Saturday, April 30, 2022

பெரியாருக்கு யுனெஸ்கோ விருது

 #பெரியாருக்கு_யுனெஸ்கோ_நிறுவனம்_விருது_வழங்கவேயில்லையாம் - 

#அது_பொய்யான_தகவலாம்!

விக்கிப்பீடியாவிலிருந்து தகவலை நீக்கிய பார்ப்பன சதி!

பார்ப்பனப் பித்தலாட்டத்தைப் பாரீர்!

-------------------------------------------------------

ஈ.வெ.ராவுக்கு யுனெஸ்கோ விருது வழங்கியதாக திராவிட ஆதரவாளர்கள் ஒரு புரளியைப் பரப்பி, அதை விக்கிப்பீடியாவில் சேர்த்து வைத்திருந்தார்கள். ஈ.வெ.ரா. பற்றிய கட்டுரை semi-protected என்ற வகையைச் சேர்ந்தது. நேரடியாக யார் வேண்டுமானாலும் திருத்திவிட முடியாதது. விக்கிப்பீடியா அங்கீகரித்த பதிப்பாசிரியர்கள்தான் திருத்த முடியும்.

1998 வரையிலான யுனெஸ்கோ விருதுகள் பட்டியலில் ஈ.வெ.ரா. பெயர் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி நான் திருத்தம் கோரியிருந்தேன். விக்கிபீடியா அதை ஏற்று அந்தப் பொய்யான தகவலை நீக்கி உள்ளது. திராவிட ஆதரவாளர்களின் நேர்மையை இதிலிருந்தே புரிந்துகொள்ளலாம் என்று அந்த செய்தியில் வெளியாகியுள்ளது.

பார்ப்பனர்களைப் பிறவிக் குற்றவாளிகள் என்று தந்தை பெரியார் கூறியது எத்தகைய உண்மை என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.

இப்படி ஒரு பார்ப்பன சதி ஆரவாரம் இல்லாமல் நடந்திருக்கிறது.

தந்தை பெரியார் மறைந்து 45 ஆண்டுகள் ஆன பிறகும் அக்கிரகாரத்தின் அண்ட பிண்ட சராசரங்கள் அனைத்திலும் அய்யா அக்னி திராவகத்தை ஊற்றி அலறச் செய்து கொண்டிருக்கிறார் என்பதற்கு இது ஒன்று போதாதா?

பார்ப்பனர்கள் என்றாலே ஒரு கிரிமினல் கும்பல் என்று தந்தை பெரியார் குறிப்பிட்டது நூற்றுக்கு நூறு உண்மை என்பதைக் காலந்தாழ்ந்தாவது தமிழர்கள் உணரவேண்டும்.

உலகம் அறிந்த ஓர் உண்மையை இருட்டடிக்க எந்த எல்லைக்கும் சென்று பார்ப்பனர்கள் கீழிறக்க வேலையில் ஈடுபடுவார்கள் என்பதைத் தமிழர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

இலங்கையிலிருந்து அப்பட்டமான இந்துத்துவா கொள்ளியைக் கையில் பிடித்து அலைந்துகொண்டிருக்கும் ஓர் இணைய தளம்தான்  tmnews24.com. தந்தி தொலைக்காட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பார்ப்பனர் ஒருவர் இந்தியாவிலிருந்து இயக்கும் வேலையைச் செய்துகொண்டு இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் கூறுகின்றன.

இந்தப் பின்னணியில் ஜெகநாத் ஸ்ரீனிவாசன் என்ற பார்ப்பனர் இந்த நச்சு வேலையைச் செய்திருக்கிறான்.

உலகம் அறிந்த ஓர் உண்மையை அய்.நா.வின் யுனெஸ்கோ நிறுவனமே அளித்த ஒரு விருதை இவர்கள் பொய்யென்று சொல்லுகிறார்கள் என்றால், இவர்களைவிட கடைந்தெடுத்த பொய்யர்கள், பித்தலாட்டக்காரர்கள் உலகத்தில் யார்தான் இருக்க முடியும்?

யுனெஸ்கோ மன்றம் என்ற அய்.நா.வின் அதிகார பூர்வமான கிளைதான் அவ்விழாவை நடத்தியது.

சென்னை ராஜாஜி மண்டபத்தில் 27.6.1970 அன்று முதலமைச்சர் கலைஞர் அவர்களின் தலைமையில் மத்திய அமைச்சர் திரிகுண சென்தான் அய்.நா.வின் யுனெஸ்கோ சார்பில் தந்தை பெரியாருக்கு விருது வழங்கினார் என்பது உலகறிந்த தகவலாகும்.

‘‘Periyar, the Prophet of the New Age;

The Socrates of South East Asia;

Father of the Social Reform Movement;

And Arch Enemy of Ignorance,

Superstitions, Meaningless Customs and Base Manners”


‘‘புது உலக தீர்க்கதரிசி, 

தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ், 

சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, 

அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயம், இழிந்த வழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி’' என்ற வாசகங்களும் அந்த விருதில் பொறிக்கப்பட்டு இருந்தன.

அந்த விருதினை பெற்றுக்கொண்ட தந்தை பெரியார், அய்.நா. மன்றத்தின் மற்ற மற்ற வாசகங்களைவிட  ‘‘அறியாமைக்கு, மூடநம்பிக்கைக்கு அர்த்தமற்ற சம்பிரதாயத்திற்கு நான் கடும் எதிரி என்பதை ஏற்றுக்கொள்ளுகிறோம்‘’ என்று ஏற்புரையும் வழங்கினார்.

இவை எல்லாம் அந்தக் காலகட்டத்தில் பிரபல ஏடுகளில் எல்லாம் வெளிவந்துள்ளன.

இவை எல்லாம் பொய்யென்று ஒரு பார்ப்பான் சொன்னதாகவும், அதனை விக்கிப்பீடியா ஏற்றுக்கொண்டு, பெரியாருக்கு விருது வழங்கப்பட்ட தகவலை நீக்கியதாகவும் ஒரு தகவலை அவிழ்த்துக் கொட்டியுள்ளார் ஒரு பார்ப்பான்.

இந்தப் பித்தலாட்டத்தை செய்ததோடு அல்லாமல் ‘திராவிட ஆதரவாளர்களின் நேர்மையை இதிலிருந்து புரிந்துகொள்ளலாம்‘ என்றும் குறிப்பிடுகிறார் என்றால், இவர்களின் திமிரின் அளவு எத்தனை டிகிரிக்குச் சென்று இருக்கிறது என்பதற்கான அடையாளம் இது. ஆட்சி அதிகாரம் தங்கள் கூட்டத்திடம் உள்ளது எனும் குருட்டுத் தைரியத்தில் எதையும் செய்யலாம் என்று கருதுகிறார்கள் போலும்; இவர்கள் மின் கம்பியில் கை வைத்திருக்கிறார்கள் என்பதை உணர்த்துவோம்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள நூல் Atheism and Secularity என்பதாகும். Phic Zucker Man (தொகுதி 1 ) என்பவரால் எழுதப்பட்டதாகும். அந்த நூலின் 142 ஆம் பக்கம் இவ்வாறு கூறுகிறது.

The United Nations Educational Scientific and Cultural Organization (UNESCO) eventually gave an award to Periyar, and the Union Education Minister Triguna Sen, in Madras (Chennai), on June 27, 1970. The citation hailed Periyar as ‘‘the Prophet of the New Age, the Socrates of South East Asia, Father of Social Reform Movement, and Arch enemy of ignorance, superstitions, meaningless customs and base manners’’ என்று வெளிவந்துள்ளது.

பார்ப்பனர்கள் நினைத்தால் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் ஆசாமிகளை எல்லாம் ஜெகத்குரு என்பார்கள். கொலைக் குற்றத்தில் ஜெயிலுக்குப் போன பேர்வழியென்றாலும் ஜெகத்குரு என்பதில் மாற்றுக் குறையாமல் கூவுவார்கள்.

அதேநேரத்தில், தமிழினத்தின் பாதுகாவலரை - கட்சிக்கு அப்பாற்பட்டு தந்தை பெரியார் என்று போற்றப்படும் சகாப்தத் தலைவரைப்பற்றி உண்மைக்கு மாறாக எழுதுகிறார்கள் என்றால், இந்தப் பார்ப்பனக் கும்பலை நம் மக்கள் அடையாளம் காணவேண்டாமா?

ஜெகந்நாத் ஸ்ரீனிவாசன் என்ற பேர்வழியின் முயற்சிக்கு விக்கிப்பீடியா ஆட்பட்டது என்பது உண்மையாக இருக்கும் பட்சத்தில், ஆதாரங்களின் அடிப்படையில், உண்மையின் வெளிச்சத்தில் விக்கிப்பீடியாவின் காதைத் திருகி உண்மையை நிலைநாட்டுவோம் என்பது உறுதி!

கி.வீரமணி,

தலைவர், 

திராவிடர் கழகம்


30.4.2019  

சென்னை 

பெரியார் வாழ்க நரியார் கூட்டம் ஒழிக

 பெரியார் இயக்கம் வாழ்க நரியார் கூட்டம் ஒழிக

                பாரதிதாசன்

             அறுசீர் விருத்தம்

 தமிழகம் மீள வேண்டும்

 தமிழர்கள் வாழ வேண்டும்

அமிழ்தான இக்கொள் கைக்கே

 அருந்தொண்டு செய்ப வர்போல்

தமைக்காட்டிக் கொண்டே சில்லோர்

 தமதுடல் வளர்க்கின் றார்கள்;

இமைப்பினில் இவர்கள் எல்லாம்

 ஒழிந்தால்தான் இயக்கம் வாழும்! 1


 மக்களை மீட்க நல்ல

 மனம்மொழி மெய்கள் வேண்டும்.

இக்கொள்கைக் கான தொண்டே

 எந்நாளும் செய்ப வர்போல்

பொய்க்கோலம் காட்டிச் சில்லோர்

 பொதுப்பணம் கருது கின்றார்

கைக்கூலி கள்தொ டர்பு

 கழன்றால்தான் இயக்கம் வாழும்! 2


 ஆண்டாண்டு தோறும் மக்கள்

 ஆரியம் தனில்ஆழ் கின்றார்

மீண்டாலே தமிழர் மீள்வார்

 எனுமிந்த மேன்மைக் கொள்கை

பூண்டார்போல் காட்டித் தாங்கள்

 புதுக்கட்சி வளர்க்கும் புல்லர்

வேண்டாத பெரியார் காலை

 விட்டால்தான் இயக்கம் வாழும். 3


 தன்னலம் நீக்கி இன்பத்

 தமிழக நலமே காக்க

என்னுமிக் கொள்கைக் காக

 என்றுதொண் டாற்று வார்போல்,மின்னிடு வெண்பொற் காசு,

 நடிகர்பால் மின்னக் கண்டால்

அன்னானின் அடிவீழ் வார்கள்

 அகன்றால்தான் இயக்கம் வாழும்! 4


 அழியாத பார்ப்புக் கோட்டை

 அழித்திட வேண்டு மென்ற

பழியாத கொள்கைக் காக

 உழைப்பதாய்ப் பசப்பிச் சில்லோர்

செழியாதார் செழிப்பார் என்று

 சிபாரிசால் சுரண்டு வார்கள்.

அழையாதார் வீட்டில் உண்போன்

 அகன்றால்தான் இயக்கம் வாழும்! 5


 பகலென்றும் இரவே என்றும்

 பாராது மக்கள் தம்மை

அகலாது செய்வ தாமோர்

 அன்புத்தொண் டியற்று வார்போல்

மிகக்காட்டிப் பெரியார் தம்மை

 வெருட்டவும் கனவு காண்பார்

வகைகெட்டார் நாண மில்லார்

 ஒழிந்தால்தான் இயக்கம் வாழும்! 6


 அவன்போனான் இவனும் போனான்

 அடுத்தொரு குள்ளன் போனான்

எவன்போனான் எனினும் நாட்டில்

 இருக்கின்றார் பெரியார் என்றால்

குவிந்தது தமிழர் கூட்டம்

 குலைந்தது பார்ப்பான் ஓட்டம்;

நவிலும்இந் நிலையில் தீய

 நரிக்கூட்டம் ஒழிதல் நன்றே! 7


 தானின்றேல் தலையே இல்லை

 என்றுபேன் சாற்றி னாற்போல்

நானில்லை எனில்இ யக்கம்

 நடக்காதென் றானாம் ஓர்ஆள்!

ஏன்என்று கேட்ட தற்கு

 யான்உழைப் பவன்என் றானாம்,

பூனை கண் மூடிக் கொண்டால்

 உலகமா இருண்டு போகும்? 8


 உழைப்புக்குக் கூலி யாகப்

 பெரியாரை ஒழிப்ப துண்டோ?

பிழைப்புக்கு வழிசெய் தாரே

 திருமணம் பெறச்செய் தாரே

தழைப்பித்த நிலத்தைப் பைங்கூழ்

 தாக்கவா முடியும்? அன்னோன்

கொழுப்பினை அடக்கு தற்குப்

 பெரியார்க்குக் கோலா வேண்டும்? 9


 பெரியாரின் பேர்ஒ ழிக்க

 முதல்முழக் கம்செய் தோன்யார்?

தெரியாதா? அந்த ஆளே

 திருத்தொண்டு செய்தோன் என்றும்

பிரியாமல் இருந்தேன் என்றும்

 பேசிஆள் சேர்க்கின் றானாம்

புரியாத இருளில் உள்ளான்

 விடிந்தபின் புரிந்து கொள்வான்! 10


 பொன்கையில் இருந்த துண்டா?

 புகழ்தானும் இருந்த துண்டா?

தன்கையை ஊன்றித் தானே

 எழுந்திடும் தகுதி உண்டா?

முன்கைதந் தருளி னாரின்

 முழுதுடல் வெட்ட எண்ணும்

புன்தொழில் உடையான் ஓடிப்

 போனால்தான் இயக்கம் வாழும்! 11


 மிகுதியாய்த் தீமை செய்தோர்

 தில்லியார்! பெரியார்க் குள்ள

தகுதியால் தமிழ கத்தைச்

 சாகுமுன் மீட்க வேண்டும்

புகுந்தது தமிழ்ப்பட் டாளம்

 போர்ப்படைத் தலைவர் தம்மை

இகழ்தலும் கவிழ்க்கும் வஞ்சம்

 இழைத்தலும் செய்வோன் யாவன்? 12


- தமிழுக்கு அமுதென்று பேர், ப. 29-32, 1978;

குயில், 7.7.1959

Friday, April 29, 2022

கால்டுவெல் உருவாக்கிய திராவிடக் கருத்தியல்

 இன்றைக்கு நாம் பேசுவதற்கான திராவிடம் குறித்த தெளிவையும், திடத்தையும் நமக்கு அடையாளம் காட்டியவர் தான் ஆய்வாளர் கார்டுவெல்! திராவிட சித்தாந்தம் தோன்ற காரணமான பேரறிஞர் கார்டுவெல் எழுதிய திராவிட மொழி ஆராய்ச்சி நூல் (1875) தற்போது தான் தமிழ் வடிவம் கண்டுள்ளது.

திராவிடம் என்றால் என்ன? அந்த மொழிக் குடும்பத்தில் என்னென்ன மொழிகள்? குறிப்பாக தமிழ் எப்படி சமஸ்கிருததிற்கு ஈடானது மட்டுமின்றி, அதைக் காட்டிலும் நுட்பமானது என்றெல்லாம் மொழி குறித்த ஆராய்ச்சியை முதன்முதல் மேற்கொண்டு அதை மிக விரிவாக ஆங்கிலத்தில் எழுதி அகிலத்திற்கே அறிவித்தவர் கார்டுவெல்!

இந்த நூல் குறித்த அருமையான உரையாடலை இன்றைய தினம்( ஏப்ரல் 28) சென்னை தரமணியில் இயங்கும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் ஏற்பாடு செய்திருந்தது! தமிழகத்தின் முன்னணி பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், கல்விப்புலம் சார்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் என அரங்கு நிறைந்து வழிந்தது.

பேராசிரியர் சத்தீஸ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். பேராசிரியர்கள் வீ.அரசு, கி.அரங்கன், ஆய்வாளர் வி.எம்.எஸ்.சுபகுணராஜன் ஆகியோர் நூலின் சிறப்புகள் குறித்து பேசினார்கள்!

”இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் தாய் மொழி சமஸ்கிருதமே என ஜெர்மனியில் இருந்து கொண்டு இந்தியாவிற்கே வராமல் எழுதியவர் மாக்ஸ்முல்லர்! அதை பொய்பித்துக் காண்பித்தவர் தான் கார்டுவெல்! அவர் செய்த ஆராய்ச்சியின் நீட்சியாய் தற்போது திராவிட மொழிக் குடும்பத்தில் 37 மொழிகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. அனைத்து திராவிட மொழிகளுக்கும் தமிழே தாய்மொழி என்பதும் நிருபணமாகியுள்ளது. சமஸ்கிருதத்தின் தொடர்புகள் இன்றி தன்னை தகவமைத்துக் கொண்ட ஆதி மொழியே தமிழ் என்பது உணரப்பட்டது.” என்றார் பேராசிரியர் வீ.அரசு.

அயர்லாந்து தேசத்தவரான கார்டுவெல் தமிழ்நாட்டிற்கு வந்து 42 ஆண்டுகள் திருநெல்வேலியில் உள்ள இடையான்குடியில் தங்கி பல்லாண்டுகள் ஆய்வில் உருவாக்கியதே இந்த ஆய்வு நூல்! பாதிரியாரான கார்டுவெல் இந்த ஆராய்ச்சி நூலான் இதை எழுதி வைத்து 147 ஆண்டுகள் கடந்தே  தமிழ் வடிவம் கண்டுள்ளது. இது ஒரு வகையில் மிகவும் அவலமானது” என்றார் பேராசிரியர் சுபகுணராஜன்.

அதாவது, எங்கோ பிறந்த ஒரு அயல் நாட்டு மனிதன் தன் ஆயுள் கால அர்ப்பணிப்பாய் தமிழ் மொழி குறித்த அரும்பெரும் ஆராய்ச்சி செய்து எழுதி வைத்தாலும், அதை தமிழுக்கு மொழி பெயர்பதில் எவ்வளவு சுணக்கம் காட்டியுள்ளது இந்த தமிழ்ச் சமூகம் என நினைத்தால் வேதனை தான் மிஞ்சுகிறது. அதுவும் திராவிட இயக்கங்களின் ஆட்சி ஐம்பது ஆண்டுகளை கடந்த நிலையில் தான் இது சாத்தியமாகி உள்ளது.

திராவிட மொழியியல் அறிஞர் கார்டுவெல்

உண்மையில் இதற்கு மிக ஆழ்ந்த மொழிப் புலமையும், அதி தீவிர தேடல் குணமும் எல்லாவற்றுக்கும் மேலாக நினைத்து பார்க்க முடியாத கடும் உழைப்பும் தேவை! இவை அனைத்தும் ஒருங்கே அமைய பெற்றவரான பேராசிரியர். பா.ரா.சுப்பிரமணியன் இந்த ஆராய்ச்சி நூலை மொழி பெயர்க்க முன் வந்தது தமிழ்ச் சமூகம் செய்த தவப் பயனாகும்!

இன்றைக்கு கார்டுவெல் கண்டெடுத்த திராவிடம் ஒரு அரசியல் ஆயுதமாகி, அது தமிழ் நாட்டை ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிக்கம் செய்கிறது! ஆயினும், இந்த அரசியல்வாதிகளில் பெரும்பாலோர்க்கு கார்டுவெல் கட்டமைத்த அடித்தளத்தில் கட்டி எழுப்பப்பட்டதே தாங்கள் அனுபவிக்கும் திராவிட ஆட்சி அதிகாரம் என்பது தெரியாது. வெகு சில திராவிட அரசியல்வாதிகளே அவரை அறிவர். அவர்களிலும் ஆழமாக தெரிந்திருப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்!

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பொறுப்பு ஏற்க, பேராசிரியர் பா.ரா.சு மூன்றாண்டுகள் ஒரு தவவேள்வி போல ‘திராவிட அல்லது தென்னிந்தியக் குடும்ப மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற இந்த நூலை கண்ணும் கருத்துமாக எழுதியுள்ளார். வெளியுலத் தொடர்புகளே முற்றிலும் தவிர்த்தவராய் சதா சர்வ காலம் ஒரு நாள் கூட ஓய்வின்றி அவர் மொழி பெயர்த்து தந்துள்ளார்! அந்த அரும் பெரும் உழைப்பிற்கான உரிய சன்மானம் அவருக்கு தரப்படவில்லை என அறிய வந்தோம். ஆனால், அது பற்றி அவர் கடுகளவும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் தன் பணியை முடித்துக் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.

இறுதியில் பேராசிரியர் பா.ரா.சுப்பிரமணியன் நிறைவுரையாற்றினார். கார்டுவெல் என்பவர் யார்? அவரது இயல்புகள் என்ன? அவர் வாழ்ந்த வாழ்க்கை எத்தகையது என அற்புதமான, சுவையான தகவல்களையும், இந்த நூல் எழுதிய போது தனக்கு ஏற்ப்பட்ட அனுபவங்களையும் பா.ரா.சு சொன்னார். அவரது பேச்சானது, ‘நிறைகுடம் தழும்பாது’ என்பதற்கொப்ப அமைந்திருந்தது.

சாவித்திரி கண்ணன்

Sunday, April 24, 2022

அருணகிரி அவர்களின் பதிவு

திரு. அருணகிரி அவர்களின் 23.4.2919 முகனூல் பதிவு...

மலேசியா விநாயகம் கவி, 

தாயகம் வந்தார். 

சொந்த ஊர் சிதம்பரம். 

திராவிட இயக்கப் பதிப்பாளர்களுள் ஒருவர். 

தலைவர் வைகோ அவர்களின் மலேசியப் பயண நிகழ்வுகளைத் தொகுத்து இரண்டு புத்தகங்கள் வெளியிட்டு இருக்கின்றார். 

தலைவர் வைகோ அவர்கள் ஒரு கூட்டத்தில் பேசும்போது, சென்னை எழும்பூர் ஸ்பர்டாங் சாலையில் டி.எம். நாயர் ஆற்றிய ஆங்கில உரையைப் புகழ்ந்து உரைத்தார். 

அதேபோல, டி.எம். நாயர் விக்டோரியா அரங்கத்தில் 1917 மார்ச் 14 ஆம் நாள் ஆற்றிய மற்றொரு உரையை, Our Immediate Political Outlook என்ற தலைப்பில், தன் சொந்தச் செலவில் மறுபதிப்பாக அச்சிட்டு வெளியிட்டு இருக்கின்றார். 

அதேபோல, உலக கம்யூனிச இயக்கத்தின் அறிக்கையை தந்தை பெரியார் அவர்கள் 1931 ஆம் ஆண்டு குடிஅரசு இதழில் தமிழில் வெளியிட்டார்கள். 

அந்த சமதர்ம அறிக்கையையும் ஒரு சிறிய வெளியீடாகக் கொணர்ந்துள்ளார் விநாயகம் கவி. 

அவருக்கு நமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வோம்.

Thursday, April 21, 2022

புரட்சிக் கவிஞர் நினைவு நாள் கட்டுரை

 வேண்டும். எங்களுக்கு உங்களின் அறிவுரை என்ன?’ என பாவேந்தர் பாரதிதாசனிடம் புதிதாகக் கவிதை எழுத வந்த இளைஞர்கள் கேட்டபோது, பாரதிதாசன் சட்டென சொன்ன பதில்... ``ஆழ்வார் பாசுரங்களைப் படியுங்கள்’' என்பதுதான். ``நீங்கள் பகுத்தறிவுப் பாவலர். அப்படியிருக்க, பாசுரங்களைப் படிக்கச் சொல்கிறீர்களே?’’ என்று கேட்க, ``பாசுரங்களைப் படிக்காமல், உங்களால் எப்படி தமிழ்க் கவிதைகள் எழுதிவிட முடியும்?’’ என்று பதில் சொல்லியிருக்கிறார். இதுதான் பாரதிதாசன். பிடித்தால் உடும்பு பிடி... அடித்தால் அதிரடி. அவரின் 126-வது பிறந்த நாள் இன்று.

‘`திராவிடக் கலை, இலக்கியத்தின் மையப்புள்ளியே பாவேந்தர் பாரதிதாசன்தான். பொதுவாக, தமிழில் கவிதைகளுக்கும் பாடல்களுக்கும்தான் உரை எழுதுவார்கள். ஆனால், தந்தை பெரியாரின் உரைகளுக்கெல்லாம் கவிதை எழுதியவர் பாவேந்தர் பாரதிதாசன். 1950-களில்தான் அரசாங்கம் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைப் பற்றி பேசியது; பிரசாரம் செய்தது. ஆனால், பெரியார் 1930-களிலேயே குடும்பக் கட்டுப்பாடு திட்டம் பற்றிப் பேசினார். `பிள்ளை பெறுவது என்பது, பெண்களின் கடமை அல்ல; அவர்களது உரிமை. அவர்களுக்கு விருப்பம் இல்லாவிட்டால் அவர்களை பிள்ளை பெற்றுக்கொள்ளச் சொல்லி வற்புறுத்தக் கூடாது’ என்றார் பெரியார். இதை, `காதலுக்கு வழிவிட்டு கருப்பாதை சாத்த / கதவு ஒன்று கண்டறிவோம் / இதில் என்ன குற்றம்...’ என 1937-ம் ஆண்டு கவிதை பாடினார் பாவேந்தர்.

”1934-ம் ஆண்டு பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய, `இரணியன் அல்லது இணையற்ற வீரன்’ என்கிற அவரின் முதல் நாடகம், சென்னை விக்டோரியா மஹாலில் நடைப்பெற்றது. நடித்தவர்கள் திராவிடக் கலைஞர்கள் நாடக மன்றத்தினர். தலைமை, தந்தை பெரியார். இந்த நாடகத்தை, 1948-ம் ஆண்டு அன்றைய அரசாங்கம் தடைசெய்தது. தடையை மீறி நாடகம் நடந்தது. அதனால் நாடகத்தில் நடித்த அத்தனை கலைஞர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். மூன்று மாதம் மூன்று வாரம் சிறைவாசத்துக்குப் பிறகு, 1948-ம் ஆண்டு டிசம்பர் மாதம் விடுதலையாகி வெளியே வந்தபோது, அவர்களை முதலில் செய்யாற்றில் வரவேற்றவர் தந்தை பெரியார். அங்கிருந்து ஊர்வலமாக வந்த நாடகக் கலைஞர்களை காஞ்சிபுரத்தில் வரவேற்றவர் அறிஞர் அண்ணா. இந்த நிகழ்வில் என்ன ஒரு முரண் என்றால், சுதந்திரம் வாங்கும் வரை ஆங்கிலேயர்கள் அனுமதித்த நாடகத்தை, சுதந்திரம் வாங்கிய ஒரே வருடத்தில் நமது ஆள்கள் தடைசெய்ததுதான்’’ என்கிறார் பேராசிரியர் சுப வீரபாண்டியன்.

``திராவிட இயக்கத்திலிருந்து தமிழ்த் திரைப்படத் துறையின் முதல் நுழைவுகூட பாவேந்தர் பாரதிதாசன்தான். இவருக்குப் பிறகுதான் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் திரையுலகப் பிரவேசம் நடந்தது. 1937-ம் ஆண்டு வெளிவந்த `பாலாமணி அல்லது பக்கா திருடன்’ படத்தின் அத்துணை பாடல்களையும் எழுதினார் பாரதிதாசன். இதற்கு அடுத்ததாக எழுத்தாளர் வ.ரா-வின் கதையில் உருவான `ஸ்ரீராமனுஜர்’ படத்துக்கு அனைத்துப் பாடல்களையும் எழுதினார். அப்போது பாரதிதாசனிடம் `நீங்களோ பகுத்தறிவுக் கவிஞர். ஆனால், ஆன்மிகப் படமான ஸ்ரீராமானுஜர் படத்துக்குப் பாடல்கள் எழுதுகிறீர்களே?' என்று கேட்டபோது, ‘உனக்கு ஒண்ணு தெரியுமா? சினிமாவுல நுழையுறது அவ்வளவு சுலபம் இல்லை. என்னை நிலைநிறுத்திக்கிட்ட பிறகு பாரு, நான் நினைக்கிற படம் எடுக்கிறேன்’ என்றார். அதுபோலவே 1950-ம் ஆண்டு `பொன்முடி’ படத்தை எடுத்தார். முழுக்க முழுக்கப் பகுத்தறிவுச் சிந்தனைகளைக் கொண்ட படம் அது. அவரின் `எதிர்பாராத முத்தம்’ என்ற குறுங்காப்பியத்தின் தழுவல்தான் `பொன்முடி’ திரைப்படம். `எதிர்பாராத முத்தம்’ என்பது புதுவையில் நிலவிவரும் பிரெஞ்சுக் கலாசாரம். ஒருவரை ஒருவர் பார்த்ததும் முத்தமிட்டு முகமன் கூறி வணங்குவார். இதை மையமாக வைத்துதான் `எதிர்பாராத முத்தம்’ குறுங்காப்பியத்தை எழுதியிருப்பார் பாரதிதான். `பாவேந்தரின் `பொன்முடி’ படத்துக்கு முன்பே அண்ணாவின் `வேலைக்காரி’, `நல்லத்தம்பி’ படங்கள் உருவாகின’ என்பார்கள். ஆனால், வெளிவந்ததில் முதலாவது `பொன்முடி’தான். அந்த வகையில் தமிழ்த் திரைத் துறையின் முதலாவது திராவிட நுழைவு பாரதிதாசன்தான்.

இன்றைக்கும் தமிழர்களின் உணர்வுகளோடு கலந்துவிட்ட பல கவிதை வரிகளை எழுதியவர் பாவேந்தர்தான். `எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு,’ `கொலைவாளினை எடடா மிகக்கொடியோர் செயல் அறவே’, `தமிழுக்கும் அமுதென்று பேர்’... என்பன போன்ற வரிகள் இன்றைய இளைய தமிழ்த் தலைமுறையை எழுச்சியோடு வைத்திருக்கின்றன. 1942-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா `திராவிட நாடு' பத்திரிகையைத் தொடங்கியபோது, `தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்ற கவிதை வரிகளைத்தான், அதன் முகப்பு வரியாகப் போட்டார்’’ என்கிறார் பேராசியர் சுப வீரபாண்டியன்.

இவை எல்லாம் பாரதிதாசனின் முதல் புத்தகமான `பாவேந்தர் பாரதிதாசன் கவிதை’ நூலில் உள்ள வரிகள்தான். 1937-ல் வெளிவந்த இந்த வெளியிட்டவர் குத்தூசி குருசாமியின் மனைவி குஞ்சிதம் குருசாமி. பெண்ணடிமைத்தனம் வேரோடிக்கிடந்த அந்தக் காலகட்டத்தில் ஒரு பெண்ணை தன் முதல் புத்தகத்தை வெளியிடவைத்துப் பெருமைப்படுத்தியவர் பாவேந்தர்.

கவிஞர், பகுத்தறிவுச் சிந்தனையாளர், சினிமா பாடலாசிரியர், தயாரிப்பாளர் என்ற பன்முகம்கொண்ட பாவேந்தர் பாரதிதாசன், புதுவை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் என்பது அவ்வளவாகப் பிரபலமாகாத செய்தி. பார்ப்பனர்களைத் திட்டும் பெரியார், ஒருமுறை திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரித் தாளாளரைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். `என்ன நீங்கள் பார்ப்பனரான அவரைப் புகழ்கிறீர்களே?’ என்று கேட்டதுபோது பெரியார் சொன்னாராம், `அவர் பெண்கள் படிக்க அல்லவா கல்லூரி நடத்துகிறார். அவரைப் பாராட்டாமல் வேறு என்ன செய்வது?’ என்றாராம். அதுபோலதான் பாரதிதான், கடைசிவரை பாரதியாரை `ஐயர்' என்றுதான் அழைத்துவந்தார். அதைக் குறித்து கேட்டபோது, `ஐயர் போல இங்கு யார் சிந்திக்கிறார்?’ என்றாராம்.

பாரதியாரைப் பரப்பியவர்களில் முக்கியமானவரான திருலோகச் சீத்தாராமோடு அதிகம் நெருக்கம் காட்டியவர் பாரதிதாசன். இத்தனைக்கும் திருலோகம் ஆத்திகவாதி. அவர் சாப்பிடுவதற்கு முன்பு திருநீறு பூசாமல் சாப்பிட மாட்டார். இது பாரதிதாசனுக்கும் தெரியும். ஒருமுறை பாரதிதாசன் வீட்டுக்கு திருலோகம் வந்திருந்தபோது, பக்கத்து வீட்டில் போய் திருநீறு வாங்கிவந்து கொடுத்திருக்கிறார் பாரதிதாசன்.

பாரதிதாசனின் கோபம் மிகப் பிரசித்தம். பலமுறை திருலோகச் சீதாராமைக் கோபித்திருக்கிறார். `உங்களுக்காக அல்ல உங்கள் தமிழுக்காக உங்களை ஏற்கிறேன்’ என்பாராம் திருலோகச் சீத்தாராம்.

மாற்றுச் சிந்தனை கொண்டோரையும் தன் தமிழால் மயக்கிய கவிக்குயில் பாவேந்தர் பாரதிதாசன் தமிழ்மொழியின் கம்பீர அடையாளங்களில் முக்கியமானவர்

( ஆ.செங்கதிர்ச்செல்வன், 29.4.2017 விகடன் மின்னிதழில்)

Monday, April 18, 2022

ஆசிட் தியாகராஜன்

பெரியாருக்குத் தண்டனை விதித்தவர் மேல் ஆசிட் வீசினேன் -

#ஆசிட்_தியாகராசன்....

தந்தை பெரியாருக்கு – 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததால் ஆத்திரமடைந்த பெரியார் தொண்டர் ஒருவர், அரசு வழக்கறிஞரான பார்ப்பனர் முகத்தில் ‘ஆசிட்’ வீசினார். 

ஆசிட் தியாகராசன் உரையிலிருந்து..

என்னருமை உணர் வாளர்களே! நான் அதிகம் பேச முன்வரவில்லை. உண்மையைச் சொன்னால் – எனது 78 வயதில் நான் ஏறியுள்ள முதல் மேடை இது தான். புரட்சிகர இயக்கங்களுக்கு தனித் தனிப் படைகள் தேவை. நீங்கள் பிரச்சாரப் பீரங்கிகள்; பிரச்சாரப்படை. நான் தீவிர வாதத்தில் தான் இருப்பேன் (கைதட்டல்) .

பெரியார் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் போராட்டங்களில் நான் கலந்து கொள்வது இல்லை. நான் கருப்புச் சட்டையும் போடமாட்டேன். என்னுடைய நடவடிக்கைகளால் கழகம் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்று கருதுபவன். என்னுடைய போராட்டங்களை நான் தனிப்பட்ட முறையில் எனக்கு நானே பொறுப்பாக்கிக் கொண்டுதான் நடத்துவேன். சுருக்கமாகச் சொல்கிறேன்..

பெரியாரின் பிள்ளையார் உடைப்புப் போராட்டத்துக்கு என்ன காரணம் என்பது எனக்குத் தெரியும். ஆனால் விபூதி வீரமுத்து என்பவன், பெரியார் படத்தை செருப்பால் அடித்து ஊர்வலம் போவதாகச் சொன்னான். 

திருச்சி திராவிடர் கழகத் தலைவர் டி.டி.வீரப்பா, எந்தத் தோழரும், விபூதி வீரமுத்து பக்கம் போக வேண்டாம் என்று கண்டிப்பாக உத்தரவிட்டார், அறிக்கையும் விட்டார். நான் வீட்டில் இருந்து கொண்டு, எனது சகாக்களை அழைத்துப் பேசினேன். டி.டி.வீரப்பா, கட்சியின் கட்டுப்பாடுபடி நடக்கட்டும். ஆனால், நாம் நமது ‘சட்டத்திட்டப்படி’ அதை சந்திப்போம் என்று கலந்து பேசினேன். அன்று எனக்கு டைபாயிடு காய்ச்சலே வந்துட்டுதுங்க. கடும் காய்ச்சலில் கிடந்த நான் கண்விழித்துப் பார்த்தபோது – என் கையில் கத்தி இருந்தது.

அப்போது மணி மாலை 7. அய்யோ, இந்நேரம் பெரியார் படத்தை செருப்பால் அடித்திருப்பானே யென்று, தலைதெறிக்க ஓடினேன்.

திருச்சி டவுன் ஹாலை நோக்கி, கூட்டத்தைக் கலைக்க, போலீசார் தடியடி, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். ஆனால், விபூதி வீரமுத்து விடம் எத்தனை பேர் இருந்தார்கள் தெரியுமா? 25 பேர் மட்டும்தான். ஆனால் போலீஸ் பட்டாளம் அதிகமாக இருந்தது. 

நம்முடைய தோழர்கள் சாலையின் மறு பக்கத்தில் நின்று கொண்டு, பயங் கரமாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். என்னுடைய சகாக்களுக்கு நான் செய்ய வேண்டியதை எல்லாம் முன் கூட்டியே சொல்லி விட்டேன்; நான் சோடா விற்பவனாக மாறு வேடத்தில் போலீஸ் தடையை மீறி உள்ளே நுழைந்துவிடுவேன்; நான் சைகை காட்டியதும், நீங்கள் கற்களை வீச வேண்டும்; கல் விழுந்தவுடன் நான் செய்ய வேண்டியதை செய்வேன் என்று கூறி விட்டேன்.

அப்போதெல்லாம் என்னிடம் காசு கிடையாது; ஒருவரிடம் கடன் வாங்கி, அதில் ‘சோடா கிரேடு’களை வாங்கி, அதைத் தூக்கிக் கொண்டு, தலையில் துண்டு கட்டிக் கொண்டு, சோடா விற்பவனைப் போல் உள்ளே நுழைந்தேன். விபூதி வீரமுத்துவின் ஆள் கண்ணன் என்பவர், யார் நீ என்று கேட்டார். தலைவருக்கு சோடா தர வந்திருக்கிறேன் என்றேன்; உள்ளே போனதும், விபூதி வீரமுத்துவை நோக்கி எனது தோழர்கள் மலத்தை வீசினார்கள்; நான் டவுன் ஆல் கதவை உடைத்து, 

டவுன் ஆல் கோபுரத்தின் மீது ஏறி விட்டேன்; விபூதி வீரமுத்து என்பவன் பெரியார் ரஷ்யாவுக்குப் போன போது எடுத்த படத்தை ஒரு மூட்டையில் ஒட்டி, அந்தப் படத்தை செருப்பால் அடிக்கத் திட்டமிட்டிருந்தான். ‘வெள்ளைக்காரனுக்கு காட்டிக் கொடுத்த நாயை செருப்பால் அடிக்கிறேன்’ என்று கூறி – பெரிய செருப்பை, விபூதி வீரமுத்து தூக்கினான். அவ்வளவுதான், டவுன் ஹால் கோபுரத்திலிருந்து சோடா பாட்டிலையும், கற்களையும் விபூதி வீரமுத்து தலையை இலக்கு வைத்து அடித்தேன்; முதல் அடியில் அவன் தலை கிழிந்தது. பெரியார் படம் கீழே விழுந்தது. என்னைக் கெட்ட வார்த்தை பேசி திட்டினான்.

மீண்டும் விட்டேன் எனது ‘அஸ்திரத்தை’; பிறகு 7 பேர் மொட்டை அடித்துக் கொண்டு பெரியார் படத்தை வைத்துப் பாடை கட்டி தூக்கி வந்தனர். அத்தனை பேரையும் இலக்கு வைத்து அஸ்திரத்தை வீசினேன்; அப்படியே ஓட்டம் பிடிச்சானுங்க; மேலே இருந்த என்னைப் பார்த்து, போலீசார் வெறிக் கூச்சல் போட்டு, என்னை சுற்றி வளைக்க வந்தாங்க; நான் மேலே இருந்து அப்படியே கீழே குதித்தேன்; எனக்கும் சில ‘ஸ்டண்ட்’ வேலைகள் தெரியும்.

ஆனால் உங்களை எல்லாம் ஒன்று கேட்டுக் கொள்கிறேன்; யாரும், டி.வி., சினிமாக்களைப் பார்க்காதீங்க. அதெல்லாம் ‘விசிலடிச்சான் குஞ்சு’ சமாச்சாரம்; நடைமுறைக்கு வாங்க. நான் ஃபால் ஆப் பெர்லின், பகத்சிங், உலக யுத்தத்தில் – உடம்பில் குண்டைக் கட்டிக் கொண்டு கப்பலைத் தகர்ப்பானே, அது போன்ற படங்களைத்தான் பார்த்திருக்கிறேன். கூட்டத்தையே கலைத்தேன். என்னுடைய திட்டம் முழு வெற்றிப் பெற்றது. என்னுடைய வாழ்நாளில் எவ்வளவோ போராட்டம் செய்திருக்கிறேன். சொல்ல நேரமில்லை.

பெரியாருக்கு 3 ஆண்டு தண்டனை தரப்பட்டபோது, முதல் நாளே என்னைக் கைது செய்து விட்டார்கள். கைது செய்த என்னை அடுத்த நாள் நீதிமன்றம் கொண்டு வந்தார்கள். இரண்டாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றம் முன் என்னை நிறுத்தி வைத்திருந்தார்கள். மாவட்ட நீதிமன்றத்தில் அய்யாவுக்கு 3 வருட தண்டனை கொடுத்து, மற்றொரு பக்கம் அய்யாவைக் கொண்டு போகிறார்கள். தண்டனை அறிவித்தவுடன் எனது சகாக்கள் கடும் அமளியில் இறங்கி விட்டார்கள். 

அய்யாவுக் குத் தண்டனை தந்த பிறகு என்னால் சும்மா இருக்க முடியுங்களா? சீனிவாசாச்சாரி என்ற வெறி பிடித்த அய்யங்கார் பார்ப்பனன்தான் அரசு வழக்கறிஞர். நமது இனத்துக்கு மிகப் பெரும் கேடு செய்தவன். அவனது கடந்த கால சரித்திரம் முழுமையும் நான் தெரிந்து கொண்டேன். அதனால் நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்.

என்னிடம் கழக முக்கியஸ்தர்கள் எல்லாம் வந்து, நீங்கள் தயவுசெய்து பொறுமையாக இருங்கள் என்று மன்றாடி கேட்டுக் கொண்டார்கள். ஜனவரி 26 ஆம் தேதி அய்யாவை விட்டு விடுவார்கள் என்றார்கள். அதுவரை பொறுமையாகக் காத்திருந்தேன். ஜன.26 மாலை ஓரு முடிவுக்கு வந்தேன்.

என்னுடைய அருமையான தோழர் சின்னச்சாமி. ஒரு பெரிய திட்டத்துக்கு தயாராகி நின்ற எங்களிடம் இருந்த பணம் எவ்வளவு தெரியுமா? நான்கு அணா. வெறும் நான்கு அணா தான்! ரேடியோ செய்தி கேட்டேன். பெரியார் விடுதலைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. குடியரசு நாள் நிகழ்ச்சியில், அரசு வழக்கறிஞர் கலந்து கெள்கிறார் என்ற சேதி கிடைத்தது. என்னுடைய நண்பன் சின்னச்சாமியிடம் கூறினேன். நான் முடிவு செய்து விட்டேன்; நீ போய்விடு என்று கூறினேன். பெரியார் வாழ்க என்று கூறி இருவரும் கை குலுக்கினோம்.

என்னுடைய நண்பன் சின்னச்சாமி பற்றி சொல்ல வேண்டும். அற்புதமான நண்பன். பீடி சுற்றித்தான் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். ஒரு நாள் பீடி சுற்றினால் 75 காசு கிடைக்கும். அதை வைத்துத்தான் குடும்பம் நடத்த வேண்டிய நிலை. நான் அழைக்கும்போது, பீடி சுற்றுவதை அப்படியே நிறுத்திவிட்டு என்னோடு வந்துவிடுவான். என்னால் மறக்கவே முடியாத காட்சிகள் அவை. அந்த நண்பன் சின்னச்சாமி, இப்போது காச நோய்க்கு உள்ளாகி மருந்து வாங்குவதற்குக்கூட காசு இல்லாமல் இருக்கிறான்.

அப்போது, சின்னச்சாமி, என்னைத் தனியே விட்டுப் போக மறுத்துவிட்டான். நானும் சேர்ந்து கொள்கிறேன் என்றான். “வேண்டாம் சின்னச்சாமி, தயவு செய்து நீ போய்விடு. என்னுடைய தாயை மறந்துவிட்டு நான் இந்த இடத்தில் நிற்கிறேன்; எனக்கு அய்யா தான் முக்கியம்” என்று சொன்னேன்.

சீனிவாசாச்சாரி குடியரசு நாள் விழாவில் பங்கேற்றுவிட்டு வந்தான். போலீசுக்கு எதிரேயே போய் கழுத்தைப் பிடித்துச் சுழற்றி முகத்தில் ‘ராஸ்கல்’ என்று கூறி ‘ஆசிட்’ வீசினேன். அவன் கீழே விழும்போது 8 மணி சங்கு ஊதியது. தோளிலும், முகத்திலும் குத்தினேன். 300 பேர் விரட்டி வந்தனர். முடியுமா? என்னிடம் யாரும் நெருங்க முடியவில்லை.

அதற்குப் பிறகு காவல்நிலையத்தில் – என்னை அழைத்துப் போய் விசாரித்தார்கள். இன்ஸ்பெக்டர் என்னை மிகவும் மதித்து சமமாக உட்கார வைத்து தோளில் கைபோட்டுப் பேசினார். அப்போது என்னிடம் கேட்டார். “எவ்வளவோ பெரியார் தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இல்லாத கவலை உனக்கு மட்டும் ஏன்? நீ மட்டும் ஏன் இத்தகைய தீவிரவாத செயல் களில் ஈடுபடுகிறாய்?” என்று கேட்டார்,

நான் சொன்னேன்.

“நீங்கள் சேர்வை சமூகத்தைச் சார்ந்தவர்; நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவன்; என்னை சமமாக உட்கார வைத்து, நீங்கள் எனது தோளில் கை போட்டுப் பேசுகிறீர்கள். 25 ஆண்டுகளுக்கு முன், எனது சமூகம் தீண்டப்படாத சமூகம்; இன்று எனக்கு இந்த சம உரிமையைப் பெற்றுத் தந்தது பெரியார். அந்த உணர்வுதான் என்னை இயக்குகிறது.

ஏதோ ஒரு நாள் – இதே திருச்சியில் பெரியாரின் இறுதி ஊர்வலம் போகும். அப்போது எல்லோரும் கண்ணீர் விட்டு அழுவார்கள்; அப்போது நான் மட்டும் அழமாட்டேன். காரணம், பெரியாரை தண்டித்தவர்களுக்கு எல்லாம், சரியான பாடம் புகட்டி விட்டேன் என்ற மனநிறைவில் நான் மகிழ்ந்து நிற்பேன்” என்று கூறி விட்டு, நான் குலுங்கி குலுங்கி அழுதேன். எனக்கு முன்னாள் புகைப்பிடித்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர், சிகரெட்டை தூக்கி வீசி விட்டு அவரும் கண்ணீர் விட்டார்.

Wednesday, April 13, 2022

பெரியார் என்றும் வாழ்வார்

 "பெரியார் என்றும் வாழ்வார்" 

பேரறிஞர் அண்ணா, 1942 ஆம் ஆண்டு முதல், "திராவிட நாடு" இதழைக் காஞ்சிபுரத்திலிருந்து வெளியிட்டு வந்தார். அதில் அவர் எழுதிய அரசியல் கட்டுரைகள் அத்தனையும் வரலாற்றுக் கருவூலங்களாகத் திகழ்கின்றன. அத்துடன் "மன்னன் சிரமும் மக்கள் கரமும்", "ரோமாபுரி ராணிகள்", "ஆரிய மாயை" என்று அவர் எழுதிய கட்டுரைத் தொடர்களையும் அவ்விதழில் வெளியிட்டு வந்தார்.

புதுவையில் அண்ணாவின் நெருங்கிய நண்பராக இருந்தவர் கவிஞர் ச. சிவப்பிரகாசம் அவர்கள். இவர் திராவிட இயக்க இதழ்களில், கவிஞர் புதுவைச் சிவம் என்ற பெயரில் கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள் எழுதி வந்தார். தன்னுடைய நூல்களுடன், பெரியார், அண்ணா, பாரதிதாசன் ஆகியோரின் நூல்களையும் தனது "ஞாயிறு நூற்பதிப்பகம்" வழியாக வெளியிட்டு வந்தார்.

திராவிடநாடு இதழில், அறிஞர் அண்ணா அவர்கள் 'பரதன்' என்ற புனைப்பெயரில் எழுதிய "ஆரிய மாயை" என்னும் தலைப்பிலான கட்டுரைத் தொகுப்புகளை அண்ணாவின் அனுமதியுடன், முதன்முதலாகப் புதுச்சேரியில் (பிரஞ்சிந்தியா) இருந்து நூலாக வெளியிட்டவர் ச. சிவப்பிரகாசம். அண்ணாவின் முன்னுரையோடும், ஞாயிறு நூற்பதிப்பக உரிமையாளர் என்ற முறையில் ச. சிவப்பிரகாசம் எழுதிய பதிப்புரையோடும் "ஆரிய மாயை" நூல் 1947-ஆம் ஆண்டு, மார்ச்சு மாதம் வெளிவந்தது. விலை எட்டு அணா.

இந்நூலின் முதற் பதிப்பு இருக்கிறதா? என்று கேட்டுத் திராவிடர் கழகத் தலைவரும், விடுதலை இதழின் ஆசிரியருமான திரு. கி. வீரமணி அவர்கள் தகவல் அனுப்பியிருந்தார். நேற்று (11.4.2022) புதுவை வந்திருந்த அவரை, நேற்றுக் காலை, திராவிடர் கழக மாணவர் அணி நடத்திய "புதிய கல்விக் கொள்கை எதிர்ப்புப் போராட்டத்தில்" கலந்து கொண்டு, பின்னர் ஆசிரியரைச் சந்தித்த குழுவினரில் என் மகன் இள. கோவலனின் அறிமுகத்தின் போதுதான், அண்ணாவின் "ஆரியமாயை" நூலைப் பற்றிக் குறிப்பிட்டு, எனக்குத் தகவல் அனுப்பியிருந்தார் ஆசிரியர்.

நேற்று மாலை பொதுக் கூட்டத்திற்கு முன்பாக ஆசிரியர், திரு கி. வீரமணி அவர்களை, அவர் கோரிய அந்நூலுடன் சென்று சந்தித்தேன். நலம் விசாரிப்புகள் முடிந்து, அந்நூலைக் கையில் வாங்கியவுடன், ஆவலுடன் புரட்டிப் பார்த்து, அதன் பதிப்பக முகவரியான "அம்பலத்தாடு ஐயர் மடத்து வீதி" என்பதைப் பற்றிக் குறிப்பிட்டு, "இம்முகவரி அந்நாள் திராவிட இயக்கத் தலைவர்கள் நினைவில் எப்போதும் இருக்கும்" என்றார்.

அந்நூலில் எனது தந்தையார் கவிஞர் ச. சிவப்பிரகாசம் எழுதிய பதிப்புரையை அங்கிருந்த எல்லோருக்கும் கேட்கும்படி சத்தமாகப் படித்தார். ஆங்காங்கே சில இடங்களில் நிறுத்தி, சில விளக்கங்களையும் கூறினார். அதில் அறிஞர் அண்ணாவை, "தோழர் சி. என். அண்ணாதுரை" என்று குறிப்பிட்டிருந்ததைப் பார்த்து, "பாருங்க, எவ்வளவு தோழமை அவங்களுக்குள்ள" என்று பழைய நினைவுகளைக் கண்களில் தேக்கிக் கூறினார்.

"இந்நூலை, அப்போது நான் எட்டணாவுக்கு வாங்கினேன்" என்று சிறு குழந்தை போல மகிழ்ச்சி பொங்கக் குறிப்பிட்டவர், ஆனால் தற்போது அந்நூல் தன்னிடம் இல்லை என்று கூறி, என்னிடம் இருந்த நூலைப் பிரதி எடுத்து அனுப்பும் படிக் கேட்டுக் கொண்டார். "அனுப்புகிறேன் ஐயா" என்று கூறி விடைபெற்றேன். மனதிற்கு நிறைவான, நெகிழ்வான சந்திப்பாக அது அமைந்திருந்தது.

என் மாணவப் பருவத்தில் நான், பெரியார் மடியில் அமரும் வாய்ப்புப் பெற்றவன். பின்னர், பெரியார், அம்பேத்கரைப் படித்து அவர்களுடனேயே பயணப்பட்டுக் கொண்டிருப்பவன். நேற்று என் கண்களுக்குத் திரு. கி. வீரமணி அவர்கள், தாடி இல்லாத "பெரியார்" ஆகக் காட்சி தந்தார்.

 முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி.

அறிவோம் உள்ளாட்சி நிர்வாகம் பதிவு - வீட்டு வரி ரசீது

வீட்டுவரி ரசீது.

ஊராட்சி பதிவேடு எண் : 2  வீட்டு வரி ரசீது கிராம ஊராட்சிகளால் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளில் இரண்டாவது பதிவேடு வீட்டுவரி ரசீது ஆகும் கிராம ஊராட்சி படிவம் - 2 என்றும் இதனை குறிப்பிடுவார்கள்..

ஒவ்வொரு வீட்டிற்கும் வீட்டு வரி ரசீது வழங்கும்போது 2 படிகளில் (Copies) வழங்குவார்கள் முதல் படியான (Original Receipt)   அசல் ரசீது வீட்டு வரி செலுத்துவோருக்கு கொடுத்துவிடுவார்கள்.  மற்றொரு படியான பிரதி ரசீது (Office Copy - நகல் ரசீது - கார்பன் காப்பி - இரண்டாம் படி) ஊராட்சி அலுவலகத்தில் பராமரித்து பாதுகாத்து வர வேண்டிய ஆவணமாகும். இது ரசீது புத்தக வடிவத்தில் இருக்கும் முதல் படி கிழத்து கொடுக்கும் வகையில் துளையிடப்பட்டு இருக்கும். இரண்டாம் படி கிழிப்பதற்கான துளையில்லாமல் இருக்கும். கையப்பம் செய்யும்பொழுதும் எழுதும் பொழுதும் கார்பன் பேப்பர் வைத்து எழுதுவார்கள் அது கார்பன் பேப்பர் முடிந்தவரை இரண்டு பக்கமும் எழுதும் வகையில் இருக்கும். ஏனென்றால் ஏதாவது அடித்தல் திருத்தல் செய்தால் வீட்டு உரிமையாளருக்கு வழங்கப்படும் அசல் ரசீதிலும் அந்தத் திருத்தங்கள் இருக்கும் முறைகேடுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்காது என்பதற்காக இரண்டு பக்கமும் அச்சாகும் வகையில் கார்பன் பேப்பர்  இருக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் ஒயிட்னர் பயன்படுத்த கூடாது. பென்சிலில்  எழுதக் கூடாது. திருத்தங்கள் ஏதாவது செய்தால் உரிய அதிகாரம் உடையவர் அந்த இடத்தில் முழுமையாக கையொப்பம் செய்ய வேண்டும். 

ஒராண்டு கால ஒரு கிராம ஊராட்சி அனைத்து வீட்டு வரி இரசீதுகளையும் இணைத்தால் அது கிராம ஊராட்சியின் பதிவேடு எண் 2 ஆகும். அதாவது படிவம் 2 வீட்டு வரி ரசீது அடிக்கட்டை கிராம ஊராட்சிகள் பதிவேடு இரண்டாக மாறிவிடும். 

வீட்டு வரி ரசீது புத்தகத்தை உள்ளாட்சி நிர்வாகம் தன்னிச்சையாக அச்சகத்தில் கொடுத்து அச்சடித்துக்கொள்ள முடியாது மாவட்ட கூட்டுறவு அச்சகத்தில் கொள்முதல் செய்ய வேண்டும். அதற்கு கிராம  ஊராட்சியின்  கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் பெற வேண்டும். கிராம ஊராட்சியின் பதிவேடு  ல் புத்தங்களின் எண்ணிக்கையை வரவு வைக்க வேண்டும் ஏற்கனவே எத்தனை புத்தகங்கள் உள்ளது புதிதாக தற்சமயம் எத்தனை புத்தகங்கள் வந்துள்ளது எத்தனை புத்தகங்கள் பயன்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ளது என்கின்ற விபரங்கள் இந்த பதிவேட்டில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். 

கால முறைப்படி உதவி வட்டார வளர்ச்சி அலுவலர்  (ABDO ஊராட்சி ஒன்றிய விரிவாக்க அலுவலர்)  மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் (ZABDO) கிராம ஊராட்சிகளின் வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO-VP) ஆகியோர் வீட்டு வரி ரசீது புத்தகங்களை அவை தொடர்பான மற்ற ஆவணங்களை ஆய்வு Inspection  செய்ய வேண்டும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (தணிக்கை) ABDO Audit   ஊராட்சி நிதி தணிக்கை துறை அலுவலர்கள் local fund audit  ஆகியோர் ஒவ்வொரு வருடமும் வீட்டு வரி ரசீது உள்ளிட்ட ஆவணங்களை தணிக்கை audit  செய்வார்கள் தணிக்கை அறிக்கை கிராமசபை ஒப்புதலுக்கு வைக்கப்படும்.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் வீட்டு வரி ரசீது புத்தகங்கள் கிராம சபையின் பார்வைக்கு வைக்கப்படும் ஒவ்வொரு கிராம சபையிலும் கடந்த மூன்று மாதங்களில் வீட்டு வரி எவ்வளவு வசூலாகியுள்ளது உள்ளது என்ற விபரம் கிராமசபை பார்வைக்கு வைக்கப்படும். 

தினசரி வீட்டு வரி வசூல் தொகை உள்ளிட்ட அனைத்து வகையான வசூல் தொகையையும் ஊராட்சி செயலாளர்கள் விரைவாக ஊராட்சியின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் இதில் எந்த வகையிலும் காலதாமதம் இருக்கக்கடாது காலதாமதமாக வங்கி கணக்கில் செலுத்தினால் குற்ற வழக்கு நடவடிக்கைகளுக்கு உள்ளாக வேண்டிய சூழல் ஏற்பட்டுவிடும் 

கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட ரசீதுகள் கொடுப்பது சரியானது.

கணினி மயமாக்கப்பட்ட கிராம ஊராட்சிகளில் கம்ப்யூட்டரில் பிரிண்ட்  எடுத்து வீட்டு வரி ரசீது வழங்குவது சரியானது. இரண்டாம்படி வீட்டு வரி ரசீதுகளை  பைண்டிங் செய்து கிராம ஊராட்சியின் பதிவேடு 2 ஆக பராமரிப்பார்கள்.

Prathap selvam பதிவு....

Tuesday, April 12, 2022

நாகசாமிக்கு மா.சோ.விக்டர் அறைகூவல்

 ==================================

நாகசாமி எம்முடன் விவாதத்திற்கு வரத் தயாரா?

==================================

மொழியல் அறிஞர் மா. சோ. விக்டர்

==================================

“இவர்கள், குறிப்பாக அந்தணர்கள், தங்களுக்கு ஒன்றும் தெரியாது என ஒத்துக் கொள்ளமாட்டார்கள், சிறிதும் தயங்காமல், ஆடம்பர ஒலி கொண்ட சொற்களை அளந்து பார்த்து, தங்கள் மனதில் தோன்றும் முதல் சொற்களை, அவை உண்மைக்குப் புறம்பாக இருப்பினும், முழு அதிகார அரியணைக் கூற்றாகக் கொடுப்பதற்கு அஞ்சமாட்டார்கள். இக்கூற்றுகள், எத்துணை பொய்யானவை என்பது, அவர்களுடைய ஆசிரியர்கள் நூல்களை, இங்கு மங்கும் படிக்கும் போது தெளிவாகத் தெரியும்.” - வீரமா முனிவர்.1

300 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்த பிராமணர்கள் பற்றி, வீரமாமுனிவர் எழுதி வைத்த குறிப்பு இது!

“தமிழ் கலை மற்றும் கலாச்சாரத்தில் எனது பணிகள் என்பது, கடந்த 60 ஆண்டுகளாக உலகம் அறிந்தது. எனவே, என்னை தமிழ் மொழிக்கு எதிரானவன் என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியது, ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல”.

“எனது கருத்தே அல்ல: திருக்குறள் வேதங்களிலிருந்து வந்தது” என்று நான் தெரிவித்ததாக, ஸ்டாலின் கூறியுள்ளார். இது எனது தனித்த பார்வையல்ல. எனக்கு முன்பாக, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மிகப்பெரிய அறிஞர்களின் கருத்தாகும். தமிழைக் கற்றுணர்ந்த மிகப் பெரிய அறிஞர்களான பாதிரியார் பெஸ்கி, எல்லிஸ், ஜி.யு. போப், உ.வே. சாமிநாதய்யர் ஆகியோரின் கருத்துகளையே எதிரொலித்தேன். போப் தனது புத்தக்கத்தில், பகவத் கீதையை, திருக்குறள் பின்பற்றுகிறது எனத் தெரிவித்து இருக்கிறார். எனவே, திருக்குறள் தொடர்பாக, தி.மு.க. தலைவர் ஸ்டாலின், தமிழ் அறிஞர்களின் விளக்கத்தைக் கோரியிருக்க வேண்டும். 300 ஆண்டுகள் பழமையான தமிழ் வரலாற்று ஆய்வுகளைப் பற்றி, மு.க. ஸ்டாலின் அறிந்திருப்பார் என நான் கருதவில்லை. உலகத் தமிழ் அறிஞர்கள் மத்தியில், அவர் தமிழ் மொழி குறித்து தனது அறியாமையை வெளிபடுத்திவிட்டார்.” 

- தினமணி, 08.03.2019.

மேற்கண்ட மறுப்பு அறிக்கை, தமிழ்நாடு தொல்லியல் துறை மேனாள் இயக்குநர் திரு. நாகசாமி அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. 

திரு. மு.க. ஸ்டாலினுக்கு தமிழைப் பற்றி எதுவும் தெரியாது என்ற மிகப்பெரிய உண்மையை, திரு. நாகசாமி கண்டுபிடித்துவிட்டார் எனலாம். திருக்குறள், பகவத் கீதையின் வழி நூல் என்பதை, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருந்த அறிஞர்கள் கூறியிருந்தார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

மேற்கண்ட அறிஞர்களில் பெஸ்கி என்ற வீரமாமுனிவர் மட்டும் 300 ஆண்டுகளுக்கு முன்பு அறியப்பட்டவர். மற்றவர் அனைவரும், கடந்த ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்திருந்தவர்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் கூறிய செய்திகளை, திரு. நாகசாமி தெரிவிக்கவில்லை. அவ்வாறு எவரும் கூறவில்லை என்பதுதான் உண்மை நிலை.

பாதிரியர் பெஸ்கி, அந்தணர்களைப் பற்றிக் கொண்டிருந்த மதிப்பீடு, திரு. நாகசாமி அவர்களுக்கு பொருந்தும். பெஸ்கி என்கிற வீரமாமுனிவர், தம் வாழ்நாளில் படைத்துள்ள 36 நூல்களில், திருக்குறள், பகவத்கீதையின் வழிநூல் என்று எங்குமே குறிப்பிடவில்லை. முழுப் பொய்யைக் கூறி, திரு. நாகசாமி, இல்லாத சான்றுகளை, இருப்பதாகக் கூறுகிறார். 

எல்லிஸ், ஜி.யு.போப் ஆகிய இரு ஐரோப்பியர்களும் தமிழின்பால் பற்று கொண்டவர்கள். கால்டுவெல்லைப் போல், சமற்கிருதத்தால் தமிழ் வளம் பெற்றது, சமற்கிருதத்தின் உதவியின்றி, தமிழால் தனித்தியங்க முடியாது என்று அவர்கள் சொன்னதாகப் பதிவுகள் இல்லை. எல்லிஸ், திராவிடம் என்ற சொல்லையே பயன்படுத்தாதவர்.

திரு. உ.வே. சாமிநாதய்யரைப் பற்றி முரண்பாடான செய்திகள் உள்ளன. ‘தமிழ்த்தாத்தா’ என்று அனைவராலும் போற்றப்படும் திரு. உ.வே.சா வின் மறு பக்கம் பற்றிப் பலரும் அறியாதிருக்கின்றனர். புறனானூற்றுப் பாடல் ஒன்றில், மூலத்தையே அவர் திருத்தியிருப்பது, அண்மையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது 2. 

‘என் சரித்திரம்’ என்ற தம் வரலாற்று நூலில், பெருமாள் கோயில் இருப்பதால், அரியலூர் என்ற பெயர் வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 1830களில், ஆங்கிலேயர்  வெளியிட்டுள்ள கெசட்டில், அரி என்ற சொல்லுக்குப் பனைமரம் என்றும், பனை மரங்கள் மிகுந்திருந்ததால், அவ்வூர், அரியலூர் என்று சொல்லப்பட்டது என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

பிரம்மாவை வணங்கி வந்த நடைமுறை, சங்க காலத்திலேய இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். “படைத்தோன் மன்ற அப்பண்பிலான்” என்ற புறநானூற்று வரியில் உள்ள, படைத்தோன் என்ற சொல்லுக்கு, பிரம்மன் என்று உரையெழுதியுள்ளார். இவ்வுலகில் படைத்ததாகக் கூறப்படும் இறைவன் பண்பில்லாதவன் என்று, பக்குடுக்கையார் சாடுகிறார். பண்பில்லாத கடவுளாக, பிரம்மனை திரு. உ.வே.சா கூறுகிறாரா என்று தெரியவில்லை. 

‘பிள்ளையார் வணக்கம்’ சங்க காலத்திலேயே இருந்தது என்று மற்றொரு உண்மைக்கு மாறான தகவலை, திரு. உ.வே.சா முன் வைக்கிறார். உ என்ற எழுத்து பிள்ளையாரைக் குறிப்பதாகவும் கூறுகிறார் 5.  தமிழரின் உலகளாவிய மாந்த நேயத்தைக் கொச்சைப்படுத்தும் விளக்கம் இது!

தமிழ் இலக்கியங்கள், உலகம் என்ற சொல்லை முதன்மைப்படுத்தியே, தொடங்குகின்றன. சங்க இலக்கியங்கள் முதல் இடைக்கால இலக்கியங்கள் வரை இந்நடை பொருந்தும்6. பிற்காலத்தில், உலகம் என்ற சொல்லைச் சுருக்கி, உ என்ற எழுத்தை மட்டும், தமிழர்கள் பயன்படுத்தி வந்தனர். பிள்ளையார் வணக்க முறை, பல்லவர் காலத்திலிருந்து தொடங்குவதாக வரலாறு கூறுகிறது.

முரண்பாடான செய்திகளைத் தரும் திரு. உ.வே.சாவை, திரு நாகசாமி, தன் கருத்துக்கு வலிமை சேர்க்க முயல்கிறார். எதைச் சொன்னாலும் தமிழர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற காலம் ஒன்று இருந்தது. இன்று, ஆய்வுகள் மலர்ந்து, உண்மைகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன. திரு. நாகசாமி, பழைய சிந்தனை களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

“தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு, தமிழ் மரபில் தோன்றிய தமிழனால் தான், தமிழ் மொழியின் தொன்மையையும், நுட்பத்தையும் ஆழத்தையும் ஆய்வு செய்ய இயலும். அயன்மொழிக்காரர்களும், வெளி நாட்டவரும் தமிழர் வரலாற்றையும் தமிழையும் ஆய்வு செய்வது, நுனிப்புல் மேய்வதையொக்கும்” என்று தேவநேயப் பாவணர் உறுதிபடக் கூறுகிறார். வீட்டில் ஒரு மொழியும், நாட்டில் ஒருமொழியும், ஏட்டில் ஒரு மொழியும் கொண்டுள்ள திரு. நாகசாமி, தமிழ்மொழியையும், தமிழர் வரலாற்றையும் ஆய்வு செய்யத் தகுதியற்றவர். அவர் துணைக்கு  அழைத்திருப்பவர்களும் அவ்வாறே என்க.

ஒரு தொல்லியலாளருக்கு, பன்முகத் திறமைகள் வேண்டும். சுவர்களில் உள்ளவற்றை தூசி தட்டி, படித்துப் பார்ப்பது மட்டும் தொல்லியலாளரின் பணியன்று. தமிழரின் பல்லாண்டுக்கால வரலாற்றை, கி.மு. 500 ஆண்டுகளில் சுருக்கி, அதனை அரசாங்க ஒப்புதலோடு பதிவு செய்தவர், திரு. நாகசாமி அவர்கள். இடைக்காலக் கல்வெட்டுகளையே, தமிழ்நாடு தொல்லியல் துறை முதன்மைப் பணியாகக் கொண்டு ஆய்வு செய்துள்ளது. 

பனிக்காலம், பனி உருகல் காலம், கண்டப் பெயர்ச்சி, நிலத்தடித் தட்டுகளின் பெயர்ச்சி, ஆழிப்பேரலைகளுக்கான தோற்றக் காரணங்கள் பற்றிய செய்திகள் எவையும் தமிழ்நாட்டுத் தொல்லியலாளர்கள் அறிந்திருக்கவில்லை. சங்க இலக்கியங்களிலும், தமிழ் மொழியின் மூலம், வேர் போன்ற நுட்பமான துறை களிலும் நாகசாமிக்குப் பயிற்சி இல்லை. 

ஆதிச்சநல்லூரின் பொருநையாற்று நாகரிகம், மதுரை, கீழடியின் வையையாற்று நாகரிகம், சிந்துவெளி நாகரிகம், யூப்ரடீஸ் - தைகிரீஸ் சமவெளி நாகரிகம், நைல் ஆற்று நாகரிகங்கள், ஒன்றுக்கொன்று தொடர்புடைய, பழந்தமிழர் நாகரிகமே என்பதை திரு. நாகசாமி அறிந்திருக்கமாட்டார். சுமேரிய, பாபிலோனிய, எபிறேய மொழி இலக்கியங்களில், ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்கள், திரிந்தும் திரியாமலும் இருப்பதையும் திரு. நாகசாமி அறிந்திருக்கவில்லை. 

இவ்விலக்கியங்களில், பழந்தமிழர் வரலாறு பொதிந்து கிடப்பதை, தொல்லியலாளர்கள் அறிய முயற்சிப்பது மில்லை. கிணற்றுத் தவளைகள் போல், கடந்த 100 ஆண்டுகளாக, சொன்னவற்றையே, திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கும் தொல்லியல் துறையை, பின்னோக்கித் தள்ளிச் சென்ற பெருமைகளுக்கு உரியவர் திரு. நாகசாமி.

அவருக்குத் தெரிந்தவை, சமற்கிருதம், வேதங்கள், பகவத் கீதை, இதிகாசங்கள், புராணங்கள் போன்றவையே. சமற்கிருதத்திலிருந்தே தமிழ் மொழி தோன்றியது என்று, தமிழ்நாட்டு அறிஞர்கள் எவரும் இதுவரை சொல்லவில்லை. தமிழ்நாட்டில் பிறந்து, தமிழைப் படித்து, தமிழர்களால் வாழ்வு பெற்ற தமிழரல்லாதவர்கள் தாம் அவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கின்றனர். 

மொழி, வரலாறு பற்றி ஆய்வு செய்த திரு. நாகசாமி, சமற்கிருத மொழியின் தோற்றக்காலம் பற்றி, விளக்க முன்வருவதில்லை. தமிழின் தொன்மையையும் அவர் அறிந்திருக்கவில்லை. அரைவேக்காட்டு அறிவுடன், திரு. நாகசாமி கூறும் செய்திகளை, தமிழர்கள் ஏற்றுக் கொள்ளவேண்டியதில்லை. திரு. நாகசாமியை விட, திறமை மிக்க, அறிவு சார்ந்த வரலாற்று மொழியில் துறை சார்ந்த ஆய்வாளர்கள், தமிழகத்தில் உள்ளனர் என்பதை, திரு. நாகசாமி மறந்துவிட வேண்டாம்.

தமிழ்ச் சொற்களால் கி.மு.2000 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட ஒரு கமுக்க மொழி. மன்னர்களுக்கும், பிற்காலத்தில் வணிகர்களுக்கும் பயன்பட்டிருந்தது. இக்கமுக்க மொழி பற்றிய செய்திகள் மேலை நாகரிகங்களிலும் காணப் படுகின்றன 7. 

சிந்து வெளி நாகரிக மறைவுக்குப் பின் தோன்றிய வட்டார அரசுகள், தங்கள் ஆவணங்களை, கமுக்க மொழியில் பதிவு செய்து வைத்திருந்தன. அடுத்தடுத்து இந்தியாவுக்குள் நுழைந்த ஊணர்கள், பாரசீகர்கள், மங்கோலியர்களின் மொழிகள், இக்கமுக்க மொழியில் கலந்தன. தொடக்கத்தில் ஆரியர்களுக்கு இம்மொழி பற்றிய தெளிவு இருந்ததில்லை. பிற்காலத்தில் அக்கமுக்க மொழிகளுடன் கலந்து, பிராகிருதம் என்ற மொழி உருவாயிற்று8. 

பிராகிருதம், கிரேக்கர்களின் வருகைக்குப் பின், சமற்கிருதமாக உருப்பெற்றது. சமற்கிருதம் (SAMSKRU) எனத் திரிந்தது. ஆங்கிலத்தில் சான்ஸ்கிரீட் எனப்பட்டது. கிரேக்கர்களின் வருகைக்கு முன் அம்மொழிக்கு, கீர்வாணம் என்ற பெயர் இருந்ததாக, சிவத்தியாநாநந்த சுவாமிகள் தனது, ரிக்வேத சம்ஹிதை என்ற நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார் 11. அக்கால அளவுகளில், சமற்கிருதத் துக்கான வரிவடிவம் கண்டறியப்படவில்லை. 

சமற்கிருத வேதங்கள் மற்ற இலக்கியங்கள் அனைத்தும் வாய் மொழியாகவே, தலைமுறைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டன. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில். குசராத்தில் ஆட்சி செய்த ருத்திர தாமன் காலத்தில்தான், முழுமை செய்யப்படாத சமற்கிருத எழுத்துக்களைக் கொண்ட கல் வெட்டு, முதன் முதலில் அறியப் படுகின்றது. 

கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்குப் பிறகே, வாய் மொழியாகச் சொல்லப்பட்ட வேதங்கள் உள்ளிட்டவை, எழுத்து வடிவில் பதிவு செய்யப்பட்டன. இந்தச் செய்திகள் பற்றியெல்லாம், திரு நாகசாமி உள்ளிட்ட தொல்லியலாளர்கள் வாய் திறப்பதில்லை.

வேதங்களில் தமிழ்ச் சொற்கள் காணப்படுகின்றன என்று பலர் கூறுவதுண்டு. வேதங்களே தமிழில்தான் எழுதப்பட்டன என்ற கருத்தும் உண்டு. இந்தியர்களுக்கு,  ஆரியர்கள்தாம், அறிவியல், கணக்கியல், வானியல் போன்ற வற்றைக் கற்றுத் தந்தனர். தமிழரும் அவர்களிடமிருந்தே கற்றனர் என்று திரு. நாகசாமி கூறி வருகிறார். 

இதற்கு மாறான செய்தியை, சமற்கிருத அறிஞர், மோனியர் வில்லியம்ஸ் கூறுகிறார் 12. வேதத்தில் சொல்லப்பட்டுள்ள வானியல், அறிவியல் தொடர்பான செய்திகளுக்கும் ஆரியர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றும், அவர்கள் பஞ்சாபில் குடியேறுவதற்கு முன்பே (4000 - 2500), இந்தியப் பழங்குடிகள் அவற்றை அறிந்திருந்தனர் என்றும், அச்செய்திகளையே, 1400 - 1000 ஆண்டுகளில் வேதத்தில்  இணைத்துக் கொண்டனர் என்றும், ஆரியர்கள் கூறிவரும் பொய்யைப் போட்டு உடைக்கிறார். மோனியர் வில்லியம்ஸ்

வாய்மொழியாகச் சொல்லப்பட்டு வந்த வேதங்கள், கி.பி. 200 ஆண்டுகளுக்குப் பிறகே, எழுத்து வடிவம் பெற்றன என்று டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கூறுகிறார். ரிக் வேதத்தின் 10 ஆவது அதிகாரமான  புருஷ சூக்தம், கி.பி 500 ஆண்டுகளுக்குப் பிறகே, வேதத்தில் இணைக்கப்பட்டதாகவும் கூறுகிறார். முதல் பகுதிகளில் காணப்படும் மொழி நடையும், 10ஆவது சூக்த மொழி நடையும் மாறு பட்டுள்ளதையும் சுட்டிக் காட்டுகிறார் 13. இவற்றுக் கெல்லாம், தொல்லியலாளர்கள் மறுப்போ, விளக்கமோ கூறுவதில்லை. 

முன்னர் சொல்லப்பட்ட செய்திகளுடன், எழுத்து வடிவில் கொடுக்கப்பட்ட காலங்களில், அந்தச் சூழ் நிலைக்கு ஏற்ப புதிய செய்திகளையும் இணைத்துள்ளனர். அவ்வாறுதான், மனுவின் சட்டங்கள், வங்காள ஆளுநரும், நடுவர் மன்றத் தலைவருமான வில்லியம் ஜோன்சிடம், மூலத்தை விட, விரிவாக இணைக்கப்பட்டுக் கொடுக்கப்பட்டன. கி.பி.1780களில் தான் மனுவின் சட்டங்கள் எழுத்து வடிவம் பெற்றன.

மகாபாரதக் கதை, வாய் மொழியாகவே சொல்லப் பட்டு வந்த நிலையில், கி.பி. 17ஆம் நூற்றாண்டு வரையிலும் கூட, மூலக்கதையோடு பல கிளைக் கதைகள் இணைக்கப்பட்டன என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பகவத் கீதையும் அவ்வாறு, கி.பி. 8 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு, இணைக்கப்பட்டது. திருக்குறள், பகவத்கீதையின் தழுவல் என்று கூற, எவ்வகையான சான்றுகளும் இல்லை. 

கருத்தியல் முரண்பாடுகளும் மிகுதியாக உள்ளன. “உலகில் சாதிக் கட்டமைப்புகள் தகர்க்கப்படும்போது, மீண்டும் ஒரு அவதாரம் எடுத்து வந்து, அக்கட்டமைப்பைத் தகர்த்தவர்களை அழிப்பேன். ஏனெனில், சாதிக் கட்டமைப்பையும் வர்ணாசிரம தர்மத்தையும் உருவாக்கியவன் நான்தான்,” என்று கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார் என்று பகவத் கீதை கூறுகிறது. சாதியமைப்பை, பகவத் கீதை நேர்மைப்படுத்துகிறது. திருக்குறள், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறுகிறது. அன்பைக் கற்பிக்கும் திருக்குறள், அழிவுகளை நேர்மைப்படுத்தும் பகவத் கீதையின் தழுவல் என்பது, அறியாமையின் உச்சகட்டம்!

பகவத் கீதை, கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் தொகுக்கப் பட்டது எனக் கூறப்படும் செய்திகளை மறுத்து, அந்நூல் எக்காலத்தில் எழுதப்பட்டது என இதுவரை, திரு. நாகசாமி விளக்கம் தரவில்லை. தமிழரின் போர் முறைக்கு மாறுபட்டு, போர்களில், சூழ்ச்சி, வஞ்சித்தல் உள்ளிட்ட எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடலாம் என்றும், உறவுகளைக் கொல்வது கூட தவறில்லை என்றும் பகவத் கீதை கூறுவதை அனைவரும் அறிவர்.

திருக்குறள், கி.மு.31 ஆண்டுகளில் எழுதப்பட்டது அல்லது, திருவள்ளுவரின் பிறப்பாண்டு என்று கருதப்பட்டது. உரோமானிய தத்துவ ஞானியும், கவிஞருமான செனகா (Seneka), திருக்குறள் பற்றியும், திருவள்ளுவர் பற்றியும், இலங்கையைப் பற்றிய தன் குறிப்புகளில் எழுதியுள்ளார் என பேராசிரியர் மருதநாயகம் மேற் கோள் காட்டுகிறார். திருக்குறளின் பெருமையும் புகழும் உரோமைக்கும் சென்றடைந்து, அதனின்றும் மேற்கோள் சொல்லப்பட்டிருப்பதால்,கி.மு. 300 ஆண்டுகளில் திருவள்ளுவர் வாழ்ந்திருக்கலாம் என்ற கருத்து உறுதிப் படுகின்றது. இச்செய்திகளையெல்லாம் திரு. நாகசாமி அறிந்திருக்கமாட்டார்.

இலங்கையில், கொழும்புக்கு தென்கிழக்கேயுள்ள ஓரிடத்தில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அங்கு கிடைத்த எலும்புக் கூடுகள் மற்றும் பொருட்களை கார்பன் முறைப்படி ஆய்வு செய்ததில், அவ்வெலும்புக் கூடுகள், கி.மு. 37000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருந்த மக்களுடையது எனக் கண்டறியப் பட்டுள்ளது 14.  தமிழரின் தொன்மையை விளக்கும் சான்று இது!

எவ்வகையிலும் பகவத் கீதையினின்றே கருத்துகளைப் பெற்று திருக்குறள் எழுதப்பட்டது என்பதற்கானச் சான்றுகளை, திரு.நாகசாமி வெளியிடட்டும். 1000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தவர்கள் கூறியதையே நான் எடுத்துக் கூறினேன் என்று தப்பிக்க முயல வேண்டாம். தொடக்கத்தில் வீரமாமுனிவர் கூறியுள்ள உண்மைக்குப் புறம்பான செய்திகளைக் கூற, அந்தணர்கள் அஞ்ச மாட்டார்கள் என்ற கூற்றினை மீண்டும் படித்துப் பார்க்கவும்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் பற்றியும் அந்நிறுவனம் அளிக்கும் 5 இலக்கம் பணத்துடனான விருது பற்றியும் திரு. மு.க. ஸ்டாலின், தம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அத்தேர்வுக் குழுவினின்று திரு. நாகசாமியை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இக்கருத்து வரவேற்கத் தக்கது மட்டுமில்லாமல் பாராட்டத் தக்கதும் கூட எனலாம்.

செம்மொழி நிறுவனத்தில் அளிக்கப்படும் விருதுகள், மற்ற விருதுகளைப் போல் முரண்பாடுகளைக் கொண்டவையே. மத்திய அரசின் ஆட்சியிலுள்ளவர்கள் விரும்பியவர்களுக்கே தொல்காப்பியர் விருதுகள் அளிகப்படுகின்றன. மற்ற விருதுகளையும் போல், தகுதி வாய்ந்த தமிழர்களுக்குக் கிடைப்பதில்லை.

கோவையில் நடை பெற்ற செம்மொழி மாநாட்டில். திரு. ஐராவதம்  மகாதேவன் தலைமையில், சிந்துவெளி நாகரிகம் பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது. திரு. மகாதேவனின், மாணாக்கர்கள் என்று அறிமுகப்படுத்தப்பட்ட இருவர், கட்டுரை படித்தனர். அக்கட்டுரையில், சிந்துவெளி மொழியில், தமிழ்ச் சொற்களை விட, கன்னடச் சொற்களே மிகுதியாகக் காணப்படுகின்றன என்று படித்தனர். பார்வையளர்கள் திகைத்துப் போயினர். 

செம்மொழி மாநாட்டில், தமிழ்மொழி சிறுமைப் படுத்தப்பட்டது. இக்கட்டுரைகளை வடித்துக் கொடுத்த திரு. ஐராவதம் மகாதேவனுக்கு, தொல்காப்பியர் விருது, செம்மொழி நிறூவனத்தால் வழங்கப்பட்டது. ஒரு கட்டத்தில், அந்நிறுவனத்தின் இயக்குநர், நிதி காப்பாளர், பதிவாளர் ஆகிய மூன்று பேருமே, தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிராதவர். இந்நிகழ்வு, காங்கிரஸ் ஆட்சியில்தான் நடை பெற்றது.

தமிழுக்குச் செம்மொழித் தகுதி வழங்க வேண்டும் என்று, திமு.க அரசு காங்கிரஸ் அரசுடன் போராடிப் பெற்றதாக விளம்பரம் செய்யப்பட்டு, விழாக்களும் எடுக்கப்பட்டன. இத்தகுதிச் செய்தியை அறிவித்த மாந்த வள மேம்பாட்டுத் துறை அமைச்சர், தமிழ் மொழியின் வரலாறு, 1000 ஆண்டுகள் பழமையுடையது என்று கூறினார். தமிழ்நாட்டில் எதிர்ப்புகள் தோன்றவே, 1500 ஆண்டுகள் என வைத்துக் கொள்ளுங்கள் என்றார். (செயகாந்தன், தமிழை நாய்மொழி என்று கூறி, பின்னர் சிங்க மொழியென்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார்). மீண்டும் எதிர்ப்புகள் தோன்றவே, தமிழுக்குத் தொடர்பில்லாத ஆ.ராசா என்ற அமைச்சர், மாந்தவள மேம்பாட்டுத் துறையின் அறிவிப்பை வரவேற்று, ஆண்டுக் கணக்கை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும், இந்த ஆணை கிடைத்ததே போதும் என்றும் அறிக்கை விட்டார். திரு. கருணாநிதி அவர்களால் விளக்கம் தர இயலாத நிலையில், ஆ. ராசா விளக்கமளித்தார். முதற்கோணலே, அடுத்தடுத்த கோணல்களுக்கு மூலமாக அமைந்தன.

திரு. கருணாநிதியை, தலைவராகக் கொண்டு, செம்மொழி நிறுவனம் பதிவு செய்யப்பட்டது. ஆட்சி மாறி செயலலிதா முதல்வராக வந்துவிட்டால், தலைவர் பதவி அவருக்குப் போய்விடுமே என்ற அச்சத்தின் காரணமாக, பதிவுச் சட்ட வரைவுகள் பலமுறை திருத்தப் பட்டன. இவற்றை எவரும் சொல்லி நான் எழுதவில்லை. தொடக்கத்தில், 5 ஆண்டுக்காலம், அந்நிறுவனத்துக்குச் சென்று வந்தவன் நான். உண்மையில் அந்நிறுவனத்தின் தலைமை, மாந்த வள மேம்பாட்டு அமைச்சகத்துக்கே உரியது. திரு. கருணாநிதி, தமக்குக் கீழ் ஐம்பெருங்குழு, எண்பேராயம் என்று இரு குழுக்களை அமைத்துக் கொண்டார். அக்குழுக்களில் இடம் பெற்றிருந்தவர்களில் எவரும் தமிழஞர்கள் இல்லை. அவர்கள் அனைவரும் திரு. கருணாநிதியின் அன்பிற்குரியவர்கள். தொடக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும், 20 கோடிகள் அளவில் தொகைகள் வந்தன. அத்தொகை, எவ்வாறு செலவு செய்யப்பட்டிருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன். 

தமிழ் மொழியை ஆய்வு செய்வதில், சரியான திட்டமிடல் இல்லாததால், திட்டம் தீட்டத் தகுதியானவர்கள், அங்கு இல்லாததால், ஒவ்வொரு ஆண்டும், பல கோடிகளை, டெல்லிக்கே திருப்பி அனுப்பினர்.

தொடர்ந்து, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளுக்கும் காங்கிரஸ் அரசு செம்மொழித் தகுதிகளை வழங்கியது. அழகிப் போட்டியில் அனைவருக்கும் முதல் பரிசு வழங்கப்பட்டதை ஒப்பு நோக்குக. மலையாளம், செம்மொழித் தகுதியுள்ள மொழியென்பதை, திரு. ஐராவதம் மகாதேவன் தான் கேரள அரசுக்கு எழுதிக் கொடுத்தார். 

தமிழுக்குத் தலையையும், கன்னடத்துக்குத் தோளையும், மலையாளத்துக்குக் கைகளையும் காட்டியவர் திரு.மகாதேவன். இவருக்கு மட்டும் செம்மொழி நிறுவனம் ஆய்வுக்காக பல இலட்சம் கொடுத்தது. செம்மொழி நிறுவனம் ஒரு குழுவின் சொத்தாகவே மாறிப்போனது.

பாரதிய சனதாக் கட்சி, ஆட்சிக்கு வந்ததும், காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டையே தொடர்ந்தது. தம் பங்குக்கு பல உதவிகள் செய்தனர். விருதுகள் வழங்கினர். தி.மு.க. முற்றிலுமாக அந்நிறுவனத்திலிருந்து விடுவிக்கப் பட்டது. திரு. கருணாநிதியுடன் ஏறக்குறைய 50 ஆண்டுகள் உடனிருந்த திரு. நாகசாமி பற்றி, திரு. ஸ்டாலினுகுத் தெரியாதா? கடந்த 50 ஆண்டுகளில், தமிழ் எவ்வாறு தமிழகத்தில் முடக்கப்பட்டுள்ளது என்பதை தமிழர்கள் அறிந்திருக்கிறார்கள். திராவிடக் கட்சிகள், தமிழைப் போற்றி வளர்ப்பதாக உறுதி கூறி ஆட்சிக்கு வந்து, ஆங்கிலப் பள்ளிகளைத் திறந்தனர். அவர்களுக்கு ஆங்கிலம் வளமை சேர்த்தது.

இன்று, திரு. ஸ்டாலின், திரு. நாகசாமியை எதிர்ப்பது, பா.ஜ.க.வை குற்றம் கூறுவதற்காக மட்டுமே என்க. ஆரியத்தைத் தமிழகத்தின்று அகற்றியே தீருவோம் என்றவர்கள், பின்னர் எவ்வாறு அவர்களுடன் சமரசம் செய்து கொண்டார்கள் என்பதை நாடறியும். 

பண்டாரம், பரதேசிகள் என்று கூறியவர்கள், பின்னர் நண்பர்களானர்கள். கூடாநட்பு கேடாய் முடியும் என்றவர்கள், பின்னர் தோழமை கொண்டனர். திராவிடம் பேசும் திரு. ஸ்டாலினும், தேசியம் பேசும் திரு. நாகசாமியும், அரசியலுக்கான அறிக்கைப் போர் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களால் தமிழுக்கோ, தமிழ்நாட்டுக்கோ எப்பயனும் ஏற்படப் போவதில்லை. தமிழர்களைப் பகைவர்களாகக் கருதும் இரண்டு தேசியக் கட்சிகளும், தமிழ் நாட்டுக்கு ஒன்றும் செய்யப்போவதில்லை. தமிழர்கள் விழிப்புணர்வு பெறுவதைத் தவிர, இன்று வேறு வழிகள் இல்லை.

திரு. நாகசாமி, நூல்களையும், அறிக்கைகளையும் வெளியிடுவதை நிறுத்திக் கொண்டு, சமற்கிருதம், தமிழ், பகவத் கீதை, தமிழர் வரலாறு, ஆரியர் வரலாறு பற்றி, பொதுமக்கள் மத்தியில் அல்லது தொலைக்காட்சி ஊடகங்கள் வாயிலாக வெளிப்படையான விவாதத்துக்கு முன் வரவேண்டும். திரு. நாகசாமியின் பொய்யான, கற்பனையான, ஒரு சமூகத்தை உயர்த்தும் உள்நோக்கம் கொண்ட பிதற்றல்களை, தமிழறிஞர்கள் சந்திக்கக் காத்திருக்கின்றனர். 

ஒன்று அவர் விவாதமேடைக்கு வரவேண்டும் இல்லையேல், இதுபோன்ற வரலாற்றுத் தொடர்பற்ற கற்பனைச் செய்திகள் வெளியிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆட்சி அதிகாரங்கள், அரைகுறைகளை வேண்டுமானால் வளைத்துக் கொள்ளலாம், அறிஞர்களை வளைக்கவோ, தம் கட்டுப்பாட்டில் கொண்டுவரவோ இயலாது என்பதை, திரு. நாகசாமியும், அவரை ஆய்வாளர் என்று நம்பிக் கொண்டிருக்கிற தேசிய கட்சியும், உணரவேண்டும். நெய்யும் மெய்யும் வெளிப்பட்டே தீரும் என்ற பாவாணரின் மொழியில், இதனை உணர்த்த விரும்புகிறேன். 

அடுத்த 10 ஆண்டுகளில், இந்திய மொழிகளுக்குத் தாய்மொழி தமிழே என்றும், தமிழே உலக மொழிகளுக்கு மூலம், வேர் என்றும், உலக அரங்கில் உறுதியாக நிறுவப்படும். அதற்கான காலம் கனிந்து கொண்டிருக் கிறது.

அடிக்குறிப்புகள்

1. வீரமாமுனிவர் அருளிய சதுரகாதி, பதிப்பாசிரியர், டாக்டர்.சூ. இன்னாசி, வீரமாமுனிவர் ஆய்வுக் கழகம், பாளையங்கோட்டை, 1979, முன்னுரை, பக். XVII-XVIII..

2. குரவன் என்ற சொல்லை எடுத்துவிட்டு, பார்ப் பார் என்ற சொல்லைத் திணித்துவிட்டதாக, எல்லிசின் குறிப்புகளை மேற்கோள் காட்டி, பேரா.ப. மருதநாயகம் பதிவு செய்துள்ளார்.

3. DISTRICT GAZETTIER, TRICHINOPOLY,1830.

4. புறநானூறு, 194, பக்குடுக்கை, நன்கணியார்.

5. என் சரித்திரம் அரியலூர் மாவட்டப் பண்பாட்டுப் பேரவை.

6. ஏம வைகல் எய்தின்றால் உலகே - பெருந்தேவனார், குறுந்தொகை.

நீர் நின்று அமையாது உலகம் போல - நற்றிணை, முதல் பாடல்.

தாள் நிழல் தவிர்ந்தன்றால் உலகெ - அகநானூறு, கடவுள் வாழ்த்து.

மண் திணிந்த நிலனும் - புறநானூறு

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு - முருகாற்றுப்படை

மலை நாறிய வியன் ஞாலத்து - மதுரைக் காஞ்சி.

உலகெலாம் ஓதற்கரியவன் - திருமுறை - என விரியும்.

7. Special Language: The professional and secret language practiced by the scribes, appear in both Egypt and Mesopotamia. It was even more difficult for more than a few to mester these skills. - Dictionary of the Bible,P.779.

8. Pragrit: The Languages other than Sankrit, that apoken and written in North India. Monier Williams, Introduction in his Dictionary, P.XX.

9. Sankrit: Perfectly constructed Speech. - Ibid, P.XX

10. குறி: குறி அறிந்தோரே - தொல்காப்பியம்.

11. சிவத்தியாநாநந்தர், ரிக்வேத சம்கிதை,  இராயப் பேட்டை, 1938, முன்னுரை.

12. Rig Veda: The Oldest of its (Vedas) hymns being assigned by some who rely on certain astronomical calculations to a period between 4000 and 2500 B.C., before the settlement of the Aryans in India and by others who adopt a different reckoning to a period between 1400 B.C.- 1000 B.C., when Aryans had settled down in Punjab. 

Monier Williams, A Sanskrit - English Dictionary, P.1015.


13. Dr.B.R.Ambetkar, “Who is Sutra?”


14. தகவல் மற்றும் படங்கள், அமெரிக்காவின் நவேடா மாநிலம், கர்சான்சிட்டி, மாநிலத் தலைமை, நூலகத்திலிருந்த, The Encyclopedia - anthropology, Vol.VII, என்ற நூலிலிருந்து, கட்டுரை ஆசிரியரால் எடுக்கப்பட்டது.

Monday, April 11, 2022

சென்னை நகரப் பகுதிகளின் பெயர்க் காரணம்

சென்னையில் உள்ள ஏரியாக்களின் பெயர் காரணத்தை தெரிந்துகொள்வோம் ...!

சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான்...

சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் பல கிராமங்கள் இணைந்து சென்னை பிரமாண்டமாய் உருவெடுத்துள்ளது...

அப்படி இணைந்த கிராமங்களின் பெயர்கள் உருவானதின் பின்னணியை தெரிந்து கொள்வது சுவாரஸ்யமான ஒன்றே...

* 108 சக்தி ஸ்தலங்களில் 51வது ஊர். ஆகையால் ஐம்பத்து ஒன்றாம் ஊர் என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் இவ்வூர் அம்பத்தூர் என மாறியது...

* Armoured Vehicles And Depot of India என்பதின் சுருக்கமே ஆவடி(AVADI)...

* chrome leather factory இப்பகுதியில் அதிக அளவில் இருந்ததால் இப்பகுதி குரோம்பேட்டை என அழைக்கப்படலாயிற்று...

* 17,18ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின் ட்டுப்பாட்டில் இருந்தது இப்பகுதி. அவருடைய குதிரைகளின் பசியை போக்கும் நந்தவனமாக இது விளங்கியதால், garden of horses என்னும் பொருள் படும் Ghoda bagh என்று உருது மொழியில் பெயர் வைத்தார். பின்னாளில் அதுவே கோடம்பாக்கமாக மாறியது...

* மகப்பேறு என்பதே மருவி முகப்பேர் ஆனது...

* தென்னை மரங்கள் நிரம்பிய பகுதி அது. ஆகையால் தென்னம்பேட்டை என பெயர் வைத்தார்கள். பிற்பாடு அது தேனாம்பேட்டையாக மாறிப்போனது..

* சையிது ஷா பேட்டை தான் சைதாபேட்டை என அழைக்கப்படுகிறது...

*  முற்காலத்தில் வேதஸ்ரேணி என அழைக்கப்பட்டது தற்போதைய வேளச்சேரி...

*  உருது வார்த்தையான che bage (six gardens என்பது இதன் பொருள்) என்பதிலிருந்து உருவானது தான் சேப்பாக்கம்...

*  சௌந்தர பாண்டியன் பஜார் என்பதின் சுருக்கமே பாண்டி பஜார்...

* கலைஞர் கருணாநிதி நகரை சுருக்கி கே.கே. நகர் என அழைக்கிறோம்...

* சிவபெருமானுக்கு உகந்த வில்வமரங்கள் அதிகம் இருந்ததால் மகாவில்வம் என அழைக்கப்பட்ட இப்பகுதி, பின்பு மாவில்வம் என்றாகி, காலப்போக்கில் எப்படியோ மாம்பலமாகி விட்டது...

*  பல்லவர்கள் ஆட்சி செய்ததால் பல்லவபுரம் என்றழைக்கப்பட்ட இடம் தான் பல்லாவரம்...

*  சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் ராஜாவின் நினைவாக இவ்விடம் பனகல் பார்க் என அழைக்கப்படுகிறது...

*  நீதி கட்சி தலைவர் சர். பி.டி.தியாகராஜன் செட்டியின் பெயராலேயே இப்பகுதி தியாகராய நகர் என அழைக்கப்படுகிறது(தி.நகர்)...

* புரசை மரங்கள் மிகுதியாக இப்பகுதியில் இருந்ததால், இப்பகுதி புரசைவாக்கம் ஆனது...

*  அதிக அளவில் மல்லிகை பூக்கள் பயிரிடப்பட்ட பகுதி இது. திருக்கச்சி நம்பி ஆழ்வார் தினமும் இங்கிருந்து பூக்களை பறித்துக்கொண்டு சென்று காஞ்சி வரதராஜபெருமாளை வழிபட்டு வந்தார். அதனால் இவ்விடம் சமஸ்கிருதத்தில் புஷ்பகவல்லி என்றும், தமிழில் பூவிருந்தவல்லி என்றும் அழைக்கப்படுகிறது. பின்னாளில் இது பூந்தமல்லியாக மாறியது. வல்லி என்பது தெய்வத்தை குறிக்கும் ஒரு பெயர்...

*  17ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் துறவி ‘குணங்குடி மஸ்தான் சாகிப்’. இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி. ஆகையால் அப்பகுதி மக்கள் அவரை தொண்டியார் என அழைத்தனர். அந்த ஏரியா தான் தற்போதைய தண்டயார்பேட்டை...

*  முன்பு இப்பகுதி ஆடு மாடுகள் மேயும் திறந்தவெளியாக இருந்துள்ளது. அதனாலேயே மந்தைவெளி என்றழைக்கபடுகிறது...

*  மயில் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பதே மயிலாப்பூர் என மாறிப்போனது...

*  பல்லவர்கள் காலத்தில் போர்கள் நடத்த இவ்விடத்தையே பயன்படுத்தியதால், இப்பகுதி போரூர் எனப்படுகிறது...

* சில நூறு வருடங்களுக்கு முன்பு இப்பகுதி முழுவதும் மூங்கில் மரங்கள் இருந்தது. அதனாலேயே பெரம்பூர் எனப்படுகிறது...

*  திரிசூல நாதர் ஆலயம் இருப்பதால் இந்த ஏரியா திரிசூலம் என்று அழைக்கப்படுகிறது...

*  பார்த்தசாரதி கோவிலின் எதிர்ப்புறம் இருக்கும் குளத்தில் நிறைய அல்லிகள் பூக்கும். அதன் காரணமாக இப்பகுதிக்கு திருஅல்லிக்கேணி என பெயர் உருவாக்கி, பின்பு திருவல்லிக்கேணியாகி, தற்போது triplicane என மாற்றம் கண்டுள்ளது...

*  தாமஸ் பாரி என்பவர் இப்பகுதில் வணிகம் செய்துவந்தார். மக்கள் மத்தியில் மிகவும் மதிப்பு பெற்றிருந்த அவரின் பெயராலேயே இப்பகுதி பாரிமுனை (பாரிஸ் கார்னர்) ஆனது...

* வள்ளி சேரி பாக்கம் என்பதே மருவி பின்னால் வளசரவாக்கம் என மாறியது..!

Wednesday, April 6, 2022

ஸ்டீபன் ஹாக்கிங்ன்ஸ்

ஸ்டீபன் ஹாக்கிங் பார்வையில் கடவுள் உண்டா ? - சுப. வீரபாண்டியன் - கருஞ்சட்டைப் பதிப்பகம் வெளியீடு.

◆  நமது பூமி, கோளங்கள், அண்டம், அதன் செயல்பாடுகள் பற்றிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு, மூன்று விஞ்ஞானிகளின் பங்களிப்பு மிக முக்கியமாக பேசப்படுகின்றது....

1642ல் பிறந்த நியூட்டன். அவரின் புவியீர்ப்பு விசை பற்றிய கண்டுபிடிப்பு ! 

1879ல் பிறந்த ஐன்ஸ்டீன். அவரின் சார்பியல் கோட்பாடு பற்றிய கண்டுபிடிப்பு ! 

1942ல் பிறந்த ஸ்டீபன் ஹாக்கிங். அவரின்  கருந்துளைகளைப் பற்றிய ஹாக்கிங் ரேடியேஷன் ! இந்த கண்டுபிடிப்புகளின் அடிப்படையில்தான் விமானங்களும், ராக்கெட்களும் செலுத்தப்படுகின்றன.

◆  விஞ்ஞான அறிவு வளர, வளர, கண்டுபிடிப்புகள் அதிகரிக்க, அதிகரிக்க விஞ்ஞானிகளின், கடவுள் நம்பிக்கை பற்றிய புரிதல்களும் தெளிவாக வெளி வருகின்றது. 

தங்கள் கண்டுபிடிப்புகளிலிருந்து நிறைய பாடம் கற்றார்கள். புரியும் படி சொல்ல வேண்டுமென்றால் - நியூட்டன் கடவுள் நம்பிக்கை கொண்டவர் ( Theist ).  

ஐன்ஸ்டீன் கடவுள் பற்றிய கவலையில்லாதவர் ( Agnostic ). ஸ்டீபன் ஹாக்கிங் கடவுள் இல்லையென்றே சொன்னவர் ( Atheist ) .

◆  ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய கடைசிப் புத்தகம் Brief Answers to the Big Questions ( ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள் என தமிழில் வெளிவந்துள்ளது ).

இந்த நூலில், ஹாக்கிங் மிகப்பெரிய பத்து முக்கியமான கேள்விகளுக்கு விடையளித்திருக்கின்றார். 

அதில் முதலாவதான கேள்வி - Is there a God ? கடவுள் இருக்கிறாரா ?

◆  அரசியல் மேடைகளிலும், பகுத்தறிவு கூட்டங்களிலும், தொலைக்காட்சி விவாதங்களிலும் தனது வாதத்திறமையால் எல்லோரையும் வசீகரிக்கும் பேச்சை வழங்கும் அய்யா சுப. வீரபாண்டியன். 

அறிவியல் சம்பந்தமான உரையாக - ஹாக்கிங், கடவுள் இருக்கிறாரா? என்ற கேள்வியையும், அவர் தந்த பதிலையும் ஒரு சிறப்பு கூட்டத்தில் பேசி, அதை தொகுத்து தரப்பட்டதே, இந்த சிறிய நூல்.

◆  சுப. வீரபாண்டியனின் இந்த நூலை படிக்கும் போது, ஹாக்கிங் எழுப்பியுள்ள பத்து கேள்விகளையும் அதற்கான அறிவார்ந்த பதில்களையும் அறிய ஆவலாக உள்ளது. 

கடவுள் இருக்கிறாரா என்ற முதல் கேள்விக்கு தரப்பட்டுள்ள பதில்களில் சில -----

◆  " கடவுள் முதல் நாள் இதைப் படைத்தார். இரண்டாவது நாள் இதைப் படைத்தார். மூன்றாவது நாள் அதைப் படைத்தார் என்கின்றனர். சரி ! - 

அதற்கு முதல்நாள் வரை என்ன செய்து கொண்டிருந்தார் ? "......


◆  " ஒரு பந்தை மட்டையால் ஓங்கி அடிக்கிற போது, அந்தப் பந்து எங்கே போய் விழும் என்பதை கண்டிப்பாக நம்மால் சொல்ல முடியும். எதை வைத்து ?

அதனுடைய வேகம் என்ன, பந்தினுடைய அளவென்ன, அது தட்டப்படுகின்ற திசை என்ன என்பதை வைத்து !

அடிக்கிற பந்து எங்கே போய் விழும் என்பது, அந்த பந்தின் எடையைப் பொறுத்து, திசையைப் பொறுத்து, வெளியைப் பொறுத்து, விசையைப் பொறுத்து. 

எப்பொழுதாவது முன் பக்கமாக ஓங்கி அடிக்கப்பட்ட பந்து, பின் பக்கமாக வந்து விழுந்தால், என்னிடம் சொல்லுங்கள் ! - 

அப்போது கடவுள் இருக்கிறார் என நான் ஒப்புக் கொள்கிறேன் ! "..........

◆  இந்த சிறிய நூல், ஸ்டீபன் ஹாக்கிங்யின்  முழுப் புத்தகத்தையும் வாங்கி படிக்க ஆர்வத்தை தூண்டுகிறது. அறிவை தெளிவு செய்யும் கேள்வி பதில்கள், ஹாக்கிங் இந்த உலகிற்கு தந்தது.

தேடுதல் தரும் விஞ்ஞானம் !

தேறுதல் தரும் அஞ்ஞானம் !

பொ.நாகராஜன். சென்னை.

11.07.2021.

********************************************