால் இறுதியாகத் தண்டனை

பெறாமல் தப்பித்தவர் தான் தமிழ் விரோத நாகசாமி.

இதைத் தெரிந்து கொள்ளாமல் சிலர் இந்த ஊழலில் சிக்கிய நாகசாமிக்கு 'அரசு மரியாதை' என எழுதியுள்ளனர்.

Monday, January 24, 2022

பெண் : பிரபஞ்சன்

நூல் : பெண்( பெண்ணைப் பற்றி வரலாற்றுப்பூர்வமாக இலக்கிய ஆதாரத்துடன் எழுதப்பட்ட படைப்பு ஆவணம்)

நூலாசிரியர் : பிரபஞ்சன்.

வெளியீடு- டிஸ்கவரி புக் பேலஸ்.பக்கங்கள்-199,₹-180.

மகள்,மனைவி,தாய் என்கிற பெண்ணின் வாழ்க்கை 

'பிறருக்காக வாழ்ந்து,மெழுகாய் உருகி,சுயம் இழந்து நிற்பதே' என்பதை காலங்காலமாக உபதேசிக்கும் தந்திரமான மதநூல்கள்,இலக்கியங்கள்,புராணங்கள் ,வேதங்கள் ,காவியங்கள் மத்தியில்,பெண்கள் தங்கள்  ஆசைகள் ,கனவுகள்,

இலட்சியங்களை எவ்வாறு இன்று அடைந்திருப்பார்கள் !எனும் தேடல்வினா அனைவருக்கும் பொதுவானதே.எனக்கும் கூட.

'வால்கா முதல் கங்கை வரை' தொடங்கி 'கடவுளை மனிதன் படைத்த கதை' போன்ற மானுடவியல் நூல்கள் பெண்களின் வரலாறு குறித்த தேடலின் பாதையில் சிறிது வெளிச்சம் பாய்ச்ச உதவியது.இன்று இந்நூலின் ஒளி  பெண்களினால் படைக்கப்பட்ட  சமூகம் ஏன் அவர்களுக்கானதாக  இல்லை  

எனும் 

அறியாமை இருளையும் சேர்த்து விலக்க உதவியாய் இருந்தது.

'விதித்த வாழ்வு இப்படித்தான்' என தனக்குத்தானே முற்றுப்புள்ளி வைத்துக் கொண்டிருக்கும் பெண்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய புத்தகம் இது.

தெரிந்தவற்றிலிருந்து தெரியாதவற்றை நோக்கி செல்லும்பொழுது கற்றுக்கொள்வது எளிது .அந்த உத்தியின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரைத்தொகுப்பில் உள்ள28 கட்டுரைகளி்லும் நம்முடன் பயணிக்கும் பெண்களில் பெரும்பான்மையோர் பொதுவில் நன்கு பரிச்சயமானவர்கள்.

1.அதிதி-ரிக்வேதம் புகழும் தாய்.

2.தாடகை-நிலவுடைமைச் சமூகத்தினை எதிர்த்ததால் கடவுள் ராமனால் கொலை செய்யப்பட்டவள்.

3.அகல்யா- விச்வாமித்ரனைத் தனது அறிவுத் திறத்தால்,நேர்மையால் தலைகுனியச் செய்தவள்.

4.சீதா-வேடர் குலத்தை முற்றாக அழித்து,விவசாய குலத்தை மூர்க்கமாகத் தனது குடிகளின் மேல் திணித்த ஏகபத்தினி விரத அரசன் ராமனின் மனைவி.

5.அம்பை-"நாய் பெற்ற தெங்கம்பழமாய்"  அவளது வாழ்வை வீணாக்கிய பீஷ்மனை சமரில் பழி தீர்த்துக்கொண்டவள்.

6.ஐயை- காதல்ஊழலால் ஏமாற்றமடைந்தவள்,திருமணம் எனும் சடங்கு ஏற்பட காரணமாயிருந்தவள்.

7.தோழி-பெயர்,ஊர்,உற்றார் அற்ற பதுமை.இலக்கியங்களில் பழகி வந்த நால்வருணத்தாரில் கீழ்சாதியென பழிக்கப்பட்டவள்.

8.கண்ணகி-1- பேகனின் மனைவியாம்.

9.கேசி-ஆம்! அவளேதான் மணாளன் கள்வன் எனத் தெரிந்ததும் ....குண்டலகேசியேதான்.

10.மணக்குல மடந்தை-இயற்பகை நாயனாரால் சிவனடியாருக்குத் தாரை வார்க்கப்பட்ட திருமதி.இயற்பகையனார்.

11.தலைக்கோலி மாதவி-ம்ம்ம் கோவலனின் ?????! 

நிற்க...

மேலும் 17 பெண்களின் வாழ்க்கை வரலாறு பற்றி பிரபஞ்சன் கூறும் கட்டுரைகளை வாசித்துப் புரிந்துகொள்வது என்பது சகல சமூகத்தடைகளையும் உடைத்து நொறுக்கி,வரலாற்றைப் படைத்த இரும்புப் பெண்மணிகளின் வாழ்க்கை வரலாறுகள் என்பதாகத்தான் இருக்கிறது.

"அதிதி" அனுபவித்த சுதந்திரம் ஆபிஸ் சந்தானலட்சுமி பி.ஏ அனுபவிக்கவில்லைதான்.ஆனாலும் "தாடகை" துவங்கி "வனிதா வேணுகோபால்" வரையிலும் பெண் என்ற ஒரே காரணத்தால் அவர்கள் அனுபவித்த கொடுமைகளிலிருந்து "ஆபிஸ் .சந்தானலட்சுமி பி.ஏ" தப்பிக்க காரணமாயிருந்த ஒரே ஆயுதம் கல்வி.ஆம் ஒடுக்கப்பட்ட மக்களின் பேராயுதம் கல்வி.

'கற்பிக்கப்படுவதே கற்பு' என்றளவில் இன்று நெடுந்தொடர்கள் வலிந்து திணிக்கும் ஆர்த்தடாக்ஸ் வகை கற்பின் நாயகிகள் சூழ் உலகில் நுண்மையாய்  திணிக்கப்படும் பெண்ணடிமைத்தனத்தோடு கூட இது போன்ற நூல்களின் கருத்துகளும் மாணவிகளின் கவனத்திற்குக் கொண்டு சேர்க்கப் படவேண்டும்.

முத்துலட்சுமி அம்மையார் கூறிய பெண் உலகை உய்விக்கும் மந்திரமான "

 கல்வி+ முயற்சி+உழைப்பு+ போராட்டம்=விடுதலை வாழ்வு." என்பதைப் பின்பற்றி ஆண் விடுதலையையும் ,மண் விடுதலையையும் சாத்தியப்படுத்தும் எண்ணங்களை  என்னுள் விதைத்த இப்புத்தக வாசிப்பனுபவம் இன்றைய பொழுதைப் பயனுள்ளதாக்கியது.

தமிழ்வாழ்க! தமிழ் நூல்கள் வளர்க!

ப.ரேணுகாதேவி

23/01/2022

Sunday, January 23, 2022

பெரியார் ஆனந்த விகடனுக்கான நேர்காணல்


இது எழுத்தாளர் #சாவியும் , #மணியனும் ஆனந்தவிகடனுக்காக எடுத்த நேர்காணல்

செய்தி , உதவி :

திருமதி Saroja Saroja Nagaikavin Nagaikavin.

                ☆☆☆☆☆

#பெரியார் #பேசுகிறார்

"சாவி"

+திருச்சி #பெரியார் #மாளிகைக்குள் காலடி எடுத்துவைக்கும்போதே, எங்கள் பார்வையில் பட்ட கறுப்புச் சட்டை இளைஞர், ''ஐயா உள்ளேதான் இருக்கார். நீங்க வரப்போறீங்கனு சொல்லியிருக்கேன். உள்ளே போங்க'' என்று புன்சிரிப்போடு வழி காட்டுகிறார்.

+உள்ளே... கட்டிலின் மீது சம்மணமிட்டு அமர்ந்திருந்த #பெரியாரைப் பார்த்ததும், ''வணக்கம் ஐயா!'' என்று கும்பிடுகிறோம்.

''வாங்க... வாங்க, ரொம்ப சந்தோசம்...'' எங்களை மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்றபடியே ''இப்படி உட்காருங்க'' என்கிறார்.

+சாதாரண வெள்ளைப் பனியன். நாலு முழம் வேட்டி. வயிற்றின் நடுப் பாதியில் வேட்டியின் இரு முனைகளையும் பனியனுக்கு மேல் கட்டியிருக்கிறார். 

+அந்த முனைகள் இரண்டும் அவ்வப்போது தளர்ந்துபோகும் நேரங்களில் கைகள் தாமாகவே அவற்றை இறுக்கிவிடுகின்றன. 

+நாய் ஒன்று வீட்டுக்குள்ளேயே குறுக்கும் நெடுக்கும் அலைகிறது, சிற்சில சமயங்களில் பலமாகக் குரைத்து வீட்டையே அதிரவைக்கிறது. 

+ #பெரியாரின் பேச்சு எதனாலும் தடைபடவே இல்லை.

''#ஆனந்தவிகடன் பத்திரிகையிலிருந்து வந்திருக்கோம்.''

''தெரியுமே. #வாசன் #அவங்களை எனக்கு ரொம்பக் காலமாத் தெரியும். நான் ' #குடியரசு’ பத்திரிகை ஆரம்பிச்ச காலத்திலே அடிக்கடி சந்திச்சுக்குவோம். 

+' #கல்கி’ கிருஷ்ணமூர்த்தியும் என்கிட்டேதான் கதர் போர்டிலே #கிளார்க்கா இருந்தார். ரொம்ப #யோக்யமானவரு. கதர் போர்டு ஆட்டம் கொடுத்ததும், நான்தான் #திருவிக-வுக்கு கடுதாசி கொடுத்தனுப்பிச்சேன். 

+' #நவசக்தி’யிலே சேர்ந்து கொஞ்ச நாளைக்கு வேலை செஞ்சாரு. அப்புறம்தான் விகடன்லே சேர்ந்துட்டார்.''

+'' #ராஜாஜியோடு தங்களுக்குப் பழக்கம் ஏற்பட்டது எப்போது?''

+''அதுவா? அந்தக் காலத்துலே ஈரோட்லே பி.வி. #நரசிம்மய்யர்னு எனக்கு ரொம்ப வேண்டிய வக்கீல் ஒருத்தர் இருந்தார். ஈரோட்லே நான் சேர்மனா இருந்தப்போ, குடியானவங்க வழக்கெல்லாம் என்கிட்டே நிறைய வரும். அந்த கேஸ் எல்லாம் அவருக்கு அனுப்புவேன். #யாருக்கு? #நரசிம்மய்யருக்கு. 

+நான் சேர்மனா வர்றது சில பேருக்குப் பிடிக்கலே. பொறாமையினாலே எம் பேரிலே கலெக்டருக்கு பெட்டிஷன் எழுதிப் போட்டாங்க. 

+சேர்மன் பதவின்னா இப்ப மாதிரி எலெக்ஷன்ல #ஜெயிச்சதும் நேராப் போயி #சேர்ல #உட்கார்ந்துட #முடியாது. #கலெக்டர் சிபாரிசு செய்யணும்னு வெச்சிருந்தாங்க. 

+அந்தச் சமயத்துலே #சர் #பி. #ராஜகோபாலச்சாரிங்கிறவர் சப்-கலெக்டரா இருந்தார். அவருக்கு என்னைப் பத்தி நல்லாத் தெரியுமானதாலே, பெட்டிஷனைப் பொய்னு தள்ளிட்டு என்னை #சேர்மனாக்கிட்டார்.''

+''ஆமாம். அந்த மாதிரி உங்களைப் பற்றித் தவறா பெட்டிஷன் எழுதிப் போட்ட ஆசாமி யார்?''

+'' #சீனிவாச #முதலின்னு ஒரு வக்கீல். ஒரு #நான்பிராமின் வக்கீலாயிருக்காரே, முன்னுக்குக் கொண்டாருவோம்னு நான்தான் அவரை முன்னுக்குக் கொண்டுவந்தேன். 

+ஆனால், அவரே என் பேரில் பெட்டிஷன் கொண்டுவந்தார். 

+அப்ப #ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி ) சேலத்துலே வக்கீல். கெட்டிக்கார வக்கீல்னு சொல்வாங்க. 

+அதனாலே என்கிட்டே வர்ற கேஸெல்லாம் அவருக்கு அனுப்பிவைப்பேன். அந்தப் பழக்கத்துலே அவர் வரப் போக இருந்தாரு. எங்க வூட்டுக்கு அடிக்கடி வருவார். அவரும் அப்ப #சேலத்துலே #சேர்மன்.''

+''எந்த வருஷம். அது?''

+'' *தொள்ளாயிரத்துப் பத்தொன்பதுனு (1919) ஞாபகம்...''

+'' #வரதராஜுலு #நாயுடு கேஸ் சம்பந்தமா அவர் மதுரைக்குப் போறப்ப நீங்களும் கூடப் போறது உண்டு இல்லையா?''

+''ஆமா; போயிருக்கேன். 'நீ சேர்மன் பதவியை விட்டுட்டு காங்கிரஸ்ல சேர்ந்துடு. நானும் விட்டுடறேன். ரெண்டு பேரும் சேர்ந்து பொதுப் பணி செய்யலாம்’னார். வரதராஜுலு நாயுடுவும் வற்புறுத்தினார். சரின்னு விட்டுட்டேன். 

+அப்ப காங்கிரஸ் #சத்தியமூர்த்தி 'குரூப்’ கையிலே இருந்தது. அமிர்தசரஸ் காங்கிரஸின்போது காங்கிரஸ் பிளவுபட்டு ரெண்டு குரூப்பாப் பிரிஞ்சுட்டது. 

+சத்தியமூர்த்தி, ரங்கசாமி ஐயங்கார், திலகர் இவங்க ஒரு 'குரூப்’... காந்தி, ராஜகோபாலாச்சாரி, டாக்டர் ராஜன் இவங்களெல்லாம் ஒரு 'குரூப்’.

+நான் காங்கிரஸ்ல சேர்ந்ததே அமிர்தசரஸ் காங்கிரஸுக்கு அப்புறம்தான். அதுவரைக்கும் ராஜகோபாலச்சாரியும் நானும் நண்பர்கள்தான். அப்புறம்தான் சேர்ந்து வேலை செஞ்சோம்.''

+''அதுக்கப்புறம் என்ன ஆச்சு?''

+''எங்க நட்பு வளர்ந்தது. காங்கிரஸும் வளர்ந்தது. எங்களுக்குள்ளே ஒற்றுமையாயிருந்தோம். நான் கோவை ஜில்லா காங்கிரஸ் காரியதரிசி. அப்பவெல்லாம் செகரெட்டரிதான்; பிரசிடென்ட் கிடையாது. 

+தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வந்தது. அப்பவும் நான்தான் செகரெட்டரி.''

+''ஆமாம்; ராஜாஜி உங்களை எதுக்கு காங்கிரஸுக்கு இழுத்தார்?''

+'' #ஜஸ்டிஸ் பார்ட்டிக்கு எதிரா காங்கிரஸ் வளர்றதுக்கு காங்கிரஸ்ல நான்பிராமின்ஸ் இருக்காங்கன்னு காட்டிக்க வேண்டியிருந்தது.''

+''உங்களோடு வேறு யாரும் இல்லையா?''

+''இருந்தாங்க... #திரு.வி.க-வும் #வரதராஜுலு நாயுடுவும் இருந்தாங்க. எங்க மூணு பேரையும்தான் எந்தக் கூட்டத்துலேயும் முதல்லே பேச விடுவாங்க. 

+வரதராஜுலு நாயுடு பேச்சில் #வசவு இருக்கும். 

திரு.வி.க. பேச்சு #தித்திப்பா இருக்கும். #நல்ல #தமிழ் பேசுவார். 

என் பேச்சில் #பாயின்ட் இருக்கும். பாயின்ட்டாப் பேசி #கன்வின்ஸ் பண்ணுவேன். 

+நாங்க மூணு பேரும் பேசினப்பறம்தான், சத்தியமூர்த்தி, ராஜகோபாலாச்சாரி எல்லாம் எழுந்து பேசுவாங்க...''

+''இந்த '#பிராமின் - #நான்பிராமின்’ தகராறு முதல் முதல் எப்ப ஏற்பட்டது?''

+''எப்படி வந்தது வினைன்னா - #வவேசு.#ஐயரால் வந்தது. சேரன்மாதேவியில் 'நேஷனல் காலேஜ்’னு ஒண்ணு ஆரம்பிச்சு, வீரர்களை உற்பத்தி செய்யப்போறதாச் சொன்னாங்க. 

+பரத்வாஜ் ஆசிரமமோ என்னவோ அதுக்குப் பேர். அந்த #குருகுலத்துக்கு எல்லாரும் ஆதரவு கொடுத்தாங்க. 

+சிங்கப்பூர், மலேயாவில் இருந்தெல்லாம் பணம் வசூல் செஞ்சாங்க. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிலேருந்தும் பணம் கேட்டாங்க. 

+நான் அப்ப தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செகரெட்டரி. ராஜாஜி 'நாயக்கரைக் கேளு’ன்னுட்டார். வ.வே.சு.ஐயர் வந்து உட்கார்ந்துக்கிட்டு இருபதாயிரம் வேணும்னார். 

+நான், 'முதல்லே பத்தாயிரம் இருக்கட்டும், அப்புறம் பார்க்கலாம்’னு சொன்னேன். ராஜாஜி சரின்னுட்டார்.''

வ.வே.சு.ஐயர் அன்னிக்கு சாயந்திரமே பணம் வேணும்னு அவசரப்படுத்தினார். ஐயாயிரம்தான் கொடுத்தனுப்பிச்சேன்...''

+''பத்தாயிரம் இருக்கட்டும்னு சொன்னீங்களே...''

+''ஆமாம்; அப்படித்தான் சொன்னேன். ஆனா, எனக்கென்னவோ சரியாப் படலே, அதனாலே ஐயாயிரம்தான் கொடுத்தேன். நான் சந்தேகப்பட்டதுக்குத் தகுந்தாப்பலேயே காரியம் நடந்துட்டுதே!''

+''என்ன ஆச்சு?''

+''முதல் மந்திரியாயிருந்தாரே #ஓபிஆர். #ரெட்டியார்...''

+''ஆமாம்...''

+''அவர் #மகன் அந்தக் குருகுலத்துலே படிச்சுட்டிருந்தான். அடுத்த மாசமே அவன் வந்து கம்ப்ளெய்ன்ட் சொன்னான். 'என்னடா?’னு கேட்டோம். 'குருகுலத்துலே #பார்ப்பனப் பிள்ளைங்களையும் #எங்களையும் #வித்தியாசமா நடத்துறாங்க. அவங்களுக்கு #இலைபோட்டு சாப்பாடு. எங்களுக்கு #பிளேட். 

+அவங்களுக்கு #உப்புமா, எங்களுக்கு 

#பழையசோறு. அவங்க #உள்ளே படுக்கணும். நாங்க #வெளியே படுக்கணும். அவங்களுக்கு ஒரு பிரார்த்தனை. எங்களுக்கு ஒரு பிரார்த்தனை’னான். 

+அவ்வளவுதான். #ஜாதிவேற்றுமையை வளர்க்கிற குருகுலத்துக்கு இனி பணம் கிடையாதுன்னுட்டேன். அத்தோடு இந்த சங்கதியைப் பற்றி ராஜகோபாலாச்சாரிக்குத் தெரியப்படுத்தினேன். 

+அவர் உடனே வ.வே.சு.ஐயரைக் கூப்பிட்டு விசாரிச்சாரு. 'என்ன இது? காலம் என்ன? இதான் தேசியமா? தேசாபிமானமா? கொஞ்சம்கூட நல்லாயில்லே’னு கோபிச்சுக்கிட்டார்.''

+''வ.வே.சு.ஐயர் அதுக்கு என்ன சொன்னார்?''

+''என்ன சொன்னாரு! 'நான் என்ன செய்யட்டும்? குருகுலம் ஆரம்பிச்சிருக்கிற இடம் ஒரு #வைதீகசென்டர். அதனாலே அந்த இடத்துல அப்படி நடக்க வேண்டி வந்துட்டுது’னு சமாதானம் சொன்னார். 

+அப்ப ரெண்டு ஜாயின்ட் செகரெட்டரிங்க. கே.எஸ்.சுப்பிரமணியம்னு கடையத்துக்காரர் ஒருத்தர். அவர் ஒரு செகரெட்டரி. 

+வ.வே.சு.ஐயர், எனக்குத் தெரியாம அவர்கிட்டே போய் இன்னொரு ஐயாயிரத்துக்கு செக்கை வாங்கிட்டுப் போயிட்டார். 

+அதுக்குப் பின்னாலே ஒரு மாசம் கழிச்சுத்தான் இந்த சங்கதி அம்பலத்துக்கு வந்தது.''

+''கடையத்துக்காரர் எப்படி செக் கொடுக்கலாம்?''

+''செகரெட்டரி டு சைன்’ங்கிறது ரெசல்யூஷன். கடையத்துக்காரர் ஒரு செகரெட்டரிங்கிறதால, அவர்கிட்டே #தந்திரமா கையெழுத்து வாங்கிட்டுப் போயிட்டார்.''

+''அந்தக் கடையத்துக்காரர் இப்போ எங்கே இருக்காரு..?''

+''அவரா! அவர் அப்ப எடுத்த ஓட்டம்தான். அப்புறம் எங்கே போனாரோ? ஆசாமி திரும்பி வரலே.

ராஜாஜிக்கு அப்பவே எல்லாம் புரிஞ்சுபோச்சு, கோளாறு வந்துட்டுதுன்னு. 

+அதுக்கப்புறம் நான் சும்மா இருக்க முடியுமா? அந்த விஷயத்தை ஒரு முக்கியப் போராட்டமா எடுத்துக்கிட்டேன். அதுக்கு #சேரன்மாதேவி #குருகுலப் #போராட்டம்னு பேர். 

+டாக்டர் வரதராஜலு நாயுடு, திரு.வி.க. இவங்க ரெண்டு பேரும் எனக்கு ஆதரவு கொடுத்தாங்க. வரதராஜுலு நாயுடுவே இந்தப் போராட்டத்தை நடத்தினார். குருகுலம் ஒழிஞ்சது.''

+''ராஜாஜி உங்க போராட்டத்தில் சேர்ந்தாரா?''

+''சொல்லிக்கிட்டு வர்றேனே கேளுங்க... #வரதராஜுலு நாயுடு காங்கிரஸ் கொள்கைக்கு விரோதமா #வகுப்புஉணர்ச்சியைத் தூண்டுற மாதிரி நடந்துக்கிறார்னு அடுத்த கமிட்டி மீட்டிங்ல ராஜாஜி ஒரு தீர்மானம் கொண்டுவந்தார். 

+எனக்கு அது சரியாப் படலே. வோட்டுக்கு விட்டாங்க. ஈக்வல் ஓட்டாச்சு. நான் தலைவன்கிற முறையில் ஒரு வோட்டைப் போட்டு #ராஜாஜி #தீர்மானத்தைத் #தோற்கடிச்சேன். ராஜாஜி ராஜினாமா பண்ணிட்டார். என்.எஸ்.வரதாச்சாரி, சாமிநாத சாஸ்திரி, டாக்டர் ராஜன், கே.சந்தானம், ஹாலாஸ்யம் இவங்களெல்லாம் ராஜாஜி பக்கம் சேர்ந்துட்டாங்க. 

+நான், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், வரதராஜுலு நாயுடு எல்லாம் ஒரு பக்கம். எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேற்றுமை பச்சையா நான் கண்டிக்கிற அளவுக்கு வளர்ந்துட்டுது...''

(''க்ளிக்!'' - போட்டோகிராபர் படமெடுத்துக் கொள்கிறார்.

இந்தச் சமயம் கறுப்புச் சட்டை அணிந்த இளைஞர் பெரியசாமி, காபி கொண்டுவந்து எங்கள் முன் வைக்கிறார்.

நானும் நண்பர் மணியனும் அந்தக் காபியை எடுத்து அருந்துகிறோம்)

+''சாதி வேற்றுமையெல்லாம் இப்போ ரொம்பக் குறைஞ்சுபோச்சு. முப்பது வருஷங்களுக்கு முன்னாலே பிராமணர்கள் யாராவது உங்க வீட்டில் இந்த மாதிரி வந்து சாப்பிட்டிருக்காங்களா?'' - இவ்வாறு நான் (சாவி) கேட்டதும் பெரியார் ஒரு கணம் என்னை உற்றுப் பார்க்கிறார்.

+''வெங்காயம்! அதுக்கு இத்தனை வருஷமா நான் செய்துக்கிட்டு வர்ற பிரசாரம்தான் காரணம். இன்னும் ரொம்ப மாறணும். #புத்தனுக்கு அப்புறம் பகுத்தறிவுப் பிரசாரம் செய்றவன் யாரு? நான் ஒருத்தன்தானே!'' -

(உணர்ச்சியுடன் பேசிக்கொண்டிருக்கும் பெரியாரின் கைகள், தளர்ந்துவிட்ட வேட்டியின் முடிகளைத் தாமாகவே இறுக்கிக் கட்டுகின்றன)

+''அந்தக் காலத்துல எங்க வீட்டுக்கு ஒரு #ஐயர் வருவார். எங்க அம்மா ரொம்ப ஆசாரம். ஒருநாள் அந்த ஐயர் தாகத்துக்குத் தண்ணி வேணும்னு கேட்டார். குடுத்தோம். அந்த தண்ணியைக் குடிக்க வேண்டியதுதானே? 

+கொஞ்சம் மோர் இருக்குமானு கேட்டார். மோர் கொண்டுவந்து கொடுத்தோம். அந்தத் தண்ணியிலே கொஞ்சம் மோரை ஊத்திக் குடிச்சாரு. 

+அந்த #மோர், அந்தத் #தண்ணியைச் சுத்தப்படுத்திட்டுதாம். அதெப்படி சுத்தப்படுத்தும்? தண்ணி எங்க வூட்டுது. மோரும் எங்க வூட்டுது. எங்க வூட்டு மோர், எங்க வூட்டுத் தண்ணியைச் சுத்தப்படுத்திடுமா?'' - சிரிக்கிறார் பெரியார்.

( இதற்குப் பின் பதிவு இல்லை).

ஒளிவுமறைவற்ற நடுநிலயான இந்தப்பதிவில் நுணுக்கமான செய்தி என்னவென்றால்.

1. பிராமணர்கள் பலர் பெரியாரின் நண்பர்கள்.

2. அவர் வெறுத்தது "பிராமணீயத்தை" பிராமணர்களை அல்ல.

3.பிராமணரல்லாதவர்கள் (சீனிவாச முதலி, கடையம் கே.எஸ் சுப்பிரமணியம் ) இவருக்கு எதிராகச் செயல்பட்டிருக்கின்றனர்.


+பெரியாரின் நேர்மையை வாழ்த்தி வணங்குவோம்.

Saturday, January 22, 2022

பெரியார் : ஆகஸ்ட் 15

 பெரியார்: ஆகஸ்ட்_15

எஸ் வி ராஜதுரை

ஆசிரியர் பற்றி...

எஸ்.வி.ராஜதுரை

தமிழ் எழுத்துலகிற்கு

நன்கு அறிமுகமான எழுத்தாளர்,

மொழிபெயர்ப்பாளர். மார்க்ஸியம்,

அம்பேத்கரியம், பெரியாரியம்

தொடர்பான நூல்களையும்

கட்டுரைகளையும் தமிழிலும்

ஆங்கிலத்திலும் தனியாகவும்

வ.கீதாவுடன் இணைந்தும்

எழுதியுள்ளார். 


'கம்யூனிஸ்ட் கட்சி

அறிக்கை' உட்படப் பல

மார்க்ஸிய நூல்களைத் தமிழாக்கம்

செய்துள்ளார். 


கலை, இலக்கியம்

தொடர்பான ஏராளமான

கட்டுரைகளை எழுதியுள்ளதுடன்

அயல் நாட்டுக் கவிதைகள்,

சிறுகதைகள் ஆகியவற்றின்

தமிழாக்கத்தையும் வழங்கியுள்ளார்.


மனித உரிமை இயக்கத்தில்

கால் நூற்றாண்டுக் காலம்

செலவிட்டிருக்கும் எஸ்.வி.ஆர்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்

கழகத்தில் பெரியார் உயராய்வு

மையத் தலைவராகவும்

பணியாற்றியுள்ளார்.

எஸ்.வி.ராஜதுரையும் வ.கீதாவும் எழுதிய 'பெரியார் சுயமரியாதை சமதர்மம்' நூலின் தொடர்ச்சியாக,


1939ஆம் ஆண்டிலிருந்து 1953ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் உலகளவிலும் இந்தியாவிலும் ஏற்பட்டுக் கொண்டிருந்த மாபெரும் வரலாற்றுத் திருப்புமுனைகளை பெரியாரும் அவரது இயக்கத்தினரும்  எதிர்கொண்ட முறை: 


இரண்டாம் உலகப் போரின் போது காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், அம்பேத்கர், பெரியார் ஆகியோர் கடைப்பிடித்த நிலைப்பாடுகள்; 

பெரியார் -அம்பேத்கர் உறவுகள்; பெரியாருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இருந்த உறவுகளும் முரண்பாடுகளும்;


காங்கிரஸ் பிரதிநிதித்துவம் செய்த பார்ப்பன-பனியா நலன்கள்;

பிரிட்டிஷாரிடமிருந்து அதிகார மாற்றத்தைப் பெறுவதற்காக வட இந்தியப் பெரு முதலாளிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள்;

'ஆகஸ்ட் 15' பற்றி பெரியாருக்கும் அண்ணாவுக்கும் ஏற்பட்ட விரிசல்;

காந்தி கொலை தொடர்பாக பெரியார் வெளியிட்ட கருத்துகள்,

'திராவிட நாடு' பிரிவினைக் கோரிக்கையின் சாரம்; 

இன்னும் பல அரிய செய்திகளுக்கு

அறிவார்ந்த விளக்கம் தரும் இந்த நூல், பெரியார் இயக்கத்தின் வரலாற்றை அறிந்து கொள்வதற்கான ஒரு பங்களிப்பு.

.........

'பெரியார்: ஆகஸ்ட் 15' 

நூலின் புதிய பதிப்பு என். சி.பி.எச்.

வெளியீடாக வருவது எனக்கு மகிழ்ச்சி தருகின்றது. 

1998, 2007ஆம் ஆண்டுகளில் கோவை விடியல் பதிப்பகத்தின் நிறுவனர் காலஞ்சென்ற அருமைத் தோழர் விடியல்' சிவா அவர்கள் மிகுந்த உற்சாகத்தோடு வ. கீதாவும் நானும் எழுதிய ' பெரியார்: சுயமரியாதை-சமதர்மம்', நான் தனியாக எழுதிய இந்தப் புத்தகம், என்னால் பதிப்பாக்கம் செய்யப்பட்ட  'ஆகஸ்ட் 15: துக்கநாள், இன்பநாள்' ஆகியவற்றை வெளியிட்டார்.

பெரியாரையும் அவரது இயக்கத்தையும் பற்றி அதுவரை வெளிவந்த தமிழ் நூல்களிலிருந்து வேறுபட்ட வகையில், அந்த இயக்கம் தோன்றி வளர்ந்த வரலாற்று அரசியல், பண்பாட்டுச் சூழலை விளக்கும் முதல் முயற்சியாக,

பெரியாரையும் அவரது இயக்கத்தையும் பற்றிப் பரவலாக விதைக்கப்பட்டிருந்த தப்பெண்ணங்களைப் போக்கும் செயற்பாடுகளின் பகுதியாக இந்த நூல்கள் அமைந்தன.

இந்துத்துவ பாசிச சக்திகள் இந்திய அரசியலில் மேலாதிக்கம் பெற்றுள்ள, அவற்றால் தம் விருப்பப்படி ஆட்டி வைக்கப்படக் கூடிய ஆட்சியாளர்கள் தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள

(ஜெயலலிதா கூட பெரியார் படத்தைத் தனது மேடைகளில் பயன் படுத்தியதுண்டு; ஆனால் இன்றோ அவரது இடத்தில் அமர்ந்துள்ளவர்கள் பெரியார் படத்தைத் தங்கள் மேடைகளில் வைப்பதற்குக் கூட அஞ்சுகிறார்கள்) 

காலகட்டத்தில் தமிழகத்தில் மட்டுமின்றி, இந்தியாவின் பிற பகுதிகளிலும் பெரியார் இடைவிடாத விவாதங்களுக்குள்ளாகி வருகின்றார். பெரியாருக்கு எந்த அளவுக்கு எதிர்ப்பு வலுக்கிறதோ அதைவிட அதிகமாகவே அவருக்கான ஆதரவும் பெருகிவருகிறது. 

அவர் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளுக்கும் விமர்சனங்களுக்கும் பதில் சொல்லும் முகமாக மட்டுமின்றி,

பெரியாரைப் புதிய, ஆக்கபூர்வமான கோணங்களிலிருந்து பார்க்கும்

முயற்சிகள் திராவிடர் இயக்கத்தைச் சேர்ந்தவர்களால் மட்டுமின்றி அந்த இயக்கத்தைச் சாராதவர்களாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

கல்விப்புலம் சார்ந்தவர்கள், இளம் ஆராய்ச்சியாளர்கள்எனப் பலதரப்பட்டவர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தலித்துகளும் சூத்திரர்களும் அண்மைக் காலம் வரை நுழைய முடியாதிருந்த கல்விப்புல வெளிகளிலும்கூட - குறிப்பாக, ஐஐடி நிறுவனங்களில் பெரியாரைப் பற்றிப் பேசுவது தவிர்க்கப்பட முடியாததாகிவிட்ட நிலைமைகள் உருவாகியுள்ளன.

இடதுசாரி முயற்சிகள் அமைப்புகளும் இந்தப் பணியில் முக்கியப் பாத்திரம் வகிக்கின்றன. அதே வேளையில் பெரியாரை மட்டுமின்றி,அம்பேத்கரையும் இழிவுபடுத்துவதற்கான முயற்சிகள் சங்பரிவாரத்தினராலும், தாராளவாத முகமூடியை அணிந்து கொள்ளும் பார்ப்பன அறிவாளிகளாலும் மட்டுமின்றி

(இவர்களை ஆங்கில விவாதத்தளத்திலும் எதிர்கொண்டு ஆணித்தரமான பதில்களைத் தந்திருக்கிறார் 'தலித் முரசு' புனித பாண்டியன்)

மார்க்ஸிய வேடமணிந்தவர்களாலும் மேற்கொள்ளப்படுகின்றன.

'தமிழ் தேசியர்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

இந்த நூலை, நான் மீண்டும் எழுதுவேனாகில், பெரியாரைப் பற்றிய எனது அணுகுமுறை, புரிதல் பலவகைகளில் மாற்றம் பெற்றிருக்கும். புதிய தகவல்களுடனும் புதிய புரிதலுடனும் இந்த நூல் வளம் பெற்றிருக்கும். 

ஆனால், கெடுவாய்ப்பாக எனது மூப்பும்பிணியும் அந்தப் பணியைச் செய்யும் ஆற்றலையும் நேரத்தையும் எனக்கு வழங்கவில்லை.

பெரியார் இயக்கத்தின் வரலாற்றில் 1938 முதல் 1953 வரையிலான காலகட்ட நிகழ்வுகளைப் பேசும் இந்த நூலில், 

அந்தக் காலகட்டத்தில் நடந்த 

சில முக்கியமான நிகழ்வுகள் குறிப்பிடப்படாமலோ, விரிவாக விளக்கப்படாமலோ போயின.

அவற்றிலொன்று, பெரியாருக்கும் அப்போது திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளராக இருந்த சி. என். அண்ணாதுரைக்கும் (அண்ணா) இடையே ஏற்பட்ட விரிசல். அதற்கு அடிப்படையான காரணமாக இருந்தது 'ஆகஸ்ட் 15' என்னும் 'இந்திய சுதந்திரநாள்'.

அது இருவருக்குமிடையே இருந்த கோட்பாட்டு ரீதியான, அரசியல்

ரீதியான அடிப்படையான வேறுபாட்டை வெளிப்படுத்தியது.

ஆனால், அந்த வேறுபாடு மறைந்தொழிந்து கொண்டிருந்ததாக நம்பப்பட்டு வந்த காலத்தில்,

பெரியார் மணியம்மையைத் திருமணம் செய்து கொண்டதையொட்டி அண்ணாவும் அவரது ஆதரவாளர்களும் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து தி.மு.க.வை உருவாக்கினர். 

தம் வாழ்நாள் முழுக்க 'திறந்த புத்தக' மாகவே இருந்துவந்த பெரியார், அத்திருமணத்தைப் பற்றிக் கூறிய விளக்கங்களும், அத்திருமணத்தை ஆதரித்து பரலி.சு.நெல்லையப்பர் போன்ற இந்திய தேசியர்களும் பஞ்சாபிலிருந்த சாதி ஒழிப்பு அமைப்பான ஜாட்பட் தோடக் மண்டலின் தலைவர் போன்றவர்களும் கூறிய கருத்துகளும் 'விடுதலை' இதழிலில் வெளியிடப்பட்டிருக்கின்றன.

ஆகஸ்ட் 15' தொடர்பாக அப்போது பெரியாருடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தவரும் நீதிக்கட்சியின் முன்னணி

அறிவாளிகளிலொருவருமாக இருந்தவரும், வறுமையில் வாடி இறந்து போனவரும், 'நகரதூதன்' ஏட்டை நடத்தி வந்தவருமான

ரெ.திருமலைசாமி (கேசரி') எழுதிய ஒரு விரிவான கட்டுரைதான்

இந்த நூலின் இணைப்பு xiii.

எனினும், பெரியாருக்கும் அண்ணாவுக்குமிடையே இருந்த

விரிசல் படிப்படியாகக் குறைந்து கொண்டு வந்தது. 1967ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று முதல் திமுக

அமைச்சரவையை உருவாக்கிய அண்ணா, அதனைப் பெரியாருக்குக் காணிக்கை யாக்கினார்.

தமிழகத்தில் முதன்முதலாக ஒரு 'சூத்திரர் கட்சி' ஆட்சிக்கு வந்திருப்பதாகப் பாராட்டிய பெரியாரும் தம் பங்குக்கு அந்த ஆட்சிக்கு ஆதரவளித்து வந்தார்.

எனினும், தமது 'திராவிடர் கழகம்' அரசியலில் (அதாவது தேர்தல் அரசியல், அரசாங்கப் பொறுப்பு வகித்தல்) ஈடுபடக்கூடாது என்னும் கொள்கையை அவர் ஒருபோதும் கைவிடவில்லை. 

அதேபோல 'ஆகஸ்ட் 15' பற்றிய தமது கருத்தை அவர் கடைசி வரை மாற்றிக் கொள்ளவேயில்லை.

இரண்டாவது, காந்தியார் கொலை செய்யப்பட்ட போது பெரியார் ஆற்றிய எதிர்வினை. இது தொடர்பாக 'தடம்' இதழில்

நான் எழுதிய கட்டுரை, 'மின்னம்பலம்' இணையதள ஏட்டில் ராஜன் குறை எழுதிய கட்டுரை ஆகியவைதான் இந்த நூலின்

இணைப்பு ix.

சமகாலத்தில் வாழ்ந்த அண்ணல் அம்பேத்கருக்கும்

பெரியாருக்கும் சில கருத்து வேறுபாடுகள் இருந்தன;

அம்பேத்கரிடம் தாம் எதிர்பார்த்தவை கிடைக்கவில்லை என்ற மனத்தாங்கலும் பெரியாருக்கு இருந்தது. 

இவற்றை இந்த நூல் எடுத்துரைக்கிறது. 

ஆனால் சாதி ஒழிப்பு என்னும் அடிப்படை இலட்சியத்தில் அவர்கள் இருவரும் முழுமையாக ஒன்றுபட்டிருந்தனர். இருவருக்குமிடையே இருந்த கருத்து, அரசியல் வேறுபாடுகளை ஊதிப்பெருக்குவது இந்த இலட்சியங்களுக்கு ஊறுவிளைப்பதாகவே அமையும்.

ஏற்கெனவே என் சிபிஎச் நிறுவனம் பெரியார் சுயமியாதை -  சமதர்மம் நூலின் புதிய திருத்தப்பட்ட பதிப்புடன் 

பெரியாரின் பேச்சுகளையும் எழுத்துகளை யும் தொகுத்து பசு.கவுதமன் உருவாக்கியுள்ள நூல்களையும் வெளியிட்டுள்ளதால், 

பெரியாரைப் பற்றிய முழுச் சித்திரத்தை வழங்கும் ஆய்வுப் பயணத்தில் இந்த நூலும் கணிசமான பங்களிப்பைச் செய்யும் என்பது என் தாழ்மையான கருத்து.

எமது என்.சி.பி.எச். புதிய பதிப்புக்கான முன்னுரையில் நூலாசிரியர் எஸ்.வி.ஆர்

எனது நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் வெளியீடு

பக்கங்கள் 778

விலை ரூபாய் 750

(கெட்டி அட்டை பதிப்பு)

புத்தக தேவைக்கான தொடர்புக்கு

இரா.மு.தனசேகரன்

மேலாளர்

நாகர்கோவில் கிளை

8124949491

Thursday, January 20, 2022

இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?

 இது என்னுரை 107 - பொ.நாகராஜன்

**********************

இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர் ? ( தொகுதி 1 ) - ப. திருமாவேலன் - நற்றிணை பதிப்பகம் - பக்கங்கள் 816 - விலை இரு தொகுதிகளும் சேர்த்து ரூ 1800/

●  தமிழக வரலாற்றில் இருவர் மட்டும் தான் - சமுதாய சுய சிந்தனையாளர்களாக - தனித்து சிந்தித்து அவைகளை தனித்துவமாய் தெரிவித்தவர்கள் ! அவர்கள் ஒரிஜினல்கள் ! காப்பியடிக்க முடியாத சூரியன்கள் ! ஒருவர் திருவள்ளுவர் ! மற்றொருவர் பெரியார் ! 

இந்த இருவரையும், ஆரிய, பார்ப்பன, ஆதிக்க சக்திகள் வெல்வதற்கு இரண்டு வகையான சூழ்ச்சிகளை தொடர்ந்து செய்து வருகின்றார்கள் !

●  திருவள்ளுவரை - தங்களவராக்க அவருக்கு பூணூல் அணிவித்தும், காவியுடை அணிவித்தும், வேதங்களில் உள்ளதை எடுத்தெழுதினார் எனப் பொய்யுரைத்து, அந்த தமிழரை - ஆரியராக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றார்கள் !

●  பெரியாரை - வேற்றுவராக்க அவரை அவமானப்படுத்தியும், சிலைகளில் காவி சாயம் பூசியும், அவதூறாக பேசியும், பொய்யுரைத்து, அந்த தமிழரை - அந்நியராக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றார்கள் !

●  பெரியாரை அவமதிக்கும் வீணர்களுக்கு, வெறும் பதில் சொல்லி விலகிப் போகக் கூடாது, அவர்களுக்கு பதிலடியும் படிப்பினையும் தரவேண்டும் என்ற நோக்கில், ஏறத்தாழ 20 ஆண்டுகள் தொடர் உழைப்பாலும், அயராத முயற்சியாலும், நூற்றுக்கணக்கான நூல்களையும், ஆயிரக்கணக்கான குடிஅரசு, விடுதலை இதழ்களிலிருந்து தகவல்களை அள்ளியெடுத்து -  இந்த நூலைப் படைத்துள்ளார் !

●  உச்ச நீதிமன்றத்தில் வழக்காடுவதற்கு ஏதுவாக சமர்ப்பிக்கப்படும் - பதில் மனுவாகவும், 

உச்சிக் குடும்பி வாரிசுகள் போற்றும் மநுவுக்கு - பதிலாகவும் இந்த நூலைப் படைத்துள்ளார் - ப. திருமாவேலன். 

●  பெரியாரின் போர்வாளாக, பெரியாரின் தொண்டராக, பெரியாரின் வாரிசாக தனது கடமையை மிகச் சிறப்பாக செய்துள்ளார் திருமாவேலன். சுயமரியாதையுள்ள ஒவ்வொரு தமிழனும் இதைப் படித்தறியும் போது, பெரியாரின் உயரம் இன்னமும் அதிகமாகி விட்டதை உணருவார்கள் !

வரலாற்று வீரரை யாரென்று காட்டும் வரலாற்றுப் படைப்பு !

●  " இந்தியை எதிர்த்த பலரோ -  சமஸ்கிருதத்தை எதிர்க்கவில்லை ! சமூகநீதியை ஆதரித்த பலரோ - ஆரிய பார்ப்பனர்களின் அடாவடியை கண்டிக்கவில்லை ! தமிழக எல்லைக்காக போராடிய பலரோ - வடவர், பனியா, மார்வாடி ஆதிக்கத்தை எதிர்க்கவில்லை !

இம் மூன்றையும் ஒன்றாய் செய்த ஒரே தலைவர் - தந்தை பெரியார்! " .. என்று நூலின் துவத்திலேயே பெரியார் எப்படிப்பட்ட ' தமிழர் ' என அடையாளம் காட்டுகிறார் திருமாவேலன்.

●  ' பெரியார் போற்றிய பெரும் புலவர்கள் ' என்ற தலைப்பின் கீழ் 90 புலவர்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. இந்த தலைப்பு மட்டுமே தனியாக ஒரு நூலாக அமைவதற்கு வேண்டிய அளவு அரிய செய்திகளை கொண்டதாக உள்ளது. பெரியார் பற்றி பெரும்புலவர்கள் சிலரின் பார்வைகள் - 

1) பெரியார் தமிழ் நாட்டில், எல்லா தலைவர்களையும் விட பெரிய தியாகி -  வ.உ.சி.

2) தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காக தம் உடல், பொருள், ஆவியை எந்த கைம்மாறு கருதாது தந்தவர் இராமசாமி பெரியார் -  மறைமலையடிகள்.

3) காந்தியை மிஞ்சிய அகிம்சாவாதியாகவும், சாக்ரடீஸையும் மிஞ்சிய சமுதாய சீர்த்திருத்தகாரராகவும் பெரியார் விளங்குகிறார் -  திரு.வி.க.

4) தமிழுக்கு ஆபத்து வரும் போதெல்லாம், முன்னோடியாக நின்று அவ்வின்னலை, நீக்குதல் பெரியாரது இயல்பு -  மா. இராசமாணிக்கனார்.

5) தொண்டு செய்து பழுத்த பழம் | தூய தாடி மார்பில் விழும் | மண்டை சுரப்பை உலகு தொழும் | மனக் குகையில் சிறுத்தை எழும் | அவர் தாம் பெரியார் ! -  பாரதிதாசன்.

6) வள்ளுவர் வாக்கைப் பின்பற்றி தமிழ்நாட்டில் நடந்து காட்டும் தலைவர் பெரியார் ஈ.வெ.ரா ஒருவரே -  கி. ஆ. பெ. விசுவநாதம்.

7) லெனின் சொல்கிறார் - மக்களுடைய இதயத்துடிப்பை நேரிடையாக தேடிப்பிடித்து, எவன் தெரிந்து கொள்கிறானோ, அவன் உண்மையான கம்யூனிஸ்ட். அதுபோலவே பெரியாரும் மக்களின் போக்கை படித்து, அவர்களை முன்னுக்கு கொண்டு வர பாடுபடுபவர் -  ப. ஜீவானந்தம்.

8) பழமையான மூடப்பழக்க வழக்கத்தில் பாழ்பட்ட நெஞ்சர்க்குப் புரியார் | படித்துணர்ந்து, பகுத்தறிவு கட்சி தன்னைப் பரவச் செய்து வரும் நெறியார் | இழிவை நீக்கும் ஈ. வெ. ராமசாமி என்ற எங்கள் தந்தை உண்மைப் பெரியார் ! -  உடுமலை நாராயண கவி.

9) வான்றவழும் வெண்மேகத் தாடி ஆடும் | வளமான சிந்தனைக்கோர் ஆட்டமில்லை | ஆன்றவிந்த பெரியார்க்குப் பெரியார் எங்கள் அய்யாவுக்கிணை அவரே மற்றோர் இல்லை ! -  கண்ணதாசன்.

10) தமிழின் தொன்மை என்பதும், வளம் என்பதும் தமிழ் மக்களின் விடுதலைக்கும் முன்னேற்றத்திற்கும் எந்த வகையில் உதவும் என்று கேட்டார் ! இதுதான் இவரை மறைமலையடிகள் போன்ற வலதுசாரி தேசியவாதிகளில் இருந்து துல்லியமாக அடையாளம் காட்டுகிறது ! -  கவிஞர் இன்குலாப்.

●  இத்தனை பெரும் புலவர்களால் பாராட்டுப் பெற்ற பெரியார் தமிழர் இல்லை என்றால் - வேறு எவர் தான் தமிழராம் ?

●  பெரியாரை தமிழுக்கு எதிரியாகவும், தமிழர்க்கும் எதிரியாகவும் கட்டமைத்து அவதூறு செய்யும் சாலையோர வேலையற்றதுகளுக்கும், பெரியாரை அவமதிக்கும் கோணல் புத்திகாரர்களுக்காக - 

இதோ ஒரு பட்டியல் :

கண்ணை திறந்து படிக்கட்டும் .  அறிவுக் கண்ணும் திறக்கட்டும் !

1) 1926 - இந்தி வருவதே தமிழர்க்கு துரோகம் செய்யத்தான் என எச்சரித்தார்.

2) 1926 - வடமொழிக் கலப்பில்லாத தனிச் செந்தமிழ் இனிக்கும் என்றார்.

3) 1927 - சமஸ்கிருதம் நீக்கிய தமிழர் திருமண முறையை வலியுறுத்தினார்.

4) 1929 - தமிழுக்கென ஒரு பல்கலைக்கழகம் வேண்டுமென உணர்த்தினார்.

5) 1931 - தமிழ் மருத்துவத்தை வளர்க்க வேண்டும் என வேண்டினார்.

6) 1938 - இந்திப் போர் என்பது தமிழுக்காக, தமிழர் தன்மானத்திற்காக என அறைகூவல் விட்டார்.

7) 1938 - தமிழ்நாடு தமிழருக்கே என முழங்கினார்.

8) 1941 - தமிழ் நாட்டு மேடைகளில், தமிழிசை பாடப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.

9) 1941 - கல்வி திட்டத்தில் தாய் மொழியும், பொது மொழியாக ஆங்கிலம் போதிக்கப்பட்டால் போதும் என்றார்.

10) 1945 - தமிழ் மொழி உணர்ச்சி தான், தமிழ் மக்களை ஒன்று சேர்க்கும் என கணித்தார்.

11) 1947 - தமிழர் விழாவாக பொங்கலை கொண்டாட வேண்டும் என முதலில் அறிக்கை விட்டார்.

12) 1952 - தாய் மொழியில் அனைத்தும் மொழிபெயர்க்க வேண்டுமென தலையங்கம் தீட்டினார்.

13) 1952 - நீதிமன்றங்கள் தமிழில் நடத்தப்பட வேண்டும் என்றார்.

14) 1954 - ' ஶ்ரீ ' என்று எழுதாதே, ' திரு ' என்று எழுது என அறிவுறுத்தினார்.

15) 1955 - மக்கள் மொழியை விட்டு, வேறு மொழி மூலம் ஆட்சியை நடத்துகிற ஒரே நாடு - உலகத்திலேயே தமிழ்நாடு தான் என வருந்தினார்.

16) 1955 - தமிழ் நாட்டுக் கடவுளுக்கு தமிழ் புரியாதா ? என கேள்வி கேட்டார்.

17) 1955 - தமிழில் கல்லூரிப் படிப்பை தொடங்க வேண்டும் என ஆரம்பித்தார்.

18) 1956 - தமிழ் நாட்டின் ஆட்சி மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

19) 1956 - விஞ்ஞான நூல்களையெல்லாம் தமிழில் ஆக்கி மலை மலையாக குவிக்க வேண்டும் என ஆவல் கொண்டார்.

20) 1960 - தாய் திருநாட்டிற்கு தமிழ் நாடு என்ற பெயரில்லையே என கோபப்பட்டார்.

21) 1964 - தமிழ் முன்னேற்றமடைந்து, உலக வரிசையில் வரவேண்டும் என்றால், தமிழையும் மதத்தையும் பிரிக்க வேண்டும் என ஆலோசனை சொன்னார்.

22) 1965 - கல்லூரிகளில் தமிழ் பயிற்று மொழியாக வேண்டும் என கோரினார்.

23) 1966 - ஜனநாயகம் என்பது வடமொழி. அதற்கு நேரான தமிழ் மொழிதான் ' குடிஅரசு ' . அப்படித்தான் எனது இதழுக்கு பெயர் சூட்டினேன் என விளக்கினார்.

24) 1967 - நம்மை தமிழும் இந்தியும் படிக்க செய்து விட்டு, பார்ப்பானும் பணக்காரனும் ஆங்கிலம் படித்து, பதவிக்கு போய் விடுவார்கள் என எச்சரித்தார்.

25) 1972 - ஆரியம் சமயத்துறையில் ஆதிக்கம் பெற்றதாலும், ஆங்கிலம் அரசியல் முதலிய துறைகளில் ஆதிக்கம் பெற்றதாலும், தமிழர்களுக்கு இன உணர்ச்சி பலப்படவில்லை என வகுப்பெடுத்தார்.


●  " தமிழன் பிரார்த்தனை செய்யும் கோயில்கள் ஒன்றிலாவது, தமிழனுக்கு மரியாதை கிடையாது " என தமிழர்கள் மீது அன்பும், பரிவும் கொண்டு பேசியவர் - பெரியார்.

●  " சரித்திரம் எழுதுபவர்கள் அத்தனை பேரும் பார்ப்பனர்கள் ஆனதால், தமிழர்களின் சரித்திரத்தை மறைத்து விட்டார்கள் ! " என தமிழர்களின் வரலாற்று மீதும் அக்கறை கொண்டு பேசியவர் - பெரியார்.

●  இப்போது சொல்லுங்கள் !

இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர் ?..நூலை படித்த பின்பு, நீங்களும் அந்த கேள்வியைத்தான் கேட்பீர்கள் !

இதைப் படைத்த ப. திருமாவேலனுக்கு பெரியாரியவாதிகள் மட்டுமல்ல, தமிழினமே வாழ்த்த கடமைப்பட்டுள்ளது !

தோழருக்கு வாழ்த்துகள் ! !

பொ. நாகராஜன். சென்னை.

20.01.2022.

********************************************

Wednesday, January 19, 2022

ஜீவா வாழ்க்கை வரலாறு நூல் வெளியீட்டு விழாவில் பெரியார் பேச்சு

சென்னை தன்டையார்பேட்டையில்   காலஞ்சென்ற கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் ப.ஜீவானந்தம் அவர்களின் சிலைத்திறப்பு விழாவை ஒட்டி மறுநாள் 31-1-.66 அன்று " ஜீவா வாழ்க்கை வரலாறு ’’ நூல் வெளியீட்டு விழாவில், தோழர் பாலதண்டாயுதம் அவர்களால் எழுதப்பட்ட காலஞ்சென்ற கம்யூனிஸ்ட் தலைவர் தோழர் ப.ஜீவானந்தம் அவர்களின் வரலாற்றை வெளியிட்டு ஜீவாவின் தன்னலமற்ற தொண்டினைப் பாராட்டி தந்தை பெரியார் பேசுகையில் ,

பேரன்புமிக்க தலைவர் அவர்களே! பெருமைமிக்க தாய்மார் களே! தோழர்களே! உயர்திரு. பி.சி. ஜோஷி அவர்களே! வணக்கம்.

இன்றைய தினம் மறைந்த நண்பர் ஜீவா அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை வெளியிடும் பணியை எனக்கு அளித்துப் பெருமைப் படுத்தியமைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நேற்றைய தினம் நடைபெற்ற ஜீவா சிலைத்திறப்பு விழாவில் கலந்து கொள்ளவேண்டும் என்று என்னை நண்பர் பாலதண்டாயுதம் அவர்கள் அழைத்து இருந்தார். நான் அதில் கலந்து கொள்பவர்களைக் கேட்டதும், என்னமோ அய்யா மன்னிக்கனும், எனக்கு வர விருப்ப மில்லை என்றுகூறினேன்.

நண்பர் பாலதண்டாயுதம்  விட்டபாடில்லை!  அப்படியானால் மறுநாள் இப்படி ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு  செய்கிறோம். அதில் தாங்கள் நான் எழுதிய " ஜீவா வாழ்க்கை வரலாறு” நூலை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நானும் ஒத்துக் கொண்டேன். நேற்றைக்கு சேலத்தில் கூட்டத்தை முடித்துக்கொண்டு இரவே புறப்பட்டு காலையில்தான் இங்கு வந்தேன். 

நண்பர் ஜீவா வாழ்க்கை வரலாறு புத்தகத்தை எழுதியவர் நண்பர் பாலதண்டாயுதம் ஆவார். அதனை ஏதோ ஒரு அளவுக்குப் படித்துப் பார்த்தேன்;  நல்ல வண்ணமே எழுதியுள்ளார். என்றாலும் ஜீவாவைப் பற்றிய வரலாறு எழுத வேண்டிய அளவுக்கு இல்லாமல் ஏதோ கால்பாகம் தான் இது என்று கூறுவேன்.

தோழர்களே! ஜீவாவை எனக்கு நன்றாகத் தெரியும். நான் காங்கிரஸ் இருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்து பகுத்தறிவுப் பிரசாரம் செய்து வந்த காலத்தில் இராமநாதபுரம் மாவட்டம் திருப்பத்தூர் தெம்மமப்பட்டு என்ற ஊரில் ஒரு கூட்டத்திற்குச் சென்று இருந்தேன்.

அதற்குப் பக்கத்து ஊருக்கருகில் ஒரு தனிப்பட்ட பள்ளிக்கூடத் தில் ஆசிரியராக ஜீவா இருந்தார்; அவரும் அந்த கூட்டத்திற்கு வந்தி ருந்தார். அவரும் கூட்டத்தில் நமது கொள்கையினை ஆதரித்து.ப் பேசினார். எனக்கு மிகவும் அவரது பேச்சு பிடித்து இருந்தது. பிறகு நான்  அவரை என்ன பண்ணிகொண்டு இருக்கின்றீர்கள்  என்று  கேட்டேன்.  பள்ளிக்கூடத்தில்  பாடம் சொல்லிக் கொடுத்துக்கொண்டு  வருகின்றேன் என்றார்.

நான் கூறினேன். பெரியவர்களுக்கே சொல்லிக் கொடுக்க வேண்டிய விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன. சிறு பையன்களுக்கு அவசரம் இல்லை. எனவே வேலையைவிட்டுப் போட்டுவிட்டு வாருங்கள் என்றேன்; அவரும் அப்படியே  வேலையைத்  துறுந்து சுயமரியத்தைப் பிராசாரத்தில் ஈடுபட்டார்.

எனக்கு இவரை மிகவும் பிடித்தது;  அவர் நல்ல பேச்சாளி. பேச்சாளிகளில் பலவிதம் உண்டு தம்மை விளம்பரப்படுத்திக் கொள்ள பேசுபவர்கள்; தாம் எவ்வளவு படித்துள்ளோம்  என்பதைக் காட்டிக்கொள்ள பேசுகின்றவர்கள்; பிறரை சிரிக்க வைக்க வேண்டும்;  கை கொட்டல் வாங்க வேண்டும் என்று பேசுகின்றார்கள். இப்படிப் பலவிதம் உண்டு. இப்படிப் பேசுகின்றவர்கள் எப்படி விஷயத்தை மக்களுக்கு  எடுத்து  சொல்லி விளங்க வைப்பது என்பதை எண்ணி  பார்த்து பேசுவார்கள்.

தோழர்களே! கேட்கிறவர்களுக்கு நல்ல புத்தி இருந்தால் நல்ல பேச்சாளிகள் தோன்றுவார்கள். ஜீவாவிடம் எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் தக்க ஆதாரத்தோடு புள்ளிவிவரங்களோடு பேசுவார். மக்கள் மனதில்படும்படி பேசுவார் எவ்வளவு பிடிவாதக் காரர்களையும் மனம் மாற்றிவிடுவார்.

எங்கள் சுயமரியாதை இயக்கக் கொள்கை, கடவுள், மதம், சாஸ்திரம் இல்லை; ஜாதி இல்லை; ஏழை பணக்காரன் இல்லை;  இதுகள் ஒழிய வேண்டும் என்பது இதுகளை விளக்கிய பிரசாரம் செய்வதில் ஜீவா தலைசிறந்து விளக்கினார்.

நான் ரஷ்யாவுக்குப் போய்வந்த காலத்தில் எங்கள் பத்திரிகை பேரிலும், எனது பேரிலும்,  எனது மனைவி,  தங்கை, எனது அண்ணன், ஜீவா ஆகியவர்கள் பேரிலும் அரசாங்கம் பழிவாங்கும் முறையில் நடவடிக்கை எடுத்தது. ஆட்சியின் அடக்குமுறை காரணமாக நானும் சிறைக்கு சென்றேன்.  பத்திரிகையில் ஏதோ ஒரு கட்டுரையை எழுதிய காரணத்திற்காக ஜீவா அவர்களையும் அரசாங்கம் கைது செய்தது.  இதன் கருத்து பொதுஉடைமை இயக்கத்தையும் அழித்து விடவேண்டும் என்பதேயாகும். இந்த நிலையில்  திரு. ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்கள் அரசாங்கத்திற்கும் எனக்கும் ராஜி செய்ய  முன்வந்தார்.  நீங்கள் கம்யூனிஸ்ட் பிரசாரம் பண்ணவில்லை என்று எழுதிக் கொடுக்கும்படியும்  அப்படிச் செய்தால் விட்டு விடுவதாகவும் அரசாங்கத்தார் சொல்கின்றார்கள் என்று கேட்டார். அதற்கு நான் அப்படி எல்லாம் கூறமாட்டேன்.  எனது கொள்கை இதுதான்.  அதாவது எனக்கு பலாத்காரத்தில் நம்பிக்கை இல்லை.  பலாத்காரமில்லாமல்  சமுதாயத்திலும், பொருளாதாரத்திலும் மக்களிடம் பேதமில்லாமல்  செய்வதுதான்  என்கொள்கை.  இதற்கு  ஆக அரசாங் கத்துடன் கூடியவரை ஒத்துழைத்தே அரசாங்கத்திற்கு விரோதமில்லாமல் தொண்டாற்றுவதுதான் எனது கொள்கை என்று ஒரு ஸ்டேட்மெண்ட் விடுவது என்று ராஜி பேசிக்கொண்டேன்.  ஏன் என்றால் அப்போது ஜஸ்டிஸ்கட்சி  ஆட்சி இருந்தது.  நான் அந்தக் கட்சிக்கு ஆதரவாய் இருந்தவன் ஆதலால் அந்தப்படி எழுதிக் கொடுத்தேன்.  அப்போது ஜீவா சிறையில் இருந்தார்.  அந்த அறிக்கை யில் அவரிடமும் கையெழுத்து வாங்கினேன்.  உடனே அவரும் என் அண்ணனும் விடுதலை ஆனார்கள்.  ஜீவாவுக்கு நான் அந்த அறிக்கை வெளியிட்டது பிடிக்கவில்லை.  அதனால் கருத்து வேற்றுமை என்று கூறிக்கொண்டு கொஞ்சநாள் பொறுத்து விலக்கிக்கொண்டார்.  முக்கிய காரணம் நான் ஜஸ்டிஸ் கட்சியினர்களை ஆதரித்தது அவருக்கு பிடிக்கவில்லை.  அதன் காரணமாக விலகி விட்டார்.

அப்படி விலகிவிட்டாலும் அவர் சாகிறவரையிலும் நாங்கள் இருவரும் அன்பும் மரியாதையும் கொண்டு இருந்தோம்.

முதல்  பொதுத்தேர்தலில் நான் கம்யூனிஸ்ட்களை பலமாக ஆதரித்தேன். இவர்கள் வெற்றிக்காகப் பாடுபட்டேன்.  நல்ல அளவுக்கு கம்யூனிஸ்ட்டுகள் தேர்தலில் வெற்றி பெற்றார்கள்.  காங்கிரசை விட எதிர்க்கட்சிக்காரர்களே அதிகமான பேர்கள் வந்தும் கூட நமது  ஜன நாயகத்தின் யோக்கியதை, தோற்றுப்போன காங்கிரசுதான் பதவிக்கு வந்தது.

 அந்த தோற்றுப்போன காங்கிரசின் பேரால் முதல் மந்திரியாக வந்த ஆச்சாரியார், எனது முதல் நம்பர் எதிரி இந்த கம்யூனிஸ்ட்டுகள் தான்.  இரண்டாவது எதிரி இந்த ராமசாமி தான் என்று என்னையும் சொன்னார்.  

ஜீவானந்தம் அவர்கள் எனது வீட்டுக்கு வந்தார்.  இராஜாஜி இப்படி கூறுகின்றாரே என்றார்.  அதற்கு நான், நீங்கள் உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.  நானே என்னைக் காப்பாற்றிக் கொள்ளு கின்றேன் என்றேன்.

ஜீவா அவர்கள் கட்சிக்காக அதன் கொள்கைக்காக கடைசி வரையில் உண்மையாகவே உழைத்தவர்.  அவருக்கு கட்சியைப் பற்றி சில மனக்குறை உண்டு என்றாலும்  அதுபற்றி என்னிடம்தான் கூறுவார்.  மற்றவரிடம் கூறவே மாட்டார்.

நேற்று சிலைத்திறப்பு விழாவின்போது இராஜாஜி ஏதேதோ பேசியதாகவும், காமராஜர் அவர்கள்  மறுத்துக்  கூறியதாகவும் பத்திரி கையிலும்  பார்த்தேன்;  நண்பர்களும் கூறினார்கள்.

கம்யூனிஸ்ட் கட்சியினைப் பற்றி சில வார்த்தைகள் கூற வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது.  எனக்கு சொல்லவும் உரிமையுண்டு.

நமது நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி எவ்வளவு வருஷங்களாக இருக்கின்றது. அது எந்த உருப்படியான காரியத்தையும் செய்து வெற்றி பெறவில்லையே!

தோழர்களே! கம்யூனிஸ்ட்கட்சி நமது நாட்டில் வளரவேண்டிய அளவுக்கு வளரவில்லை. நாட்டில் எந்த எந்த சொத்தைக் கொள்கை யினைக் கொண்ட கட்சிகள் எல்லாம் தலை தூக்கி ஆடுகின்றன. உன்னத கொள்கையுள்ள கட்சி வெற்றி காணாதது ஏன்? மிகவும் உன்னதமான கொள்கையினைக் கொண்ட கட்சி, உலகில் எல்லா விதமான பிரச்சனைகளுக்கும் முடிந்த முடிவான பொது உடைமைத் தத்துவத்தைக் கொண்ட கட்சி வளர்ச்சி அடையவில்லை என்றால் என்ன ஜாதகம்?

கம்யூனிஸ்ட் என்றால் நாத்திகர்கள் ஆவர்.  கம்யூனிஸ்டுகளுக்கு கடவுள்பற்றோ, மதப்பற்றோ, சாஸ்திரப்பற்றோ, ஜாதிப்பற்றோ, நாட்டுப்பற்றோ, மொழிப்பற்றோ கூட இருக்கக்கூடாது. லட்சியப் பற்று,  வளர்ச்சிப்பற்று மட்டும்தான் இருக்கவேண்டும்.

நல்ல கொள்கைகளைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி இந்த நாட்டில் இன்ன மாறுதல் பண்ணியது என்று சொல்ல முடியவில் லையே! இராமாயணத்திலும், பாரதத்திலும் பழைய இலக்கியங் களிலும் நம்பிக்கை வைப்பவர்கள் எப்படி கம்யூனிட்டாக முடியும்?

விபூதியும், நாமமும் போட்டுக்கொண்டு கம்யூனிசம் பேசுபவர் கள் எப்படி உண்மை கம்யூனிஸ்டாக முடியும்? கம்யூனிஸ்டுகளுக்கு ஜோசியப் பைத்தியம் எதற்கு? கம்யூனிஸ்டுக்கு நாட்டுப்பற்றுதான் எதற்கு?  அவனுக்கு நாடே கிடையாதே,  அவனுக்கு உலகம்தானே நாடு! கம்யூனிஸ்ட்டுக்கு கடவுள் எதற்கு? அவனுக்கு அவனது கொள்கைதானே கடவுளாக இருக்கவேண்டும்?

நமது நாட்டு பத்திரிகைகாரர்கள் பெரிதும் அயோக்கியர்கள் ஆனபடி யால் 100க்கு 5 பேர்கள் கூட யோக்கியர்களாக இல்லை.

இவர்கள்  கம்யூனிச எதிர்பிரசாரத்தில் ஈடுபட்டு இருக்கின்றார்களே ஒழிய கம்யூனிச தத்துவத்தினை பிரசாரம் செய்வதில்லையே?

நண்பர் பாலதண்டாயுதம் ஜீவாவின் வாழ்க்கை வரலாறு எழுதியுள்ளார். எப்படி நேற்று இராஜாஜியைக் கூப்பிட்டுவிட்டு வம்பிலே மாட்டிக் கொண்டார்களோ அதுபோல அவர் எழுதியுள்ள புத்தகத்தில் என்னையும் எதிர்த்துத் தாக்கி வம்பிலே மாட்டிக் கொண்டார். இந்த புத்தகத்தில் 50ம் பக்கத்தில் "பகுத்தறிவின் பெயரால் நமது பண்டைய தமிழ் இலக்கியங்களை வெறுக்கும் போக்கு ஒன்று தமிழகத்தில் நிலவி வருகின்றது”  என்று குறிப்பிட்டு உள்ளார். இப்படி இவர் குறிப்பிட்டுத் தாக்கியதானது என்னைத்தானே ஆகும்?

மேலும் கூறுகின்றார் "வாழ்வும் சமயமும் பிரிக்க ஒண்ணாத வரையில் பின்னிக் கிடக்கும் இந்த நாட்டில் சமயநூல்களை ஒதுக்கித் தள்ளமுடியாது” என்று! இவர் இப்படி என்னைத் தாக்கியது பற்றி எனக்குக் கவலை இல்லை.  இப்படிப்பட்டவர்களுக்கு இந்த புத்தி வரலாமா?  இலக்கியமும் மதமும் இவர்களுக்கு என்ன அழுகின்றது? இதுகள்  பற்றிய எண்ணம் உங்களுக்கு இருக்கலாமா?

தோழர்களே!  நான்  சவால்விட்டே  கேட்கின்றேன் நமக்கு என்ன அய்யா யோக்கியமான இலக்கியம் உள்ளது? இராமாயணமும், பாரதமும், சிலப்பதிகாரமும் வெங்காயமும் எந்த முறையில் மக்களுக்குத் தேவையான இலக்கியமாகும்? அதில் கம்யூனிசத்துக்கு ஆன படிப்பினை என்ன இருக்கிறது?

கம்யூனிஸ்ட்டுகள் இதுகளை கையில் தொடலாமா? "வாழ்வில் பின்னிக் கிடக்கும் சமய நூல்களை விலக்க முடியாது” என்கின்றார். விலக்கமுடியாது என்றால் கம்யூனிஸ்டுகளாகிய நீங்கள் என்னத்  திற்கு இருக்கின்றீர்கள்?

தமிழ்நாட்டில் இன்ன புலவன் பகுத்தறிவுவாதி, மனித சமுதாய வாழ்வுக்கு ஏற்றாற்போல் இலக்கியம் பண்ணினான் என்று கூற முடியுமா? சும்மா வீதிக்குவீதி பாரதிவிழா, பாரதியைப் பற்றிய பேச்சு என்று கொண்டாடுகின்றார்களே அந்த பாரதி என்ன அதிசயமான கருத்தைப் பாடினான்? பார்ப்பான் என்கின்றதினால் அவனுக்கு பெருமை அளிப்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?

கம்யூனிஸ்ட்களாகிய உங்களிடம் பெரிய திட்டம் உள்ளது.  சமுதாயத்துறையில் உயர்வு தாழ்வு நீக்குவது; பொருளாதாரத் துறையில் ஏழைப் பணக்காரனை ஒழிப்பது என்பது; உயர்சாதிக் காரன் கடவுள்தான் என்னை உயர்சாதிக்காரனாகப் படைத்தார் என்கின்றான்.  பணக்காரன் எனக்குப் பணம் கடவுள் கொடுத்தார், நீ  என்னடா கேட்பது என்கின்றான்.  இந்த கடவுளை  கம்யூனிஸ்ட் வெளுக்க வேண்டாமா? கடவுளாவது வெங்காயமாவது எல்லாம் பித்தலாட்டம் என்று மக்களுக்கு உணர்ச்சியூட்ட வேண்டாமா? தெலுங்கிலே ஒரு பழமொழி சொல்லுவார்கள்.  " நேசேவாடுக்கு கோந்திப்பில்ல. எந்துக்கு” என்று நெசவாளி நூலை பிணைந்துக் கொண்டே போகின்றதும்  குரங்குக்குட்டி  அறுக்கின்றதுமாகத்தானே இருக்கும்.

 அதுபோல உங்கள் கொள்கைக்கும் இராஜாஜிக்கும் என்ன சம்பந்தம்? என்னத்திற்காக அவரை வம்பிலே அழைத்தீர்கள்? அப்படி வந்தவர் உங்கள் இலட்சியங்களைப் பற்றி உங்களைப் பற்றி நாலு நல்ல வார்த்தைதான் மனதார கூறுவாரா? இதுகளைப் பார்க்க வேண்டாமா?

நான் கம்யூனிஸ்ட் தலைவர்களை ரொம்பக் கேட்டுக் கொள்ளு கின்றேன்.  கம்யூனிஸ்ட்டுக்களாகிய நீங்கள் பெரிய தியாகிகள் பல லாப நஷ்டங்கள் எல்லாம்பட்டு உள்ளீர்கள்.  இதுகளுக்குப் பலன் வேண்டாமா?

தோழர்களே! செத்துப் போகும் நிலையில் இருந்த  காங்கிரஸ் இன்று தலை எடுத்து நிமிர்த்து நிற்கின்றதே!  காமராஜர் வந்தார் நிலைத்துப் போய்விட்டது. உங்கள்  இயக்கம் வளர்ச்சி  அடையாத தற்குக் காரணம் சரியான பிரசாரம் இல்லாததேயாகும். நீங்கள் இனியேனும் நாத்திகப் பிரசாரம் பண்ணனும்.  ரஷ்யாவில் கம்யூ னிஸ்ட்டுக்கள் பாதிரிகளையெல்லாம் வெட்டவில்லையா? நாம் நமது நாட்டுப் பாதிரிகளான பார்ப்பனர்களை வெட்டாவிட்டாலும் அவர்களை  மக்களை மக்களாக மதித்து நடக்கச் செய்ய  உணர்த்த வேண்டாமா இவர்களின்  புரட்டுப் பித்தலாட்டங்களை எல்லாம் மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டாமா?

இன்றைக்கு நாம் காங்கிரசை ஆதரிக்க வேண்டும்.  எதற்காக, அது கொண்டுள்ள கொள்கையில் இருந்து தப்பாகப் போகாமலி ருப்பதற்கு ஆகும்.  இன்றைக்கு காங்கிரசில்   உள்ளவர்களில் கால்வாசிப்பேர்களுக்குத்தான் சமதர்ம உணர்ச்சி இருக்கின்றது.  3/4 பாகம்பேருக்கு  அது வெறுப்பாகவே இருக்கும்.  இந்த  3/4 பாகப் பேர்களையும் வெளியாக்கி காங்கிரசைச் சுத்தப்படுத்த நாமும் ஒத்து ழைத்தால்தான் முடியும். கம்யூனிசம் சமதர்ம அஸ்திவாரத்தில் தானே எழுப்பப்படவேண்டும்?

நீங்கள் ஒரு தடவைதான் சட்டசபையை விட்டுவிடுங்களேன்: கட்சிப் பிரசாரத்தில் தீவிரமாக இறங்குங்களேன். சட்டசபைக்கு நின்று இரண்டொருவர் போய் என்னதான்  சாதித்து விடமுடியும்?

எனக்கு என்னமோ சட்டசபைக்குப் போகின்றது பிடிக்கவில்லை.  கொள்கையினை எடுத்துச் சொல்லவாவது போகவேண்டும் என்பீர் கள். எந்தக் கொள்கையினை எந்த மந்திரி முன்பு எடுத்துச் சொல்லி வெற்றிபெற்றீர்கள்?

நான் சட்டசபைக்குப் போகவில்லை.  எனக்கு நாட்டில் மரியாதை இல்லையா செல்வாக்கு இல்லையா?  எங்கள் கட்சிதான் சட்ட சபைக்கு போகாததினால் அழிந்து போய் விட்டதா?

நான் இராமாயணத்தைக் கொளுத்தியவன், கீதையை கொளுத்தி யவன், இராமன் படத்தை எரித்தவன், பிள்ளையார் சிலையை வீதிக்கு வீதி போட்டு உடைத்தவன்தானே அய்யா? எனக்கு நாட்டில் என்ன மரியாதை கெட்டுவிட்டது. நீங்கள் என்னை எவ்வளவோ பயன் படுத்திக்கொள்ளலாம்.  மக்கள் மனதில் மூடநம்பிக்கைகள்,  முட்டாள் தனமான பற்றுக்கள் குடிகொண்டு இருப்பது நீங்கப் பாடுபட வேண்டும். மக்களை எல்லாம் இந்த உன்னதக் கொள்கைக்குப் பக்குவம் உடையவர்களாக ஆக்கவேண்டும்.  நீங்கள் தொண்டர்களாக கருதவேண்டும் என்று எடுத்துரைத்தார்கள்

தந்தை பெரியார் அவர்கள் வெளியிட்ட "ஜீவாவின் வாழ்க்கை வரலாறு” புத்தகத்தை முதலாவதாக கம்யூனிஸ்ட் கட்சியின் பிரபல தலைவர் திரு.பி.சி. ஜோஷி அவர்கள் பணம் செலுத்தி தந்தைபெரியாரிடம் பெற்றுக்கொண்டார்.  அடுத்து விழாத்தலைவர் திரு.காட்டே அவர்களும்  அடுத்து தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியின்  பொதுக் காரியதரிசி மணலி திரு. கந்தசாமி அவர்களும் பெற்றுக் கொண்டார்கள்.

தந்தைப் பெரியார் அவர்களும் ரூ.10 செலுத்தி 10 புத்தகங்களை வாங்கிக் கொண்டார்கள். முடிவில், இது முதலாகவாவது இந்த நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி தலைசிறந்த பிரபலகட்சியாக விளங்க வேண்டுமென்று வாழ்த்துக் கூறிவிட்டு விடைபெற்றுக்கொண்டார்.                                                                                                 

விடுதலை 02.02.1966