Tuesday, January 25, 2022

சுயமரியாதைச் சுடரொளிகள்


சுயமரியாதைச் சுடரொளிகள் ( தொகுதி 1 ) - அ. இறையன் - திராவிடர் கழக வெளியீடு - பக்கங்கள் 320 - நன்கொடை ரூ 300/

●  தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றிய இயக்கம் - திராவிட இயக்கம்! முறையான வரலாறு இல்லாத தமிழினத்தில், பெரியாரின் கருஞ்சட்டைப் படையில், திராவிட இயக்கத்தில் தங்களை இணைத்து வரலாறு படைத்தவர்களோ  ஏராளம் ! தலைவர்களாக, தளபதிகளாக, கொள்கை வீரர்களாக, படை வீரர்களாக, வீராங்கனைகளாக தன்னலமின்றி தன்னை அர்ப்பணித்தோர் ஏராளம், ஏராளம் !

●  திராவிட இயக்கத்தின் அந்த வீர மாந்தர்களை, தியாக செம்மல்களை, சுயமரியாதைச் சுடரொளிகளைப் பற்றியும், அவர்களின் சுருக்கமான வரலாற்று குறிப்புகளையும் பதிவு செய்து, ஒரு காலப் பெட்டகமாக படைக்கப்பட்ட நூல்தான் இது. நூலை பெரியார் பேருரையாளர், பேராசிரியர் அ. இறையன் அவர்கள் மிகவும் அக்கறையோடும், அர்ப்பணிப்போடும் எழுதியிருப்பதை நாம் உணர  முடிகிறது.

●  இந்த முதல் தொகுதியில் - 178 சுயமரியாதை இயக்க வீர, வீராங்கனைகளின் வாழ்க்கை குறிப்புகள் தரப்பட்டுள்ளன. இதன் முதல் பதிப்பு 1981ல் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இயக்கத்தின் முன்னோடிகள், தலைவர்கள், தொண்டர்கள் பற்றிய தகவல்கள் நிறைய உள்ளன. ஒவ்வொன்றும் முத்துக்கள் ! கழகத்தின் சொத்துக்கள் !

●  திராவிட இயக்க முன்னோடி ஆளுமைகள் வரிசையில், இந்த தலைவர்களைப் பற்றியெல்லாம் அறிந்து கொள்ள முடிகிறது - 

●  அன்னை நாகம்மையார் | அன்னை மணியம்மையார் | அஞ்சாநெஞ்சன் அழகிரிசாமி | கைவல்ய சாமியார் | ஏ. டி. பன்னீர் செல்வம் | தோழர் ம. சிங்காரவேலர் | பேரறிஞர் அண்ணா | பாவேந்தர் பாரதிதாசன் | மூதாட்டி இராமாமிர்தம் அம்மையார் | குத்தாசி குருசாமி | சாமி. சிதம்பரனார் | கோவை. அய்யாமுத்து | தோழர் ப. ஜீவானந்தம் | என். வி. நடராசன் | சி. பி. சிற்றரசு | ஏ. வி. பி. ஆசைத்தம்பி | நடிகவேள் எம். ஆர். ராதா | கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் | சா. ரா. கண்ணம்மாள் | புலவர் குழந்தை | ஈ. வி. கி. சம்பத் | இப்படி முன்னோடிகளின் பட்டியல் நீளுகிறது !

●  திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்கு முன்னோடி தலைவர்கள் எந்த அளவு காரணமாக இருந்தார்களோ, அவற்றிற்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் இருந்தது - இயக்க தொண்டர்களின் பங்கு. அவர்களின் அர்ப்பணிப்பும், சேவையும், மன உறுதியும் யாருக்கும் சளைத்ததல்ல. பணம், பதவி, அந்தஸ்து, கௌரவம் போன்றவைகளை நோக்கி செல்லாமல், பெரியார் வழியில், பகுத்தறிவு பாதையில் தங்கள் வாழ்நாளையே அர்ப்பணித்த, சுடரொளிகள் சிலரின் வாழ்க்கை குறிப்புகள்,  தெரிவதற்கும், தெளிவதற்கும் - 

1) சுயமரியாதை இயக்கத்திற்கு தூணாக, போர்வாளாக, சூழ்ச்சிகளை முறியடிக்கும் வீரராக திகழ்ந்தவர், மாயவரச் சிங்கம் என பெயர் பெற்ற, மாயவரம் சி. நடராசன் ( 1902 - 1937 )

2) முதலாம் இந்தி எதிர்ப்பு போராட்டதின் முதல் ' சர்வாதிகாரி ' யாக பொறுப்பேற்று போராட்டத்தை நடத்தி, கைதாகி, 18 மாதங்கள் சிறையில் வதைப்பட்டு, வெளியே வந்த பின்னே வெற்றி வீரராக வாழ்ந்தவர், நெல்லை சி. டி. நாயகம் ( 1878 - 1944 )

3) சிவகங்கையில், ' முதல் ஆதிதிராவிட மாநாட்டை ' ஏற்பாடு செய்து, ஆதிதிராவிட மக்களை தாழ்வுபடுத்தும் பார்ப்பனருக்கும், உயர் ஜாதியினருக்கும் எச்சரிக்கை விடுத்து, நடத்தி காட்டியவர், வழக்கறிஞர் சிவகங்கை எஸ். இராமச்சந்திரன் ( 1884 - 1933 )

4) நீடாமங்கலத்திலுள்ள வைணவக் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட தோழர்களை துணிச்சலாக அழைத்து சென்ற வீரர், மாயவரம் சித்தார்காடு கே. இராமையா ( 1903 - 1974 )

5) திராவிடக் கருத்துக்களை தனது ' நகர தூதன் ' இதழில் நையாண்டியும் கிண்டலுமாக எழுதி பெயர் பெற்றவர், மணப்பாறை ' பேனா நர்த்தனம் ' ரெ. திருமலைசாமி ( 1901 - 1971)

6) மத மூடநம்பிக்கைகளுக்கு எதிராக, மறுமணம் - கலப்பு மணம் - காதல் மணம் - சடங்கொழித்த மணம் - சிக்கன மணம் என்ற அய்வகைத் தன்மை கொண்ட திருமணத்தை, தமிழ் நாட்டிலேயே முதன் முறையாக தனக்கு நடத்தி காட்டிய செயல்வீரர், காரைக்குடி சொ. முருகப்பர் ( 1893 - 1956 ). தந்தை பெரியார் தலைமையில் முருகப்பர் - மரகதவல்லி திருமணம் 29.06.1929ல் நடைபெற்றது !

7) இந்தி எதிர்ப்பு போரில் தன் துணைவியாரையும் ஈடுபடுத்தி, 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றவரும், சீரிய எழுத்தாளருமான முதுகுளத்தூரை சேர்ந்தவரும், புகழ் பெற்ற ' பராசக்தி ' நாடகத்தை படைத்தவர் பாவலர் பாலசுந்தரம் ( 1907 - 1972 )

8) இனமானம் காக்க இந்தி எதிர்ப்பு போரில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்டு, கடுங்காவல் கொடுமையால் தங்கள் உயிரை பலிதந்த, மொழிப்போர் தியாகிகள், மாவீரர்கள், தாளமுத்து ( மறைவு 11.03.1939 ) மற்றும் நடராசன் ( மறைவு 15.01. 1939 )

9) தமிழகத்துக்கு வந்த நேருவுக்கு, இயக்க தோழர்களுடன் கருப்புக் கொடி காட்டிய போது, பார்ப்பன மற்றும் ஆணவக் கைக்கூலிகளால் கொடூரமாக தாக்கப்பட்டும், இறுதிவரை இயக்கத்துக்கு பாடுபட்ட, திருச்சி ஃபிரான்சிஸ் ( 1910 - 1963 ). இவர் மறைந்த பின்பு, இறுதி ஊர்வலத்தில் தந்தை பெரியார் கலந்து கொண்டார்!

10) இந்திய அரசியல் சட்ட எரிப்புக் கிளர்ச்சியில் பங்கு பெற்று, கைதாகி, சிறை சென்று, சிறைக் கொடுமைகளின் விளைவாக, உடல்நலன் சீரழிந்து, மரண மடைந்த கொள்கை வீரர், திருவையாறு மஜீத் ( 1935 - 1958 )

●  திராவிட கொள்கை பற்றாளர்கள், பெரியாரின் பெருந் தொண்டர்களின் தியாகத்தால் உருவானது - திராவிட இயக்கம் !

சுயமரியாதை இயக்கம் முதல் திராவிடர் கழகமாக பரிணாமம் பெற்ற பின்பும், தன்னலமற்ற கருஞ்சட்டை வீரர்களின் வாழ்வும் தியாகமும் இணையற்றது !

அந்த சுயமரியாதைச் சுடரொளிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த இந்த நூலும் இணையற்றது !

பொ. நாகராஜன். சென்னை.

06.01.2022.

********************************************

No comments: