Friday, December 27, 2024

பெரியார், அம்பேத்கர் படங்களை நாடாளுமன்ற மைய மண்டபத்தில் திறக்க வைகோ வலியுறுத்தல்

அண்ணல் அம்பேத்கர் படத்தையும் தந்தை பெரியார் படத்தையும் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் திறக்க வலியுறுத்தி வைகோ 1985 இல் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை.....

*சாதியை ஒழித்தாலொழிய தாழ்த்தப்பட்டோருக்கு விடிவு இல்லை!*

இங்கே அறிவார்ந்த நண்பர்கள் நிகழ்த்திய உரைகளை நான் மிக உன்னிப்பாகக் கவனித்து வந்தேன். எனது நண்பர் திரு. கல்பநாத் ராய் போல சிலர் பேசுகையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் மற்றும் பழங்குடிப் பிரிவினருக்கும் இழைக்கப்படும் அநீதிகள் குறித்து இடி முழக்கமிட்டனர். பலர் பல யோசனைகளைத் தெரிவித்தனர்.

சிலருக்கு வேலைகள் கொடுப்பதன் மூலமோ சிலருக்கு சில சலுகைகளை அளிப்பதன் மூலமோ சில பதவிகளை நிரப்புவதன் மூலமோ இந்தப் பிரச்சனையை தீர்த்து வைத்து விட முடியுமா? பல நூற்றாண்டு காலமாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்டுவந்துள்ள கேடுகளை, அவ மதிப்புகளை, இழிவூட்டங்களை, களைந்தெறிந்து விடமுடியுமா ? முடியாது அய்யா முடியாது!

இதனால் எல்லாம் இந்த மக்களை தற்போதைய நிலையிலிருந்து உயர்த்தி விட முடியுமா? அல்லது நமது சமூகத்திலிருந்து வரும் இந்தச் சாபக் கேட்டை அகற்றிவிட முடியுமா? முடியாது. 

ஏனெனில் நமது முறையில் அதாவது சாதிஅமைப்பு ஆழ வேரூன்றியுள்ளது. நமது சாதி அமைப்பு முறையின் அடித்தளமே அதுதான். இந்த அஸ்திவாரத்தின் மீதுதான் இந்து சமூகம், சொல்லப் போனால் இந்திய சமூகமே எழுப்பப்பட்டுள்ளது. இந்த கொடிய அமைப்பின் இந்த அஸ்தி வாரத்தை தகர்த்து அழித்து ஒழிக்கும் நாள் வந்தால் ஒழிய இந்தத் துர்ப் பாக்கியசாலிகளுக்கு விடிவு ஒருக்காலும் ஏற்படாது. நம்முடைய இரத்தத்திலே சாதி உணர்வு ஊறிப் போயிருக்கிறது. 

எந்த ஒரு இந்தியனையும் சுரண்டிப்பாருங்கள்; அங்கு சாதி உணர்வை காண முடியும். இதுதான் அடிப்படையான பிரச்சனையாகும். வரலாற்றை விரிக்கப்புகின் எனது சகாக்கள் என்னை மன்னித்தருள வேண்டும். கைபர் கணவாய், போலன் கணவாய் வழியாக ஆரியர்கள் அடி எடுத்து வைத்த பிறகே இந்த சச்சரவு சமூகத்திற்குள் ஊடுருவியது.

எனது நண்பர் திரு. தரம்சந்தர் பிரசாந்த் ரிக் வேதத்திலிருந்தும், மற்ற வேதங்களிலிருந்தும். மேற்கோள்கள் காட்டினார். ஆனால் இந்த சதுர்வர்ணத்தையும் வர்ணாசிரம முறையையும் தோற்றுவித்தவையே இந்த நான்கு வேதங்கள்தான். சாதி அமைப்பு முறைக்கு சட்ட சம்மதம் வழங்கியதும் இதுவே.

சிருஷ்டி கர்த்தாவின் வாயிலிருந்து தோன்றியவன் பிராமணன்; கைகளி லிருந்து தோன்றியவன் சத்திரியன்; தொடைகளிலிருந்து தோன்றியவன் வைசியன். பாதத்திலிருந்து தோன்றியவன் சூத்திரன் என்றுதான் ரிக்வேதம் சொல்கிறது. ஆனால் எனது நண்பரோ ரிக்வேதத்தின்படி தீண்டாமையே கிடையாது என்கிறார்.

*சூத்திரர் யார்?*

அய்யா, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் எழுதிய நூல் ஒன்று இதோ என் கையில் உள்ளது. அந்த நூலின் தலைப்பு ‘சூத்திரர்கள் யார்?’ என்பதாகும். விஷ்ணு சுருதியிலிருந்து அவர் இந்த மேற்கோளை காட்டுகிறார்.

உயர்சாதிக்காரன் ஒருவனுக்கு கீழ் சாதிக்காரன் ஒருவன் தன்னுடைய எந்த உறுப்பினால் துன்பம் விளைவிக்கிறானோ அல்லது அவமதிப்பு இழைக்கிறானோ அந்த உறுப்பை அவன் இழக்கும்படி மன்னன் செய்வான்.

உயர் சாதிக்காரன் அமரும் அதே இருக்கையில் அவன் அமருவானாகில் அவனது பின்புறத்தில் சூடு போடவேண்டும்.

(உயர் சாதிக்காரன் மீது) அவன் காரித்துப்பினால் இரு உதடுகளையும் அவன் இழக்க வேண்டும்.

(உயர் சாதிக்காரன் மீது) அவன் காற்று பிரிந்தால் அவன் பின்புறத்தை இழக்க வேண்டும். 

அவன் வடமொழி பயன்படுத்தினால் நாக்கை இழக்க நேரிடும். இழி பிறவிக் காரன் ஒருவன் மிக உயர்சாதிக்காரன் ஒருவனுக்கு அவனது கடமை சம்மந்தமாக உத்தரவிட்டால் அவனது வாயில் கொதிக்கும் எண்ணையை ஊற்றுமாறு அரசன் ஆணையிடுவானாக.

சூத்திரன் ஒருவன் மேல் சாதிக்காரனின் பெயரையோ அல்லது சாதிப் பெயரையோ சொன்னால், 10 அங்குலம் நீளமுள்ள பழுக்கக் காய்ச்சிய இரும்பு ஊசியை அவன் வாயில் நுழைக்க வேண்டும்.

அது மேலும் கூறுவதாவது:

சூத்திரன் நான்காவது சாதியைச் சேர்ந்தவன். அந்தச் சாதிக்கு ஒரு பிறவி தான் உண்டு. அவன் உயர்சாதிக்காரனுக்கு பணி விடை புரியவேண்டும். அவர்களிடமிருந்து அவன் ஜீவனோ பாயத்தைப் பெறவேண்டும். 

அவர்கள் கழற்றி எறிந்த காலணி களையே அவன் பயன்படுத்த வேண்டும். அவர்கள் சாப்பிட்ட மிச்சத்தை அவன் பயன் படுத்த வேண்டும். 

இருபிறவியினனான ஒருவனை ஒரு சூத்திரன் வேண்டுமென்றே வைதாலோ அல்லது அடித்துத் தாக்கினாலோ அவன் எந்த உறுப்பை பயன் படுத்தி இந்த குற்றத்தை இழைக்கிறானோ அந்த உறுப்பை இழக்க வேண்டும்.

அமரும்போதோ அல்லது படுக்கும்போதோ, உரையாடும் போதோ அல்லது காலையிலோ அவன் இருபிறவியினனான ஒருவனுக்கு சமமான நிலையை மேற்கொண்டால் அவன் கசையடி பெறவேண்டும்.

இவர்கள்தான் சூத்திரர்கள்; இவைதான் வேதங்கள்; இதுதான் மனு-ஸ்மிருதி. திருமுறை நூல்கள் சாதி அமைப்பு முறைக்கு சட்ட சம்மதம் தருபவை இந்த வேதங்களும், இந்த ஸ்மிருதிகளும்தான். 

இவற்றை நாம் ஆழக்குழி தோண்டிப் புதைத்தாலொழிய, இவற்றை சுட் டெரித்தாலொழிய இந்த நாட்டில் ஒரு கலாச் சாரப் புரட்சி ஏற்பட்டாலொழிய இந்த தீமைகளை ஒரு போதும் களைந்தெறிய முடியாது. நமது சமூகத்தி லிருந்து இவற்றை ஒழிக்க முடியாது.

*மாவீரன் சிவாஜி முடிசூட்டு விழா*

இந்த சாதி அமைப்பு முறை மக்களை எந்த அளவுக்குப் பாதித்திருக்கிறது தனது போர்வாளின் வலிமையால் மாபெரும் முகலாய சாம்ராஜ்யத்தின் ஆவலாதிகளைத் தூள் தூளாகத் தகர்த் தெறிந்த வல்லமை படைத்த போர் வீரனான சத்ரபதி சிவாஜிக்கு என்ன நடந்தது என்பது ஒரு சுவையான அனுபவமாகும். சிவாஜி என்ற பெயரைக் கேட்டாலே, அவுரங்கசீப்புக்கு சிம்ம சொப்பனம். ஆனால் என்ன நடந்தது?

அவன் முடி சூட்டு விழா நடத்திக் கொள்ள விரும்பிய போது முதலில் அவன் அனுமதிக்கப்படவில்லை என்று அம்பேத்கர் கூறுகிறார். அவனுடைய அமைச்சர்களான பிராமணர்கள் கூட அதை ஆட்சேபித்தார்கள். ஆமாம் அவன் முடி சூட்டு விழா நடத்திக் கொள்ள விரும்பியது எதற்காக?

பின்வருமாறு கூறுகிறார்:

“செருக்கு உணர்வு மிகுந்தவர்களான தக்காணப் பிரபுக்கள் போர்க் களங்களில் சிவாஜியைப் பின்பற்றிப் போன போதிலுங்கூட, தனிப்பட்ட வாழ்க்கையில் அவனுக்கு முக்கியத்துவம் அளித்து சிறப்பிக்கத் தயாரா யில்லை. அரசாங்க விருந்து உபசாரங்களின் போது மொகைத்துகள், நிம்பல்கர்கள், சாவந்துகள், கோர்பாடேக்கள் ஆகியோருக்கு ஒதுக்கப் பட்ட இருக்கைகளைவிட, உயரமான இருக்கையில் ஒரு போஸ்லே அமருவது அவர்களுக்கு கிஞ்சித்தும் பிடிக்கவில்லை. எனவே சமூகத்தில் ஒரு உயர் அந்தஸ்து பெற வேண்டியே அவன் முடி சூட்டு விழா நடத்திக் கொள்ள விரும்பினான். ஆனால் அவனுக்கு ‘உபநயனம்’ ஆகவில்லை என்ற காரணத்திற்காக, அவன் பூணூல் தரிக்கவில்லை என்பதற்காக அவர்கள் இதை ஆட்சேபித்தார்கள்.

அவனுடைய வாளும் கேடயமும்தான் அவனுக்கு கீர்த்தியை ஈட்டித் தந்தன. பின்னர், அவன் காசியிலிருந்த காகபட்டர் என்ற வைதீகரை அழைத்துவர தூதுவர்களை அனுப்பி வைத்தான். அங்கிருந்து காகபட்டர் வரவழைக்கப்பட்டார். உயர் சாதிக்காரர்கள் மீது தங்கம் மழையென சொரியப்பட்டது. அவர்களது கால்களை அவன் கழுவியாக வேண்டியிருந்தது. அதற்குப் பிறகே முடிசூட்டுவிழா நடைபெற்றது. அதற்குப் பிறகுகூட தேர் மீது ஏறப்போகும் போது அவன் அனுமதிக்கப் படவில்லை".

இது நடந்த விஷயமாகும்.

*ஜெகஜீவன்ராமும், சிலை திறப்பும்*

சுதந்திரத்திற்குப் பிறகும் இதேதான் நடந்துள்ளது. மகாத்மா காந்தியின் சீடரும், பண்டிட் ஜவகர்லால் நேருவின் தோழருமான திரு. ஜகஜீவன்ராம், சம்பூர்ணானந்தின் சிலையைத் திறந்து வைத்தபோது நடந்தது என்ன? அவர் ஒரு பொத்தானைத்தான் அமுக்கினார். ஆனால் இதைக் கூட மேல் சாதிக் காரர்களால் சகித்துக் கொள்ளமுடியவில்லை. ஜீரணித்துக் கொள்ள முடிய வில்லை.

கல்பநாத்ராய் : இது முற்றிலும் தவறான குற்றச்சாட்டாகும்.நீங்கள் ஒரு தவறான குற்றச்சாட்டை சொல்கிறீர்கள்.

வை. கோபால்சாமி : இது ஒன்றும் தவறான குற்றச்சாட்டல்ல. கங்கையி லிருந்து தண்ணீர் கொண்டு வந்து அந்தச் சிலைமீது தெளித்திருக்கிறார்கள். இதுதான் வரலாறு. நடந்தது இதுதான். பத்திரிகைகளிலே இது ஆயிரம் தடவை வெளியாகியுள்ளது.

கல்பநாத்ராய்: பத்திரிகைச் செய்திகள் ஆதாரபூர்வமானவையல்ல. நீங்கள் இம்மாதிரி எல்லாம் சொல்லக் கூடாது.

வை. கோபால்சாமி : நடந்ததுதான் இது. இப்படிச் சொன்னது பற்றி கல்பநாத்ராய் உணர்ச்சி வசப்படுகிறார். ஒரு சிறிய கேள்வியை கேட்க விரும்புகிறேன்.

*தாழ்த்தப்பட்டவர்களை அர்ச்சகர் ஆக விட்டீர்களா?*

தாழ்த்தப்பட்ட பிரிவிலோ அல்லது பழங்குடிமக்கள் பிரிவிலோ பிறந்து விட்ட ஒருவன்  ஐ. ஏ.எஸ். அதிகாரி ஆகமுடியும்; ஒரு கலெக்டராக ஆக முடியும்; இராணுவ தளபதி ஆக முடியும். பிரதம மந்திரியாகவோ, அல்லது இந்தியக்குடியரசு தலைவராகவோ ஆகலாம். 

ஆனால் நான் கேட்கும் ஒரு சாதாரண கேள்வி என்ன வென்றால் அவன் அர்ச்சகனாகவோ, அல்லது புரோகிதனாகவோ ஆகமுடியுமா என்பதுதான். முடியாது. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் அல்லது பழங்குடிப் பிரிவினர்கூட ஒரு அர்ச்சகராக முடியும் என்று நாங்கள் சட்டம் நிறைவேற்றிய போது...

(கல்பநாத்ராய் குறுக்கிடுகிறார்)

கல்பநாத்ராய் அவர்களே, உங்களுக்கு ஒன்றும் தெரியாது...

கல்பநாத்ராய் : மக்கள் ஜகஜீவன்ராமின் பாதங்களைத் தொட்டு வணங்குகிறார்கள். அது குறித்து அவர் அக்கறை  காட்டுகிறார்.

வை. கோபால்சாமி: துணைத் தலைவர் அவர்களே! அவர் தமது அறியாமையைத்தான் வெளிபடுத்திக் கொள்கிறார்.

தாழ்த்தப்பட்ட மக்களும் பழங்குடிப்பிரிவு மக்களும் கூட அர்ச்சகர்கள் ஆகலாம் என்று நாங்கள் ஒரு சட்டத்தை நிறைவேற்றிய போது இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. உச்ச நீதிமன்றம் அந்தச் சட்டம் செல்லாது என்று சொல்லிவிட்டது. இம்மாதிரி நடந்துள்ளது.

'இந்தச் சட்டம் ஆகமங்களுக்கு முரணானதாகும் என்ற அடிப்படையில் உச்சநீதிமன்றம் இது செல்லத்தக்கதல்ல என்று கூறிவிட்டது' என்பதை எனது நண்பர் திரு. கல்பநாத்ராய்க்குத் தெரிவிக்கிறேன். 

எனவே அவன் கடவுளின் கர்ப்பக் கிருகத்துக்குள் நுழையமுடியாது. கடவுளை நெருங்க முடியாது. அதாவது சர்வ வல்லமை வாய்ந்த கடவுளுங்கூட தீண்டாமையை அனுசரிப்பதாக உச்ச நீதிமன்றம் கருதுகிறது. ஆகமங்களின்படி அவன் ஒரு அர்ச்சகனாக முடியாது.

துணை அவைத்தலைவர்: பூர்வோத்திரம் பற்றி நீங்கள் நீண்டநேரம் பேசி விட்டீர்கள் என்று நினைக்கிறேன். இனி நீங்கள் விஷயத்துக்கு வரலாம்.

வை. கோபால்சாமி : இது நமது சமுதாயத்தின் அடிப்படையான பிரச்சினையாகும். நாங்கள் முன்னோடிகளாக விளங்குகிறோம். தென்னிந்தியாவில் சூத்திரர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, இந்தப் பிரச்சினையை தாங்களே முன் வந்து எடுத்துக் கொண்டதால், டாக்டர் அம்பேத்கர் எங்களைப் பாராட்டினார்.

அவர்கள் ஒரு இயக்கத்தை தொடங்குகிறார்கள், ‘யாரும் உங்களை காப்பாற்ற வரமாட்டார்கள்’ என்று அவர் சொன்னார். ‘நீங்கள்தான் உங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்’ என்றார். அதைத்தான் தென் னிந்தியாவில் பின்பற்றி வருகிறோம்.

*சமுகநீதியின் மாபெரும் பாதுகாவலர் பெரியார்*

கல்பநாத்ராய் அவர்களே! உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? கேரளத்தைச் சேர்ந்த வைக்கத்தில் தெருக்களில், நடமாடக்கூட மக்கள் அனுமதிக்கப் படாத சமயத்தில் இந்நாட்டிலேயே சமூக நீதியின் மாபெரும் பாதுகாவல ரான பெரியார் அங்கு போக வேண்டியிருந்தது.

அப்போது அவர் ஒரு காங்கிரஸ்வாதி, ஒரு காங்கிரஸ் தலைவர். காந்திஜி தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம், பெரியார் ராமசாமியின் பங்களாவில் தங்குவது வழக்கம். ஆனால் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே சாதி தீமைகளைக் கண்ணுற்றபோது அதிர்ச்சியடைந்து காங்கிரஸில் இருந்து பெரியார் வெளியேறினார். அவர் வைக்கத்திற்குச் சென்றார்.

கல்பநாத்ராய் : அப்போது அவர் எந்தக் கட்சியில் சேர்ந்தார்?

வை. கோபால்சாமி: அவரே சொந்தமாக சுயமரியாதை இயக்கத்தைத் துவக்கினார். நாங்கள் முன்னோடிகளாக விளங்கினோம். அது எங்கள் மக்களின் இலட்சியக் கோட்பாடாகும்- (கல்பநாத்ராய் குறுக்கிடுகிறார்). 

கல்பநாத்ராய் அவர்களே; உங்களுக்கு வரலாறு தெரியாது; எதுவுமே தெரியாது. நீங்கள் வேண்டும் என்றே குறுக்கிடுகிறீர்கள். உங்களுக்கு அரசியல் தெரியாது......

கல்பநாத்ராய்: அய்யா, எனக்கு அரசியல் தெரியாது; வரலாறு தெரியாது என்று அவர் சொல்கிறார். அவருக்கு ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். பெரியாரின் மிகப் பெரிய சீடரான திரு. கருணாநிதியை தமிழ் நாட்டு மக்கள் ஒரேயடியாக நிராகரித்து விட்டிருக்கிறார்கள். இதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும்.

வை. கோபால்சாமி: தன்மானமுள்ள தமிழ்நாட்டு மக்களின் முடிசூடா மன்னர் கருணாநிதி. உங்களுடைய காங்கிரஸ், வரலாற்றின் குப்பைத் தொட்டியிலே வீசி எறியப்படும்.

பெரியார் தேர்தலில் போட்டியிடவில்லை. நான் பெரியாரைப் பற்றிச் சொல்லும் போது மக்களை பாதுகாப்பதற்காக பெரியார் வைக்கத்திற்குப் போக வேண்டியிருந்தது என்பது உங்களுக்குக் தெரியுமா? கேரளாவில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் அவருக்கு அழைப்பு விடுத்தார்கள்.

*இட ஒதுக்கீடு இன்றும் நீடிக்கப்படவேண்டும்*

இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக ஒரு வலுவான சக்தி செயல்பட்டு வருகிறது. அவர்கள் தகுதி திறமை பற்றி பேசுகிறார்கள். பொருளாதார தகுதி அடிப்படை பற்றி பேசுகிறார்கள். சில சுயநலசக்திகளால் தூண்டிவிடப் பட்ட சக்தி அது; நேற்று கூட குஜராத் மாநில அரசு இந்த சுயநலசக்திகளின் நிர்ப்பந்தங்களுக்கு பணிந்து விட்டிருக்கிறது. அவர்கள் தகுதி திறமை பற்றி பேசுகிறார்கள். பொருளாதார தகுதி - அடிப்படைப் பற்றி பேசுகிறார்கள்.

சில சாலைகளில் மேல்சாதிக்காரர்கள் மட்டுந்தான் போகலாம்; கீழ்சாதிக் காரர்கள்-சூத்திரர்கள் போகக் கூடாது என்பதாக, பல நூற்றாண்டு காலமாக ஒரு ஒதுக்கீடுமுறை இருந்து வந்திருக்கிறதே; அதை நாம் மறந்துவிட முடியுமா? பன்றிகளும் கழுதைகளும் கூட இந்த சாலைகளிலும் தெருக்களிலும் போகலாமாம்.

ஆனால் இந்த மக்களை மட்டும் நுழைய அனுமதிப்பதில்லை! அவை மேல் சாதிக்காரர்களுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தன. பல நூற்றாண்டு காலமாக அனுசரிக்கப்பட்டு வந்திருப்பது இந்த இட ஒதுக்கீடு கொள்கைதான். சமத்துவம் என்பது இருக்கவேண்டியதுதான். ஆனால் சமமாயிருப்பவர்களுக்கு இடையில்தான் சமத்துவம் இருக்க முடியும். பல நூற்றாண்டு காலமாக மக்கள் சமமாக நடத்தப்படவில்லை. அதனால்தான் இடஒதுக்கீடு கொள்கை நீடிக்க வேண்டும்.

அவைத் துணைத்தலைவர்: தயவுசெய்து பேச்சை முடித்துக் கொள்ளுங்கள்.

வை. கோபால்சாமி : இந்த கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்துவதன் மூலம் சாதி முறையின் சாபக்கேடுகளை களைந்தெறிந்து விடுவது சாத்தியம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இந்த அரசாங்கம் என்ன செய்து கொண்டி ருக்கிறது? இப்போது தொலைக்காட்சியில் பிரதமரைத் தான் முன்னிலை படுத்திக் காட்டிக்கொண்டிருக்கிறீர்கள். இந்த அரசாங்கத்தைத்தான் தொலைக் காட்சி, வானொலி முதலியவற்றில் முன்னிலை படுத்திக் காட்டி வருகிறீர்கள். நமது மக்கள் தொகையில் 75 பேர், இந்த பிரச்சார சாதனங்களின் செல்வாக்கிற்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

அப்படியிருக்கும் போது சாதி அமைப்பு முறையின் சாபக் கேடுகளை களைந் தெறிய, தொலைக் காட்சி, வானொலி முதலிய சாதனங்களில் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்; இது வரையில் எதுவும் செய்யவில்லை; இனி செய்யப் போவதுமில்லை.

சாதி அமைப்பு முறையில் உள்ள தீங்குகள் பற்றி போதிக்க, பாடத் திட்டத் தில் என்ன ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்? இதெல்லாம் செய்தாலொழிய, இந்த சாபக்கேட்டை உங்களால் ஒழிக்க முடியாது. சாதி அமைப்பு முறை அப்படிப்பட்டதாகும் என்பதால்தான் நான் இதைச் சொல்லுகிறேன். சமுதாயத்தில் விழிப்பு உணர்வை ஏற்படுத்தியாக வேண்டும்.

இந்த சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்த நீங்கள் இந்தப் பிரச்சார சாதனங்கள் மூலம் என்ன செய்திருக்கிறீர்கள்? ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் தொலைக்காட்சி மூலமும் வானொலி மூலமும் இந்த அரசாங்கத்தையும், இந்தப் பிரதமரையும் முன்னிலை படுத்திக்காட்டுவதுடன் மட்டும் நின்று விடுகிறீர்கள். சாதி அமைப்பு முறையிலுள்ள சாபக்கேடுகளை அகற்ற இந்தப் பிரச்சார சாதனங்கள் பயன் படுத்தப்படுவதில்லை.

அவைத் துணைத்தலைவர் : தயவு செய்து உரையை முடித்துக் கொள்ள முயலுங்கள். 

கல்பநாத்ராய் : கோபால்சாமி அவர்களே, பிரதமர் எந்த ஒரு சாதியையும் சேர்ந்தவர் அல்ல.

வை.கோபால்சாமி: அது எனக்குத் தெரியும். அவரை நான் குறை கூற வில்லை.

அவைத் துணைத்தலைவர் : தயவு செய்து முடித்துக் கொள்ள முயலுங்கள்.

வை. கோபால்சாமி: பிரதமருக்கு சாதி இல்லை என்பது எனக்குத் தெரியும். அவர் ஒரு காஸ்மாபாலிடன். அவர் ஒரு இந்து அல்ல; ஒரு பார்சி அல்ல; ஒரு கிறிஸ்தவர் அல்ல. அது எனக்குத் தெரியும். 

எங்களுடைய கண்ணோட்டம் விசாலமானது. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதுதான் எங்கள் கண்ணோட்டம். பிறப்பில் அனைவரும் சமமே என்பதுதான் இதன் அர்த்தமாகும். எங்களது திருவள்ளுவர் பெருமானின் வாக்கு அது. அதுதான் எங்கள் கண்ணோட்டம்.

ஆனால் வடபுலத்தார் தமது பண்பாட்டு ஆக்கிரமிப்புகளின் மூலம் எம்மீது படை எடுத்த போது எமது பண்பாடு சிதைக்கப்பட்டது. எனவே இப்போது அரசாங்கத்துக்கு நான் கூறும் யோசனை இது தான்.

மத்திய மண்டபத்தில் பெரியார் திருஉருவப்படத்தையும் அம்பேத்கர் திரு உருவப்படத்தையும், நீங்கள் திறந்து வைக்க வேண்டும். இந்த நாட்டில் சமுக நீதியின் உண்மையான பாதுகாவலர்கள் அவர்கள். 

நமது சமூகத்தின் புற்று நோயாக விளங்கும் சாதி அமைப்பு முறையை அதன் அடிவேரிலேயே தாக்கினாலொழிய ... (குறுக்கீடுகள்)

கல்பநாத்ராய் அவர்களே, நீங்கள் பாட்டுக்கு சிரித்துக் கொண்டிருக்கிறீர் கள். ஆனால் இந்த உலகம் பூராவும் உங்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கிறது!

சாதி அமைப்பு முறையின் அடிவேரையே அழித்தொழித்தால் ஒழிய, தாழ்த்தப்பட்ட மக்களையும், பழங்குடிப் பிரிவினரையும் மேல் நிலைக்கு ஒரு நாளும் கொண்டு வர முடியாது என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்.

(5.12.85-இல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடிப் பிரிவினர் கமிஷனின் அறிக்கையின் மீது நடைபெற்ற விவாதத்தில்)

No comments: