Wednesday, December 1, 2021

கிள்ளான்!

 கிள்ளான்!

இப்பகுதியில் இருந்த ரப்பர் தோட்டங்களில் 1941 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொழிலாளர்கள் வாழ்நிலைக்காக நடத்தியப் போராட்டம் ஏப்ரல் 8 ஆம் நாள் முதல் கட்டமாகவும் மே மாதம் 6 ஆம் ஒரு முக்கியமான தலைவர் கைதானதால் இரண்டாம் கட்டமாகவும் முடிவுக்கு வந்தது. பின் மே மாதம் 8 ஆம் கலவரமாக வெடித்தது.  இத்தகைய எழுச்சிமிகு போராட்டங்களைப் பற்றி நிறைய நூல்கள் வெளி வந்துள்ளன. அய்யா மு.வரதராசு அவர்கள் முன் முயற்சியில் ‘1941 கிள்ளான் தொழிலாளர் கிளர்ச்சி’ என்று தமிழில் வெளிவந்தது. யஹச். ஈ. வில்சன் எழுதிய ஆங்கில மூலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்ட நூல் அது. அந்த புண்ணிய பூமி கிள்ளான்.

கிள்ளானிலே மலேசியத் திராவிடர் கழகத்தின் கிளை இயங்கி வந்துள்ளது. 1947 ஆம் ஆண்டு, நடைமுறைச் சிக்கல் காரணமாக கோலக்கிள்ளான் கிளையோடு இணைக்கப்பட்டது. இது குறித்த குறிப்பு ‘மலாயா தமிழ் முன்னோடிகளும் பெரியார் வருகையும்’ என்ற இந்நூலில் 123 ஆம் பக்கத்தில் உள்ளது.

1954 இல் இரண்டாம் முறையாக வருகை புரிந்த பெரியார், புக்கிட் ராசா லெட்சுமி தோட்டத்திற்கு செல்கிறார்.

புக்கிட் ராசா தோட்டத்தின் வாயில்களிலெல்லாம் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. தொழிலாளர்களும் அவர்தம் குடும்பத்தினரும் வாழ்த்தொலி எழுப்பி பெரியாரை வரவேற்கின்றனர். அப்போது அத் தோட்டத் தொழிலாளர்களிடம் பெரியார் பேசுகிறார்.

அங்கிருந்த தோட்டத் தொழிலாளிகளைப் பார்த்தவுடன், மலாயாவில் கால் வைத்த பிறகு எத்தனையோ அதிகாரிகளைப் பார்த்தேன், செல்வர்களைப் பார்த்தேன், நகரவாசிகளைப் பார்த்தேன். ஆனால் உங்களைக் காண்பதில் ஏற்படும் திருப்தியும் மகிழ்ச்சியும் அப்போது ஏற்படவில்லை. இப்படிப்பட்டவர்களைக் காணாமல் மலாயாவில் சுற்றுப்பயணம் செய்து என்ன பயன் என்றுகூட நான் சஞ்சலப்பட்டுக் கொண்டி ருந்தேன் என்கிறார்.

கடவுளிடம் பக்தி செலுத்துங்கள், அன்பு செலுத்துங்கள், கடவுளுக்குப் பயப்படுங்கள் வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. கடவுள் மனிதாக இருக்கிறார். நடமாடும் ஜீவன்களாக இருக்கிறார். நீங்கள் மனிதர்களிடம் காட்டும் அன்பை கடவுள் இருந்தால் கட்டாயம் ஏற்றுக் கொள்வார் என்று அறிவுகூறுகிறார்.

தொழிலாளி மகன் தொழிலாளியாக, தொழிலாளி பேரன் தொழிலாளியாக இருக்கக் கூடாது. பண்டிகைகள் என்று நீங்கள் பாழாக்குகிற பணத்தை மகனின் படிப்புக்குச் செலவிடுங்கள் உருப்படலாம் என்கிறார்.

கல்வி அறிவும் சுயமரியாதை எண்ணமும் பகுத்தறியும் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் உங்களை உயர்த்துமென்பதை மறந்துவிடாதீர்கள் என்று கூறுகிறார்.

அந்த புக்கிட் ராசா லெட்சுமித் தோட்டத்தைப் பார்க்க வேண்டும் என்று அய்யா பரமசிவம் அவர்களிடம் கூறினேன். தற்போது ஒரு சிறு பகுதியும் கோவிலும் இருக்கிறது. அதை சென்று பார்த்தோம்.

அருகாமையில் உள்ள காப்பாரில் வாழ்ந்த தமிழ் மக்கள் 1947 ஆம் ஆண்டு பெரியார் மலேசியா வருகை தர இருக்கிறார் என்ற அடிப்படையில் வசூல் செய்த தொகை 214 வெள்ளி 15 காசுகளை ஏழு ஆண்டுகள் கழித்து இந்த புக்கிட் ராசா லெட்சுமித் தோட்டத்திற்கு வந்து பெரியாரிடம் ஒப்படைக்கிறார்கள்.

1930 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் நாள் வெளியான ‘குடிஅரசு’ இதழில் பெரியாரின் முதல் சுற்றுப்பயண விவரங்களும் குறிப்புகளும் விரிவாக இடம் பெற்றிருக்கின்றன. அதில் குறிப்பிட்டுள்ள பகுதிகளை பார்வையிட நான் விரும்பினேன். அய்யா ரெ.சு.முத்தையா அவர்கள், அய்யா மு.கோவிந்தசாமி அவர்கள் துணையோடு பினாங்கு வரை எல்லாப் பகுதிகளுக்கும் என்னை அழைத்துச் சென்று பெரியார் வருகைப் பற்றி விவரித்தார்கள். கெடா மாநிலத்தில் அய்யா அசோகன் அவர்களும் கலியன் புதைக்குழி வழக்கிற்கு உறுதுணையாக இருந்த பட்டவர்த்து புஷ்பநாதன் அவர்களும் உடன் இருந்தார்கள்.

கோலப்பிறை ‘மலாகாப்’ தோட்டத்தில் கலியன் என்ற தாழ்த்தப்பட்ட தொழிலாளர் இறந்து போகிறார். அவருடைய உடல் பொது இடுகாட்டில் புதைக்கப்படுகிறது. உயர் சாதிக்காரர்களின் எதிர்ப்பின் காரணமாக அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடுகாட்டில் புதைக்கப்படுகிறது. இந்தச் சிக்கலை மலேசியத் திராவிடர் கழகம் கையில் எடுக்கிறது. வழக்கு தொடுக்கிறது. ம.தி.க. வழக்கில் வெற்றி பெற்று, கலியன் அவர்களின் குடும்பத்திற்கு நட்ட ஈடாக 1971 இலே 3000 வெள்ளி பெற்றுத் தருகிறார்கள்.

அதே 1971 ஆண்டு அக்டோபர் மாதம் பெரியவர் மருதமுத்து அவர்கள் தமிழகம் சென்று பெரியாரைச் சந்திக்கிறார். அப்போது இவ்வழக்கு குறித்து பெரியாரிடம் தெரிவிக்கிறார். அதைக் கேட்ட பெரியார், ‘ஓர் அரிசனத் தோழருக்கு இழைக்கப்பட்ட இழிவைத் தாங்க முடியாமல் கோர்டில் போய் நின்று, நியாயம் பெற்றிருக்கிறார்கள் மலேசியத் தமிழர்கள். கடல் கடந்து வாழ்கின்ற நம்மவர்கள் நம்ம கொள்கைகளை எப்படி மதிக்கிறார்கள்.  கடல் கடந்து வாழ்கின்ற மலேசியத் தமிழர்கள் கண்டுள்ள இந்த நியாயத்தை நீங்கள் எல்லோரும் போய் இங்க இருக்கிற பட்டி தொட்டியயல்லாம் சொல்லுங்க. இந்த கலியன் வழக்கு வெற்றிச் செய்திக் கேட்கிற போது எனக்கு இன்னும் நூறு வருசம் வாழ முடியும் என்ற தெம்பு உண்டாகுதையா’ என்று மனம் உருகுகிறார். இதை அய்யா மருதமுத்து அவர்கள் தனது ‘தமிழகப் பயணம்’ என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார்.  

மலாயாவில் வாழும் தமிழர்கள் தம் உரிமையை நிலைநாட்டிக் கொள்ளவும் உயரிய நிலையுறவும், சீனர், மலாய்க்காரர் போன்ற பிற சமூகத்தவரிடையே சமத்துவமாக வாழவும் கட்டாயம் பிரஜா உரிமை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பெரியார் சிரம்பான் கூட்டத்தில் பேசும்போது அறிவுரை கூறுகிறார்.

1929 இல் இம் மலாயா நாட்டிற்குப் பெரியார் வருகைத் தந்தபோது அவரை வரவேற்றத் தலைவர்களில்  காந்தரசம் அ.சி.சுப்பையா, வள்ளல் உ.இராமசாமி நாடார், கோ.சாரங்கபாணி போன்றோருடன் அய்யா ரெ.ரா. அய்யாறு அவர்களும் இருந்திருக்கிறார்கள் என்பதையும், அதில் அவர்கள் உரையாற்றியிருக்கும் செய்தியும் இந்நூலில் இருக்கிறது.

பெரியாரின் முதல் மலாயா வருகைக்குப் பிறகு 1930 ஆம் ஆண்டாக இருக்கலாம். மலாயாத் தமிழர்கள் செந்தூல் பகுதியில் உள்ள ‘மூங்கில் குத்து கம்பம்’ என்ற பகுதியில் ‘குடிஅரசு வாசக சாலை’ என்ற அமைப்பைத் தொடங்கியிருக்கிறாகள். அந்த பகுதி தற்போது ‘பம்பூ கார்டன்’ என்ற பெயரில் இருக்கிறது. அந்த பகுதியைத் தேடி நானும் அய்யா பரமசிவம் அவர்களும் அலைந்தோம். அது குறித்த இன்னும் சில குறிப்புகளைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.

‘தமிழ்வரிவடிவ ஆராய்ச்சி’ என்ற தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்திற்குத் தோற்றுவாயாக இருந்த நூலையும், தமிழ்ச்சமுதாயச் சீர்திருத்தத்திற்கு ‘சுந்தரமூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ்’ என்று நூலையும் எழுதி, இம் மலாயா நாட்டில் தமிழர்கள் வாழ்வாங்கு வாழ சீர்திருத்த இயக்கம் கண்ட தலைவர்களுள் முதன்மை யானவர் மலாயாப் பெரியார் அ.சி.சுப்பையா அவர்கள்.

மலாயாத் தமிழர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட தமிழர் சீர்திருத்தச் சங்கத்திற்கு ஒரு கட்டிடத்தை நன்கொடையாக வழங்கியவர் வள்ளல் உ.இராமசாமி நாடார். தமிழர் சீர்திருத்தச் சங்கத்தின் முதல் தலைவர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ‘சமாதான நீதிபதி’ என்று சிறப்பிக்கப்பட்டவர். சப்பானியர் நடத்திய படையயடுப்பின் போது ஆங்கில அரசுக்கு நிதி உதவிகளை வாரி வழங்கியவர்.

‘முன்னேற்றம்’, ‘இந்தியன் டெய்லி மெயில்’, ‘தமிழ்முரசு’ போன்ற ஏடுகளை மலாயா நாட்டில் நடத்திய தோடு மட்டுமல்லாமல், பெரியாரின் ‘குடிஅரசு’ இதழை இந்நாட்டில் பரப்பியதில் முதன்மையானவர் தமிழவேள் கோ.சாரங்கபாணி.  இம்மூன்று தலைவர்களும் ஒன்றிணைந்து மலாயா நாட்டின் தமிழர்களின் மேம்பாட்டிற்காக ஏற்படுத்திய சங்கமே ‘தமிழர் சீர்திருத்தச் சங்கம்’.

மலேசியத் திராவிடர் கழகத்தின் முதல் தலைவர் பந்திங் நா.பள்ளிகொண்டான், சட்ட விதிகளை வரைத்து ம.தி.க.வை பதிவு செய்த அய்யா ரெ.ரா. அய்யாறு ஆகியோர் பற்றிய சில குறிப்புகளும் இந்நூலில் ஆங்காங்கு இருக்கின்றன.

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அமைத்த ‘சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசின்’ வெளியிடுகளின் முதன்மை ஆசிரியராக விளங்கியவர் தமிழறிஞர் சி.வீ.குப்புசாமி. இவருடைய திருமணம் குறித்த செய்தி களும் கட்டுரைகளும் ‘குடிஅரசு’ இதழ்களில் வெளிவந்திருக்கிறது.

25 ஆண்டுகளுக்கு மேலாக மலேசியத் திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவராக இருந்து பணியாற்றிய திருச்சுடர் கே.ஆர்.இராமசாமி அவர்கள் பற்றியக் குறிப்புகளையும் இந்நூலில் ஆவணப்படுத்தி யிருக்கிறேன்.

இறுதியாக இந்நூலின் பின் அட்டைப் பற்றி சில குறிப்புகளைக் கூற விரும்புகிறேன், தமிழ்த்தாத்தா ச.சா.சின்னப்பனார் சிங்கப்பூர் பெரியார் தொண்டர். சிறந்த பாவலர். திருக்குறள் வகுப்புகளை மாணவர் களுக்கு இலவசமாக நடத்தியவர். அ.சி.சுப்பையா அவர்களின் நூலுக்கு வாழ்த்துரை வழங்கியிருப்பவர்.

கோ. இராமலிங்கம் அவர்கள் தமிழர் சீர்திருத்தச் சங்கத்தின் முன்னோடி தலைவர்களில் ஒருவர். சிங்கப்பூர்  திராவிடர் கழகத்தின் செயலாளர்களில் முதன்மையானவர் சு.தெ.மூர்த்தி. நான் பல ஆவணங்கள் அவருடைய துணைவியார் சுசீலா அம்மா அவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்றேன்.

இப்படம் 1954 இல் பெரியார் வந்தபோது, சிங்கப்பூர் திராவிடர் கழகத் தலைவர் சே.நடராசன் அவர்கள் இல்லத்தில்   எடுக்கப்பட்டது.

கடந்த 25.07.2015 அன்று மறைவுற்றார் கப்பலோட்டித் தமிழன் வ.உ.சிதம்பரனாரின் கடைசி மகன் வாலேசுவரன்.  88 அகவை கடந்தவர். 2012 ஆம் ஆண்டில் நான் என் குடும்பத்தாருடன் அவரைச் சந்தித்தேன். தமது முதுமையையும் பொருட்படுத்தாது இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கினார். 1936 ஆம் ஆண்டு கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சிதம்பரனார் இறந்தபின் அவரது குடும்பத் துயரைப் போக்க இந்த மலாயா நாட்டிலிருந்து தமிழர் சீர்திருத்தச் சங்கத்தினர் ஒரு குழு அமைதத்து நிதி திரட்டி, 1938 ஆம் ஆண்டு 500 வெள்ளி உண்டியல் மூலம் அனுப்பியிருக்கிறார்கள். அந்த செய்தியும் இந்நூலில் உள்ளது.

மறுமலர்ச்சி தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இந்நூலின் ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு சரித்திரம் போல் அமைந்திருக்கிறது. தமிழ் இனம் படித்து அறிய வேண்டிய கருத்துப் பெட்டகம் இந்நூல் என்று வாழ்த்து கூறியிருக்கிறார்.

இது முதல் தொகுதிதான். நிறைய ஆவணங்களை வைத்திருக்கிறேன். உங்கள் ஆதரவை எதிர் நோக்குகிறேன். 

நன்றி வணக்கம்.

No comments: