Friday, February 25, 2022

தந்தை பெரியாரின் பார்பன எதிர்ப்பு


தந்தை பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு ஏன்? எதற்கு? எப்படி? - கி. வீரமணி - முதல் பதிப்பு பிப்ரவரி 2022 - பக்கங்கள் 216 - நன்கொடை ரூ 200/

●  பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு என்பது ரத்த ஆராய்ச்சி மூலம் உருவானது அல்ல ! அவர்தம் பண்பாடு பற்றிய அடிப்படையிலானது ! பெரியார் மீது பார்ப்பனர்களுக்குள்ள கோபம் என்பது அவரது கடவுள் மறுப்பு கொள்கைக்காக அல்ல ! அவரது சமூகநீதி கொள்கைக்காக ! அவரது ஜாதி ஒழிப்பு கொள்கைக்காக ! அவரது ஆதிக்க ஒழிப்பு கொள்கைக்காக ! 

●  இந்த விவரங்களை இன்றைய இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் மீண்டும் நினைவூட்ட, ஆசிரியர் கி. வீரமணி அய்யாவின் கைவண்ணத்தில் விரிவான தகவல்களோடு வெளியான புதிய படைப்பு - இந்த நூல் !

●  ஒரு நூற்றாண்டுக்கு முன்பாகவே, தமிழகத்தில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தையும், அரசியலையும், அநியாயங்களையும் நேருக்கு நேர் சந்தித்தவர் - பெரியார். அந்த வேளைகளில் எங்கு நோக்கினும் பார்ப்பன மயமும், பார்ப்பன மாயமும் தான் ! சூத்திர்களுக்கு ஹோட்டல்களில் அனுமதியில்லை ! தெருவில் நடக்க அனுமதியில்லை ! தண்ணீர் எடுக்க அனுமதியில்லை ! பள்ளியில் அனுமதியில்லை ! கோவில்களில் அனுமதியில்லை !

●  அங்கொன்றும் இங்கொன்றுமாக தமிழன் ஆட்சியிலோ, மந்திரியாகவோ இருந்தால் - ஒழுங்கான நிர்வாகம் இல்லை என்றும், தமிழர்கள் நீதிபதியாக இருந்தார்கள் என்றால் - நீதி கெட்டுப் போச்சு என்றும், தமிழர்கள் பதவிக்கு வந்தால் - நிர்வாகம் கெட்டுப் போச்சு என்றும், தமிழ் மாணவர்கள் படிக்க ஆரம்பித்தால் - படிப்பின் தரம் கெட்டுப் போச்சு என்றும், பார்ப்பனர்களும் பார்ப்பன பத்திரிக்கைகளும் பதறினார்கள் ! பரப்பினார்கள் ! 

பெரியார் இவைகளை கண்டு எதிர்க்க கிளம்பினார் !

●  பிராமணாள் சாப்பிடுமிடம் !

பிராமணாள் தங்குமிடம் !

பிராமணாளுக்கு மாத்திரம் !

இந்த அறிவுப்புகளை தினம் கண்டு 

பெரியார் கொண்டார் ஆத்திரம் !

●  வேதங்களும், மதகுருமார்களும் பார்ப்பனீயத்திற்கு துணையாக இருந்ததையும் பெரியார் ஆராய்ந்து பார்த்தார் !

ரிக்வேதம் - 62ம் பிரிவு - 10வது சுலோகம் - ' இந்த உலகம் கடவுளுக்கு கட்டுப்பட்டது | கடவுள் மந்திரங்களுக்கு கட்டுப்பட்டவர் | மந்திரங்கள் பிராமணர்களுக்கு கட்டுப்பட்டவை | எனவே பிராமணனே கடவுள் | அவனை தொழுவதே சரி | ' ...

●  பரமஹம்சர் என்று மதவாதிகளால் போற்றப்படும் ராமகிருஷ்ணர், தான் பூணூல் அணிவது பற்றி கூறியது - " பூணூல் என்பது அலங்காரச் சின்னம் ! நான் பிராமணன் ! எல்லோரையும் விட உயர்ந்தவன் என்பதின் சின்னம் ! "..என்று பூணூல் பெருமை பேசியவர். மனிதனை ஏற்றதாழ்வு கொண்டு பிரிப்பது இந்த ' பூணூல் ' என்பதை - அவாளும் அவாள் குருக்களும் இப்படியெல்லாம் பேசியிருக்கா ! இவைகளை கண்டு, வெறுப்போடு  உருவானது தான் பெரியாரின் - பார்ப்பன எதிர்ப்பு !

●  "  ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து வந்த வெள்ளைக்காரன், என்னோடு கைகுலுக்குகிறான் ! தொட்டுப் பேசுகிறான் ! ஆனால் அடுத்த தெருவில், வீட்டில் உள்ள பார்ப்பானோ என்னைப் பார்த்தால் தீட்டு, தொட்டால் தீட்டு என்கிறான் !

என்னிடம் கைகுலுக்கும் வெள்ளையன் அந்நியனா ? என்னைப் பார்த்தால் தீட்டு என்ற பார்ப்பான் அந்நியனா ? " ...என மண்டையில் சம்மட்டியை அடித்தது போல வினவினார் - பெரியார் ! 

●  சக்கரவர்த்தி ராஜாஜி முதல் சர்க்கரை பொங்கல் சாமிநாத அய்யர் வரை, எந்த பார்ப்பனரும் இது நாள் வரை இதற்கு பதில் தர தெம்பில்லை !

பிரம்மாவின் தலையில் 

பிறந்ததாக 

பிதற்றுவோரின் நிலை இதுவே !

●  பெரியார் - " பார்ப்பனர்களை அழிப்பதல்ல என் லட்சியம் ! பார்ப்பனீயத்தை அடியோடு ஒழிப்பதுதான் எனது முக்கியமான வேலை ! "..என்றார். 

பார்ப்பனர்களை எதிர்த்த பெரியார், ஒரு போதும் வன்முறையை தூண்டியதில்லை ! பெரியார் செய்தது ரத்தம் சிந்தா புரட்சி ! அமைதிப்புரட்சி ! மனித நேயமே அவரது இலக்காக இருந்தது. பெரியாருக்கு பல பார்ப்பன நண்பர்களும் இருந்தார்கள் !

●  எவரிடத்தும், எதைச் சொல்லியாகிலும், எதைச் செய்தாகிலும், யாரைக் காட்டி கொடுத்தாகிலும் தங்கள் இனம் சுகபோகிகளாக வாழ்வதில், கண்ணும் கருத்துமாக இருக்கும் ஒர் இனம் உலகில் உண்டென்றால், அது இந்த பார்ப்பன கும்பல் தான் என்பதை, தந்தை பெரியார் நூறு ஆண்டுக்கு முன்பே உணர்ந்து, அதற்கேற்றார் போல தனது கொள்கைகளையும் திட்டங்களையும் வகுத்தார், என ஆசிரியர் இந்த நூலில் வியந்தும் விவரித்தும் எழுதியுள்ளார் !

●  காந்தியாரும் பெரியாரும் சந்தித்து உரையாடிய சுவராஸ்யமான காட்சி ஒன்று :

பெல்காமில் 1924ல் இந்திய தேசிய காங்கிரசின் மாநாட்டுக்கு காந்தியார் தலைமை ! அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த பெரியார் அதில் பங்கேற்றார். பின்பு காந்தியாரை சந்தித்து, உரையாட வாய்ப்பு கிடைக்கிறது. காந்தியாரிடம் தமிழகத்தில் பார்ப்பனர்களின் ஆதிக்க அட்டூழியங்கள் பற்றி எடுத்து சொல்கிறார் ! அதன் பின்னர் நடந்த காந்தியார் - பெரியார் உரையாடல் :

●  காந்தியார் - நல்ல பார்ப்பனர்களே உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா ?

●  பெரியார் - என் கண்களுக்கு தெரியவில்லை ! உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் !

●  காந்தியார் - கோபால கிருஷ்ண கோகலே !

●  பெரியார் - மகாத்மாவாகிய உங்கள் கண்களுக்கே ஒரே ஒருவர் மட்டும் தான் தென்படுகின்றார் ! நானோ சாதாரண ஆத்மா ! என் கண்களுக்கு எப்படித் தெரியும் ? என்றாராம். 

●  காந்தியார் தனது வாழ்நாள் முழுவதும்  இப்படி ஒரு கேள்வியையும், இப்படி ஒரு தலைவனையும் சந்திக்கவே இல்லை !

●  பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு -  அவர் காங்கிரசில் செயலாளராக இருந்த போது, சேரன்மாதேவி குருகுல சமபந்தி போஜன ( 1923 - 23 ) விவகாரமாகட்டும்; ராஜாஜி முதலமைச்சராக இருந்த போது கொண்டு வந்த குலக்கல்வி திட்ட எதிர்ப்பு ( 1952 - 54 ) போராட்டமாகட்டும்; தமிழகமெங்கும் நடைபெற்ற பிராமணாள் ஹோட்டல் பெயர் விவகாரத்தினால், சென்னை ' முரளி கபே ' ( 1957 - 58 ) மறியல் போராட்டமாகட்டும் -  இவை அனைத்திலும் பெரியாரே முன்னின்று நடத்தி அதில் வெற்றியும் கண்டார் ! 

●  இந்த பார்ப்பன எதிர்ப்பு  போராட்டங்களின் பயனாகத்தான், இந்த ஆதிக்க சக்திகளுக்கு எதிரான போராட்டங்களின் பயனாகத்தான்,  இன்றைய தமிழகத்தை - பெரியார் மண் என்கிறோம் !

●  ஆசிரியர் கி. வீரமணி அய்யாவின் இந்த புதிய படைப்பு -

நேற்றைய தொண்டர்களுக்கும்,

இன்றைய மாணவர்களுக்கும்,

நாளைய தலைவர்களுக்கும் பயனாகவும் பாடமாகவும் இருக்கும் !


பொ. நாகராஜன். சென்னை. 25.02.2022.

********************************************

No comments: