Friday, July 15, 2016

5.3.1933 ‘சுதேசமித்திரன்’ வாரப் பதிப்பில் வெளிவந்தது! டாக்டர் டி.எம்.நாயர் (1866 - 17.7.1919)

5.3.1933 ‘சுதேசமித்திரன்’ வாரப் பதிப்பில் வெளிவந்தது!
டாக்டர் டி.எம்.நாயர் (1866 - 17.7.1919)
டாக்டர் டி. மாதவன் நாயர் 1966 ஆம் ஆண்டில் மலையாள தேசத்தில் பிறந்தார். இவருடைய தகப்பனார் ஒரு ஜில்லா முனிசீப்பாக வாழ்ந்து வந்தார். அவர் தமது குமாரருக்கு உசிதமான பிராயத்திலேயே வித்தியாப்பியாசமாகிய ஏணி மீதேறி கடைசியாகச் சென்னையில் ராஜதானிக் கல்லூரியில்(Presidency College) உயர்தரப் படிப்பிற்காக மாணாக்கராயினர். இவர் இக்கலாசாலையில் இண்டர் மீடியேட் பரீட்சையில் தேறி, எப்.ஏ. என விளங்கினார். இக்காலத்தில் இவருடன் படித்துப் பிறகு பிரகாசித்தவர் காலஞ்சென்ற திவான் பகதுர் சி. கருணாகர மேனன் என்பவர்.
 டாக்டர் நாயர் ஆரம்பத்திலிருந்தே வைத்தியப் பரீட்சைக்காகப் படிக்க வேண்டுமென்ற விருப்பம் இருந்ததால் சென்னை பிரசிடென்சி கலாசாலை யிலிருந்து அவர் பி.ஏ. பட்டம் பெற இஷ்டப்பட வில்லை. டி.எம்.நாயர் 1890 ஆம் வரு­த்தில் இங்கிலாந்து முதலிய அயல் தேசங்களில் வைத்திய சாஸ்திரம் படிப்பதற்காக, இந்தியாவிலிருந்து புறப்பட்டுச் சென்றார். எடின்பரோ சர்வகலா சாலையில் சேர்ந்து இவர் சில காலம் படித்தார். 1894 இல் இவருக்கு அந்தச் சர்வகலா சாலை எம்.டி., எம்.பி., சி.எச்.பி. என்ற பட்டங்களை அளித்தது. இதன் பின்னர், இவர் பாரிஸ் நகரம் சென்று, அங்கு காது, தொண்டை முதலியவைகளுக்குச் சிகிச்சை செய்யும் விதங்களைக் கற்றுக் கொண்டார். 1896 இல் நாயர் தாமே ஒரு டாக்டராகத் தொழில் நடத்த ஆரம்பித்தார். இவ்வாறு சற்றேறக் குறைய ஏழு வரு­ங்களை அன்னிய தேசத்தில் கழித்த பின்னர்,1897 இல்  மீண்டும் தமது மாத்ருபூமியை வந்தடைந்தார்.
இவர் இங்கிலாந்து தேசத்தினர்களுடைய நடையுடை பாவனைகளைக் கண்டறிந்து அம்முறைகளையும் அவர்களுடைய விதங்களையும் நமது தேசத்தில் ஸ்தாபித்து, நமது முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டார். இவர் எடின்பரோ நகரத்திலிருக்கையிலேயே ராஜீய வி­யங்களில் தலையிட்டுக் கொள்ள ஆரம்பித்தார். அங்கிருந்த இந்தியர்கள் சங்கத்தின் காரியதரிசியாகவும், அக்கிரா ஸனாதிபதியாகவும் சில காலமிருந்தார். அங்கு சர்வகலாசாலை மாணவர்கள் சங்கத்தின் மெம்பராகவுமிருந்து, இவர் பொதுஜன வி­யங்களில் மும்முரமாகக் கலந்து கொண்டார். இங்கிலாந்து பார்லிமெண்டு தேர்தல்களில் இவர் சிரத்தைக் கொண்டு, மிஸ்டர் யஹர்பர்ட்பால் என்பவருக்காக உழைத்தார். இவர் இக்காலத்தில் கார்மிகேல் பிரபு, தாதாபாய் நெளரோஜி, டபிள்யூ, ஸி.பானர்ஜி முதலியோர்களால் மிகவும் சிலாகிக்கப்பட்டு, இந்தியர்களுக்காகப் பாடுபட்டு வந்தார். பார்லிமெண்டு தேர்தல்களில் இவர் செய்த உபகாரம் மிகவும் பாராட்டப்பட்டது.
1897 இல் சென்னை நகருக்கு வந்து, இவர் தமது தொழிலை நடத்த ஆரம்பித்தனர். வெகு சீக்கிரத்திலேயே இவர் ஒரு சிறந்த வைத்திய நிபுணர் என்று யாவராலும் கொண்டாடப்பட்டு, மிகுந்த வருமானம் அடைந்தார். செவி, தொண்டை முதலியவற்றைப் பற்றின வியாதிகளைப் போக்க வல்லவர் இவரேயயன எல்லோராலும் புகழப் பெற்றனர். ஆனால்,  அதிகமான சம்பாத்தியம் இவருக்குத் தம் தொழிலில் இருந்த போதிலும், இவர் இவ்வி­யத்தைச் சிறிதேனும் லட்சியம் செய்யாது, தேச சேவை செய்வதில் தீவிரமான அபிலாஷையுள்ளவராயினர்.
இத்தேச சேவாபிலாஷை இவருக்கு 1887 ஆம் வரு­த்திலிருந்தே இருந்தது. ஏனெனில், இவ்வரு­ம் கூடிய தேசீய காங்கிரஸ் மகா சபையில் இவர் ஒரு தொண்டராக உழைத்தார். இவ்வாறு வாலண்டியராக காங்கிரஸ் சபை ஆரம்பத்திலிருந்தே ஊக்கத்துடன் உழைத்த இவருக்கு 1895 இல் மறுபடியும் சென்னையில் காங்கிரஸ் கூடியபோது வாலண்டியர்களின் தலைவர்  பதவி யளிக்கப்பட்டது. இச் சமயம் இவர் கீழ் உதவிய மற்றவர்கள் இவருக்கு அழகிய வேலைப்பாடுடன் கூடிய ஒரு ஊன்று கோலைக் கொடுத்தனர். காங்கிரஸ் சபையைச் சார்ந்த சில கமிட்டிகள் கூடிய போது, அவற்றின் நடவடிக்கைகளில் ஒத்துழைக்க  சுலபமாகச் சம்மதிக்காத சில அங்கத்தினர்களிடம் இவர் தமது வெறுப்பைத் தைரியத்துடன் தாட்சண்யமின்றத் தெரிவித்தார்.
இவர் சென்னைக்கு வநத காலத்திற்கெல்லாம் தமது தொழிலில் தாமடைந்த உன்னத ஸ்தானத்தைக் கவனிக்காமல், சென்னை நகர பரிபாலன சபையின் அங்கத்தினராகப் பொறுக்கியயடுத்துக் கொள்ளப்பட்டார். இவர் சென்னைக் கார்ப்பொரே­ன் மெம்பராக 15 வரு­ காலத்திற்கு மேலாகவே இருந்து வந்தார். இச்சபையில் இவர் தாம் மேனாட்டில் கண்டறிந்து சிலாகித்த அனுபவங்களையும், சில அரிய முறைகளையும் உபயோகித்து, இச்சபை உயர்ந்த ஸ்தானத்தை எய்தி எல்லோரும் மெச்சத்தகும்படியான வழிகளையே சதா தேடி வந்தார். இவர் முதன் முதலில் சென்னையில் அரசியல் வி­யங்களில் கலந்து கொண்டது இக்கார்ப்பொரே­ன் சபையில்தான். இவர் கார்ப்பொரே­ன் கமி­னராகவிருக்கும் போது, அச்சபை எல்லோராலும் போற்றப்பட்டு வந்தது. இவர் முதலில் தம் நகர பரிபாலன வி­யத்திலேயே தமது மனதைச் செலுத்தினார். இவர் சுய நன்மையை அபேட்சிகாமல் உழைத்து வந்தது ஜனங்களால் போற்றப்பட்டது. கார்ப்பொரே­ன் உத்தியோகஸ்தர்களுக்கு இவரை கண்டால் பயபக்தியுண்டு. ஆனால் நகர ரக்­ண சமாசாரங்களைப் பற்றி, இவருக்கும் சர்.பி. தியாகராய செட்டியாருக்கும் அபிப்பிராய பேதங்கள் அடிக்கடி ஏற்பட்டதுண்டு. இவர் இவ்வாறிருந்த போதிலும் இவற்றைப் பாராட்டாமல் மிகுந்த ஸ்நேக பாவத்துடன் இருந்து வந்தார். இக் கார்ப்பொரே­ன் சபையில் இவர் செய்தவை இங்கு சுலபமாக விவரிக்க இயலாதவைகளாகும். இவற்றுள் முக்கியமானது இவர் தொழிலாளிகளின் நன்மைக்காகக் கொணர்ந்த பிரேரேபணையே. இவர் தொழிலாளிகளின் கஷ்டங்களையும் குறைகளையும் நீக்க, இச்சபையில் மிகுந்த திறமையுடனும், சாமர்த்தியத்துடனும் சண்டையிட்டார். இவர் கார்யங்களனைத்தும் இவருக்கும் மிகுந்த கெளரவத்தை விளைவித்தன.
இவர் சென்னை சட்டசபை மெம்பராகவும் கார்ப்பொரே­ன் அங்கத்தினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இச் சட்டசபையில் இவர் வெகுகாலம் இல்லாமலிருந்த போதிலும், சதா பொது ஜன சேவை செய்து வந்தார். சென்னை நகர முனிசிபல் திருத்த மசோதா சட்டசபையில் கொண்டு வரப்பட்ட போது, அரசாங்கத்தாரால் இவர் அதைப் பற்றித் தங்களது தீர்மானத்தைத் தெரிவிக்க ஏற்படுத்தப்பட்ட நிபுணர் கமிட்டியில் ஒருவராக நியமிக்கப்பட்டார். இவர் பொது ஜனங்கள் பக்கத்திலிருந்து அஞ்சா நெஞ்சுடன் துரைத்தனத்தாரின் செயல்களை எதிர்த்து வந்தார். இவரே இந்த மசோதா சட்டமானதற்கு முக்கிய காரணஸ்தராக விளங்கினார்.
இவர் செய்த காரியங்கள் எல்லாவற்றிலும் முக்கியமானது, இவர் பிராம்மணரல்லாதார் இயக்கத்தை ஆரம்பித்ததேயாகும். இதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன. ஒரு சமயம் இவர் திருவல்லிக்கேணி குளத்தை தூற்று, அதன் மீது ஒரு பூந்தோட்டம் நிர்மாணிக்கப்பட வேண்டுமென்ற தமதெண்ணத்தைத் தெரிவித்தார். இது உடனே திருவல்லிக்கேணி வாசிகளின் கோபத்தை எழுப்பியது. இவர் அவ்வரு­ம் திருவல்லிக்கேணி பிரதிநிதியாகக் கார்ப்பெரே­ன் மெம்பர் பதவியை அடைய விரும்பினார். இதனால் இவரது மனோபீஷ்டம் நிறைவேறு வதற்குச் சரியான சந்தர்ப்பம் வாய்க்குமென்று பயந்த திருவல்லிக்கேணி வாசிகள் இவருக்குப் பதிலாக ஒரு பிராம்மணரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். இதுவுமல்லாமல், இவர் ராஜப் பிரதிநிதி சபையின் மெம்பராக வேண்டுமென்ற அபிலா­யுடன் இருந்தார். அதில் இவருக்குப் போட்டியாக நின்ற மகாகனம், ஸ்ரீ நிவாஸ சாஸ்திரியார் வெற்றி பெற்றார். இவ்வாறு இரண்டு தடவைகள் பிராம்மணர்களிடம் தோல்வியுற்ற இவருக்குப் பெரும் பிராம்மணத் துவே­ம் உண்டாயிற்று. பிராம்மணரிடம் பகைமையை வெளிக்காட்டத் தீர்மானித்த இவர், உடனே பிராம்மணரல்லாதார் கட்சியை ஸ்தாபித்து நிலைநிறுத்தவராம்பித்தார். இவர் சில காலம் இதர அரசியல் வி­யங்களில் தலையிட்டுக் கொள்ளாமல் தாம் ஆரம்பித்த புதுக் கட்சிக்காகவே சிரமப்பட்டு வருவாராயினர். இவர் இக் கட்சியைக் கிளப்பியதன் காரணம் யாதெனில் பிராம்மணரல்லாதார்களுக்கு உன்னதப் பதவிகளை வாங்கிக் கொடுத்து, பிராம்மணர்கள் அது பரியந்தம் அனுபவித்து வந்த ஸ்தானங்களுக்கு அவர்களை உயர்த்த வேண்டுமென்பதுதான். அவர் இவ்வாறு ஆரம்பித்த ‘ஜஸ்டிஸ்’ கட்சியில் சர்.தியாகராயச் செட்டியாரும் பனகல் ராஜாவும் வந்து சேர்ந்து, அதன் பலத்தை அதிகப்படுத்தினார்கள். பிராம்மணரல்லாதவர்களுக்காகத் திடமான எண்ணத்துடன் உழைத்தவர் இவரே. அவர்கள் இவருக்கு எக்காலமும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டவர்கள்.
அரசாங்கத்தார் இவர் கார்ப்பொரே­னில் செய்து வந்த காரியங்களை மெச்சி கெய்ஸர்‡இ‡ஹிந்து தங்கப்பதகத்தை இவருக்களித்தனர். சென்னை சர்வகலாச் சாலை செனெட் சபையிலும் 1910 முதல் 1919 வரையிலும் மெம்பர் பதவியை வகித்தார்.
1917 இல் ஜஸ்டிஸ் பத்திரிகையாரம்பிக்கப்பட்ட போது, இவர் அதன் பத்திரிகாசிரியராக நியமிக்கப்பட்டார். இவர் பத்திரிகாசிரியராகவிருந்த நாளில் பிராம்மணரல்லாதார்கள் பக்கத்தையே ஆதரித்து எழுதி வந்தார். இவர் எழுதிய வாக்கியங்களில் ஆழ்ந்த அர்த்தமும், ததும்பும் எண்ணங்களும் நிறைந்திருக் கின்றன. இவர் பிறர் அதிகாரத்தை சகியார். இவர் இக்காலத்தில் பெசண்ட் அம்மையாருடன் சண்டையிட்டு, ராஜீயப் போராட்டத்தில் அரசாங்கத்தாருடன் ஒத்துழைப்பே முக்கியமெனக் கருதினார்.
இவர் பேசுவதில் சமர்த்தர் எனும் பெயர் பெற்றார். வாதாடுந் திறமையும் இவரிடமிருந்தது. இவர் எதைப் பற்றி பேசினாலும் இவரை சூழ்ந்து கொண்டு எல்லோரும் இவரது வார்த்தைகளை ஆவலுடன் எதிர்பார்த்து வருவார்களாம். ஆகவே, இவரது சொற்களுக்கு மிகுந்த கெளரவம் சம்பவித்தது. தஞ்சை ஜில்லா மகாநாட்டில் இவர் அக்கிராசனாதிபதியாகவிருந்து செய்த பிரசங்கமானது கேட்டோர் அனைவராலும் வியப்புடன் போற்றப்பட்டது. ஹாஸ்ய ரசம் பொருந்திய இவரது வசனங்கள் அநேகருள்ளத்தில் சந்தோ­த்தையும் குதூகலத்தையும் எழுப்பின.
1919 இல் பிராம்மணரல்லாதார் கோஷ்டியின் பிரதிநிதியாய், இங்கிலாந்தில் பார்லிமெண்டுக் கூட்டுக் கமிட்டியின் முன்பு சாட்சியஞ் சொல்ல, இவர் அழைக்கப்பட்டார். அப்போது இவருக்கு கொஞ்சம் தேக அசெளக்கியம் இருந்தது. ஆனாலும், தமது அசெளக்கியத்தைச் சட்டை செய்யாமல், தமது கட்சியே தமக்குப் பிரதானமென்றும் அதன் நன்மைக்காக எவ்விதத்திலாயினும் பிரயாசைப்பட வேண்டுமென்றும், இவர் இங்கிலாந்து செல்ல மனவொப்பினார். இவர் அங்க செல்லுமுன் தமது நண்பர்கள் சிலரிடம் தாம் நிச்சயமாய் மீண்டும் இங்கு திரும்புவது துர்பலம் என்று சொன்னாராம். இங்கிலாந்திற்குப் போய் சில காலம் கழிவதற்குள்ளேயே, 1919 ஆம் வரு­ம் சூலை மாதம் 17 ஆம் தேதியன்று தமது 53 ஆவது பிராயத்தில், கிளோவர்ஸ் கிரீன் என்னுமிடத்தில் மரணமுற்றார். இவருடன் அங்கு சென்றிருந்த இவரது நண்பர்கள் பனகல் ராஜா, சர்.கே.வி.ரெட்டி முதலியோர் இவரது தகனக் கிரியைகளை அவ்விடத்திலேயே செய்வித்தனர். இவரது தேக வியோகத்தால் பிராம்மணரல்லாதார் கட்சி வலது புஜத்தை இழந்தது போலாயிற்று.
தமது கட்சிக்காகத் தமதுயிரையளித்த தியாகி என்ற பெயர் இவருக்குத் தகும். (இளந்தமிழன், சூன் 2010).

No comments: