Thursday, September 17, 2015

பெரியார் சாமியாரானார்....5

பெரியார் சாமியாரானார்
திருமணம் நடந்து இரண்டு ஆண்டுகள் ஓடின. இராமசாமி நாகம்மை ஆகியோருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அய்ந்து மாதம் உயிரோடு இருந்தது. பிறகு இறந்து போயிற்று. அதன்பின் குழந்தையே பிறக்கவில்லை. அவருடைய குறும்புகள், முரட்டுத்தன்மை அவரை விட்டுப் போகவில்லை. ஒருநாள் இராமசாமி முரட்டுத்தனமாக நடந்து கொண்டார். அவருடைய தந்தையார் கோபம் கொண்டு கண்டித்தார். மிகுந்த சீற்றத்தோடு அவர் கண்டித்ததில் இராமசாமியாருக்கு வெறுத்துப் போய்விட்டது.
வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை. இந்தக் குடும்பமே வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார். சாமியாராகிக் காசிக்குப் போகவேண்டும் என்று முடிவு செய்தார்.
நண்பர்கள் இரண்டுபேரைத் துணைக்கு கூட்டிக்கொண்டு சென்னைக்குச் சென்றார். தெருக்களில் அலையும் போது, ஈரோட்டுக்காரர்கள் சிலரைக் கண்டு ஒளிந்து கொண்டார்கள். தங்களைத் தேடித்தான் அந்த ஈரோட்டுக்காரர்கள் வருவதாக எண்ணினர். கூட வந்த நண்பர்கள் ஊருக்குப் போய்விடலாம் என்று சொன்னார்கள். பெரியார் ஒப்புக் கொள்ளவில்லை. அவர்கள் இருவரும் தூங்கிய நேரம்பார்த்து சென்னையைவிட்டுப் புறப்பட்டார்.
இராமசாமி சென்னையிலிருந்து பெஜவாடா போய்ச் சேர்ந்தார். பெஜவாடாவில் ஒரு சத்திரத்தில் தங்கினார். அங்கே இரண்டு அய்யர்கள் நண்பர் ஆனார்கள். அவர்களும் வீட்டைவிட்டு ஓடி வந்தவர்களே. மூவரும் ஊருக்குள் சென்று பிச்சை எடுத்து வருவார்கள், சமைத்து சாப்பிடுவார்கள். மீதி நேரத்தில் சத்திரத்துத் திண்ணையில் உட்கார்ந்து அரட்டை அடிப்பார்கள். அய்யர்கள் புராணக்கதைகளைச் சொல்லுவார்கள். இராமசாமி அந்தக் கதைகளில் உள்ள முரண்பாடுகளை எடுத்துச் சொல்லுவார். அறிவுக்குப் பொருந்தாத செய்தி களை எடுத்துக் காட்டுவார். அய்யர்கள் அதற்கு தத்துவ விளக்கம் சொல்வார்கள். வாதம், காரசாரமாய் இருக்கும்.
காஞ்சிபுரம் முருகேச முதலியார் ஒரு பெரியவர். அரசு பதவியில் உள்ளவர். ஒரு அலுவலகத்தில் தலைமைக் கணக்கர். அவர் தெருவழியாகப் போகும் போது இவர்கள் மூவரும் உரையாடுவதைக் கவனித்தார். அறிவுக்கு விருந்தாய் இருந்தது. அதனால் இவர்கள் மேல் அன்பு சுரந்தது. மூவரையும் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அப்போது வீட்டில் பெண்கள் இல்லை. காஞ்சிபுரம் போயிருந்தார்கள்.
நீங்கள் என் வீட்டிலேயே இருங்கள்என்று கூறினார். அய்யர்கள் சமையல் வேலை தெரிந்தவர்கள். அவர்கள் சமைப்பார்கள். எல்லாரும் சாப்பிட்ட பிறகு முதலியார் அலுவலகம் செல்வார். நண்பர்கள் மூவரும் சத்திரத்து வழக்கம் போல் பிச்சை எடுக்கப் போய்விடுவார்கள். அலுவல் முடிந்து முதலியார் வீடு திரும்புவதற்கு முன்னால் இவர்கள் வீட்டிற்கு வந்துவிடுவார்கள்.
ஒருநாள் தற்செயலாக அடுப்பறைக்குள் முதலியார் நுழைந்த பொழுது, ஒரே பாத்திரத்தில் பலவகை அரிசிகள் கலந்திருப்பதைப் பார்த்தார். இது எப்படி வந்தது என்று கேட்டார். அவர்கள் பிச்சை எடுத்த விவரத்தைக் கூறினார்கள்.
என் வீட்டிற்கு வந்தபிறகு நீங்கள் ஏன் பிச்சை எடுக்க வேண்டும். இங்குதான் வேண்டிய பொருள்கள் இருக்கின்றதே. இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள்என்று கோபித்துக் கொண்டார்.
அந்தக் காலத்தில் புராணக்கதைகள் சொல்லத் தெரிந்தவர்களை மிகப் பெரிய பண்டிதர்கள் என்று மக்கள் பாராட்டுவார்கள். பெஜவாடாவில் இருந்த தமிழர்கள் இவர்களைத் தங்கள் வீடுகளில் கதாகாலட்சேபம் செய்ய அழைத்துச் செல்வார்கள். அய்யர்கள் புராணக் கதைகளை வடமொழி சுலோகங்களோடு சொல்வார்கள். தமிழில் விளக்கம் சொல்வார்கள். அவர்கள் தமிழில் சொல்லும் விளக்கத்தை இராமசாமி தெலுங்கில் சொல்வார். தெலுங்கில் அவர்கள் சொன்னதை மட்டும் சொல்லமாட்டார். இவருடைய கிண்டலையும் சேர்த்துச் சொல்வார். ஒரே நகைச் சுவையாக இருக்கும்.
சில நாட்களுக்குப் பின் மூன்றுபேரும் காசிக்குப் போக முடிவுசெய்தனர். பெஜவாடாத் தமிழர்கள் அவர்களை விட்டுவிட விரும்பவில்லை. அவர்கள் சொன்ன கதைகள் அந்த மக்களுக்குப் பிடித்துப் போய்விட்டன. ஆனால் யார் பேச்சையும் கேளாமல் மூன்று பேரும் காசிக்குப் போவதிலே குறியாக இருந்தார்கள்.
காஞ்சிபுரம் முதலியார் இராமசாமியைத் தனியாக அழைத்தார். அந்த அய்யர்களோடு செல்ல வேண்டாம். இங்கேயே தங்கிவிடு என்று கூறினார். இராமசாமி கேட்கவில்லை. அதைக் கண்ட முதலியார் அவர் அணிந்திருந்த நகைகளைக் கழற்றிக் கொடுத்துவிட்டுப் போகும்படி கூறினார். வழியில் யாராவது பறித்துக் கொண்டுவிடக் கூடாதே என்று முதலியார் நினைத்தார். ஆனால் இராமசாமிக்கு முதலியார் மீதே அய்யம் தோன்றியது. இருந்தாலும் முதலியாருடைய பேச்சுக்குக் கட்டுப்பட்டார். ஒரு மோதிரத்தை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற நகைகளை ஒரு அட்டைப் பெட்டியில் வைத்து முதலியாரிடம் கொடுத்துவிட்டார்.
இராமசாமி யாருடைய பிள்ளை என்று தெரிந்திருந்தால் முதலியார் அவரைப் போகவிட்டிருக்க மாட்டார். தான் கணக்கு வேலை செய்பவர் ஒருவரின் பிள்ளை என்றே எல்லாரிடமும் சொன்னார்.
பெஜவாடா தமிழன்பர்கள் இவர்கள் மூவருக்கும் கல்கத்தாவிற்கு பயணச் சீட்டு வாங்கிக் கொடுத்தார்கள். ஆளுக்கொரு கம்பளிப் போர்வையும் சிறிது பணமும் கொடுத்து வழியனுப்பி வைத்தார்கள். கல்கத்தாவில் 15 நாட்கள் தங்கியிருந்தார்கள். செட்டியார்கள் கொடுத்த பணத்தின் உதவியால் அங்கிருந்த காசிக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.
காசியில் அன்ன சத்திரங்கள் நிறைய இருக்கின்றன. அங்கு போனால் சோற்றுக்குப் பஞ்சமில்லை என்று சொல்வார்கள். அதை நம்பித்தான் இராமசாமி காசிக்குப் போக முடிவு செய்தார். ஆனால் காசிக்குப் போன பிறகு தான் உண்மை தெரிந்தது.
காசியில் சத்திரங்கள் ஏராளமாக இருந்தன. வேளை தோறும் சாப்பாடும் போட்டார்கள். ஆனால் அய்யர்களுக்கு மட்டும்தான் சோறு கிடைத்தது. மற்ற சாதியாரை உள்ளேயே விடுவதில்லை.
இந்த உண்மையை நேருக்கு நேரே கண்டபோது இராமசாமிக்கு கோபம் கோபமாக வந்தது. என்ன செய்வது!
ஒரு சத்திரத்தில் காவல்காரன் அவரை வெளியே பிடித்துத் தள்ளினான். சிறிது நேரத்தில் எச்சில் இலைகளை வீதியோரத்தில் கொண்டுவந்து போட்டார்கள். பசி தாங்க முடியாத நிலையில் எச்சில் இலைகளை நோக்கி ஓடினார். சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டார். ஒவ்வொரு இலையாக வழித்து சுவைத்துச் சாப்பிட்டார். ஈரோட்டுப் பெரும் செல்வரின் பிள்ளை காசியில் எச்சில் சோறு சாப்பிட்ட கதையைக் கேட்டால் ஒரு பக்கம் வேதனையாகவும், ஒரு பக்கம் சிரிப்பாகவும் இருக்கிறதல்லவா? தந்தையார் கோபித்துக் கொண்டால் உடனே வீட்டைவிட்டுப் போகத்தான் வேண்டுமா?
எத்தனை நாளைக்கு எச்சில் சோறு சாப்பிட முடியும்? தன்னைப் பார்த்தால் சாமியாராகத் தெரியவில்லை. அதனால்தான் மதிக்கமாட்டேன் என்கிறார்கள். இவ்வாறு நினைத்த இராமசாமி தலையை மொட்டை அடித்துக் கொண்டார். நெற்றியில் பட்டை அடித்துக் கொண்டார். உருத்திராட்சக் கொட்டைகளை கழுத்தில் கட்டிக் கொண்டார். ஒரு செம்மைக் கையில் ஏந்திக் கொண்டு பரதேசிப் பிச்சைக்காரனாக மாறினார். அப்படியும் வாழ்க்கை நடக்கவில்லை.
ஒருநாள் ஒரு சாமியார் மடத்தின் பக்கம் சென்றார். அந்தச் சாமியார்களிடம் ஏதாவது வேலை கொடுக்கும்படி கேட்டார். சிவபூஜைக்கு வில்வம் பறித்துக் கொடுக்கும்படியும் நாள்தோறும் விளக்கேற்றி வைக்கும்படியும் அதற்கு கூலியாக ஒரு வேளை சோறு போடுவதாகவும் அந்தச் சாமியார்கள் கூறினார்கள்.
வில்வம் பறிப்பது எளிய வேலைதான். ஆனால் காலையில் எழுந்து பல் விளக்கி குளித்து திருநீறு அணிந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு தான் வில்வம் பறிக்க வேண்டும். மாலையில் மீண்டும் குளிக்க வேண்டும். விளக்கைத் துடைத்து புது எண்ணெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும்.
இராமசாமியைப் பொறுத்தவரையில் குளிப்பதைப் போல் தொல்லையான வேலை வேறு கிடையாது. காசியில் குளிர் மிகுதி. அதிலும் ஐந்து ஆறு மணியைப் போல் கங்கையாற்றில் குளிப்பதென்றால் உடல் வெடவெடத்துப் போகாதா?
மடத்து சாமியார்கள் எழுவதற்கு முன்னால் இராமசாமி எழுந்துவிடுவார். குளிக்காமலே பட்டை பட்டையாக உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொள்வார். இந்த ஏற்பாட்டைச் செய்தவன் தலையில் இடி விழ வேண்டும், என்று நினைத்துக் கொண்டே உடல் நடுநடுங்க வில்வம் பறித்து வருவார். ஒருநாள் பெரிய சாமியார் பார்த்துவிட்டார். அவர் இவரைத் திட்ட, இவர் அவரைத் திட்ட, ஒருவரையயாருவர் அடித்துக்கொள்ள, மற்ற சாமியார்கள் விலக்கிவிட்டார்கள். பிறகு மடத்தைவிட்டுத் துரத்திவிட்டார்கள்.
காசியில் கங்கைக் கரையில் பலர் சிரார்த்தம் (இறந்தவர்களின் நினைவு நாள் சடங்கு) செய்வார்கள். அப்போது அரிசி, பழம் முதலியவற்றை பிண்டமாகப் போடுவார்கள். அந்த பிண்டத்தை வாங்கி உண்பதற்காகப் பிச்சைக்காரர்கள் வருவார்கள். அந்தப் பிச்சைக்காரர்களில் ஒருவராக முப்பது நாற்பது நாட்கள் சமாளித்தார் இராமசாமி.
காசி புண்ணிய பூமி, அங்கு எல்லாம் உயர்வாக இருக்கும் என்று எண்ணி யிருந்தார் இராமசாமி. ஆனால் இந்தியாவில் உள்ள மிக மோசமான நகரங் களில் ஒன்றாக அது இருந்தது. அந்த ஊரைவிட்டுப்புறப்பட முடிவு செய்தார்.
இடுப்புக் கயிற்றில் பத்திரமாக இருந்த ஒன்றரைப் பவுன் மோதிரத்தை 19 ரூபாய்க்கு விற்றார். அங்கிருந்து எல்லூருக்கு வந்தார். எல்லூரில் அவருக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் இருந்தார். அந்த நண்பரும், அவர் மனைவியும் இவர் பரதேசிக் கோலத்தைக் கண்டு சிரிப்பாய்ச் சிரித்தார்கள். அந்த நண்பர் தன் வேட்டி சட்டைகளைக் கொடுத்து உடுத்திக் கொள்ளச் சொன்னார். நண்பர் வீட்டில் இருக்கும்போது ஒரு நாள் கடைவீதி வழியாகச் சென்றார். அப்போது கடையில் எள் அளந்து கொண்டிருந்தார்கள். இராமசாமி கடைக்குள் சென்று கையில் எள்ளை அள்ளிப் பார்த்தார். என்ன விலை? என்று கேட்டார். விலையைக் கேட்டுக் கொண்டு எள்ளைப் போட்டுவிட்டுத் திரும்பிவிட்டார். கடைக்காரர் அவரைக் கூர்ந்து நோக்கினார். மொட்டைத் தலையோடு இருந்தவர் யார் என்று தெரிந்து கொண்டார்.
கடைக்காரர் வெங்கட்ட(நாயக்க)ருக்கு ஒரு கடிதம் எழுதினார். ‘ஐயா, உங்கள் பிள்ளை என் கடைக்கு வந்தார். சரக்கைப் பார்த்தார். விலையும் கேட்டார். ஆனால் கொள்முதல் செய்யவில்லை. என்மேல் உங்களுக்கு என்ன கோபம். வேறுகடையில் ஏன் கொள்முதல் செய்ய வேண்டும்? என் மேல் நம்பிக்கை இல்லையா?’
எல்லூர்க் கடைக்காரரின் கடிதம் வெங்கட்ட(நாயக்க)ருக்கு மகிழ்ச்சி அளித்தது. ஓடிப்போன பிள்ளை இருக்கும் இடம் தெரிந்துவிட்டது. சின்னத் தாயம்மாளும் மற்றவர்களும் அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்தனர். வெங்கட்ட (நாயக்கர்) உடனே எல்லூருக்குப் புறப்பட்டார். மண்டிக்கடைக்காரர் மூலம் இராமசாமி இருந்த வீட்டைக் கண்டுபிடித்தார்.
அந்த வீட்டின்  உள்ளே நுழைந்ததும், மொட்டைத் தலையோடு எதிரில் வந்த பையனைப் பார்த்துஎன் மகன் இராமசாமி எங்கே?’ என்று கேட்டார்.
அப்பா! நான்தான்! என்றார் அந்த மொட்டைத் தலையர். அடப்பாவி! இது என்ன கோலம்! என்று பையனை உற்றுப் பார்த்தார். அந்த வீட்டுக்கார நண்பர் வணிகர் வெங்கட்ட (நாயக்க)ரை உடனே புறப்படவிடவில்லை. எனவே வெங்கட்ட (நாயக்கர்) எல்லூரில் இரண்டுநாள் தங்கியிருந்தார். மூன்றாவது நாள் ஊருக்குப் போவோமா என்று தன் மகனைக் கேட்டார். அப்பொழுது பெஜவாடாவிலிருந்து ஒரு சிறிய பார்சல் வந்தது.
அஞ்சலில் வந்த அட்டைப் பெட்டியை தன் தந்தை கையில் கொடுத்தார் இராமசாமி. பெட்டியைத் திறந்து பார்த்த வெங்கட்ட (நாயக்கர்) வியப்படைந்தார். காசியில் விற்ற மோதிரம் தவிர எல்லா நகைகளும் அப்படியே இருந்தன.
அடே இராமசாமி இவ்வளவு நாளாக எப்படிச் சாப்பிட்டாய்?’ என்று கேட்டார். நகைகளை ஒவ்வொன்றாக விற்றுச் செலவழித்திருக்க வேண்டும் என்று எண்ணினார். ஆனால் நகைகள் அப்படியே இருக்கவே தன் மகன் எப்படி வாழ்ந்தான் என்பது அவருக்குப் புரியவில்லை.
அப்பா, ஈரோட்டில் நீங்கள் கொடுத்த பிச்சையை எல்லாம் மற்ற ஊர்களில் நான் வசூல் பண்ணிவிட்டேன் என்று சொன்னார் இராமசாமி. இதைக் கேட்டு எல்லூர் நண்பரும், மண்டிக்கடைக்காரரும்

No comments: