தந்தை பெரியார் 2.5.1925 இல் தொடங்கிய குடி அரசு இதழுக்கு இது நூறாம் ஆண்டு.
"இதழாளர் பெரியார்" என்ற தலைப்பில் பேரா. அ.இறையன் அவர்கள் எழுதிய நூலிலிருந்து சில பக்கங்கள்...
“குடிஅரசு என்னும் பத்திரிகையை ஆரம்பிக்க வேண்டும் என்பதாக முதன்முதல் நானும் எனது நண்பர் தங்கப்பெருமாள் பிள்ளையும் 1922-இல் கோயம்புத்தூர் ஜெயிலில் சிறைவாசம் செய்யும்போதே நினைத்தோம்"
என்று தெரிவிக்கும் பெரியார், மூன்றாண்டுகள் கழிந்தபின் தன் நினைப்பை நடப்பாக்கினார். ஆம். 2.5.1925 அன்று குடிஅரசு பிறந்தது, கொடுமைகள் களைய புதுமைகள் விளைய!
தம் புரட்சிக் கருத்துகளை வெளியிட்டுப் பரப்புதற்கும் பயன்கள் குவிப்பதற்கும் கார்ல் மார்க்ஸ் அவர்களுக்கு "ரைனிஷ்" இதழ், "ஜெர்மன் ஃப்ரெஞ்ச்" வரலாற்றேடு ஆகிய இதழ்களும் லெனின் அவர்களுக்கு, "இஸ்க்ரா", "ஸார்யா", "ரயோச்சயா கஸேத்தா" ஆகிய இதழ்களும் ஹோ-சி-மின் அவர்களுக்கு "வியத்லாப்" என்ற இதழும் அம்பேத்கார் அவர்களுக்கு "ஜனதா", "பகிஷ்கிரத்", "பாரத்" ஆகிய இதழ்களும் பெருந்துணையாய் அமைந்திருந்தன என்பதையும் அவ்விதழ்களில் அச்சேறிய எழுத்துகள் இன்று வரை உலக மக்களுக்குப் பயன்பட்டு வருகின்றன என்பதையும் நாம் தெரிந்திருக்கி றோம்.
அவ்வாறே பெரியாருக்குக் 'குடிஅரசு' அமைந்தது.
எனவே 'குடி அரசின்' தோற்றம் முழுக்க முழுக்க ஒரு வரலாற்றுக் கட்டாயம்.
'குடிஅரசு' என்று தம் இதழுக்குப் பெயரிட்டது ஏதோ தற்செயலாக நடந்துவிட்ட ஒன்றல்ல. அது திட்டமிட்ட செயல். 19.1.1923 அன்றே அய்யா 'குடிஅர'சைப் பதிவு செய்து விட்டார். அது நடப்புக்கு வர 2 ஆண்டுகள் ஆயின. (குடிஅரசு: 1-5-1927).
"ஜனநாயகம் என்பது வடமொழிச் சொல். அதை வேண்டாமென்று ஒதுக்கி, 'குடிஅரசு' என்ற பெயரை வைத்தேன்" என்று அவரே வெளியிட்டிருக்கிறார். தூய தமிழ்ப் பெயர் சூட்டுவதில் அவருக்கிருந்த நாட்டத்தை இது காட்டுகிறது.
சிறையிலிருந்தபோது திட்டமிட்ட வண்ணமே, ஈரோடு கருங்கல் பாளையத்தைச் சேர்ந்த கற்றறிந்த வழக்குரைஞரும் பண்பாடு நிரம்பிய பேராயக் கட்சி முன்னோடியும் பெரியாரின் நடவடிக்கைகளுக்குத் தோள் கொடுக்கத் தயங்காதவரு மாகிய திரு. தங்கப்பெருமாள் அவர்களையும் இதழ் தொடங்கும் தம் முயற்சிக்குத் துணையாக வைத்துக் கொண்டார். இதழாசிரியர்களாக ஈ.வெ. இராமசாமி, வ.மு. தங்கப் பெருமாள் என இருவர் பெயர்களும் சாதிப் பின்னொட்டுகளுடன் இடம் பெற்றிருந்தன.
"மாலை-க; மலர்-க; குரோதன வருடம் சித்திரை மாதம் (2-5-1925) சனிக்கிழமை" என்றும் இனி ஞாயிறுதோறும் வெளிவரும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்த முதற் 'குடிஅரசு' இதழின் முகப்பு அட்டையின் மேற்பகுதியில் துறவி ஒருவர், மூன்று மதங்களின் கோவில்கள், இந்தியத் தாய், நெசவு செய்யும் காந்தியார், உழவு இயற்றும் உழைப்பாளி, கைராட்டை சுழற்றும் பெண், மரத்தச்சுத் தொழிலாளி, மூட்டை சுமக்கும் பாட்டாளி ஆகிய படங்களும்,
"எல்லாருமோர் குலம் எல்லாருமோரினம் எல்லாருமோர் விலை, எல்லாரு மிந்நாட்டு மன்னர் (பாரதி)" என்றும்,
"சாதிகளில்லையடி பாப்பா - குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம், நீதி உயர்ந்த மதி கல்வி அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்' (பாரதி) என்றும் அச்சியற்றப்பட்டிருந்தது.
அட்டையின் கீழ்ப் பகுதியில், "சிறந்த தமிழ்ப் பத்திரிகை, வருட சந்தா மூன்றுதான்” என்றும்,
“தமிழ் மக்கள் எல்லாத் துறைகளிலும் முன்னேற்றமடைய உழைக்கும் பத்திரிகை இது. ஆகையால் இதனை ஆதரிக்க வேண்டியது உங்கள் முதற்கடன் ஆகும். உடனே சந்தாதாரராய்ச் சேருங்கள்" என்றும் பெரிய எழுத்துக்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் முகப்பட்டையின் வலதுமேல் மூலையில் "தனிப்பிரதி விலை அணா ஒன்று" என்றும் ஆங்கிலத்தில் 'KUDI ARASU' என்றும் அச்சிடப்பட்டிருந்தது.
இதழின் உள்ளே ஆசிரியவுரைப் பக்கத்தின் முதற்கலத்தின் மேற்பகுதியில் கைராட்டையின் படமும்,
"பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்",
"ஒழுக்க முடைமை குடிமை; இழுக்க மிழிந்த பிறப்பாய் விடும்",
"வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉங் கோடா தெனின்"
எனும் மூன்று குறட் பாக்களும் பொறிக்கப்பட்டிருந்தன.
சில காலஞ்சென்று 23.8.1925ஆம் நாளிட்ட 'குடிஅரசு' இதழிலிருந்து குறட்பாக்களுக்கு மாற்றாக, "அனைத்துயிர் ஒன்றென்றெண்ணி அரும்பசி எவர்க்கும் ஆற்றி மனத்துளே பேதாபேதம் வஞ்சகம் பொய் களவு சூது சினத்தையும் தவிர்ப்பா யாகில் செய்தவம் வேறொன் றுண்டோ? உனக்கிது உறுதியான உபதேசம் ஆகுந் தானே"
என்ற பாடல் இராட்டைப் படத்தின் கீழே இடம் பெற்றது.
ஆசிரியர்களில் ஒருவராகத் தொண்டாற்றிய அறிஞர் தங்கப் பெருமாள் அவர்கள் உடல்நலப் பாதிப்புக்கு இலக்காகி, பொறுப்பிலிருந்து விலக நேரிட்டது.
பின்னர் 26.7.25 ஆம் நாளையக் 'குடிஅரசி'லிருந்து ஆசிரியராகப் பெரியார் பெயர் மட்டுமே இருந்து வந்தது.
காலப்போக்கில், கைராட்டைப் படமும் 'அனைத்துயிர் ஒன்று' எனும் பாடலும் முறையே 16.2.30, 27.7.30ஆம் நாள்களில் நீங்கிவிட்டன.
இன்னொன்றையும் இங்கே குறிப்பிட வேண்டும். 'குடிஅரசி'ன் முகப்பு அட்டையின் மேல்பகுதியில் இடம் பெற்றிருந்த படங்களும் சொற்களும் 25.12.97ஆம் நாளிட்ட இதழிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டன. அதே நாளிட்ட இதழிலிருந்து ஆசிரியர்:
ஈ.வெ.இராமசாமி நாயக்கர் என்ற பெயரின் சாதிப் பட்டப் பின்னொட்டு இல்லாதொழிந்தது.
அக்காலத்தின் செய்தியேடுகளுக் கென உருவாக்கப்பட்ட தாளில்தான் 'குடிஅரசு' அச்சாகியது. பக்கத்திற்கு மூன்று கலங்களெனப் பத்தி பிரிக்கப்பட்டு, 12 பக்கங்கள் கொண்டதாய் ஒவ்வோர் இதழும் அச்சடிக்கப் பெற்றது. இதழின் அளவு 12" x 15" அக்காலத்திய அளவு முறை குறிப்பிடப்பட்டுள்ளது.
தலையங்கம் எனும் ஆசிரியவுரை, பல்துறைக் கட்டுரைகள், அரசியல் - குமுகாயம் இலக்கியம் பண்பாடு தொடர்பான நிகழ்ச்சிகளின் செய்திகள், பெட்டிச் செய்திகள், பிற இதழ்கள் பற்றிய திறனாய்வுகள், 'ஆசிரியர்க்கு மடல்கள்', சுயமரியாதை இயக்கத் தோற்றத்திற்குப் பிறகு - குறிக்கோள் மொழிகள், அவ்வப்போது கவிதைகள், விளம்பரங்கள் முதலிய பல்வகைக் கூறுகளும் அடங்கிய அழகிய அரியதோர் இதழாகக் 'குடிஅரசு' மிளிர்ந்தது.
'குடிஅர'சின் உயர்ந்த தரத்தினைப் பறைசாற்றவல்ல வேண்டுகோள் துண்டமொன்று இதோ:
"குடிஅரசு நேயர்களுக்கு ஓர் வேண்டுகோள் நிருபர்கள் குடிஅரசு 'பத்திரிகையில் பிரசுரிக்க வேண்டிய கட்டுரைகள் செய்திகளைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் காகிதத்தின் ஒரு பக்கத்தில் இடது ஓரத்தில் ஓர் அங்குல இடம் (மார்ஜின்) விட்டு, வரிகட்கு இடையில் குறைந்தது. அரை அங்குல இடம்விட்டு
எழுதியனுப்புவதுடன், தங்களின் முழு விலாசத்தையும் தெரியப்படுத்த வேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளுகிறோம்.
தனிப்பட்ட நபர்களைக் குறித்து அனுப்பப்படும் கண்டனங்களும் 'ஊர்வம்பு விஷயங்களும்' பிரசுரிக்கப்படமாட்டா. பிரசுரிக்கப் படாத விஷயங்கள் திருப்பி அனுப்பப்படமாட்டா.
எப்படி, குடிஅரசின் தனிச்சிறப்பு பார்த்தீர்களா? செய்தியாளர்கள் பொதுத்தன்மை வாய்ந்த செய்திகளையே முறைப்படி அனுப்ப வேண்டும். தனிப்பட்டவர்களைப் பற்றிய ஊர் வம்புச் செய்திகளுக்கு இடமில்லை. புரட்சிக் கருத்துக்களைத் தாங்கி வரும் தம் இதழ் தரம் வாய்ந்ததாகவும் இருக்க வேண்டும் என்பதில் குறியாய் இருந்தார் பெரியார். அவரின் பண்பாடே அதுதான்.
பக்கங்களைக் குறிக்கப் பெரியார் பயன்படுத்தி வந்த தமிழ் எண்களை மாற்றிவிட்டு 16.6.1929ஆம் நாளிலிருந்து 1, 2, 3, 4, என்று எண்கள் இட்டார்.
சிறந்த அறிஞர்களின் உண்மை நாட்டும் கட்டுரைகளும் உண்மை காணும் கட்டுரைகளும் 'குடிஅர'சில் வெளிவருமாறு செய்தார் பெரியார். அந்நாள்களில் தாம் வெளிப்படுத்தக் கருதிய செய்திகள்பற்றி விரித்துரைக்கவே பெரியாருக்குத் தம் இதழில் இடம் போதவில்லை."
ஆரம்பத்தில் ஒவ்வொரு வாரமும் 12 பக்கமும் நாமே எழுதி வந்திருக்கின்றோம்" என்பது அவரின் கூற்று.
ஆனால் அதே நிலை தொடர்ந்து நீடிக்கவில்லை. பேராயக் கட்சியின் அக்காலத்திய நடவடிக்கைகள் தொடர்பாகவும், தாம் மேற்கொண்ட நிலைப்பாடுகள் பற்றியும் இன்றியமையா முகாமைச் செய்திகளையும் அடிப்படைக் கருத்துகளையும் 'நாட்டு மக்களின் முன் வைக்க வேண்டுமென்ற கடமையைப் பெரியார் நிறைவேற்றியதோடு, கற்றுத் துறைபோகிய கைவல்லிய சாமி, சந்திரசேகரப் பாவலர், ஈழத்துச் சிவானந்த அடிகள், சாமி சிதம்பரனார், பண்டித முத்துச்சாமி, கே.எம். பாலசுப்பிரமணியம், மா. சிங்கார வேலர், சீனி. வேங்கடசாமி முதலிய புலவர்களையும், ஆய்வுத்திறன் படைத்த கோவை அய்யாமுத்து, ஜனக சங்கர கண்ணப்பர், சா. குருசாமி, ப. ஜீவானந்தம் முதலிய அறிஞர்களை யும் தரமுயர்ந்த முற்போக்குக் கட்டுரைகளைக் 'குடிஅர'சில் எழுத வைத்ததோடு, பாரதிதாசன், எம்.ஆர்.. மத்திரன், ஜீவானந்தம் ஆகியோரின் உணர்ச்சிப் பாக்களையும் பெற்று வெளியிட்டார். அறைகூவலாய் அமைந்த அவர்களின் படைப்புகள் ஆரிய வைதிகத்தை அலற வைத்தன; தேசியங்களைத் திணற அடித்தன.
கட்டம் கட்டி வெளியிடப் பெற்ற பகுத்தறிவு - இனமான முழக்கங்கள் சில:
"மனுநீதி போன்ற அதர்ம நீதி உலகில் மற்றொன்று இல்லை!"
"சூத்திரன் என்று உன்னைச் சொல்லிக் கொள்ளாதே! சூத்திரன் என்றால் வேசிமகன் என்று பொருள்"
"இறந்தவர்களைத் திருப்தி செய்யப் பார்ப்பனர் வயிற்றை நிரப்பாதே"
இதழின் அட்டைக்காகப் பச்சைநிற வழுவழுப்புத் தாளை 13.4.1930ஆம் நாளிலிருந்து பெரியார் பயன்படுத்தினார். அதிலிருந்து தமிழ் மக்கள் 'பச்சை அட்டை 'குடிஅரசு' என்றே வழங்கும் நிலை உருவானது.