Wednesday, December 1, 2021

மலாயா தமிழ் முன்னோடிகளும் பெரியார் வருகையும்-1

 புண்ணூற்றுக் கல்லடியும் சாணக் குண்டும்

பொறுத்தலருஞ் சொல்லடியும் புகழ்போற் கொண்டு

கண்ணாற்றில் கலஞ்செலுத்தும் கடுஞ்செய் கைபோல்

கைதூக்கித் தென்னவரை கரையி லேற்றி

தொண்ணூற்று மூன்றாண்டு தொடர்ந்தபின்னும்

துளங்காது துலங்குபகுத் தறிவுத் தொண்டால்

நண்ணூற்றைத் தாண்டவரும் நோற்ற லாற்றின்

நானிலத்துப் பெரியாரை வாழ்த்து வோமே!

(முதன்மொழியில் பாவாணர்)

என்று பாவாணரால் படம் அருமையாகப் படித்துக்காட்டப்பட்ட தந்தைப் பெரியாரின் வழியில் இன்று 2046 ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டையும் பொங்கல் விழாவையும் கொண்டாடும் மலேசிய மாந்த நேயத் திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவர் அய்யா நாக. பஞ்சு அவர்களே!

மலாயா தமிழ் முன்னோடிகளும் பெரியார் வருகையும் என்ற இந்த நூலில் உள்ள வரலாறும் மிகப்பெரியது, இந்நூல் உருவான வரலாறும் மிகப் பெரியது.

மலாயாவில் சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்புரை செய்து மக்களை நல்வழிப்படுத்த தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்று செயல்பட்ட மலாயா நாட்டின் தொடக்கக்காலத் தலைவர்களின் வரலாற்றையும், அவர்களிடம் அச்சீர்திருத்தக் கருத்துகளின் தாக்கம் ஏற்பட காரணமாக இருந்த தந்தை பெரியார் அவர்களின் மலாயா நாட்டின் வருகையையும் பதிவு செய்வதே இந்நூலின் நோக்கம்.

1929 இல் இம் மலாயா நாட்டிற்குப் பெரியார் வருகைத் தந்த போது அவரை வரவேற்றத் தலைவர்களில்  காந்தரசம் அ.சி.சுப்பையா, வள்ளல் உ.இராமசாமி நாடார், கோ.சாரங்கபாணி போன்றோருடன் அய்யா ரெ.ரா. அய்யாறு அவர்களும் இருந்திருக்கிறார்கள் என்பதும்,  மலாயா திராவிடர் கழகம் தோன்றுவதற்கு முன்பே பெரியார் பிறந்தநாள் விழாக்கள் சிறப்பாக நடைபெற்றிருப்பதும் அதில் அவர் உரையாற்றி யிருக்கும் செய்தியும் இந்நூலில் இருக்கிறது.

தமிழ்வரிவடிவ ஆராய்ச்சி என்ற தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்திற்குத் தோற்றுவாயாக இருந்த நூலையும், தமிழ்ச்சமுதாயச் சீர்திருத்தத்திற்கு சுந்தரமூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ் என்று நூலையும் எழுதி, இம் மலாயா நாட்டில் தமிழர்கள் வாழ்வாங்கு வாழ சீர்திருத்த இயக்கம் கண்ட தலைவர்களுள் முதன்மை யானவர் மலாயாப் பெரியார் அ.சி.சுப்பையா அவர்கள்.

மலாயாத் தமிழர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட தமிழர் சீர்திருத்தச் சங்கத்திற்கு ஒரு கட்டிடத்தை நன்கொடையாக வழங்கியவர் வள்ளல் உ.இராமசாமி நாடார். தமிழர் சீர்திருத்தச் சங்கத்தின் முதல் தலைவர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சமாதான நீதிபதி என்று சிறப்பிக்கப்பட்டவர். சப்பானியர் நடத்திய படையயடுப்பின் போது ஆங்கில அரசுக்கு நிதி உதவிகளை வாரி வழங்கியவர்.

முன்னேற்றம், இந்தியன் டெய்லி மெயில், தமிழ்முரசு போன்ற ஏடுகளை மலாயா நாட்டில் நடத்தியதோடு மட்டுமல்லாமல், பெரியாரின் குடிஅரசு இதழை இந்நாட்டில் பரப்பியதில் முதன்மையானவர் தமிழவேள் கோ.சாரங்கபாணி.  இம்மூன்று தலைவர்களும் ஒன்றிணைந்து மலாயா நாட்டின் தமிழர்களின் மேம்பாட்டிற்காக ஏற்படுத்திய சங்கமே தமிழர் சீர்திருத்தச் சங்கம்.

மூவார் மு. திருவேங்கடம் அவர்கள் கோ.சாரங்பாணி அவர்களை பற்றி ஒரு சிறிய நூல் எழுதியுள்ளார். தமிழவேள் அவர்களைப் பற்றி எழுதப்பட்ட முதல் மிகச் சிறந்த வரலாற்று நூல். தனித்தமிழ் நடையில், தமிழவேளின் பன்முகப் பார்வைகளை கொண்ட நூலாக அது இருக்கிறது.

மலேசியத் திராவிடர் கழகத்தின் முதல் தலைவர் பந்திங் நா.பள்ளிகொண்டான், ரெ.ரா. அய்யாறு ஆகியோர் பற்றிய சில குறிப்புகளும் இந்நூலில் ஆங்காங்கு இருக்கின்றன.

நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் அமைத்த சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசின் வெளியிடுகளின் முதன்மை ஆசிரியராக விளங்கியவர் தமிழறிஞர் சி.வீ.குப்புசாமி. இவருடைய திருமணம் குறித்த செய்திகளும் கட்டுரைகளும் குடிஅரசு இதழ்களில் வெளிவந்திருக்கிறது.

25 ஆண்டுகளுக்கு மேலாக மலேசியத் திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவராக இருந்து பணியாற்றி திருச்சுடர் கே.ஆர்.இராமசாமி அவர்கள் பற்றியக் குறிப்புகளும் கலியன் புதைக் குழி வழக்கும் இந்நூலில் ஆவணப்படுத்தப்படுத்தியிருக்கிறேன்.

தற்போது பரபரப்பாக பேசப்படும் பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் உள்ள கோலாலம்பூர் விவேகானந்தா ஆசிரமத்தில் 1929 ஆம் பெரியார் பேசியிருக்கிறார். இராமகிருஷ்ண மி­னில் சேர்ந்திருக்கும் பார்ப்பனர்களில் 100 க்கு 90 பேர் யோக்கியமற்றவர்கள் என்று முழங்கியிருக்கிறார்.

1930 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் நாள் வெளியான குடிஅரசு இதழில் பெரியாரின் சுற்றுப்பயண விவரங்களும் குறிப்புகளும் விரிவாக இடம் பெற்றிருக்கின்றன. அதில் குறிப்பிட்டுள்ள பகுதிகளை பார்வையிட நான் விரும்பினேன். அய்யா ரெ.சு.முத்தையா அவர்கள், அய்யா மு.கோவிந்தசாமி அவர்கள் துணையோடு பினாங்கு வரை எல்லாப் பகுதிகளுக்கும் என்னை அழைத்துச் சென்று பெரியார் வருகைப் பற்றி விவரித்தார்கள். கெடா மாநிலத்தில் அய்யா அசோகன் அவர்களும் கலியன் புதைக்குழி வழக்கிற்கு உறுதுணையாக இருந்த பட்டவர்த்து புஷ்பநாதன் அவர்களும் உடன் இருந்தார்கள்.

1954 இல் இரண்டாவது முறையாக பெரியார் மலாயா வந்த போது பினாங்கில் பேசுகிறார், நம் சமுதாய வாழ்வு சாஸ்திரத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. மனிதன் மூச்சுவிடுவதிலிருந்து தொட்டதெல்லாம் சாஸ்திரம். தமிழ்நாட்டில் சீர்திருத்தம் செய்வது கஷ்டமாய் உள்ளது. விஞ்ஞானத்தை ஏற்பவர்கள் சமுதாயச் சீர்திருத்தத்தை ஏற்க மறுக்கிறார்கள் என்கிறார் பெரியார்.

தைப்பிங் குந்தோங் அசோசியே­ன் மண்டபத்தில் பெரியார் பேசுகிறார், இரண்டொரு பத்திரிகை தவிர, மற்றவற்றிலெல்லாம் என் பேச்சை வெளியிடாமல் திருத்தியே போடுவார்கள். அப்போது நான் குடிஅரசு பத்திரிகையை நடத்தினேன். இந்த நாட்டில் 2000‡3000 பத்திரிகைகள் விற்பனையாயிற்று. நண்பர் சாரங்கபாணி மாதம் 300 சந்தாக்கள் வீதம் அனுப்பிக் கொண்டே வந்தார் என்கிறார் பெரியார்.

கோலக்கங்சாரில் பெரியார் பேசும் போது, முன்பு பாய்மரக் கப்பலில் வந்தோம். இப்போது புகைக் கப்பல் வந்துவிட்டது. ஆனால் இப்போதும் பாய்மரக்கப்பலில்தான் போவேன் என்றால் என்ன அர்த்தம்? முன்னேற்றத்திற்கு ஆரம்பக்காலத்தில் சற்று எதிர்ப்பு இருந்தாலும் வர வர மக்கள் திருந்தியே தீருவார்கள் என்று கூறுகிறார்.

பத்துகாஜாவில் உரையாற்றும் போது இம்மலாயா நாடு முன்பை விட அழகாக, முன்னேற்றமடைந் திருப்பதாகவே காணப்படுகிறது. காரணம் இங்குள்ள மக்களின் உணர்ச்சியே ஆகும் என்று எடுத்துக் காட்டுகிறார். 

கோலக்கிள்ளானில் பேசும்போது, இருக்கிற வரை அல்லது காந்தியைப் போல் என்னை யாரும் கொல்கிற வரை சமூகத்தில் கீழாக நசுக்கப்பட்டிருக்கும் மக்களை விடுவிக்கப் பாடுபட்டப்படிதான் கண்ணை மூடுவேன் என்கிறார்.

கிள்ளானில் இருந்த புக்கிட் ராசா லெட்சுமி தோட்டத்திற்கு செல்கிறார் பெரியார். அங்கிருந்த தோட்டத் தொழிலாளிகளைப் பார்த்தவுடன், மலாயாவில் கால் வைத்த பிறகு எத்தனையோ அதிகாரிகளைப் பார்த்தேன், செல்வர்களைப் பார்த்தேன், நகரவாசிகளைப் பார்த்தேன். ஆனால் உங்களைக் காண்பதில் ஏற்படும் திருப்தியும் மகிழ்ச்சியும் ஏற்படவில்லை. இப்படிப்பட்டவர்களைக் காணாமல் மலாயாவில் சுற்றுப்பயணம் செய்து என்ன பயன் என்றுகூட நான் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தேன் என்கிறார்.

தொழிலாளி மகன் தொழிலாளியாக, தொழிலாளி பேரன் தொழிலாளியாக இருக்கக் கூடாது. பண்டிகைகள் என்று நீங்கள் பாழாக்குகிற பணத்தை மகனின் படிப்புக்குச் செலவிடுங்கள் உருப்படலாம் என்கிறார்.

அக்கூட்டத்திற்கு ம.தி.க.முன்னாள் தேசியத் தலைவர் கோலக்கிள்ளான் ஆ.சுப்பையா தலைமை வகித்துள்ளார்.

சிரம்பான் கூட்டத்தில் பேசும் போது, மலாயாவில் வசிக்கும் தமிழர்கள் தம்உரிமையை நிலைநாட்டிக் கொள்ளவும், உயரிய நிலையை அடையவும், சீனர், மலாய்க்காரர்கள் போன்ற பிற சமூகத்தவர்களிடையே சமத்துவமாக வாழவும் கட்டாயம் பிரஜா உரிமை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பெரியார் அறிவுரைக் கூறினார்.

நாவல்பேஸ் பகுதியில் உரையாற்றும் போது, கடவுள் எண்ணம் அவசியம். தாயும் தந்தையும்தான் கடவுள். அவர்களுக்கு பக்தி செலுத்துவது என்பது மனிதனுக்கு மனிதன் அன்பு காட்டுவதும், நாணயம், ஒழுக்கம், உண்மை முதலியவற்றுடன் நடப்பதும்தான். மோசம் செய்யக் கூடாது, வஞ்சிக்கக் கூடாது. இதுதான் கடவுள் என்கிறார் பெரியார்.

இந்த நாட்டின் வளத்தில் தமிழர்கள் பங்கு கொள்ளாமல் இருக்கக் கூடாது. இதற்கு மக்கட்குக் கல்வி அவசியம். ஒரு பால் வெட்டும் தொழிலாளிப் பெற்றோர், தம் பிள்ளை கையில் உளியை எடுத்துக் கொடுக்கக் கூடாது. பேனாவை எடுத்துக் கொடுத்துக் கற்பிக்க வேண்டும். அலகு காவடி எடுப்பது போன்றவற்றை ஒழித்து மற்ற வகுப்பினரைப் போன்று முன்னேற்றமுடன் வாழ நமக்குள் ஒற்றுமை வேண்டும். காசு மிச்சம் செய்து பிள்ளைகட்கு கல்வி தர வேண்டும் என்ற அறிவுரை கூறுகிறார்.

இறுதியாக இந்நூலின் பின் அட்டைப் பற்றி சில குறிப்புகளைக் கூற விரும்புகிறேன், தமிழ்த்தாத்தா ச.சா.சின்னப்பனார் சிங்கப்பூர் பெரியார் தொண்டர். சிறந்த பாவலர். திருக்குறள் வகுப்புகளை மாணவர்களுக்கு இலவசமாக நடத்தியவர். அ.சி.சுப்பையா அவர்களின் நூலுக்கு வாழ்த்துரை வழங்கியிருப்பவர்.

கோ. இராமலிங்கம் அவர்கள் தமிழர் சீர்திருத்தச் சங்கத்தின் முன்னோடி தலைவர்களில் ஒருவர். சிங்கப்பூர்  திராவிடர் கழகத்தின் செயலாளர்களில் முதன்மையானவர் சு.தெ.மூர்த்தி. எனக்கு பல ஆவணங்கள் அவருடைய துணைவியார் சுசீலா அம்மா அவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்றேன்.

1954 இல் பெரியார் வந்த போது, சிங்கப்பூர் திராவிடர் கழகத் தலைவர் சே.நடராசன் அவர்கள் இல்லத்தில்  இப்படம் எடுக்கப்பட்டது.

இந்நூல் குறித்து இரெ.சு.முத்தையா அவர்கள், மறைந்து போன‡ மறந்து போன மாமனிதர்கள், அறிவியக்கச் சிந்தனையாளர்கள் சிலரை மீண்டும் மனதில் நிழலாடச் செய்யும் என்று கூறியுள்ளார்.

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இந்நூலின் ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு சரித்திரம் போல் அமைந்திருக்கிறது. தமிழ் இனம் படித்து அறிய வேண்டிய கருத்துப் பெட்டகம் இந்நூல் என்று வாழ்த்து கூறியிருக்கிறார்.

No comments: