Monday, February 21, 2022

உ.வே.சா. தமிழ்ப்பற்றும் சாதிப்பற்றும்

உ_வேசா.வின் தமிழ் மொழிப்பற்றும் சாதிப்பற்றும்!

திருச்சி வானொலி நிலையத்தில்

1941ஆம் ஆண்டு ‘எது தமிழ்?’ என்ற தலைப்பில் உ.வே.சா. அவர்களின் பேச்சு ஒலிபரப்பானது. இந்தப் பேச்சுக்கு முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் கண்டனம் தெரிவித்து துண்டறிக்கை வெளியிட்டார். 

அந்தத் துண்டறிக்கையில் 

கி.ஆ.பெ. குறிப்பிட்டுள்ள செய்தி :

👉 சோறு தின்கிறாயா? என்பது தமிழல்லவென்றும் போஜனம், நிவேதனம், பிக்ஷை ஆயிற்றா என்பதே தமிழ் மரபு என்றும் திரு. ஐயர் அவர்கள் கூறியது பெருவியப்பைத் தருகிறது. 

திரு. ஐயர் அவர்களின் இக்கூற்றிலிருந்து தமிழ் மொழியில் அவருக்குப் பற்று இல்லையென்பதும் வடமொழியில் பற்றுமிக்குளதென்பதும் வெளிப்படையாகப் புலப்படுகின்றன...

பழமையான தமிழ் நூல்களை வாழ்நாள் முழுவதும் தேடித்தேடிப் படித்து ஆராய்ந்து அழகுற வெளியிட்ட உ.வே.சா. அவர்கள் தமிழ் சொற்களை தமிழ் இல்லை என்று சொன்னது மட்டுமல்லாமல் வடமொழி சொற்களைத் தமிழ் என்று சொல்வதைக்கண்டு கி.ஆ.பெ. அவர்கள் பதறிப் போனார். 

அவர் வெளியிட்ட துண்டறிக்கையில்,

உ.வே.சா. குறிப்பிட்டுள்ள வடமொழிசொற் களுக்கு இணையான தமிழ்ச்சொற்களையும் பட்டியலிட்டு, இதுவயது மூப்பால் வந்த ஞாபகமறதியாக இருக்கக்கூடும் என்பது போன்றும் குறிப்பிடுகிறார். 

அத்தோடு திருச்சி வானொலிக்கு ஒரு கோரிக்கையையும் வைக்கிறார் அவர் :

“அரசியலாரால் நடத்தப்படுகிற வானொலி நிலையத்தினர் திரு.ஐயர் அவர்களைப் போன்றவர்களுக்குக் கொடுக்கும் ‘சலுகை’களை மற்ற தமிழறிஞர்களுக்கும் கொடுத்து நடுநிலைமையைக் கையாள்வார்களென நம்புகிறேன்.

(K.A.P. விசுவநாதம், திருச்சி, இஸ்லாமியா பிரஸ், பாலக்கரை,திருச்சி.)

மறைந்த எழுத்தாளர் நாரண துரைக்கண்ணன் எழுதுகிறார் :

அப்போ எனக்குப் பதினாறு வயது. சென்னையில் ஒரு அச்சகத்தில் வேலை பார்த்தேன். 

உ.வே.சாமிநாத ஐயர் அந்த அச்சகத்தில் வந்து தனது நூல்களை அச்சுக்குக் கொடுப்பார். முதல் நாள் கொடுத்துவிட்டுப் போகும் கட்டுரையை, மறுநாள் வந்து புரூப் பார்த்து பிழை திருத்திக் கொடுத்து விட்டுப் போவார்.

எனக்கு அந்த வயசிலேயே மிகுந்த தமிழ் ஆர்வம். என் அச்சக உரிமையாளர் ஒரு ஐயங்கார்.  நான் அவரிடம், “உ.வே.சா விடம் தமிழ் கற்க விரும்புகிறேன். நீங்கள் சிபாரிசு செய்து என்னை அவரிடம் தமிழ்பாடம் கற்றுக் கொள்ளச் செய்ய வேண்டும்” என்றேன் “அதற்கென்னடா, தாராளமாகச் செய்கிறேன்!” என்றார் அவர்.

ஒரு நாள், உ.வே.சா பிழை திருத்தி விட்டுச் சென்ற புரூப்பை எடுத்துப் படித்தேன். அதில் இரண்டொருபிழை அப்படியே இருந்தது.

உ.வே.சா. கண்ணில் படவில்லை போலும். அந்தப் பிழையை நானே திருத்தினேன்.

மறுநாள், உ.வே.சா. வந்தார். பார்த்தார், “நான் கவனிக்காமல் விட்ட பிழையை யாரோ திருத்தி யிருக்கிறார்களே! பலே என்று பாராட்டினார். ஐயங்கார் என்னை அழைத்து, “இந்தச் சிறுவன் தான் திருத்தினான்” என்றார்.

உ.வே.சா. என்னைத் தட்டிக்கொடுத்தார். என் தமிழார்வத்தை விசாரித்து, பாராட்டினார். அப்போது ஐயங்கார், “இவன் உங்களிடம் தமிழ் கற்றுக் கொள்ள ஆர்வமாக இருக்கிறான். நேரம் கிடைக்கும் போது சொல்லுங்கள் வருவான் தமிழ் கற்றுக் கொள்ளட்டும்!” என்றார்.

உ.வே.சா. பதிலேதும் சொல்லவில்லை.  வேலை முடிந்து புறப்படும் போது ஐயங்காரை அச்சகத்திற்கு வெளியே அழைத்தார்.

இருவரும் சென்றனர்.

சற்று நேரத்தில் திரும்பி வந்த ஐயங்கார், கோபமாகத் கத்திக்கொண்டே வந்தார். “விடுடா! இந்த ஐயர் மட்டும் ஒரு அப்பிராமணன்  (அதாவது பிராமணர் அல்லாதவர்) மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் தமிழ் கற்றுக் கொள்ளலாம். ஆனால், இவர் மட்டும் ஒரு அப்பிராமணணுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்க மாட்டாராம்! என்னைத் தனியே கூப்பிட்ட, பிராமணப் பையனாக இருந்தால் தான்  தமிழ் சொல்லித் தருவேன்! என்கிறார். இவர் கிடக்கிறார். நான் உன்னை வேறு ஒருவரிடம் தமிழ் கற்க ஏற்பாடு செய்கிறேன்! கவலைப்படாதே !"என்றார்.  

தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்களின் 168 ஆவது பிறந்தநாள் இன்று.

தமிழ்த்தாத்தா உ.வே.சா. வாழ்க !

No comments: