Thursday, November 4, 2010

பெரியாரின் வாழ்க்கை வரலாறு - கவி

பெரியாரின் வாழ்க்கை வரலாறு - கவி


‘பெரியாரின் வாழ்க்கை வரலாறு’ ஒன்று மறைத்து வைக்கப்பட்டி ருக்கிறது என்ற செய்தியை திராவிட இயக்க ஆய்வாளரும் திரு. மா.பொ.சி அவர்களுடனும் முன்னாள் துணை வேந்தரும் கல்வி இயக்குநருமாகிய திரு. நெ.து. சுந்தரவடிவேலு அவர்களுடனும் இணைந்து பணியாற்றியவரும் கடந்த 15 ஆண்டுகளாக ‘இளந்தமிழன்’ என்ற இதழை நடத்தி வருபவருமான அய்யா தி.வ.மெய்கண்டார் அவர்கள் என்னிடம் கூறினார்கள். அதாவது, ‘1979 ஆம் ஆண்டு பெரியார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர் அரசு திரு. நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு பெரியார் வாழ்க்கை வரலாற்றை எழுத பணித்தது. திரு. நெ.து. சுந்தரவடிவேலு அவர்கள் சுமார் 1000 பக்கங்களில் மூன்று தொகுதிகளாக எழுதி தமிழக அரசிடம் கொடுத்து விட்டார். இப்போது அந்த வரலாறு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை’ என்று என்னிடம் கூறினார்கள். நான் (கவி) அதிர்ந்து போனேன்.

பின்னர் இச்செய்தியை ‘ நந்தன்’ அலுவலகத்தில் திரு. சுப.வீரபாண்டியன் அவர்களிடத்தில் கூறினேன். ‘சங்கொலி’ பத்திரிகையின் அப்போதைய பொறுப்பாசிரியர் க. திருநாவுக்கரசு, தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாeர் விடுதலை இராசேந்திரன் ஆகியோருடன் எடுத்து ரைத்தேன். திருச்சி நீதிமன்ற வளாகத்தில் ஒரு நாள் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் திரு. கொeத்தூர் மணி அவர்களைச் சந்தித்து இந்த விவரங்களை அளித்தேன். இடையில் புதுச்சேரியில் எனது நண்பர் கோகுல் காந்தி அவர்கள் எழுதிய ‘கருப்புமலர்களின் நெருப்புப் பயணம்’ என்ற நூல் வெளியிட்டு நிகழ்ச்சியில் அய்யா தி.வ.மெய்கண்டார் அவர்கள் கலந்து கொண்டு பேசிய போது, இந்த பெரியார் வரலாற்று நூலைப்பற்றி குறிப்பிட்டார்கள். விடுதலை இராசேந்திரன் அவர்களும் புதுவை சுகுமாரன் அவர்களும் உடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். நான் தி.வ. மெய்கண்டாரின் பேச்சை எனது இதழான ‘பெரியார் பார்வை’- இல் அச்சிட்டு வழங்கினேன். திராவிட பேரவை பொதுச்செயலாளர் திரு. நந்திவர்மன் அவர்களும் இது குறித்து புதுவை அரசுக்கு மனு அனுப்பினார்.

பின்பு இது தொடர்பாக மேலும் விபரங்கள் கிடைக்கப்பெற்றேன். பெரியார் நூற்றாண்டு விழாவை மாவட்டம் தோறும் அரசு கொண்டாடிய போது திருவாரூர் மாவட்ட விழா தொடர்பாக 16.9.1979 ‘தமிழரசு’ இதழில் நன்னன் அவர்கள் ‘பெரியார் வரலாறு’ குறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார். திரு. நெ.து. சுந்தரவடிவேலு அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலான ‘நினைவு அலைகள்’ முன்னுரையிலும் இது குறித்த ஒரு பதிவைக் கண்டேன். இவை அனைத்தையும் சேர்த்து ஒரு மனு தயாரித்து ‘தமிழ்ச் சான்றோர் பேரவை’ நிறுவனர் அய்யா ஆனாரூனா அவர்களிடம் நானும் திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு. செந்தில் அவர்களும் அளித்தோம்.

மறு நாள் 25.8.2004 அன்று திருவாரூருக்கு நடைபயணம் வந்த திரு. வைகோ அவர்களிடம் இந்த மனுவை எனது முன்னிலையில் ஆனாரூனா அவர்கள் அளித்தார்கள். இம்மனுவை அங்கேயே படித்த வைகோ அவர்கள் வியப்படைந்தார்கள். இத்தோடு இந்நிகழ்வு முடிவடைந்துவிட்டது என்று நினைத்தேன்.

சரியாக ஒரு வருடம் கழித்து பெரியார் திடலில் 2.12.2005 நடந்த திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட திரு.வைகோ அவர்கள், திரு. நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள் எழுதிய பெரியார் வரலாற்று நூலைப் பற்றி விவரமாகப் பேசியிருக்கிறார். அந்நூல் வெளிவர தமிழக அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும்.
 
வைகோ பேச்சு
 
திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி அவர்களின் 73 ஆம் பிறந்த நாள் விழாவில் (2.12.2005) ம.தி.மு.க. பொதுச்செயலாளர் திரு. வைகோ அவர்கள் பேசிய பேச்சிலிருந்து......


‘எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராக இருந்த போது நெ.து. சுந்தரவடிவேலு அவர்கள் பெரியார் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக எழுதி, தமிழக அரசிடம் தந்து தட்டச்சுப் படிகள் ஒரு கல்வியாளரிடம் சிக்கி இருப்பதாக சொல்லுகிறார்கள். அதுவும் வெளிவரவில்லை’.

‘என்.டி. சுந்தரவடிவேலு சிறு அளவில் பெரியார் பற்றி ஒரு நூல் எழுதினார். அதே போல் புரட்சியாளர் பெரியார் என்று பேராசிரியர் ந. இராமநாதன் அவர்கள் எழுதியிருக்கிறார்’.

‘தந்தை பெரியாரைப் பற்றிக் கவிஞர் கருணாந்தம் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அது முழுமையான வாழ்க்கை வரலாற்று நூல் அன்று. பெரியாரோடு அவருக்கு உள்ள அனுபவங்களையும் இதரச் செய்திகளையும் தந்திருக்கிறார்’.

‘தந்தை பெரியார் அவர்களைப் பற்றியும் அவரது இயக்கத்தைப் பற்றியும் நிரம்ப நூல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் முழுமையாக அவரது வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கக் கூடிய நூல் ஒன்றும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது மிகுந்த வருத்தத்திற்குரிய செய்தி என்று நான் கருதுகிறேன்’. (விடுதலை 15.12.2005).

No comments: