Sunday, October 15, 2023

எம்.ஜி.ஆர். நீக்கப்பட்ட வரலாறு- தராசு ஷ்யாம்

தமிழகத்தின் இரு பெரும் திராவிடக் கட்சிகளில் ஒன்றான அ. இ. அ. தி. மு. க.வின்  பொன்விழா துவக்கம் 2021 அக்டோபர் 17. 

அதன் அரை நூற்றாண்டு கால திசை வழிப் பயணம் என்ன? இனி அதன் போக்கு எப்படி அமையும்? 

அண்ணா திமுக பிறந்த 1972 அக்டோபர் 17ஆம் தேதிக்கு முந்தைய அரசியல் களம் படு சூடு.  தமிழக சட்ட மன்றத்தைக் கலைத்து 1971 பார்லிமென்ட் தேர்தலுடன் முன்கூட்டியே களம் கண்டார்  திமுக தலைவர் கலைஞர்.  அவர் சென்னையிலிருந்து தெற்கு நோக்கிப் புறப்பட்டுப் பரப்புரையில் ஈடுபட்டார்.  பொருளாளர் எம்ஜிஆர் தென்திசையில் இருந்து புறப்பட்டு வடதிசை நோக்கித் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்தார்.  திட்டமிடலும் ஒருங்கிணைப்பும் அந்த அளவுக்குத் துல்லியம். 

இந்திரா காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், பிரஜா சோஷலிஸ்ட், முஸ்லிம்லீக், போன்றவை திமுக கூட்டணி.  கட்சி வேட்பாளர்கள் நிறைய பேருக்கு எம்ஜிஆர் நிதி உதவியும் செய்தார். அவர்கள் பரப்புரை மேடைகளிலும் பேசினார். பிரசாரம்  முடிந்ததும்  "இதயவீணை" படப்பிடிப்புக்காக அவர் காஷ்மீர் சென்றார் 

மார்ச் மாதம் நடந்த 1971 தேர்தலில் திமுக மகத்தான வெற்றி அடைந்தது. அதன் கூட்டணிக்கு மொத்தம் 205  தொகுதிகள் கிடைத்தன. 203 தொகுதிகளில் களம் கண்ட திமுக தனியாக 184 இடங்களில் வென்றது. 

தேர்தல் முடிவுகள் வெளிவரத் துவங்கியதும், எம்ஜிஆர் காஷ்மீரில் இருந்து தனி விமானத்தில் சென்னை திரும்பினார்.  திமுகவின் அமோக வெற்றிக்கு காரணம் யார் என்று பத்திரிகைகள் அலசத் துவங்கின 

எம்ஜிஆர் மந்திரி பதவி கேட்டதாகவும் படங்களில் நடிப்பதை நிறுத்தினால் அவரை அமைச்சராக்குவதாகக்  கலைஞர் சொன்னதாகவும்   சில பத்திரிகைகள் யூகச் செய்தி வெளியிட்டன. திமுகவின் அமோக வெற்றிக்கு எம்ஜிஆர் தான் காரணம் என்று  வேறு சில பத்திரிகைகள் எழுதின. 

சட்டமன்றத் தேர்தலில் இந்திரா காங்கிரசுக்கு ஒரு இடம் கூட தரப்படவில்லை.  9 எம். பி. தொகுதிகள் மட்டுமே தரப்பட்டன.  எனவே காங்கிரஸ் கட்சியிலும் அதிருப்தி இருந்தது. எம்ஜிஆருக்கு வருமானவரி வழக்குகள் இருந்தன என்றும் அவற்றைப் பயன்படுத்தி இந்திராகாந்தி எம்ஜிஆரைப் பிரித்துத் திமுகவைப் பலவீனப்படுத்த  முயற்சிக்கிறார் என்றும் பத்திரிகைகள் எழுதத் தொடங்கின 

எம்ஜிஆருக்கு வரி பாக்கி என்ற செய்தியைப் படித்த  எம்ஜிஆர் ரசிகர்கள் அவருக்குப்  பணம் அனுப்பத் துவங்கினார்கள் 1972 மார்ச் 3ஆம் தேதி திண்டிவனத்திலிருந்து ஷெரீப் என்ற எம்ஜிஆர் மன்றத் தலைவர் 40 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தன் வீட்டை விற்று பணத்தைக் கொடுப்பதாகக்  கடிதம் எழுதினார்.  ஒவ்வொரு மன்றமும் 100, 200 என்று பணம் அனுப்பத்  துவங்கின.  அவையெல்லாம் பத்திரிகைச் செய்திகளாக மாறின. எம்ஜிஆருக்கு இவ்வளவு பெரிய ஆதரவா என்ற விவாதம் எழுந்தது. 

மத்திய அரசு தமிழகத்துக்குப் போதிய நிதி வழங்குவதில்லை என்று சொல்லி  25 ஆண்டுகளாகத் தமிழகத்தில் அமலில் இருந்த மதுவிலக்குச் சட்டத்தை நீக்க முடிவெடுத்தார் கலைஞர். அன்றைய தி.மு.க. அரசுஆகஸ்ட் 30, 1971-ல் மதுவிலக்கு ஒழிப்பை நடைமுறைப்படுத்தியது.  

தமிழகமெங்கும் தனியார் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. ராஜாஜி, காமராஜர் போன்ற தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 1971 செப்டம்பர் 15ல் (அண்ணா பிறந்தநாள்)சத்யா ஸ்டூடியோ பணியாளர்களை அழைத்துக்கொண்டு அண்ணா நினைவிடத்துக்குச் சென்று  மது ஒழிப்புக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக்கொண்டார் எம்.ஜி.ஆர். கலைஞருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே பனிப்போர் என்று பத்திரிகைகள் எழுதத் துவங்கின.  

அப்போது 1972 மதுரையில் ஆகஸ்ட் 5 6 ஆகிய தேதிகளில் திமுக மாநாடு நடந்தது. மாநாடு முதல்நாள் நிகழ்ச்சியில் திமுக கொடியுடன் எம்ஜிஆர் ஊர்வலத்தில் வருவார். அதைப் பார்க்க  ஏராளமான ரசிகர்கள் காத்திருப்பார்கள்.  

ஆனால் அந்த மாநாட்டில் மு. க. முத்து திமுக கொடியுடன் யானைமீது வந்தார். அது எம்ஜிஆர் மன்றத்தினர் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியது. மாநாட்டில்  எம்ஜிஆர் பேசி முடித்ததும், அவர்கள் கலைந்து சென்றனர் அது கலைஞர் மனதில் காயத்தை ஏற்படுத்தியது

எம்ஜிஆர் மன்றங்களுக்கு இடைஞ்சல் தரப்படுவதாகவும்,  அவற்றைக்  கலைத்துவிட்டு மு. க. முத்து மன்றம்  துவங்க வற்புறுத்தல் இருப்பதாகவும் எம்ஜிஆர் மன்றத்தினர் புகார் தெரிவிக்கத்  துவங்கினர் எம்ஜிஆருக்கும் கலைஞருக்கும் மன விரிசல் என்று பத்திரிகைகள்  செய்தி வெளியிட்டன. 

அப்போது 1972 செப்டம்பர் மாதம் 15ஆம் நாள் அண்ணா பிறந்தநாள் எம்ஜிஆர் தொகுதியான ஆலந்தூரில் கொண்டாடப்பட்டது.  பேராசிரியர் அன்பழகன் தலைமை.  "மலர் இருந்தால் தான் நார்  மணக்கும்.  நாங்கள் நார்.  நீங்கள் மலர்" என்று எம்ஜிஆரை அவர் புகழ்ந்தார்.  "அண்ணா பாதையிலிருந்து திமுக தடம் மாறிச் செல்வதை அறிந்து நான் வேதனை அடைகிறேன்." என்றார் மக்கள்திலகம். 

இதெல்லாம் கட்சிக்குள் பிரச்னைகளை ஏற்படுத்தியது.  "பொருளாளர் என்ற முறையில் கட்சியின் வரவு செலவுக் கணக்கை ஆய்வு செய்ய வேண்டும்" என்று எம்ஜிஆர் கடிதம் அனுப்பினார்.  "திமுக நிர்வாகப்  பொறுப்பில் இருக்கின்ற அனைவரும் சொத்துக் கணக்கைச்  சமர்ப்பிக்க வேண்டும்"  என்றும் அவர் கூறினார். அது கொதிப்பை மேலும் கூட்டியது. 

இத்தகைய சூழலில் அக்டோபர் முதல் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யா திருமண மண்டபத்தில் (இப்போது அதிமுக தலைமைக் கழகம் அமைந்துள்ள இடம்) சென்னை-செங்கை  மாவட்ட எம்ஜிஆர் மன்ற கூட்டம் நடைபெற்றது.  சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தெய்வசிகாமணி, சிவராமன், அன்றைய சென்னை மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் கல்யாணசுந்தரம் ஏற்பாடு. 

எம்ஜிஆர் மன்றத்திற்கான தனிக்கொடி அங்கீகாரம் தான் கூட்டத்தின் நோக்கம். ஆனால்  மக்கள் திலகம் தன் பேச்சில், " நமது கொடி கழகத்தின் இரு வர்ணக் கொடி தான்.  தாய்க்கழகம் வேண்டுமா, சேய் மன்றம் வேண்டுமா என்று கேட்டால் தாய்க்கழகம் தான் வேண்டும் என்பேன். ஒரு தாய் எத்தனை குழந்தைகளை வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்." என்று பேசினார் . எவ்வளவோ வற்புறுத்தியும் தனிக்கொடிக்கு எம்ஜிஆர் சம்மதிக்கவில்லை. 

பின்னணியில் அன்றைய புதுச்சேரி முதல்வர் பரூக் மரைக்காயரின்  சமாதான முயற்சி இருந்தது. அவர் ராமாவரம் தோட்டத்திற்கு நேரில் சென்று கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் சமாதான முயற்சியில் ஈடுபட்டார். " திமுகவில் சமாதானம் ஏற்படுகிறது"  என்று பத்திரிகைகள் எழுதின.  ஆனால் அது நடக்கவில்லை. 

அக்டோபர் முதல் தேதி இப்படிப்பட்ட மனநிலையில் இருந்த மக்கள் திலகம் 16 நாட்களில் தனிக் கட்சி கண்டார்.  தனிக்கொடி கண்டார்.  184 இடங்களைப் பெற்று அசைக்க முடியாத ஆளுங்கட்சியாக இருந்த திமுக சுமார் 16 மாதங்களில் பிளவைச் சந்தித்தது.  எப்படி நடந்தது இந்த வேதியியல் மாற்றம்?

அக்டோபர் மாதம் 10ஆம் தேதி சத்யா ஸ்டூடியோவில் "நேற்று- இன்று-நாளை" படப்பிடிப்பு.  மக்கள்திலகம் அதில் இருந்தார். ஆனால் அன்று திமுக செயற்குழு. அதற்குப் பொருளாளர் எம். ஜி. ஆருக்கு அழைப்பு இல்லை. 

திடீரென்று "தி ஹிண்டு"  ஆங்கிலப் பத்திரிகையின் தலைமை நிருபர் கிருஷ்ணசாமி ராமாவரம் தோட்டத்திற்குப்  போன் பேசினார்.  "தி. மு. க,  செயற்குழுவில் மக்கள் திலகத்தை பொருளாளர் பதவியில் இருந்தும் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் சஸ்பெண்ட் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது"  என்ற செய்தியை அவர்தான் முதலில் கூறினார்.  

அதற்கு எம்ஜிஆரின் பதில் என்ன என்று தெரிந்து கொள்ள இந்து பத்திரிக்கை விரும்பியது.  சத்யா அரங்கத்தில் மக்கள் திலகம் சாப்பிட மற்றும் இளைப்பாற தனி அறையும், தனித் தொலைபேசியும்  உண்டு.   எம். ஜி. ஆர்.  தான் அந்தப் போனை எடுப்பார்.  

அந்தத்   தொலைபேசியில் தொடர்புகொண்டு திமுகவிலிருந்து எம். ஜி. ஆர். நீக்கப்பட்ட விஷயம் பற்றிச் சொல்லப்பட்டது.  ஆனால் அவர் சத்தமாகச் சிரித்தார்.  "இந்து பத்திரிக்கையில் பதில் கேட்கிறார்கள்"  என்று அவரிடம் கூறியிருக்கிறார்கள்.  

"நான் பாயாசம் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறேன் என்று சொல்"

இதுதான் எம். ஜி. ஆரின் பதில். அக்டோபர் 11-ஆம் தேதி "தி ஹிண்டு" இதை அப்படியே பிரசுரித்தது.  பாயாசம் என்பது தான் அரசியல் குறியீடு. எம்ஜிஆர்  குறியீடுகளின் குரு. 

அக்டோபர் 11-ஆம் தேதி பெரியார் கலைஞரிடம் பேசினார்.  எம்ஜிஆர் பெரியாரை போய்ப் பார்த்தார்.  அவரது அறிவுரைப்படி மறுநாள் அக்டோபர் 12   நாஞ்சில் மனோகரனும், முரசொலி மாறனும்  எம்ஜிஆரைச்   சந்தித்துப் பேசினார்கள்.  பின்னாட்களில் நாஞ்சிலார் பழைய சம்பவங்களைப் பற்றி என்னிடம் அசை போடுவார்.  

எந்த முயற்சியும் பலன்அளிக்கவில்லை. 1972 அக்டோபர் 14ஆம் தேதி எம்.ஜி.ஆர் தி.மு.க-விலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். அக்டோபர் 16ஆம் தேதி, எம்.ஜி.ஆரின் தீவிர ஆதரவாளரான உடுமலைப்பேட்டை இஸ்மாயில் என்பவர் தீக்குளித்து உயிர்நீத்தயார்.  

ஏராளமான எம்ஜிஆர் மன்றத்தினர் தாக்கப்பட்டார்கள்.  திமுக அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர். எம்ஜிஆர் மன்றத்தின் தலைமைப்  பொறுப்பில் இருந்த முசிறிப் புத்தன், ஓமப்பொடி பிரசாத் உள்ளிட்ட ஏராளமான மன்றத்தினர் ரத்தம் சொட்டச்  சொட்ட ராமாவரம் தோட்டத்திற்கு வந்தார். எம். ஜி. ஆர். மன்றக் கிளைகளைக் கலைக்கச் சொல்லிக் காவல்துறையே நெருக்கடி கொடுத்த சம்பவங்களும் நடந்தன.  

இந்த நிகழ்வுகள் எல்லாம்  எம்ஜிஆர் மனதை மாற்றின.   அக்டோபர் 17ஆம் தேதி அதிமுக உதயமானது. தொண்டர்கள்  தலைவருக்கு அழுத்தம் கொடுத்து உருவாக்கிய கட்சி அதிமுக என்று  வரலாறு அதனால் தான் குறித்து வைத்திருக்கிறது. 

கலைஞர், எம். ஜி. ஆர். ஆகிய இரு தலைவர்களுமே பெரிய ஆளுமைகள். தத்தம் தனித் திறமைகளால் மக்கள் மனங்களை வென்றவர்கள். அறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு திமுக பிளவுபட்டுவிடாமல் காப்பாற்றியதில் இருவருக்குமே சம பங்கு உண்டு. 

அரை நூற்றாண்டுக்குப் பிறகு பெரிய தலைவர்களின் அந்தக் கால அரசியல் நகர்வுகளை விமர்சனம் செய்வது பொருத்தம் அல்ல. ஆனாலும் அதிமுகவின் பொன்விழா துவங்கும் நேரத்தில் இந்த வரலாற்றுச் சம்பவங்களை நினைவு கூர்ந்தால் தான் தமிழகத்தின் அடிப்படை அரசியலைப் புரிந்து கொள்ளமுடியும். 

அதிமுகவின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா 1998 ல் கொண்டாடப்பட்டது.  அதற்கான மலரைத் தயாரிக்கும் பொறுப்பை மறைந்த ஜெயலலிதா ஒரு பத்திரிகையாளானாக எனக்கு வழங்கினார். 

இன்னொரு மலர்க் கமிட்டி நாவலர் நெடுஞ்செழியன்  தலைமையில் இயங்கியது. எனவே நான் தயங்கினேன்.   ஆனால் ஜெயலலிதா கொடுத்த உற்சாகத்தால் மலரைத் தயாரித்தேன். திருநெல்வேலியில் மாபெரும் ஊர்வலம். மறுநாள் வெள்ளிவிழாக் கண்காட்சி. மலரை  நாவலர் நெடுஞ்செழியன் வெளியிட்டார். ஜெயலலிதா பெற்றுக்கொண்டார். 

எதற்காக இதைக் குறிப்பிடுகிறேன் என்றால் எம். ஜி. ஆர், ஜெயலலிதா போன்ற அதிமுகவின் மாபெரும் தலைவர்கள் அந்த அளவுக்கு பல்வேறு திறமைகளை அடையாளப்படுத்தினார்கள். இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள். கலைஞர் முதல்வராக இருக்கும்போது அதிகாலையிலேயே தினத்தாள்களைப் படித்துவிட்டு நேரடியாகப் பத்திரிக்கையாளர்களோடு போனில் பேசுவார். என்னோடும் அவ்வாறு தொடர்பு கொண்டு தகவல் கேட்டிருக்கிறார். 

அதிமுகவின் இன்னொரு சிறப்பு அம்சம், கட்சியின் தலைமை (பொதுச் செயலாளர்) அடிப்படைத் தொண்டர்களால் தான் முடிவு செய்யப்படவேண்டும் என்ற விதி. அதை மாற்றவே முடியாது என்று ஜெயலலிதா பின்னர் சிறப்புச் சேர்த்து வைத்திருந்தார். 

அதற்கும் காரணங்கள் உண்டு. கட்சியின் பொதுக்குழு கபளீகரம் செய்யப்பட்டுவிட்டால் தன்னை நம்பி வந்த தொண்டர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று எண்ணினார் எம். ஜி. ஆர். அவர்களுக்குப் பாதுகாப்புத் தர அவர் விரும்பினார். அவரது எண்ணத்திற்கு வலுச் சேர்ப்பது போல 1975ல் ஒரு சம்பவம் நடந்தது. 

அப்போது சிதம்பரத்தில் அதிமுக பொதுக்குழு-செயற்குழு கூடியது. எம். ஜி. ஆரைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கச் சிலர் முயற்சித்தனர். அதற்குப் பொதுக்குழு-செயற்குழுவில் தீர்மானம் கொண்டுவரப் போவதாகப் பயங்கரமான செய்திகள் அடிபட்டன.  முசிறிப்புத்தான், அய்யம்பேட்டை அஜீஸ், ஷாகுல் ஹமீது, கோவை மருதாச்சலம் உள்ளிட்ட எம். ஜி. ஆர். மன்றத்தினர் முறியடி முயற்சிகளில் இறங்கினார்கள். 

அதிமுகவைப் பிளவுபடுத்தும் முயற்சிகளை முளையிலேயே கிள்ள  முடிவெடுத்தார் எம். ஜி. ஆர். கட்சியின் அமைப்புச் சட்டம் விதி எண் 20 பலப்படுத்தப்பட்டது. அதன்படி கட்சியின் பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். பொதுக்குழுவுக்கு அந்த அதிகாரம் கிடையாது.  திருத்தப்பட்ட அதிமுக அமைப்புச் சட்டம் 1976 நவம்பர் முதல் அமலுக்கு வந்தது. 

சுருக்கமாகச் சொன்னால் அதிமுக அமைப்புச்சட்டத்தின்படி கொடி பிடிக்கும் தொண்டனே முடிவெடுப்பவன். அதுவே கட்சியின் அடிப்படை. எம். ஜி. ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் அபிலாஷை.  இந்த அடிப்படை மாற்றவியலாதது. (BASIC STRUCTURE) ஆனால் இன்றைய அதிமுகவில் அந்த அடிப்படை தகர்க்கப்பட்டு விட்டது.  ஒருங்கிணைப்பாளர் (ஓபிஎஸ்)இணை ஒருங்கிணைப்பாளர் (எடப்பாடி பழனிச்சாமி) போன்றோர் கட்சியின் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இது குறித்த சிவில் வழக்கு நிலுவையில் உள்ளது. 

அதிமுக, திமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளின் பலம் என்பது அவற்றின் தொண்டர்கள் தான். அதிமுகவின் ஆளுமை இரட்டை இலையும் வசீகரம் மிக்க தலைவர்களான எம். ஜி. ஆரும் ஜெயலலிதாவும் கஷ்டப்பட்டு உருவாக்கி வைத்துள்ள வாக்குவங்கியும் தான் அதிமுக. அதைத் தக்க வைத்துக் கொள்ள ஒற்றுமை அவசியம். வாக்கு அரசியலில் அரவணைப்பு முக்கியம். 

பொன்விழாக் கொண்டாடும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு நமது நல் வாழ்த்துகள்.

No comments: