Saturday, December 2, 2023

மே 17 இயக்கத்தின் மீது திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறு

மே17 இயக்கத்தின் மீது திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட அவதூறுகளை முன்வைத்து நாம் தமிழரால் பரப்பப்படும் பொய்களை அம்பலப்படுத்த இவ்விவரங்களை வெளியிடுகிறோம்.

ஈழப்படுகொலையில் சர்வதேசத்தின் பங்களிப்பு & ஈழப்படுகொலையை 'இனப்படுகொலையாக வரையரை செய்யலாமா?',  'யாரெல்லாம் இதில் பங்கெடுத்தனர்?', 'அவர்களது நோக்கமென்ன?' என்பது குறித்து 2 சர்வதேச மக்கள் நீதிமன்ற(தீர்ப்பாயம்) அமர்வுகள் நடந்துள்ளன. 

முதல் அமர்வு அயர்லாந்து டப்ளின் நகரில் 2010ல் நடந்தது. ஈழப்படுகொலையில், 'அமெரிக்காவும், இங்கிலாந்தும் பங்கெடுத்தன' என்பது தீர்ப்பாக வெளியிடப்பட்டது.

 'ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலையா?' எனவும், 'இதில் பங்கெடுத்த நாடுகள் எவை?' என்பதை 2ம் தீர்ப்பாயத்தில் விசாரிக்க வேண்டுமென தீர்ப்பானது. இத்தீர்ப்பாயத்தில் இந்தியாவிலிருந்து புகழ்பெற்ற 'நீதிபதி சச்சார்',  'அருந்ததிராய்' போன்றோர் பங்களித்தனர். இத்தீர்ப்பாயத்தில்,

இலங்கை செய்த மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டது. ஆனால்,  'விடுதலைப்புலிகளே கொலைக்குற்றம், கட்டாயக்கருக்கலைப்பை செய்தனர்' என இந்தியாவிலிருந்து சென்ற பால்நியூமென் ஜனவரி 2010ல் பதிவு செய்தார். 2011ல் இவர் நாம் தமிழர் கட்சியின் சர்வதேச செயல்பாட்டாளராகவும், கர்நாடக மாநில பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டார். இவரது ஆவணங்கள் தீர்ப்பாயத்தின் பதிவுகளில் இன்றும் உள்ளது. இவரது வாதங்கள் ஆதாரமற்றதென நிராகரிக்கப்பட்டது.

இவ்வாறு பொய் அவதூறுகளை முன்வைத்ததால், ஜெர்மனியின் 'ப்ரேமன்'  நகரில் நடந்த 2வது தீர்ப்பாயத்தில் பால்நியூமென் நிராகரிக்கப்பட்டார்.

'வி.பு இயக்கத்தின்' இதழான 'தமிழ்நெட்'டில் வெளியான எனது பேட்டிகளை கண்டபின்,  என்னை அழைத்ததாக தீர்ப்பாய பொறுப்பாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

2வது தீர்ப்பாயத்தில்

'இங்கிலாந்து, அமெரிக்க மீதான குற்றச்சாட்டு', இனப்படுகொலை சாட்சிகள், ஆவணங்கள் ஆகியவற்றையே விசாரிக்க போதுமான கால அவகாசம் இல்லாததால் எமது ஆதாரங்களை விசாரிக்க இயலாமல் போனது. ஆனால் மே17 இயக்கம் முன்வைத்த ஆதாரங்கள் அடிப்படையில் 'ஈழ இனப்படுகொலையில் இந்தியா பங்களித்ததை' உறுதிசெய்து, 2014-15ல் மூன்றாவது தீர்ப்பாயத்தில் 'இந்தியா மீது விசாரணை' நடத்த முடிவு செய்தது. 'உமர்' என்பவர் ஐ.நா பங்களிப்பை பதிவு செய்ய வந்தார். தீர்ப்பாய தலைவரே முன்னாள் ஐ.நா துணை பொதுசெயலாளர் என்பதால் அக்குற்றச்சாட்டை இனப்படுகொலைக் கானதல்ல என விளக்கி நிராகரித்தார். நான் இந்தியா மீதான குற்றச்சாட்டுகளை முன் வைத்தேன்.

'இந்தியா குற்றவாளி' எனும் தீர்ப்பு முதன்முதலாக சர்வதேச அளவில் இந்திய அரசிற்கும், காங்கிரஸ்க்கும் கிடைத்த மாபெரும் பின்னடைவு. இத்தீர்ப்பின் அடிப்படையில், இந்திய அரசை பல தலைவர்கள் (நாம் தமிழர் தவிர்த்து) குற்றம்சாட்டினர்.

இலங்கை அரசு, சாட்சிகளை மிரட்டுவது, விசா கிடைக்காமல் செய்வது, தாக்குவது/கொலை செய்கிற காரணத்தினால் 'தீர்ப்பாய விவரங்கள், பங்கெடுக்கும் நபர்களின் விவரங்களை' அவசியமின்றி தீர்ப்பாயம் வெளியிடாது.

எனவே இந்தியாவின் மீதான விசாரணை விவரங்களையும் ரகசியமாக வைத்திருந்தது. 

ஆனால் இவ்விவரங்களை விசாரணை துவங்கும் முன்னரே, 'உமர்' சமூக வளைதளங்களில் வெளியிட்டார். மேலும் தீர்ப்பாய பணியில் ஈடுபட்டோர் விவரம், அவர்களது மின்னஞ்சல்களையும் யாருடைய அனுமதியின்றி வெளியிட்டார். முக்கிய ஆவணங்களையும் வெளியிட்டார்.  இது அனைவருக்கும் கடும் நெருக்கடியை கொடுத்தது. இதன்பின் 'இந்திய அரசின் மீதான விசாரணைக்கான தீர்ப்பாயம்' நின்றுபோனது.

இதை செய்தபின்னர், தீர்ப்பாயத்தால் ஒதுக்கப்பட்ட பால்நியூமெனோடு கைகோர்த்து, 'உமர்' ஒரு கூட்டத்தில் மே17 மீது அவதூறுகளை வைத்துவிட்டு ஒதுங்கினார்.

ப்ரேமன் தீர்ப்பாயத்தை நடத்திய விராஜ்மெண்டிஸ், ஜூட்லால்பெர்ணாண்டோ ஆகியோர், 'உமர்' பரப்பிய அவதூறுகளை அறிந்த பின், உடனடியாக மறுப்பு அறிக்கை வெளியிட்டனர். உமர் செய்த அவதூறுகள் ஆதாரமற்றவை என்பதை வெளிப்படுத்தினர். மே17 இயக்கம் மீது சேற்றைவாரி இறைப்பதற்கு கண்டனமும் தெரிவித்தனர். 

இவர்களது அறிக்கை ப்ரேமன் தீர்ப்பாய அதிகாரபூர்வ இணையத்தில் இன்றளவும் உள்ளது. 

(இந்த இணைப்பை முதல் கமெண்டில் பதிவு செய்துள்ளேன்)

இந்திய-காங்கிரஸ் அரசு மீதான விசாரணையை தடுத்துநிறுத்த உதவிய உமரின் பொய்களை பரப்புபவர்கள், வி.புலிகளை அவதூறு செய்த பால்நியூமெனுக்கு தம் கட்சியில் பெரும்பதவி கொடுத்தவர்கள்.

*உமருக்கு நிதியுதவிகளை மே17 தோழர்களே செய்தனர்

*ஈழப்படுகொலை குற்றவாளிகளை பாதுகாக்க நடந்த துரோகங்கள் குறித்து மேலதிக விவரங்களை தேவைப்படும் போது வெளியிடுவோம்.

பொய்கள், கட்டுக்கதைகள், வாய்சவடால் களை நம்பி மே17  இயங்கவில்லை. 

உறங்கிக்கிடந்த உண்மைகளை வெளிப்படுத்தவும், துரோகிகளை அடையாளம் காட்ட வாய்ப்பளித்ததற்கு மனமார்ந்த நன்றி!

இவ்வாறான வாய்ப்புகளை மேலதிகமாக  நாம் தமிழர் கட்சியினர் ஏற்படுத்தித்தர வேண்டுகிறோம்.

No comments: