Tuesday, July 12, 2022

டாக்டர் நாவலர் இரா. நெடுஞ்செழியன்

டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன்

...சு. குமாரதேவன் ...

* தனது ஒன்பதாவது வயதில் (1929) செங்கல்பட்டில் நடந்த முதல் சுயமரியாதை மாநாட்டில் தன் தந்தையாருடன் கலந்து கொண்டு நாவலர் பார்வையாளராகப் பங்கேற்றார். பின்பு அவர் பேசாத ஊர், பங்கேற்காத இயக்கக் கூட்டங்கள் இல்லை என்ற நிலையை உருவாக்கினார்.

* நாவலர் என்ற அடைமொழி அண்ணா அளித்ததாகும். சமயச் சொற்பொழிவில் சிறந்த ஆறுமுகநாவலர், சபாபதி நாவலர் மற்றும் இலக்கியச் சொற்பொழிவில் நாவலர் சோமசுந்தர பாரதியார் என்று சிலருக்கு மட்டுமே இருந்த பட்டம் நாவலர் நெடுஞ்செழியனுக்குப் பொருந்தியது. இலக்கியம், வரலாறு, சமயம், சட்டம், சமுதாயம் என்று எந்தத் தலைப்பிலும் ஆழமான, பொருட்செறிவான நகைச்சுவையுடன் கூடிய உரை என்பது நாவலரின் தனித்தன்மை. இதனால் அவர் பேச்சைக் கேட்க மக்கள் திரண்டு வந்தனர். கைகளை நீட்டி,குறுக்காக வளைத்து, உயரே தூக்கி ஏற்ற இறக்கத்தோடு பேசுவதை இன்றும் அவர் பேச்சை நேரில் பார்த்துக் கேட்டு ரசித்தவர்கள் அதே ரசனையோடு சொல்வார்கள்.

* ஆறடி உயரம், ஆஜானுபாகுவான தோற்றம், மூக்கின் கீழே நடுவில் அடர்த்தியாகவும் பக்கவாட்டில் கோடாகவும் செல்லும் ஒரு மாதிரியான மீசை, நீளமான காலர் இல்லாத ஜிப்பா, நீளமான இரு பக்கமும் தவழும் துண்டு என பார்க்க கம்பீரமாக இருப்பார். குறிப்புகள் இல்லாமல் எந்தக் கூட்டத்திலும் பேச மாட்டார். அவர் பேச்சைக் கேட்டவர்கள் அந்தப் பேச்சின் ரீங்காரம் அவர் பெயரைக் கேட்கும் போதும், வாசிக்கும் போதும் உணர்வர்.

* 11-07-1920 இல் பட்டுக்கோட்டை அருகே திருக்கண்ணபுரம் என்ற ஊரில் ராஜகோபாலன் என்ற நீதிக்கட்சி பிரமுகருக்கு நாராயண சாமி என்ற இயற்பெயருடன்  மகனாகப் பிறந்தார். ஒரு தமக்கை, இரு தம்பிகள், ஒரு தங்கை என உடன் பிறந்தோர் அனைவரும் திராவிடர் இயக்கக் கொள்கைளில் பற்றுள்ளோர்.இவர் தம்பி சீனிவாசனும் திராவிடர் இயக்கப்பற்றால் நெடுஞ்செழியன், செழியன் என்று பெயர் மாற்றிக் கொண்டனர். நாவலரின் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவத் தோழர்கள் பேராசிரியர் அன்பழகன் மற்றும் புலவர் நன்னன் ஆகியோர்.அண்ணாமலைப் பல்கலையில் திராவிடர் இயக்கம் காலூன்றக் காரணமானவர்களில் நாவலர் பங்கு அதிகம்.

* இவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படிக்கும் போதே முதல் மாணவர். இலக்கியம், வரலாறு, அரசியல் விஞ்ஞானம் போன்றவற்றில் எந்தக் கேள்வியைக் -கேட்டாலும் மடை திறந்த வெள்ளம் போல் சொற்பொழி வாற்றுவதில் வல்லவர். நன்றியுரை ஆற்ற நாவலரைத் தான் அழைப்பார்கள். அந்த நன்றியுரை இரண்டரை மணி நேரம் வரை நீளும்.மதுவுண்ட வண்டு போல் மாணவர்கள் மயங்கிக் கேட்பர்.

* நாவலரின் பேச்சைக் கேட்டதிருவாரூர்க் கட்சிக்காரர் ஒருவர், மாணவர்களான நாவலரையும், பேராசிரியர் அன்பழகனையும் அழைத்து பொதுக் கூட்டத்தில் பேச வைத்தார். அவர் வேறு யாருமல்ல., கலைஞர் தான்.

* தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால் சிறந்த பேச்சாளராகலாம் என்பதற்கு நாவலர் வாழ்வு சிறந்த உதாரணம்.ஆரம்பத்தில் திக்குவாய்ப் பிரச்சினையால் சரியாகப் பேசமுடியாமல் தவித்த இவருக்கு முறையாகப் பேச்சுப் பயிற்சி தந்தவர் சக மாணவரான க.இராமையா (பின்னாளில் பேராசிரியர் அன்பழகன்).வேகமாகப் பேசும்போது திக்கித் திணறி வார்த்தைகள் வராதபோது 'ங்' என்று ஒரு விதமாக சத்தம் வந்தது. அதையே அவரது பேச்சுப் பாணியாகக்  கொண்டு வெற்றி பெற்றார். பலர் அவர் போல் பேச வேண்டும் என்று பயிற்சி எடுத்தனர்.

* சிதம்பரம் அண்ணாமலைப் பல் கலைக் கழகத்தில் சுயமரியாதை இயக்கக் கருத்துக்களைப் பரப்பிய மாணவர்கள் நன்னன், செழியன், அன்பழகன் வரிசை யில் முதன்மைப் பங்கு வகித்தவர் நாவலர்தான். தந்தை பெரியார், அண்ணா, பட்டுக்கோட்டை அழகிரி, சி.பி. சிற்றரசு என்று பல திராவிட இயக்கத்தலைவர்களை அழைத்து சொற்பொழிவாற்ற வைத்தார்.

* பெரியாரைத் தன் கொள்கைத் தலைவராக ஏற்றுக் கொண்டு அவரோடு எம்.ஏ.பட்டம் பெற்றவுடன்  நான்கு ஆண்டுகள் உடனிருந்து பணிபுரிந்தார். சிக்கனத்தில் பெரியாரையும் மிஞ்சும் வாழ்வு வாழ்ந்தார்.

* 1937ல் அண்ணா பற்றி கேள்விப்பட்டு அவரது பேச்சைக் கேட்டு அவரிடம் பழகியது 1943ல் தான். அப்போது தொடங்கிய பழக்கம், 1969 வரை தொய்வின்றித் தொடர்ந்தது. இலக்கியம் பற்றி நாவலரைப் பேசச் சொல்லி அண்ணா கேட்டு இன்புறுவார். ஆரம்பத்தில் படித்தவர்கள் மட்டுமே கேட்டு இன்புற்ற பேச்சு பெரியாரால் பாமரரும் கேட்டு இன்புற மாற்றப்பட்டது.

* கல்லூரிக் காலங்களில் நீண்ட இளம் தாடி, கருப்புநிற புஷ்கோட், ஆறடிக்கும் மேலான உயரம் என்று நாவலரின் தோற்றம் மிக வித்தியாசமாக இருக்கும்.  பேச ஆரம்பித்தால் பல இடங்களில் கலவரமும் வரும். ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் வெட்டு ஒன்று; துண்டு இரண்டு என்று, தான் சொல்ல வந்த கருத்தைச் சொல்லி விட்டுத்தான் அமர்வார், மாணவரான இளந்தாடி நெடுஞ்செழியன்.

* சங்க இலக்கியங்கள், ராமாயணம், பெரியபுராணம் மற்றும் இலக்கண நூல்களைப் படித்து அதை மனப்பாடமாக உரிய இடத்தில் சொல்லி தன் கொள்கைக்கு மிகப்பெரிய ஆதரவைத் திரட்டுவார் நாவலர். மனப்பாடம் எப்படி செய்வது என்பது பற்றி கேட்டால் முயற்சியும் ஈடுபாடும் இருந்தால் எல்லாம் வரும் என்று சொல்லி அதற்குத் துணையாக சங்க இலக்கியப் பாடலொன்றைக் கூறுவார்.

* பாரதிதாசன் பாடல்களை நாவலர் போல் பட்டி தொட்டி எங்கும் பரப்பியவர் யாரும் இல்லை எனலாம். பேச்சு ஆரம் பிக்கும் போதும், இடையிலும், முடிக்கும் போதும் பாரதிதாசன் பாடல்களை எழுச்சியோடு பாடி, தான் சொல்லவரும் கருத்துக்கு வலுசேர்ப்பார் நாவலர். உணர்ச்சி வயப்பட்டு பாரதிதாசன் பாடல்களை பேசிடும் அழகே தனி. ஆரம்பிக்கும் போதும் இடையிலும் முடிவுறும் போதும் பாரதிதாசன் கவிதைகள் இன்றி முற்றுப்பெறாது அவர் பேச்சு.வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும் என்று முடிக்கும் போது கேட்கும் கூட்டம் உணர்வு பொங்க முழுக்கமிடும் அதிசயம் அவர் பேச்சுக்கும்  உண்டு.

* இடி மழைபோல், அருவி போல் காட்டாற்று வெள்ளம் போல் நாவலர் பேசினாலும் நகைச்சுவை அங்கே இழையோடும். அந்த நகைச்சுவை மாற்றுக் கட்சியினராலும் ரசிக்கப்படும். அப்போதைய அரசியலை இணைத்து அதில் சேர்த்து விட்டு கூட்டம் ரசித்து சிரிக்கும் போது அமைதியாகப் பார்த்து ரசித்து அடுத்த செய்திக்குப் போவார்.

* நாவலரின் தனித்தன்மையான பேச்சைக் கண்டு கேட்டு வியந்த பெரியார், நாவலரை தன்னுடன் சுற்றுப்பயணத்திற்கு அழைத்துச் சென்றார். அண்ணா அவரது பேச்சை வியந்து நாவலரை நடமாடும் பல்கலைக்கழகம் என்று அழைத்துப் பெருமைப்படுத்தினார். அவர் பேசாத ஊர் இல்லை. அந்தந்த ஊருக்கேற்ப, மக்களின் மனநிலையறிந்து பேசி அடுத்த ஊர் சென்றவுடன் அவர் பேசியதுநகர் முழுவதும் பிரபலமாகி இருக்கும்.

* "சும்மா"என்ற ஒரு வார்த்தையை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு மணி நேரம் நம் வயிறு வலிக்கும் அளவிற்கு சிரிக்க வைத்துப் பேசுவார். இது சும்மா பேசியது அல்ல நீங்கள் சிந்திக்கப் பேசியது என்று இறுதியில் ஒரு "பஞ்ச்"வைப்பார்.

*  அண்ணா, நாவலரைப் பொதுச் செயலாளராக்கி 'தம்பி வா' தலைமையேற்க வா. உன் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடக்கிறேன் என்று அழைத்தார். தம்பிக்கு எழுதிய பல கடிதங்களில் நாவலரின் பெருமைகளைப் பல படப் புகழ்ந்திருப்பார்.

* 1957ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சேலத்தில் 207 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் நாவலர். நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் அண்ணா "ஒரு தங்கத்தை உங்களுக்கு அளித்தேன் அதைப் பயன்படுத்தாமல் என்னைப்பங்கப்படுத்தி விட்டீர்கள்" என்று வருத்தப்பட்டுப் பேசினார்.

* இலக்கிய உலகிற்கு நாவலர் அளித்த அற்புதமான கொடை அவரது திருக்குறள் உரை, பாவேந்தர் கவிதைகள் திறனாய்வு, திராவிட இயக்க வரலாறு போன்ற நூல்களாகும், திருக்குறளில், நன்கு ஆழங்கால்பட்ட நாவலர், திருக்குறள் மனு தர்மத்திற்கு எதிரான நூல் என்று ஒரு சிறந்த ஆய்வுரையினை அளித்திருப்பார். மதக்கருத்து குறளில் இல்லை என்பதை தனது நெடிய ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளார். இறை, ஊழ், தாமரைக்கண்ணான், இந்திரன் போன்ற இந்துமதம் சம்மந்தமான கருத்துக்கள் உள்ளன என்பதை மறுத்து அவர் சொன்னதற்கு இன்றுவரை யாரா லும் மாற்றுக் கருத்து சொல்ல முடிய வில்லை.

* அரசியல் வாழ்வில் பல மாறுபாடு களை எடுத்திருந்தாலும் அடிப்படை திராவிடர் இயக்கக் கொள்கைளில் இறுதி வரை மாறாமல் இருந்தார் நாவலர்.

* திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணியின்  "கீதை யின் மறுபக்கம்"என்ற நூல் அறிமுக விழாவில் அவர் ஆற்றிய ஆய்வுரை போற்றத்தக்க ஒன்று. அந்தப் பேச்சின் ஒலிவடிவம் கேட்போர் கீதை பற்றிய தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்வர். ஆணித்தரமாக, தக்க சான்றுகளோடு, சரளமாக அவர் கூறிய கருத்துக்கள் தர்க்கத்தின் இலக்கணம் என்று கூறலாம்.

* தன் அமைச்சர் பதவிக்காலத்தில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் அளிக்கப் பட்ட வரவேற்பை  ஏற்க மறுத்த நாவலர், தனக்கிட்ட பணியான ஆய்வுப் பணியை சிறப்புடன் செய்து முடித்தார். இது அப் போது பலத்த சர்ச்சையை உருவாக்கியது.

அப்பொழுது "சபாஷ் சபாஷ் நெடுஞ்செழியன்" என்று பாராட்டினார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார். கோப்புகளைக் கையாள்வதிலும், முடிவெடுப்பதிலும் நாவலர் விரைந்து சட்டத்திற்குட்பட்டு முடிவெடுப்பார்.

* பெரியாரின் அணுக்கத் தொண்டராக இருந்ததால், தன் திருமணத்தைக்கூட திருமணம் முடிந்தவுடன் தான் அறிவித்தார். ஏன் உங்கள் திருமணத்திற்கு என்னை அழைக்கவில்லை என்று கேட்ட தன் நண்பரிடம், எனக்குத் தானே திருமணம் அதில் உங்களுக்கு என்ன வேலை என்று கேட்டு வாயடைத்தார். சிக்கனம் என்பது திருமணத்திலும் இருக்க வேண்டும் என்பது நாவலரின் திடமான கருத்து. 

ஆயிரக்கணக்கான சுய மரியாதைத் திருமணங்களை நடத்திய நாவலர், மதிமுக தலைவர் வைகோ, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் திருமணங்கள் நாவலர் நடத்திய திருமணங்களே.ஆடம்பரமாக நடக்கும் திருமணங்களில் கலந்து கொண்டு ஆடம்பரம் தேவையில்லை என்பதை தன் பாணியில் இடித்தும் காட்டுவார்.

* நாவலர் எழுதிய நூல்களில் "மதமும் மூடநம்பிக்கையும் "

என்ற நூல் மிகச் சிறப்புடையது. தன் வாழ்க்கை வரலாற்றை "என் வாழ்வில் கண்டதும் கேட்டதும் " என்று எழுதினார். ஒரே தலைப்பைப் பலமுறை பேசினாலும், ஒவ்வொருமுறையும் அந்தப் பொருள் பற்றி வித்தியாசமாகக் குறிப்பில்லாமல் பேசமாட்டார்.

 *பகுத்தறிவாளர்கள்

பன்னெடுங்காலம் வாழ்பவர்கள் என்பதற்கு அவர் கூறும் எடுத்துக்காட்டுக்கள், கேட்க மலைப்பாக இருக்கும் இறுதியாக பெரியார் வாழ்ந்தது மிக அதிகம் என்று முடிப்பார். நாவலரும் 80 வயதை தாண்டி 2000ஜனவரி 12ஆம் நாள் மறைந்தார். அதற்கு முன் சென்னை பெரியார் திடலில் 31.12.1999 அன்று திராவிடர் கழகம் நடத்திய புத்தாயிரம் நிகழ்ச்சியில் இறுதியாகக் கலந்து கொண்டு பேசினார். நாவலர் என்னும் பெரியார் தொண்டரின் இறுதிப் பேச்சு பெரியார் திடலில் தான் கடைசியாக முடிவுற்றது.திராவிடர் கழக மேடையில் ஆரம்பமான அவர் பேச்சு அதே மேடையில் இறுதியாக முடிவுற்றது.

* "நாவெல்லாம் தமிழ் மணக்க, செவியெல்லாம் தமிழ் மணக்க, சிந்தையெல்லாம் தமிழ் மணக்க அன்று மேடையேறிய நாவலர் என் நண்பர், தன்மான இயக்கத்தின் தூண் சாய்ந்துவிட்டதே என தமிழகம் புலம்பிட மறைந்து விட்டார். அவர் புகழ் வாழ்க. அவர் பரப்பிய பகுத்தறிவு வெல்க " என்று கலைஞர் தன் இரங்கலுரையில் குறிப்பிட்டார்.

* நீண்டதொரு இரங்கல் அறிக்கை அளித்த ஆசிரியர் கி.வீரமணி பல தகவல்களை அதில் அளித்தார்.

* நாவலர் கொள்கைப்படி எவ்வித மூடச் சடங்கும் இல்லாமல் அவர் இறுதி நிகழ்வு நடந்தது. தன் நீண்ட நாள் நண்பருக்கு ஓடோடி வந்து இறுதி மரியாதை செலுத்தினார் முதல்வர் கலைஞர்.தி.க., தி.மு.க., மதிமுக., கொடிகள் அரைக்கம்பத்தில் பறந்தன. நாவலர் நிறைவான கொள்கை வாழ்வு வாழ்ந்து நிறைந்தார்.

* மனிதன் சிந்திக்க வேண்டும், ஆராய்ச்சி செய்ய வேண்டும் பகுத்தறிந்து பார்க்க வேண்டும். சிந்திக்க மறுப்பவன் 

அவனுக்குத் தானே துரோகியாகிறான். சிந்திக்க அஞ்சுபவன் மூடநம்பிக்கையின் அடிமையாகிறான் என்று நாவலர் பேசிய பேச்சு இன்றும் நம் காதுகளில் ஒலிக்கிறது.

வாழ்க டாக்டர் நாவலர்!


No comments: