Tuesday, July 13, 2021

பெரியார் நடத்திய முதல் விதவைத் திருமணம் (1909)

 பெரியார் நடத்திய முதல் விதவைத் திருமணம் (1909)


தம் 30 ஆவது வயதில் தம் குடும்பத்திலேயே நடத்தினார்

இதற்காக ஆறு ஆண்டு காலம் ஜாதியிலிருந்து நீக்கப்பட்டார்!


பெரியாரின் தந்தை வெங்கட்ட நாயக்கர் தம்பதிகளுக்கு 1877 செப்டம்பர் 28 இல் கிருஷ்ணசாமியும் 1879 செப்டம்பர் 17 இல் (பெரியார்) இராமசாமியும், 1881 இல் பொன்னுத்தாயும், 1891 இல் கண்ணம்மாவும் மக்கட் செல்வங்களாக ப் பிறந்தனர். இதற்கு முன் இரண்டு பிள்ளைகள் பிறந்து, பிறந்த உடனேயே மறைந்து விட்டனர்.


பொன்னுத்தாய் கல்யாண சுந்தர நாயக்கரை மணந்தார். கண்ணம்மா அவருடைய தம்பி மஞ்சள் மண்டி வணிகம் எஸ். இராமசாமி நாயக்கரை மணந்தார்.


பொன்னுத்தாயின் கணவர் தம் 25 ஆவது வயதில் மறைந்தார். பொன்னுத்தாய் ‡ கல்யாணசுந்தரம் தம்பதிகளுக்கு அம்மாயி அம்மாள், அப்பய்யன் என இரு மக்கள் பிறந்தனர்.


அம்மாயி அம்மாள் 9 வயதடைந்ததும் அக்கால முறைப்படி 12 வயது நிரம்பிய உறவினர் பையனுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். மணமகன் திருமணமான 30 ஆவது நாளிலே நோயால் தாக்கப்பட்டு திடீரென்று இறந்து விட்டான்.

அம்மாயி அம்மாள் தம் 9 ஆவது வயதில் விதவையானதை எண்ணி, எண்ணி, தாய் மாமனான பெரியார் ராமசாமி மனம் நொந்தார்.


இப்பெண்ணுக்கு வாழ்வு கொடுக்க வேண்டும் என்று பெரியார் விரும்பினார்.


இரண்டு மூன்று ஆண்டுகள் ஆனதும் குடும்பத்துக்குத் தெரியாமல் இப் பெண்ணுக்கு தந்திரமாகத் திருமணம் செய்து வைத்தார்.


பெரியார் எப்போது நாத்திகரானார், எப்பொழுது சீர்திருத்தவாதியானார் என்றெல்லாம் பலரும் கேட்கின்றனர்.


இது பெரியாருக்கும் கேள்விக்குறியாகத்தான் இருந்து வந்தது.


அவர் இயல்பாகவே நாத்திகராகவும், சீர்திருத்தவாதியாகவும் இருந்திருக்கிறார் என்பதை அவர் செயல்கள் எடுத்துக் காட்டுகின்றன!


பெரியாருக்கு முன் தோன்றிய சீர்திருத்தவாதிகள் எல்லாம் தம் கருத்துக்களை நீதி போதனையாகவே கூறியுள்ளனர். பெரியார் மட்டுமே அதற்காக இயக்கம் கண்டார்.


பெரியாரின் இயக்கப் பிரச்சார நடைமுறைகளைக் கண்டு வெறுப்புக் கொண்டவர்களும் அவர் சீர்திருத்தக் கருத்துக்களை விரும்பி ஏற்றனர்.


அவர் வாழ்க்கை, சீர்திருத்த அறிவுப் பிரச்சார வாழ்க்கையாகவே, அமைந்து விட்டது.

.....


முத்தமிழ்க காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் , பெரியார் தலைமையில் நடந்த திருமணம் ஒன்றை ‘முதல் சுயமரியாதைத் திருமணம்’ என்று குறிப்பிட்டு 1979 இல் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.


தந்தை பெரியார் இத் திருமணத்தை ‘பாதி சுயமரியாதைத் திருமணம்’ என்று கூறுகிறார்.

இத் திருமணம், தம் கட்டுரையில், 48 ஆண்டுகளுக்கு முன் (1931 இல்) நடந்ததாக அவர் குறிப்பிட்டாலும் அதற்கு இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இத் திருமணம் நடைபெற்றிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.


முதல் சுயமரியாதைத் திருமணம்


நாற்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பு இராமநாதபுரம் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சுக்கிலநத்தம் கிராமத்தில் துரைசாமி ரெட்டியார் மகனுக்கு சுயமரியாதைத் திருமணம் செய்து வைக்க பெரியாரும், நானும், அப்போதைய ‘விடுதலை’ ஆசிரியர் ஜெ.என். கண்ணப்பரும், காரைக்குடி முருகப்பாவும், சிதம்பரம் என். தண்டபாணிப் பிள்ளையும் ஆக ஐந்து பேர் சென்றிருந்தோம்.

மணமேடையில் மணமகன் வந்து உட்கார்ந்ததும், மாப்பிள்ளையின் இரு புறமும் இரண்டு பெண்களை அலங்காரத்துடன் அழைத்து வந்து உட்காரச் செய்தார்கள். ரெட்டியாரும் எங்களிடத்தில் வந்து, ‘திருமணத்தை நடத்தி வையுங்கள்’ என்றார்.

நான் பெரியாரைப் பார்த்து, ‘இது என்ன, ஒரு மாப்பிள்ளைக்கு இரண்டு பெண்கள்?’ என்று கேட்டேன்.

பெரியாரும் ரெட்டியாரைப் பார்த்து ‘ஏன் இப்படி?’ என்று கேட்டார்.


அதற்கு ரெட்டியார், ‘ஒன்று மாமன் மகள் ; ஒன்றை அத்தைப் பெண். இரண்டிலும் ஒன்றைவிட்டு ஒன்றைச் செய்தால் குடும்பத்தில் குழப்பம் வரும். அதனால் இப்படிச் செய்கிறேன்!’ என்றார்.


பெரியார் இதைக் கேட்டதும், ‘எங்களிடம், எப்படியோ போகட்டும்! ஐயர் இல்லாமல் கல்யாணம் செய்ய ரெட்டியார் சம்மதித்தாரே! அது போதும். அதுவே பாதி சுயமரியாதை’ என்று சொல்லி திருமணத்தை நடத்தி வைத்தார்.


நாங்களும் வாழ்த்தி வந்தோம். இது தான் நாங்கள் நடத்தி வைத்த முதல் சுயமரியாதைத் திருமணம்.

இயக்கம் கண்டதற்குப் பிறகு 1931 அல்லது அதற்கு முன் நடைபெற்ற இத் திருமணத்தை, பாதி சுயமரியாதைத் திருமணம் என்று பெரியார் சலிப்புடன் சொன்னாலும், தம் குடும்பத்தில் தம் சொந்தத் தங்கை மகள் அம்மாயிக்கு ‘முதல் சுயமரியாதைத் திருமணத்துக்கு’ 20 ஆண்டுகளுக்கு முன்பே முழு விதவைத் திருமணமாக, தம் முயற்சியில், தம் 30 ஆவது வயதில், 1909 இல்  நடத்தி வைத்திருக்கிறார் என்பது அவர் வாழ்வில் செய்த பெரும் புரட்சியாகும்.


1909 இல் பெரியார் சமுதாய சீர்திருத்தவாதியாகவோ, அரசியல் பிரமுகராகவோ, பரிணமிக்கவில்லை. ஈரோட்டில் குறிப்பிடத்தக்க அளவுக்கு அவர் பணக்காரப் பிரமுகராக இருந்தார்.


1909 ஆம் ஆண்டு தங்கை மகளுக்கு விதவைத் திருமணம் நடத்தி வைத்தது இவர் இயற்கையாகவே சீர்திருத்த வாதியாக இருந்தார் என்பதற்கு அடையாளமாகும்.


இதற்குத் தண்டனையாக அவர் தம் சுய ஜாதியிலிருந்து (கன்னட மொழி பேசும் பலிஜ நாயக்கர் வகுப்பு) 6 ஆண்டுகள் நீக்கி வைக்கப்பட்டார்.


இத்திருமணத்தை நடத்திய விவரத்தைத் தந்தை பெரியாரே தம் சொற்பொழிவொன்றில் கூறியுள்ளார். 

இச்சொற்பொழிவு 7.4.1959 விடுதலை நாளிதழில் வெளி வந்துள்ளது. 


(தி.வ. மெய்கண்டார், இளந்தமிழன், செப்டம்பர் 2005)


No comments: