Monday, October 6, 2014

பெரியாரின் மொழிக் கொள்கை- என்னுரை

‘தமிழர் கண்ணோட்டம்’  ஆகஸ்ட் 2005 இதழில்
 திரு. பெ.மணியரசன் அவர்கள் எழுதிய ‘ஆய்வு’க் கட்டுரைக்கு மறுப்பு

பெரியாரின் கருத்தியல் கடவுள் மறுப்புக் கொண்டது என்கிறார் பெ.மணியரசன். இக்கருத்தை அவரே வரையறுத்துக்கொண்டு சுப.வீ யி ன் கருத்தை மறுக்கத் தொடங்குகிறார்.

பெரியாரின் கருத்தியல் என்பது சமூக நீதி. சாதி ஒழிப்பு. அதைத் தொடர்ந்து வருவது சுயமரியாதை. இவற்றிற்கு தடையாக இருப்பது மதமும் கடவுளும் வருணாசிரம தருமமும். இவைகளை ஒழிக்கப் போராடினார் பெரியார். இது பெரியாரியல்.
இப்போதுள்ள திராவிட இயக்கங்களான திராவிட முன்னேற்ற கழகமும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகமும் மட்டுமல்ல பெரியாரின் கருத்தியியலை வெளிப்படுத்துகின்ற எல்லா இயக்கங்களும் திராவிட இயக்கங்க¼e. அது மட்டுமல்ல பெரியாரை முன்னிறுத்துகிற இயக்கங்கள் எல்லாமே திராவிட இயக்கங்கள். பாட்டாளி மக்கள் கட்சி திராவிட இயக்கங்களில் சேர்க்கப்படுவதில்லை என்றால் அதற்கு காரணம் அது சாதியை முன்னிறுத்தி செயல்பட்டதன் விளைவு.

அடுத்து சொல்கிறார், பெரியாரின் சமூகவியல் கொள்கை பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு. இதுவும் பெ.மணியரசன் அவர்களின் பிழையான பெரியார் கொள்கை பற்றிய பார்வை. ஆதிக்க சக்திகள் எல்லாவற்றையும் எதிர்த்திருக்கிறார் பெரியார். பார்ப்பனர்களின் ஆதிக்கம் எல்லா வகையிலும் முன்னிலையில் இருப்பதால் அவர்களை முக்கிய எதிரியாக வும் அவர்களுக்கு ஆதாரமாக உள்ள கடவுளையும் மறுக்கவும் முன்வந்தார்.

பெரியார் சொன்ன  ‘திராவிடம்’ என்பது ‘பழைய சென்னை மகாணம்’ தான்.  அதில் உள்ள தெலுங்கு பேசுபவர் களையும் கன்னடம் பேசுவர்களையும் மலையாளம் பேசுபவர்களையும் மட்டும் உள்ளடக்கியது தான். இப்போது  பெ.மணியரசன் போன்றவர்கள் தாங்களாக கொண்டுள்ள கர்நாடகம், ஆந்திரம், கேரளம் மற்றும் தமிழகம் உள்ளடக்கிய திராவிடம் அல்ல.
சுப.வீ. யின் நூலை ஆய்வு செய்கிறவர் அதை ஆய்வு செய்வதில் முனைந்திருக்கலாம். அதை விடுத்து பெரியாரின் பக்கம் போய் பல அவதூறுகளை அள்ளி வீசுகிறார். அவற்றில் சில,
‘மொழிக் கொள்கையில் பெரியார் பிழை செய்திருக்கிறார். தமிழ்ப் பேராசிரியர்கள் சம்பள உயர்வுக்குப் பெரியார் ஏற்பாடு செய்தார் என்பதெல்லாம் மொழிக் கொள்கை ஆகாது. தமிழைக் கட்டாயம் மொழி பாடமாகவும் பயிற்று மொழியாகவும் கற்பிக்க வேண்டும் என்று பெரியார் கொள்கை வகுக்கவில்லை. மூட நம்பிக்கை மொழி யயன்றும் பகுத்தறிவு மொழி என்றும் எதுவுமில்லை. தமிழிறிஞர்கள் குறித்த பெரியாரின் பார்வை சமனற்றது. தமிழ் அறிஞர்கள் என்றாலே வெறும் தமிழ்ப்பைத்தியங்கள். உலக நடப்பறியாத பண்டிதர்கள் என்ற பெரியாரின் இக்கணிப்பு தவறு’.

இவை யெல்லாவற்றிற்கும் இந்நூலில் பெரியாரைக் கொண்டே விடை கூறியிருக்கிறேன். நூல் சிறியதாக இருந்தாலும் இதுவே பெ.மணியரசன் அவர்களுக்கு போதுமானது என்று கருதுகிறேன்.
26.11.2005  -கவி
குறிப்பு



பெரியார் பட்டறை
7/11 ஆ, அலிவலம் சாலை, சுந்தரவிளாகம், திருவாரூர்-610001
எழுத்தாளர் நண்பர் வே. மதிமாறன் அவர்கள் இந்நூலின் முதல் பதிப்பைப் படித்துவிட்டு 2010 இல் அவருடைய இணையத் தளத்தில் தொடர்களாக வெளியிட்டு வந்தார். அவருக்கு என்னுடைய நன்றி.

No comments: