Thursday, August 12, 2010



பெரியாரைச் சந்தித்தேன் - தி.வ. மெய்கண்டார்

1959 ஆம் ஆண்டு. ஆகஸ்ட் 13 ஆம் நாள்.

நான் பெரியாரைச் சந்தித்துப் பேசினேன். அதற்கு முன் பெரியாரைப் பலமுறை பார்த்திருக்கிறேன். அவர் சொற்பொழிவுகளைப் பல மணி நேரம் கேட்டிருக்கிறேன். ஆனால் நேரிடையாகச் சந்தித்துப் பேசியது அன்றுதான்.

அப்பொழுது நான் சிதம்பரம் காசிம்கான் பேட்டைத் தெருவில் வசித்து வந்தேன். எங்கள் தெருக்கோடியில் தெற்கு வடக்காக நீண்டு கிடந்த தெரு பழஞ்சாலியத் தெருவாகும். அத்தெருவில் 26 ஆம் எண் இல்லத்தில் தென் ஆர்க்காடு மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் திரு.கு.கிருஷ்ணசாமி குடி இருந்தார். சிதம்பரம் மற்றும் சிதம்பரத்தை ஒட்டிய நிகழ்ச்சிகளுக்கு வருகை தரும் திராவிடர் கழகத் தலைவர்கள், பிரமுகர்கள் பெரியார், குத்தூசி குருசாமி, எம்.ஆர்.இராதா, வேதாச்சலம், திருவாரூர் கே.தங்கராசு, கடலூர் கி.வீரமணி முதலியவர்கள் அவர் இல்லத்தில் தங்குவார்கள். திராவிடர் கழக ஊர்வலங்கள் அனைத்தும் கு.கிருஷ்ணசாமி இல்லத்திருந்தே புறப்படும்.

திரு.கு.கிருஷ்ணசாமி அவர்கள் வசித்து வந்த அதே தெருவில் இன்னொரு வீட்டில் என் குடும்ப நண்பர் திரு.அ.சிவசிதம்பரம் வசித்து வந்தார். அவர் அப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ஆனர்ஸ் (தமிழ் இலக்கியம்) படித்துக் கொண்டிருந்தார். (பின்னர் பி.எல். படித்து முடித்து இப்போது சென்னையில் பெரிய அலுவலில் பணிபுரிந்த படி பெசண்டு நகரில் வசித்து வருகிறார். குமரி ஆனந்தனின் வகுப்புத் தோழர்) இவர் காங்கிரசிடம் பற்றுள்ள குடும்பத்தைச் சார்ந்தவராக இருந்தார். எனினும் தந்தை பெரியாரிடம் இவருக்கு அலாதியான பற்று இருந்து வந்தது. இந்த காலத்தில் பெரியாரும் காங்கிரசை-காமராசரை- தீவிரமாக ஆதரித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இவர் பெரியாரிடத்தில் எனக்குள்ள ஈடுபாட்டையும், மதிப்பையும், அன்பையும் உணர்ந்து, அப்பொழுது Out of print -ஆக இருந்த எங்கும் கிடைக்காத சேஷா அய்யங்கார் Ancient Dravidians எழுதிய என்ற நூலின் இரண்டு பகுதிகளை என்னிடம் தந்து, நூலின் பெருமையையும் எனக்கு உணர்த்தி, பெரியார் அவர்களிடம் அளிக்கும் படி கேட்டுக் கொண்டார்.

நான் சிவசிதம்பரம் அளித்த புத்தகங்களோடு ஒரு ஓவல்டின் டப்பா ஒன்றையும் வாங்கி எடுத்துக் கொண்டு, 31.8.59 அன்று காலை 7.15 மணி அளவில் பெரியார் இருப்பிடத்திற்கு சென்று சந்தித்தேன். போகும் போது பெரியார் எழுதித் தொகுத்த ‘இராமாயணப் பாத்திரங்கள்’ என்னும் புத்தகத்தையும் எடுத்துச் சொன்றிருந்தேன்.

திராவிடர் கழகத் தோழர்களை வீட்டு வாசலில் குழுமிப் பேசிக் கொண்டருந்தனர்.
போனவுடன் மாவட்டத் தலைவர் கு.கிருஷ்ணசாமி உள்ளே அழைத்துச் சென்று பெரியாரிடம் முறையாக அறிமுகம் செய்து வைத்து விட்டு உள்ளே போய் விட்டார்.

பெரியார் அவருக்கென போடப்பட்டிருந்த கயிற்றுக் கட்டிலில் நடுநாயகமாக இன்னொருவர் அமர இடமில்லையோ என்று எண்ணும்படி காலை மடித்து, ‘சப்பமாங்கால்’ போட்ட நிலையில் அமர்ந்து கொண்டிருந்தார். எதிரே ஸ்டுலில் உள்ள தட்டில் ஆப்பிள் திராட்சை முதலிய பழ வகைகள் வைக்கப்பட்டிருந்தன.

காலை நேரத்தின் அமைதியான சூழ்நிலையில் சாந்த நிலையில் அமர்ந்து கனிவகைகள் அடங்கிய பழத் தட்டைப் பார்த்தபடியே திராட்சைப் பழங்களை ஒவ்வொன்றாக எடுத்து வாயிலிட்டு சுவைத்தப்படி, சிந்தனை வயப்பட்டவராய் அமர்ந்திருந்த தந்தை பெரியார் நிமிர்ந்து பார்த்தார்.

புதியவனான என் வருகையை அவர் உணர்ந்த போது முகத்தில் அரும்பிய புன்னகை அவர் வெண்தாடியையே ஒளிரச் செய்தது.

‘வாங்க, வாங்க’ என்று உற்சாகத்தோடு 20 வயது இளைஞனான என்னை வரவேற்று உட்காருங்க, உட்காருங்க என்று பக்கத்திலிருந்த நாற்காலியைக் காட்டினார். உட்கார்ந்தவுடன் ‘நீங்க என்ன செய்யறீங்க’ என்று கேட்டு விசாரித்து தெரிந்து கொண்டார்.
நான் இண்டர் மீடியட் வரை படித்து முடித்திருப்பதைத் தெரிவித்து விட்டு, அச்சமும், தயக்கமுமுற்ற நிலையில் திடீரென எழுந்து நின்று, கொண்டு சென்றிருந்த இரண்டு புத்தகங்களை அவர் கையில் தந்தேன்.

என்ன இது? என்றார் பெரியார்.

‘நீங்கள் இதுவரை பார்த்திருக்க முடியாத இரண்டு புத்தகங்கள் இவை. சேஷா அங்யங்கார் எழுதிய ஏன்ஷியட் டிராவிடியன்ஸ் இரண்டு பகுதிகள். இது அவுட் ஆப் பிரிண்ட். எங்கும் கிடைக்காது’ என்று (சிவசிதம்பரம் ஓதியதை அப்படியே) சொன்னேன்.

‘அது என்னங்க அது? இதுவரை நான் பார்க்காத புத்தகம். இப்படி கொண்டாங்க!’ என்று பெரியார் ‘ஆங்கார’மாக கூறி கையிலிருந்து வேகமாகப் பற்றி விரைவாகப் புரட்டிப் புரட்டிப் பார்த்தார்.

சில நிமிடங்கள் நடுநடுவே படித்துப் பார்த்து விட்டு, மீண்டும் ஆசிரியர் பெயரருந்த முதல் பக்கத்தைக் கூர்ந்து பார்த்துவிட்டுப் பொறுமையுடன் அமைதியாக, ‘ஆமாங்க! இந்தப் புத்தகத்தை நான் இதுவரைப் பார்த்ததில்லை’ என்று ஒப்புக் கொண்டார்.
நான் எடுத்துச் சென்றிருந்த பெரியார் தொகுத்து எழுதிய இராமாயணப் பாத்திரங்கள் என்னும் புத்தகத்தை நாலணா நாணயத்துடன்(கால் ரூபாய்) கையில் கொடுத்து, ‘புத்தகத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுங்கள்’ என்று கேட்டேன்.

அப்பொழுது பெரியார் ஒவ்வொன்றுக்கும் ஒரு ‘ரேட்’ வைத்திருந்தார். திருமண விழாவில் தலைமை ஏற்பதற்கு, கூட்டத்துக்கு, விருந்துக்கு, புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கு, கையெழுத்துக்கு என்று தனித்தனியாக ‘ரேட்’ உண்டு.

அந்த முறையில்தான் கையெழுத்துக்கு ‘நாலணா’ கொடுத்தேன்.

‘இது எதுக்குங்க. வேண்டாங்க’ என்று காசைத் திருப்பித் தந்தார்.

நான் மறுத்து , அந்தக் காசை அவரிடமே தந்து, இல்லை இல்லை. நீங்கள் ஒரு முறையை வைத்திருக்கிறீர்கள். இதை வைத்துக் கொள்ளுங்கள்’ என்று மீண்டும் அவரிடமே கொடுத்தேன்.

‘சரி! காலங்காத்தாலே வந்து கொடுக்கறீங்க! இதை வுடப்பாடாது‘’ என்று வாங்கி, தம்முடைய உள் சட்டைப் பையில் , குழந்தை மாதிரி கையை நுழைத்துப் பத்திரமாக வைத்துக் கொண்டார்.

பிறகு பையிலிருந்து, வழக்கத்துக்கு விரோதமான பெரிய அளவில் (சைசில்) உள்ள தடித்த பேனாவை எடுத்து, ‘ஈவே.ராமசாமி’ என்று கையெழுத்திட்டு 31.5.59 என்று தேதியையும் எழுதிப் புத்தகத்தை என்னிடம் திருப்பித் தந்தார்.

பெரியாருக்கு வணக்கத்தைக் கூறிவிட்டு, அவரைப் பற்றிய நினைவுகளோடும், மன நிறைவோடும் வெளியே வந்தேன்.

பெரியாரை நான் சந்தித்த நாளன்று இரவு சிதம்பரத்திற்கு ஒரு மைல் தொலைவிலுள்ள ‘கண்ணங்குடி’ என்ற சிற்றூரில் பொதுக்கூட்டம் இருந்தது. பொதுக் கூட்டத்திற்கு செல்லுமுன்பும் பொதுக் கூட்டத்திலிருந்து திரும்பிய பிறகும் மிக நீண்ட நேரம் நான் கொடுத்த புத்தகங்களை பெரியார் படித்ததாகவும், காலையில் வேறு ஊருக்குப் பயணமாகும் போது ‘பார்ப்பானைப் பற்றி ஒரு பார்ப்பானே நன்றாகத் தாக்கி எழுதி இருக்கிறான்’ என்று சந்தோஷப்பட்டுச் சொல்லிவிட்டு புறப்பட்டுப் போகும் போது அந்தப் புத்தகங்களைக் கையிலேயே பத்திரமாக எடுத்துச் சென்று விட்டதாகவும் தென் ஆர்க்காடு மாவட்டத் திராவிட கழகத்தலைவர் திரு.கு.கிருஷ்ணசாமி யின் மகன் திருநாவுக்கரசு மறுநாள் என்னிடம் தெரிவித்தார்.

நான் 1959 இக்கு முன்னும் பல தலைவர்களைச் சந்தித்திருக்கிறேன். பார்த்திருக்கிறேன் என்றாலும் என்னுடைய பொது வாழ்க்கையின் தொடக்கத்திலேயே முதன் முதலில் சந்தித்து சமமாக உட்கார்ந்து பேசிய முதல் தலைவர் தந்தை பெரியார் அவர்கள தான்!.

இத்தனைக்கும் நான் பெரியாரைச் சந்தித்த போது அவருடைய திராவிடர் கழகத்துகாரர் என்ற முறையிலல்ல. அவரால் வெறுத்து மேடைகளில் கடுமையாக அந்தக் காலகட்டத்தில் விமர்சிக்கப்பட்ட க.து கட்சிக் காரன்(கண்ணீர் துளிகள்=தி.மு.க) என்ற நிலையில்தான். அவர் அன்போடு பேசி, பண்போடு அனுப்பி வைத்ததை இன்றைக்கு நினைத்தாலும் என் நெஞ்சில் இன்பம் ஏற்படுகிறது.(இளந்தமிழன் சனவரி 1990).

No comments: