Monday, November 27, 2023

திருவாரூர் விடயபுரம் பற்றி சாக்கோட்டை மு. இளங்கோவன்

அண்ணன் மு.இளங்கோவன் அவர்களின் பதிவு....

அன்பு கவி,

எனது பெற்றோர்கள் தனலட்சுமி , முனுசாமி , குழந்தை சுமதியுடன் அரசியல் சட்டத்தை எரித்து சிறை சென்றார்கள் .

தந்தையார் பற்றி கவலையில்லை .. அவர் பல்வேறு போராட்டங்களில் அடிக்கடி சிறை சென்ற அனுபவம் உண்டு.

எனது தாயாருக்கு முதல் முறை. அதை விட என் தங்கை சிறுபிள்ளை .மூன்று மாதங்கள் கழித்து வந்த போது உடம்பு கை கால்களெல்லாம் புண் .கைகள் எல்லாம் சீழ்வடிய பாவமாக இருந்தது. பெண்கள் சிறை தான் . 

சுந்தர லீலா அம்மையார், சுப்புலட்சுமிபதி இன்னும் பலர் எல்லோரும் ஆள் அடையாளம் தெரியாத அளவு உருமாரியே இருந்தார்கள் .

 திருவாரூர் விசயபுரத்தில் தான் அரசியல் சட்டம் எரிக்கப்பட்டது. அப்போது நடந்தது எல்லாம் இன்றும் கூட எனக்கு காட்சியாய்த் தான் இருக்கிறது. 

பெரியவர் அய்யா சிவசங்கரன் அவர்களும் கிடாரங்கொண்டான் ,லட்சுமணன் அண்ணன் அவர்களும் தான் சட்டப் பிரிவின் நகல்களைக் எல்லோருக்கும் கொடுத்தார்கள். நிறைய கூட்டம்.

அங்கே எவருக்குமே போலீஸ் , சிறை என்பது போன்ற சிந்தனை இருந்ததாக தெரியவில்லை. எதோ திருமண வரவேற்பு போல மகிழ்ச்சியோடு இருந்தார்கள் . எல்லோரையும் வேனில் ஏற்றும் போதும் கோஷம் போட்டுக் கொண்டே ஏறினார்கள்.

 அப்போதும் கடைசியாக வேனில் ஏறுவதற்காக சுந்தரலீலா – சிங்கராயர் அவர்கள் நின்று கொண்டு மற்ற பெண்களை ஏற்றி விட்டார்கள்.

 அப்போதுதான் எனது தாயார் கேட்டது "எங்களை ஏன் சார் இப்பவேனில் ஏற்றுகிறீர்கள்?"


"உங்களுக்குத் தெரியாதாம்மா ? சட்டத்தை அவமதிச்சா ஜெயிலுன்னு ?" _ 


"அப்ப இந்த போலீஸ்கார அய்யாவையும் ஏத்துங்க . நாங்க நெருப்பு வச்சோம் .இவரு கீழே புடுங்கி போட்டு பூட்ஸ் காலால மிதிச்சுதான நெருப்பை அணைச்சாரு? பூட்ஸ் காலாலமிதிச்சா அதுவும் அவமதிக்கிறது தான?" என்று சொல்லவும் போலிசார் உட்பட அனைவருமே சிரிக்கவும் சூழலில் வருத்தமே காணவில்லை.


அதை விட ,சிறை மீண்டு வீட்டுக்கு வந்த பின்னும் எனது தாயாரின் பேச்சு முழுவதும் எதோ ஒரு பெரியபோரில் ஒரேஒரு வீரன் 100 பேரை வெற்றி கொண்டது போல் அதையே பேசிக் கொண்டிருந்ததுதான் வியப்பாக இருந்தது.

அப்போது என் தந்தையார் சிறையில் இருந்தார் .அதைப் பற்றியெல்லாம் எனது அம்மா கவலைப் பட்டதாகவே தெரியவில்லை. 

இவர்களது " சிறை அனுபவத்தையே "பேச்சாக இருந்தது.

 எனது தங்கையின் புண்கள் ஆறி சரியாக வர நான்கு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. 


எல்லோரும் சிறை மீண்டு வந்த பின்னால் ஒரு நாளில் அய்யா அவர்களே ஒவ்வொரு ஊராகச் சென்று பாராட்டு விழா நடத்தினார்கள். 

மேடையில் எனது அம்மாவின் முறை வந்த போது "வாங்கம்மா தனலட்சுமியம்மா .. நீங்க தான் போலீஸ்காரரையும் ஜெயிலுக்கு கூப்பிட்டதா ?" , என்று சிரிக்கவும் எனது தாயாருக்கு முகம் மகிழ்ச்சியை பார்க்க வேண்டுமே ..அடேயப்பா .

. . எனக்கு நானே மண்டைக் கனத்துடன் மகிழ்ச்சியடையும் செய்திகள் . இப்போது உங்களுடன்  பகிர்வு.

நன்றி!

(உட்கார்ந்து யோசித்தால் ஏராளமான பெயர்கள் வரும். கிட்டத்தட்ட எல்லோருமே பின்னாளில் என்னோடு இயக்கத்தில் இருந்தார்கள். எல்லோருமே என்னை விட மிக மூத்தவர்கள் . )

No comments: