Thursday, September 17, 2015

மணியம்மையார்....11

மணியம்மையார்
அன்னை நாகம்மையார் இருந்தவரை பெரியார் தன்னைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்தார். திராவிடர் கழகத்தைப் பற்றியும், நாட்டைப் பற்றியுமே அவருடைய கவலையயல்லாம் இருந்தது. 1933 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் நாள் அம்மையார் மறைந்தார். அன்னையார் தன்னைப் பற்றியோ, தன் உடல் நலத்தைப் பற்றியோ சிறிதும் சிந்திக்கவில்லை. கணவர் நலமே தன் நலமெனக் கருதி வாழ்ந்து வந்தார். கணவர் விருப்பமே தன் குறிக்கோளாகக் கொண்டிருந்தார்.
படிப்பில்லாத அம்மையார் பெரியாரின் துணையாய் ஆனபின் அவரு டைய கொள்கையே தன் கொள்கையாக ஏற்றுக் கொண்டார். பெரியாருக்குத் தொண்டு செய்வதே தனது வாழ்க்கைத் திட்டமாக அன்னையார் கொண்டி ருந்தார்.
ஏறத்தாழ ஓராண்டு காலம் பெரியார் வெளிநாடுகளில் பயணம் செய்தார். அந்தக் காலத்தில் அம்மையார் வீட்டில் தனியே இருந்தார். கணவருக்காக உழைக்க முடியாமலும், கணவர் அருகில் இல்லாமலும் அம்மையார் உடல் நோயுற்றது. அந்த நோயே வளர்ந்து அவர் உடலைத் தளரச் செய்தது. இறுதியில் இறந்து போனார்.
அன்னை நாகம்மையார் இறந்த போது, பெரியாருக்கு வயது 54. முதுமைப் பருவம் தொடங்கிவிட்டது. தொடர்ந்து கூட்டங்களுக்குப் போவதும், கொள்கை விளக்கங்கள் பேசுவதுமாக உழைத்துக் கொண்டிருந்த பெரியாருக்கு, அவர் உடல் நலத்தைக் கவனிக்க நேரமில்லாமல் இருந்தது.
அவருடைய நிலையை அறிந்து, அவருக்குத் தொண்டுபுரிய முன்வந்தார் ஒரு பெண்மணி. அவர்தான் மணியம்மையார்.
மணியம்மையாருக்கு இளம் வயது. ஆயினும் நாட்டுத் தொண்டாற்றும் பெரியாருக்குத் தொண்டு செய்யும் பணியினை ஏற்றுக் கொண்டார்.
திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றோ, மற்ற பெண்களைப் போல் இல்லற வாழ்வு நடத்த வேண்டும் என்றோ அவர் நினைக்கவில்லை. கொள்கைக்காக வாழும் பெரியாருக்காக வாழ்வதே தம் கொள்கையாகக் கொண்டுவிட்டார்.
1949 ஆம் ஆண்டு, தம் எழுபத்தோராம் வயதில் பெரியார் எதிர்காலத்தைப் பற்றி எண்ணினார். தந்தையார் ஈட்டிய ஏராளமான சொத்துகள் இருந்தன. திராவிடர் கழகத்திற்காக அவர் சேர்த்துவைத்த சொத்துகளும் பணமும் நிறைய இருந்தன. இவை யாவும் வீண்போகாமல் இருப்பதற்கு ஓர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று எண்ணினார்.
அவருக்கு மிக மிக உண்மையாக இருந்தவர் மணியம்மையார். அவர் நலம் பேணுவதில் கண்ணும் கருத்துமாக இருந்தவர் மணியம்மையார்.
மணியம்மையாருக்கு பண ஆசையோ, நகை ஆசையோ, துணி ஆசையோ வேறு எந்தவிதமான ஆசைகளோ கிடையாது. பெரியாருக்குத் தொண்டு செய்யும் கடமை ஒன்றிலேயே கண்ணும் கருத்துமாய் இருந்தார்.
யாரையும் எளிதில் நம்பாத பெரியார், தமது நம்பிக்கைக்கு உரிய ஒருவராக முற்றிலும் நம்பியது மணியம்மையார் ஒருவரைத்Vன். தனக்குப் பிறகு தன் சொத்துக்களைக் காப்பாற்றும் பொறுப்பையும், தன் கொள்கைகளை வளர்க்கும் பொறுப்பையும் அந்த இளம் பெண்ணான மணியம்மையாரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்.
மணியம்மையாரைத் தன் வாரிசு ஆக்க விரும்பினார். இந்திய நாட்டுச் சட்டப்படி ஓர் ஆண் பிள்ளையைத் தான் தத்து எடுத்துக்கொள்ள முடியும். பெண் பிள்ளையைத் தத்து எடுக்க முடியாது.
மணியம்மையை தன் வாரிசு ஆக்க வேண்டும் என்றால், அவரைத் திருமணம் செய்து கொண்டு, மனைவி என்ற நிலையில் வைப்பது ஒன்றுதான் சட்டப்படி இயன்றதாய் இருந்தது.
வேறு வழியில்லாததால், மணியம்மையைத் தன் வாரிசு ஆக்குவதற்காக 1949 ஆம் ஆண்டு சூலை மாதம் ஒன்பதாம் நாள் சட்டப்படி அவர் பதிவுத் திருமணம் செய்து கொண்டார்.
ஏழையாக வாழத் தொடங்கிய வெங்கட்ட (நாயக்கர்) உழைத்து உழைத்து உருவாக்கிய பெரும் சொத்துக்களும், வாழ்நாள் முழுவதும் தாம் பாடுபட்டு உருவாக்கிய கழகமும், பிற்காலத்தில் பேணிக் காக்கப்படுவதற்காக, பெரியார் இந்தத் திருமணம் செய்து கொள்ள வேண்டியதாயிற்று.

பெரியார் எண்ணியவாறே, அவருக்குப் பிறகு தன் பொறுப்பை, கடமை யுணர்வோடு ஒழுங்காகச் செய்துவந்தார் மணியம்மையார்.

No comments: