Tuesday, December 31, 2019

பேரறிஞர் அண்ணாவின் திராவிடத் தேசியம் -2


திராவிட தேசீயம்-2
பேரறிஞர் அண்ணா

தேசீயம் என்பதற்கு இலக்கணம் எது?

தேசீயம், தேசீயம் என்று இப்பொழுது பழக்கப் படுத்துவதால் அதைப் பற்றிச் சிறிது விளக்க விரும்புகிறேன்.

அழகு, அழகுஎன்கிறோமே எது உண்மையான அழகு? ‘இதுதான் அழகுஎன்று இதுவரை இலக்கணம் வரையறுக்கப்படவில்லை.
வீரம் என்றால் இதுதான் வீரம்என்று உறுதியிட்டு உறுதிப்படுத்தி இலக்கணம் சொல்ல முடியாது.

தேசீயம்என்று காங்கிரஸ்காரர்கள் சொல்கிறார்கள். ‘திராவிடத் தேசீயம்என்கிறோம் நாம். ‘இல்லை, இல்லை’ ‘தமிழ்த்தேசீயம்தான் இருக்கிறது என்கிறார்கள் ஒரு சாரர்.

இந்தியத் தேசீயம்என்று வடநாட்டில் இருப்பவர்களும், இந்தியாவுக்கு வெளியே இருப்பவர்கள்ஆசிய தேசீயம்என்றும், ஆசியாவுக்கு வெளியே இருப்பவர்கள்தேசீயம் என்பதே இல்லை! எல்லாம் சர்வ தேசீயம்தான்என்றும் சொல்கிறார்கள்.

இன்னும் வானவெளிக்குச் சென்று வந்தால், அண்ட சராசரங்கள் அனைத்தும் ஒரே தேசீயம் என்பார்கள்.

இப்படி எதுதேசீயம்என்று இன்னமும் வரையறுத்துச் சொல்ல முடிய வில்லை.

இதற்குச் சிறிய உதாரணம் கூறி உங்களுக்கு விளக்க விரும்புகிறேன். உங்களிடத்திலே பெரிய பெரிய புத்தகங்களைப் படித்துக்காட்டி விளக்கங் கூறத் தேவையில்லை எனக் கருதுகிறேன். நான் அப்படிப்பட்ட புத்தகங்களைப் பார்க்காததால் அல்ல ; அந்த அளவுக்கு நாடு பக்குவப்படாததால் நான் சிறிய எளிய உதாரணங்களைச் சொல்லுவது வாடிக்கை.

இந்தக் கூட்டத்தில் உங்களைப் பார்த்துபாட்டுப் பாடத் தெரிந்தவர் களெல்லாம் ஒரு பக்கம் வாருங்கள் ; பாடத் தெரியாதவர்களெல்லாம் மற்றொரு பக்கம் இருங்கள்என்று நான் கேட்டுக் கொண்டு, அதன்படி நீங்கள் வந்தால், பாட்டுப்பாடத் தெரிந்தவர்களில் சிலர் உயரமாக இருக்கலாம்; சிலர் குட்டையாக இருக்கலாம்; பலர் கருப்பாக இருக்கலாம் - சிலர் சிவப்பாக இருக்கலாம்; அவர்களில் இந்துக்களும் இருக்கலாம் -முஸ்லிம்களும் இருக்கக்கூடும் ; கிறிஸ்தவரும் இருப்பார் -சைவரும் இருப்பார் ; வைணவரும் இருப்பார். பொதுவாகபாட்டுப்பாடத் தெரிந்தவர்-தெரியாதவர்என்ற அடிப்படையில்தான் இங்கே பிரிக்கப்படும்.

அந்த இரு பிரிவினரையும் பாட்டுப் பாடத் தெரிந்ததேசீயம்என்று சொல்லலாம்.

இன்னொருவர் வந்துஇந்தக் கூட்டத்திலுள்ள உயரமானவர்களெல்லாம் ஒரு பக்கமும், குட்டையானவர்கள் மற்றொரு பக்கமும் வாருங்கள்என்று சொன்னால், பாடத் தெரிந்த பிரிவினரும், பாடத் தெரியாத பிரிவினரும் கலைவார்கள். பாடத் தெரிந்தவர்களில் இருந்த உயரமானவர்களும், பாடத் தெரியாதவர் பிரிவிலிருந்த உயரமானவர்களும் ஒன்று சேர்வார்கள் ; அப்போதும் முஸ்லிம், கிறிஸ்துவர், இந்து என்ற வித்தியாசம் இருக்காது ; உயரத்தின் அளவிலேதான் பிரிக்கப்படுவார்கள்.

இன்னொருவர் வந்து, கையிலே காசு உள்ளவர்கள் ஒரு பக்கமும், இல்லாதவர் மற்றொரு பக்கமும் வாருங்கள் என்றால் காசு இருப்பவர்கள் தான் முந்திக் கொண்டு கசு இல்லாதவர்கள பக்கம் செல்வர். ஏனென்றால், தங்கள் காசுக்கு எங்கே ஆபத்து வந்துவிடுமோ என அஞ்சுவர். அதனால் அப்பொழுது இரண்டு பிரிவு ஏற்படாது ; எல்லாரும் ஒரே அணியில் இருப்பார்கள்.

உலகில் சேர்ந்து வாழும் மக்கள், இப்படி ஒவ்வொரு முறையில் பரம்பரை பரம்பரையாகதலைமுறை தலைமுறையாக - பல நூற்றாண்டுகளாக, ஒரே வகை எண்ணம், ஒரே வகை பண்புகளால் வாழ்ந்த மக்கள், ஒரே தேசீய இயக்கமாகக் கருதப்பட்டார்கள்.

வாட்டும் வடக்கும் தேம்பும் தெற்கும்

ஆங்கிலேயன் இந்தியாவுக்கு வந்த பின், ஆங்கிலேயன் ஆள்பவனாகவும் இந்தியர்கள் ஆளப்படுபவர்களாகவும் பிரிக்கப்பட்டனர்.

ஆளுபவர் ஒரு பக்கமும், ஆளப்படுபவர்கள் மற்றொரு பக்கமும் இருந்தனர்- இந்து- முஸ்லிம் - பவுத்தர் என்பதைவிட, ஆங்கிலேயர் - இந்தியர் என்ற பிரிவினை முக்கியத்துவம் பெற்றது.

உயரமாக இருப்பவர்களை அழைத்ததும், பாடத் தெரிந்த அணியிலிருந்த உயரமானவர்கள் பிரிந்து இன்னொரு பக்கம் வந்தது போல், வெள்ளையன் வெளியேறிய பின் கொடுமைப் படுத்தப்படும் மக்கள் ஒரு பக்கமும், கொடுமைப் படுத்துபவர் மற்றொரு பக்கமும் இருந்தார்கள்.

கொடுமைப்படுத்துவோர் வடநாட்டினராகவும், கொடுமைப் படுவோர் தென்னாட்டினராகவும் இருந்தார்கள்.

வடநாட்டினர் சுரண்டுபவராகவும், தென்னாட்டினர் சுரண்டப்படுபவராகவும் இருந்தனர்.

ஆட்டிப்படைப் படைப்பது வடக்காகவும் ஆடி ஆழிவது தெற்காகவும் இருந்தன.
வடவர் அரசு சுரண்டிக் கொழுக்கிறது அங்கே - கொட்டிக் கொடுத்துவிட்டுத் தேம்பித் தவிக்கிறது தெற்கு இங்கே.

பழக்கடை - பூக்கடை

பூக்கடைகளில் சில பழங்களும் இருக்கும் ; பழக்கடையில் சில பூக்களும் இருக்கும். பழக்கடையில் மாட்டியுள்ள சாமி படத்துக்கு பூ வைத்திருப்பார்கள். பூக்கடையில் உள்ள படத்தின் அருகே பழம் வைத்திருப்பார்கள்.
இதைப் பார்த்துவிட்டு, ‘என்ன பழக்கடையில் பூ இருக்கிறதேஎன்றோ, ‘பூக்கடையில் பழம் இருக்கிறதேஎன்றோ கேட்பதில் பொருளில்லை. அப்படிக் கேட்பவர் தத்துவ விசாரணை இல்லாதவர் என்றுதான் பொருள்.
அதைப்போல, நாம் திராவிடநாடு கேட்கும்போது, திராவிடநாடு இல்லை என்பவர்களும் இருக்கிறார்களே என்றால் இது பழக்கடையில் பூ இருப்பதற்கு ஒப்பானதாகும்.

பழக்கடையில் சில அழுகிய பழங்களும் இருக்கும்பழக்கடைக்காரர் இங்கு யாராவது இருந்தால் வருத்தப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்; உண்மையைத்தான் சொல்கிறேன்அதற்கும் பழக்கடை என்றுதான் பெயர்.
அதைப் போல ஒரு சிலர் திராவிட நாட்டை ஒத்துக் கொள்ளாவிட்டாலும், இது திராவிட நாடுதான்.

முயற்சி தேவை - திராவிட நாடு கிட்ட!

வடக்கால் நாம் கஷ்டப்படவில்லை என்றால், அப்படிச் சொல்பவர்கள் வடக்குப் பக்கமே இருக்கட்டும். நாங்கள் அவர்களைத் தடுக்கவில்லை. ஆனால், வடநாட்டால் நாம் சீரழிக்கப்படுகிறோம் என்ற நம்பிக்கை இருப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களைத் திராவிடர் என்கிறோம்; அதனால், இந்நாட்டைத் திராவிடம் என்கிறோம். இப்படிச் சொல்லிச் சொல்லி உள்ளத்தில் பதிந்துவிட்டால் இது ஒரு தேசீயமாகிறது.


ஒரு கிண்ணத்தில் சந்தனம் இருக்கிறது ; அதை எடுப்பதற்கு கையும் இருக்கிறது; பூசிக் கொள்ள மார்பும் இருக்கிறது. அதை எடுத்துப் பூசிக் கொண்டால்தான் மணக்கும். கிண்ணத்தின் அருகில் அமர்ந்து கொண்டு வா வா என்றால் சந்தனம் தானே வந்தா மார்பில் ஏறும்? எடுத்துப் பூசிக் கொள்ளாமல், ‘சந்தனம் வரவில்லையே எதைப் பூசிக்கொள்வது?’ என்றால் அதற்கு நான் என்ன செய்ய?

அதைப் போல முயற்சி செய்யாமல் எப்படித் திராவிட நாடு கிட்டும்?
காமராசர் இப்போது கேட்கக்கூடும் ‡ ‘படித்தவர்களே திராவிட நாடு வேண்டாம் என்கிறார்களேஎன்று! இதற்கும் என்னால் பதில் சொல்ல முடியும். படித்தவர்கள் வேண்டாம் என்று சொல்லும் போதே, நாங்கள் திராவிடநாடு கேட்கிறோம் என்றால் படிக்காதவர் சொல்வதை எப்படி நம்புவது?
இதில் படித்தவராபடிக்காதவரா என்பதல்ல பிரச்சனை ; உண்மையை உணர்ந்தவரா இல்லையா என்பதே பிரச்சனையாகும்.
குருநாதர் கூறியதையேமாயைஎன்பதா?

திராவிட உத்கல வங்காஎன்று இரவீந்திரநாத் தாகூர் பாடிய பாடலைப் பாடித்தான் கொடியேற்ற வேண்டும் என்று அரசாங்க விதி இருக்கிறது. அதன்படி ஒவ்வொரு விழா நிகழ்ச்சியிலும் இந்தப் பாடலைப் பாடுகிறார்கள். இத்தனை ஆண்டுக்காலம் இந்தப் பாடலைப் பாடியும்திராவிடம் எங்கே இருக்கிறது?’ என்று கேட்கிறார்கள். இந்தப் பாட்டை நாள்தோறும் பாடுபவர் கள், அதிகமாகச் சம்பளம் வாங்காத பள்ளி ஆசிரியர்களும், பள்ளிப் பிள்ளை களும்தான்.

ஜனகண மனஎன்று தொடங்கும் இந்தப் பாடல், எந்த மொழி என்பதே பலருக்குத் தெரியாது. பலபேர் அதை, இந்திமொழி என்று கருதிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அது இந்தியல்லவங்காள மொழியாகும்.

வங்கத்தில்பிறந்து, உலகம் மதிக்கத்தக்க மேதையாக விளங்கிய இரவீந்தரநாத் தாகூர், அறிவில்லாமல் இப்படிப் பாடவில்லை. ஒவ்வொரு நாடாகப் பிரித்துப் பிரித்துப் பாடினார். சிந்து நதி பாயும் நாட்டை சிந்து என்றும், கங்கை நதி பாயும் நாட்டை கங்கா என்றும், யமுனை நதி பாயும் நாட்டை யமுனா என்றும் தமது தாயகத்தை வங்கம் என்றும் .பி., பிகார், ஒரிசா முதலிய மாநிலங்கள் உள்ள பகுதியை உத்கல் என்றும் குறிப்பிட்டுப் பாடினார். ஆனால், தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கன்னடம் என்று பாடவில்லை ; இந்த நான்கு பகுதிகளையும் சேர்த்துதிராவிடம்என்றுதான் பாடினார். ஏன் இப்படிச் சொன்னார்? விவரம் தெரியாததால் சொன்னாரா?

பத்து நாட்களுக்கு முன்புதான் நாடெங்கும் தாகூருக்கு விழா கொண்டாடினார்கள். அவரைத் தங்கள் குருநாதர் என்று ஒரு நாள் பேசுவது ; பிறகு அவர் சொன்ன திராவிடம்மாயைஎன்பதா? எங்கே திராவிடம் என்றா கேட்பது?

உன்னுதிரத்தே உதித்தெழுந்து என்றனரே அவர்கள்!

ஏன் அவர் தமிழ், தெலுங்கு என்று பிரித்துச் சொல்லாமல் திராவிடம் என்றார்.
கன்னடமும், களி தெலுங்கும் கவின் மலையாளமும் துளுவமும் உன்னுதிரத்தில் உதித்தெழுந்து...’ என்று பேராசிரியர் சுந்தரம் பிள்ளை பாடினார். சுந்தரம் பிள்ளையும் கவிஞர் பரம்பரையாகையால், அவர் பாடியதை அறிந்து தாகூரும் பாடினார்.

சிற்பங்களும் கூறுகின்றன திராவிடக் கலாச்சாரம்

தாகூர் கல்லறைக்கு எங்கே போவது அதற்கு எங்களுக்கு நேரமில்லைஎன்று சொல்லுவீர்களேயானால் பத்து ரூபாய் செலவு செய்யக் கூடியவர் களுக்கு நான் இன்னொரு யோசனை கூறுகிறேன். ஞாயிற்றுக் கிழமைகளில் மாமல்லப்புரத்திற்கு அரசாங்கம் பஸ் விடுகிறது; அதில் ஒரு நாளைக்கு ஏறிப் போய்ப் பாருங்கள். மாமல்லபுர சிற்பங்களுக்கு அரசாங்கமே விளக்கம் தந்திருக்கிறது. அந்த விளக்கங்களிலெல்லாம்திராவிடக் கலாச்சாரம்’ (Dravidian Culture) என்றும்சிற்பக்கலை’(Dravidian Architeture)  என்றும் தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது.


அதேபோல் ஆந்திரத்தில் உள்ள கோபுரமானாலும், கருநாடகத்திலுள்ள மண்டபமானாலும் அவைகளிலெல்லாம் திராவிடக் கலாச்சாரத்தைச் சேர்ந்தவை என்றுதான் குறிப்பிடுவார்கள்.

அவ்வளவு தொலைவு போக முடியாதேஎன்றால், இன்னொரு யோசனை சொல்கிறேன். திராவிடம் கிடையாது என்பவர்களே கல்லிலேதிராவிடம்என்று பொறித்து வைத்திருப்பதைக் காணலாம். ஒரு எட்டணா செலவு செய்து கொண்டு திருவல்லிக்கேணிக் கடற்கரைக்குச் செல்லுங்கள். அங்கேயுள்ளபிரசிடென்சி கல்லூரிஎதிரில் டாக்டர் .வே.சாமிநாத (அய்யர்) சிலை இருக்கிறது. அதைப் பாருங்கள் - எங்கே பெரியார் கோபித்துக் கொள்வாரோ என்ற பயம் உங்களுக்கு வேண்டாம். ஏனென்றால் செத்துப் போனஅய்யர்களிடத்தில் பெரியாருக்குக் கோபம் கிடையாது - அந்தச் சிலைக்கு அடியில்திராவிடக் கலாநிதிஎன்று கல்வெட்டிலே பொறித்திருக்கிறார்கள்.
இதுவும் வேண்டாமென்றால் அப்படியே அங்குள்ள பல்கலைக் கழகத்துக்குள் சென்று, டாக்டர் . இலட்சுமணிசாமி அவர்களைப் பார்த்து, ‘தமிழ், தெலுங்கு, மலையளம், கன்னடம் ஆகிய மொழிகளின் துறைக்கு என்னபெயரிட்டிருக்கிறீர்கள்?’ என்று கேளுங்கள். அதற்கு அவர், ‘Department of Dravidian Languages’என்று பதிலளிப்பார்.

வேற்றுமைகள் உண்டு- விளக்கங்கள் - காணீர் !

அய்ந்தாறு மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற தமிழிசை மாநாட்டில் தலைமை வகித்த அரியக்குடி இராமாநுசம் அய்யங்கார் சொன்னார் ‡ ‘தென்னாட்டு இசைதான் கர்நாடக இசை ; கர்நாடக இசைதான் தமிழ்நாட்டு இசையும்என்று. தமிழ் இசை உந்திக்கமலத்திலிருந்து எழுவது ; வடநாட்டு இசை தொண்டைக்குக் கீழே இறங்காது! வடநாட்டு இசையைக் கேட்டவுடன் பாடமுடியும்தென்னாட்டு இசை பாடலாம் போலத் தோன்றும். ஆனால், எளிதில் பாட முடியாது. வடநாட்டு இசைக்கு சுர பேதங்கள் அவ்வளவாகக் கிடையாது. அதுவும் பாதி மூக்கை அடைத்துக் கொண்டு பாட வேண்டும்.

இப்படி சங்கீதத்தில் மட்டும் அல்ல - வைத்தியத்திலும் வடநாட்டுக்கும் தென்னாட்டுக்கும் வேற்றுமை இருக்கிறது. இங்குள்ள வைத்தியம் சித்த வைத்தியம் ; வடநாட்டு வைத்தியம் ஆயுர்வேத வைத்தியம் என்பதாகும்.
வடக்கேயிருந்து வீசும் காற்று வாடை என்றும், தெற்கேயிருந்து வீசும் காற்று தென்னல் என்றும் பெயர் பெறும்.

இலக்கியம் தெரியவில்லை எனில் இப்படிச் சொல்வதா?

அந்தக் காலத்தில் உண்ணாதிருந்து உயிர்விடுவது - அதாவது சாவதற்காகவே உண்ணாவிரதமிருப்பது ஒரு பழக்கமாக இருந்தது. அப்படி உண்ணாவிரதமிருப்பவர்கள் வடக்கு நோக்கி இருந்து சாவார்கள். அப்படிச் சாவதற்காக உண்ணாவிரதத்தைவடக்கிருத்தல்என்றால் சொத்துப் போவது என்று பொருள்.

இப்பொழுதுவடநாடு நரகலோகமும் அல்ல, அங்கே எமகிங்கரரு மில்லைஎன்பவர்கள் பழந்தமிழ் இலக்கியம் தெரியாததால் அப்படிச் சொல்கிறார்கள்.
இப்பொழுதுகூட நமது வீடுகளில் உள்ள பெரியவர்கள், ‘வடக்கே தலை வைத்துப் படுக்காதேஎன்கிறார்கள். ஏன் என்று கேட்டால் காரணம் சொல்லத் தெரியாது. இந்தப் பழமொழி நெடுங்காலமாக வழங்கிவருகிறது. வடக்கே ஏதோ ஒரு கூட்டம் இருக்கிறது ; அது நமது தலையைத் தடவிவிடும் என்பதுதான் இந்தப் பழமொழி ஏற்படக் காரணமாக இருந்திருக்க வேண்டும்.
படித்துப் பாருங்கள் விளக்கம் கிடைக்கும்!

அகில இந்தியாவின் முடிசூடா மன்னர்என்று புகழப்படுகிறாரே பண்டித ஜவஹர்லால் நேருஅவர் சிறையிலிருந்த போது, தம் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதத்தில் விந்திய மலைக்குத் தெற்கே இருப்பதைத்திராவிடம்என்றும் வடக்கே இருப்பதைஆரிய வர்த்தம்என்றும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அந்தக் கடிதத்தில் தெற்கே இருப்பவர்கள் திராவிடர்கள் என்றும் வடக்கே இருப்பவர்கள் ஆரியர் என்றும் இந்த இருசாராரும் கலந்திருந்த போதிலும், தென்னாட்டில் 100 க்கு 90 பேர் திராவிடக் கலாச்சாரத்தையே இப்போதும் பின்பற்றி வருகிறார்கள் என்றும் எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகம் காங்கிரசுப் படிப்பகங்களில் இருக்குமானால் படிக்கும் பழக்கமுள்ள காங்கிரசுக்காரர்கள் வாங்கிப் படித்துப் பார்க்கலாம்.

அவர்களை விட நான் ஆற்றல் பெற்றவனல்ல!

அமைச்சர் சி. சுப்பிரமணியம் டில்லியிலே திராவிடத்துக்காகவும் வாதாடினேன் என்று பேசியது அவர் மனம் மாறியதால் அல்ல ; நான் அழகாகப் பேசியதாலும் அல்ல ; அழகாகப் பேசுவதற்கு என்றால் நாம் சட்ட மன்றத்திற்குப் போகவும் தேவையில்லை.

சிறந்த பேச்சாளர் தேவை என்றால் - . இராமசாமி (முதலியார்) இருக்கிறார் ; கல்வித் துறையில் வல்லுநர் தேவை என்றால், .லட்சுமண சாமி இருக்கிறார் ; இன்னும் சர். சி.பி.இராமசாமி, இராசகோபாலாச்சாரி போன்றவர்களெல்லாம் இருக்கிறார்கள் ; எப்படிப்பட்ட எதிர்ப்புக்கும் அஞ்சாது, காரியத்தில் வெற்றி பெறக் கூடியவரான என்னுடைய ஒரே தலைவர் பெரியார் இராமசாமி இருக்கிறார்-இப்படிப்பட்டவர்களையயல்லாம் விட நான் பெரிய ஆற்றல் பெற்றவனல்ல.

சென்றவர்களைக் கேட்டோம் சொன்னது இதுதான்!

ஒரு சில தினங்களுக்கு முன்பு, டெல்லியில் நடந்ததேசீய அபிவிருத்திக் குழுக்கூட்டத்திற்கு நம் நிதி அமைச்சர் சென்றுவந்தார். ‘தேசீய அபிவிருத்துக் குழுஎன்று அதற்குப் பெயர் இருப்பதே, இன்னும் தேசீயம் வளரவில்லை என்பதைக் குறிப்பிடுவதாகிறது. தேசீயம் உண்மையில் இருக்குமானால், அதற்கு அபிவிருத்தி தேவையில்லை! ஒவ்வொரு மாநிலத்தின் முதலமைச் சரும் சென்று, ‘எங்கள் மாநிலத்துக்கு அந்தத் திட்டம் வேண்டும், இந்தத் திட்டம் வேண்டும்என்றெல்லாம் கேட்பார்கள் ; விவாதம் நடைபெற்ற பிறகு அக்குழு இறுதியாக, எதைச் செய்வது என்று முடிவு செய்யும்.

அந்தத் தடவை, திரு. சுப்பிரமணியம் டெல்லிக்குச் சென்று திரும்பியதும், நாங்கள் அவரைப் பார்த்து, ‘டெல்லிக்குச் சென்றீர்களே, என்ன கொண்டு வந்தீர்கள்?’ என்று கேட்டோம். கொத்தவல்சாவடிக்குப் போனால் வாழைப் பழமாவது வாங்கி வருவார்கள் ; டெல்லிக்குச் சென்றீர்களே, அங்கிருந்து வாங்கி வந்ததுதான் என்ன? எதைக் காட்டப் போகிறீர்கள்? கொசு கடித்த தழும்பைக் காட்டப் போகிறீர்களா? நாம் கேட்ட திட்டங்களில் கொடுத்தது போக, கிழித்துப்போட்டதைக் காட்டப் போகிறீர்களா?’ என்று கேட்டோம்.
அதற்கு அவர், ‘நான் டெல்லியிலே வாதாடினேன். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல் திராவிடத்துக்காகவும் வாதாடினேன் ; இது அண்ணா துரைக்குச் திருப்தியாக இருக்கும் என்று கருதுகிறேன்என்று பதில் சென்னார்.
அய்ந்தாண்டுத் திட்டத்தில் தென்னாட்டுக்கே ஒதுக்க வேண்டிய திட்டங்களை மொத்தமாக ஒதுக்கிவிடுங்கள். அதன்பிறகு தென்னாட்டிலுள்ள நாங்களே எந்த மாநிலத்துக்கு என்னென்ன திட்டங்கள் என்பதைப் பிரித்துக் கொள்கி றோம் என்று டெல்லியில் வாதாடினேன்என்று அவர் சொன்னார்.

தேன் சொட்டப் பேசியவர் தெருக்கோடியில் மாறினார்!

மற்றொரு முறை, நிதி அமைச்சர்  அவர்கள், கிண்டியில் ஏற்படுத்தப்பட விருக்கும் உயர் தரப் பொறியியல் கல்வி நிலையம் பற்றிய கேள்விக்குப் பதிலளிக்கையில்இந்தக் கல்வி நிலையம் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, திராவிடத்துக்கும் உதவும் என்று கூறி, இப்படிச் சொல்வதுதான் அண்ணா துரைக்கு திருப்தி ஏற்படலாம் என்று நினைக்கிறேன்!’ என்றார்.
இப்படி சட்டசபைக்குள் என் நாக்கில் தேனைத் தடவி விட்டு, தெருக் கோடியில் பேசுகையில்ஏது திராவிடம்என்றால், என்ன பொருள்?

தேவையான மாறுதல் எவ்வாறு இருப்பது?

நாம் சொல்லும் திராவிடம் வரலாற்றிலே இருக்கிறது ; கல்வெட்டிலே இருக்கிறது; சிலர் மாறிவிட்டார்களே என்றால், அதற்காக நாம் பொறுப்பாளி கள் அல்லர்.

சாத்துக்குடியின் தோல் பச்சையாக இருந்தாலும் உள்ளே இருக்கும் சுளை இனிக்கும்; வில்வப் பழத்தின் மேல்புறம் செக்கச் செவேலென்று இருந்தாலும் உள்ளே இருப்பதைத் தின்ன முடியாது. இதை நான் சொல்லுவதால் யாரையும் கேவலப்படுத்துவதாகக் கருத வேண்டாம்.

மாறுதல் தேவைதான் என்றாலும், அந்த மாறுதல் நல்ல மாறுதலாக இருக்க வேண்டும். பால் மோராக மாறுவது நல்ல மாறுதல் ; மோர் காடியாக மாறுவது நல்ல மாறுதலாகது. குழந்தை பெரியவனாக மாறுவது நல்லது; நல்ல மனிதன் கூனனாக மாறுவது நல்லதல்ல!

துச்சமாகக் கருதினாரே!

ஜனாப் ஜின்னா முதலில் முஸ்லிம் சமுதாய நலனுக்காக 14 கோரிக்கை களைத் தந்தார். முஸ்லிம் சமுதாயத்துக்கு சட்டமன்றத்தில் தனி இடம், உருது மொழிக்குப் பாதுகாப்பு முதலிய கோரிக்கைகள் அவற்றில் இருந்தன. ‘இதைக் கேட்க நீ யார்?’ என்று காங்கிரசுக் கட்சியினர் கேட்டனர்; அதற்குநான் முஸ்லிம்களின் தலைவன்என்றார் ஜின்னா. அதற்குக் காங்கிரசார், ‘ஓகோ, நீயா தலைவன்? அபுல் கலாம் ஆசாத், முஹம்மது அலி, ரபி அகமத் கித்வாய், ­வுகத் அலி ஆகியவர்களெல்லாம் இருக்கிறார்களே?’ என்று கேட்டனர் ; ‘அவர்களையயல்லாம் நான் துச்சமாகக் கருதுகிறேன்என்றார் ஜின்னா.
தேசிய முஸ்லிம்கள் தமது திட்டத்தை ஏற்கவில்லை என்பதால் அவர்திராவிட நாடு வேண்டாம்; தமிழ் நாடு மட்டும் கொடு என்று இங்கு கேட்பவர் களைப் போலதனது இலட்சியத்தைச் சுருக்கிக் கொள்ளவில்லை ; ‘நாட்டுப் பிரிவினையே வேண்டாம். பிரிவினையை ஒப்புக்கொண்டால் போதும்என்றும் கூறவில்லை. தனது கோரிக்கைகளின் எண்ணிக்கையை 14 இலிருந்து 31 ஆக உயர்த்தினார் ; அதன் பிறகு, ‘கூட்டு மந்திரிசபை உண்டா?’ என்று கேட்டார்! அடுத்து, ‘நாட்டைப் பிரித்துக் கொடுஎன்று கேட்டார் ; பிரித்தார்கள்.
அந்தப் பொறுமை நமக்கு வேண்டாமா?

மார்கழி மாதத்தில் குடுகுடுப்பாண்டிகள் நாள்தோறும் அதிகாலையில் வந்துநல்லகாலம் பிறக்குது ; நல்ல காலம் பிறக்குதுஎன்று சொல்லிக் கொண்டு செல்வார்கள். ஒவ்வொரு நாளும் அவனுக்கு ஒன்றும் போடவில்லை யயன்றாலும், ‘மாதம் முடிந்த பிறகாவது ஏதேனும் போடமாட்டார்களாஎன்று எதிர்பார்த்து, மாதம் முழுவதும் பொறுமையாக வந்து செல்கிறான் ; மாதக் கடைசியில் அவனுக்கு ஏதேனும் கிடைக்கும்.

குடுகுடுப்பாண்டிக்கு இருக்கும் பொறுமை கூட அரசியலில் வேண்டாமா? நாம் என்ன 8 அடி உயரம் 34 அங்குல மார்பு படைத்த பகவத் சிங் பரம்பரையா? நாம் பாடவேண்டிய பாட்டைப் பாடிவிட்டோமா? கொடுக்க வேண்டிய விலையைக் கொடுத்துவிட்டோமா? நீட்ட வேண்டிய தியாகப் பட்டியலை நீட்டிவிட்டோமா? இன்னும் நீள வேண்டிய தியாகப் பட்டியல் எவ்வளவோ இருக்கிறது!

( அறிஞர் அண்ணா அவர்கள் 4.6.1961 அன்று சென்னை கொத்தவால் சாவடியில் ஆற்றிய உரை இது)


No comments: