Tuesday, September 16, 2014

அயோக்கிய சிகாமணி அருகோ-வின் அண்ட புளுகும் ஆகாசப் புளுகும் - 2

 
அதுமட்டுமில்லைங்க. இன்னும் அருகோ என்ன சொல்றாருன்னா... ‘காஞ்சிபுரம் சி.என். அண்ணாதுரை தீர்மானம் என்று திராவிட இயக்க வரலாற்றில் தனிப்பெயர் ஏற்பட்டது. இதை மறுப்பவர்கள் எந்தக் கட்சியின் மாநாட்டுத் தீர்மானமாவது ஒரு தனியாளின் பெயரால் அழைக்கப்படுகிறதா என்று பார்க்க வேண்டும். எந்தத் தீர்மானமும் முன்மொழிந்தவர், வழி மொழிந்தவர் என்று கட்சி நடவடிக்கைக் குறிப்பில் இடம் பெறுமேயன்றி, இது போல் அழைக்கப்பட வில்லை’ என்று ‘பில்டப்’ வேறு கொடுக்கிறார்.
இந்த அண்ட புளுகை, அருகோ அப்படியே ஆகாசப் புளுகா எப்படி கொண்டு போறாருன்னு பாருங்க...
‘பின்னர் அரசியல் கட்சி ஆரம்பிக்கிற போது தமிழ்நாட்டின் மிட்டா, மிராசுகளாகவும், நிலப்பிரபுக்களாகவும், ஆலை அதிபர்களாகவும் உள்ள தெலுங்கர்களின் ஆதரவு தேவை என்பதற்காகவே அண்ணாதுரை, இதை திட்டமிட்டுச் செய்தார் போலும்! அதற்குப் பிராயத்சித்தமாகத்தான் 1969- இல் ம.பொ.சி. வலியுறுத்திய தமிழ்நாடு பெயர் மாற்றத் தீர்மானத்தை, உடலுக்கு முடியாத நிலையிலும் நிறைவேற்றி முடித்தார் என்பதை அன்று அவர் ஆற்றியவுரையிலும் சொல்லாமல் சொல்லியுள்ளாருன்னு நீட்டுறாரு பாருங்க அருகோ. அங்கதாங்க அவரு இருக்காரு’.
அண்ணாதுரை தீர்மானம் பற்றி சொன்ன பெரியார், மாநாட்டுக்கு முன்னாடி துரோகிகள் என்னென்ன தந்திரங்கள செஞ்சாங்க அப்படிங்கிறதையும் சொல்றாரு கேளுங்கள்....
‘.... 26.11.1943 இல் சேலத்தில் நீதிக்கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டம் கூடியது. சேலத்தில் மாநாட்டை நடத்துவது என்றும், வரவேற்புக் குழுத்தலைவர் சேலம் சேர்மன் பி. இரத்தினசாமி பிள்ளை, செயலாளர் சேலம் வக்கீல் நெட்டோ, எ. கணேச சங்கரன் என்றும் அறிவிக்கப்பட்டனர் என்றாலும் மாநாட்டை நடத்துவதற்காக அறிகுறி இல்லை. இதற்கிடையில் மாநாட்டை மதுரையில் நடத்திவிடுகிறோம், அனுமதி தாருங்கள் என்று பட்டிவீரன்பட்டி சவுந்தர பாண்டியனார் கேட்டார். சேலம் மாநாட்டுக் குழுவினரிடம் என்ன சொல்லுகிறீர்கள் நீங்கள் நடத்தப் போகிறீர்களா? இல்லை மதுரையில் நடத்திக் கொள்ள அனுமதி கொடுக்கட்டுமா? என்று சேலம் மாநாட்டு நிர்வாகிகளைக் கேட்டபோது, இல்லை இல்லை நாங்கள் சேலத்தில் நடத்தி விடுகிறோம் என்று உறுதி அளித்தார்கள். 10 நாள் வரையும் எதுவும் நடக்க வில்லை’.
‘மறுமுறையும் சேலம் சென்றபோது சில தோழர்கள் வந்திருந்தார்கள். ஆனாலும் வரவேற்புக் குழுத் தலைவரும், மாநாட்டுச் செயலாளர்களும் வரவில்லை. இரண்டுமணி நேரம் காத்திருந்து பார்த்துவிட்டு அவர்கள் வராததால் குழுத்தலைவரும், மாநாட்டுச் செயலாளர்களும் வரவில்லை. சேலம் குகை பிரபல வணிகர் ஜெகதீசன் அவர்கள் தலைமையில் மாநாட்டு நடவடிக்கையைத் துவக்குவது என்று முடிவு செய்து, மூன்று புதிய செயலாளர்களும் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டார்கள். ரூபாய் 2000 வரை வசூலுக்கும் அக்வட்டத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது’.
‘நிலைமை வேறுவிதமாகப் போகிறது என்பதை உணர்ந்த முன்னாள் வரவேற்புக் குழுத் தலைவரும், செயலாளர்களும் வந்து இரவு 11 மணிக்கு தங்கியிருந்த இடத்துக்கு வந்து, கூட்டத்துக்கு வராமல் போனதற்கு ஏதோதோ காரணங்களைக் கூறி, தாங்களே பொறுப்பேற்று மாநாட்டை நடத்திக் கொடுப்பதாக மீண்டும் உறுதி கொடுத்தார்கள்’.
‘மறுநாள் பத்திரிகைகளில் மாநாடு 20.8.1944 அன்று நடக்கும் என்றும், மாநாட்டு தலைவர் பெரியார் ஈ.வெ.ரா என்றும், கொடி ஏற்றவும், மாநாட்டை திறந்து வைக்கவும் தோழர்கள் அண்ணாதுரை, டாக்டர் ஏ.கிருஷ்ணசாமி, குமாரராஜா, இராமச்சந்திர ரெட்டியார் ஆகியோர் கேட்கப்பட்டிருப்பதாகவும் செய்தி வந்தது. இரண்டு நாள் பொறுத்துக் கொடியேற்றுபவர் சண்டே அப்சர்வர் பி.பாலசுப்பிரமணியம், திறந்து வைப்பவர் கி.ஆ.பெ.விசுவநாதம் என்றும் செய்தி வெளிவந்தது. மாநாட்டு தலைவர் பெயரும் போடவில்லை’.
‘ஆர்.கே.சண்முகம் அல்லது சவுந்திரபாண்டியனார் மாநாட்டுக்குத் தலைமை வகிக்க ஏற்பாடுகள் நடைபெற்றன. மாநாட்டு தேதி மறுபடியும் மாற்றப்பட்டு 27.8.1944 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது’.
‘.... அதன்பிறகு வேறுவழியின்றி என்னை மாநாட்டின் தலைவராகவும், கொடியேற்ற பி.பாலசுப்பிரமணியம், திறந்து வைக்க கி.ஆ.பெ.விசுவநாதம் ஆகியோரையும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தி விட்டார்கள்’.
‘மாநாட்டுத் தலைவராக அறிவிக்கப்பட்டு இருந்தாலும், முறைப்படி மாநாட்டு வரவேற்புக் குழு சார்பாக அழைப்பு இல்லை ஆனாலும், அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் பாசஞ்சர் இரயிலில் சேலம் வந்து சேர்ந்தோம்’.
இப்ப மாநாட்ல என்ன நடந்தது அப்படிங்கறதையும் அதுல பி.பாலசுப்பிரமணியமும் கி.ஆ.பெ.விசுவநாதமும் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை ‘குடிஅரசு’ நிருபர் சொல்றாரு. கேளுங்க....
‘.... மாநாடு கூடினதும் மாநாட்டுக் காரியதரிசி தோழர் நெட்டோ அவர்கள் தோழர் பாலசுப்பிரமணியம் அவர்களை கொடியேற்றி வைக்கும்படி பிரேரேபித்தார். சொன்ன உடனே பிரதிநிதிகள் கூட்டத்தில் இதில் எழுத முடியாத பலவிதமாக கெட்ட வார்த்தைகளும் மறுப்பு ஆட்சேபனைகளும் கிளம்பின....பெரியார் அவர்களும் ஆத்திரப்பட்டவர்களுக்கெல்லாம் கையமர்த்தி கேட்டுக் கொள்வதின் மூலம் சமாதானம் சொல்லி யாதொரு கலவரமும் இல்லாமல் இருக்கும்படி வேண்டிக் கொண்டார்’.
‘பிறகு தோழர் பாலசுப்பிரமணிய முதலியார் சிறிது நேரம் ஆங்கிலத்தில் பேசினார். (அது பின்னால் வரும்). பேச்சு முழுவதும் சரணாகதி பேச்சாகவும் தன்னுடைய நடவடிக்கைக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும், தானும் தன் பின் சந்ததியும் என்றென்றும் பெரியார் தலைமையில் தொண்டாற்றுவோம் என்றும், ‘நான் பெரியாருக்கு ஓய்வு கொடுப்பதற்கு ஆகவே வேறு எந்ததெந்த ஆள்களுடைய பெயர்களை தலைமை ஸ்தானத்திற்கு குறிப்பிட்டேனோ அவர்கள் எல்லாம் குறிப்பாக சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியார் முதலியவர்கள் எல்லாம் கட்சிக்கு ‘துரோகிகளாய் விட்டார்கள்’ என்றும் ‘பெரியார் தமிழ்நாட்டின் காரல் மார்க்ஸ்’ என்றும் ஏராளமாய் புகழ்ந்து பேசியதோடு ‘அவரிடத்தில் நான் குறை கண்டதாக சொல்வதெல்லாம் இன்னும் அதிகமாக வேலை செய்ய வேண்டும் என்று ஊக்கப்படுத்த வேண்டுமென்ற எண்ணத்தைக் கொண்டேயயன்றும் வேறு எந்தவிதமான குறை அவரிடத்தில் கண்ட தில்லையயன்றும் சொன்னதோடு பெரியாரே என்றென்றும் தலைவராயிருந்து திராவிடஸ்தான் வாங்கிக் கொடுத்து அதில் அவரே முதல் பிரசிடெண்டாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்றும் அதற்காக தாம் எல்லாவிதமான தியாகங்கள் செய்யத் தயாராயிருப்பதாகவும் தெரிவித்தார்......’
‘பின் மாநாட்டைத் திறந்து வைக்கும்படி தோழர் கே.ஏ.பி. விசுவநாதத்தைக் கேட்டுக் கொண்டார்கள். தோழர் விசுவநாதம் அவர்கள் பேச எழுந்த போதும் சிறிது எதிர்ப்புக்குறி காணப்பட்ட தென்றாலும் அது உடனே பெரியார் செய்கையால் அடக்கப்பட்டது. தோழர் விசுவநாதம் அவர்கள் பேசியதும், சற்றேறக்குறைய தோழர் பாலசுப்பிரமணியம் பேசியது போலவேயிருந்தாலும் பெரியார் சர்வாதிகாரியாய் இருப்பதைக் கூட தான் ஆதரிப்பதாகவும் பேசி, சாமர்த்தியமான முறையில் சாடைமாடையாக சில கிண்டல் சொல்லையும் சொல்ல ஆசைப்பட்டார். கூட்டத்திலுள்ளவர்களில் சில பிரதிநிதிகள் ஒருமையில் பேசி எச்சரிக்க ஆரம்பித்தவுடன் மறுபடியும் பெரியாருக்குப் புகழ்மாலை சூட்டுவதில் முனைந்து விட்டார்...’
இப்படிதான்ய்யா நடந்தது சேலம் மாநாடு! என்றேன் நான்.
அய்யா இந்த தமிழர் கழகம், திராவிடர் கழகம் கதை இருக்கே அது மிகச் சிறந்த திரைக்கதையோடு செய்யப்பட்டிருக்கிறதய்யா. எப்படின்னு கேட்கிறிங்களா?
அண்ணல் தங்கோவின் பெயரன் அருள் செல்வன் அண்ணல்தங்கோவின் வாழ்க்கை வரலாற்று நூலாக ஒன்றை எழுதுறாரு. அந்நூலை அவர் ‘தமிழ் நிலம், தமிழ் இனம், தமிழ் மொழியைக் காக்கத் தம் வாழ்நாளையே ஈந்த ஈரோட்டு அரிமா பெரியாருக்கு’ என்று குறிப்பிட்டு படையல் செய்கிறார். அந்த நூலில், 105 பக்கத்தில சொல்றாரு....
‘1944 ஆம் ஆண்டில் நடந்த நிகழ்ச்சி அண்ணல் தங்கோவின் வாழ்க்கை வரலாற்றில் மட்டுமல்லாமல், தமிழக வரலாற்றிலும் மிகப்பெரிய திருப்புமுனை வாய்ந்ததாகும்’.
‘சேலத்தில் பெரியார் தலைமையில் தன்மான இயக்க மாநாடு கூட்டப்பட்டது. அக்கூட்டத்தின் முடிவில் தீர்மானமாக நயன்மை (நீதிக்)கட்சி எனப்பட்ட தென்னிந்திய நல உரிமைக் கழகத்தின் பெயரை திராவிடர் கழகம் எனப் பெரியார் பெயர் மாற்றினார்’.
‘ஆனால் அண்ணல் தங்கோ அவர்களுக்குத் திராவிடர் கழகம் எனப் பெயர் வைப்பதில் சிறிதும் உடன்பாடில்லை. திராவிடர் கழகம் என்பதே கூடாது. நாம் தமிழர்கள்; நமது இனம் தமிழ் இனம் ; நமது மொழி தமிழ் மொழி. எனவே நமது நாட்டு எல்லையை, மொழியை, இனத்தை அடிப்படையாகக்கொண்டு அதைத் தமிழர் கழகம் என்றே மாற்ற வேண்டும் என்று போராடினார். வேலூரில் பெரிய கூட்டத்தையே கூட்டினார். தமிழர் கழகம் என்றுதான் பெயர் சூட்ட வேண்டுமென்று தம் கொள்கையை வெளிப்படச் செய்தார். மக்களிடம் சென்று விளக்கி, விடாமல் போராடினார்’.
‘இதே போல் அண்ணல்தங்கோவுடன் கி.ஆ.பெ. விசுவநாதம், திரு. சவுந்தர பாண்டியன், மும்மொழிப் புலவர் திரு.மு. தங்கவேலு (த.கோவேந்தனின் தந்தையார்) போன்ற அறிஞர்களும் தமிழர் கழகம் எனப் பெயர் சூட்டுவதுதான் பொருத்தம் என விடாமல் போராடினார்கள்’.
‘ஆனால் பெரியார் அவர்கள் திராவிடர் கழகம் என்ற பெயரையே இட்டு என்றென்றும் அப்படியே அழைக்கப்பட வேண்டும் எனத் தீர்மானமாகக் கூறி விட்டார்’
அப்படின்னு சான்றுகளே இல்லாத ஒரு நிகழ்வை எழுதி விட்டு, அந்நூலை ‘மணிவாசகர் பதிப்பகம்’ மூலம் வெளியிடுகிறார்.
நூலாசிரியர் அருள்செல்வன் அவர்கள் தனது ‘என்னுரை’யில், ‘இந்நூலின் அச்சுப்படியில் பிழைத்திருத்த உதவிய தென்மொழி ஆசிரியர் சிறந்த தமிழறிஞர் திரு. இறைக்குருவனார் அவர்களுக்கும்.... என் நன்றி’ அப்படின்னு எழுதுறாரு. இறைக்குருவனாருக்கு கிட்ட போன இந்த இடத்துல இருந்துதான் திரைக்கதை தொடங்குதய்யா.
இந்த நூலுக்கு அணிந்துரை வழங்குறாரு இறைக்குருவனார். அதில,.. ‘பிறிதொரு மாநாட்டில் அக்கட்சியைத் திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்ய முற்பட்ட போது, அதைத் தமிழர் கழகம் என்றே மாற்ற வேண்டும் என்று போராடித் தோற்றார் என்பதும் ஊன்றிக் கவனித்தக்கன’ என்று எழுதுறாரு. (இந்த இறைக்குருவனாரு தலைமையிலதான் ‘ஆன்றோர் பேரவை’யை அமைத்து ‘நாம் தமிழர் கட்சி’க்கு ஆவணம் தயாரிக்கச் சொன்னார்கள். அந்த ஆவணத்திலேயும் இந்த செய்தியைப் புகுத்தி சீமானை சிக்கலில் மாட்டிவிட்டாரு. ‘தமிழரா திராவிடரா’ என்று நூல் எழுதி பெரியார் மீது அவதூறுகளை பரப்பினாரு. அந்த நூல எழுதத் தூண்டினவரு அய்யா பழ.நெடுமாறன்னும் சொல்றாரு. அய்யா நெடுமாறனும் அந்நூலுக்கு அணிந்துரை வழங்கியிருக்கிறாரு. அப்ப நாம அய்யா நெடுமாறனையும் எப்படி பார்க்கணும் அப்படிங்கற முடிவுக்கும் வரணும்).
அடுத்து, தற்போதைய திராவிட இயக்க வரலாற்று ஆய்வாளர்(?) சுப.வீ. வாழ்த்துக் கொடுக்கறாரு பாருங்க.... ‘அண்ணல் தங்கோ அவர்கள், ‘திராவிடர் கழகம்’ எனப் பெயரிடப்பட்டதைக் கண்டித்து ‘தமிழர் கழகம்’ என்றே இயக்கத்திற்கு பெயர் சூட்ட வேண்டும் என்று பெரியாரோடு வாதிட்டவர். அவருடைய வாதமும், அதற்கு பெரியார் அவர்கள் பகன்ற மொழியும் இந்நூலுள் இடம் பெற்றுள்ளன’ அப்படினுன்டாரு.
இன்னும் நிறைய கூத்தெல்லாம் இருக்கு. இந்நூலுக்கு தமிழக முதல்வர் கலைஞரிடமும் அமைச்சர் தமிழ்க்குடிமகன் அவர்களிடமும் அணிந்துரை வாங்கியதுதான் உச்சம். ஏன்னா இவங்கெல்லாம் திராவிட இயக்கத்தின் தலைவர்கள். இவர்களிடமே இந்நூலுக்கு அணிந்துரை, வாழ்த்துரை வாங்கியிருக்காருன்னா பாருங்களேன்.
சான்று இல்லாம இந்த செய்தி எழுதுனாரு அருள்செல்வன். அவருக்கு உள்நோக்கம் இருக்க முடியாது. ஆனா இந்த செய்தியை எழுத அவருக்கு எப்படி எண்ணம் தோன்றியது. அப்புறந்தான் அவர் வெளியிட்டிருக்கற நூற்பட்டியலை பார்த்தேன். அதுல இருக்கு பேரறிஞர்(?) குணா எழுதிய ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்ற நூல். அதோட இறைக்குருவனாருடைய உதவி. இப்படியெல்லாம் பாக்கறப்பதான் இந்த அவதூறு எப்படியயல்லாம் உருவாக்கப் பட்டு பரப்பப்படுகிறது என்பது தெரியுது.
அண்ணல்தங்கோவே தமிழர்கழகம், திராவிடர் கழகம் பெயர் மாற்றம் குறித்து எழுதல்ல. ஆனா அவரு 1941-ஆம் ஆண்டு நடக்க இருக்கிற குடியியல் கணக்கெடுப்பையொட்டிதான் தன்னுடைய கருத்தை தெரிவிக்கிறாரு. இந்த நூல் பக்கம் 108 இல் இது குறித்து வருது....
இது குறித்து அண்ணல்தங்கோ தம் எழுத்து மூலமாகவே குறிப்பிடுவதை கீழே காண்கிறோம்:
இந்நற்றமிழ் இன ஆக்கப்பணியைத் திருவள்ளுவப் பெருந் தகையார் அறிவுறுத்தும் நல்லாண்மைத் தமிழர் இன ஆக்கத் திருப்பணியைப் பல்லாண்டுகளாக எண்ணி எண்ணி முடிவுக்கு வந்த யான் இன்றல்ல, நேற்றல்ல, சென்ற கி.பி.1940 ஆம் ஆண்டிலேயே தமிழர் குடியியல் கணக்கைத் திருத்த முயன்று அவ்வாண்டில் திருவாரூரில் தமிழர் நன்றிக் குரிய தமிழ்த் திரு. ஈ.வே.இராப் பெரியார் தலைமையில் நடந்த தென் இந்திய நல உரிமைப் பேரவை மாநாட்டுக்கு ஒரு தீர்மானத்தை செலுத்தினேன். அதன் சொல் வருமாறு: கி.பி.1941 ஆம் ஆண்டில் நடைபெறும் இந்தியக் குடிஇயல் கணக்கெடுப்பில் (1941), தென்னகத்தில் வாழும் தமிழ் மக்கள் (தெலுங்கர், கன்னடர், மலையாளிகள், துளுவர், கொங்கணர், ஒரியர், மராட்டியர், குசராத்தியர்) தங்களைத் தமிழ் மக்கள் என்றும் ; தமிழ்நாட்டினர் தம்மைத் தமிழர் என்றும் குறித்துப் பதிவு செய்து கொள்ளல் வேண்டும் என்று இத்தென் இந்திய மக்கள் நலப் பேரவை மாநாடு தீர்மானிக்கிறது! என்பதாகும். அதனைப் பொருள் ஆய்வுக் குழுவில் கொண்டு வராமலும் எனக்கு அறிவிக்காமலும் பெரியாரும், நண்பர் அண்ணாதுரையும் தம்முட் கலந்து பேசி முடிவு செய்தவாறு ‘திராவிடர்’ என்று பதிவு செய்து கொள்ளல் வேண்டும் என்று திருத்தி விட்டுப் பொது மாநாட்டில் அத்தீர்மானத்தை என்னை வேண்டுதல் செய்யுமாறு திடீரெனப் பணித்தார். யான் திடுக்குற்றுத் தெளிந்து நேரமின்மையால் மாறுபடாமல் சிறிது ஒட்டியவாறு தெலுங்கர், கன்டனர், மலையாளிகள், துளுவர், கொங்கணர் முதலியோர் வேண்டுமாயின் எங்கனமாயினும் குறித்துக் கொள்ளட்டும்; தமிழ்நாட்டுத் தமிழர் அனைவரும் தம்மைத் தமிழர் என்றே குறிக்க வேண்டும் என்று ஒரு சிலவே சொல்லி மீண்டனன். இது நல்லதோ, அல்லதோ தமிழ்நாடு நன்கறியும். சென்றது செல்க’.
இப்படின்னு அண்ணல்தங்கோ சொல்வது 1961ல்ல அப்படிங்கிறத நாம கவனத்துல கொள்ளனும். தமிழர் நன்றிக்குரிய தமிழ்த்திரு ஈ.வே.ரா. பெரியார் அப்படின்னு வேறு சொல்றாரு. இந்த மேற்கோள்ல தமிழர் கழகமுன்னுனோ அல்லது திராவிடர் கழகமுன்னோ அண்ணல் தங்கோ சொல்லல்ல. அப்பறம் எப்படிங்க இப்படின்னு? கேளுங்க. இவங்கல்லாம் ‘செம்மொழி வளர்த்த பார்ப்பனர்கள்’ அப்படின்னு கட்டுரை எழுதுற பார்ப்பன அடிவருடிகளுன்னு தெரியுதுல்ல!.
இன்னொன்னு பாருங்க. அண்ணல்தங்கோ ‘குடிஅரசு’ இதழ் தொடங்கப்பட்ட காலத்துல்ல தங்கபெருமான் பிள்ளையுடன் உதவி ஆசிரியரா பணியாற்றியிருக்கிறாரு. பெரியாருகிட்ட சம்பளம் வாங்கிட்டுதாங்க!. இத ஏன் சொல்றேன்னா! முல்லை பெரியாறு அணையை கட்ட பென்னிக்குயிக்குக் கூட தன் சொத்தையெயல்லாம் இழந்தாரு. ஆனா ஈவெரா என்ன சொத்தையா இழந்தாரு! அப்படின்னுல்லாம் அருகோ எழுதுறாருல்ல. அதுக்குதான். தமிழறிஞரெல்லாம் சமுகப் பணி, தமிழ்ப்பணி செய்றேன்னு சொல்லிக்கிட்டு பெரியாருகிட்ட சம்பளம் வாங்கிட்டுதான் வேலை செஞ்சிருக்காங்க.
அருள்செல்வனின் நூலுக்கு அணிந்துரை வழங்கிய இன்னொருத்தரு குடியாத்தம் இராம.தமிழ்ச்செல்வன். இவரு யாரு தெரியுங்களா, தமிழக அரசு கொடுத்துள்ள திருவள்ளுவர் உருவப் படத்துக்குச் சொந்தக்காரரு. பாவேந்தர் பாரதிதாசனின் அன்புக் கட்டளைக்கு பணிந்து ஓவியர் வேணுகோபால் சர்மாவுக்கு பணம் அளித்து திருவள்ளுவர் உருவப்படம் வரக் கரணியமாக இருந்தவர். இந்த நூல்ல ஒரு உண்மையைப் போட்டு ஒடைச்சுட்டாரு. அதாவது ,அண்ணல்தங்கோ, ‘‘Sunday Observor’ என்ற ஆங்கில வார இதழை நடத்தி வந்த பாலசுப்பிரமணியம் என்பவருடன் நெருங்கிய தொடர்பு வைத்துக் கொண்டு, தான் நடத்தும் ‘தமிழ் நிலம்’ செய்தித் தாளில் கருத்துக்களைப் பரப்பி வந்தார்’.
இப்ப உங்களுக்கு புரிஞ்சிருக்குமே... சேலம் மாநாட்டுல்ல இந்த பாலசுப்பிரமணியமும் கி.ஆ.பெ. விசுவநாதமும் என்ன செஞ்சாங்கன்னு பெரியாரு தான் கிழி கிழின்னு ஏற்கனவே கிழிச்சிட்டாருல்ல...
‘பெரியாருக்கும் கி.ஆ.பெ.விசுவநாதத்துக்கும் என்ன சிக்கல்? ஏன் கி.ஆ.பெ. நீதிக்கட்சியிலிருந்து விலகினாரு....’அப்படின்னு இன்னொரு நண்பர் ஒரு கொக்கியைப் போட்டாரு.
அதுக்கு நான் சொன்னேன், பெரியார் இந்தி எதிர்ப்புப் போரில 1938- இல் சிறைக்குச் சென்றாரு. அவரு வெளியில வர்ற வரைக்கும் நீதிக் கட்சியில பொதுச்செயலாளரா இருந்த கி.ஆ.பெ. திடீர்னு விலகினாரு. அப்ப கி.ஆ.பெ. 25 குற்றச்சாட்டுகளை பெரியார் மீது சொல்லி 1941 -இல் அறிக்கை விட்டு விலகுனாரு. அந்த அறிக்கையில....
‘ஜஸ்டிஸ் கட்சியின் பொதுக் காரியதரிசி பதவியிலிருந்து நான் விலகி விட்டேன் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்’.
‘சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களும் நானும் கட்டாய இந்தி எதிர்ப்பு மறியலில் பங்குகொண்டு மாநாடுகளைக் கவனித்தோம். டி.சுந்தர்ராவ் நாயுடு அவர்களுக்கும் அறிஞர் அண்ணாதுரை அவர்களுக்கும் பொதுக் காரியதரிசி பதவிக்காக பலத்த போட்டி ஏற்பட்டது. அதன் முடிவை தங்களிடமே விட்டுவிட்டேன். தங்கள் பல்லாரி சிறையில் இருந்தபோது சென்னையில் கூடிய நிர்வாகக் கூட்டத்திற்கு காரியதரிசி பணியை என்னிடம் ஒப்புவித்தீர்கள். நான் ஏற்றுக்கொள்ள நேர்ந்தது......’
‘தங்களை ஒழித்துவிட்டு நானே தலைவனாக வரப்போகிறேன் என்றும், குமார ராஜா அவர்களைத் தலைவராக கொண்டு வர முயற்சிக்கிறேன் என்றும், அதற்காகவே கிளைகளை ஏற்படுத்தி வருகிறேன் என்றும், தவறாக தங்களிடம் சென்னையில் சிலர் சொல்லியதாகக் கேள்விப் பட்டேன். இச் செய்தியை நான் நம்ப வில்லை. தாங்கள் சிறையில் இருந்து வெளி வந்ததும் ஈரோட்டிலும் சென்னையிலும் தங்களிடம் நான் பேசியவைகளில் இருந்து தாங்கள் அவற்றை நம்பி விட்டதாகத் தெளிவாக தெரிந்து ஆச்சரியப் பட்டேன். நேரில் வைத்து விசாரிக்க விரும்பினேன். மறுத்து விட்டீர்கள். உள்ளபடியே எனக்குப் பெரும் வியப்பை உண்டு பண்ணியதால் இனி ஒரு நிமிடமும் காரியதரிசி பதவியில் இருப்பது தகாது எனக் கருதி நான் ராஜிநாமா செய்துவிட முடிவு செய்து விட்டேன். கட்சியின் தலைமைப் பதவிக்கு நான் தகுதி அற்றவன் என்பதும், தங்களுடைய கையாளாக இருக்க விரும்பாத நான் பிறருக்கு கையாளாக இருக்க விரும்ப மாட்டேன் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்பி இருந்தேன் ; ஏமாந்தேன்’.
‘..... எனது ராஜிநாமாவை தாங்கள் விடுதலையில் பிரசுரிக்காமலும், நிர்வாகக் கூட்டங்கள் இரண்டு நடந்தும் அதில் ஆலோசனைக்கு கொண்டு வரவில்லை. எனவே எனது ராஜிநாமா செய்தியை 1.1.40 இல் ஒரு வித காரணமும் காட்டாது அறிக்கை மூலம் வெளியிட்டு பங்கு கொள்ளாமல் சும்மா இருந்து விட்டேன். இடையில் 13 மாதங்கள் கழிந்தன. இயக்கத்தின் வேலைகளில் எவ்விதத் தொடர்பும் இல்லாது இருந்த நான் திருவாரூர் மாநாட்டுக்கும் ஜனாப் ஜின்னா அவர்களின் படத்தைத் திறந்து வைக்க கட்டாயப்படுத்தப்பட்டு வந்து சேர்ந்தேன்.....மாநாட்டில் நானே காரியதரிசியாக இருக்க வேண்டும் என்று சொன்னீர்கள். நானும் உண்மையென நம்பினேன்.... கிளை வேலைகளை தொடர்ந்து நடத்த அனுமதி வேண்டினேன். நான் எழுதிய கடிதத்திற்கு இன்றுவரை பதிலே இல்லை. ஆகவே இந்த நிலையில் நான் ஒரு பொதுக் காரியதரிசியாக இருந்துதான் தீர வேண்டுமா என்பதை யோசித்த பிறகு, விலகுவதை தவிர வேறு வழி இல்லை. நான் காரியதரிசி பதவியிலிருந்து விலகி விட்டாலும், நான் ஒரு சாதாரண அங்கத்தினராக மட்டுமே இருக்க ஆசைப்படுவதுடன் அந்த முறையில் எனது யோசனைகளையும் தங்களுக்கு வணக்கமாகத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்...’
என்றெல்லாம் எழுதி 25 குற்றச்சாட்டுகளையும் சொல்றாரு. இந்த கி.ஆ.பெ.வின் அறிக்கை திருமதி வ.மணிமேகலை எழுதிய ‘முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம்’ என்ற நூல்ல 121 ஆம் பக்கத்துல்ல இருக்கு.
நீதிக்கட்சியை எப்படி சீரமைக்கணுமுன்னு சொல்றாரு. ஆனா ஒரு இடத்துல கூட கட்சிப் பெயரை திராவிடர் கழகமுன்னு வைக்கக் கூடாது. தமிழர் கழகமுன்னு தான் வைக்கணும் அப்படின்னு சொல்லல்ல. மேலும் அந்த திருவாரூர் மாநாட்லதான் தென்னிந்திய நல உரிமை சங்கத்தின் பெயரை அடுத்து நடக்க இருக்கிற சேலம் மாநாட்ல திராவிடர் கழகமுன்னு மாத்தனுமுன்னு தீர்மானம் நிறைவேத்துறாங்க. அந்த திருவாரூர் மாநாட்ல இவருதான் காரியதரிசி.
இப்ப பாத்திங்கன்னா, இவரு ஏண்டா பெரியாருகிட்டேயிருந்து விலகினாருன்னா, அதுக்கு ஒரு காரணமிருக்கு. 1940- இலேயே இவரு மேல பெரியாருக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்கு. ஆனா அதுக்கு தமிழர் கழகம், திராவிடர் கழகம் என்பதெல்லாம் காரணமல்ல என்பதும் தெரியுது.
பெரியார் இந்தி எதிர்ப்பு போரில் சிறையில் இருந்த போது நீதிக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டாரு. அப்போது பெரியார் எழுதிய கடிதத்தில், ‘நான் சிறையிலிருந்து வெளிவரும் வரையில் கட்சி சம்பந்தமான என்னுடைய வேலைகளை எனது நண்பர்களான திரு. விசுவநாதமும் செளந்தர பாண்டியனும் பார்த்து வருவார்கள்’ அப்படின்னுதான் எழுதியிருந்தார்.
திரு.கி.ஆ.பெ. நீதிக் கட்சியிலிருந்து விலகுவதற்கான காரணத்தை ‘முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம்’ என்ற நூலின் ஆசிரியை திருமதி வ.மணிமேகலை நூல் பக்கம் 46 இல்ல எழுதுறாங்க...
திரு.விசுவநாதம் நீதிக் கட்சியை விட்டு விலக மற்றொரு காரணமும் உண்டு. நீதிக் கட்சி மக்களின் செல்வாக்கை இழக்கத் தொடங்கியது. காரணம் தலைவர் ஈ.வெ.ரா.விடம் கட்சி சென்ற பின் அது நாத்திகக் கொள்கையைக் கடைப்பிடித்தது. ஆத்திகப் போக்குடைய விசுவநாதம் கட்சியை விட்டு விலக இதுவும் ஒரு காரணமாக அமைந்தது என்று கூறலாம்.
அப்படின்னு உண்மையை போட்டு உடைச்சுட்டாங்க.
‘நீதிக்கட்சியின் இளைஞர் சங்கம்’ அப்படின்னு ஒரு சங்கம் உருவாகுது. அது பத்தி திருமதி வ.மணிமேகலை எழுதுறாங்க...
‘1942 இல் மார்ச்சு மாதம் 15 ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற நீதிக் கட்சியின் இளைஞர் மாநாட்டிற்குத் திரு. விசுவநாதம் தலைமை வகித்தார். சென்னை மாகாண நீதிக்கட்சியின் இளைஞர் சங்கத்திற்குத் தலைவராக திரு. விசுவநாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார்’.
‘நீதிக்கட்சியின் சொந்த இதழான ‘விடுதலை’பெரியாரின் நிர்வாகத்தின் கீழ்ச்சென்ற பின், பெரியாருக்கு உதவியாக இருந்த பூவாளுர் அ. பொன்னம்பலனாரும் அறிஞர் அண்ணாதுரையும் பதவியை விட்டு விலகினர். இம்முறை அதிருப்தி அடைந்தவர்கள் ஒன்று சேர்ந்துதான் நீதிக்கட்சியின் இளைஞர் மாநாட்டை விசுவநாதத்தின் தலைமையில் கூட்டினர். இக்கூட்டத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் வரவேற்புக் குழுத் தலைவராகப் பங்கு வகித்தார். அறிஞர் அண்ணா முதன் முதலில் அரசியல் மேடைப் பேச்சை இம் மாநாட்டில் திரு. விசுவநாதம் தலைமையில் தொடங்கினார்.....’
இதுக்குப் பிறகு இன்னொரு செய்தி வ.மணிமேகலை அவர்களின் நூல்ல இருக்கு. அது 17.1.1965 இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாடு குறித்த செய்தி. திரு. கி.ஆ.பெ. விசுவநாதம் ஒரு அறிக்கை வெளியிடுறாரு. அதுல...
‘கனம் பக்தவச்சலம் அவர்கள் தமிழக மக்களை, தமிழ்ப்புலவர்களை மட்டுமல்ல, எதிர்க்கட்சித் தலைவர்களை, சட்டசபை உறுப்பினர்களைக் கூட கலந்து பேசாமல் இந்தித் திணிப்பைத் தில்லியில் ஒத்துக் கொண்டு வந்தது தவறு.....’
‘இந்தி வந்தால் தமிழ் அழியும். தமிழ் மக்களின் நலன் அழியும். எங்களின் எதிர்கால வாழ்வும் அழியும் என்ற மாணவர்களைச் சிறிதும் மதியாமல் அவர்களைத் தடியால் அடித்தும், துப்பாக்கி கொண்டு சுட்டும் வடக்கே ஒப்பு கொண்டு வந்த அதே கொள்கையை நிலை நிறுத்த முனைந்து வருவது பெருந்தவறு...’
‘நேற்று வெளிவந்த ஒரு பத்திரிகையில் என்னை இரண்டொரு நாட்களில் கைது செய்யப் போலீசார் துடித்துக் கொண்டிருப்பதாக வெளியிடப்பட்டிருக்கிறது. எனக்குச் சிறை செல்ல விருப்பமேயில்லை. ஏனெனில் சிறை சென்று ஆகவேண்டிய காரியம் எனக்கு எதுவுமில்லை. அரசாங்கத்தினர் விரும்பினால், அவர்களின் எண்ணத்தை வரவேற்றுச் சிறை சென்று மகிழ்வேன்...’
அப்படின்னு உட்டாரு பாருங்க ஒரு உதாரு.... அட்றா சக்கை, அட்றா சக்கை அப்படின்னு சொல்ல தோணுச்சு. அப்புறம் 17.1.65 தமிழக இந்தி எதிர்ப்பு மாநாடு நடந்துச்சு. அதுக்கு ஆன வரவு செலவு கணக்கைச் சொன்ன கி.ஆ.பெ. அதுக்கப்புறம் மூணு நாளு கழிச்சு உட்டாரு பாருங்க ஒரு அறிக்கை. அதுதாங்க கிளைமாக்சு.....
‘தமிழ்ப் புலவர் குழுவினர் அரசியலில் தலையிட மாட்டார்கள். நேரடி நடவடிக்கைகளில் இறங்க மாட்டார்கள். தமிழுக்கு, தமிழகத்திற்கு இவையிவை நல்லவை, இவையிவை தீயவை என்று மட்டுமே கூறுவார்கள். அதன்படி நடந்து அதை நிறைவேற்ற வேண்டியது தமிழக மக்களின் நீங்காக் கடமையாகும்.... இந்த இயக்கத்தை ஓர் அரசியல் கட்சி முன்னின்று நடத்தினால் அது வெற்றி பெறும் என்பது என் நம்பிக்கையாகும்’.
அப்பறமென்னங்க. வாங்க நம்ம வேலைய பாக்க போலாமுங்க. அதுக்கு முன்னாடி இன்னொன்னையும் சொல்லிடறேங்க. அதே எழுகதிர் (மார்சு 2013) இதழ்ல‘ கோவிலூரன்’ எழுதுறாரு....
‘சரி. இந்த அண்ணாவை நீதிக் கட்சியின் முதலமைச்சராக இருந்த பனகல் அரசரிடமும், பொப்லி அரசரிடமும் அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு இவர் மொழி பெயர்ப்பாளராகும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்து முன்னேற்றியவரே கி.ஆ.பெ. தான் என்பது உண்மையல்லவா? அவருடைய ஆங்கிலப் புலமைக்காகத்தான் ஈ.வெ.ரா. அண்ணாவைத் தன்பால் ஈர்த்துக் கொண்டார் என்பது அதைவிட உண்மையல்லவா?’
பாருங்க. இந்த புளுகுக்கு ஒரு அளவே இல்ல. இப்ப அண்ணா எப்படி அரசியலுக்கு வந்தாருன்னு ‘அண்ணாவின் பெருவாழ்வு’ அப்படின்னு ஒரு புத்தகத்துல வந்திருக்கு. அதுல்ல...
‘அந்த காலத்தில் உறங்கிக் கிடந்த தொழிலாளர்களைத் தட்டியயழுப்பி அவர்களுடைய நலன் காக்கும் உற்ற தோழராய் உழைத்தவர்களில் திரு.வி.கலியாண சுந்தரனார், திரு.பி.பி.வாடியா, திரு.வி.சர்க்கரைச் செட்டியார் முதலானோரைத் தலைசிறந்தவர்களாகக் குறிப்பிடலாம். அவர்களுடைய வரிசையில் வைத்து வணங்கத்தக்கவரே திரு. சி.பாசு தேவ் என்பவர். அருவியின் சலசலப்புப் போல் ஆங்கிலத்தில் பேச வல்லவர் அவர். ஆனால் தமிழில் அவருக்கு பேச வராது. அவர் தொழிலாளர் கூட்டங்களில் ஆற்றும் ஆங்கிலச் சொற்பொழிவுகளை அழகு தமிழில் இனிமை சொட்டப் பெயர்த்துப் பேசும் அரிய பணியினை மேற்கொண்டார் அண்ணா.... அத்துடன் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவரான திரு. சி.பாசுதேவ் அவர்களின் நெருக்கமான தொடர்பும் அவருக்கு அருமையான வாய்ப்பாக அமைந்தது’.
‘திரு.பாசுதேவ் ஆங்கிலத்தில் பேசினால் திரு.அண்ணாதுரைதான் மொழி பெயர்ப்பார் என்ற அளவில் வெறும் மொட்டாக அரும்பிய அவர்களுடைய தொடர்பு, நாளடைவில் இணைப்பிரியாத நட்பாகவே மலர்ந்து தழைக்கலாயிற்று’.
‘திரு. பாசுதேவ் அவர்களிடம் உண்டான நெருங்கிய தோழமை, நீதிக் கட்சியின் கொள்கைகளை நன்கு அறிந்து கொள்வதற்கும் ஆழ்ந்து சிந்திப்பதற்கும் அண்ணாவுக்குச் சிறப்பான வாய்ப்பை அளித்தது. பொது மக்களுக்கு தொண்டு புரிய வேண்டும் என்ற ஆர்வத்தையும் அது ஊட்டியது’.
சரிங்க. அண்ணாவின் வரலாற்றை எழுதுறவரு இப்படி சொல்லாரு. ஆனா இவங்க என்னன்னொவோ புளுகெல்லாம் கை கூசாம எழுதுறாங்க. அருகோவுக்கு இன்னும் நெறைய பார்ட்னரெல்லாம் இருக்காங்க. அதாங்க தமிழர் எழுச்சி அப்படின்னு இதழ் நடத்துற முருகு இராசாங்கம், வழக்குரைஞர் குப்பன் அப்படின்னு சில பேரு. மொத மாசம் இவரு ஒரு இதழ்ல எழுதுவாரு. அடுத்த மாசம் அவரு இன்னொரு இதழ்ல எழுதுவாரு. அப்புறம் இரண்டுபேரும் சேர்ந்து எழுதுவாங்க. இதாங்க இவங்க பொளப்பு. சரிங்க! சொல்ல வேண்டியத சொல்லிட்டேங்க. கிளம்புறேன் அய்யா.

No comments: