Friday, July 15, 2016

1.5.1925 நவசக்தி இதழில் அதன் ஆசிரியர் தமிழ்த்தென்றல் திரு. வி.க. அவர்கள் தியாகராயர் மறைவுக்கு (27.4.1852-28.4.1925) வருந்தி எழுதியது.

1.5.1925 நவசக்தி  இதழில் அதன் ஆசிரியர் தமிழ்த்தென்றல்  திரு. வி.க.  அவர்கள் தியாகராயர் மறைவுக்கு (27.4.1852-28.4.1925) வருந்தி எழுதியது.

நம் பெருங்கிழவர் சர்.பி.தியாகராஜ செட்டியார் சென்ற செவ்வாய்க்கிழமை, இரவு நம்மை விட்டுப்பிரிந்தார். இவ்வுலக வாழ்வு நீத்தார்; விண்ணுலகெய்தினார். அன்னார் அரசியல் நோக்கத்துக்கு மாறுபட்டு நிற்கும் மனமுடையோமாயினும், அவரது பிரிவு, எமது உள்ளத்தை உருக்குகிறது. எழுதவும் முடியவில்லை. தியாகராஜர் பிரிவை உன்னங்கால் அப்பிரிவு - ஆறும், மலையும், கூவலும், குளமும், கலையும், தொழிலும், மக்களும், ஒழுக்கமும் பலபடச் செறிந்த ஒரு பெருந் திருநகரம் திடீரென மறைந்தது போல் எமக்குத் தோன்றுகிறது. அந்தோ! தியாகராஜ மலையுஞ் சாய்ந்ததோ! என்று அழுகிறோம். ராஜ கெம்பீரத் தோற்றமும், திருநீற்றொளியும் சிங்க நோக்கும், மலர்ந்த முகமும், பீடு நடையும், அஞ்சா நெஞ்சும், ஆவின் இயல்பும் உடைய ஒரு பெரும் வடிவை இனி என்றே காண்போம்! எமதாருயிர்த் தியாகராஜரை இனி என்றே காண்போம்!
தியாகராஜர் பரு உடல் மறைந்தாலும் அவர் நுண்ணுடல் நாட்டிடை உலவுகிறது. அப்பெரியார் வாழ்வு பின் வருவோர்க்குப் பேரிலக்கியம் போன்றது. தியாகராஜர் 1852 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி இம் மாநிலத்தில் உதித்தார். அவர் 1925 ஆம்ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி மறைந்தார். எழுபத்து மூன்றாண்டு இவ்வுலகிடை வாழ்ந்த ஒரு பெரியார் வாழ்வு போற்றுந் தகையதன்றோ? வாழ்வெனில் எத்தகை வாழ்வு? அடிமை வாழ்வா? உரிமை வாழ்வு -ஒழுக்க வாழ்வு. அத்தகைய வாழ்வு ஒரு பெரும் இலக்கியமாகாதோ?
தியாகராஜ செட்டியார் தேவாங்கர் குலத்துதித்தவருள் முதன் முதலாக பி.ஏ. பரீட்சையில் தேறினவர். அந்நாளில் அப்பரீட்சை அடிமைத் தொழிலுக்குப் பெரிதும் பயன்பட்டு வந்தது. திருமிகு செட்டியார் தம் கல்வி அறிவை அடிமைத் தொழிலுக்கு அந்நாளில் பயன்படுத்தினாரில்லை. அவர் வாழ்வு, உரிமையில் தோன்றி உரிமையில் மலர்ந்து, உரிமையில் காய்த்து, உரிமையிலேயே கனிந்து சென்றது.
வாழ்விற் சிறந்த செட்டியார், நாற்பதாண்டு நகர பரிபாலன சங்கத்தில் இடை விடாது அங்கம் பெற்று, அக்காலத்தின் இறுதியில் மூவாண்டு அச்சங்கத் தலைவராக வீற்றிருந்து சென்னைக்குச் செய்த சேவையைச் சென்னை மாதே அறிவாள். தற்போதைய சென்னை நகரம் செட்டியாரது உழைப்பின் பரிணாமம் என்று கூறுவது மிகையாகாது. சென்னையிலோடும் கூவ நதியைத் தூய்மைப்படுத்த வேண்டு மென்பது அவர்தம் பெருந்தவம். அது பற்றி அவர் பெருமுயற்சி செய்து வந்தார். உயிர் துறப்பதற்குச் சின்னாள் முன்னரும் சென்னைக் கவர்னருடன் கூவ நதியைப் பற்றி அவர் பேசினாராம். கூவ நதியைச் சீர்மைப்படுத்த வேண்டுமென்று செட்டியார் உள்ளத்திலெழுந்து நிலவிக் கொண்டிருந்த சீரிய எண்ணம், விரைவில் நிறைவேறுங்காலம் வருமாறு ஆண்டவனை வேண்டுகிறோம்.
காலஞ்சென்ற  தியாகராஜ செட்டியார் , இந்தியக் கைத்தொழில் வளர்ச்சியிலும், இந்திய வைத்திய முயற்சியிலும், பெருங்கவலை செலுத்தி வந்தார். சுருங்கக் கூறின் செட்டியாருக்குச் சுதேசியியக்கத்தில் இடையறாப் பேரன்பு உண்டு என்று கூறலாம். செட்டியார் எந்நாளும் ஆங்கில உடைக் கோலத்தை விரும்பியதில்லை.இந்திய வெள்ளிய உடையே போர்வையாக அவரை அழகு செய்து கொண்டிருக்கும். அவர் இளவரசர், ராஜ பிரதிநிதி முதலியோரைக் காணப் போகும்போதும் தாம் என்றும் இயல்பாக அணிந்துலவும் வெள்ளிய உடையணிந்தே போவார். திருவாளர் செட்டியார் நாட்டு மருந்தையே பெரிதும் உண்பார். நாட்டு மருந்தில் அவர்க்குள்ள பற்றுக்கு ஓர் அளவில்லை.
தியாகராஜப் பெரியார், கடவுள் வழிபாட்டிலும் வைதீக ஒழுக்கத்திலும் அன்பு வாய்ந்தவர். அவர் பிராமணரல்லாதார் இயக்கத்தைக் கிளப்பிய போதும், வைதீக பிராமணர் பால் தமக்குள்ள நேயத்தைப் புலப்படுத்தியது பலர் அறிந்த தொன்றே. தியாகராஜ செட்டியார் திருமுகத்தில் சமயச் சின்னம் என்றும் பொலிந்து கொண்டிருக்கும்.
தியாகராஜ செட்டியார் வாழ்வில் அறியக் கிடக்கும் நறுங்குணங்கள் பல. அவைகளுள் தலையாயது அவர்பால் சுயநலமின்மை என்பது. அவர் பரு உடல் மறையும் மட்டும் தமது நலங்கருதி எச் செயலும் நிகழ்த்தியதாகத் தெரியவில்லை. லார்ட் வெல்லிங்டன் காலத்தில் தமக்கு நல்கப்பட்ட மந்திரிப் பதவியை வேண்டாமென்று செட்டியார் மறுத்ததொன்றே அவரது சுயநலமின்மையை வலியுறுத்தும். இக்குணம் அவர்பாலிருந்தமையாலன்றோ சென்னை வாசிகள் அவரைச் சட்டசபை அங்கத்தவராகத் தெரிந்தெடுத்தார்கள். சென்றமுறை அவர்க்கு மாறாக அவர் கட்சியாருள்ளிட்ட பல கட்சியார் பிரசார வேலை செய்தும், சென்னை, செட்டியாரைக் கைவிடாது காத்தது. இதற்குக் காரணமாக நின்றது அவர்பால் சுயநலமின்மையே என்றே சொல்லலாம்.
ஒழுக்கத்திற் சிறந்த செட்டியார், எவர்க்கும் அஞ்சாது தமது மனச்சான்றுக்குத் தோற்றுவதை உள்ளவாறே வெளியிடுவர். பிறர் புகழ்வதை எதிர்நோக்கிச் செட்டியார் எதையும் மறைத்துப் பேச மாட்டார். அவர் பளிங்கனைய மனமுடையார். தியாகராஜ செட்டியார் நோக்கு, சிங்கம் போன்றதாயினும், அவர் இயல்பு ஆவையயாத்தது. இது அவரோடு பழகிய நண்பர்கட்குத் தெரியும். தியாகராஜர் எக்கருமத்தையுங் காலத்தில் செய்பவர். கால தேவதையின் சீற்றத்துக்கு அவர் என்றும் ஆளானதில்லை.
தியாகராஜ செட்டியார் தமது வாழ்வில் எத்துணையோ அறநிலையங்கட்கும், வாணிபச் சங்கங்கட்கும், கல்விக் கழகங்கட்கும் தலைவராகவும், அங்கத்தவராகவும் இருந்து சேவை செய்திருக்கிறார். அவரது வாழ்வு பெரிதும் பரோபகார வாழ்வாகவே நடந்து வந்தது. இல்லறத்திலிருந்து இத்துணைத் தொண்டு செய்த ஒருவர் வாழ்வு பின் வருவோர்க்கு இலக்கியம் போன்றதென்பது மிகையாகாது.
தியாகராஜ செட்டியார் அரசியல் வாழ்வில் குறிக்கத் தக்கது ஒன்றுள்ளது. அஃது, அவர் தமது முதுமைக் காலத்தில் தோற்றுவித்த, ஜஸ்டிஸ் கட்சி என்னும் ஒரு கட்சியைப் பற்றியதாகும். அக்கட்சியின் ஆக்கங் குலைவுற்றிருப்பினும் அதன் பயன்,  நாட்டில் பலமுகங்கொண்டு,  நுண்மையாக பலதிறச் சீர்திருத்த வேலைகளைச் செய்து வருவதுண்மை. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவப்பாடல் சுயராஜ்யப் பாடலாக மாற வேண்டும் என்பது நமது விருப்பம்.
செல்வத்திற் சிறந்த தியாகராஜ செட்டியார், பரந்து விரிந்த சோலைகள் சூழ்ந்த அரண்மனை என்று சொல்லத்தக்க தமது பெரு மாளிகையில், கிராமத்தாரைப் போல தோய்த்து உலர்ந்த வேட்டிகளிரண்டு-கீழொன்று மேலொன்று அணிந்து, தம்மைக் காண வருபவரோடு பேசுங்காட்சி எமது முன்னே தோன்றி எமது உள்ளத்தைக் குழையச் செய்கிறது. குழைந்துருகும் உள்ளத்தோடு அவரது குடும்பத்தாருக்கு எமது அனுதாவத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம். பெருங்கிழவர் ஆன்மா சாந்த நிலை எய்த எல்லாம் வல்ல இறைவனை வழுத்துகிறோம்! (நவசக்தி 1.5.1925). (இளந்தமிழன், ஏப்ரல் 2010)

No comments: