Friday, July 15, 2016

சர்.பிட்டி தியாகராயர் மறைவு

சர்.பிட்டி தியாகராயர் மறைவு
உள்ளத்தை உருக்கும் தியாகராயரின் இறுதி ஊர்வலக் காட்சிகள் (27.4.1852 -28.4.1925)
பார்ப்பனரல்லாதார் கட்சித் தலைவர் தியாகராசயச் செட்டியார் சென்னையில் 28.4.1925 அன்று இரவு 9.45 மணிக்கு காலமானார்.
அவருக்கு அஞ்சலி செய்யப் பல்லாயிரக் கணக்கில் மக்கள் திரண்ட காட்சி மக்கள் அவரிடம் கொண்டிருந்த பற்றையும் பக்தியையும் வெளிப்படுத்துவதாக இருந்தது. அவர் சென்னையின் மூத்த பெரும் குடிமகனாகத் திகழ்ந்தார்.
இச்செய்தி காட்டுத் தீயைப் போல் சென்னையிலும் தமிழகத்திலும் பரவி பெரியவர்களும் இளைஞர்களுமாக, செல்வந்தர்களும் ஏழைகளுமாக ஆண்களும் பெண்களுமாக அவர் வாழ்ந்த தண்டையார்ப்பேட்டை மாளிகையை நோக்கி ஓடி வந்தனர்.
தங்கள் இறுதி மரியாதையைச் செலுத்தவும் இறுதியாகத் தம் தலைவரின் திருமுகத்தைக் காணவும் துடித்தனர். தியாகராயரின் இறுதி ஊர்வலம் மறுநாள் 5.30 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலை முழுவதும் பல்லாயிரக் கணக்கில் சென்னையில் திருவொற்றியூர் நெடுஞ்சாலை மாளிகையில் நாடு முழுவதிலு மிருந்து வந்து குவிந்து கொண்டிருந்த மக்கள் அவருடைய அருள் பணிகளையும் அவர் வாழ்வில் நிகழ்ந்த அரசியல் நிகழ்வுகளையும் பற்றிப் பேசிப் பேசி மன ஆறுதல் பெற முனைந்தனர்.
அவருடைய திரு உடல் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட விமானத்தில் அமர வைக்கப்பட்டிருந்தது. தேவாங்கர் குல வழக்கப்படி உட்கார வைக்கப்பட்டிருந்த உடலைச் சுற்றி நடுத்தர, ஏழை மக்கள் அழுதபடி பெருந்துயரத்திலாழ்ந்திருந்தனர்.
வருகை தந்து அஞ்சலி செய்தவர்களில் முக்கியமானவர்கள் பனகல் அரசர், கே.வி.ரெட்டி, எஸ்.ஆர்.எம். அண்ணாமலைச் செட்டியார், மாண்புமிகு நீதிபதிகள் எம்.வெங்கட சுப்பாராவ், மாண்புமிகு சர்.சி.வி. குமாரசாமி சாஸ்திரி, மாண்புமிகு எம். தேவதாஸ், திவான் பகதூர் நாராயணசாமி செட்டி, டபிள்யூ. ஆழ்வார் செட்டி, டி. விஜயராகவாச்சாரியார், வி. மாசிலாமணிப் பிள்ளை, ஜே.வெங்கட்டநாராயண நாயுடு, வேங்கடகிரி குமாரராஜா, சூனாம்பேடு ஜமீன்தார், வெங்கால் ஜமீன்தார், ராவ் பகதூர் தணிகாசலம் செட்டியார், டி.வரதராசலு நாயுடு, பி.மோப்புரப்பா, டாக்டர் நடேச முதலியார், ஆர்.என். ஆரோக்கியசாமி முதலியார், சி.வி. விசுவநாத சாஸ்திரி, எஸ்.சீனிவாச ஜயங்கார், எஸ்.சத்தியமூர்த்தி, டி.வி. சே­கிரி ஐயர், வித்யாசாகர் பந்தியா, பேராசிரியர் எம். இரத்தினசாமி, டி.பிரகாசம், ஏ.ரங்கசாமி ஐயங்கார், லெப்டினன்ட் கர்னல் திவான் கணபத்ரய் மற்றும் பலர்.
இறுதி ஊர்வலம் புறப்படும் போது அவர் மாளிகைக்கு வந்து குழுமிய மக்களிடையே தேவாங்கர் அசோ´யே­ன், தேர்டு டிவி­ன் ரேட் பிரேயர்ஸ் அசோ´யே­ன் மருத்துவக்குல அசோ´யே­ன், தென்னிந்திய நல உரிமைச் சங்கம், அகில இந்திய பிராமணரல்லாதார் காங்கிரஸ் கமிட்டி, மாகாண பிராமணரல்லாதார் காங்கிரஸ் கமிட்டி, ஜஸ்டிஸ் பத்திரிகைப் பணியாளர்கள், திராவிடன் பத்திரிகைப் பணியாளர்கள் ரோஜா மாலைகள் அணிவித்தனர். அருணாசலசாமி கோயில் டிரஸ்டிகள் முன்னதாக அன்று தீர்த்தம் அனுப்பி வைத்தனர்.
மாலை 6 மணிக்கு சில நிமிடங்கள் முன்னதாக மறைந்த தலைவரின் மாளிகையிலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டது. அவ்வூர்வலம் சஞ்சீவிராயன் கோயில் தெரு, ஜந்திர பிள்ளையார் கோயில் தெரு, இராமனுஜ ஐயர் தெரு, சுப்பராயலு தெரு வழியாகச் சென்றது.
அந்த ஊர்வலத்தில் தேவாங்கர் குலத்தைச் சார்ந்த ஒரு குழுவினர், மக்கள் எழுப்பிய தியாகராயருக்கு ஜே என்று முழக்கங்களுக்கிடையே, தேவாரம், திருவாசகம் பாடல்களைப் பாடிச் சென்றனர். ஊர்வலம் ஒரு மைல் நீளத்தைத் தாண்டியது.
வீதியின் இரு மருங்கிலும் திரண்டிருந்த மக்கள் கண்ணீர்ப் பெருக்கி அஞ்சலி செலுத்தினர். அவருக்கு உரிய மயானத்தில் அவர் மூத்த சகோதரரும் முக்கியஸ்தர் களும் குழுமி இருந்த நிலையில் இரவு 8 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது. மங்கலான நிலா வெளிச்சத்தில் பாடகர்களின் பாடல்களுடன் கூடிய இறுதி ஊர்வல இசையில், பல்லாயிரக்கணக்கான மக்களின் அழுகுரல், கருங்கல் இதயத்தையும் கரையச் செய்யும் வகையில் அமைந்திருந்தது.
திVயகராயரின் திரு உடலைச் சுமந்தவர்கள் பனகல்அரசர், கே.பி. ரெட்டி, ஓ.தணிகாசலம் செட்டியார், டாக்டர் ச. நடேச முதலியார், மோப்பூரப்பா, டி. வரதராசலு நாயுடு, பி.பி. நடராஜ முதலியார், கே.ரங்கய்யா நாயுடு, டி. சுந்தராவ் நாயுடு மற்றும் டபுள்யூ எஸ்.கிருஷ்ணசாமி செட்டியார் ஆவர்.
மயானத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் மாண்புமிகு பனகல் அரசர் சர்.கே.பி. ரெட்டி, மாண்புமிகு நீதிபதி எம்.தேவதாஸ். ஓ.தணிகாசலம் செட்டியார் டாக்டர் நடேச முதலியார் உரையாற்றினர்.-தி.வ.மெய்கண்டார். (இளந்தமிழன், ஏப்ரல் 2010)

No comments: