Monday, December 23, 2019

டாக்டர் அம்பேத்கார் கூறுவது உண்மையே! ஆனால் எம்மதத்திலும் சேராதிருங்கள்

டாக்டர் அம்பேத்கார் கூறுவது உண்மையே! 
ஆனால் எம்மதத்திலும் சேராதிருங்கள்
-சிறுகுடி தோழர் செ.ராமலிங்கம்

நமது மதிப்பிற்குரிய தோழர் அம்பத்கார் அவர்கள் நாசிக்கில் கூடிய ஆதிய இந்துக்கள் மாநாட்டில் நிகழ்த்திய தலைமைப் பிரசங்கத்தைக் காணும் ஒவ்வொரு ஆதி இந்துவும் டாக்டர் அம்பத்காரின் பேச்சைக் கேட்டு என்றுமில்லாதவோர் ஆனந்தமும், புத்துணர்வும் பெற்று தலைநிமிர்ந்து நிற்பர் என்பதில் சிறிதும் சந்தேகத்திற்கு இடமில்லை. ஆனால் தோழர் அம்பத்காரவர்களுக்கும் குறிப்பாக நம் ஆதி இந்து தோழர்களுக்கும் ஒரு வார்த்தை சொல்ல விரும்புவது யாதெனில், தாம் பிறந்த மதத்தை விடுத்து பிற மதம் போந்து ஆங்கும் பல மதத் தலைவர்களின் ஆக்ஞைக்குட்பட்டு, பயந்து துணிந்து நடந்து வருவதைவிட கேரள தேசத்து தீயர், ஈழவர் ஆகிய மக்கள் கூடி தீர்மானித்த மத விடுதலைத் தீர்மானத்தைப் பின்பற்றி நடந்து வருவார்களேயானால், இப்பரந்த உலகில் உயிருடன் வாழ்நாள் முழுவதும் மதத்தின் பெயரால் யாருக்கும் பயந்தோ, அடிமைப்பட்டோ, தாழ்த்தப் பட்டோ வாழ வேண்டிய அவசியம் நேரிட்டுவிடாது என்பதை தாழ்மையோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இரண்டாவதாக மேலே கண்ட ஆதி இந்துக்கள் மாநாட்டில் தீர்மானித்த தீர்மானத்தின் சாரம் யாதெனின் ஆதி இந்துக்களனைவரும் இந்து மதத்தை விடுத்து சமத்துவம் பரவியுள்ள வேறு எந்த மதத்திலாவது போய் சேர்ந்து கொள்ள வேண்டும் என்பதாகும். 

இத்தீர்மானத்தைப் பற்றிய உண்மைகளை ஆதி இந்து தோழர்கள் மீண்டும் நன்கு உன்னி அலசிப் பாருங்கள். அதாவது இன்று வாழும் மனிதர் வாழ்க்கையில் மதம் எனுமோர் பேய் குறுக்கிட்டு மனிதர்க்குள் மனிதர் மதத்தின் பெயரால் சண்டையிட்டு மண்டைகள் உடைபட்டு உயிரை விடுவதை விட, அதோடு மதத்தின் பெயரால் தம் வருவாயின் ஒரு பகுதி பொருளை இழப்பதைவிட வேறு என்ன பலனை அடைந்தார்கள் என்பதைப் பற்றிக் கூறுதற்கு முடியுமா?

தோழர் அம்பத்காரவர்களின் விருப்பப்படி இந்து மதத்தை விடுத்து பிற மதத்தில் போந்து வாழ்வதாயிருப்பினும் ஒவ்வொரு மதத்திலும் வெவ்வேறு ரூபமான பேதங்கள் மலிந்து கிடக்கின்றன என்பதை நமது ஆதி இந்து தோழர்கள் நன்கு அறிந்து கொள்ளல் வேண்டும்.

குறிப்பாக பல மதத் தலைவர்கள் தம் மதத்தைப் பெருக்கி எண்ணிக்கையை உயர்த்திக் காண்பிப்பதற்கென்றே தோழர் அம்பத்காரவர்களை அண்மி பல ஆசை வார்த்தைகளைக் கூறி ஏமாற்றிவிட முயனறு வருவார்கள் என்றாலும், இப்படிப்பட்ட மதத் தலைவர்களால் நம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு யாதொரு விதமான பிரயோஜனமும் வந்து சூழ்ந்து விடாதென்பதை இப்போழ்தே நம் சகோதரர்கள் நன்கு அறிந்து கொள்தல் வேண்டும். பாழும் மதப்பேயால் மக்கள் கட்டுண்டு அழிந்தொழிந்தனரே யன்றி மதத்தை துணையாகக் கொண்டு யாரும் பிறருக்கு ஊறு செய்யாமல் முற்போக்கடைய முடியவே இல்லை.

இன்று நம் தாழ்ந்த மக்கள் கிறித்துவ மதத்தில் போய் சேருவதாயிருப்பினும் அங்கும் தீண்டாமை என்ற பேய் இவர்களைப் பீடித்து தாழ்த்தப்பட்ட கிருஸ்துவன் என்ற பெயரைத் தாங்கி, பழைய கொடுமைகளில் ஒன்றிரண்டு நீக்கப்பட்டு புதுக் கொடுமைகளை தாராளமாக ஏற்று வாழவேண்டிய நிர்பந்தம் ஏற்படுமே தவிர, தங்களின் மீது சுமத்தியிருக்கும் அருத்தமற்ற ஜாதிப் பாகுபாடுகளனைத்தும் ஒழிக்கப்பட்டுவிட்டதாக யாராலும் கருதப்பட மாட்டாதென்பதை யாராலும் மறுத்தற்கியலுமா? இது போலவே இந்து மதத்தை விடுத்து முஸ்லீம் மதத்தில் போய் சேருவதாயினும் ஆங்கு போய் சேர்ந்தற்கடையாளமாக பெயரை மாற்றி சுன்னத்துச் செய்து தலைமீது தொப்பி வைக்கும்படி கட்டளையிடுவார்களே தவிர, மற்றபடி தாழ்ந்த சகோதரர்களுக்கு குற்ற குறையக் களைய யாரும் முன் வர மாட்டார்களென்பது நாம் பிரத்தியட்க்ஷத்தில் கண்ட அனுபவமாகும்.

ஆனால் இந்து மதத்தில் ஜாதிப் பேயின் பேரால் அடிமைப்படுத்தி வைக்கப்பட்டதாகக் கருதியதற்கு மாறாக முஸ்லீம் மதத்தில் போய் சேர்ந்ததின் பிறகு தமது பெண்களை முக்காடிட்டு மூலையிலமரும்படியாகவும், தமது தலை மயிரை எடுத்து சிகப்பு நிறத் தொப்பி வைக்கும்படியாகவும், கட்டாயம் சுன்னத் செய்யும்படியாகவும், அராபிப்பாஷையைக் கற்று ஆகாயத்தை நோக்கி யாவெனப்பெரும் சத்தம் போடும்படியாகவும், நோன்பு விரதம் முதலிய வி­யங்களை அவசியம் கைக் கொண்டு மதத்திற்கு விரோதமான காரியங்களில் ஈடுபடாதிருக்கும்படியாகவும் கட்டளையிடுவார்களே தவிர, தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக வி­யத்திலோ, பொருளாதார வி­யத்திலோ யாதொருவிதமான நன்மையும் ஏற்பட்டுவிட முடியாதென்பதை யாராலும் மறுத்ததற்கு முடியுமா?

மேலும் வெளிப்படையாக உண்மையைக் கூற வேண்டுமானால், முஸ்லீம் மதத்திலும், ஜாதி வித்தியாசம் இல்லாமல் போகவில்லை. அவர்களிடம் பலவிதமான பிரிவுகள் மலிந்து கிடக்கக் காணலாம். அதிலும் புதிதாகப் போய் சேரும் நம் மக்களை பழைய மக்கள் தம் பந்துக் களாகக் கருதி பெண் எடுத்தல் கொடுத்தல் என்ற வழக்கத்திற்கு வர குறைந்தது இரண்டு மூன்று தலைமுறை யாவது செல்லுதல் வேண்டும். அதுவரைக்கும் புதிதாக முஸ்லீம் மதத்தில் போய்ச் சேர்ந்த மக்களை ஒரு விதமான அசிங்கப் பார்வையாகப் பார்த்து கருதி வருவார்களே தவிர, ஏற்கனவே அம் மதத்தில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வரும் மக்களைப் பாவிப்பது போல் புதிதாகப் போய்ச்சேரும் மக்களை கண்ணியமான முறையில் நடத்துவது கிடையாது என்பதை கேட்டு விசாரித்தறிந்தவர்கள் நன்கு அறிந்ததேயாகும்.

இது போலவேதான் பெளத்த, ஜைன, சீக்கிய பிற மதங்களும் தம் தம் கொள்கைகளைத் தாங்கி நிற்கின்றனவே தவிர, மக்களின் விடுதலைக்கேற்ற துறையில் அமைக்கப்படவில்லை என்பதை மலைமீது நின்று மார்தட்டிக் கூறவும் என் போன்ற சுயமரியாதைத் தோழர்கள் தயாராய் இருக்கின்றோம்.
ஆகையால் எமது தாழ்த்தப்பட்ட சகோதரர்களே! தோழர் அம்பத்காரவர்களே! நீங்களெல்லோரும் பிற மதத்தில் போந்து அம் மதத்திலுள்ள குறைபாடுகளையும் இடர்களையும் புதிதாக விலக்கி வாங்கி வாழ்வதை விட தனித்து நின்று பல கூட்டங்கள் கூடி, அக் கூட்டங்களிலே எங்களின் வாழ்க்கைக்குத் துணையாக எந்த மதமும் வேண்டவே வேண்டாம். இன்று முதல் நாங்கள் இந்து மத்திலிருந்து விலகிவிட்டோம். இப்பொல்லாத இந்து மதத்தின் கொடுமைகள் எங்களால் சகிக்க முடியவில்லை. அடிமைகள் போன்று இனி ஒரு நிமி­மும் யாங்கள் உயிருடன் வாழ ஒருப்படோம், ஒருப்படோம் எனும் பல தீர்மானங்களை ஆக்கி, ஆறு கோடி மக்களும் தனித்து நின்று ஒரு பெரும் சமூகமாய் புது உணர்ச்சியும் புத்துணர்வும் பெற்று மகிழ்வுடன் வாழ முயலுங்கள். உங்களின் புது உணர்ச்சியில் ஒத்துழைக்க, சுயமரியாதைத் தோழர்களும் சமதர்ம வீரர்களும் தங்களின் வாழ்க்கையை அர்ப்பணம் செய்யத் தயாராய் நிற்கின்றோம். மதத் தலைவர்களைக் கண்டு அஞ்சி நடுங்கும் காலம் ஒழிந்துவிட்டதென ஆங்காங்கே மாபெரும் கூட்டங்கள் கூட்டி கர்ஜனை செய்யுங்கள். விடுதலை வாங்கித் தருகின்றோம், ஜாதியை ஒழித்து விடுகின்றோம், இன்னும் கொஞ்சநாள் பொறுங்கள் என்று பொய் கூச்சல் போடும் தோழர் காந்தி போன்றவர்களின் வார்த்தைக்கட்கு செவி சாய்ப்பதை அடியோடு மறந்து விடுங்கள். எனது அருமை ஆதி இந்து தோழர்களே! நீங்கள் வைதீகர்களைக் கண்டு அஞ்சி விடாதீர்கள். வைதீகர்களின் வார்த்தையைக் கேட்டு ஏமாந்து விடாதீர்கள். வைதீகரும் இந்து மதமும் உலகில் உயிருடன் நிலவும் நாள் வரை உங்களின் மீது சுமத்தியிருக்கும் தீண்டாமைக் கொடுமையும் அடிமைத் தனமும் ஒரு போதும் உங்களை விட்டு அகலாதென்பதை உறுதியாக நம்புங்கள்.

இந்து மதத்தில் வாழும் வைதீகர்களுக்கு ஒரு வார்த்தை கூற விரும்புகிறேன். நீங்கள் இழைக்கும் கொடுமையைத் தாங்க இயலாது நாளடைவில் பிற மதம் புக்கி வரும் தாழ்த்தப்பட்ட சகோதரர்களின் குறைகளை நீக்க நீங்கள் என்னென்ன வேலைகள் செய்திருக்கிறீர்கள? தினந்தோறும் தங்கள் மதத்தில் தோன்றிய பல சகோதரர்களை பிற மதத்தினர்கட்குப் பலி கொடுத்து வருவதைக் கண்டு எத்தனை வைதீகர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டீர்கள்? இந்து மதத்திற்காகவே உயிர் வாழ்வதாக பெருமை பாராட்டிக் கொள்ளும் போலி வைதீகர்களே! உங்களின் வைதீகத் தன்மையும் இந்து மதமெனுமோர் பேயும் உயிருடன் இன்னும் கொஞ்ச நாளைக்கு வாழ வேண்டுமானால், தாழ்த்தப்பட்ட மக்களின் இன்னலை அடியுடன் களைந்தெறிய முன் வாருங்கள். தோழர் அம்பத்காரவர்களின் வார்த்தையை நன்கு ஆராய்நது பாருங்கள். வீண் வார்த்தைகளும், ஏமாற்றுந் தன்மைகளும், மூட நம்பிககைகளும் இனிமேல இவ்வுலகில் உயிருடன் வாழ இயலாதென்பதை நன்கு அறியுங்கள்.

ஆரியப் பார்ப்பனத் தோழர்களே! உங்களால் கட்டுவிக்கப்பட்ட மதமென்னும் கோட்டை இடிந்து கீழே விழப் போகிறது. ஆறு கோடி மக்களின் சார்பாக டாக்டர் அம்பத்காரவர்களால் உங்கட்கு இழவு ஓலை கொடுக்கப்பட்டாய் விட்டது. பாவம் உங்களின் தந்திரமும் கபடமும் உலகில் எவ்வளவு காலத்திற்குத்தான் நிலைத்து நிற்கும். 100-க்கு 97 மக்களை ஏமாற்றி வந்த நீங்கள் இனி எந்த வழியில் பார்ப்பனரல்லாத மக்களை ஏமாற்ற அடி கோலியுள்ளீர்கள் என்பதைப் பற்றி சிறிது விளக்கிக் கூற முன் வருவீர்களா? அல்லது உப்புக் கண்டம் தின்ற பாப்பாத்தி கதை போல, உங்களின் குட்டு வெளிப்பட்டு போனமைக்காக வருந்தி ஒரு மூலையில் உட்கார்ந்து முக்காடிட்டு பேசாது மெளனம் சாதிக்கப் போகின்றீர்களா? உண்மையை உரைக்குதும்.

எனதன்பார்ந்த தோழர் அம்பத்காரவர்களே! தாழ்த்தப்பட்ட சகோதரர்களே!  நீங்கள் உலகில் மனிதனாய் வாழ வேண்டுமானால், ஏமாற்றுக்காரர்களின் சூட்சியில் மறுபடியும் வீழ்ந்து விடாது உடனே கூட்டங்கள் கூடி இந்து மதத்தை விடுத்து வெளிவாருங்கள். உங்களது சமூகமாகிய ஆறுகோடி மக்களும் ஒரே முகமாய்த் திரும்பி தனித்து நின்று சமூக விடுதலையை நாடியும் பொருளாதார விடுதலையை நாடியும் ஒத்துழையுங்கள். இறுதியில் வெற்றி உங்கள் பக்கமே.

ஜாதி மதப் பூசல்களனைத்தும் தரணியில் ஒழிவதாகுக!
(குடிஅரசு 1935, நவம்பர் 17)


No comments: