Thursday, September 17, 2015

பெரியாரின் துணைவியார்....4

பெரியாரின் துணைவியார்
இராமசாமிக்கு திருமணம் செய்ய பெற்றோர் எண்ணினார்கள். அவருடைய மாமன் மகள் நாகம்மை. மாமன் பணக்காரர் அல்லர். எனவே, பெற்றோர் வேறு பெண் பார்த்தனர். அந்த காலத்தில் பெற்றோர் விருப்பப்படிதான் திருமணம் நடக்கும். ஆனால் நமது பெரியார் இராமசாமி நாகம்மையைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதியாகச் சொல்லிவிட்டார். தான் சரி என்று நினைத்தால் அதை அப்படியே செய்வதுதான் அவர் வழக்கம். வேறு யார் என்ன சொன்னாலும் ஒப்புக் கொள்ள மாட்டார்.
நாகம்மாவின் பெற்றோர் தங்கள் தகுதிக்கு ஏற்ற மாப்பிள்ளையைத் தேடினர். ஒரு கிழவருக்கு மூன்றாம் தாரமாக மணம் பேசினர். இதை அறிந்த நாகம்மையார் பெற்றோரிடம் இராமசாமியைத் தவிர வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். இல்லாவிட்டால் இறந்து போவேன் என்று உறுதியாகச் சொல்லிவிட்டார். பதிமூன்றே வயதான அந்தச் சிறுவயதில் அம்மையார் அவ்வளவு தெளிவாக இருந்தார்.
இரண்டு வீட்டிலும் பெற்றோர்கள் நினைத்தது நடக்கவில்லை. இராமசாமிப் பெரியார் நாகம்மையாரைத் திருமணம் செய்துகொண்டார்.
இராமசாமியின் பெற்றோர் பெருமாளை வணங்குபவர்கள். எனவே, தீவிரமான சைவர்கள். அதாவது புலால் உண்ணாதவர்கள். நாகம்மையார் தாய் வீட்டில் மாமிச உணவு உண்பது வழக்கம். மாமியார் கட்டளைப்படி சைவத்திற்கு மாறிவிட்டார். மாமியார் சொன்னபடி கோயிலுக்குச் செல்வதும் நோன்பு விரதம் என்று பட்டினி கிடப்பதும் பெரியாருக்குப் பிடிக்கவில்லை. இந்த மூடப்பழக்க வழக்கங்களை மாற்ற முடிவு செய்தார்.
சின்னத்தாயம்மாளின் பிள்ளையாகப் பிறந்த இராமசாமி அவருக்குப் பிடிக்காத பழக்கங்கள் உள்ளவர். நான்கு அய்ந்து நாட்கள் அவர் தொடர்ந்து குளிப்பதில்லை. நாள் கிழமை பாராமல் மாமிச உணவு சாப்பிடுவார். வேறு சாதிக் காரர்கள் வீட்டில் எது கிடைத்தாலும் ஆசையாகச் சாப்பிடுவார். இதனால் அவருடைய தாயார் அவரைத் தொடக்கூடமாட்டார். தொட்டால் தீட்டு ஒட்டிக் கொண்டுவிடுமாம். ஏதாவது தின்பண்டம் கொடுக்கும் போது மகன் கையில் தன் கை படாமல் உயரத்தில் தூக்கிப் போடுவார். இராமசாமியோ வேண்டும் என்றே அந்தக் கையை எட்டிப் பிடிப்பார். தீட்டு தீட்டு என்று சொல்லிக் கொண்டு குளித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார் அவருடைய தாயார்.
மகனைப் போல் மருமகளும் மாறிவிடக் கூடாது என்பதில் சின்னத் தாயம்மாள் கவனமாக இருந்தார். அவளை எப்படியும் மாற்றிவிடுவது என்பதில் இராமசாமியார் தீவிரமாக இருந்தார்.
நாகம்மையார் நோன்பிற்கும் நாளில்தான் மாமிச உணவு சமைக்கச் சொல்லி கட்டாயப்படுத்துவார். கணவன் சொல்லை மீற முடியாமல் சமைத்துச் சாப்பாடு போடுவார்.அதன்பின் குளித்துவிட்டு மற்றவர்களுக்குச் சமைப்பார். அவர் சமைத்து வைத்த சோற்றுப் பானைக்குள் எலும்புத்துண்டை புதைத்து விட்டு நழுவிவிடுவார் இராமசாமி. நாகம்மையார் சாப்பிடும் போது எலும்பு வெளியே வரும். நோன்பு கெட்டுவிடும். அடிக்கடி இந்த மாதிரி நடக்கவே மாமியார் மருமகளை அழைத்துஇனிமேல் நீ விரதம் இருக்க வேண்டாம்என்று சொல்லிவிட்டார்.
குறும்புத்தனமாகப் பல செயல்கள் செய்து நாகம்மையாரைப் படிப்படியாக மாற்றிக்கொண்டு வந்தார். முதலில் விரதம் நின்றது. அடுத்தப்படி கோயிலுக்குப் போவது நின்றது. கடைசியாகத் தாலியும் கழற்றிவிட்டார்.
ஒரு நாள் இரவு தாலியைக் கழற்றும்படி கூறினார். ‘அய்ய்யயோ கூடாதுஎன்று அலறினார் அம்மையார். கணவன் பக்கத்தில் இருக்கும்போது தாலி அணியக் கூடாது. கணவன் வெளியூர் போயிருக்கும் போதுதான் தாலியைக் கட்டிக் கொள்ள வேண்டும். இதுதான் முறை என்று சொன்னார். அதை உண்மை என்று நம்பி, நாகம்மையார் தாலியைக் கழற்றிக் கொடுத்தார். அதை வாங்கிச் சுவரில் தொங்கும் சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டார். காலையில் நாகம்மையார் கண் விழிக்கும் முன்பு வெளியில் புறப்பட்டுச் சென்றுவி ட்டார். அவர் மாட்டிக் கொண்ட சட்டையோடு தாலியும் வெளியே போய்விட்டது.
மறுநாள் நாகம்மையார் தாலி இல்லாமலே இருந்தார். இதைக் கண்ட மாமியார்தாலி எங்கே?’ என்று கேட்டார். இந்த நேரத்தில் பக்கத்துவீட்டுப் பெண்களும் கூடிவிட்டார்கள். அப்போது நாகம்மையார்,‘கணவர் பக்கதில் இருக்கும் போது தாலி வேண்டியதில்லை. அவர் வெளியூருக்குப் போகும் போதுதான் கட்டிக் கொள்ள வேண்டும்என்றார். கணவனுக்கு ஏற்ற பெண்ணாட்டி என்று கூறி அந்தப் பெண்கள் சிரித்தார்கள். சின்னத் தாயம்மாள் சீற்றம் கொண்டார்.
கல்வி அறிவில்லாத நாகம்மையார் நாளடைவில் பெரியாரை நன்கு புரிந்து கொண்டார். அவர் செய்வதெல்லாம், மூடத்தனத்தையும், தீமைகளையும், ஒழிக்கும் நல்ல பணி என்று அறிந்து கொண்டார். பெரியாரின் பொதுப் பணிகள் எல்லாவற்றிலும் துணையாக இருந்தார்.
எல்லா வகையிலும் பெரியார் இராமசாமியோடு ஒத்துழைத்தார் நாகம்மை யார். ஆனால் ஒரே ஒரு வகையில் மட்டும் கடைசிவரை மாறுபட்டவராகவே விளங்கினார். (வீட்டிற்கு வரும் விருந்தாளிகளையும் இயக்கத் தொண்டர்களை யும் சாப்பிடச் சொல்லும் பழக்கம் துவக்கத்தில் பெரியாருக்குக் கிடையாது). எல்லா வகையிலும் சிக்கனமாக இருக்க வேண்டும் என்பது அவர் கூடப் பிறந்த குணம். ஆனால் நாகம்மையார் வீட்டிற்கு யார் வந்தாலும் சாப்பாடு போடாமல் அனுப்புவது கிடையாது. இரவு பகல் எந்த நேரமானாலும் வீட்டிற்கு வந்தவர் களை உபசரித்து அனுப்புவார் அம்மையார். நாகம்மையார் பண்பாட்டின் எடுத்துக்காட்டாக விளங்கினார். விலை உயர்ந்த புடவைகள் வேண்டும் என்றோ, நகைகள் அணிய வேண்டும் என்றோ, அலங்காரம் செய்து கொள்ள வேண்டும் என்றோ அவர் நினைத்தது கிடையாது. வீட்டிற்கு வந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு விருந்திட்டு மகிழ்வது அவர் பிறவிக்குணமாய் இருந்தது. மாறுபட்ட கருத்தோடு தம் கணவருடன் சண்டை போடுபவர்கள் கூட சாப்பிட்ட பிறகுதான் செல்வார்கள்.
நாகம்மையாரின் விருந்தோம்பல் பண்பு, நாளடைவில் பெரியாரையும் திருத்திவிட்டது. பிற்காலத்தில் தன்னைத் தேடி வருபவர்களை உணவுண்ணச் செய்தே அனுப்புவார்.
இந்நூலாசிரியர்(நாரா. நாச்சியப்பன்) தம் இளமைக் காலத்தில் பெரியாரைக் காணச் சென்றார். நண்பகல் நேரமாக இருந்ததால், பெரியார் வற்புறுத்திச் சாப்பிடச் செய்தே அனுப்பினார்.
பெரியார் நாகம்மையாரை அறிவுக் கொள்கைக்கு மாற்றினார். நாகம்மையார் பெரியாரை அன்புக் கொள்கைக்கு மாற்றினார்.

ஒருவரை ஒருவர் நன்கு புரிந்த கொண்டு வாழ்ந்தனர். அதனால் அவர்கள் இல்லற வாழ்க்கை இன்ப வாழ்க்கையாக அமைந்தது.

No comments: