Tuesday, February 17, 2015

நல்லோர் நடேச முதலியார் வாழ்க்கை வரலாறு திவான் பகதூர் டாக்டர் சி.நடேச முதலியார்

நல்லோர் நடேச முதலியார் வாழ்க்கை வரலாறு
திவான் பகதூர் டாக்டர் சி.நடேச முதலியார்
 (1875- 18.2.1937)
பொன்னேரியைச் சார்ந்த சின்னக்காவனம் என்னும் ஊர் இவருடைய மூதாதையர்கள் ஊராகும்.
இராவ் சாகிப் நல். முருகேச முதலியார்
(தமிழ்நாடு அரசு முன்னாள் செயலர், முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களின் ஆலோசகர் )
1984 இல் எழுதியது
சமீப காலத் தமிழக வரலாறு ஒருவாற்றாலும் சீராக எழுதப்படவில்லை. தென்னிந்தியாவுக்கே மொழி, சமுதாயம், பண்பாடு, அரசியல் முதலிய வளர்ச்சிக்குத் தமிழகம் தாயகமாக இருந்துள்ளது. சுமார் நூறாண்டுக்கால அளவில், தமிழ்நாட்டின் வரலாறு தேசிய சரிதத்துடன் பின்னிக் கிடக்கிறது. பல சாதனைகளும், சில இடர்பாடுகளும் கூடிய கால அளவை இது.
தமிழ் வாழ வேண்டுமெனில், மற்றையவர் தமிழ்நாட்டின் மேன்மையை அறிய வேண்டுமெனில், இளைய சமுதாயம் தெளிவான சரித்திர உண்மைகளை ஆய்ந்து பார்த்தல் இன்றியமையாதது. தமிழகம் வாழப் பாடுபட்ட பல பெரியோர்களின் வரலாறுகள் கூட மறைந்தும் மழுங்கியும் கிடக்கின்றது. இந்தக் குறைகள் தீர இப்போது நல்ல தருணமாகக் காணப்படுகிறது.
தமிழ்ப் பல்கலைக் கழகங்கள், உலகத் தமிழ்ச்சங்கம் முதலியன தோன்றும் இந்த நேரத்தில், நூல்கள் பல எழுதப்பட்டதால் நலமுடைந்து, கற்றவர்களும் மற்றவர்களும் முன்னோக்கிப் பார்த்தால் மட்டுமின்றி, நிகழ் காலத்தையும், சென்ற காலத்தையும் நோக்கி, வரலாற்றுக் காரண காரியங்களின் தொடர்பை அறிந்து கூறுவதும் கடனாகும். அவ்வக் காலங்களில் வாழ்ந்த சான்றோர்களின் வாழ்க்கையையும் கொள்கைகளையும் அறிந்து கொள்வது பயன்படும் பயிற்சியாகும்.
பிற்பட்டோர் கல்வி அபிவிருத்திக்கும், முதியோர் கல்விக்கும் திராவிடர் இல்லம் (ம்rழிஸஷ்dழிஐ க்ஷிலிதுe) என்ற மாணவர் விடுதியையும், சென்னை ஐக்கிய சங்கம் (னிழிdrழிவி Uஐஷ்மிed ஸிeழிஸுற்e) என்கிற ஸ்தாபனத்தையும் டாக்டர் நடேசனார் சுயேச்சையாக, தன்னலமின்றி 1914 ஆம் ஆண்டில் துவக்கிப் பரிபாலித்து வந்தார். இவ்விரண்டும் பொது ஜன நலனுக்கு வித்தாக அமைந்தன.
கவி ரவீந்திரநாத தாகூர் சாந்தி நிகேதனில் பல நாட்டுப் பண்பாளர்களையும் சேர்த்து ஒரு கல்விப் பண்ணையை ஏற்படுத்தியது போல், திராவிட இல்லம் பயன்பட்டது.
தென்னிந்திய மாணவர்கள் பலர் அங்குத் தங்கித் தங்கள் படிப்புகளைக் கவனித்துப் கொள்ளவும், பண்பாடு, ஒழுக்கம், நேர்மை இவைகளை நல்ல சூழ்நிலையில் வளரச் செய்யவும் இது பயன்பட்டது.
இந்த இல்லத்தில் பல்வேறு வருணத்தவரும் கூடிப் பழகினார்கள். பிரதி வாரமும் இளைஞர்கட்கு கல்விமான்களைக் கொண்டு அறவுரையும், அறவுரையும் நல்க நடேசனார் ஏற்பாடு செய்தார். இதனால், குலபதி சர். ஆர். வெங்கடரத்தினம் போன்றவர்களின் தொடர்பு இளைஞர்கட்குக் கிடைத்தது.
டாக்டர் நடேசனாரின் தனிப்பட்ட இந்த முயற்சியைப் பாராட்டியவர்கள் பலர்.
இந்த இல்லம், அறிவாளிகள் மிகுந்த சென்னைத் திருவல்லிக்கேணியில், டாக்டர் நடேசனாரின் வீட்டின் அருகாமையிலேயே நடத்தப் பெற்றது. சமுதாயத்தில் பெரும்பாலோர் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாகத் தங்கியதைத் தீர்க்கும் நோக்கம் ஒன்றன்றி வேறு நோக்கம் இதற்கு இல்லை என்பதை யாவரும் உணர்ந்தார்கள். வித்திட்டவரின் சான்றான்மையைப் போற்றினார்கள்.
நடேசனார் நல்ல வேளாளர் பழங்குடியில் பிறந்து வளர்ந்து, பி.. படிப்புப் பூர்த்தியானவுடன், மேற்கூறிய மகரி´ போல் வெள்ளை உடை தரித்த ஆர். வெங்கட்ரத்தினம் நாயுடு தலைமையில் நடந்த வந்த பித்தாபுரம் மாகராஜா கல்லூரியில், உடல்கூறு (Physiology) விரிவுரையாளராகச் சிறிது காலம் பணியாற்றினார். பின் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து, மருத்துவப் பட்டம் பெற்றுப் பணி புரிந்தார். பொதுப் பணிகளிலும் ஈடுபட்டார்.
திராவிட இல்லம் வளர்ச்சியில் சர் பிட்டி தியாகராயச் செட்டியார், பனகல் அரசர் போன்ற மேன்மக்களும் ஈடுபட்டார்கள். முதலாண்டுப் பூர்த்தி விழாவுக்குச் சென்னை கவர்னரே விஜயம் செய்தார்.
டாக்டர் நடேசனாரை ஊக்குவித்தவர்கள் அரசியல்வாதிகள் அல்லர். தமிழ் எழுத்து ஆராய்ச்சி வல்லுநர் (இன்ஜினியர்) பி.வி.மாணிக்க நாயக்கர், தத்துவ மேதையும் சீர்திருத்தவாதியுமான டி.கோபாலச் செட்டியார், என்.வி. நடராஜன், வழக்கறிஞர்கள் எதிராஜ் முதலியார், சிவப்பிரகாச முதலியார், மதன கோபால நாயுடு முதலியவர்களே ஆவர்.
இந்த இல்லத்தில் தங்கிப் படித்தவர்களில் பலர் நீதிபதிகளாகவும், கவர்னர் சபை மெம்மபர்களாகவும் கூடப் பிற்காலத்தில் ஆனார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்ற எல்லாப் பகுதிகளையும் குறிக்கும் ஒரே பண்பாட்டுச் சொல் திராவிடம் என்பது. பழைய நூல்களும் தென்னாட்டைத் திராவிடம் என்றே வழங்கியது. சிலர், நாம் திராவிடர் இல்லையயன்றால் இவ்வுண்மை பழுது படாது. இந்த இல்லத்தில் படித்தவர்கள் யாவரும் நல்ல யோக்கியதையும் புகழும் பெற்று விளங்கினார்கள்.
நடேசனார், தமது மருத்துவத் தொழிலில் ஜாதி மத வித்தியாசமின்றி, எல்லோருக்கும் சேவை செய்து வந்தார். பலரும் மருந்துக்கும் சர்டிபிகேட்டுகட்கும் பணம் கேட்கப்படாமலே பெற்றுச் செல்வார்கள். ஆதாயத்திற்கோ, அரசியல் ஆதரவிற்கோ நடேசனார் அவ்வாறு செய்யவில்லை.
டாக்டர் ஆல்பர்ட் சுவைட்சர் ஆப்பிரிகாவில் அந்நியர் ஆதிக்கத்தால் படிப்பிலும் சுகாதாரத்திலும் பிற்போக்கடைந்து கிடந்த அந்நாட்டு ஜனங்களுக்கு மருத்துவப் பணி பல்லாண்டுக்காலம் புரிந்தார். அதுபோலவே, தயை என்பதே பரம தர்மம் என்று பின்பற்றி, நடேசனார் உழைத்துத் தம் சொத்துக்களையும் நாளடைவில் இழந்தார்.
சொந்த சேவை மட்டுமின்றி, சென்னை மாநகர சபையில் அங்கத்தினராகி, முக்கியமாகச் சுகாதாரம், கல்வி, தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம் இவைகட்கு இடைவிடாது உழைத்தார்.
அக்காலத்தில் பெரும்பாலோர் கல்லூரிகளிலும், உத்தியோகங்களிலும், சட்டமன்றத்திலும் ஜனத்தொகைக்கேற்ற இடம் பெறாது, மிகத் தாழ்ந்த நிலையில் இருந்தனர். செல்வாக்கும் சிறப்புமின்றிப் பாதிக்கப்பட்டார்கள். ஒரு சமூகத்தினர் மட்டும் கல்வி முன்னேற்றத்தாலும் குடும்ப ஆதரவினாலும் பல முக்கிய ஸ்தானங்களில் இருந்து வந்தார்கள். பிற்பட்டவர்கள் தலையயடுக்க விரும்பி காலத்தில், முன்னேறிவிட்டவர்கள் இடம் தருவதற்கு முன் வரவில்லை. தகுதி மேன்மையடைந்தவர்கள் மேல் கொண்ட துவே­த்தால், அவர்கள் முன்னேறிய வர்களை வெறுக்கிறார்கள் என்றார்கள். இது உண்மையல்ல.
சுமார் 1896 ஆம் ஆண்டில் ரெவின்யூ போர்டார் எல்லாச் சமூகத்தாரும் அரசாங்க உத்தியோகங்களில் ஏறக்குறைய நியாயமான பங்கு கொடுக்க வேண்டும் என்று ஏற்படுத்திய உத்தரவை, மேலதிகாரிகள்தகுதிஎன்ற பேரால் அமுல் செய்யவில்லை.
ஜனத்தொகைக் கணக்குகளிலும் இந்த உண்மை விளங்கியது.
முதல் முதலாக, குத்துப் புள்ளிகளுடன் சர். அலெக்சாண்டர் கார்டியு என்ற கவர்கனர் சபை மெம்பர், பிரிட்டிஷ் அரசாங்கம் அமைத்த பப்ளிக் சர்விஸ் கமி­னுக்குச் சமர்பித்த சாட்சியத்தில் இதை வெளியிட்டார். கல்வி உத்தியோகம் மட்டுமின்றி, கவர்னர் சபையிலும் மிண்டோ மார்லி சீர்திருத்தம் வந்த பிறகும், ஒரு சார்பாரே ஏறக்குறைய எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள் என்று காணப்பட்டது.
இது முன்னேறியவர் குற்றமில்லாமல் இருக்கலாம். ஆனால் சம நீதிக்கும் பிற்பட்டோர் முன்னடி எடுத்து வைக்கவும் வில்லங்கமாகவே இருந்தது என்பதைப் பலர் உணரவில்லை.
ஆங்கில அதிகாரிகளிலும்கூடச் சிலர், பிற்பட்டவர்களை அதிகமாக உத்தியோகத்தில் சேர்த்தால் நிர்வாகத் தரம் குறைந்து விடுமென்ற கருத்துக் கொண்டிருந்தனர்.
பல்வேறு துறைகளில் ஐரோப்பியர் பெரும்பான்மையைக் குறைத்து இந்திய மயம் (Indianisation) ஆக்க வேண்டுமென்ற வேண்டுகோளுக்கும் இம்மாதிரி எதிர்ப்பு இருந்தது அறிந்ததே. பிற்பட்டோர்களில் சிலர் வெகு உயர்ந்த தகுதிகளில் இருந்தாலும், மேல்தரக் கல்விச் சாலைகளிலும் அலுவலகங்களிலும் ஏகபோகம் அனுபவித்து வநதவர்கள். இவர்கட்கு இடம் கொடுப்பதற்குத் தயங்கினர்.
கல்வி, உத்தியோகம், சட்டமன்றத்தில் இடம் இவைகளில் வகுப்புவாரி நீதி நல்க வேண்டுமென்று முதல் முதலாகக் குரல் எழுப்பி, ஆக்க வேலைகளில் தலைப்பட்டவர் டாக்டர் நடேசனார் என்பது வரலாற்று உண்மை.
இந்த நீதியை வைசிராய் சபை முதலிய பெரிய இடங்களில் கேட்பதைவிட, கல்வி முதலிய ஆதாரத் துறைகளில் பெற்ற முன்னேற்றம் அடைதலே உறுதியளிக்க வல்லது என்பதையும் நடேசனார் அறிந்தார்.
பின்னர் அன்னிபெசண்டு அம்மையார் ஆரம்பித்த சுய ஆட்சி (Home Rule )கிளர்ச்சியில், கல்வியிலும், பதவியிலும் ஆதரவிலும் ஏற்கனவே முன்னேற்றம் அடைந்தவர்கள் துரிதமாக ஈடுபடத் தலைப்பட்டார்கள்.
இதனால் பின் அடைந்தவர்கள் பிற்போக்கிலேயே இருந்து அவதிப்படுவார்கள் என்ற அச்சம் பல தேசியவாதிகளிடமும் உண்டாயிற்று.
இதன் விளைவாகத் தென்னிந்திய நல உரிமைச் சங்கம்(South Indian Liberal Federation)  என்ற ஒரு அமைப்பு உண்டாயிற்று. இது 1916 ஆம் ஆண்டில் சர்.பிட்டி. தியாகராயச் செட்டியார் விடுத்த அறிக்கையில் (Manifesto) விளக்கப்பட்டது.
அப்போது மகாத்மா காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் (1921) இல்லை.
பிரிட்டிஷ் அரசாங்கம் கொடுத்த சில சீர்திருத்தங்களின் கீழ் (1918 சட்டம்) முதல் முதல் 1920 இல் சட்டசபைத் தேர்தல்கள் நடந்தன. இதில் நீதிக்கட்சி என்று பிறரால் கொடுக்கப்பட்ட பெயரால் தேர்தலில் வெற்றிப் பெற்று அக்கட்சி மந்திரிசபையும் அமைத்தது. நடேசனார் அந்தத் தேர்தலில் அமோகமான வெற்றிப் பெற்றார். பதவி வேட்கையற்றவராகையாலே, அமைச்சரவையின் அவர் இடம் நாடவில்லை.
கட்சியும் அவரது தியாகத்தை உணரவில்லை.
முதல் தேர்தலில் நடேசனார் எல்லாரையும் விட அதிக வாக்குகள் பெற்றது கட்சியினரையும் தலைவர்களையும் பிரமிக்கச் செய்தது. எல்லா ஜாதியினரும் நடேசனாருக்கு பெருத்த ஆதரவு தந்தனர். ஒரு இனத்தார் வெறுப்பையும் சிறிதளவும் சம்பாதித்துக் கொள்ளாத சமரச மக்கள் பிரதிநிதியாக அவர் விளங்கினார்.
எனவே, அவரது வகுப்புவாதத்தை யாரும் எதிர்க்கவில்லை. அவரது வாதங்களை யாவரும் மதித்தனர்.
கல்வி நிலையங்களிலும், பொது அலுவலகங்களிலும் தகுதி பெற்ற திராவிடர்கட்கு நியாயமான இடங்களை ஒதுக்க வேண்டுமென்று நடேசனார் வற்புறுத்தினார்.
அந்நிய அரசாங்கம் தந்த சிற்சில சலுகைகளைக் கூட அதிகார வர்க்கத்தினர் பின் தங்கியவர்கட்குக் கொடுக்காததைக் கண்டித்தார்.
அதற்குப் புள்ளி விவரங்கள் தந்தார்.
இலாகா ஊழியர்கள தேர்தெடுக்கும் வாரியத்தை நீக்கி, அரசாங்கத்திற்கு உட்படாத பப்ளிக் சர்வீசு கமி­னை நியமிக்க வேண்டுமென்று, சட்டமன்றத்தில் பல சமயங்களில் வாதாடினார்.
ஆதி திராவிடர்கள் நலத்திற்கு நடேசனாரைவிடத் தீவிரமாகப் பாடுபட்டவர்கள் வேறு எவரும் இல்லை. மகாத்மா காந்தியடிகள் அரிஜன நலத்துக்கு இயக்கம் தோற்றுவித்ததற்கு முன்பே நடேசனார் அந்த இனத்தவர்பால் அக்கரை காட்டினார்.
1918 இல் எழும்பூர் ஸ்பர்டாங்க் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், ஆதி திராவிடர்களின் உரிமை, தீண்டாமை ஒழித்தல், ஆலயப் பிரவேசம் முதலிய உரிமைகட்கு தீவிரமாகப் பேசினார்.
திவான்பகதூர் ஆர். சீனிவாசன், திரு.எம்.சி. இராஜா போன்ற ஆதிதிராவிடத் தலைவர்கள் நடேசனாரைத் தம் இனக் காப்பாளராகக் கருதினார்கள். அவர் மருத்துவக் கூடத்திலும், அரிஜன இளைஞர்களுக்கு வேலை தந்தும், வேறு உத்தியோகங்கட்கு சிபார்சு செய்தும் ஆதரித்து வந்தார். சுவாமி சஹஜானந்தா என்று பின்னாளில் அழைக்கப்பெற்ற ஆதி திராவிடப் பெரியார் நடேசனாரிடம் பற்றும் தோழமையும் கொண்டிருந்தார்.
ஒரு சமயம் சிலர் நடேசனாரை ஏசிய போது, தானும் அவர் கட்சியும் ஸ்ரீஇராமானுஜர் ஆயிரம் ஆண்டுகட்கு முன் செய்ய முயன்றதையே செய்ய முன்வந்துள்ளதாக அவர் வீறு பேசினார்.
சாதி வேறுபாடற்ற ஆன்மீக நேய ஒருமைப்பாடுள்ள சமுதாயத்தைக் காண்பதுவே மகத்தான சேவையாகத் தாம் கொண்டார்.
வகுப்பு வாதத்தால் இந்திய சுதந்திரம் தடைப்படும் என்று ஓலமிட்டவர்களை நோக்கி, மகாத்மா காந்தி ஒரு கோடி ரூபாய் சேர்த்து ஓராண்டில் சுயராஜ்யம் வாங்கித் தர முயன்றார். ஆனால், நான் நாளைக்கே சுதந்தரம் வர விரும்புவேன் என்றும், ஆனால், அந்தச் சுதந்திரத்தில் யாவருக்கும் சமதர்மம் இருக்க வேண்டுமென்றும் கூறினார்.
புது அரசியலில் வாக்குரிமை, சொத்து, படிப்பு, வரி செலுத்தும் தகுதி யுள்ளவர்கட்கே கொடுக்க வேண்டுமென்று கூறியவர்கட்கு, ஏழைக் குடிகள் வரி செலுத்தாமலிருக்கலாம். ஆனால், அவர்களது வியர்வை உழைப்பால் மற்றவர்கட்குச் செல்வத்தை உண்டு பண்ணுகிறார்கள் என்றும், அவர்கள் வரி செலுத்துதல் ஏழைகள் உழைப்பால் என்றும் எடுத்துக் காட்டி, ‘வாக்குரிமை யாவர்க்கும் முன்னேற்ற நாட்டில் பிறப்புரிமையாக இருக்க வேண்டுமென்று நாடேசனார் வாதாடினார்.
நடேசனார் சட்டமன்றத்தில் நிகழ்த்திய பேச்சுக்கள் அனுபவச் சான்றுடையதாகவும், ஆர்வமுடையதாகவும் இருந்தன. அவர் வரவு செலவு திட்ட வாதங்கள் மிக்க ஆழ்ந்த அறிவும் நுட்பமும் கூடியதாகக் காணப்படும்.
அவர் ஈடுபடாத துறையே கிடையாது. முக்கியமாக கல்வி, பொதுநலம், நீர்ப்பாசனம், நிர்வாகம் இவைகளில் முக்கிய பங்கு எடுத்துக் கொண்டார். நீர்ப்பாசன விவாதங்களில் அவரது உரைகளை, அந்நாள் மெம்பர் சர் கே.சீனிவாசய்யங்கார் மிகவும் மெச்சியுள்ளார். சுகாதார வி­யங்களில் அவர் சிறந்த கருத்துக்களைக் கூறுவார். கட்டாய ஆரம்பக் கல்வியில் மிகவும் பரிவு காட்டினார். கூட்டுறவு வி­யங்களில் மக்கள் நலத்துக்கு வாதாடினார்.
சென்னையில் பல இடங்களில் ஏழைகள் மேல்கோப்பு கட்டி, வீடு கட்டிப் பலவாண்டுகள் வாழ்ந்து வந்தார்கள். சில சமயங்களில் திடீரென்று நிலச் சொந்தக்காரர்கள் அவர்களை வெளியேற்ற முயல்வார்கள். ஏழைகள் உரிமை இழக்காமலிருப்பதற்கு, சென்னை குடித்தனக்காரர் பாதுகாப்புச் சட்டத்தை (City Tenants Protection Bill) ஆதரித்து வெற்றிகரமாக நிறைவேற்றினார். அவர் பேச்சுக்கள் வீண்வாதம் இன்றி, பொருள் செறிவுடையதாய்க் கம்பீரமான குரலில் நிகழ்த்தப்படும்.
சட்டமன்றச் சேவையைவிட மேலும் கவனம் பெற்றது அவரது சென்னை மாநகராட்சி நிர்வாகம். பலவாண்டுகள் அவர் அங்கத்தினராக மட்டுமின்றி, நகராட்சி மன்றத்தின் பொதுநலக் கமிட்டி(Standing Committee for Health) தலைவராகவும் இருந்து பல சீர்திருத்தங்களைச் செய்தார். பிரதி காலையிலும் அவர் தமது டிவி­னில் சில இடங்களையாவது பார்த்துவிட்டுப் பின் தான் தம் மருத்துவ வேலையைத் துவக்குவார்.
பல மருத்துவ மாநாடுகளில் அவர் பங்கு கொண்டார். கிழக்கு ஆசியா மருத்துவ சம்மேளனம் கல்கத்தாவில் நடந்தது. அதில் நடேசனார் கூறிய யோசனைகள் பலராலும் பாராட்டப் பெற்றன. மருத்துவத் தொழிலில் இருந்தாலும், பல திறப்பட்ட வி­யங்கள் அவருக்குத் தெரியும்.
அவரது நூல் சேமிப்பை சென்னை மாநாகராட்சிக்கு பரிசாகக் கொடுத்தார். அவை  ரிப்பன் மாளிகையில் பல நாள் இருந்தன.
அவர் அரசியலில் மட்டும் ஈடுபட்டவர் எனலாகாது. அவர் ஒரு மன்பதை அன்பராகவே  (Humanist) எப்போதும் விளங்கினார்.
பலர், அவர் தொழிலாளர் இயக்கத்தில் ஆரம்ப காலத்தில் ஈடுபட்டு, ஆர்வமுடைய பங்கும் எடுத்தவர் என்பதை அறியார்.
திரு.வி.. தமதுவாழ்க்கைக் குறிப்புகள்என்ற நூலில், நடேசனாரின் சேவையைப் பாராட்டி பலவிடங்களில் வியந்துள்ளார்.
இந்தியாவிலேயே சென்னையில்தான் முதல் தொழில் சங்கம் ஏற்பட்டது. அதனை ஆரம்பிக்கும் போதுஅவர் திரு.வி..வுக்குத் துணைப் புரிந்தார். அதைவிட மகத்தான சேவை, அவர் பக்கிங்காம் கர்நாடிக் நூற்பாலை மூடப்பட்ட போது, தம் உயிர் ஆபத்தையும் பாராட்டாது கலகம் நடந்த இடங்களுக்கு நேரில் போய்ச் சமாதானம் செய்து வந்ததாகும்.
சூளை ஆலை மூடப்பட்டபோது, புளியந்தோப்பில் நடந்த கலவரத்தில் போலீசு சுட்டுச் சிலர் உயிரிழந்தார்கள்.
அப்போதும் அவர் கருங்காலிகள் என்று துவே´க்கப்பட்ட ஆதி திராவிடர்களுக்கு அனுசரணையாக இருந்து, மற்றவர்களை வேலைக்குப் போகும்படி செய்து சமாதானம் செய்த வைத்தார். திரு.வி.சக்கரைச் செட்டியார் போன்ற தொழிலாளர் தலைவர்கள், டாக்டரிடம் மிகவும் மதிப்பு வைத்திருந்தார்கள்.
நடேசனார், அரசியலில் நண்பர்களாயினும் சரி, தன்னை உதாசீனம் செய்தவர்களாயினும் சரி, அவர்களிடம் நட்பும் விசுவாசமும் உண்மையும் கூடிய உறவுடையவர். கொள்கையில் தீவிரவாதியாக இருந்தாலும், நண்பர்களுக்கு விட்டுக் கொடுக்கும் சுபாவமுடையவர்.
அவர் சென்னை மாநகராட்சி மன்றத்தில் மூன்று முறை தலைவர் பதவிக்கு ஆபேட்சித்தார். மூன்று முறையும் நண்பர்கட்கு விட்டுக் கொடுத்தார். உதவித் தலைவர் ஸ்தானத்தைத்தான் கட்சியாளர்கள் அவருக்கு விடுத்தார்கள். அதுபோல அவர் மந்திரி பதவிக்கும் ஆசைப்படவில்லை.
ஒரு தேர்தலில், தாம் சுயேச்சையாக நின்று அமோக வெற்றிப் பெற்றார். ஆனால், சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், கொள்கையைக் காற்றில் விட மாட்டேன் என்று அப்போது கூறினார். சட்டசபையில் அவரை அந்திய காலத்தில் உப தலைவராக கண்துடைப்பாக கட்சியினர் அமைத்தனர்.
1929 ஆம் ஆண்டு தேர்தலில் கட்சி சிறுபான்மை அடைந்தது. அது காரணமாக பனகல் அரசர் மந்திரி சபை கூட்ட விரும்பவில்லை. டாக்டர் சுப்பராயன் முதன்மையில் சுயேச்சை மந்திரிசபை இயங்கியது.
1929 இல் டாக்டர் நடேசனார், மந்திரி சபையில் பிராமணர்கட்கு ஓரிடம்கூடத் தராததால் அவ்வினத்தாரின் முழு வெறுப்பையும் எதிர்ப்பையும் கட்சி பெறுகிறது என்று கூறி, அமைச்சரவையில் பிராமணர்க்கு ஒரு இடம் தரவேண்டுமென்று யோசனை கூறினார். அதன் விளைவாக ஒரு பிராமணர் (சேதுரத்னம் ஐயர்) அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார்.
நடேசனார் சமரசமும் உதாரகுணமும் உடையவர் என்பதை உலகம் அறியும். அவரது தியாகத்தைக் கண்டு, யாவரும் வியந்தனர்.
தமது இறுதி நாளில், தமது ஒரே மகனையும் அவர் இழந்தார். தந்தை போல் நல்ல குணம் படைத்த சரவணன் என்ற மகனார், பி.. ஆனர்சு படிப்புப் படித்திருந்தார். சுரம் கண்டு அகால மரணமடைந்தார். நடேசனார் அதனால் மனமுடைந்து, உடல் மெலிந்து துக்கமடைந்தார். எனினும், பொதுக் காரியங்களில், இவர் ஜன உபகாரியாகவே உழைத்தார்.
கடைசி 1937 ஆம் தேர்தலில் மனச்சோர்வுடன், அன்பர்கள் வேண்டுகோட் கிணங்க வேட்பாளராக நின்றார். தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே (18.2.1937 அன்று) நடேசனார் உடல் நீத்தார்.
ஆதி காலத்தில் இளைஞர்நலக் காப்பாளராக இருந்தது போலவே ஆயுள் முழுவதும் அவர் உழைத்தார். கல்லூரிகட்கு மாணவர் தேர்தல் கமிட்டி அவர் வற்புறுத்தலால் நியமிக்கப்பட்டது. பல மாணவர்கட்கு நீதியும் வாய்ப்பும் கிடைத்தது.
வேறு துறைகளிலுள்ள மதன கோபால நாயுடு, திரு.ரங்கராமானுஜம், சண்டே அப்சர்வர், திரு.பி.பாலசுப்ரமணியம் போன்றவர்களைத் தம் பெற்ற பிள்ளைகள் போலவே பாவித்தார்.
சீர்திருத்தங்களை  மேடையில் பேசி வாழ்க்கையில் கைவிடப்பட்ட பதர்கள் போல் அல்லாமல், ஒவ்வொரு நேரமும் நன்மையே புரிந்த சான்றாளராக விளங்கினார். பலர்அவரை ஒரு அரசியல் தலைவராக மட்டும் கருதாது, அன்பு நெறி காட்டிய சமயத் தலைவர்களின் வரிசையிலேயும் வைத்துப் போற்றினர்.
தமிழ்ப்பண்பாட்டின் தலையான கோட்பாடாகிய யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற இலக்கணத்துக்கு எடுத்துக் காட்டாகவே நடேசனார் விளங்கினார். எப்போதும் நல்ல உடை தரித்தலும், உணவில் மிதமும் தூய்மையும் புலாலுண்ணாமையும் கடைப்பிடித்தவர் இவர்.
நல்லவர்கட்குப் பெரிய சான்று அவர்கள் சடல ஊர்வலத்தைக் கண்டு மக்கள் என்ன பேசுகிறார்கள் என்பதாகும். டாக்டர் நடேசனார் சடல ஊர்வலத்துக்கு ஒரு மைல் நீளம் மக்கள் திரண்டார்கள். கையயடுத்துக் கும்பிட்டார்கள். படுதாவிலிருக்கும் முஸ்லிம் பெண்கள்கூட நாடு போற்றிய நல்லவரின் சாந்தமான முகத்தை தரிசித்தும், பாதத்தைக் கும்பிட்டும் கண்ணீர் வடித்தனர்.
அவர் பூதவுடல் மறைந்தாலும், அவர் புகழுடல் இன்றும் கண்ணிலும் கருத்திலும் நிலவுகின்றது. அவர் தொண்டு மலர்தலை உலகில் நீடு புகழோடு நிலைத்து மன்னுக. (கவிதா மண்டலம், மார்ச் 2012)
எஸ். சத்திய மூர்த்தி ஐயர்: டாக்டர் நடேச முதலியாருடன் எனக்கு நெருங்கிய நட்பு உண்டு. சிலர் தாங்கள் சார்ந்திருக்கும் அரசியல் கட்சிகளை மோசம் செய்வதுண்டு. சில கட்சிகள் கட்சியைச் சார்ந்திருக்கும் சிலரை மோசம் செய்வதுண்டு. டாக்டர் நடேச முதலியார் நான்இரண்டாவதாகக் கூறிய, கட்சியால் மோசம் செய்யப்பட்டவர்களில் ஒருவராவார். பார்ப்பனரல்லாதாரின் இயக்கத்திற்கு உணர்ச்சி அடிப்படையைக் கொடுத்து வளர்த்த ஒரு தனிப்பெரும் மனிதர் டாக்டர் நடேச முதலியாராவார்.
நீண்ட நாட்கள் கூட வேண்டாம். ஒரு மாத காலத்திற்காவது வேண்டாம். ஒரு மாத காலத்திறகாவது மேயராக இருந்துவிட்டு விலகி விடுகிறேன்என்று தம் விருப்பத்தைத் தெரிவித்தார், தம் கட்சிக்கார்களிடம். ஆனால், அவர் விருப்பம் ஆதிக்க வெறியர்களையும், பண மூட்டைகளையும் செல்வாக்குப் பெற்ற சந்தர்ப்பவாதிகளையும் எதிர்த்து நின்று வெற்றி பெற முடியாமல் தோல்வியில் முடிந்து விட்டது. அவருடைய இறுதிக் காலத்தில் சட்டசபை உதவித் தலைவர் என்ற ஒன்றுக்கும் உதவாத பதவி அவருக்குக் கொடுக்கப்பட்டது. உண்மையாகவே டாக்டர் அவர்கள் ஜஸ்டிஸ் கட்சிக்காகத் தன்னையும், தன் வாழ்க்கையையும் தியாகம் செய்த ஒரு லட்சியவாதியாகும்.
திரு.வி..: தெரிந்தவர் என்றும் தெரியாதவர் என்றும், வேண்டாதவர் என்றும் பாராது, சென்றவர்கட்கெல்லாம் உதவியும் ஒத்தாசையும் செய்தவர். அப்படிப்பட்ட குணம் மனமும் உடையவர். என் ஆயுட் காலத்தில் டாக்டர் நடேசனார் ஒருவரைத் தான் பார்த்துள்ளேன்.
நடேச முதலியார் வரலாற்றாசிரியர் கே.குமரசாமி: திராவிடர் சங்கம் தோன்றிய நாள், மாதம், ஆண்டு சரியாகத் தெரியவில்லை. 1912 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டதாக நினைவு இருப்பதாக திரு.வி.. அவர்கள் என்னிடம் கூறினார். திருவல்லிக்கேணி பெரிய தெரு (வீரராகவ முதலி தெரு) வீட்டில் தான் சங்கம் தொடங்கப்பட்டது. வீட்டிற்கு எதிரில் உள்ள தோட்டத்தில்தான் கூட்டங்கள் நடத்தப்பட்டன. சென்னையில் நவம்பர் 1912 இல் திராவிடர் சங்கம் தொடங்கியதாகத் தெரிய வருகிறது.

Dr.C.Natesa Mudaliar - Foundar of the Dravidian Movement. A great son of India. Leader of leaders. Champion of the Backward and Depressed. Fought for social economic and political justice. Loved and esteemed by all. Irrespective of caste or community. Hankered not for any power, pelf or office..

No comments: