Monday, May 8, 2023

கு.அரசேந்திரனின் கல் நூல் வெளியீட்டு விழாவில் வைகோ பேச்சு

 தமிழ்ப் பற்றாளன் நான்! மொழிக்காக தியாகம் செய்யத் தயாராயிருப்பவன்!

பேராசிரியர் அரசேந்திரன் நூல் வெளியீட்டு விழாவில் பொதுச் செயலாளர் வைகோ பேச்சு

நான் தமிழ்ப் பற்றாளன். தமிழை உயிராக நேசிப்பவன். தமிழுக்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்பவன் என்று பொதுச் செயலாளர் வைகோ 30.3.2002 அன்று சென்னையில் நடைபெற்ற பேராசிரியர் கு. அரசேந்திரன் அவர்களின் நூல்களை வெளியீட்டு பேசும்போது குறிப்பிட்டார்.

அவரது உரை விவரம் வருமாறு:

தொல்காப்பியர் காலத்திற்குப் பின்னர் தமிழ் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளுகிற ஒட்டுமொத்த முயற்சியின் பெயர்தான் பாவாணர் என்று பாவலர் ஏறு பெருஞ்சித்திரனாரால் பாராட்டப்பெற்ற மொழிஞாயிறு பாவாணர் பெயராலே அமைந்திருக்கின்ற இந்த அரங்கத்தில் எழுச்சிப் பண் பாடுகிற வகையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பேராசிரியர் அரசேந்திரன் அவர்களின் ஐந்து நூல்கள் வெளியீட்டு விழாவினுடைய தலைவர் - தமிழ்த்தேசியச் செம்மல் இறைக்குருவனார் அவர்களே, இக்கல் தமிழ் விடிவின் அடிக்கல் எமை நக்கல் செய் பகைவர்க்கிது நடுகல்லே என்ற பாடல் வரிகளின் மூலமாக இக் கல் நூலை அறிமுகம் செய்து வைத்திருக் கின்ற தமிழ் ஈழ உணர்ச்சிக் கவிஞர் என் ஆருயிர்ச் சகோதரர் காசி ஆனந்தன் அவர்களே,

அலைகடலிலே பரந்து கிடந்த லெமூரியாக் கண்டம் என்ற விளக்கத்தை இங்கே தந்தாரே, அந்த பரந்துபட்ட லெமூரியாக் கண்டத்தின் ஒரு பகுதி யாகவே கருதப்படுகின்ற ஆத்திரேலியக் கண்டத்திலிருந்து கடல் கோளால் பழந் தமிழகம் அழிவதற்கு முன்னர், அந்த நிலை ஏற்பட்ட பொழுது தமிழர் கள் கிழக்கே சென்ற காரணத்தினால் ஆத்திரேலியாவிலும், மேற்கே சென்ற காரணத்தினால் ஆப்பிரிக்கக் கண்டத்திலும், வடக்கே சென்ற காரணத்தால் சிந்துவெளியிலும் வாழ நேரிட்டது என்ற அசைக்க முடியாத வரலாற்றுக்குரிய, ஆயிரம் ஆண்டுகளாக வெளிநாட்டோடு - வெளி மக்களோடு தொடர்பு கொள்ளாமல் வாழுகின்ற பூர்வ குடிமக்கள் அபாரிஜின்ஸ் அவர்கள் பேசுகின்ற மொழியில் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கிருந்து புறப்பட்டுச் சென்ற தமிழ்ச் சொற்கள் வேர்ச் சொற்களாக இருக்கின்றன என்ற பெருமைக்குரிய ஆத்திரேலிய மண்ணிலிருந்து மலரப் போகின்ற தமிழ் ஈழத்திற்கான ஆய்வினை நடத்திக் கொண்டிருக்கின்ற மருத்துவர் பொன். சத்தியநாதன் அவர்களே,

தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தினுடைய இயக்குநர் - பாரிஸ் பட்டணத்தில் யுனெஸ்கோ நிறுவனம் நடத்திய ஆராய்ச்சிக் குறிப்பை நம் சிந்தனைக்காக எடுத்து வைத்திருக்கின்ற முனைவர் பொன்னவைக்கோ அவர்களே, என் கல்லூரி நாள் நண்பரும் - ஆங்கிலத்திலும் தமிழிலும் உரையாற்றுவதிலும் எழுத்தினை வடிப்பதிலும் நிகரற்றவருமான இங்கே உரையற்றி விடைபெற்றுச் சென்றிருக்கின்ற ஞானபாரதி வலம்புரி ஜான் அவர்களே, நூல்களைப் பெற்றுக் கொண்டு சிறப்பித்திருக்கின்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கலைத்துறைச் செயலாளர் கொடை கொடுக்கும் உள்ளத்தால் எங்கள் நெஞ்சிலே இடம் பெற்றிருக்கின்ற ஆருயிர்ச் சகோதரர் கலைப்புலி தாணு அவர்களே! நூல்களைப் பெற்றக் கொண்ட மாணவர் நகலகம் செளரிராசன் அவர்களே! வரவேற்புரை ஆற்றிய  அன்புச் சகோதரர் குலோத்துங்கள் அவர்களே! சந்திரேசன் அவர்களே! முனைவர் கண்ணன் அவர்களே! ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர்களே! அன்புடைய செய்தியாளர்களே! தமிழ் அன்பர்களே, நம் அனைவருடைய வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் எந்நாறும் உரிய இந்த நூற்றாண்டில் இம் மொழிக்கு நிகர் சொல்ல முடியாத ஒரு கருவூலத்தைப் படைத்துத் தந்திருக்கக் கூடிய அரசேந்திரன் அவர்களே, ஈட்டி பாய்ந்தாலும், இமை கொட்டாத வீரத்துக்கு அடையாளமாக எந்நாளும் என் மனதிலே இடம் பெற்றிருக்கின்ற வாலிப வேங்கைகçளே வணக்கம்.

‘ஆன்புலிக் கொடியோடு

நீள்கடல் கிழித்துச்

சூழ்பகை அறுத்த சோழமா வேந்தன்’

என உணர்ச்சிக் கவிஞரால் வர்ணிக்கப்பட்ட இராசேந்திர சோழனால் பெருமை பெற்ற கங்கை கொண்ட சோழ புரத்தில் பிறந்து இன்றைக்குக் ‘கல்’ எனும் தமிழ் வேர்ச்சொல்லை உள்ளடக்கி அரிய படைப்புக் கருவூலத்தை தந்திருக்கின்ற அரசேந்திரன் அவர்களை உளமார பாராட்டுகிறேன். இந்த நூலினை நான் வெளியிட வேண்டுமென்ற அவாவினை அவர் வெளிப் படுத்தினார். நேற்று இரவுதான் இந்நூலினை முழுமையாகப் படிக்கின்ற வாய்ப்பினை நான் பெற்றேன். பல மணி நேரம் படித்ததற்குப் பின்னரும் அதை முழுமையாக என்னால் உய்த்து உணர முடியவில்லை. இன்னும் பல நாள் நான் இந்நூலினைப் பயில வேண்டும்.

 எத்தனை இரவுகள், எத்தனை பகல் அவர் இதற்காகத் தன்னை வருத்திக் கொண்டு உழைத்திருப்பார் என்பதை எண்ணுகிறபோது, பல இரவு நேரங்களிலே அந்த வேர்ச்சொற் களின் ஆய்வினை மேற்கொள்ளுகிற போது ஞாலம் முழுவதும் பரந்து கிடக்கக் கூடிய மொழிகளுக்கெல்லாம் தமிழ் அல்லவா சொற்களைத் தந்தது என்ற உண்மையை உணர்ந்த போது என் கன்ன மேடுகளில் கண்ணீர் உருண்டோடியது என்று எழுதுகிறார்.

‘என்னை அழித்து எழுதிய பாடல்

என்றென்றைக்கும் நிலை நிற்கும் - அது

எண்ணில் கோடி விலை விற்கும்

மின்னைப் போல மேனி நடுங்கி

மீட்டியதெல்லாம் உயிர்க்கதறல் - இவை

மெய்த்தவம் கூட்டிய ஒளிச்சிதறல்

பொன்னைப் பொருளைப் பூட்டி வைத்திடும்

பூவுலகோரே போற்றுங்கள் -இதன்

புகழை எடுத்துச் சாற்றுங்கள்’

என்று அரசேந்திரன் கவிதை எழுதுகிறார். 

உயிர்க்கதறல் என்று அவர் படைப்பைப் பற்றிச் சொல்லுகிறார். அதில் ஒன்றிப் போய்விட இத்தகைய அரிய ஆய்வினை மேற்கொண்டிருக்கக் கூடிய அவருக்கு இந்தத் தமிழ் மண்ணும் தமிழ் இனமும் கடமைப்பட்டிருக்கின்றது.

பிரெஞ்சு நாட்டின் தலைநகரத்தில் நடைபெற்ற மொழிநூல் வல்லுநர் களின் ஆய்வுக் கூட்டத்தில் யுனெஸ்கோ நிறுவனம் நடத்திய கருத்தரங்கத்தில்- அடுத்த  நூற்றாண்டிலே உயிர் பெற்று வாழக் கூடிய மொழிகளின் பட்டியலில் தமிழ் இல்லை என்று உரைக்கப்பட்டதாக இங்கு எடுத்துச் சொல்லியபோது நான் அதிர்ச்சியில் தாக்குண்டேன். இந்த மொழி அழிந்து போகும் என்ற அவர்கள் கூறுகிற அளவுக்கு அவர்கள் நடத்திய ஆய்வு இந்திய மொழிகளில் அடுத்த நூற்றாண்டில் இந்தி மொழி வாழுமாம், வங்க மொழி வாழுமாம்.

நான் ஒன்றைச்சொல்வேன். நம்முடைய மொழி தமிழ் மொழி அதன்  மீது கொண்ட பாசத்தால் நான் சொல்லவில்லை. பல மொழிகள் வழக்கு அழிந்து போய்விட்டன. அன்று மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை சொன்னார். ‘ஆரியம் போல் வழக்கொழிந்து அழிந்து போன மொழிகள் அநேகம். மடிந்து போயிற்று வடமொழி. உலகில் பலமொழிகள் முகவரி இழந்துவிட்டன. ஆனால் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னரும் அழியாத சீரிளமை பெற்றிருப்பது தமிழ் மொழி. இந்த கணினி யுகத்தையும் வசப் படுத்துகின்ற காரணத்தால், அரசேந்திரன்கள் இருக்கின்ற பொழுது இந்த மொழியை எவரும் வீழ்த்தி விட முடியாது (கைத்தட்டல்).

மொழிஞாயிறு கண்ட பெருஞ்சித்திரனார்கள்

மொழிஞாயிறுகள் தோன்றி கொண்டே இருப்பார்கள். பெருஞ்சித்திரனார் கள் தோன்றிக் கொண்டே இருப்பார்கள். அரசேந்திரன்கள் தோன்றிக் கொண்டே இருப்பார்கள். இந்தத் தமிழ்மண் நம்மை வஞ்சிக்காது.  ஆனால் ஓர் எச்சரிக்கை. இலக்கியக்கியமற்ற, இலக்கணமற்ற கடந்த கால வரலாறு அற்ற இந்தி அடுத்த நூற்றாண்டிலே வாழும் - ஆனால் தமிழ் வாழாது என்று சொன்னால் அரசியலில் இடம் பெறலாம். நாடாளுமன்றத்தில் இடம் பெறலாம். இந்திய நாட்டினுடைய ஆட்சி மொழியாக இடம் பெறலாம். இந்திய ஆட்சி மொழியாக நீடிக்கலாம். ஆனால் அடுத்த நூற்றாண்டிலும் இந்தி மொழிதான் வாழும், உங்கள் மொழி வாழாது  என்போர் கருத்தினை உங்களைப் போன்ற தமிழ் அறிஞர்கள் இப்படிப்பட்ட அரங்கங்களில் ஆய்வுக் கட்டுரைகளை வைத்து, அந்தக் கருத்துக்களை தகர்த்தெறிய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் (கைத்தட்டல்).

மேலை நாட்டு அறிஞர்களும் என்னுடைய கருத்துகளை அறிந்து கொண்டு பாராட்டுகிற காலம் வரும் என்று நான் பிறந்த கிராமத்துக்கு ஒரு காத தொலைவிலே வாழ்ந்த தேவநேயப் பாவாணர் எழுதி வைத்திருக்கிறார். அவர் கூறியது நடக்கிறது. நான் இந்த மேடையிலே வந்து அமர்ந்தவுடன் அரசேந்திரன் அவர்கள் என்னிடத்திலே ஓர் ஆய்வுக் கட்டுரையைத் தந்தார். அந்த ஆய்வுக் கட்டுரையைத் தீட்டியிருப்பவர் அமெரிக்க நாட்டினுடைய ஒரு மொழிநூல் வல்லுநர் . ஸ்டீபன் ஹ்வியர் லேவிட். அவர் தேவநேயப் பாவாணரைப் பற்றி எழுதுகிறார், நம்முடைய தமிழ்தான் திராவிடம் என்று பெயர் பெற்றது என்ற ஆய்வைக் கொண்டிருந்தவர். நம்முடைய மொழி ஞாயிறு அவர்கள் மேலை ஆரிய மொழிகளுக்கு பழமையான மொழிகள் என்று கருதப்படுகின்ற இலத்தீன், கிரேக்கம், எபிரேயம் போன்ற மொழிகளுக்குச் சொற்களை வழங்கிய மொழி தமிழ் என்ற கருத்தை ஆதரிக்கின்ற வகையில் அந்த மொழி அறிஞர் சொல்லுகிறார் : I mention the proposal simply as possible relationship between Indo - European and dravidian which appears to be very all the same. I emphasise they are  just a  campling of the Devaneya’s connections and the whole Deveneyan connection some must probably well over the efforts to go through carefully..

ஆகவே இப்படிப்பட்ட ஆய்வு வருகிறபொழுது மேலும் நம்முடைய தமிழ்மொழியினுடைய பெருமையை உலகம் ஏறெடுத்துப் பார்க்கும் கங்கை. கொண்ட சோழபுரத்திலிருந்து வந்திருக்கிறார் அரசேந்திரன்.  என் நெஞ்சத் திலே நல்ல இடம் பெற்றிருக்கக்கூடிய ஈழவேந்தனுடைய அருமைத் திருமகளாரை வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொண்டவர். அவர் பிறந்த மண்ணிலே இருந்து இந்த நூலை எழுதியது மிகவும் பொருத்தம். ஏனெனில் அருகிலே கற்களே இல்லாத மலைகளே இல்லாத நெடுந் தொலைவுக்கு அப்பால் இருந்து அத்தனை கற்களையும் இராசராசனின் மகன் இராசேந்திரன் எப்படி கொண்டுவந்து சேர்த்தார்? என்று நான் வியந்து போனேன். அங்கே இன்னமும் கொட்டிக் கிடக்கின்ற கற்கள் ஏராளம். அதைப் பின்னாளிலே பிரித்தானியர்கள் ஆண்ட காலத்திலே அந்தக் கற்களைக் கொண்டு அணை கட்டிய வரலாறு இருக்கிறது. அத்தனைக் கற்களைக் கொண்டு வந்து அவருடைய தந்தை இராசராசன் தஞ்சை நகரிலே நிழல் தரையில் படாத பெரு உடையார் கோயிலைக் கட்டியதைப் போலவே, தந்தைக்கு நிகராகவும் அமைந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் சற்றே தாழ்த்திக் கொண்டு அதை அமைத்திருக்கின்ற பாங்கினைக் கண்டேன். ஆகக், கல்லால் பெருமை சேர்த்தான் அந்த இரோசேந்திரன் - இந்தக் ‘கல்’லால் பெருமை சேர்க்கிறான் இந்த அரசேந்திரன் என்பதனால் நான் அவரைப் பாராட்டுகிறேன் (கைதட்டல்).

இந்த நூலில் அவர் ‘கல்’ என்னும் சொல்லை எடுத்து வைத்துக் கொண்டு ஆய்வைத் தொடங்குகிறார். ‘அல்’ என்னும் உயிர்த் தொடக்கச் சொல்  ‘கல்’ என்னும் உயிர்மெய்த் தொடக்கச் சொல்லுக்கு மூலம் என்று தொடங்குகிறார். ‘அல்லையாண்டு அமைந்த மேனி அழகனும் அவளும் துஞ்ச’ என்று கம்பர் சொல்லுவார். கானகத்திலே இலக்குவன் கையிலே வில் தாங்கி, அண்ணனும் அண்ணியும் தூங்குகிற நேரத்தில் கண் விழிக்காமல் காத்ததைப் பற்றிச் சொல்லுகிற போது ‘அல்லையாண்டு அமைந்த மேனி’ என்று சொல்லுகிறார்.

அரசேந்திரன், ‘கல்’ என்ற சொல்லுக்கு கருமை, கூட்டம், செலவு, கூர்மை, வெப்பம், துளை என்று ஆறு பொருள்களைச் சொல்லுகிறார். இதில் கருமையும், கூட்டமும் அடிப்படை. இந்த கருமை, கூட்டம் என்ற இரண்டு சொல்லுக்கும் அந்தப் பொருளுக்கும் தொடர்புடையதாகவே செலவு, கூர்மை,வெப்பம், துளை ஆகிய பொருள்களைக் கொண்டு வந்து இணைக்கிறார். இதுதான் இந்த ஆய்வினுடைய அடிப்படை. கல் என்பது மலை. மலையிலே வாழ்ந்தான் தொடக்க காலத்தில். ஏனெனில், மலையிலே அவனுக்குத் தேவையானவை கிடைத்தன - தேடாமல் கிடைத்தன. விலங்குகளை வேட்டையாடினான். காய், கனிகள் கிடைத்தன. வாழ்வதற்கு வாய்ப்பாக இடங்கள் கிடைத்தன. ஆக மலையகத்து வாழ்க்கை அதாவது ‘கல்’ மேல் வாழ்க்கை. இங்கேதொடங்குகிறார். கருமை வண்ணத்தைச் சொல்கிறார். இந்தக் ‘கல்’ என்ற சொல் எங்கெல்லாம் என்று அவர் விவரிக்கின்றார்.  புல் தரையில்லாத அந்த மலையில் கல் ஒன்று உருண் டோடி வருமானால் அது எப்படிப்பட்ட ஒலியாக இருக்கிறது என்று அக நானூற்றுப் பாடலைச் சொல்கிறார். ஆண் ஆந்தை ஒன்று இரவு நேரத்தில் கூவுகிற போது அந்த ஒலி எப்படி இருக்குமோ அதைப் போல, புல் வளராத பகுதியிலே, அந்தக் கல், மலையிலே உருண்டோடி வருகிறபொழுது ஒலி எழுப்புகின்றது. அந்த ஒலிக் குறிப்புச் சொல்லைப் பற்றி அவர் குறிப்பிடுகிறார். ‘கல்’ என்னும் சொல் இலத்தீன் மொழியில் ‘Coll ’ என மலையைக் குறிக்கிறது. மலையினுடைய சிறிய பிஞ்சுதான் சிறிய கல். அது ‘cal’; அதையும் இலத்தீன் மொழி அந்தச் சொல்லில்தான் குறிப்பிடுகின்றது. இலத்தீனும், கிரேக்க மொழியும்தானே பழமையான மொழிகள். அந்த கிரேக்க மொழியில்‘லுலியி’ . ஆக கிரேக்க மொழியினுடைய சொல்லு; இந்தக் கல்லி னுடைய சொல்லாகவே இருக்கிறது. டச்சு மொழியிலும் ஜெர்மன் மொழியிலும்‘Kol’. ஆக இந்தக் கல் என்ற சொல் ஒவ்வொரு மொழியிலும் எப்படி இடம் பெறுகிறது என்று சொல்லிவிட்டு எபிரேய மொழியிலும் ‘Hul’.  ஆக உலகத்தில் பழமையான மொழிகள் என்று சொல்லப்பட்ட அத்தனை மொழிகளிலும் வேர்ச் சொல்லாகிய ‘கல்’தான் மலையாக இடம் பெற்றிருக்கிறது. கல்லாக இடம் பெற்றிருக்கின்றது என்ற இந்த ஆய்வை யாரால் மறுக்க முடியும்?

இங்கே பேசியவர்கள் கருமையைப் பற்றிச் சொன்னார்கள். முதலாவது பொருள் கருமை, இரண்டாவது கூட்டம். மூன்றாவது செலவு, நான்காவது கூர்மை, ஐந்தாவது வெப்பம். ஆறாவது துளை. 

இங்கே மிளகு கருமையாக இருக்கிறது. இந்த மிளகு கருமையாக இருப்பதனால், இதைப் பயன்படுத்துவதனால் கறி என்ற பெயர் வந்திருக்கிறது. இது கடைசியில் ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளுக்குப் போய் ‘curry’ஆகிவிட்டது. அது வல்லின எழுத்தினுடைய கறி. இன்னொரு கரியும் இருக்கிறது  - அதுவும் கருப்புத்தான். யானையின் நிறம் கருப்பு. குற்றத்துக்கும் அந்தச் சொல்லை எடுத்துக் கொள்ளலாம். அவருடைய ஆய்வில் கரிய நிறத்தைப் பற்றியே சொல்லிக் கொண்டிருக்கிற பொழுது காளை வருகிறது. கரிய நிறம் கொண்ட எருதுகளை காளை என்று முதலில் குறிப்பிட்டார்கள். பின்னர் அனைத்து எருதுகளையும் காளை என்று குறிப்பிட்டார்கள். பின்னர் காளைக்கு வலிமை இருப்பதனால் அத்தகைய வலிமையுடைய ஆடவர்களையும் காளை என்று குறிப்பிட்டார்கள் என்கிறார்.

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே அவனைச்

சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே

ஒளிறுவாள் அறுஞ்சமம் முறுக்கிக்

களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே

என்று காளைக்கு கொண்டு வந்து  நிறுத்துகிறார் புலவர் பொன்முடியார். இவ்வாறு கருமை பற்றிய இந்த வண்ணத்தைப் பற்றியே சொல்லிக் கொண்டு போவதானால் இன்னும் ஒரு மணி நேரம் சொல்லிக் கொண்டு போகலாம். அத்தனைக் குறிப்புகளைத் தந்திருக்கிறார்.

கண் கருமையாக இருக்கிறது. இந்தக் கண் என்கின்ற சொல்லும் இந்தக் கருமையிலிருந்துதான் எழுகிறது. அந்தக் கருமையிலிருந்து வருகின்ற கண், அல்லாமல் இன்னொரு ‘கண்’ பற்றி இரண்டாவது பகுதி கல் நூலில் எழுதுகின்றார். அந்தக் ‘கண்’ கூட்டப் பொருளில் வருவது. தனித்தனியா பகுதிகளை இணைக்கின்ற இந்தக் ‘கண்’ பற்றி வியக்கும்படி ஆய்வு செய்கிறார்.

 மூங்கில், வழவழப்பாக இருக்கக் கூடிய கன்னலாகிய கரும்பு, ஆகிய இவற்றின் இடையில் இருக்கிறதல்லவா? கொஞ்சம் தடித்தும், பருமனாக இருக்கக்கூடியதான் கணு. மூங்கிலில், கரும்பில் கணு இருக்கிறது அல்லவா, இந்தக் கணுவை வைத்துதான் ஆங்கில எழுத்துக்கு வருகிறார். இது இலத்தீன் மொழியில் ‘genu’என்றாகிறது. இந்த ‘genu ’விலிருந்து genuine என்ற சொல்லிற்கு வருகிறார் அரசேந்திரன். ‘‘genuine ’என்றால் பரிசுத்தமான - கலப்படமற்ற - தூய்மையான என்று சொல்லுகிறோம். இவர் சொல்லுவது உண்மையாக இருக்கும். அவர் உண்மையாகத்தான் பேசுகிறார். His views are geneine’என்று ஆங்கிலத்தில் சொல்லுகிறார்கள். இதற்கான மூலச் சொல்லை எங்கே கொண்டு வருகிறார்? எங்கிருந்து வருகிறது?

‘Pentagon’ சொல்லின் ‘gon’ தமிழின் கணுவே.

உடல் உறுப்புகளை இணைக்கும் மூட்டுப் பகுதி மூட்டு எனவும் கணு எனவும் தமிழில் சொல்லப்படும். ‘கணு’ என்பதைக் ‘கண்’ என்று இலக்கியங் களில் சொல்லுவார்கள். இந்தக் ‘கண்’ என்பதுதான் மேலை மொழிகளில் ‘ஆலிஐ’என வழங்குகின்றது. கை, கால இணைப்புப் பகுதியை அங்கே இக் ‘gon’’ குறிக்கும். அதே ‘gon’ சொல்தான் ஐந்து இணைப்புக்களால் கட்டப்பட்ட அமெரிக்க படைத் தலைமையகத்தைக் குறிக்கும் பெண்டகன் சொல்லிலும் உள்ளது. ‘Penta’ என்ற இலத்தீன் சொல்லிற்கு ஐந்து என்பது பொருள். இது தமிழல்ல. ஆயின் ‘gon ’ என்ற பிற்பகுதிச் சொல் இணைப்புப் பொருள் தரும் தமிழின் கண் - கணுச் சொல்லே என்கின்றார் அரசேந்திரன்.

கிரேக்க சமுதாயத்தில் கூடி வாழ்ந்த வாழ்க்கை பிளாட்டோவினுடைய தத்துவமே கூடி வாழ்ந்த வாழ்க்கை. குடும்ப வாழ்க்கையை ஏற்றுக் கொண்டதல்ல. அவர் ஒருவகையான பொதுவுடமைச் சிந்தனையாளர். அவர் சாக்கரடீஸினுடைய மாணவராக இருந்தாலும் அவருடைய சிந்தனைகளிலே, கருத்துக்களிலே பொதுவுடைமைக் கருத்துக்கள் இருக்கின்றன. பல கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அவர் கவிஞர்களை ஏற்றுக் கொண்டதில்லை. அரசர்கள் இப்படித்தான் என்று கருத்துச் சொன்னவர் - அவர் சொன்ன சமுதாயத்திலே குடும்ப வாழ்க்கை கிடையாது. கணவன் - மனைவி என்ற கட்டுப்பாடான வாழ்க்கை கிடையாது.

பழமையான கிரேக்க சமுதாயத்தில் ஒரு குடும்பமாக, கணவனும் மனைவியுமாக வாழ்கிற அளவுக்கு தொடக்கத்தில் இப்படி வாழ்ந்திருக்க முடியாது அல்லவா? அப்படி வாழ்ந்த ஒரு கால கட்டம் கிரேக்க சமுதாயத்திலே இருந்த பொழுது பிறந்த ஒரு குழந்தை. இந்த தந்தைக்குத்தான் இந்தக் குழந்தை பிறந்தது என்று காட்டுவதற்காக அந்தக் குழந்தையைப் பெற்றெடுத்த தாய் இந்த ஆணிடம் தான் நான் இந்தக் குழந்தையைப் பெற்றேன் என்று அடையாளம் காட்டுவாளாம். அப்பொழுது அந்த ஆடவன் பலர் முன்னிலையில் வந்து அமர்ந்து தன் கணுக்காலிலே அதாவது ‘genu’விலே குழந்தையை வாங்கிக் கிடத்தி இக்குழந்தை எனக்குத்தான் பிறந்தது என்று ஒப்புதல் வழங்குவானாம். அந்தச் சடங்குதான் முதலில் ‘genu – genuine’  எனப்பட்டது. பிறகு சரியானது, முறையானது என்பதற்கெல்லாம் இந்த ‘genuine ’ சேர்ந்தது என்று அரசேந்திரன் அவர்கள் இதற்கான விளக்கம் அளித்திருப்பது கண்டு உண்மையிலே நான் வியந்து போய்விட்டேன்.

தொடக்கத்திலே ‘கருமை’ என்ற விளக்கத்திற்கு வருகின்ற போது ‘கல்’ என்று சொல்லைப் பற்றிச் சொல்லி, அடுத்து ‘கூட்டம்’ என்று வருகிறார். கூட்டம் என்று சொல்லுகின்ற பொழுது பொழில் தருக்கள் அடர்ந்து இருக்கக் கூடிய இடத்தில் தொலைவிலிருந்து பார்க்கின்ற பொழுது அடர்ந்த காடு தெரியும். இராபர்ட் பிராஸ்டினுடைய அழகிய கவிதையை பண்டித நேரு தன்னுடைய மேசையில் வைத்துக் கொண்டு அதை எந்நாளும் தன் மனதில் பதிய வைத்துக் கொண்டதாகச் சொல்வார்கள்.

‘The woods are lovely dark and deep. But I have promises to keep and miles to go before I sleep’ என்று சொல்கிறார்? அடர்த்தியாக இருக்கிறது அந்தக் காடு ; கவர்ச்சியாக இருக்கிறது அந்த அடவி ; அந்தக்காடு கருமையாக இருக்கிறது. கூட்டமாக இருக்கிறது. கூட்டமாக இருப்பதனாலே கருமையாக இருக்கிறது. முகில்கள் கூடுகின்றன. கூட்டமாக இருக்கிற காரணத்தால் அந்தக் கூட்டம் இப்படிப்பட்ட பொழில் ஆக இருக்கின்றது. ஆக இந்த வகையில்தான் கருமையும் கூட்டமும் உருவாகின்றன. இவ்வாறு ஆறு பொருள்களையும் அரசேந்திரன் உறவுபடுத்தி விவரிக்கின்றார்.

அடுத்து அவர் செலவைப் பற்றி விவரிக்கின்றார். செலவு என்றால் பணச் செலவு அல்ல. பயணச் செலவு. பயணம் -செலவு. மழை பொழிகிறது - கொண்டலிலே இருந்து துளிகள் விழுகின்றன - மேகங்களிலிருந்து துளிகள் விழுகின்றன. பல துளிகள் சேருகின்றன. வெள்ளம் ஆகிறது. வெள்ளம் சீராக ஓடுகிறது. அது நிற்பதில்லை. அது செலவு -அது பயணம். அது வெள்ளமாக ஓடுகிற போது ஒரு உதாரணம் சொல்லுகிறார். ஒரு நெய்தலங் கானல் - ஒரு கடற்கரையோரம்; காற்று வீசுகிறது. கடற்கரையில் கடல் அலை முடிகிற இடத்தில் மணல் குவிந்து கிடக்கிறது. அங்கு வீசுகிற காற்றில் மணல் அடித்துக் கொண்டு வருகிறது. ஒரு இடத்தில் மணல் குவிகிறது. ஒரு பொருள் மேலும் மேலும் ஓரிடத்தில் குவியும் போது அடுத்ததாகப் பரவல் -அதாவது நகர்தலுக்கு ஆளாகின்றது என்று கூட்டப் பொருளிற்கும் செலவுப் பொருளிற்கும் உறவு காட்டுகின்றார் அரசேந்திரன்.

அகநானூற்றில் கடல் குவித்த மணற்குவியல் பிறகு எவ்வாறு சரிந்து பரவலுக்கு ஆளாகின்றது எனச் சான்று காட்டி விளக்குகிறார். குவிகிற காரணத்தால் காற்று அடிக்க அடிக்க மணல் ஒரு பக்கமாக கொண்டுவந்து சேர்க்கப்பட்டு ஒரு உயர்ந்த பனை மரத்தைச் சுற்றிலும் அந்த மணல் குவிந்து விட குவிந்து விட இந்த உயர்ந்த பனை மரம் குறுகிய பனை மரமாகிவிடுகிறது. இதற்காக இவர் சங்க இலக்கியத்திலே அகநானூற்றுப் பாடலைத் துணைக்கு அழைக்கிறார். உயர்ந்த பனைமரம் குறுகிய பனைமரமாவதற்கு உதாரணம் சொல்லுகிறார். இதிலிருந்து தலைவிக்கு கிட்டாமல் இருந்த தலைவன் இந்த வெறியாட்டுககுப் பிறகு அங்கு கிட்டிவிட்டான். இது எப்படி இருக்கிறது? அந்த பனைமரம் எப்படி குறுகிவிட்டதோ, கிட்டாமல் இருந்தது எப்படி கிட்டி விடுகிறதோ அதைப் போல நகர்கிறது, ஊர்கிறது, பயணிக்கிறது. அந்தச் செலவுக்கு விரைவு இருக்கிறது. கமழ் பெயல் வேகமாக பெய்கிறது - பிறகு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுவிடுகின்றது.

தியாகம் செய்ய சித்தமாயிருக்கிறேன்!

கடு, கடிது, கடுகு, வேகம் இப்படி வரிசையாக சொல்லிக் கொண்டு வருகிற பொழுது அவர் தொடக்கத்திலே கூறுகிற அந்தக் கூட்டப் பொருளுக்கும், செலவு பொருளுக்கும் அடுத்து கூர்மை பொருள் வருகிறது. கூர்மைப் பொருள் என்பது என்ன? ஓர் அடர்த்தியான பொருள் இன்னொரு பொரளை அழுத்துகின்ற போது தேய்க்கப்படுகின்ற பொருள் இன்னொன்று தேய்படுகிற போது அது கூர்மைப்படுகிறது. பனம் குருத்து அதனுடைய அலகு கருக்காக இருக்கிறது. கொல்லன் உலைக் களத்தில் நெருப்பில் இரும்பின் மீது இன்னொரு பொருளான சம்மட்டி வந்து விழுகிறது. ஆகவே ஓர் அடர்த்தியான பொருள் இன்னொரு அடர்த்தியான பொருளை அடிக்கும் பொழுது அது கூர்மை பெறுகிறது. வாள் ஆகிறது - வேல் ஆகிறது - ஈட்டி ஆகிறது - கூர்மை பெறுகிறது.

அடுத்து வெப்பம் வெப்பம் என்பது என்ன? இரண்டு திண்மையான பொருள்கள் ஒன்றையயான்று அழுத்துகிற போது அது மரத்தாலான பொருளாக இருக்கலாம் - கல்லால் ஆன பொருளாக இருக்கலாம். இரண்டு கற்கள் மோதுகிற போது, இரண்டு மரங்கள் உராய்கிற போது அங்கே நெருப்பு பிறக்கிறது. இதில் அரிய ஆராய்ச்சி என்னவென்றால், இந்த நெருப்பைப் பற்றிச் சொல்லுகிற போது, இதைத் தொடக்க காலத்தில் யாரெல்லாம் பயன்படுத்தினார்கள் என்று விளக்குகிறார்.

மய்ய ஆசியாவில்தான் முதன் முதல் நெருப்பு உருவாக்கப்பட்டதென்று மேலை அறிஞர்கள் கூறும் முடிவுகளை இவர் மறுக்கின்றார். மய்ய ஆசியா என்று சொல்லலாமா என்று கூட இங்கே பேசினார்கள். அதற்குள் நான் போக விரும்பவில்லை. நான் தமிழ் ஆய்வாளன் அல்ல - அந்தப் பணியயல்லாம் அவர்களுக்கு - நான் தமிழ் விரும்பி - தமிழ்ப்பற்றாளன் - தமிழை உயிராக நேசிப்பவன். அதற்காக பணியாற்ற உங்களைப் போன்றவர்கள் ஏவுவீர்களானால் எதையும் செய்வதற்கு எந்தத் தியாகத்தையும் செய்வதற்குச் சித்தமாக இருப்பவன். (கைத்தட்டல்) (சங்கொலி, 19.4.2002).

ஆனால் இந்த மய்ய ஆசியாவில் இருந்துதான் சிந்துவெளி நாகரிகம் வந்தது. சிந்துவெளி நாகரிகத்திலே முன்பு இருந்தவர்கள்தான் தெற்கே வந்தார்கள் என்று ஒரு கருத்தை சிலர் சொல்லிப் பார்க்கிறார்கள். அங்கிருந்து வந்தவர்கள்தான் இந்த திராவிடர்கள் - இவர்கள் மூலவர்கள் அல்ல என்ற கருத்தைச் சொல்லுகிறார்கள். இது ஏற்றுக் கொள்ள முடியாத கருத்து. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்துவெளி வழியாக தமிழர்கள் மய்யக் கிழக்கு நாடுகளிலேயிருந்து வந்தவர்கள்தான் என்று சொல்லுவார் கள் என்றால் அந்தக் கருத்து பொருத்தமாக இல்லை. அதற்கும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் -மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே - அதற்கும் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே மெசபடோமியாவில் டைகரிஸ், யூப்ரடிஸ் நதிகளுக்கு மத்தியிலே இருக்கக் கூடிய நிலத்திலே வளர்ந்த சுமேரிய நாடுகளுக்கு இங்கிருந்து நம் தமிழ் நாட்டிலிருந்து பொருள்கள் எடுத்துச் செல்லப்பட்டன என்று வரலாற்றிலே சொல்லப்பட்டு இருக்கிறது.

பண்டிதநேரு - ஒப்புக் கொண்டிருக்கிறார். பொருள்கள் வணிகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே இங்கிருந்து பொருள்கள் மய்ய ஆசியாவிற்கு போனதென்றால் எப்படி அங்கிருந்து இங்கு வந்திருக்க முடியும்? இங்கிருந்து போனார்கள். அதைத்தான் அழகுபடச் சொன்னார்கள். இந்த நாகரிகம் தெற்கேயிருந்து வடக்கு நோக்கிச் சென்றது. இரங்கநாத பூஞ்சா என்பவர் இந்த ஆய்வை வலியுறுத்தி சொல்லியதைப் பற்றி முன்பு முதலமைச்சராக இருந்த ஓமந்தூரர் பி. இராமசாமி ரெட்டியார் அவர்கள் பூஞ்சாவின் நூலிற்கு வழங்கிய வாழ்த்துரையிலே சொல்லியிருப்பதை அரசேந்திரன் குறிப்பிடு கிறார். மய்ய ஆசியாதான் நாகரிகத்தின் தொட்டில் என்று சொல்லப்பட்ட ஆய்வு சிந்துவெளி ஆய்வால் ஆட்டம் கண்டுவிட்டது என்று ஓமந்தூரார் சொல்லியிருக்கிறார்.

இப்பொழுது மீண்டும் செய்திக்கு வருகிறேன். கணுக்களைக் கொண்டது தானே கரும்பு. பேச்சு கன்னலைப போல் இருக்க வேண்டும்.  பேச்சில் எத்தனையோ சுவைகள் இருக்கலாம். எங்கே தொடங்குகிறோமோ சங்கிலித் தொடர் போல மூலக்கருத்தை விட்டு வெளியே போய்விடக் கூடாது. எங்கே போனாலும் அங்கே வந்துவிட வேண்டும். இதை நான் 30 ஆண்டுகளுக்கு மேலாகப் பின்பற்றி வருகிறேன் - என்னுடைய சிற்றறிவுக்கு எட்டிய வரையில்.

நெருப்பை யார் பயன்படுத்தினார்கள்? எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே பயன்படுத்தினார்கள்? தீக்கடைக்கோல் பழந் தமிழகத்திலே இருந்தது. மொகஞ்சதாரோ அரப்பா அகழ்வாராய்ச்சியிலே ‘ஸ்வஸ்திகா’ என்று சொல்லப்படுகிற சுடுமண் முத்திரை கண்டெடுக்கப்பட்டது. கிரேக்கத்தின் ட்ராய் நகரத்திலும் கிடைத்திருக்கிறது.

கெலன் ஆஃப் ட்ராயிலே சொல்லுவார்களே,

‘It is the face that launched a thousand ships which burnt the topless tower of Elina’ இந்த அழகு முகம்தானா ஆயிரம் போர்க்கப்பல்களை ஏவியது? இந்த அழகு முகம்தானா உயரம் காண முடியாத எலினா நகரத்துக் கோபுரத்தை சாய்த்தது? என்று வர்ணிக்கப்பட்ட அந்த ட்ராய் நகரம், பேரழகி என்று வர்ணிக்கப்பட்ட யஹலனின் அழகு காரணமாக ஏற்பட்டதே ட்ராய் நகரத்து யுத்தம், அந்த ட்ராய் நகரத்திலே மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியிலே இதே முத்திரை கிடைத்திருக்கிறது. அந்த முத்திரை எதைக் காட்டுகிறது? இரண்டு மரக்கோல்கள் ஒன்றையயான்று உரசுகிறபொழுது நெருப்பு பிறக்கிறது. இதற்கான அழகான உதாரணத்தை அகப்பாடலிலிருந்து சொல்லுகிறார்.

மூங்கில் காடு ‡ அங்கே மூங்கில்கள் உரசிக் கொள்ளுகிற போது நெருப்பு பிடிக்கிறது. மூங்கில் காட்டிலே நெருப்பு பிடித்தால் எப்படி இருக்கும்? கணுக்கள் வெடிக்கும். அப்படி வெடிக்கிற போது ஒலி எப்படி இருக்கும்? பல இசைக் கலைஞர்கள் சேர்ந்து வாத்தியங்களை இசைப்பது போல இருக்கிறதாம். ஆனால் பரவிவிட்ட நெருப்பு காரணமாக விலங்குகள் பயந்து ஓடுகின்றன. அதில் பல விலங்குகள் இந்த நெருப்பிலே சிக்கி மடிந்து போயிருக்கும். நெருப்பிலே சிக்கிய காரணத்தால் அவற்றின் இறைச்சி மிருதுவாக இருக்கும். இதைப் பயன்படுத்துகிற பொழுது, அந்த நெருப்பு இறைச்சியை மிருதுவாக்கிவிட்டது என்ற உண்மை அவனுக்குப் புலப்பட்டிருக்கும். ஒன்று, நெருப்பைக் கண்டறிந்ததற்குப் பிறகு அதைப் பயன்படுத்தியிருக்கலாம்.

புலிகளுக்கும் பொருந்தும் புறநானூறு!

விரைவைப் பற்றி சொல்லுகிற பொழுது, அதற்குக் கூட ஒரு பாடலைத் தருகிறார். கொக்கு ஒன்று பறந்து வருகிறது நண்டை கவ்விப் பிடிப்பதற்கு. நண்டு பயந்து ஓடுகிறது. இது எப்படி இருக்கிறது? கயிற்றை அறுத்துக் கொண்டு எருது ஓடுவது போல் இருக்கிறது - என்று சொல்கிறது அகநானூற்றுப் பாடல். பயணம் என்பதைக் குறித்த கருத்து வருகிறபோது அதை சொல்லுகிறார்.

ஒரு புலி யானையை வீழ்த்துகிறது. காட்டுப் புலி. புலியின் குணம் என்ன தெரியுமா? தான் வீழ்த்திய யானை இடது புறமாகக் கீழே விழுந்தால் அதைச் சாப்பிடாது. வலதுபுறமாக கீழே விழுந்தால்தான் சாப்பிடும் என்று புற நானூற்றிலே எழுதி வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட நண்பர்களைத் தேடிக்கொள். வளைகளுக்குள் பதுங்கி வஞ்சகம் செய்கின்ற எலிகளை நீ நண்பர்களாக கொள்ளாதே என்று சொல்லுகிறது புறநானூற்றுப் பாடல். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே எழுதியிருக்கிறார்கள். இன்றைய  ஈழத்துப் புலிகளுக்கு அது பொருந்துகிறது. அவர்கள் ஏன் இந்தப் பெயரை வைத்துக் கொண்டார்கள். என்னுடைய பேச்சின் இறுதியில் நேரம் இருந்தால் அதைப்பற்றிச்சில செய்திகளை சொல்ல விரும்புகிறேன்.

முதலில் இந்த நூலை படித்த பொழுது என்னுடைய எண்ணத்தில் ஏற்பட்ட எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொள்வதற்காகச் சொல்கிறேன். இங்கே புலி ஒன்று யானையை வீழ்த்திவிட்டது. வீழ்த்திய பின்னர் அதன் இறைச்சியை அது சாப்பிடுகிறது. எவ்வளவுதான் சாப்பிட முடியும்? போய் விட்டது. மடிந்து போன யானை சதைத் திரட்சியோடு கிடக்கிறது. அந்த வழியாக வருகிறவர்கள் பெரிய மரக் கொப்புகளை வைத்து  அதை எவ்வளவு வெட்டி எடுக்க முடியுமோ அந்த அளவிற்கு அவர்கள், எடுத்துக் கொண்டு போகிறார்கள். மீதமும் கிடக்கிறது. அங்கே உப்பு வணிகர்கள் வருகிறார்கள். அவர்களுக்கும் ஒரு வாய்ப்பாகிவிட்டதல்லவா? அவர்கள் முடிந்த மட்டும் இறைச்சியை வெட்டியயடுக்க அங்கே நெருப்பை உண்டாக்கி அதில் போட்டு சமைக்கிறார்கள். இது அக இலக்கியம்.

ஆக, இந்த நெருப்பை எப்படி பயன்படுத்தினார்கள்? எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே புதிய கற்காலத்திலேதான் நெருப்பை பயன்படுத்தக் கற்றுக் கொண்டார்கள் என்ற கருத்தை ஏற்றுக் கொள்வதற் கில்லை. கற்றுக் கொண்டவர்கள் மற்றவர்கள். தமிழர்கள் அதற்கும் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே அதைப் பயன்படுத்தினார்கள். இலட்சக்கணக்கான ஆண்டுகளாக நெருப்பு எல்லோருக்கும் பயன் பட்டிருக்கும். ஆனால் நெருப்பை  எப்படி உண்டாக்குவது என்று கண்டறிந்தவன் தமிழன்.  ஆகவேதான் கருமை, கூட்டம் என்ற இரண்டு அடிப்படைப் பொருள்களில் கூட்டப் பொருளிலிருந்து இந்த வெப்பப் பொருளை அரசேந்திரன் வரவழைத்துக் காட்டுகிறார். இவையயல்லாம் தொடர்புடைய பொருட்கள். இந்த நெருப்புக்கு மற்ற பெயர்கள் என்ன? காந்தல் என்று சொன்னார்கள். கதம் என்றால் நெருப்பையும் குறிக்கும் - சினத்தையும் குறிக்கும்.

காணுறை வாழ்க்çக்க கத்தாய் வெட்டுவன்

மான்தசை கொடுத்த வட்டினும்

இது புறநானூற்றுப் பாடல். எனவே கதம் என்பது கத்தாய் -கோபமான நாய்.  இந்த ‘கல்’ சொல்லில் காந்தல், கதம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு போகும் போது அடுத்ததாக - அவருடை ஆராய்ச்சியில் ஒரு சிறப்பாகத்தான் அடுத்து துளைப் பொருள் வருகிறது.  துளைப் பொருளுக்கும் கூட்டப் பொருளுக்கும் இடம் இருக்கிறது. தாளிலே துளையிடுவதற்கு ஊசியாலே முடியும்.  ஊசியைக் கொண்டு தாளில் துளையிடலாம். கூட்டமான அடர்த்தியான, திண்மையான ஒரு பொருள் மரத்திலே துளையிடுவதற்கு உளி பயன்படுகிறது. நிலத்திலே துளையிடுவதற்கு கடப்பாறை பயன்படுகிறது. ஒரு திடமான பொருளைக் கொண்டு மற்றொரு திடமான பொருளை அழுத்துகிற பொழுது அதில் துளையிடப்படுகிறது.

மலையிலே தங்களுடைய உணவுப் பொருட்களைச் சேமித்து வைப்பதற்குப் பள்ளம் தோண்டினார்கள். அது கலம் ஆனது. அதுபோன்ற கலம்தான் பின்னர் மரக்கலம் - கப்பலாகிறது. அந்தக் கலம் என்பதைத்தான் காலே (galea)என்று மொழியிலே, கிரேக்க மொழியிலே, பிரஞ்சு மொழியிலே, எபிரேய மொழியிலே பயன்படுத்துகிறார்கள் என்று வரிசையாகச் சொல்லிக் கொண்டே வருகிறார். அடுத்து கப்பு - கப்பு என்றால் அதிலே ஒரு குழித்தன்மை இருக்க வேண்டும். கல்லப்பட்ட குழிப் பகுதியே கல்பு - கப்பு என்றாகின்றது என்கின்றார். மலையிலிருந்து தொடங்கி - கல்லிலேயிருந்து தொடங்கி தன்னுடைய ஆராய்ச்சியைச் சொல்லிக் கொண்டு வருகிறார்.  ஆங்கில மொழியிலேயும் இருக்கிறது. இந்தச் சொல்லின் அடிப்படையிலேதான் கப்பல் என்கிற சொல் வருகிறது. தமிழின் கப்பு, ஸ்கப்பு என மாறிப் பின்... என மேற்கே சென்றதை அடுத்து நிறுவுகிறார்

இன்னொன்றைப் படித்த போது நான் வியந்து போனேன். ‘கப்பா’ என்று சொன்னால், ‘தளர் மேல் அங்கி’ என்று பொருள். துளைபோல் அங்கி யிருப்பதால் அது லத்தீனில் கப்பா எனச் சொல்லப்பட்டதாம். நாளைய தினம் ஈஸ்டர் பண்டிகை - இயேசு உயிர்த்து எழுகிற நாள். கல்வாரி மலையிலே அவர் சிலுவையில் அறையப்பட்ட பின்னர் அவர் மீண்டும் உயிர்த்தெழுகிற நாள் - அதைக் கிறித்துவர்கள் ஈஸ்டர் என்று கொண்டாடி மகிழ்கிறார்கள். தளர் மேல் ஆடை என்பது அங்கி. பாதிரியார்கள் ஒரு தளர்மேல் ஆடையை -அங்கியை அணிந்திருக்கிறார்கள். இப்படி புனித மார்ட்டின் என்கிற துறவி அணிந்திருந்த மேலாடையைத் தேவாலயத்திலே கொண்டு போய் வைத்தார்கள். அப்படி புனித மார்டினுடைய மேலாடையை வைத்துக் கட்டப்பட்ட முதல் ஆலயம்தான் அவரின் ஆடையின் பெயரால் ‘Capel’எனப்பட்டுப் பின் ‘Chapel’என்று ஆனதென்று சான்றுகளோடு எழுதிச் செல்கிறார்.

இப்படிப்பட்ட ஆய்வுகளின் காரணமாக உலகத்திலே இருக்கக்கூடிய அத்தனை மொழிகளுக்கும், கீழை ஆரிய மொழிகளுக்கும், மேலை ஆரிய மொழிகளுக்கும், பாலி மொழிக்கும், பிராகிருத மொழிக்கும் தமிழ் மூலமாக இருப்பதை விளக்கிக் காட்டுகிறார்.

இந்தக் கணினி யுகத்தில் இந்திய மொழிகளில் அதிகமான அளவிற்கு கணினியிலே பயன்படுத்தப்படுவதும் தமிழ் மொழிதான். இணைய தளத்திலே இந்திய மக்களில் அதிகம் பேர் பயன்படுத்துவதும் தமிழ்தான்.

இங்கே மருத்துவர் சத்திய நாதன் கணினி மொழியாகத் தமிழ் இருப்பதை விளக்கிப் பேசினார்.

நீங்கள் இத்தகைய ஆய்வுகளைச் செய்யச் செய்ய அது எங்களுக்குப் பயன்படும். பொன். சத்தியநாதன் செய்கிற ஆய்வுகள் எங்களுக்குத்தானே பயன்படும். கடந்த நூற்றாண்டு அதற்கு முன்பு ஈழத்திலிருந்த தமிழறிஞர்கள் செய்த ஆய்வுகளெல்லாம் எங்களுக்குப் பயன்பட்டன. வரிசைப்படுத்தி எத்தனையோ பெயர்களைச் சொல்லலாம். ஆறுமுக நாவலர், ஞானப் பிரகாசர் என்று எத்தனையோ பெயர்களைச் சொல்லலாம். அதைப் போல, நீங்கள் இந்த மொழிக்குச் செய்யக்கூடிய ஆய்வு எங்களுக்குப் பயன்படும்.

தமிழர்களுடைய மானத்தை, வீரத்தை, கற்பை, பழமையான பண்பாட்டைப் பாதுகாக்கிற நீங்களே வருகிற நூற்றாண்டிலும் வெல்லக் கூடிய மொழியாகத் தமிழை ஆக்கி வைக்கிறபொழுது அது தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும்தான் பயன்படப் போகிறது. இந்த ஆய்வுகளைப் பற்றி கேட்கக் கேட்க எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது? தேனாறு பாய்கிறதே செவிகளில்.

கடந்த 22 ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்களைத் தர வேண்டும் என்ற என்னுடைய மசோதா மீது விவாதம் நடைபெற்றது. இன்னமும் விவாதம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஏழாவது அட்டவணையில் மத்திய அரசுக்குக் கொண்டு போகப்பட்ட அதிகாரங்களையயல்லாம் மாநிலங்களுக்குத் திரும்பக் கொண்டு வர வேண்டும். அமெரிக்க ஐக்கிய நாடுகளைப் போல, ஆஸ்திரேலியாவைப் போல எஞ்சிய அதிகாரங்கள் அனைத்தும் மாநிலங்களுக்கு வேண்டும் ‡ அரசியல் சட்டம் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று அறிஞர் அண்ணா அவர்களின் லட்சியக் கனவுகளை மசோதாவாக ஆக்கி, அந்த மசோதா மீது பேசியிருக்கிறேன். நீண்ட நாட்கள் அதைப் பற்றி ஆய்வு செய்து பேசியிருக் கிறேன். நாடாளுமன்றப் பதிவேடுகளிலே என்னுடைய கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறேன்.

நான் உரையாற்றி முடித்ததற்குப் பிறகு காங்கிரஸ் கட்சியைத் சேர்ந்த ஒரு நண்பர் பேசினார். இவர்கள் இந்தியை எதிர்த்தே வீணாகிப் போய் விட்டார்கள். நான் இந்தியைப் படித்திருக்கிறேன் - அதனால் பெருமையாக இருக்கிறேன் என்றார். நான் சொன்னேன் - இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்று சொன்னீர்கள். உத்தரப்பிரதேசத்துக்காரனும், பீகார்காரனும் வேலை யில்லாமல் தாழ்வாரங்களிலே அலைந்து கொண்டிருக்கிறார்கள். எங்கள் தமிழ்நாட்டு இளைஞர்கள் அமெரிக்க நாட்டிலும், ஐரோப்பிய நாடுகளிலும் விஞ்ஞானக் கூடங்களில் மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் இருக்கிறார்களே - என்று சொன்ன போது அவரால் பதில் சொல்ல முடியவில்லை.

தமிழ் அரசோச்ச வேண்டும்!

அறிஞர் அண்ணா அவர்கள் தமிழ் பயிற்று மொழியாக வேண்டும் - நீதி மன்ற மொழியாக வேண்டும் -தமிழ் அரசோச்ச வேண்டும் - அனைத்து இடங்களிலும் இடம் பெற வேண்டும் என்று சொன்னார். ஆனால், வெளியுலகத் தொடர்புக்கு ஆங்கிலமும் இருக்கட்டும் என்று அண்ணா அவர்கள் சொன்னார்கள். அதுதான் என்னுடைய கருத்து.

இந்தத் தமிழ் அன்னைக்குப் பெயர் சூட்டி, மண்ணுக்குப் பெயர் சூட்டி, தமிழுக்குப் பெருமை சேர்த்தவர் அறிஞர் அண்ணா. இன்றைக்குத் தமிழ்த் தேசியத்துக்கு - திராவிடத் தேசியத்துக்கு அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் ஆற்றி அரும்பங்கு இருக்கிறதே அதை யாரும் புறக்கணித்துவிடக் கூடாது. ஞானியார் அடிகள் பாண்டித்துரைத் தேவரைச் சந்தித்தபொழுது 4 ஆம் தமிழ்ச் சங்கத்தை அமைக்கச் சொன்னதும் அதனால் நாம் பயன்பெற்றதும் வரலாறு. சைவ சமயக் குரவர்கள் ‡ தேவாரம், திருவாசகம் பாடிய நால்வர் தமிழுக்குத் தொண்டு செய்திருக்கிறார்கள்.

தமிழுக்கு மறைமலையடிகள் தொண்டு செய்திருக்கிறார். அறிஞர் அண்ணா அவர்கள் தொண்டு செய்திருக்கிறார் - திராவிட இயக்கத்திலே, தமிழிலே பேச வேண்டும் ; தமிழிலே எழுத வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டது. தமிழ்க் கனலாக - தமிழ் எரிமலையாக வெடிக்கின்ற உணர்வை அண்ணா அவர்கள் ஏற்படுத்திக் கொடுத்தார். செயல்படுத்துதலிலே தடைகள் - தமிழ் ஆட்சி மொழி ஆகவில்லையே என்கின்ற குறை இருக்கிறது. ஒப்புக் கொள்கிறேன். தமிழ் அரசோச்ச வேண்டும் ;ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், இந்திய நாட்டில் மற்றவர்களுக்குக் கிடைக்காத வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது என்று சொன்னேன். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சொன்னார், ‘நான் இங்கே வந்ததும் இந்தி படித்து விட்டேன். எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது. நீங்கள் இப்படிப் பெருமைப்பட முடியுமா?’ என்றார்.

நான் ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு கொஞ்சம் பொறுமையாகச் சொன்னேன். இன்றைக்கு இருக்கின்ற பீகார் நாடாளுமன்ற உறுப்பினர்கள் - உத்தரப்பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர்கள் - உலகத்து மூத்த மொழியாகிய - செவ்வியல் மொழியாகிய தமிழை இங்கே பேசினால் நான் கேட்டு மகிழ்ச்சி அடைவேன். பேசுகிறார்களா? இல்லையே. எல்லோரும் சமம் என்று சொன்னால் எங்கள் தாய் மொழி - தமிழ் மொழி ஆட்சி மொழி ஆகும் போதுதானே இந்த நாடு எங்கள்நாடு என்கின்ற உணர்வு ஏற்படும்? (கைத் தட்டல்).

எங்கள் மொழி ஆட்சி மொழி ஆகட்டும். நடைமுறைக்குச் சாத்தியமில்லை என்று மறுக்காதீர்கள். ஆரிய மொழிக் குடும்பத்திலே இருந்து இந்தியை ஆட்சி மொழியாக்கி இருக்கிறீர்கள். திராவிட மொழிக் குடும்பத்திலிருந்து மூத்த மொழியாகிய தமிழை ஆட்சி மொழியாக்குங்கள். இந்தக் கருத்தை நாங்கள் நாடாளுமன்றத்திலே வெளியிட்டோம்.

No comments: