Monday, July 17, 2023

டாக்டர் டி.எம்.நாயர்

டாக்டர் டி.எம். நாயர்

ஏ.எஸ். வேணு

Dr. T. M. நாயர்!

தரவாத் மாதவன் நாயர்!

புகழ் பெற்ற தரவாத் குடும்பத்தில் 1868ஆம் ஆண்டு பிப்ரவரியில் பிறந்தார். தந்தையின் பெயர் சங்கரன் நாயர். அவர் மாவட்ட முன்சீபாக திரூரில் பணியாற்றினார். அவரு டைய மூத்த சகோதரர் பாரிஸ்டர் பட்டம் பெற்றுத் துணை கலெக்டராக பணிபுரிந்தார். அவருடைய உடன்பிறப்பு அம்மாளு அம்மாள் வடமொழியிலும், மலையாள மொழியிலும் புலமைமிக்கவர். அவர் மலையாள மொழியில் பல அரிய நூல் களை எழுதியுள்ளார். அறுபத்து மூன்று நாயன்மார்கள் சரித்தி ரத்தை மலையாளத்தில் கவிதை எழுதினார். அவருடைய தாயாரும் ஆற்றல் மிக்கவர். 

19ஆம் நூற்றாண்டில் இவ்வளவு சிறப்பு மிக்க குடும்பத் தில் Dr. T.M. நாயர் தோன்றியது இந்தியத் துணைக் கண்டத் திற்கே, குறிப்பாக நலிந்து கிடந்த திராவிடப் பெருங்குடி மக்களுக்கே ஒரு நல்லகாலம் பிறந்துவிட்டது என்ற உணர்வை பின்னர் வரலாறு உணர்த்தலாயிற்று. 

Dr. நாயர் ஒருவர்தான் முதன் முதலில் சமூகத்தின் நிலையை நன்கு ஆய்வு செய்து, எல்லா சமூகத்தினருக்கும், வகுப்பு உரிமை நீதி வழங்கிட வேண்டும் என்று போர் முழக்கம் செய்தார் என்பதை எவரும் தயக்கமின்றி ஒப்புக் கொள்வர். நாட்டை ஆண்ட வெள்ளையருக்கு சமூக நீதி குறித்தும், வகுப்பு உரிமை குறித்தும், மிகத் தெளிவாக எடுத்து கூறியவரும் அவரே. 

அவர் தன்னுடைய அறிவாற்றல், திறமை, முன் அறிவு இரக்க குணம் அத்தனையும் தன்னுடைய நாட்டு மக்களுக்காக பயன்படுத்தினார் என்பதை எவரும் மறுக்கவோ மறைக்கவோ இயலாது. 

அவரால், பின் தள்ளப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள், சிறுபான்மை மக்களாகிய முஸ்லீம்கள்' கிறித்துவர்கள் எல்லோருமே புதுவாழ்வு பெற்று படிப்படியாக முன்னேற்ற மடைய நேரிட்டது என்பதே வரலாற்று உண்மை . 

இருண்டு கிடந்த மக்களுக்கு ஒளியாய், கலங்கரை விளக்காய், வாழ்வு தரும் கதிரவனாய் உதித்தவர் Dr. நாயர்! 

நம் நாட்டு மக்களை நச்சரவு கூட்டத்தினர் சேட்டையெல்லாம் செய்து வாட்டிவதைக்கும் கொடுமையை தடுத்திட ஆண்டவன் யாரும் எடுக்காத அவதாரத்தை எடுத்தவர் Dr. நாயர்! 

இமயம் சென்று விற்கொடி பொறித்து கனக விசயன் தலையில் கல்லை ஏற்றி கொணர்ந்த சேரனின் பரம்பரையா இப்படி சீரழிந்து கிடக்கிறது என்பதை நன்கு உணர்ந்த அறிவு ஒளியாக தோன்றியவர் நம் Dr. நாயர். உரோமுக்கு உடையும், எகிப்திக்கு உணவும், சீனருடனும், யவனருடனும் நல்லுறவு கொண்டு விலை மதிக்க முடியாத பொருள்களை எல்லாம் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்த மக்கள் இன்று அடிமைகளாக உரிமையற்றவர்களாக, நாதியற்றவர்களாக திண்டாடுகின்றனர் என்பதை முதல் முதல் உணர்ந்த எல்லா வகுப்பினரும் நீதியை பெற்று நல்வாழ்வு பெற்றிட போராட்டத்தை துவக்கிய மேதை நம் Dr. நாயர் அவர்கள் தான்! தென்னக மக்களின் நிலையை ஆய்ந்து நீதிக்கட்சியை உருவாக்கிய சிற்பியாவார். 

மக்களுக்காக அவர் அவர் தொடுத்த போர் - நியாய மான போர் - உண்மையான போர் வெற்றிகரமாக முடியும் தருவாயில் அவரும் மறைந்தார். இன்று அந்த மக்கள் எல்லாதுறைகளிலும் படிப்படியாக முன்னேறி வருகின்றனர். 

அவர் 51வது வயதிலேயே மறைந்து விட்டார். ரத, கஜ, துரக பதாதிகள் கொண்டுபோரிட்டவர் அல்ல நமது Dr. நாயர். அவர் நடத்தியது, அறிவுப் போர், அறப்போர். 

அவருடைய போராட்டம் நம்மையெல்லாம் ஆண்டு கொண்டிருந்த வெள்ளையர் ஏகாதிபத்திய ஆதிக்கவாதி 'களிடம் இலண்டன் மாநகரில் நடக்கும்போது அவர் வெற்றி யைத் தேடித்தந்து விட்டு அங்கேயே மறைந்து விட்டார். போராட்டத்தைத் துவங்கி, அந்தப் போராட்டகளத்திலேயே உயிர் விட்டவர் நம் Dr. நாயர். 

அவர் மறைந்த செய்தி கேட்டு தென்னக மக்கள் துக்கக் கடலில் மூழ்கினர். அவருடைய உற்ற நண்பர்கள் குறிப்பாக மருத்துவர்கள் Dr. நாயர் தன் உடல் நிலை குறித்து நன்கு அறிந்திருந்தும், வெளியே காட்டிக் கொள்ளாது, நீண்ட தூரம் பயணம் மேற்கொண்டது அவர் உயிர் தியாகமே செய்து கொண்டார் என்று கதறி அழுதனர். 

இந்திய அரசியல் சீர்திருத்தங்களுக்கான ஆலோசனை களை கூற மாண்டேகு பிரபுவின் அறிக்கையின்படி, நிறுவப் பெற்ற ஒரு பிரிட்டிஷ் பாராளுமன்றக் குழுவின் முன் வகுப்பு வாரி பிரிதி நிதித்துவத்தை வலியுறுத்தவே Dr. நாயர் இலண்டன் சென்றார். 

நம் Dr. நாயருக்கு இருந்த அறிவு, ஆற்றல், சுறுசுறுப்பு, பிறர் மனம் புண்படாது நகைச் சுவையுடன் பேசிடும் ஆற்றல், அவருடைய உடல் நோயை வெளிக்காட்டாது மறைத்து வகுப்புரிமை நீதியில்லா வகுப்பினருக்கும் கிடைத் திட அவர் அவர் பட்டபாடு அவருடைய உ.டல் நிலை மேலும் மோசமாயிற்று. இருதய நோய், நீரிழிவு நோய் அவரை வாட்டி வதைத்தது. இத்தனைக்கு அவரே மருத்துவ துறை யில் நிபுணர். அந்தப் பிணிகளைப் பற்றி ஆராய்ந்து கட்டுரை கள் எழுதியவர் நம் Dr. நாயர்! 

உடல் நிலையை உள்ளது உள்ளபடியே வெளிப்படுத்தி இங்கிருந்து செல்ல Dr. நாயர் மறுத்திருந்தால் யார் அவரை குறை சொல்ல முடியும்? அதனால் யாருக்கு என்ன நட்டம் அதனால் தன்னை நம்பிய மக்களுக்கு தானே நட்டம். சமூக நீதி கிடைத்திருக்குமா? வகுப்புவாரி உரிமைதான் மக்களுக்கு கிட்டியிருக்குமா? 

அனைத்து வசதிகளும் கொண்ட செல்வக் குடும்பத்திலே - பிறந்த Dr. நாயர் தன்னைப்பற்றி நினைக்கவே இல்லை. நாட்டு மக்கள் நலத்தையே இலட்சியமாகக் கொண்டு போர் களத்திற்குச் சென்றார். எல்லா சமூக மக்களும் வகுப்பு உரிமை நீதி கிடைக்க வழிகோலி விட்டு பிணியால் போன இடத்தி லேயே மடிந்தார். அவர் நினைத்திருந்தால் பல ஆண்டு காலம் நிம்மதியுடன், ஆடம்பர வாழ்வு வாழ்திருக்க முடியும். கோடிக் கணக்கில் பிறக்கிறார்கள். கோடிக்கணக்கில் மடிகிறார்கள். மக்கள் இதயங்களில் இடம் பெறுகிறவர்கள் எத்தனை பேர். அதிலும் கோடிக்கணக்கான மக்களுக்கும் வருங்காலத்தில் பிறக் கும் கோடிக்கணக்கான மக்களுக்கும் நல்லதைசெய்து உலக வரலாற்றில் தனி இடம் பெற்றவர் நம் Dr. நாயர். | 

அவர் இலண்டன் சென்றபோது, அவரின் அரசியல் எதிரி கள் கதிகலங்கினர். அரசுக்கு தவறான தகவல்களை இட்டுக் கட்டிப் புகார் செய்தனர். அரசும் அவர்களின் பக்கம் மயங்கி Dr. நாயர் எந்த பொதுக்கூட்டத்திலும் பேசக் கூடாது என்று தடை உத்தரவு பிறப்பித்து இராணுவ அதிகாரியின் மூலம் Dr. நாய ருக்கு அதற்குரிய ஆணையை வழங்கியது. ஆம்! இது முற்றிலும் உண்மை . நல்ல ஜன நாய கத்தை பேணி காத்த வெள்ளையர் அரசு ஒரு இந்திய குடிமகனின் பேச்சு உரிமையைப் பறித்தது. பிரிட்டிஷாரின் தகாத, கூடாத சர்வாதிகார அடக்கு முறையை முதல் முதலில் * சந்தித்திவர்கள் நீதிக்கட்சியினர்தான்! 

அந்தத் தடை உத்தரவை பெற்றுக் கொண்ட Dr. நாயர் சிரித்துக் கொண்டே ' 'என்னுடைய துப்பாக்கி மருந்தை தாயகம் செல்லும் வரை பத்திரமாக வைத்துக் கொள்கிறேன் " என்று கூறினார். பம்பில் கவர்னராக விளங்கிய சைடனாம், பிரபு, பிரிட்டிஷ் பாராளுமன்ற பிரபுக்கள் சபையில் (House of Lords) நம் Dr. நாயரை மிகவும் புகழ்ந்துப் பேசினார்.) அதன் பயனாக வும், பலரின் தலையீட்டாலும் தடை உத்தரவு நீக்கப்பட்டது. அதன்பிறகு Dr. நாயர் உற்சாகத்துடன் தம்கடமையைத் தீவிர மாகச் செய்திட முனைந்தார். ஆனால் அவர் உடல் நலம் மிகவும் குன்றியதால் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். பாராளு மன்றக் குழு அவரை மருத்துவ மனையில் சந்தித்து வாக்கு மூலத்தை பதிவு செய்துக் கொண்டது. உயிர் பிரிவதற்கு முன் அவர் ஆற்றியு உரையும் அதுவே. 

அவர் 'கோல்டர்ஸ் கீரினில்' (Goldcrs Greens) தகனம் செய்யப்பட்டார். 

அவரது அஸ்தியை Dr. A.R. மேனன் தாயகம் கொண்டு வந்தார். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மக்கள் வெள்ளம் போல் கூடி நின்று, கதறி அழுதனர். ஆதி திராவிடர்கள், தொழிலாளர் கள், ஏழைகள் கலசத்தை தொட்டு Dr. நாயருக்கு இறுதி அஞ்சலி செய்தனர். - Dr. நாயர் நீதிக்கட்சியின் (தென்னிந்திய நல உரிமை சங்கம் (S.I.L F.) சார்பாகவே, பாராளுமன்றக் குழு முன் வாக்குமூலத்தை கொடுத்தார். அவருடைய முக்கிய கொள்கை ''சட்டமன்றங்களிலும், அரசு பணிகளிலும் வகுப்புவாரி பிரதி நிதித்துவம் கொடுக்கப்பட வேண்டும். 

 மக்கள் எல்லோருடைய உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும்' ஒரு பகுதியினர் மற்ற ஒரு பகுதியினரை  நசுக்கக் கூடாது. 

“அரசு ஆதிதிராவிடர்களுக்கும், பின் தங்கிய மக்களுக்கும் சிறுபான்மையினருக்கும் சலுகைகளைத் தாராளமாக வழங்கிட  வேண்டும். 

 “சமூக நீதி சமவாய்ப்பு எல்லோருக்கும் அளிக்கப்பட வேண்டும். 

அவருடைய கோரிக்கைகளில் முக்கியமானவைகள் இன்றும் சுதந்திர இந்தியாவின் அரசியல் சட்டத்தின் உரிமை பிரகடனத்தில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

அவர் இலண்டனில் மறைந்த போது, காங்கிரஸ் சார்பாக இலண்டன் வந்திருந்தவர்கள் கூட சவ அடக்கத்தில் பங்கு கொள்ளவில்லை என்பதை நினைக்கும் போது, அவரின் எதிரிகளின் தரமும், அந்தக்கட்சியின் போக்கும் எல்லோ ருக்கும் எளிதில் புலப்படும். 

ஏதாவது ஒரு கல்விக்கூடத்தில் சேர்ந்து எப்படியாவது ஒரு பட்டம் பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற நிலையில் மாணவராக அவர் விளங்க வில்லை , அவர் தன் அறிவை தானே வளர்த்துக் கொண்டவர் ஆவார். வாய்ப்புகள் கிடைக்கும் போது நேரத்தை வீணாக்காமல் அறிவை வளர்த்துக் கொண்டவர் Dr, நாயர். எதைப்பற்றியும் அவர் பெருமளவு தெரிந்துக் கொண்டவராக அவர் விளங்கினார். அரசியல், பொருளாதாரம், சட்டம், உலக நாடுகளின் வளர்ச்சி, மனித சமுதாய மேம்பாட்டுக்கான தடைகள் இப்படி அவர் அறிந்த விஷயங்கள் மிகப்பல. அவர் நிகழ்த்தி யுள்ள சொற்பொழிவு ஆய்வு புலப்படுத்தும் உண்மை இது. 

அவர் முதலில் பாலக்காடு அரசினர் உயர் நிலைப் பள்ளி யில் பயின்றார். அவர் படிப்பிலும் விளையாட்டுப் போட்டி களிலும் முதன்மையாக விளங்கினார். மூன்றாண்டுகள் படிக்க வேண்டிய மெட்ரிகுலேசன் படிப்பை இரண்டே ஆண்டு களில் படித்து தேர்வு பெற்றார். பிறகு சென்னையில் மாநில கல்லூரி யிலும், மருத்துவக் கல்லூரியிலும் பயின்றார். அவர் படிக்கும் போதே மற்ற மாணவர்களிடம் தோழமை, அன்பு, பரோபகாரச் சிறப்புகளைக் கையாண்டு மாணவர் தலைவராகத் திகழ்ந்தார். 

1889ஆம் ஆண்டு எடின்பர்க் சென்று அங்கு 1894 இல் M. B. Ch. B. பட்டம் பெற்றார். அதன்பிறகு காது, தொண்டை, மூக்கு நோய்களுக்கான சிறப்பு படிப்பில் தீவிரம் காட்டி M.D. பட்டத்தை 1896இல் பெற்றார். இந்நோய்கள் குறித்து அவர் பாரீஸ் சென்று ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 

M.B.Ch.B. பட்டம் பெற்றிட ஒரு விதியிருந்தது. இலக்கியம் நிறைந்த ஒரு மொழில் நல்ல பயிற்சி இருத்தல் வேண்டும் என்பதே அந்தவிதி. Dr. நாயரின் தாய் மொழி மலையாளம். அவர் சிறுவனாக இருந்தபோது வடமொழி சிறிது பயின்றார். ஆனால் கல்லூரியில் தேற வேண்டிய அறிவை அது அவருக்கு வழங்களது என்று தானே முடிவு செய்து கொண்டு தன் தங்கை யின் மூலம் அஞ்சல் வழியே பாடங்களை வரவழைத்து படித்து தேர்வு பெற்றார். 

கல்வித்துறையில் அவர் பெற்றிருந்த ஆர்வத்திற்கு இது ஒரு நல்ல எடுத்துக் காட்டு. அவர் எங்கு சென்றாலும் தன் ஒய்வு நேரத்தை வீணாக்கியதில்லை. ஓய்வு நேரங்களில் ஆராய்ச்சி நிலையங்களுக்கும். நூல் நிலையங்களுக்கும் செல்வதை அவர் கடமையாக கருதினார். ஓயாது புதுப்புது நூல்களை படிப்பார். அவர் காலத்தில் வாழ்ந்த பல்வேறு நாடுகளின் அரசியல் வாதிகளுடன் பழக ஆர்வம் கொண்டார். மருத்தவ படிப்புடன் அரசியல் அமைப்பு வரலாறுகள், இலக்கி யங்கள் போன்றவை களை அவர் கசடற கற்றார் இங்கிலாத்தில் இருந்தபோது ஆங்கிலேயரின் அரசியலையும், சமூகவாழ்க்கையையும் நேரடி யாக பயின்று வந்தார். அவர் மாணவர்கள் சங்க அமைப்பாளரா கவும், செயலாள ராகவும் பணியாற்றினார். எடின்பரோ இந்தியர் சங்கத் திற்குத் தலைவராக இருந்தார். பல்கலைக் கழக மாணவன்' என்ற வெளியீட்டின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகித்தார். இலண்டன் வந்த போதும் இந்தியர் சங்கத்தின் செயலாள ராகவும், துணைத்தலைவராகவும் பணியாற்றினார். 

அவர் சென்ற நாடுகளில் அவரே அந்த நாடுகளின் பழைய வரலாற்றையும், புதியவளர்ச்சியையும், தானே விரும்பி பயின்றுதான் அறிவை வளமாக்கிக் கொண்டார். அக்கால கட்டத்தில் Dr நாயர் உலகைப்பற்றி அவர் தெரிந்துக்கொண்ட அளவுக்கு வேறுயாரும் தெரிந்து கொண்டதாக கூறுவதற் கில்லை. இவ்வளவும் 1919க்குள் நிகழலாயிற்று. காந்தியார் காங்கிரசில் கால் எடுத்து வைத்ததே 1921 ஆம் ஆண்டுதான். தந்தை பெரியார் 1919ஆம் ஆண்டுதான் காங்கிரசில் சேர்ந்தார். அவரை ராஜாஜி காங்கிரசில் சேர்த்தார். 

நீதிக்கட்சி டாக்டர் நாயரின் ஆற்றலினால் உருவாக்கப் பட்டது என்பதை நினைக்கும்போது ஒரு புறம் மகிழ்ச்சியும் அவரது திடீர் மறைவை நினைக்கிறபோது மறுபுறம் மன வேதனையும் உண்டாகிறது: அவர் மேலும் சில ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் மக்கள் நிலை எந்த அளவிற்கு உயர்ந்திருக் கும்? என எண்ணத்தோன்றுகிறது . 

கம்பீரமான தோற்றம் - உயர்ந்த வலிமையுடைய உருவம், அகன்ற நெற்றி, ஒளிவீசும் கண்கள், படர்ந்த முகத்தில் அடர்ந்த மீசை, தசை மிக்க நாடி, ஆங்கிலேயருக்கு ஈடாக தரம்மிக்க உடை, கள்ளம் கபட மில்லாத உள்ளம், பேச்சுகள் மூலமே எதிரி கள் மனதை கவரும் தனிச்சிறப்பு அத்தனையும் கொண்டவர் நம் Dr. நாயர். 

அவர் தன் தாய்மொழி மீது பற்றுக்கொண்டவர். தூய மலை யாளத்திலேயே பேசவும் எழுதவும் ஆற்றல் பெற்றவர். கள்ளிக் கோட்டையிலிருந்து வெளியிடப்பட்ட 'கேரள பத்திரி'காவிற்கு Dr. நாயர் எடின்பரோவிலிருந்து தன் தாய் 

தொடர்ந்து பல நல்ல கட்டுரைகளை எழுதினார். 

ஒரு சமயம் ' இந்துலேகா' என்ற தலைப்பில் வெளியான உயர்தர நாவலின் மதிப்புரைகளை எடின்பரோவில் படித்து  விட்ட நாயர் அந்த ஏட்டின் ஆசிரியருக்கு மடல் வரைந்தார். நாவலின் கதாநாயகி இந்துலேகா, கதா நாயகன் மாதவன் தன் பெயரும் மாதவன் என்று இருப்பதை வைத்து நகைச்சுவையாக ‘நான் தற்சமயம் வெகு தூரத்தில் இருப்பதால்' இந்து லேகாவை பார்க்க முடியவில்லை. ஆனால் இறுதியில் இந்துலேகா மாதவனை நாடிவருவாள் என்று எழுதினார். அதை படித்த ஆசிரியர் சிரித்துவிட்டு ஒரு புத்தகத்தை உடனே Dr. நாயருக்கு அனுப்பி வைத்தார். 

அறுவை சிகிச்சையில் இந்தியாவில் புகழ்ப் பெற்றவர் களில்) Dr.நாயர், ஒருவர். அவர் தொழில் நன்றாக நடந்தது. காலை 8 மணி முதல் 1 மணிவரை தொழிலை கவனித்துவந்தார். \ பின்னர் படிப்பது, எழுதுவது அவருடைய வழக்கம். அவர், வீட்டில் பெரியதொரு நூல் நிலையம் இருந்தது. அவர் ‘ஆண்டிசெப்டிக் (Antiseptic) என்ற மருத்துவ பத்திரிகையின், ஆசிரியராக வாழ் நாள் முழுவதும் நடத்தி வந்தார். தமிழக சட்டமன்றத்தின் தலைவராக விளங்கிய Dr. யு. கிருஷ்ணாரா வின் தந்தை Dr. யு. இராமாராவ் தான் அப்பத்திரிகையின் ஆசிரியர்! அவர் மறைந்த பிறகு தானே ஆசிரியராக இருந்து அந்த ஏட்டினை நடத்தி வந்தார். 

Dr. நாயரின் கட்டுரை ஒன்றை எதிர்த்து திருமதி அனி பெசன்ட் அம்மையார் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் Dr. நாயர் வெற்றி பெற்றார். அந்த வழக்கில் பெசண்ட் அம்மையார் தோற்றது தேசியவாதிகளுக்கு பெரிய) ஏமாற்றமாகும். நீதிக் கட்சிக்கு மகத்தான வெற்றியாகும். 

Dr. நாயர் நீதிக்கட்சியால் எந்தப்பலனும் பெறவில்லை. அவரால்தான் நீதிக்கட்சி மகத்தான சாதனைகளைச் செய்ய முடிந்தது. அவர் சென்னை மாநகராட்சி மன்றத்தில் 1904ஆம் ஆண்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பார்ப்பனர் களும் படித்தவர்களும், வசித்து வந்த திருவல்லிக்கேணி வட்டத் தில் இருந்து அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் நகராட்சியின் தொடர்ந்து கூட்டங்களில் கலந்துக் கொண்டு அதன் சீர்திருத்தத் திற்கு அரும்பாடு பட்டார். நகராட்சியின் 

நிலையை உணர்ந்து ஆக்கபூர்வமான யோசனைகளை கூறினார். அவருடைய பேச்சின் மூலம் நகரமக்கள் விழிப் படைந்து, எழுச்சிப் பெற்றனர். மாநகராட்சியின் குறைபாடு களை அவர் கண்டித்துப்பேசும்போது குற்றம்குறை காண முடி யாத அளவிற்கு மிக தெளிவாகவும் தயக்கமின்றி, துணிவோடும் அவர் பேசினார். நகரசபை விநியோகிக்கும் குடிநீர் பற்றிப் பேசும்போது, அதை மாலோனி மிக்சர் என்று அவையிலேயே குறிப்பிட்டார் Dr. நாயர். அப்போது மாநகராட்சியின் பெரிய நிர்வாக பொறுப்பை ஏற்றிருந்தவரின் பெயர் மாலோனி யாகும். அதற்கு மாலோனி பதில் கூறும் போது பெருமளவு நீர்வடி கட்டிதான் வழங்கப்படுகிறது என்றும், சிறு அளவு தண்ணீர் தான் வடி கட்டாது சேர்க்கப்படுகிறது என்றும், கூறினார். உடனே நாயர் எழுந்து, கிருமிகளைப்பற்றி சிறிதளவு தெரிந் தவர்கள், வடிகட்டிய நீருடன், வடிகட்டாத நீரை சேர்ப்பதனால் கிருமிகள் அதிகமாக வளர்ச்சி பெறும் என்றார். அவர் உள் ளாட்சி மன்றங்களின் துணைவராக காப்பாளனாக இப்படி விளங்கினார், எங்காவது உள்ளாட்சி அவைகள் கலைக்கப் பட்டால் அவர் அவை மீண்டும் செயல்பட பாடுபட்டார்கள். பாலக்காடு நகரசபை 1910ஆம் ஆண்டு கலைக்கப்பட்டபோது, Dr. நாயர் தலைமையில் கிளர்ச்சி நடைபெற்றது. அப்போது நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி • இத் தீர்மானம் போலீஸ் அதிகாரி ஒருவரைத்தவிர மற்றவர் எல்லோ ராலும் ஏகமனதாக நிறை வேற்றப்பட்டது' என்று கூறினார். பிறகு கலைக்கப்பட்ட பாலக்காடு நகரசபை மீண்டும் செயல் படலாயிற்று. 

Dr, நாயர் துவக்க காலத்தில் காங்கிரஸ் மகாசபையில் சேர்ந்து தொண்டாற்றினார். அதன் தலைவர்கள். வில்லியம் வேடர்பான் சென்னைக்கு வந்தபோது Dr. நாயரின் இல்லத்தில் தங்கியிருந்தார். 1898ஆம் ஆண்டு சென்னையில் கூடிய காங் கிரஸ் மாநாட்டில் பங்குகொண்டு நாயர் உரையாற்றினார். அடுத்து இலட்சுமணபுரியில் நடைபெற்ற மாநாட்டிலும் சொற் பொழிவாற்றினார். 1907ல் சித்தூர் வடஆற்காடு மாவட்ட காங் கிரஸ் மாநாட்டின் தலைவராகவும் இருந்தார். பொதுவாகவே அவரது ஆங்கிலப்பேச்சும், உச் சரிப்பும், கவர்ச்சி கொண்டதாகும். அவர் மருத்துவத் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்த தால், தொடர்ந்து பயணம் செய்யவோ, வெளியூர்களில் சொற் பொழிவாற்றவோ சம்மதிக்கவில்லை. சென்னையில் மட்டுமே அவர் சொற்பொழிவுகள் அடிக்கடி நடைபெறும். பொது விஷயங் களை அவர் ஆராய்ந்து. மிகத் தெளிவாக பேசியவர் என்பதால், அவர் பேசிடும் கூட்டங்களுக்கு, பலர் வெளியூர்களிலிருந்து பயணம் மேற்கொண்டு வருவதும், Dr. நாயரை தனியே சந்தித்துப் பாராட்டுவதும், பேசி பல அரிய பொருள்களை தெரிந்து கொள்வ தும் உண்டு. 

வங்கத்திலே போலீசார் வன்முறையைக் கையாண்டு பொதுக்கூட்டத்தைக் கலைத்தனர். போலீசார் எந்தவித ஆயுதத் தையும் பயன்படுத்தவில்லை” என்று அரசு அறிக்கை வெளி யிட்டது. இந்த தீய போக்கினை கண்டிக்க, சென்னையில் ஒரு கண்டனக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. Dr. நாயர் அந்தக் கூட்டத்தில் பேசினார். ''அரசாங்கம் கூறுவது உண்மையானால் எனது நண்பர் சௌதி தலையில் படுகாயம் எப்படி உண்டா யிற்று? அது எவ்வாறு ஏற்பட்டது? நிச்சயமாக! வந்தே மாதரம்! என்று கூச்சல் இட்டதினால் காயம் ஏற்பட்டிருக்காது என்று உணர்ச்சித் ததும்ப பேசினார். உடன் கூட்டத்தில் வெடித்த சிரிப் பொலி அடங்க நெடுநேரம் பிடித்தது. அவருடைய நாவன்மை அலாதியானது. அந்த காலத்தில் மேடை பேச்சுகள் பெரும் பாலும் ஆங்கிலத்திலேயே நடைபெற்றுவந்தது. கல்வித்தரம் மிகவும் உயர்ந்திருந்தது. இந்தியத் துணைக்கண்டத்திலேயே சென்னையில்தான் அதிகப்படியான தரம் நிரம்பியிருந்தது. ஆங்கிலத்தில் எழுவதும், பேசுவதும் மற்றபகுதிகளில் இருப்பவர் களுக்கு வியப்பாக விளங்கியது. அப்படிப்பட்ட புலமை படைத்த வர்களில் முன்னோடியாக விளங்கியவர் Dr. நாயர். 

நமது Dr. நாயர் 1915ஆம் ஆண்டு சென்னை பல்கலை கழகத்தின் செனட்சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் பல்கலை கழகத்தின் தரம் தாழாமல் பாதுகாத்தார். நல்ல பல ஆராய்ச்சிகள் நடத்த ஊக்கமளிக்கப்பட்டது. பல பேராசிரியர்கள் புதுப்புது நூல் களை எழுதினர். இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களில் படித்து பட்டம் பெற்றவர்கள் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. 

இந்திய அரசு அமைத்த தொழில் கமிஷனில் Dr. நாயர் உறுப்பினராக இருந்தார். தொழிலாளர்கள் நிலையை உயர்த்த அவர் பாடுபட்டார். தூய தொண்டினால் தொழிலாளரின் அன்பைப் பெற்றார். கமிஷனுடன் இந்தியா முழுவதும் சுற்றி, தொழிலாளர் குறைகளை நேரில் கேட்டு, மற்ற உறுப்பினர்களு டன் விவாதித்து, நல்ல பல யோசனைகளை நல்கி அறிக்கையை 1908 இல் அரசிடம் சமர்ப்பித்தார். கமிஷனின் கருத்து சில வற்றில் அவர் உடன்பாடு கொள்ளாததால், அறிக்கையிலேயே மறுப்புகளும் எழுதினார். அந்தக் கருத்துக்களை அரசு ஏற்றுக் கொண்டது. தொழிற்சாலைகளில் வேலை நேரத்தை குறைக்க வேண்டும் என்று வற்புறுத்தினர். அதை விளக்கிக் கூறிடவும், பொது கருத்தை உருவாக்கிடவும் தன் சொந்தச் செலவில் பல இடங்களுக்குச் சென்றார். லண்டனுக்கு சென்றும் தொழிலாள ருக்கு சாதக மாகப் பேசினார். 

அவருக்கு சாதி முறையில் நம்பிக்கை இருக்கவில்லை. உயர்வு - தாழ்வு மனப்பான்மையை கண்டித்தார். தீண்டா மையை அவர்தான் முதன் முதலில் வெறுத்தவர். மனு தருமத்தை யும், வருண தருமத்தையும் ஒழிக்க அவர் அரிய கருத்துக்களைக் கூறினார். அவர்களை அந்த நிலைக்கு கொண்டு வந்த அறி யாமை, கல்லாமை, மூடபழக்க வழக்கங்கள் சமுதாய கட்டுப்பாடு கள் அகற்ற பாடுபட்டார். அவர் களின் உரிமையை நிலை நாட்ட எத்தகையப் போராட்டத் தையும்- நடத்த அவர் ஆயத்தமாக இருந்தார். 1917 இல் 4 சென்னை எழும்பூர் ஏரிக்கரையில் தாழ்த்தப்பட்டவர்கள் கூட்டம் நடத்த விரும்பினர். உயர் ஜாதி யினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அது விளையாட்டு இடம், கூட்டம் அங்கு நடத்தக் கூடாது என்று பிடிவாதம் செய்தனர். ஆதிதிராவிடர்கள் Dr. நாயரைத் தேடி வந்து உதவியை நாடினர். உடனே அவர் விரைந்து சென்று கூட்டம் நடந்து முடியும்வரை அங்கேயே இருந்தார். அவர் கையில் ஒரு பெரிய தடி ஒன்று வைத்திருந்தது மேல்சாதியினருக்கு அவரின் முடிவையும் உறுதி யையும் தெளிவுபடுத்தியது. 

1912 ஆம் ஆண்டு அவர் சென்னை சட்டசபைக்குத் தேர்ந் தெடுக்கப்பட்டார். அந்த சபையில் அவர் எல்லா கூட்டங்களிலும் பேசி பல நல்ல கருத்துக்களை வெளியிட்டார். குறிப்பாக மருத்துவம், சுகாதாரம், தொழிலாளர் பற்றிய சட்டங்கள் மீது நடைபெற்ற விவாதங்களில் அவர் பங்கு கொண்டிருப்பது குறிப் பிடத்தக்கது. அவரின் பலசீரிய கருத்துக்கள் படிப்படியாக அமுலாக்கப்பட்டிருப்பதை நாம் இன்று உணர முடிகிறது. சென்னை மருத்துவர் பதிவு சட்டம் அவருடைய, பெரும் முயற்சி யால்தான் நிறைவேற்றப்பட்டது. 

1914ஆம் ஆண்டு முதல் உலகப் போர் மூண்டபோது 'பிரிட்டனை எதிர்த்த நாடுகள் ஜன நாயகத்தில் நம்பிக்கை யற்ற நாடுகள் ஆகும். அந்தப் போரில் பிரிட்டன் தோல்வியடைந்தால் அது அந்த நாட்டுக்கு மட்டுமல்ல. சன நாயகத்தில் நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவருக்கும் தோல்வியாகும். இந்த அரசி யல் உண்மையை உணர்ந்த நாயர் சன நாயகத்தைப் பாதுகாக்க எல்லோரும் பிரிட்டனை ஆதரித்து, தாராளமாக அனைத்து உதவிகளையும் செய்திட வேண்டும் என்று வலியுறுத்தினார். மக்கள் உண்மையை உணர்ந்து நல்லாதரவு தந்தனர். இங்கு உள்ள சிற்றரசர்கள்,  செல்வந்தர்கள் பேராதரவு தந்தனர். சென்னை மருத்துவ கப்பல் ஒன்றினையும் அளித்தது. அந்த கப்பலின் பெயர் 'S.S. சென்னை ” 

நமது Dr. நாயர் அந்தக் கப்பலின் டாக்டர்களில் ஒருவராக பணியாற்றினார். அக்கால முறைப்படி இவர் ஒரு லெப்டினன்டாக இருந்தார். சென்னை மருத்துவ கல்லூரி மாணவர்கள் அக்கப்பலில் பணிபுரிந்தனர். அவர்களின் அறிவு முதிர Dr. நாயர் மருத்துவப் பாடங்களை கப்பலிலேயே நடத்தினார். நம் Dr. நாயர் இறந்த பிறகு பிரிட்டிஷ் அரசு அவருக்கு 'கேய்சர் இந்த்' பதக்கத்தை வழங்கியது. 

என்றென்றும் சமூகத்தில் அரசு பதவிகள் தாங்கள் வகித்து வரும் இடத்தை, உரிமைபெற்ற இதர மக்கள் புகக் கூடாது என்ற நோக்கம் கொண்டவர்கள் Dr. நாயர் மீது வகுப்புவாதி என்று பழி சுமத்தி பேசினர். தனிப்பட்ட பிராமணர் எவர் மீதும் அவருக்கு எந்தவித வெறுப்பும் இருந்ததில்லை. அரசியலில் மிதவாத கொள் கையை பின் பற்றிய பல பிராமணர்கள் அவரை புகழ்ந்தும், பாராட்டியும், நல்லுறவு கொண்டு இருந்தனர். பிராமணர்கள் மற்றவர்மீது ஆதிக்கம் செலுத்துவதை அவர் கடுமையாக கண்டித்தார். சட்டமன்றங்களிலும், அரசு பணி யிலும் நாளுக்கு நாள் பார்ப்பனர் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அவர் சுட்டிக் காட்டியவர் Dr. நாயர். பிராமணரல்லா தாரின் பேராதரவு பெற்றே பார்ப்பனர்கள் பதவிகளை பிடிக் கின்றனர். அப்பதவிகளை அவர்கள் பெற கல்வி அறிவு பெற்றி ருப்பதால் அல்ல. 

சுய ஆட்சி என்பது வெறும் பெயரளவில் இல்லாது, மக்களிடத்தில் உண்மை அதிகாரம் இருக்க வேண்டும் என்பதே அவரின் கோட்பாடு. சாதி ஆதிக்கம் முதலில் ஒழிக்கப்பட வேண் டும் என்றார். மக்கள் அனைவரும் ஒன்றாக, 'நாம் எல்லோரும் சமம் என்று கூறிடும் கால கட்டத்திற்கு நல்ல பாதையை அமைத்து தந்தவர் Dr. நாயர். 

அத்தகைய சம நிலை உணர்வின் மூலமே உண்மையான ஜன நாயகத்திற்கும், சுய ஆட்சிக்கும் வழி பிறக்கும் என்றவர் Dr. நாயர். தென் இந்திய நல உரிமை சங்கத்திற்கு (நீதிக் கட்சி) அடிப்படை கொள்கையே சமூகம், அரசியல், பொருளா தாரம் ஆகியவற்றில் மக்கள் எல்லோருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதாகும். 

ஒரு சமயம் வடக்கேயிருந்து ஒரு காங்கிரசு தலைவரை அழைத்து வந்து இங்கு நாயருக்கு எதிராகப் பேச வைத்தனர். அவர் அவருக்கே உள்ள நாராச நடையில் பேசி விட்டு போய் விட்டார். Dr. நாயர் உடல் நலம் சரி இல்லாததால் உடனே கூட்டம் நடத்தி பதில் கூறமுடியவில்லை . அநாகரீக ஏடு ஒன்று "நாயர் எங்கே?” என்று கேள்வி கேட்டது. அதே சமயம் பார்ப்பனர்கள் கோயில்களில் தேங்காய்களை சிதறடித்து ஆண்டவனிடம் என்னவோ வேண்டினராம்! 

இதைக் கண்ட Dr. நாயர் கூட்டத்தை ஏற்பாடு செய்து வடநாட்டு காங்கிரஸ் தலைவருக்கு சுடச்சுட பதில் கூறினார். வகுப்புரிமை நீதியை கண்டிப்பது, சைத்தான் பாவத்தை கண்டிப்பதற்கு ஒப்பாகும் என்று விளக்கமளித்தார். 

அவர் காங்கிரசை விட்டு வெளியேறியதற்கான காரணத் தையே பலர் புரிந்து கொள்ளவில்லை. 1916 இல் டில்லிக்கு நடந்த தேர்தலில் Dr. நாயர் தோல்வியடைந்தார். அவரை தூண்டியவர்கள், நம்பவைத்தவர்கள் இரகசியமாக திட்ட மிட்டது தெரியவந்தது. அன்று முதல் சாதி ஆதிக்கத்தை கடுமையாக கண்டித்து தீவிரமாக அரசியல் பணி புரிந்தார். என்னதான் முயன்று சனநாயகம் உண்மையாக வளரப் பாடு பட்டாலும், அது இந்த நாட்டில் சாதி ஆதிக்கத்தையே வளர்க் கும் என்று அவர் கருதியதில் என்ன தவறு. எல்லோருடைய பாதுகாப்புக்கும், நலத்திற்கும் உள்ள ஒரே வழி வகுப்புவாரி பிரதி நிதுத்தவேமே என்று அவர் கருதியதில் என்ன தப்பு. இதே உண்மையைதானே அவருக்குப் பின்னரும் நாம் கண்டு வருகி றோம். 

கல்வியறிவிலும், அரசியலிலும் பின் தங்கிய மக்களின் உரிமைகளைப் பாதுகாத்திட ஒரு அமைப்பு தேவை என அவர் கருதி நீதிக்கட்சியை (S.I.L.F.) தோற்றுவித்ததில் என்ன தவறு இருக்கிறது? 

காங்கிரசு மகாசபையும் ஹோம் ரூல் இயக்கமும் மக்கள் வகுப்பு உரிமை நீதி பெறுவதை எதிர்த்த காரணத்தால் Dr. நாயர் அந்த இரண்டும் சாதி-ஆதிக்கத்தை வளர்ப்பன என்று தோலை உரித்து அடையாளம் காட்டினார். பிற சமூகத்தினர் எவ்வாறு ஏமாற்றப்படுகின்றனர் அவர்கள் பெற வேண்டிய நியாயமான பங்கை பறித்துக் கொண்டவர்கள் யார் என்பதை புள்ளி விவரங்களோடு மக்கள் முன் வைத்தார். அந்த உயரிய கருத்துக்களைச் சில ஏடுகள் அவரை கண்டித்து எழுதின. 

தென் இந்திய நல உரிமை சங்கம் (S.I.L.F.) துவக்கப் பட்டவுடன் மூன்று நாளேடுகள் துவங்கப்பட்டன. ஆங்கில நாளேட்டின் பெயர் “ஜஸ்டிஸ்”. ஜஸ்டிஸ் என்றால் ‘நீதி' என்று பொருள் . தமிழில் “ திராவிடன்' என்ற பெயரில் ஒரு நாளேடு. வெளியிட்டப்பட்டது. இங்குதான் சிந்திக்கும் ஆற்றல் கொண்ட வர்கள் உள்ளனர் என்பது தெளிவு. ஏன் அந்த பெயர் தேர்ந் தெடுக்க வேண்டும்? • திராவிடன்' என்பது ஒரு இனத்தின் அடிப்படையில் இடப்பட்ட பெயர்! தமிழ் நாளேட்டின் பெயர் 'தமிழன்' என்று வைத்திருந்தால் என்ன? தமிழன் என்றால் யார் தமிழன்? தமிழகத்தில் பிறந்து விட்டவன் தமிழன் ஆகிவிட முடி யுமா?போகட்டும்! யார் ஒருவன் தமிழ் பேசுகிறானோ அவனை யெல்லாம் தமிழன் என்று ஏற்றுக் கொள்ள முடியுமா? தமிழ் மொழி தன் தாய்மொழியாக இல்லாதவர்கள் தமிழ் மொழியை பேசவில்லையா? ஒரு மொழியை அந்த மொழியை தாய்மொழி யாக கொள்ளாதவர் 

கள் அவர்கள் தமிழ் நாட்டில் வந்திருப்பதால், அவன் அந்த நாட்டில் மொழியை படித்து புழங்கினால் தானே வாழ முடியும். ஒரு மனிதன் எத்தனையோ மொழிகளை கற்கலாம். அதற்கான காரணங்களும் உண்டு. ஒருவன் தமிழ் நாட்டில் இருக்கிறான். தமிழ் பேசுகிறான் என்பதால் அவன் தமிழன் ஆகிவிடமுடியாது. ஒருவன் இங்கே பிரஞ்சு பேசுகிறான் என்பதாலேயே அவன் பிரான்சு நாட்டுகாரன் என்று கூற முடியாது. அதனால் தான் நீதிக்கட்சிக்கு ' திராவிடன்' என்று பெயர் வைத்தது. 

இது இனத்தின் அடிப்படையில் வைக்கப்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழி களைப் பேசுவோர் எல்லாம் திராவிடர்களே. அந்த அடிப் படையில் - திராவிடமொழிகள் அல்லாத பிற மொழிகளை பேசு வோர் வேறு இனத்தவர்களே -- என்பதை அந்தக் காலத்தி லேயே, நீதிக்கட்சியின் தலைவர்கள் கண்டறிந்து தெளிவு கொண்டு தான் உறுதியாக முடிவு செய்தனர். 

நீதிக்கட்சியின் ஆங்கில நாளேடு 'ஜஸ்டிஸ்' அதனை துவக்குவதற்கு முன் நாட்டில் திராவிடர் அல்லாதார் ஆங்கில ஏடுகள் நடத்தி வந்தனர். அந்த ஏடுகள் நீதிக்கட்சியின் கொள்கைகளை எதிர்ப்பவர்களாக தங்களுக்கு பேரிழப்பு ஏற்படும், என்ற பீதியில் அநீதியாளர்களாக இருந்தனர். முறையாக நடு நிலை நின்று, எதையும் தாமாக எழுதக் கூடியவர்களாக இருந்திருந்தால் ‘ஜஸ்டிஸ்' நாளேடு துவங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என்றே கூற வேண்டும். 

காங்கிரஸ் மகாசபை உண்மையாகவே எல்லோருடைய நன்மைக்கும் பாடுபடவே துவக்கப்பட்டிருக்குமானால் ‘ஜஸ்டிஸ்' நாளேடு வெளிவருவதற்கு முன்னரே அதனை தடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் திட்டமிடவோ, சதி 

செய்யவோ எந்த நியாயமுமில்லை. நீதிக்கட்சி தலைவர் கருணாகரமேனன் என்ற முதியவரை, ஆங்கில அறிவு பெற்ற வரை, பத்திரிகை துறையில் நல்ல அனுபவம் பெற்றவரை ஆசிரியராக நியமித்தனர். இதையறிந்த பார்ப்பனத் தலைவர்கள் சதி திட்டம் தீட்டி, அவரை எப்படி தடுப்பது என்று கண்டறிந்து செய்ய வேண்டியதை செய்து அவரை வசப்படுத்திக் கொண் டனர். 'ஜஸ்டிஸ்' நாள் ஏடு வெளி வரப்போகிறது என்றதும் நாட்டு மக்கள் குதூகலித்தனர். செல்வச்சீமான்கள் உதவி புரிய முன்வந்தனர். ஆனால், கடைசி நேரத்தில்தான் ஆசிரியர் பொறுப்பை ஏற்க இயலாதென திரு. கருணாகரமேனன் கூறி விட்டார். 

அதை அறிந்து நம் Dr. நாயர் தலையில் கைவைத்துக் கொண்டு கதறி அழவில்லை. கண்ணீர் சிந்தவில்லை. எப் போதுமே சிரித்த முகத்துடன் அமைதி குலையாமல், புன்னகை பூத்த முகத்துடன் கவலைபட ஒன்றுமில்லை எதிர்பார்த்ததுதான் என்று கூறி, எல்லோருக்கும் ஊக்க மளித்தார். தானே ஆசிரியர் பொறுப்பை மட்டும் ஏற்றுக்கொண்டு, தன் வீட்டில் இருந்துக் கொண்டு, தொலைபேசி மூலம் தலையங்கத்தை தினமும் தந்திட் டார். 

Dr. நாயர் தான் மாணவனாக இருந்த காலத்திலேயே பத்திரிகை அனுபவம் பெற்றவர். பல நாடுகள் சுற்றுப் பயணம் செய்து, ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டவர். நல்ல பேச் சாளர் எழுத்தாளர் உலகமறிந்த ஆங்கில அறிஞர் அவருடைய கடுமையான பணிகள் பல. அவற்றோடு 'ஜஸ்டிஸ்' ஏட்டின் பொறுப்பை அவரே ஏற்றது மிக மிக பொருத்தம் என்றே கூற வேண்டும். காங்கிரஸ் பார்ப்பனர்களின் ஆங்கில ஏடுகள், குறிப் பாக ' இந்து' ஏடு திக்கு முக்காடும் அளவிற்கு, ‘ஜஸ்டிஸ்' ஏடு ஓகோ என்று விரைவாகவும், வளமாகவும், வளர்ந்தது. Dr. நாயரின் மறைவுக்குப் பிறகு திரு. T.A.V. நாதன், Dr. A. இராம சாமி முதலியார் போன்ற ஆங்கிலப் புலமை பெற்றவர்கள் 'ஜஸ்டிஸ்' ஏட்டின் ஆசிரியர் பொறுப்பை ஏற்று தென்னிந்திய நல உரிமை சங்கத்தின் பெயரையே 'ஜஸ்டிஸ்' கட்சி – நீதிக் கட்சி என்று மக்கள் மாற்றி அழைக்கும் நிலையை உண்டாக் கினர். சுருக்கமாக கூற வேண்டுமானால் S.I.L.F. என்றுதான் கட்சியின் பெயரை அழைத்திருக்க வேண்டும். ஜஸ்டிஸ் கட்சி என்று தீர்மானம் போட்டு மாற்றப்படவில்லை. ஒரு பத்திரிகை யின் பெயரே கட்சிக்கு பெயராயிற்று. இந்தப் பெரிய சாதனை கருணாகரமேனனால் ஆக்கித் தந்திருக்க முடியுமா? – நீதிக்கட்சி யினரின் தகுதி திறமையை உணராத காங்கிரஸ் பார்ப்பனர்கள் பெற்ற பெரியதோல்வி இதுவேயாகும். தாம் தான் படித்தவர் தாம் மட்டும்தான் பிரம்மாவின் முகத்தில் பிறந்தவர்கள், தாம் தான் இரு பிறவி பெற்றவர்கள், தமக்கு தான் அறிவு உண்டு தம்மை தவிர மற்றவர்கள் எதை சொன்னாலும் ஏற்று கடமை யாற்ற கூடியவர்கள் தானே என்று அகம்பாவ, ஆணவ கண் ணோட்டம் கொண்டவர்கனையெல்லாம். நாள்தோறும், பின்னி யெடுத்து, தோலை உரித்து, நிர்வாணமாக்கியவர் Dr. நாயர். 

இந்தியாவில் முதன் முதல் கேலிச்சித்திரங்களுடன் (Cartoon)  வெளிவந்த ஏடு ' 'ஜஸ்டிஸ்'' உலகத்திலேயே ஆண்டு தோறும் தலையங்கங்களின் தொகுப்புகளை நூலாக வெளி யிட்டதும் ‘ஜஸ்டிஸ்' ஏடுதான். இருந்து என்ன? அந்த நீதிக் கட்சியின் ஸ்தாபகர்கள் எல்லாம் சாகாவரம் பெற்றவர்களா? அவர்கள் எல்லாம் ஒருவர்பின் ஒருவராக மறைந்து விட்டனர். 

நம் Dr. நாயர். நீதிக்கட்சி ஆட்சியை கைப்பற்றுவதற்கு முன்பே 1919 இல் இறந்து விட்டார். நீதிக்கட்சி பதவிக்கு வந்த ஐந்தாவது ஆண்டே 1925 இல் தியாகராயர் மறைந்து விட்டார். அவர்களுக்குப் பிறகு 'ஜஸ்டிஸ்' ஏடு வளம் குன்றி சில ஆண்டுகளே நடத்த முடிந்தது ஆட்சி போனதும் வார ஏடாகி, வளங்குன்றி வாழ்விழந்து மறைந்து போய் விட்டது. இன்று இயக்கம் வளர்ந்திருக்கிறது. 

ஆங்கில நாளேடு? அல்லது ஏதாவது ஒரு வெளீயிடு என்று உண்டா? இல்லை. 

'ஜஸ்டிஸ்' மறைவிற்கு பிறகு Dr. A. கிருஷ்ணசாமி, Dr. A. இராமசாமி முதலியாரின் மகன் ‘லிபரேட்டர்' என்ற தலைப்பில் ஆங்கில நாளேட்டை துவக்கினார். அப்போது இயக்கத்தின் நிலையே வேறு. நீதிக்கட்சி ஆட்சியைவிட்டு பல ஆண்டுகளாகி விட்டன. அந்த நேரத்தில் பலர் பல இடங்களுக்கு சென்று விட்டனர். சொந்த இலாபம் தேடும் கூட்டம் எதிரிகளுக்கு பாதை பூஜை செய்யும் மார்க்கத்தை கையாண்டனர். 'லிபரேட் டர்' மறைந்தது. 'ஜஸ்டிஸ்' ‘லிபரேட்டர்' நாளேடுகளோடு கதை முடிந்துவிட்டது. அன்று இருந்த நீதிக்கட்சித் தலைவர்கள் பொருள் வசதி பெற்றவர்கள்! இன்றும் நிறைய பேர் இருந்தும் எவருக்கும் எண்ணம் இல்லை. ஏற்படவில்லை. சாதாரண வார ஏடுகள் கூட ஆங்கிலத்தில் ஏன், உண்மையை கூற வேண்டு மானால் அறிஞர் அண்ணா காலத்தில் இருந்த ஐம்பதிற்கும் மேற்பட்ட தமிழ் வார ஏடுகள்கூட இன்று இல்லை. இயக்கம் மட்டும் வளர்ந்திருக்கிறது? 

Dr. நாயர் சென்னை வேப்பேரியில் 'லேடி நப்பியா வில்லா' என்ற வீட்டில் வாழ்ந்து வந்தார். மழை பெய்தால் அவர் வீட்டை சுற்றி தண்ணீர் தேங்கிவிடும். Dr. நாயர் அதை பெரிதுபடுத்திக் கொள்ளவில்லை. தன் குறையை அவர் முக்கியமாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை . அவர் கவிதைகள் எழுதும் ஆற்றல் மிக்கவர் என்பதால் பல கவிதைகளைப் படைத்தார். உண்மை யான செய்திகளை கேலியாக எழுதும் ஆற்றல் மிக்க எழுத்தாளர் நம் Dr. நாயர். 

ஓய்வு காலத்தில் நீலகிரியில் உள்ள தேவ சோலையில் தங்கி, தேவை சோலை ஞானியின் சிந்தனைகள் " என்ற தலைப் பில் அரசியல் கருத்துக்களை வெளிட்டார். கட்டுரையின் போக்கும், நடையும் அதை எழுதுபவர் யார் என்று காட்டி விட்டது. 

அயர்லாந்து நாட்டுக்கென தனியாக பாராளுமன்றம் இருந்தது. 1800ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு அந்த பாராளு மன்றத்தை ஒற்றுமை” சட்டத்தின் மூலம் பறித்துக் கொண்டது. அதனால் அந்த அயர்லாந்து மக்கள் ‘ஹோம்ரூல்' என்ற பெயரில் கிளர்ச்சி செய்ய தொடங்கினர். இந்தகிளர்ச்சி அய்ரிஷ் மக்கள் தனி நாடு, சுதந்திர நாடு என்ற கோரிக்கையை அடிப்படை யாகக் கொண்டு எழவில்லை. இந்த உண்மையை அறியாத இந்திய மக்களிடையே திருமதி அன்னி பெசண்ட் அம்மையார் “ஹோம் ரூல்” இயக்கத்தை இங்கு துவக்கினார்கள். இந்தியா வின் நிலைவேறு. இந்தி யாவில் இதற்குமுன் ஒரு பாராளு மன்றம் இருந்தது இல்லை. அயர்லாந்து கோரிக்கை வேறு. இந்தியாவின் கோரிக்கை வேறு. இந்தியா பாராளுமன்றம் வேண்டவில்லை. காங்கிரஸ் பூர்ண சுயராச்சியம் கேட்டது. வெள்ளையன் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றது. வெள்ளையர் மீது திராவகம் வீசப்பட்டது. தந்தி கம்பிகள் அறுக்கப்பட்டது. தபால் ஆபீசுகள் கொளுத்தப்பட்ன இவை யெல்லாம். அகிம்சாமூர்த்திகளின் வன்முறையற்ற / காந்தி வழியில் நடந்த அறப்போர்கள் என கூறப்பட்டன.  

அதுமட்டுமல்ல, இந்தியாவின் பூர்வீகம் என்ன? எப்போதா வது முழுச்சுதந்திரம் பெற்று இந்தியா இருந்ததாக கூறமுடியுமா? தங்களை தாங்களே ஆண்டு கொண்டதாக நமக்கு வரலாறு இல்லை. நம்மை நாமே ஆண்டு கொள்ள நமக்கு அனுபவம் தேவை. அதற்கான பயிற்சியும் நாம் பெற்றாக வேண்டும். 

'ஹோம்ரூல்' நமக்கு வேண்டும் என்றால் அதற்கான பயிற்சியும், அனுபவமும் கொண்டவர்கள் நம்மிடையே இருக்க வேண்டும். நாம் ஒரே இனமாக இல்லை. நம்மிடையே ஒற்றுமை இல்லை. நம்மிடையே ஏராளமான மாற்றங்கள், முரண்பாடுகள் உள்ளன. நாம் 'ஹோம்ரூல்'கேட்பதே சரியுமல்ல, முறையுமல்ல. நியாயமுமல்ல, அயர்லாந்தில் வாழும் மக்கள் கத்தோலிக்க வகுப்பினர். அவர்கள் பிராடஸ்டண்ட் வகுப்பினர் மீது ஆதிக்கம் செலுத்த பிரிட்டிஷ் அரசு இணங்காது. அயர்லாந்தில் கிளர்ச்சி நடக்கலாம். ஆனால் ‘ஹோம் ரூல்' அவர்களுக்கே கிடைக்கப் போவதில்லை. இந்த நிலையில் இந்தியர்கள் 'ஹோம்ரூல்' கேட்பது சுவறில்லாமல் சித்திரம் எழுதும் கதைதான். 

- "ஹோம்ரூல்” கல்வித்துறையில் முன்னேறிய நாட்டில் ஓட்டு உரிமையை புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கொள்ள கூடிய மக்கள் சமூகத்தில்- அமூல் செய்யதுக் கொள்ள முடியும். இந்திய மக்களின் நிலை என்ன? நம் நாட்டில் பெருவாரியான மக்கள் நிலை என்ன? சிறுபான்மையாக உள்ள மக்கள், அதுவும் ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டும் கல்வி அறிவு பெற்றி ருப்பதால், ஆட்சிப் பொறுப்பு அந்த குறிப்பிட்ட சிறு சமூகத் திடமே ஒப்படைக்கப்படுமேயானால் எப்படி மக்களாட்சி என்று அதனை ஏற்றுக்கொள்ள முடியும்? அறியாமை நிறைந்த நாட்டுக்கு 'ஹோம் ரூல்” பயன் தரவே தராது. எனவே பூர்ண சுதந்திரம்-ஹோம் ரூல் எதுவும் அடையகூடிய நிலையில் மக்கள் இல்லை. மக்கள் ஆட்சி நடத்திட தேவையான பயிற்சியை மக்களுக்கு படிப்படியாக அளித்து எல்லா மக்களும் முழு பயிற்சி பெற்ற பிறகே, சுய ஆட்சியோ! 'ஹோம்ரூல்' பாராளுமன்ற சனநாயக அமைப்போ பெறுவதுதான் இத்திய மக்கள் பெற்றிட நினைப்பது பயன் உள்ளதாக இருக்கும். 

இப்படிப்பட்ட உயர்ந்த, சிறந்த அரசியல் கருத்துக்களை தெளிவாக எடுத்துக் கூறியவர் நம் நீதிக் கட்சித் தலைவர் Dr. நாயர் அவர்கள் தான்! 

அவர் மேடைகளில் நீண்ட நோம் தெளிவாகப்பேசி, அன்னிபெசண்ட் ஹோம்ரூல்' கிளர்ச்சியையும், காந்தி யாரின் ‘பூர்ணசுயராஜ்ய' கிளர்ச்சியையும் கண்டித்துப் பேசி னார். 100க்கு 3பேராக உள்ள ஒரு சமூகத்தின் வளர்ச்சியை 100க்கு 97 பேராக உள்ள மக்கள் பெற்றிடவில்லை என்பதை Dr. நாயரின் பேச்சுக்கள் தெளிவுபடுத்தின. அவருடைய  அறிவாற்றலை மறுத்துப் பேசக் கூடிய ஆற்றல் தேசிய வாதிகள் எவருக்கும் அந்த காலத்தில் இருக்கவில்லை. 

- ஆங்கிலயர் மீது தரக்குறைவான, தவறான, தகாத பழிகளை தான் படிக்காத மக்களிடையே பரப்பினர். உடனே நாடு விடுதலை பெற்றாக வேண்டும் என்று கோரினர். 

மக்களாட்சிக்கு மக்களை பக்குவப்படுத்த அவர்கள் முனையவில்லை. 100க்கு 3 பேராக உள்ளவர்கள் தான் மக்களா என்று கேட்டவர் Dr. நாயர். இந்திய சீர்திருத்த சட்டங்களை காங்கிரஸ் உறுதியாக திடமாக எதிர்த்து வந்தது. 1909 ஆம் ஆண்டிலும் 1919 ஆம் ஆண்டிலும் காங்கிரஸ் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த முன்வரவில்லை. இந்தியர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் தங்களை தாங்களே ஆண்டுக் கொள்ள இயலும் என்பதை உலகறிய செய்திருக்கலாம். இரட்டை (Dyarchy) ஆட்சியின் மூலம் அதை உறுதிப்படுத்தியிருக்க முடி யும். ஆனால் தேசியவாதிகள் அதை செய்திட தயக்கம் காட்டி னர். நீதிக்கட்சியினர் அப்படியல்ல, படிப்படியாக இந்தியர் களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, திறம்பட ஆண்டு, புகழ்பெற்றன. 

வெள்ளையன் என்றும் இந்தியனை அடிமையாக வைத்திருக்க நினைக்கவே இல்லை. வெள்ளையர் ஆட்சி பற்றி திருமதி பெசண்ட் அம்மையாருக்கே அது தெரியும். ஒரு கூட்டத்தில் பேசும்போது இத்தியா ஒரு தேசமல்ல, இந்தியா வில் பல தேசிய இனங்கள் உள்ளன. ஒவ்வொரு இனமும் ஒரு நாட்டை பெற்றிருப்பது முறையாகும். இந்து தேசம் என்றால் முஸ்லீம் தேசம் வேண்டும். பூகோள கட்டுப்பாட்டு விதி அது என்று 1905ஆம் ஆண்டே பெசண்ட் அம்மையார் கூறினார்கள். -1911ஆம் ஆண்டு நிகழ்த்திய பேச்சில் ஆங்கிலேயர் ஆட்சி நேர்மை மிக்கதாகும். இந்திய குடிமகன் முதலில் எழவும், நடக்க வும் பழகிக் கொள்ள வேண்டும். அதற்கு பிறகுதான் ஆட்சி செலுத்தவும் அதிகாரத்தை செலுத்தவும் முடியும்” இது அன்னி பெசண்ட் அம்மையார் உள்ளத் தூய்மையோடு பேசிய பேச்சா கும். 

1911 ஆம் ஆண்டி அந்த அம்மையார், பேசிய பேச்சை மக்களுக்கு நினைவு படுத்தியவர் நம் Dr. நாயர். 

அரசியலில் சீர்திருத்தமோ மாற்றமோ கோருவதினால், ஏற்படக் கூடிய மாற்றத்தை திறமையுடன் நிர்வாகிக்கக்கூடிய தகுதிவேண்டும். நிர்வாகத்திறமையை விலை கொடுத்து வாங்க முடியாது. பயின்று அனுபவத்தின் மூலமே பெற்றிட முடியும். அதைப்பற்றிய நிலையை படிப்படியாகத்தான் அடைய முடியும். அவசரப்பட்டு இந்திய அரசியலில் சீர்திருத் தங்கள் செய்திடக் கூடாது. மக்களின் உண்மையான குறைபாடுகளை கண்டறிந்து அந்த குறைகளை போக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஸ்விட்சர்லாந்து நாட்டை ஆராய்ந்தால் உண்மைகள் புலனாகும். சீர்திருத் தங்கள் பேச்சோடு முடிவு பெறுவதல்ல. சீர்திருத்தங்கள் உடன் அமுல்படுத்த போதிய ஆட்களும், அதற்கு தேவையான பக்குவமும் பெற்றவர்கள் நிறைய ஆயத்த மாக இருக்க வேண்டும். தீவிரவாதம் வெற்றி பெறவேண்டு மானால் அதற்கு போதிய ஆட்கள் மக்களிடையே இருக்க வேண்டும் மிதவாதத்திற்கே மக்களை ஆயத்தமாக்க முடியாத நாட்டில் தீவிர சீர்திருத்தங்களைப் பற்றி பேசுவதில் பயன் இல்லை. 

வெள்ளையர் ஆட்சியில் மட்டுமே சுதந்திரம் பெருமளவு இருக்கிறது. செர்மனி. பிரான்சு, இதாலி நாடுகளின் நிலைமை களை கருத்தில் கொண்டு நினைத்துப்பாருங்கள் . இங்கிலாந்து நாட்டில் மட்டுமே இரத்தம் சிந்தாமல், அமைதியான முறையில் அதிகாரம் எல்லோருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த அதிகாரம் இங்கு ஒரு வகுப்பாரிடம் மட்டுமே ஒப்படைக்கப்படு மானால், அது மற்றவர்களை ஒடுக்கி அராஜகம் மேலோங்கவே செய்யும். அதிகாரங்களை பங்கிட்டு கொள்வது எளிதான காரியமல்ல. அதிலும் முக்கிய அதிகாரங்களை வழங்குவதற்கு எளிதில் யாரும் முடிவு கட்ட மாட்டார்கள். மத்திய அரசு மாநிலங்களுக்கு அதிகாரங்களை வழங்குவதோ, மாநில அரசு கீழ் மட்டத்தில் உள்ள மாவட்டங்களுக்கு அதிகாரங்களை வழங்குவதோ சிக்கலான பிரச்சினைகளை உருவாக்காது; நிகழாது. அதனால் எந்த அதிகாரமானாலும், அதை ஏற்று நடத்தக்கூடிய தகுதி மிக்கவர்கள் இருப்பதைக் கொண்டே செய்திட இயலும். சாதாரண உள்ளாட்சி மன்றங்களுக்குகூட வரிவிதிப்பு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும், வருமானத் திற்கு ஏற்றபடியே நல்ல காரியங்கள் மக்களுக்கு செய்திட முடியும் , அமெரிக்க நாட்டில் மத்திய மாநில அரசுகள் 49 இருக் கின்றன. செர்மனியில் 30, கனடாவில் 9 ஆஸ்டிரேலியாவில் 7. தென் ஆப்ரிகாவில் 5.  

அப்போது இந்தியாவில் உள்ள நிலை என்ன? ஏற்கனவே மத்திய மாநில அரசுகள் உள்ளன. ஏற்கனவே உள்ள சட்ட மன்ற, உள்ளாட்சித் துறைகளை வளர்த்து மேலும் பலருக்கு நிர்வாகத் திறமை பெற்றிட முதலில் வழிகாண வேண்டும். அது தான் எல்லா வகுப்பினருக்கும் வாய்ப்பு தரக்கூடும். அப்போது தான் மக்கள் எல்லோரும், எந்த வகுப்பை சேர்ந்தவராயினும் அரசு ஆட்சியில் பக்குவம் பெற துணைபுரியும். ஏதோ ஒரு சிலர் - அதுவும் ஒரே வகுப்பை சார்ந்தவர் இருக்கிறார்கள் என்று உடனே சுய ஆட்சி வேண்டும் என்பது தோல்விகளுக்கும், தொல்லைகளுக்கும் மட்டுமே வழிகோலும். 

இந்திய அரசியல் சீர்திருத்தம் பற்றி Dr. நாயர் வெளிப் படுத்திய கருத்துக்கள் ஏராளம். அவைகளை எல்லாம் தொகுத்து வெளியிடுவதென்பது தேவையான - பயன் தரக் கூடிய - நல்ல காரியம் ஆகும். அதுவும் இன்றைய அரசியலுக்கு அப்பாற் பட்டு, பொது அமைப்புகள் நிதிவசதி பெற்று செய்திட்டால், Dr. நாயரின் கருத்துக்கள் என்றும், எங்கும் எல்லோருக்கும் பயன் படக்கூடிய இலக்கியமாகும். இலக்கிய சிறப்பு பெற்றவர் நம் Dr. நாயர். அப்படிப்பட்ட சிறப்புகள் ஆற்றல்கள் மிக்க நாயர் தோற்றுவித்த நீதிக்கட்சி இன்று இந்திய அரசியல் களத்தி லிருந்தே மறைந்துவிட்டது. ஆனால் Dr. நாயர் இந்திய அரசியல் வயலில் விதைத்த விதைகள், என்றும் வளர்ந்துக்கொண்டே இருக்கும். நீதிக்கட்சியின் கொள்கை, அது மேற்கொண்ட இலட்சியங்களுக்கு அழிவென்பதே கிடையாது, 

அவர் புதியதோர் உலகை படைக்கப் பிறந்தவர். 1916 இல் நீதிக்கட்சியை படைத்தார். 1920இல் அந்த கட்சி பதவி ஏற்றது. ஆனால் அவர் 1919 இல் மறைந்தார். நீதிக் கட்சியை அன்றும் பலர் பழித்தனர் - இன்றும் பழிக்கின்றனர் அவர் இறந்தபோது சேலத்தில் இரங்கல் கூட்டத்தில் ராஜாஜி பேசினார். 

“பிராமணரல்லாதர் இயக்க நோக்கங்கள் பலவற்றில் எனக்கு அனுதாபம் உண்டு'' என்று ராஜாஜி பேசினார். அதுவும் 1919 இல் நம் Dr. நாயர் மறைந்த பிறகு. 'சமூக அமைப்பில் பல அநீதிகள் இருந்தன. அவைகளை ஒழிக்க அரசியல் தலைவர்கள் முயலவில்லை குறைபட்டோரை அலட்சியம் செய்தனர், அரசி யல் பலமின்றி சமூக குறைகளை ஒழிக்கமுடியாது எனக் கண்ட Dr. T, M. நாயர் பிராமணரல்லாத இயக்கத்தைதோற்றுவித்தார். ஆகவே, இயக்கத்தினால், அனேக நன்மைகள் உண்டாகி இருப் பதை நான் ஒப்புக் கொள்கிறேன். இவ்வியக்கத்தினால் முன் னைய விஷயங்களை ஆராய்ந்து பார்க்காதவர்கள், இப்போது பார்க்கிறார்கள், முன் விளங்காமல் இருந்த விஷயங்கள் இப் போது தெளிவாக விளங்குகின்றன. எவரையும் வெறுக்குமாறு இந்த இயக்கம் கூறவில்லை.'' 

ராஜாஜி தந்தநற்சான்று இது. அதுவும் 1919ஆம் ஆண்டி லேயே. இன்று நீதிக்கட்சியின் வாரிசுகளாக எத்தனையோ கட்சிகள் உள்ளன. அரசியல் பணிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அவற்றினுடே நாயர் தெரிகிறார். வாழ்க Dr, T.M. நாயர். 

நீதிக்கட்சி காலத்திலிருந்தே திராவிட இயக்கத்திற்கு அறிமுகமான, புகழ் பெற்ற எழுத்தாளர் திரு. A. S. வேணு. 

அறிஞர் அண்ணா அவர்களுடன் மிகவும் நெருக்கமாக பழகியவர். தமிழிலும் எழுத்துப் பணியில் ஈடுபட்டு பல நல்ல படைப்புகளை இயக்கத்திற்கு அளித்தவர்.  

- Dr. நாவலர் 

திராவிட இயக்கத்தின் தலை சிறந்த ஆங்கில, தமிழ் இருமொழி புலமை பெற்ற எழுத்தாளர்களில் அருமை நண்பர் A.S. வேணு அவர்கள் ஒரு முன்னணி எழுத்தாளர் ஆவார். 

பலவெளிநாட்டு அறிஞர்கள் நீதிகட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் பற்றி டாக்டர் பட்டப் படிப்புக்கான ஆய்வுகளுக்கு அறிஞர் திரு. A.S. வேணு அவர்கள் ஏற்கனவே எழுதிய நூல்கள் - அதில் காணப்படும் குறிப்புகள் ஆகியவற்றை மேற் கோள்களாக பயன்படுத்துகின்றனர். அவருடைய சிறப்புக் கும் ஆற்றலுக்கும் இதுவே நல்ல சான்றாகும். 

- கி. வீரமணி 

தி. க. தலைவர். தந்தை பெரியார் அவர்களிடமும் பேரறிஞர் அண்ணா அவர்களிடமும் A.S. வேணு கொண்ட பற்றும் மதிப்பும் நிலையானது. 

அவரது பேச்சும், எழுத்தும் அந்த கொள்கைகளை பரப்புவ தாகவே அமைந்தவை. 

மாணவப் பருவம் முதலாகவே நீதிக்கட்சி குறிக்கோளில் பற்றுக்கொண்டு - திராவிட இயக்கத்தில் தன்னை முழு அளவில் ஒப்படைத்துக்கொண்டவர். 

- பேராசிரியர் அன்பழகன் 

ஜஸ்டிஸ் கட்சி பவளவிழா வெளியீடுகள் - 











A.S. வேணு எழுதிய நூல்கள் - 

1. இலெனினும் அண்ணாவும் : 15.00

 2. மணிவிழாக் கண்ட திராவிடர் இயக்கம் : 5.00

 3. டாக்டர். C. நடேசனார் : 5.00

 4. டாக்டர். T.M. நாயர்: 5.00

 5. சர். P. தியாகராயர் : 5.00

 6. சர். P.T, இராசன் : 5.00

 7. சிந்தனைச் சிற்பி M. சிங்காரவேலர் : 5.00 

8. அஞ்சாநெஞ்சன் அழகிரி -: 5.00 

9. டாக்டர். P. வரதராஜுலு நாயுடு : 5.00


 வியாபாரிகளுக்கு கழிவு 25% விவரங்களுக்கு :  

ஜஸ்டிஸ் பப்ளிகேஷன்ஸ் 'ஜஸ்டிஸ் இல்லம்” 2, நாகல் மேடு, வேகவதி நிதி சாலை, (பச்சையப்பன் பெண்கள் கல்லூரி அருகில்) சின்ன காஞ்சிபுரம் -3