Friday, August 6, 2010

திராவிடன் முதல் இதழ்

திராவிடன் முதல் இதழ் தலையங்கப் பகுதி (1.6.1917)

சென்னைப் பட்டணம் 1917 வருடம் ஜுன் மாதம் 1 ஆம் நாள்



(Ourselves) நமது பத்திரிகையின் நோக்கங்கள்

இந்துக்களிற் பெரும்பாலோர் பிராமணரல்லாதவர்களாயிருக்கிறார்கள். தென்னிந்தியாவின் ஜனத்தொகை சுமார் நான்கு கோடியில் பிராமணரல்லாத இந்துக்களின் தொகை மூன்றரை கோடிக்க அதிகமாகிறது. இவ்வளவு பெருந்தொகையினராகிய நம்மவர்களுடைய குறைபாடுகளையும் முறைபாடுகளையும் ராஜாங்கத்தாருக்குத் தக்கபடி தெரிவித்து இவர்களுடைய செல்வாக்கை அபிவிருத்தி செய்து கொள்வதற்கு, இதுவரைக்கும் இயலாமல் போயிற்று. பொதுவாக, இந்துக்கள் என்கிற மொத்தப் பெயரை வைத்து கொண்டே, இந்துக்களுள் மிக மிகச் சிறிய பிரிவினராசிய சிலரே எல்லா நலன்களையும் எல்லாப் பலன்களையும் இதுவரைக்கும் அனுபவித்து வந்திருக்கிறார்கள். இப்பொழுதும் அனுபவித்து வருகிறார்கள். முக்கியமாய் இதற்குக் காரணம் பத்திரிகை என்கிற பலமுள்ள ஆயுதங்கள் அவர்களிடம் மிருப்பதுதான்.

இவ்வறாக, பிராமணரல்லாத இதர இந்துக்கள் வரவரத் தமது செல்வாக்கையிழந்து ஈனஸ்திதிக்கு இறங்கிக் கொண்டிருப்பது நாளுக்கு நாள் பொறுக்க முடியாததாயிற்று. இந்தக் கொடிய நிலைமையினின்றும் தங்களைத் தப்புவித்துக் கொள்ளவும் இனிமேலாயினும் தாங்கள் அபிவிர்த்தியடைய வழகளைத்தேடிக் கொள்ளவும் வேண்டிய பிரயத்தனங்கள் செய்ய வேண்டும் என்கிற எண்ணமாவது மெள்ள மெள்ள அவர்களது உள்ளந்தன்னில் உதயமாய்க் வந்தது. தம்மைத்தாம் காத்துக் கொண்டு தம்முடைய விடா முயற்சியினாலும் தளராத உழைப்பினாலும் தம்மைத்தாம் முன்னுக்குக் கொண்டு வர வேண்டுமென்னும் நியாயமான கோரிக்கை பிராமணரல்லாத இந்துக்களின் மனதில் திடமான வேறூன்றிப் பேலமான நோக்கமாய் விளங்க ஆரம்பித்து விட்டது. இவ்விதமான எண்ணம் கண் மூடித்தனமான ஆத்திரத்தாலாவது யோசனையில்லாத ஆவேசத்தினாலாவது உண்டானதன்று. நீர்க்குமிழி போலும் மின்னல் போலும் க்ஷணத்தில் தோன்றி க்ஷணத்தில் மறைந்து போகும் ஏற்றமில்லாத தோற்றமென்று இதனைக ª£கள்ள எள்ளளவும் முடியாது. மிக நிதானமாகவும் வெகு சரவதானமாகவும் ஆரத்தீர யோசித்து தென்னிந்தியர்கள் பெரும்பாலோர் கொண்ட ஆலோசனையின் முதிர்ச்சியினாலேயே இவ்வகையான எண்ணம் ஒவ்வொருவர் மனத்திலும் உண்டாயிருக்கிறதென்று உறுதியாய்க் கொள்ளலாம்.

மேற் கூறியவைகள் காரணமாக, தென் இந்திய தேசிய மகாஜன சபை ஒன்று சென்னையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது என்பதையும், அச் சங்கத் தாராலேயே, ஜஸ்டிஸ் என்கிற ஆங்கில பத்திரிகையன்று நடத்தப்பட்டு வருகிற தென்பதையும் நம்மவர்கள் அனேகர் அறிந்திருக்கலாம். மேற்படி, சபையாராலேயே, மேலே விசாரித்துள்ள நோக்கங்களைச் சாதித்ததற்கு, இன்று ‘திராவிடன்’ என்கிற இத் தமிழ் தினசரி பத்திரிகையும், ஆந்திரப்பிரகாசிகா என்கிற தெலுங்குத் தினசரிப் பத்திரிகையும் ஆரம்பிக்கப்படுகின்றன.

முன் சொன்னபடி தென்னிந்தியாவில் பெருமபாலோர் பிராமணரல்லா தாராகிய இந்துக்களே யாவர். பிராமண ரென்பவர்கள் மிகக் குறைந்த எண்ணினர். ஆகவே பிராமணர். பிராமணரல்லாதார் என்கிற இரு வகுப்பினருள், பிராமணரல்லாதாராகிய திராவிடர்களே தென்னிந்திய ‘மஹா ஜனங்கள்’ என்று திருத்தமாய் நாம் கூறலாம். இத்தனை நாள் இவர்கள் காலாட்டித் தூங்க வைக்கப்பட்டிருந்து இப்பொழுதுதான் இவர்கள் உடம்பை உதறித் திடம் பெற்று எழுந்திருப்பதைக் கண்டு மனம் பொறாத சிலர், இவர்களுடைய நோக்கங்களைப் பூர்த்தியாய் ஆராய்ந்து பாராமல், மேல் வாரியாய் தோஷம் கூறத் தொடங்குவது போல் வேஷம் போட்டு மேல் நாம் கூறியுள்ள அபிப்பிராயங்கள் சில தந்திரசாலிகளின் பேராசையையோ? அல்லது ஏமாற்றமடைந்த சில உத்தியோகஸ்தர்களின் விருப்பங்களையோ குறிப்பதாக கொள்ளக் கூடும். அது சிறிதும் உண்மையன்று. முற்றிலும் பிசகானதென்றே முடிவாக கூறுவோம். ஆகவே, தேசீய திராவிடர்களாகிய நம்மனோர் முன்னுக்கு வருவதற்குத் தடையாயுள்ள தப்பபிப்ராயங்களையும் விபரீதக் கொள்கைகளையும் பேதித்தெறிந்து உண்மையைச் சாதித்து நிலை நிறுத்துவதே திராவிடனாகிய இப்பத்திரிகையின் திருத்தமுள்ளதொரு நோக்கமாகும். கண்ணைக் கட்டி காட்டில் விடுவது போற்செய்யும் குருமார்களுடைய அதிகாரம் வெகுவாகப் பிரதிபலித்திருந்த காலங்களிலும் தேசங்களிலும் அவர்கள் சொல்லுவதே ஞாயம் அவர்கள் புகல்வதே போத நவநீதமென்று கொள்ளுவது சகஜமாயிருந்து சங்கடம் விளைத்து வந்தது. அந்தக் கண்மூடி அகற்றப்பட்டவுடனே அந்தகாரமும் தொலைந்தது. சூரிய வெளிச்சமும் தெரிந்தது.

மாட்சிமை தங்கிய ஆங்கில அரசாட்சி மாண்புடனே நம் தேசத்திற்கு எட்டினவுடன் இருட்டு எண்ணங்களும், குருட்டுக் கொள்கைகளும் இடம்விட்டே எழுந்தோடிவிட்டன. சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை யிடந்திற் போலவும், செய்ததையே செய்யும் வழக்க வேலைக்காரனிடத்திற் போலவும் நிலைமை பெற்று தலைமையுற்றிருந்த கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக, அறிவும் பிரகாசித்தது. ஒழுக்க முறையும் விசாலித்தது. சுயேச்சையாய்ப் பிரவர்த்திப்பதற்குச் சமயமும் வாய்த்தது. சுயேச்¬யாய்ப் பிரவர்த்திப்பதற்குச் சமயமும் வாய்த்தது. எவ்வளவோ அணியமாய் போலிக் குரு பீடங்கள் நம்மை நடத்தியும் எல்லா வல்ல இறைவனது மகத்துவம் பொருந்திய கட்டளை போல் பாவித்து அதற்கு உட்பட்டு வந்த அடிமைத்தனமும் தொலைந்தது. இவ்விதமாக நமக்கு எவ்வளவோ நன்மை தந்து உதவிய பிரிட்டிஷ் ராஜாங்கத்தின் மீது இடையறாத அன்பையும் தளர்வுறாத விஸ்வாஸத்தையும் என்றென்றும் காட்டிச் செல்வதே இணையில்லாத நமது நோக்கமாயிருக்கும். ஆயினும் துரைத்தனத்தாருடைய ஒவ்வொரு நடவடிக்கையையும், அவர்கள் கொண்ட கோட்பாட்டையும் அனுசரிக்கும் ஏற்பாட்டையும் துரைத்தனத்திலுள்ள கீழ் உத்தியோகஸ்தர்கள் நடத்தும் சகல நடவடிக்கை முதலியவைகளையும், விரோதப் பான்மையின்றியும் நேச விஸ்வாஸசமானது சிறிதும் குறைவுபடாமலும், அவமதித்து கேலி செய்யும் அகந்தையான எண்ணமில்லாமலும், எடுத்தெடுத்துக் கூறி, நல்லவை கட்டவைகளை நன்றாக விளக்கி, துரைத்தனத்தாருடைய வேலையைச் சுலபப்படுத்தவும், தேசத்திலுள்ளவர்களுக்கு முன்னிலும் நன்மை அதிகமாக உண்டாக்கவும் நம்மாலான வரைக்கும் நன்றாக உழைப்போம். பொதுவாக இவ்வுலகத்திலுள்ள பற்பல மனிதர்களைப் பற்றியும் விஷயங்களைப் பற்றியும் ஸ்தாபனங்களைப் பற்றியும் சரியான அபிப்ராயங்கள் பரவும்படி செய்வதற்கு நம்மாலான முயற்சிகள் நன்றாகச் செய்வோம்.

இப்பொழுது நடந்துவரும் மஹாயுத்தத்தில் நமது மாட்சியமை தங்கிய அரசாங்கத்தினரும் நேச ராஜ்யங்களும் சம்பூர்ண ஜயமடைந்து, வெற்றி மாலை பூண்பதற்கு வேண்டிய பிரயத்தனங்கள் செய்ய வேண்டியவர்களாயிருக்கிறோம். அந்த வெற்றியை அரசாங்கத்தினர் துரிதமாகவும் பூரணமாகவும் அடைவதற்குப் பொருளாதாரங்களையும் மனித உதவிகளையும் ஏராளமாய்க் கொடுக்க வேண்டும், ஆனால் பொதுவாய் ஏகாதிபத்தியத்தைப் பாதிக்காமல் முழுவதும் ஸ்வதேச சம்பந்தமாகவே ஏற்படும் அவசரத் தன்மையான விஷயங்களை இம்மஹா யுத்தத்தின் காரணமாக ஆலோசிக்காமல் நிறுத்தி வைக்க முடியாது. ஆன போதிலும் அப்படிப்பட்ட விஷயங்கள் இந்திய பொது ஜனங்களின் சகல வகுப்பினருடைய நிரந்தரமான பிரயோசனத்தை உத்தேசித்தை முடிவு செய்யப்பட வேண்டுமேயன்றி, பொது ஜனங்கள் பேரால் ஒரு சிறு வகுப்பினரே எல்லா லாபங்களையும் எடுத்துப் போகும்படி விடுதல் கூடாது. இந்தியாவில் ஜாதிப் பிரிவுகள் அனேகமிருக்கின்றன. ஜாதி பேதங்கள் முற்றிலும் ஒழிந்து சீர்படுகிற வரைக்கும் சகல வகுப்பாருக்கும் நியாயம் கிடைப்பதற்கு ஒவ்வொரு ஜாதியாரும் இனத்தாரும் சமயத்தாரும் தங்களுடைய பிரதிநிதிகள் மூலமாகவும் தேசத்தில் தங்கள் தங்களுக்குரிய மேன்மையையும் அந்தஸ்தையும், ஜனத்தொகையையும் அனுசரித்தும் விஷயங்கள் செம்மைப் படுத்தப்பட வேண்டும். துரைத் தனத்தார் ஒவ்வொரு வகுப்பையும் ஒவ்வொரு ஜாதியையும் ஒவ்வொரு பிரிவையும் சேர்த்து பொறுப்பு வாய்ந்த பிரதிநிதிகளுடனும் விவேக முள்ள வர்களுடனும் கலந்து யோசித்து ஒரு ஏற்பாடு தயார் செய்வதே உசிதமானது. இல்லாவிட்டால் காரியத்திலேயே சுயலாபமடைய நேரிடும்.
மேலும் ராஜ்ய பரிபாலன சம்பந்தமான விஷயங்களைப் பற்றிய மாத்திரமே எழுதுவது நம்முடைய நோக்கமன்று. முன் சொன்ன படி பிராமணரல்லாத இந்துக்கள் பெரிய ஜனசமூகத்தவராயிருக்கின்றவர்கள். இவர்களும் நம்முடைய நேசப் பான்மைக்குரிய கிறிஸ்துவர்களும், முஹம்மதியர்களும் இந்தியாவின் செல்வ நிலையைப் பெரிதும் வளர்த்தவர்களாயிருக்கிறார்கள். ஜனத் தொகையாலும் நில உரிமையாலும் வியாபார ரீதியாலும் மிக்க மேம்பாடடைந்த நமது திராவிடர்கள் துரைத்தனத்தாருடைய ஆதரவினால், தாங்கள் நியாயமாகப் பெறக் கூடிய ராஜிய அதிகார பாகத்தை தங்களுக்குக் கொடுக்கும்படிக் கேட்பதற்கு உரித்தாரனவர்கள், துரைத்தனத்தாருடைய வசத்திலுள்ள உத்தியோகங்களிலும் பெரும்பாலும் அடையப் பாத்திய முடையவர் நம் தேசீய திராவிடரே. இவர்களுக்குச் சேர வேண்டிய ராஜீய அதிகாரத்தை இவர்கள் செலுத்தக் கூடியவர்களா யிருக்கிற பட்சத்திலே, இவர்களுக்கு நன்மை விளைவதுமல்லாமல், இவர்கள் இடைவிடாமல் பூர்த்தியான விஸ்வாஸத்துடன் சதா பணிந்துவரும் துரைத்தனத்தாருக்குங் கூட ஒரே மாதிரியான நன்மை உண்டாகும். ஏனென்றால், ஆற்காட்டிலும் பிளாஸியிலும் போர் புரிந்தவர் இந்த ஜனங்களைச் சேர்ந்தவர்களே. ஹைதராலியும் திப்பு சுல்தானும் பிரிட்டீஷாருடன் பயங்கரமான கடும்போம் விளைத்த காலத்திலும் பிராமண ரல்லாத இந்துக்களே உடன் நின்று மிகவும் உதவி புரிந்து ஜயங்கொடி நாட்டி அஸ்திவாரக்கல் அமைத்தவர்கள், நாளது வரைக்கும் ராணுவத்தில் ஏராளமாய்ச் சேவகம் புரிபவர்களும் இவர்களே. பிரான்ஸிலும் மேஸோ படாவியிலும் இவர்களால் உண்டாகிய வெற்றிகளும் எல்லோரும் வியக்கத் தக்கவையாய் இருக்கின்றன. இவர்களுடைய மாதிரியைப் பின்பற்றி இவர்களுடைய சந்ததியார்களும் எக்காலத்திலும் இராஜ விஸ்வாஸ முடையவர்களாய் சேவகம் புய சித்தமாயிருக்கிறார்கள். இவ்விதமான பாத்தியதை உடையவர்கள் பால் இந்தியாவிலுள்ள சர்க்கார் உத்தியோகங்கள் விஷயமாய் துரைத்தனத்தார் தங்கள் நோக்கத்தை செலுத்தும் படி மிகவும் வினயமாய்க் கேட்டுக் கொள்ளப்படுவார்கள். இவ்வாறு துரைத்தனத்தார் கண்ணோக்கம் செலுத்து வதனாலே சரித்திரப் பிரசித்தியாய்ப் பூர்விக மேன்மை வாய்ந்தவர்களாக இருக்கும் ஜன சமூகங்களின் உரிமைகளையும், சுதந்திரங் களையும் துரைத்தனத்தார் கவனித்தவர்களாவார்கள். ஆயினும் இந்த ஜனசமூகங்கள் மேலும் மேலும் விருத்திடைவதற்கும் இவர்கள் பிற்கால நிலைமை மேலும் மேலும் உன்னதமடைவதற்கும் தாங்களே கவனிக்க வேண்டிய விஷயங்களும் அனேகமிருக்கின்றன. விவசாய விஷயத்திலும் அதிக ஊக்கத்துடனும் மிக்க உற்சாகத்துடனும் அவர்கள் அதிகமாய் முயன்று வர வேண்டும்.

சைன்ஸ்களாகிற நவீன சாஸ்திரங்களின் ஆராய்ச்சிகளினாலும் அமெரிக்கா, ஜப்பான் முதலிய தேசத்தவர்கள் மேற்படி விஷயங்களில் அபிவிருத்திய டைந்திருக்கிற மாதிரிகளைப் பின்பற்றியும் நாமும் அபிவிருத்தியடையப் பிரயத்தனப்பட வேண்டும். பிரதம கல்வி, மத்தியத்தரக் கல்வி, உயர்தரக் கல்வி, இவைகளிலும் நாம் முன்னுக்கு வர முயல வேண்டும். முக்கியமான இடங்களிலேல்லாம் சங்கங்கள் ஸ்தாபித்து இளைஞர்களுடைய கல்வி விஷயத்திலும் கைத்தொழில் விஷயத்திலும் இடைவிடாத கவனத்தைச் செலுத்த வேண்டும். இங்குக் கூறிய இந்த எல்லா விஷயங்களைப் பற்றியும் இந்தப் பத்திரிகை அவ்வப்போது விவரித்துப் பேசும். பற்பல கலைகளையும் சாஸ்திரங்களையும் நம்மில் அநேகர் கற்பது வெகு அவசியமும் உபயோக கரமாயிருப்பதோடுங்கூட, அறிவையும் வளர்த்து தேக சுகத்தையும் அது ஏராளமாய்க் கொடுக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. இந்ததேசத்தினுள் ஒவ்வொரு ஆண் பிள்ளையும் பெண் பிள்ளையையும் அவர்களுக்கு மாத்திரமேயில்லாமல் பொது ஜனங்களுக்கும் தேசத்துக்கும் ஒரே மாதிரி உபயோகப் படக்கூடிய ஒரு தொழில் அல்லது வியாபாரத்தில் பழக்க வேண்டும்.இவைகளைப் பற்றி ஏற்றபடி வற்புறுத்திப் பேசுவதும் இப்பத்திரிகை யினுடைய இயைந்ததோரு நோக்கமாகும். இவ்விதமான பற்பல நோக்கங்களைக் கொண்டு, இப்பத்திரிகை இன்று தொடங்கி உலாவ ஆரம்பிக்கின்றது. பொதுவாக இந்தியர்களுடைய நன்மையை உத்தேசித்தும் முக்கியமாக பிராமணரல்லாத மூன்றரை கோடி ஜனத்தொகையுள்ள இந்துககளின் நன்மையை உத்தேசித்தும் ஆரம்பிக்கப்படும் இப்பத்திரிகையானது அவர்களிற் பிரமுகர்களா யுள்ளவர்களுடைய அங்கீகாரத்தைப் பெற்று, இப்புதிய முயற்சி சித்தி பெறச் செய்யும் எனக் கோருகின்றோம். இதனால் உண்டாகும் பிரயோஜனமானது மேலும் மேலும் பெருகி, தேசத்துக்கு நன்மை விளைத்து, ஜனங்களுக்கு «க்ஷமத்தைக் கொடுத்து, பிரிட்டிஷ் அரசாட்சிக்கும் மேன்மையைத் தருமென்பதில் சந்தேகமில்லை. (இளந்தமிழன் சூன், சூலை 1990)

No comments: